இயேசுவின் உவமைகள்

கடுகு விதை – மத்தேயு 13 : 31, 32, மாற்கு 4 : 30, 31, லூக்கா 13 : 18, 19

இந்த உவமை பரலோக ராஜ்யத்தை பற்றி இயேசு கூறிய மூன்றாவது உவமை. இதை மத்தேயு 13 : 31, 32லும், மாற்கு 4 : 30, 31லும், லூக்கா 13 : 18, 19லும் காணலாம். இது பரலோக ராஜ்ஜியத்தின் வெளிப்புறமான மலர்ச்சியைக் குறிக்கிறது. இதில் கடுகு விதை, கடுகு மரம், ஆகாயத்துப் பறவைகள் போன்றவற்றைப் பார்க்கிறோம். கடுகு விதையைப் பற்றி வேதத்தில் இன்னும் இரண்டு இடங்களில் இயேசு கூறியிருப்பதைக் காணலாம்.

மத்தேயு 17 : 20 “அதற்கு இயேசு: உங்கள் அவிசுவாசத்தினாலேதான்; கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த மலையைப்பார்த்து, இவ்விடம் விட்டு அப்புறம்போ என்று சொல்ல அது அப்புறம் போம்; உங்களால் கூடாத காரியம் ஒன்றுமிராது என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.”

இதில் இயேசு கடுகு விதையளவு விசுவாசம் நமக்கு இருந்தால் போதும், அப்பொழுது நாம் விசுவாசத்தோடு சொல்லுகிறவைகளுக்கு ஆற்றல் உண்டு என்றார்..

லூக்கா 17 : 6 “அதற்குக் கர்த்தர்: கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு உண்டாயிருந்தால், நீங்கள் இந்தக் காட்டத்திமரத்தை நோக்கி: நீ வேரோடே பிடுங்குண்டு கடலிலே நடப்படுவாயாக என்று சொல்ல, அது உங்களுக்குக் கீழ்ப்படியும்.”

இதில் கடுகளவு விசுவாசத்தோடு நாம் இயேசுவின் நாமத்தினால் கட்டளையிடும் பொழுது அவைகள் நமக்குக் கீழ்ப்படியும் என்கிறார்.

Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates

தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்

கடுகு விதையின் தன்மை:

கடுகு விதையானது மிகவும் சிறிய விதை. அதைவிட சிறிய விதைகளும் உள்ளன. கடுகு விதை ஒரு உணவுத் தானியமல்ல. உணவுக்கு வாசனையைக் கொடுப்பதற்காக இதைச் சேர்ப்பர். இந்த விதைகள் ஐந்தடி உயரம் வளரும் தன்மை உடையது. காட்டுக்கடுகு விதையானது 10 அடியில் இருந்து 15 அடி வரை வளரும் தன்மையுடையது. கடுகு விதையானது கடுமையான உஷ்ண பகுதியில் கூட வளரும் தன்மை உடையது. 8 இஞ்ச் மழை இருந்தாலே கடுகு செடிக்குப் போதுமானது. இமயமலைப் பகுதியான குளிரான பகுதியிலும் கடுகுச் செடி வளரும். கடுகு செடியானது எந்தச் சூழ்நிலையிலும் பிழைத்து நிற்கும் தன்மையுடையது. கடுகைத் தனியாக உணவாகப் பயன்படுத்த முடியாது. அது கோதுமை அல்ல. கடுகை மட்டும் சாப்பிட்டு உயிர் வாழவும் முடியாது. 

விதைத்த இடங்கள்:

விதைப்பது என்றால் பூமியில் ஒப்புக்கொடுப்பது. மத்தேயு மாற்கு லூக்கா ஆகிய மூவரும் ஒவ்வொரு இடத்தில் விதைத்ததாகக் கூறியிருக்கின்றனர். அவைகளைப் பார்க்கலாம்.

மாற்கு 4 : 31 “அது ஒரு கடுகு விதைக்கு ஒப்பாயிருக்கிறது; அது பூமியில் விதைக்கப்படும்போது பூமியிலுள்ள சகல விதைகளிலும் சிறிதாயிருக்கிறது;”

மாற்கு இதில் இயேசு பரலோக ராஜ்யத்தைக் கடுகு விதைக்கு ஒப்புமைப்படுத்திக் கூறியிருப்பதைக் கூறுகிறார். ஒரு மனுஷன் சிறிய கடுகு விதையை பூமிக்குள் விதைப்பதாகக் கூறுகிறார். அது வளரும் போது எவ்வாறு பெரிய செடியாக மாறுகிறதோ, அதேபோல பூமியில் சிறியதாக தொடங்கிய பரலோக ராஜ்ஜியமானது நாளடைவில் வளர்ந்து பரந்து விரிவடையும். இங்கு பூமியில் விதைக்கப்பட்ட விதை மனுஷகுமாரனாக வந்த இயேசு. இயேசுவானவர் 12 சீடர்களைக் கொண்டு ஆரம்பித்த தேவராஜ்யம் அதன்பின் 70 பேர்கள் சேர்ந்து, பெந்தெகோஸ்தே நாளில் 120 நபர்களுடன் ஜெபித்து பரிசுத்த ஆவியானவரின் வல்லமையோடு உலகமெங்கும் பரவியது. இதை, 

யோவான் 20 : 22 “அவர்கள்மேல் ஊதி: பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்;” என்றும் 

அப்போஸ்தலர் 2 : 4 “அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள்.” என்றும் பார்க்கிறோம்.

இவ்வாறு பரிசுத்த ஆவியை ஊதியும், பரிசுத்தஆவியினால் நிரப்பப்பட்டும் சுவிசேஷத்தை உலகமெங்கும் சீஷர்கள் அறிவித்தனர். இதைத்தான் இயேசு தன்னுடைய சீஷர்களிடம் உலகமெங்கிலும் போய் சகல ஜனங்களுக்கும் சுவிஷேத்தைச் சொல்லுங்கள் என்றார் (மாற்கு 16 : 15). 

மத்தேயு 13 : 31 “வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் கடுகு விதைக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு மனுஷன் எடுத்துத் தன் நிலத்தில் விதைத்தான்.

மத்தேயு இதில் ஒரு மனுஷன் கடுகு விதையைத் தன்னுடைய நிலத்தில் விதைத்ததாகக் கூறுகிறார். மாற்கு 5ம் அதிகாரத்தில் இயேசு சுதரேனருடைய நாட்டிலுள்ள பிசாசு பிடித்த ஒருவனை அந்த பிசாசின் பிடியிலிருந்து விடுவித்தார். சுகமான அந்த மனிதன் இயேசுவோடு வருகிறேன் என்றான். அதற்கு இயேசு அவன் தன்னோடு வருவதற்கு இடங்கொடாமல் அவனை அவனுடைய இனத்தாரிடத்திலும், வீட்டிற்கும் போய்க் கர்த்தர் செய்தவைகளை அறிவிக்கச் சொன்னார். பவுல் சிப்புரூ தீவிலும், கலாத்தியா, தெசலோனிக்கேய நாடுகளிலும் ரோமாபுரி பட்டணங்களிலும் விதைகளை விதைத்தார். தோமா பரலோகராஜ்யம் என்ற விதைகளை எடுத்துக் கொண்டு கேரளாவிலும், தமிழ்நாட்டிலும் விதைத்தார். பர்த்தலோமேயு பாம்பேயில் பரலோக விதைகளை விதைத்தார். இப்போதும் அவைகள் மரமாக வளர்ந்து கொண்டிருக்கின்றன. கர்த்தர் பூமியில் விதைத்த விதைகளை மிஷனரிகளும், தேவ ஊழியர்களும் எடுத்துக்கொண்டு போய் ராஜ்ஜியங்களின் நிலங்களில் விதைத்தனர். 

லூக்கா 13 : 18 “அது ஒரு கடுகுவிதைக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு மனுஷன் எடுத்துத் தன் தோட்டத்திலே போட்டான்; அது வளர்ந்து, பெரிய மரமாயிற்று; ஆகாயத்துப் பறவைகள் வந்து, அதின் கிளைகளில் அடைந்தது என்றார்.”

லூக்கா ஒரு மனுஷன் கடுகு விதையைத் தன்னுடைய தோட்டத்தில் போட்டு, அது வளர்ந்து பெரிய மரமாயிற்று என்று கூறுகிறார். தோட்டம் என்பது அடைக்கப்பட்ட சபையைக் குறிக்கிறது. தேவனுடைய ராஜ்யத்தின் விதையை சபைக்குள் விதைக்கவேண்டும். சபையிலிருந்து உங்களுடைய உள்ளங்களில் விதை விதைக்கப்படும். உங்களுக்குள் விதைக்கப்பட்ட அந்த விதையானது நல்ல மரமாக வளர வேண்டும். இந்தப் பணியை நீங்கள் செய்யும் பொழுது பரலோகராஜ்யமானது வளர்ச்சி அடையும். தேவன் பரலோக ராஜ்யத்தை உங்களுக்குள் விதைத்து உங்களைக் கொண்டு அதைப் பெருகப் பண்ணுகிறார்.

Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates

தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்

இவைகளிலிருந்து மாற்கு பூமியில் இயேசுவின் மூலம் விதைத்த விதையானது உலகமெங்கும் எப்படி பரவியது என்றும், மத்தேயு நிலத்தில் விதைத்த விதையானது மிஷினரிகள் மூலமாகவும் தேவ ஊழியர் மூலமாகவும் எவ்வாறு பரவியது என்பதையும், லூக்கா தோட்டத்தில் விதைத்த விதையானது சபையின் மூலமாக உலகமெங்கும் பரவிக்கொண்டிருப்பதையும் காணலாம்.

விதைக்குள் ஜீவன்:

சிறிய விதையான கடுகுக்குள் ஜீவன் இருக்கிறது. அந்த ஜீவனானது அந்த விதையை உயரமாக வளர வைக்கிறது. விசுவாசிகளாகிய, தேவனுடைய பிள்ளைகளாகிய நமக்குள்ளும் கிறிஸ்துவின் ஜீவன் உள்ளது. நாம் பலவீனமாக இருந்தாலும் நமக்குள் இருக்கிற கிறிஸ்துவின் ஜீவனானது நம்மைப் பராக்கிரமசாலியாக மாற்றும் தன்மையுடையது. உதாரணமாக கோழையாக இருந்த கிதியோனை பராக்கிரமசாலியாக தேவன் ஆக்கினார் (நியாயாதிபதிகள் 6 : 12, 25). கிறிஸ்துவின் ஜீவன் உங்களிடம் வெளிப்படும்போது உலகத்தில் நீங்கள் பெரியவர்களாகத் தெரியாவிட்டாலும் தேவனுக்குப் பிரயோஜனம் உள்ளவர்களாக மாறுவீர்கள். சிறியவனான தாவீதுக்குள் கிறிஸ்துவின் ஜீவன் இருந்ததால் அவன் இராட்சதனான கோலியாத்தை வீழ்த்தினான். அவனுடைய பெயரைத் தேவன் புகழ் பெறச் செய்தார் (1சாமுவேல் 17 : 50).

விதை சிறியது:

சிறிய விதையான கடுகைப் பூமியில் விதைக்கும் பொழுது அது பெரிதாக வளர்வதைப் போல சிறியதாக ஆரம்பிக்கப்பட்ட பரலோகராஜ்யமானது வளர்ந்து பெரிதாகிக் கொண்டு வருகிறது. பரலோக ராஜ்யத்தை ஸ்தாபிக்க வந்தவர் இயேசு. அவரும் பிரபலமாக ராஜாவின் குடும்பத்திலோ பிரபலமானவர்களின் குடும்பத்திலோ பிறக்கவில்லை. அவர் பிறப்பதற்காகத் தெரிந்துகொண்ட ஸ்திரீ மரியாள். அவள் ராஜ குடும்பத்தில் உள்ளவள் அல்ல. அவளுடைய கணவனும் ஏழைத் தச்சன் தான். அவர் வந்ததற்குக் காரணம் உலகத்தில் உள்ளவர்களுக்கு இரட்சிப்பை அருளவும், பாவிகளின் பாவங்களை மன்னித்து அவர்களைப் பரலோகத்தில் சேர்க்கவும் வந்தார். அவர் பிறந்த இடம் அரண்மனையிலோ, வீட்டிலோ அல்ல. மாட்டுத்தொழுவத்தின் முன்னணையில் பிறந்தார். தேவராஜ்ஜியத்தை ஸ்தாபிக்க வந்தவர் கடுகு விதையைப் போல வந்தார். ஏரோதுக்குக் கூட அவர் தான் இரட்சிக்கப் போகிறவர் என்று தெரியாது. சாஸ்திரிகள் தான் எரோதுக்கு உணர்த்தினர். எளிமையான நிலமையில் பிறந்தார். பாடுகளையும் நிந்தைகளையும், அவமானங்களையும் அனுமதித்தார். அவர் ஒரு சில இடங்களில் மட்டுமே ஊழியம் செய்தார். உலகம் முழுவதும் இயேசு செல்லவில்லை. தரித்திரருக்கும், பாவிகளுக்கும் சுவிசேஷம் அறிவிப்பதற்காக வந்தேன் என்றார். கடற்கரையில், மலைகளில், வனாந்தரத்தில் பிரசங்கம் பண்ணினார்.

வளர்ச்சி 

இயேசு கெத்சமனே தோட்டத்தில் ஜெபித்துக் கொண்டிருந்த பொழுது பாவிகள் அவரைப் பிடித்து சிலுவையில் அறைந்தனர். அவர் சிலுவையில் பிதாவின் சித்தத்தை நிறைவேற்றி முடித்தார். அதனால்தான் எல்லாம் முடிந்தது என்று கூறி தன்னுடைய ஜீவனையும், ஆவியையும் ஒப்புவித்தார் (யோவான் 19 : 23, 28). மூன்றாவது நாளில் உயிரோடு எழுந்தார். சீஷர்களுக்கும், மற்றவர்களுக்கும் தான் உயிரோடிருக்கிறவராகக் காண்பித்தார். அதன்பின் சீஷர்களிடம் பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேற எருசலேமில் காத்திருங்கள் என்றார் (அப்போஸ்தலர் 1 : 5). 120பேர் எருசலேமுக்குப் போய் மேல்வீட்டரையில் ஜெபத்திலும், வேண்டுதலிலும் தரித்திருந்தார்கள். 50 ஆவது நாளான பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது பெரிய காற்றடிக்கும் முழக்கம் போல முழக்கம் உண்டாகி வீடு முழுவதையும் நிரப்பிற்று. அப்பொழுது அவர்கள் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத் தொடங்கினார்கள் (அப்போஸ்தலர் 2ம் அதிகாரம்). 

அந்த நாளில் பெந்தெகொஸ்தே பண்டிகை நடந்து கொண்டிருந்ததால், சகல ஜனங்களும் அதைக்கேட்டு கூடி வந்தார்கள். வந்தவர்கள் பிரமித்து சந்தேகப்பட்டு இது என்னமாய் முடியுமோ என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள். மற்றவர்களோ இவர்கள் மதுபானத்தினால் நிறைந்திருக்கிறார்கள் என்று பரிகாசம் பண்ணினார்கள். அப்பொழுது பேதுரு எழுந்திருந்து பேசத் தொடங்கினான். யோவேலின் தீர்க்கதரிசனம் நிறைவேறும்படி இது நடந்தேறுகிறது என்றார். இதை அவர்கள் கேட்டபோது இருதயத்தில் குத்தப்பட்டு நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று கேட்டார்கள். அப்பொழுது பேதுரு நீங்கள் மனந்திரும்பி ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள் என்று கூறினார். மனதில் குத்தப்பட்ட அவர்கள் தங்களை ஒப்புக் கொடுத்து அன்றைய தினமே ஞானஸ்தானம் எடுத்தார்கள் அப்போஸ்தலர் 2 : 1 – 38). இவ்வாறு அந்த சபை சிறியதாய் தொடங்கப்பட்டது. பின் வளர ஆரம்பித்தது. இயேசு,

லூக்கா 12 : 32ல் “பயப்படாதே சிறுமந்தையே, உங்களுக்கு ராஜ்யத்தைக் கொடுக்க உங்கள்பிதா பிரியமாயிருக்கிறார்.” 

என்று இயேசு சிறிய மந்தையை, சிறிய கூட்டத்தைப் பார்த்து கூறினார். அதேபோல் பழைய ஏற்பாட்டில் ஏசாயா தீர்க்கதரிசி,

ஏசாயா 41 : 14ல் “யாக்கோபு என்னும் பூச்சியே, இஸ்ரவேலின் சிறுகூட்டமே, பயப்படாதே; நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று கர்த்தரும் இஸ்ரவேலின் பரிசுத்தருமாகிய உன் மீட்பர் உரைக்கிறார்.” என்றார்.

இந்த இரண்டு இடங்களிலும் சொல்லப்பட்ட வார்த்தை பயப்படாதே சிறு மந்தையே என்பதுதான். அன்று எருசலேமில் ஆரம்பித்த அந்த சிறு கூட்டத்தில் ஆவியானவர் இறங்கிய போது அவர்களுடைய பயமெல்லாம் விலகிப் போனது. தைரியமாகப் பிரசங்கம் பண்ணினார்கள். அப்பொழுது தான் ஜனங்கள் சீஷர்களை கிறிஸ்துவோடு இருந்தவர்கள் என்று அறிந்து கொண்டனர் (அப்போஸ்தலர் 4 : 13). அன்றைய பிரசங்கத்தில் 3000 பேர் இரட்சிக்கப்பட்டனர். 120 பேரைக் கொண்டு ஆரம்பித்த சபையானது வளர்ந்து 3000 பேர் சேர்ந்து இப்பொழுது 3120 ஆனது. அதன்பின் அந்த சபையானது 5000 பேராக வளர்ந்தது (அப்போஸ்தலர் 4 : 4). ஆவியானவர் அங்கு பலமாய்க் கிரியை செய்து இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அனுதினமும் சபையில் சேர்த்துக் கொண்டு வந்தார் என்று அப்போஸ்தலர் 2 : 47ல் பார்க்கிறோம். இப்பொழுது 5000 பேரும் சேர்ந்ததால் 8120 ஆனது. பின்னும், 

அப்போஸ்தலர் 5 : 14ல் “திரளான புருஷர்களும், ஸ்திரீகளும் விசுவாசமுள்ளவர்களாகிக் கர்த்தரிடமாக அதிகமதிகமாய்ச் சேர்க்கப்பட்டார்கள்.”

என்று பார்க்கிறோம் அப்போஸ்தலர் பிலிப்புவின் மூலம் சமாரியர்கள் இயேசுவை ஏற்றுக் கொண்டனர் என்று அப்போஸ்தல 8 : 14ல் பார்க்கிறோம். இவ்வாறு சிறியதாக ஆரம்பிக்கப்பட்ட சபையானது ஒரே ஒரு மனுஷனான இயேசு பூலோகத்துக்கு இறங்கி வந்து, தன்னையே பலியாகக் கொடுத்த இயேசுவின் இரத்தத்தினால் சபையானது உருவாகி பரவி வருகிறது.

அடைக்கலம் கொடுக்கும்:

மத்தேயு 13 : 32 “அது சகல விதைகளிலும் சிறிதாயிருந்தும், வளரும்போது, சகல பூண்டுகளிலும் பெரிதாகி, ஆகாயத்துப்பறவைகள் அதின் கிளைகளில் வந்து அடையத்தக்க மரமாகுமென்றார்.”

மாற்கு 4 : 32 “விதைக்கப்பட்டபின்போ, அது வளர்ந்து, சகல பூண்டுகளிலும் பெரிதாகி, ஆகாயத்துப்பறவைகள் அதினுடைய நிழலின்கீழ் வந்தடையத்தக்க பெரிய கிளைகளை விடும் என்றார்.”

லூக்கா 13 : 19 “அது ஒரு கடுகுவிதைக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு மனுஷன் எடுத்துத் தன் தோட்டத்திலே போட்டான்; அது வளர்ந்து, பெரிய மரமாயிற்று; ஆகாயத்துப் பறவைகள் வந்து, அதின் கிளைகளில் அடைந்தது என்றார்.”

Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates

தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்

இந்தக் கடுகு செடியானது போட்ட உரத்தை உட்கொண்டு வளரும் போது சகல பூண்டுகளையும் விட பெரிய செடியாக வளர்ந்து பெரிய கிளைகளை விடுகிறது. அப்பொழுது அதில் ஆகாயத்துப் பறவைகள் இந்த மரத்தின் கிளைகளில் வந்து தங்கியிருக்கும். ஆகாயத்துப் பட்சிகள் என்பது துர்உபதேசத்தைக் காட்டுகிறது. விசுவாசிகள் அதிகரித்து சபை பெரியதாகி வளர்ச்சியடையும் போது அதற்கு உபத்திரவங்கள் உண்டாகிறது. சவுலாக இருந்து பவுலாக மாறினவன் பிரதான ஆசாரியனிடம் போய் நிருபங்களை கேட்டு வாங்கி தேவனுடைய சபையைத் துன்பப்படுத்தினான். சவுல் தான் முதல்முதலில் உபத்திரவத்தை ஏற்படுத்தினான். இதைப் பவுல் தன்னுடைய வாயால் கலாத்தியர் 1 : 13ல் கூறியதைப் பார்க்கிறோம். முதன் முதலாக ஸ்தேவானைக் கொலை செய்தனர் (அப்போஸ்தலர் 7 : 60). ஸ்தேவான் தான் முதன் முதலில் இரத்த சாட்சியாக மரித்தவன். இரண்டாவதாக சபையைத் துன்பப்படுத்தியவன் ஏரோது என்று அப்போஸ்தலர் 2 : 1, 2 ல் பார்க்கிறோம். இந்த ஏரோது யாக்கோபைப் பட்டயத்தினால் கொலை செய்தான். ஏரோதுக்கள் அனைவரும் கொலை வெறி பிடித்தவர்கள். இயேசு பிறந்தபோது சாஸ்திரிகள் இயேசுவைத் தேடி ஏரோதிடம் தான் போனார்கள். எனவே அந்த ஏரோது இயேசுவைக் கொலை செய்ய நினைத்து இரண்டு வயதுக்குட்பட்ட சிறு குழந்தைகளை எல்லாம் கொல்வதற்கு கட்டளையிட்டான் (மத்தேயு 2 : 1 – 3, 16). அன்றைய ஏரோது மரித்துப் போனான் என்று கேள்விப் பட்டதால் இயேசு நாசரேத்துக்கு வந்து தங்கியிருந்தார். அதன்பின் வந்த ஏரோது இயேசுவைக் கொலை செய்ய வழி காட்டினான். பரிசேயர்கள் கூட இயேசுவிடம் ஏரோது உம்மை கொலை செய்ய மனதாய் இருக்கிறான் என்று கூறினார்கள் அதற்கு இயேசு,

லூக்கா 13 : 32, 33 “அதற்கு அவர்: நான் இன்றைக்கும் நாளைக்கும் பிசாசுகளைத் துரத்தி, வியாதியுள்ளவர்களைச் சொஸ்தமாக்கி, மூன்றாம்நாளில் நிறைவடைவேன்.”

“இன்றைக்கும் நாளைக்கும் மறுநாளைக்கும் நான் நடமாடவேண்டும்; எருசலேமுக்குப் புறம்பே ஒரு தீர்க்கதரிசியும் மடிந்துபோகிறதில்லையென்று நான் சொன்னதாக, நீங்கள் போய் அந்த நரிக்குச் சொல்லுங்கள்.” என்றார். 

ஏரோது தன்னைத் தந்திரத்தினால் பிடிக்க நினைத்திருப்பதை அறிந்த இயேசு, அவரை நரி என்று கூறியதைப் பார்க்கிறோம். அவனுடைய முடிவு, கர்த்தருடைய தூதன் அவனை அடித்து புழுபுழுத்து இறந்தான் (அப்போஸ்தலர் 12 : 23) சபையைப் பாழ் படுத்துகிற அனைவரின் நிலையும் இதுதான். 

உருவம் அழியாதது:

கடுகை அழிக்க முடியாது. அதே போல் தேவனுடைய ராஜ்யத்தையும் அழிக்கவே முடியாது. எந்த பிரச்சனை வந்தாலும், எந்த சூழ்நிலையில் இருந்தாலும் தேவனுடைய ராஜ்ஜியத்தைச் சேதப்படுத்தவும் முடியாது. சபையையும் பாதாளத்தின் வாசல்கள் மேற்கொள்ள முடியாது. அப்போஸ்தலர் பவுல் எப்பக்கம் நெருக்கப்பட்டும் நொறுக்கிப் போவதில்லை என்றார். கடுகுச் செடியிலிருந்து ஆயிரக்கணக்கான விதைகள் உண்டாகும் அந்த விதைகளில் இருந்து நூற்றுக்கணக்கான கடுகுச் செடிகள் உருவாகும் அதேபோல் தேவனுடைய ராஜ்ஜியம் அளவிட முடியாத அளவுக்கு விரிவடையும். கடுகு விதையைப் பூமியில் அர்ப்பணிப்பதைப் போல நம்மைத் தேவனிடம் அர்ப்பணிக்கும் போது ஒரு நாளும் தேவன் நம்மை அழிய விடமாட்டார். 

உவமையின் கருத்து:

நீங்களும் சின்னதாக தேவனுடைய சித்தத்தோடும், கிருபையோடும் ஜெபக்கூட்டங்களையும், சபைகளையும் ஆரம்பித்தால் அது பெரிதாக வளர்ச்சி அடையும். எந்த சூழ்நிலையிலும் கடுகைப் போல வளர்ந்து, ஜெபித்து தேவனுடைய இராஜ்யம் விரிவடைய நீங்கள் பாடுபட வேண்டும். அதேபோல் கடுகு எதையும் சார்ந்து கொள்ளாமல் வளர்வதைப் போல உங்களுக்குள் இருக்கிற விசுவாசமானது யாரையும் சார்ந்து கொள்ள வேண்டுவதில்லை. நீங்கள் சிறியவர்கள் என்று உலகம் தள்ளலாம். ஒன்றுக்கும் உதவாதவர்கள் என்று உலகம் உங்களைப் புறக்கணிக்கலாம். எதற்கும் பயன்படாதவர்கள் என்று உலகம் உங்களை ஒதுக்கலாம். கவலைப்படாதீர்கள். எங்கெங்கோ இருக்கின்றவர்கள் உங்களைச் சார்ந்து கொள்ள வருவார்கள். வேறு வேறு தேசத்தில் உள்ளவர்கள் எல்லாம் உங்களுடைய நிழலுக்கு வர தேவன் அனுக்கிரகம் பண்ணுவார். அநேகரைப் போஷிக்கத் தக்கவர்களாக உங்களை மாற்றுவார். அனேகர் வந்து உங்களிடம் ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொள்ளத் தக்கதாய் பெரிய மரமாய், பெரிய கிளையாய், பெரிய ஆசீர்வாதங்களைத் தந்து உங்களை ஆசீர்வதிப்பார். உங்கள் பிள்ளைகளுக்கு கடுகைப் போல சிறிது, சிறிதாக வேதவசனங்களை அவர்கள் உள்ளத்தில் விதைக்கும் போது அது பிற்காலத்தில் மிகப்பெரிய பலனைக் கொடுக்கும். ஆமென்.

Sis. Rekha

View Comments

  • இந்த வார்த்தைகள் எங்களுக்கு மிகவும் பிரயோஜனமாக இருக்கிறது ஆண்டவராகி இயேசு கிறிஸ்து உங்கள் ஊழியங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்.

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago