தேவராஜ்ஜியத்தைக் குறித்து இயேசு கூறிய 8 உவமைகளில் இதுவும் ஒன்று. இயேசு இவைகளை எல்லா ஜனங்களும் புரியும்படியாக உவமைகள் மூலம் கூறினார். ஒரே ஒரு உவமையின் மூலமாக பரலோகத்தில் எல்லா ரகசியங்களையும் கூற முடியாததால் பல சிறு சிறு உவமைகள் மூலம் வெளிப்பாடுகளை சீஷர்களுக்கும், மற்றவர்களுக்கும் கூறினார். இதை மத்தேயு 13 : 33லும் லூக்கா 13 : 20, 21லும் காணலாம். தேவனுடைய ராஜ்ஜியம் எவ்வாறு ஒரு மனிதனுக்குள், ஒரு மனிதன் மூலம் செயல்படுகிறது, ஸ்தாபிக்கப்படுகிறது, கட்டப்படுகிறது, வளருகிறது என்று இயேசு கூறுகிறார். இது ஆழமான சத்தியத்தை வெளிப்படுத்துகிறது. இந்த உவமையின் மையப்பொருளான புளித்த மாவானது எவ்வாறு வேலை செய்கிறது என்பதையும், வேறு இடங்களில் இயேசு புளித்த மாவைப் பற்றி என்ன கூறினார் என்பதையும், இயேசு இந்த உவமையில் புளித்த மாவை தேவராஜ்ஜியத்துடன் ஒப்புமைப்படுத்திக் கூறுயதையும் பார்ப்போம்.
புளித்தமாவைப் பற்றி வேறு இடங்களில்:
மத்தேயு 16 : 11, 12 “பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் புளித்தமாவைக்குறித்து எச்சரிக்கையாயிருக்கவேண்டும் என்று நான் சொன்னது அப்பத்தைக்குறித்துச் சொல்லவில்லை என்று நீங்கள் உணராதிருக்கிறது எப்படி என்றார்.”
“அப்பொழுது, அவர் அப்பத்தின் புளித்தமாவைக்குறித்து எச்சரிக்கையாயிருக்கவேண்டும் என்று சொல்லாமல், பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் உபதேசத்தைக்குறித்தே அப்படிச் சொன்னார் என்று அறிந்துகொண்டார்கள். “
இதில் கிறிஸ்து பரிசேயர்களின் போதனைகளைப் புளித்த மா என்கிறார். இயேசுவும், சீஷர்களும் யூதர்களாயிருந்தது போல பரிசேயர்களும் சதுசேயர்களும் யூதர்கள் தான். ஆனால் உபதேசத்தில் வித்தியாசம் இருக்கிறது. பரிசேயர்கள் நீதிமான்களைப் போல நடந்து கொண்டிருப்பார்கள். தாங்கள்தான் முன்னோர்களின் பாரம்பரியத்தை ஒழுங்காகக் கடைப்பிடிப்பவர்கள் என்று பறைசாற்றுவார்கள். அவர்கள் வெளிப்படையான பாரம்பரியத்தைக் கையாண்ட போதிலும், உள்ளான வாழ்க்கையிலே அவலட்சணமும், அலங்கோலமும், அசுத்தங்களும் நிறைந்தவர்களாக இருந்தனர். வெள்ளையடிக்கப்பட்ட கல்லறையைப் போலக் காணப்பட்டார்கள். இரட்டை வாழ்க்கை வாழ்ந்தார்கள். வெளித்தோற்றத்தில் மக்கள் பார்க்கும் போது பக்தியான வாழ்க்கை, அந்தரங்கத்திலோ அருவருப்பான வாழ்க்கை. இவர்களின் உபதேசம் சுயநீதியாகிய உபதேசமாகும். இயேசு பரிசேயர் சதுசேயர்களின் உபதேசத்தைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள் என்பது அவர்களுடைய மாய்மாலத்தை இவ்வாறு கூறுகிறார். வாயினால் அவர்கள் உபதேசம் பண்ணுவார்கள். ஆனால் அதைக் கடைபிடிக்க மாட்டார்கள். அந்த மாயமானது பரவி மற்றவர்களையும் மாயக்காரர்களாக்கி விடும். எனவே இயேசு அந்த மாய்மாலத்தைத் கண்டிக்கிறார். இவர்களுடைய பாவங்கள் தமது சீடர்களின் வாழ்க்கையிலும், ஊழியத்திலும் நுழைந்து விடாதபடி அவர்களை எச்சரிக்கிறார்.
Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates
தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்
சதுசேயர்களுடைய உபதேசங்கள் கள்ள உபதேசங்களாகவும், துர்உபதேசமாகவும் இருந்தது (மாற்கு 12 : 18, லூக்கா 20 : 27). இது தீமைக்கும் அக்கிரமத்திற்கும் அடையாளமாக உள்ளது. இவர்கள் இயேசுவின் உயிர்த்தெழுதலை நம்பாதவர்கள். ஏனெனில் இந்த உபதேசத்தின் கொஞ்சம் பகுதியானாலும் அது மாபெரும் கூட்டத்தினுள் விரைவில் பரவி அனைவரையும் தவறான காரியங்களை நம்பச்செய்து விடும். இதைத்தான் இயேசு பரிசேயருடைய நீதியிலும் நம்முடைய நீதி அதிகமாக இருக்க வேண்டும் என்று மத்தேயு 5 : 20ல் கூறினார். ஏனெனில் நம்முடைய வாழ்க்கையின் அந்தரங்கத்தைக் கர்த்தர் காண்கிறார். நம்முடைய உள்ளத்தின் ஆழத்தை, உள்ளத்தின் ரகசியங்களை, உள்ளத்தின் மறைபொருளைக் காண்கிற தேவன் இயேசு. எனவே உள்ளும் புறமும் பரிசுத்தமாய் இருக்க வேண்டும். நாம் அவருடைய போதனைகளைக் குறித்துக் கவனமாக இருக்க வேண்டும்.
மாற்கு 8 : 15 “அவர் அவர்களை நோக்கி: நீங்கள் பரிசேயருடைய புளித்தமாவைக்குறித்தும் ஏரோதின் புளித்தமாவைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள் என்று கற்பித்தார்.”
இதில் ஏரோதின் புளித்த மாவைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள் என்று இயேசு கூறுவதைப் பார்க்கிறோம். ஏரோதின் புளித்த மா சதுசேயரைப் போன்றது. அது பக்தியற்ற உலகப்பிரகாரமான ஆவியைக் குறிக்கிறது. ஏரோது ராஜா அரசியல் தந்திரத்தால் யூதர்களை தம் வசம் திருப்ப அவர்களுக்கு ஆலயத்தைக் கட்டிக் கொடுத்தான். ஆனால் உள்ளூரக் கொடூரமானவனாக இருந்தான். இயேசு பிறந்தார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டவுடன் பெத்லகேமைச் சுற்றியுள்ள இடங்களிலுள்ள இரண்டு வயதுக்குட்பட்ட ஆண்பிள்ளைகளையெல்லாம் கொன்று போட்டான். ஏரோதின் மகனுடைய பாவத்தை எச்சரித்த யோவான்ஸ்நாகனைக் கொலை செய்தான். இயேசுவின் விசாரணையில் அநீதியாகத் தன்னுடைய கைகளைக் கழுவி சிலுவையில் அறைய இயேசுவை ஒப்புக்கொடுத்தான் (மத்தேயு 27 : 24). எனவே இவர்களிடமும் எச்சரிக்கையாயிருக்கக் கூறுகிறார்.
இவைகள் அனைத்தும் இந்த உவமை அல்லாத வசனங்களில் கூறப்பட்ட விளக்கங்களைப் பார்க்கிறோம். ஆனால் இந்த உவமையில் இயேசு புளித்தமாவை எதிர்மறையாக விளக்குகிறார். மற்ற இடங்களிலெல்லாம் புளித்தமாவின் தன்மையைப் பற்றி இயேசு கூறினார். ஆனால் இந்த உவமையில் மட்டுமே அதனுடைய அளவைக் குறித்து கூறுகிறார்.
புளித்த மாவின் தன்மை:
மத்தேயு 13 : 33 “வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் புளித்த மாவுக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு ஸ்திரீ எடுத்து, முழுவதும் புளிக்கும் வரைக்கும், மூன்றுபடி மாவிலே அடக்கிவைத்தாள் என்றார்.”
ஒரு பெரிய பாத்திரத்தில் மூன்று படி மாவு வைக்கப்பட்டிருக்கிறது. புளித்தமா என்பது முந்தின தடவை பிசையப்பட்ட மாவிலிருந்து எடுக்கப்பட்ட சிறிய பகுதி. ஒரு ஸ்திரீயானவள் கொஞ்சம் புளித்த மாவை எடுத்து அதை அந்த மூன்று படி மாவோடு கலந்து வைக்கிறாள். அடுத்த நாள் காலையில் அந்த மாவானது உப்பி அந்தப் பாத்திரத்தை நிரப்புகிறது. பழைய மாவு முழுவதையும் பாதித்து அதற்குள் ரசாயன மாற்றம் ஏற்படுகிறது. மூன்று படி மாவின் தன்மை மாறி புளித்த மாவின் தன்மை வந்து விடுகிறது. இந்த மாற்றமானது மறு ரூபத்தைக் கொண்டு வருகிறது. இயேசுவின் இரத்தத்தால் நாம் சுத்திகரிக்கப்பட்டு, அவருடைய பிள்ளைகளாகும் பொழுது பரலோக ராஜ்ஜியம் நமக்குள் வந்து விடுகிறது. அதன்பின் நம்முடைய பழைய பாரம்பரியம், சடங்காச்சாரத்தைப் பின்பற்றக் கூடாது. அது கேட்டை உருவாக்கும். தவறான நம்பிக்கைக்கு வழிவகுக்கும். இதேபோல் தான் சிறியதாக ஆரம்பித்த பரலோகராஜ்யமானது விரிவடையும் என்பதைப் புரிந்துகொள்ள இந்த உவமையை இயேசு கூறுகிறார். கொஞ்சம் புளித்த மா என்பது பரிசுத்த ஆவியானவரைக் காட்டுகிறது. புளித்த மாவில் இரண்டு பகுதிகள் உண்டு. ஒன்று புளிப்பு இது பரிசுத்த ஆவியின் வல்லமையைப் காட்டுகிறது. ….இயேசுவின் சீஷர்களும், பவுலும் பரிசுத்த ஆவியைப் பெற்றபின் வல்லமையுள்ள பிரசங்கியாகவும், தைரியமுள்ளவர்களாகவும் மாறியதைப் பார்க்கிறோம்.
இரண்டாவது இதன் நிறம் வெண்மையானது. இது தூய்மையான பரிசுத்தத்தைக் காட்டுகிறது. நம்முடைய வாழ்க்கையிலே பரிசுத்தம் குறைவுபட்டால் நாம் ஆண்டவருக்காக எழுந்து பிரகாசிக்க முடியாது. நோவாவின் காலத்தில் அக்கிரமம் பெருகியதால் “என் ஆவி என்றைக்கும் மனுஷனோடே போராடுவதில்லை” என்று ஆதியாகமம் 6 : 3ல் கர்த்தர் கூறி ஜனங்களை ஜலப்பிரளயத்தினால் அழித்தார். எத்தனையோ பேர் நோவாவின் பேழை கட்டுவதற்காக உழைத்திருக்கக்கூடும். ஆனால் அவர்கள் யாரும் பேழைக்குள் செல்ல முடியாமல் கைவிடப்பட்டார்கள். அதே போல் இன்றைக்கும் தேவனுடைய ராஜ்ஜியம் கட்டப்படுவதற்கு அநேகர் உழைத்திருக்கலாம், காணிக்கை கொடுத்திருக்கலாம். கிறிஸ்தவ நிறுவனங்களில் பணியாற்றி இருக்கலாம். ஆனால் பரிசுத்தமாக்கப் படாமலும், கர்த்தருடைய வருகைக்கு ஆயத்தமாகாமலும் இருந்தால் அவர்களுடைய முடிவு பரிதாபம். எனவே பரிசுத்தம் முக்கியம்.
Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates
தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்
மூன்றுபடி மாவில் அடக்கி வைத்தாள்:
3 படி மாவானது நமக்குள் இருக்கிற ஆவி ஆத்துமா சரீரத்தைக் காட்டுகிறது. கொஞ்சம் புளித்தமாவான ஆவியானவரை நம்முடைய ஆவி ஆத்துமா சரீரத்தில் அடக்கி வைத்து, அதற்கு அடங்கி ஜீவிக்க வேண்டும் என்பதை நமக்கு உணர்த்துகிறது. எதுவரை அந்த ஸ்திரீ அடக்கி வைத்தாள் என்றால், புளிக்கும் வரைக்கும் அடக்கி வைத்தாள். நாமும் நம்முடைய ஆவி ஆத்துமா சரீரம் பரிசுத்தமாக்குகிற வரைக்கும் நம்மைத் தாழ்த்தி ஒப்புக் கொடுக்க வேண்டும். தேவனுடைய ராஜ்ஜியமானது நம்முடைய ஆவியில், ஆத்துமாவில், சரீரத்தில் வேலை செய்து, மிகப்பெரிய தாக்கத்தை உண்டு பண்ணும் வல்லமையுடையது. அது ஆவியை ஆத்மாவை சரீரத்தை பரிசுத்தமாக வைத்துப் போஷிக்கும் வல்லமையுள்ளதாயிருக்கிறது. நமக்குள் இருக்கிற பரிசுத்த ஆவியானவரை நாம் துக்கப்படுத்தாமல் காக்க வேண்டும் (எபேசியர் 4 : 30). ஆவியானவரை துக்கப் படுத்தினால் நமக்குள் மறுரூபமாகிற வேலை நடக்காது. நமது அற்பமான சரீரமானது மகிமையான சரீரமாக மாற முடியாது (பிலிப்பியர் 3 : 21). இயேசு தான் நம்முடைய ஆவி ஆத்துமா சரீரத்தை இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாய் இருக்கும்படி பரிசுத்தமாக்குகிறவர் (1 தெசலோனிக்கேயர் 5 : 23). இந்த பரிசுத்தமாக்கும் வேலையானது மூன்று விதங்களில் நடக்கிறது,
இந்த மூன்றும் ஒரு மனிதனுக்குள் செயல்பட வேண்டும். இந்தப் புளித்த மாவைக் குறித்ததான உவமை ஒரு மனிதனுக்குள் பரிசுத்தஆவி எவ்வளவு முக்கியம் என்பதைக் காட்டுகிறது.
பிரிக்க முடியாதது:
கொஞ்சம் புளித்த மாவையும் 3 படி மாவையும் சேர்த்து வைத்த பின் மறுநாள் எல்லாமாவும் புளித்து விடுகிறது. மாவு எப்படி புளிக்கிறது என்பதை யாரும் கண்களில் காணமுடியாது. மெதுவாக அமைதியாக யாரும் காணாத விதத்தில் நடை பெறும். அதன்பின் இரண்டு மாவையும் தனித்தனியாகப் பிரிக்க முடியாது. பரிசுத்த ஆவி ஒருவனிடத்தில் வரும்போது அவர் மயமாகவே அவனை மாற்றி விடுகிறார். பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை ஒருவன் பெற்றவுடன் அவன் நிறைவு பெற்றோம் என்று எண்ணக்கூடாது. புது மனிதனாக மாறிவிடுகிறான். பரலோக அங்கத்தினராகிறான். இந்தப் புதிய மனுஷன் கர்த்தரை அறிகிற அறிவிலே வளர்ந்து வளர்ந்து கிறிஸ்துவின் நிறைவான வளர்ச்சியைப் பெற்று பூரண புருஷனாக மாற வேண்டும். பரிசுத்த ஆவியானவரிடம் நாம் நம்மை ஒப்புக் கொடுத்து, கீழ்ப்படியும் போது அவர் நம்மை அவரைப்போல மாற்றுகிறார். இது எதைக் காட்டுகிறதென்றால் ஒருவன் பரிசுத்தவானாக மாறின பின் ஆவியானவர் வேறு பரிசுத்தவான் வேறு என்று பிரிக்க முடியாது. இருவரும் சேர்ந்து இயேசுவின் மணவாட்டியாக மாறுகிறார்கள். இயேசு பேதுருவிடம் அபிஷேகம் பெறுவதற்கு முன் உன் இஷ்டப்படி அலைந்து திரிந்தாய். இப்பொழுது பரிசுத்த ஆவியைப் பெற்ற பின் முதிர் வயதுள்ளவனாய் காணப்படுகிறாய். நீ உன்னுடைய அரைகளைக் கட்டி, கைகளை நீட்டு. அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் உன் அரைகளைக் கட்டுவார். நீ உன் இஷ்டப்படி நடக்க முடியாது என்று யோவான் 21 : 18ல் உபதேசித்ததைப் பார்க்கிறோம். ஆவியானவருடைய இஷ்டப்படி நடக்க நம்மை அர்ப்பணிக்க வேண்டும். நம்முடைய அவயங்களை அவருடைய ஆளுகைக்குள் கொண்டுவர ஜெபிக்க வேண்டும். அப்பொழுது வெற்றிகரமான வாழ்க்கை அமையும்.
பரவுகிறது:
கொஞ்சம் புளித்த மாவோடு ஏதோ ஒன்றைச் சேர்த்தாலும் அந்தப் புளிப்பானது அதோடு சேர்க்கிற மற்றவைகளிலும் பரவும் தன்மையுடையது. தனக்குள் இருக்கும் தன்மையை மற்றவர்களுக்கும் இது பரப்புகிறது. இத்தகைய தன்மை அந்த புளிப்புள்ள மாவுக்குள் இருக்கிறது. பரலோகராஜ்யம் எங்கே வந்தாலும் பரவும். தனித்து இருக்காது. நம்மில் இருந்தும் மற்றவர்களுக்கு பரவும் தன்மையுடையது. பரலோக ராஜ்யம் நமக்குள் வரும் பொழுது இயேசுவைக் குறித்த விசுவாசமும் நமக்குள் வந்துவிடுகிறது. பவுல் உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியின் ஆலயம் என்று 1கொரிந்தியர் 6 :19ல் கூறுகிறார். நாம் இரட்சிக்கப்பட்டு, ஞானஸ்தானம் எடுத்தவுடன் நமக்குள் இருக்கிற பரலோகராஜ்யமானது மாற்றத்தைக் கொண்டு வரும். அது நம்மை தேவனுடைய சாயலுக்கு மாற்றுகிறது. நாம் மண்ணில் இருந்து உருவாக்கப்பட்டபடியால் மண்ணின் சாயலில் தான் இருக்கிறோம். ஆனால் ஆவியானவர் நமக்குள் வந்தவுடன் அந்தச் சாயலை பரலோக சாயலாக மாற்றுகிறார். தேவனோடு செல்லத் தகுதிப் படுத்துகிறார். எனவே நாம் அந்த பரலோக ராஜ்ஜியத்தை மற்றவர்களுக்கு அறிவிக்க வேண்டும். இதைத்தான் இயேசு தமது சீஷர்களிடம் கடைசியாக
மத்தேயு 28 19 20 “ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,”
“நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார்.”
படிப்பறிவில்லாத சாதாரண நிலைமையில் வந்த சீஷர்கள் செய்த சிறு சிறு பிரசங்கங்கள் திரள் கூட்டமான ஜனங்களை இரட்சிப்புக்குள் கொண்டுவந்தது. அதற்குக் காரணம் கிறிஸ்துவின் வல்லமையும் மறுரூபமாக்குகிற கிருபையும் ஜனங்களுக்குள் பெருகினதினால் கிறிஸ்தவம் பற்றி பிடித்துப் பரவியது. சுவிசேஷமாகிய புளித்தமாவின் நிமித்தம் அன்றைக்கு ஆசிய கண்டமே தலைகீழாக மாறியது (அப்போஸ்தலன் 17 : 6) உலகத்தார் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தி சித்திரவதைகளுக்கு உட்படுத்தினாலும் கிறிஸ்தவர்களோ புளித்த மாவைப் போன்ற அமைதியாய், மென்மையாய் மற்றவர்களை புளிப்புக்குள் வழி நடத்தினார்கள். 12 சீடர்களுடன் தேவனுடைய ராஜ்யமானது பெந்தேகோஸ்தே நாளில் மேல் வீட்டறையில் ஆரம்பிக்கப்பட்டது. அது உலகமெங்கும் பரவியது பேதுருவின் பிரசங்கத்தைக் கேட்டு 3000 பேர், 5000 பேர் என்று இரட்சிக்கப்பட்டனர். இயேசுவுக்காய் வாழ்கிற இயேசுவுக்காய் உயிரைக் கொடுக்கிற கோடான கோடி மக்கள் தேவனுடைய ராஜ்யத்தை பின்பற்ற ஆரம்பித்தனர். துவக்கம் அற்பமாக இருந்தாலும் முடிவு சம்பூரணமாய் இருக்கும் என்பதை இதிலிருந்து நாம் அறிகிறோம்.
Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates
தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்
மறைவாய் நடக்கிறது:
புளிக்க வைக்கும் வேலை மறைவாய் நடைபெறுகிறது. அது எவ்வாறு நடைபெறுகிறது என்று வெளியே தெரிவதில்லை. புளித்த மாவானது தேவனுடைய மறுரூபமாக்கும் வல்லமையைக் குறிக்கிறது (1தெசலோனிக்கேயர் 5 : 23). அர்ப்பணிப்புள்ள விசுவாசமுள்ள மக்களைக் கொண்டு பரலோகராஜ்யத்தில் வேலையானது நடக்கிறது. ஒரு நபர் மற்றவர்கள் காணாதபடி இரட்சிக்கப்பட்ட பின் அதை மற்றவர்களிடம் தான் இரட்சிக்கப்பட்ட விதத்தையும், அதன்பின் ஜீவனுள்ள தேவன் யாரென்று தான் அறிந்து கொண்டதையும் கூறும் போது அவர்கள் இரட்சிப்படைய முடியும். சுவிசேஷத்தை அறிவிக்க வெட்கப்படக் கூடாது. தனிநபர் ஊழியமானது அவர்களுடைய உள்ளத்தில் மாற்றத்தைக் கொண்டுவரும். தேவனுடைய ராஜ்ஜியம் உங்களுக்குள்ளும், உங்கள் நடுவிலும் இருக்கிறது. தேவனுடைய ராஜ்யத்தின் வேலை இவ்விதமாய் நடந்து கொண்டேயிருக்கிறது.
வெளியே உள்ள புளித்த மா உள்ளே போனவுடன் மாறுதல் ஏற்படுத்துவது போல, நம்முடைய ஆவிக்குள் ஆத்மாவுக்குள், உள்ளுணர்வுக்குள் இரட்சிப்பின் வேலை நடந்து உள்ளான மாற்றத்தை ஏற்படுத்துகிறது. ஒருவன் தானாக இயேசுவிடம் வரப்போவதில்லை. இயேசுவின் மரணம், உயிர்த்தெழுதலின் சாட்சி, ஒப்புரவாக்கியது அனைத்தையும் எடுத்துரைக்கும் பொழுது அவனுடைய மனமானது மாறும். எனவே சுவிசேஷத்தை மற்றவர்களுக்கு அறிவிக்க வேண்டும் விசுவாச எண்ணங்களை மற்றவர்களோடு பேச வேண்டும். மாற்றம் அடையும் வரை பொறுமையோடு ஜெபத்தோடு காத்திருக்க வேண்டும். ஒவ்வொருவரும் மற்றவர்கள் இரட்சிக்கப்பட தனித்தாள் ஊழியம் செய்ய வேண்டும். ஆத்மாக்களைப் பரலோக ராஜ்ஜியத்தில் சேர்ப்பதற்குப் பாடுபட வேண்டும்.
பரலோகராஜ்யம் அநேகருடைய பார்வையில் அடைய முடியாததைப் போலிருக்கிறது. பரலோக ராஜ்யத்தைப் பற்றி தெரிந்தவர்களில் சிலர் அதைப் பொருட்டாக எண்ணுவது கிடையாது. சிலருக்கு அங்கு செல்ல ஆசை உண்டு. ஆனால் அதற்காகத் தியாகம் பண்ண மனம் கிடையாது. ஒரு ஐசுவரியவான் இயேசுவிடம் வந்து பரலோக ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதற்கு என்ன செய்ய வேண்டுமென்று இயேசுவிடம் கேட்டான் அதற்கு இயேசு,
மத்தேயு 19 : 21 “ அதற்கு இயேசு: நீ பூரண சற்குணனாயிருக்க விரும்பினால், போய், உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும். பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார்.”
ஆனால் அந்த வாலிபன் மிகவும் ஐசுவரியவனாக இருந்தபடியால் இயேசுவின் வார்த்தையைக் கேட்டவுடன் துக்கமடைந்தவனாய் போய்விட்டான். பரலோக ராஜ்யத்தையடைவதற்கு அவன் எதையும் விட்டுக் கொடுக்க மனமில்லை. பரலோகராஜ்யமானது அவனுடைய கண்களுக்கு பணத்தைவிட சின்னதாகத் தோன்றியது.
தேவனுடைய ராஜ்ஜியம் நமக்குள் வந்தால் போதும். மற்றவைகள் எல்லாம் நமக்குள் வந்துவிடும். உலகளவில் தேவனுடைய ராஜ்யமானது எவ்வாறு வேலை செய்கிறது என்றால், நோவாவின் காலத்தில் உலகத்தை அழித்தபின் நோவாவின் குமாரர்களான சேம், காம், யாப்பேத் என்ற மூன்று பேரும் 70 தேசங்களாக உருவானார்கள். உலகத்தில் உள்ளவர்கள் அனைவரும் 70 தேசங்களுக்குள்ளானவர்கள். நமக்குள் இருக்கிற விசுவாசம் 70 தேசங்களில் உள்ளவர்களைக் கலக்கிக் கொண்டே இருக்க வைக்கும். அந்த விசுவாசம் 70 தேசங்களுக்குள்ளும் கிரியையை நடப்பிக்க வல்லமையுள்ளது. நம்மை உலகம் முழுமைக்கும் ஆசீர்வாதமாக வைத்திருக்கிறார். 12 சீடர்களைக் கொண்டு உலகத்தைக் கலக்கியவர் நம்மை கொண்டும் கலக்குவார். புளித்த மாவானது நம்முடைய ஆவி ஆத்துமா சரீரத்தில் தாக்கத்தை உண்டு பண்ணுவதைப் போல நம்மைக் கொண்டும் முழு உலகத்திலும் தாக்கத்தை உண்டு பண்ணும்.
எருசலேமில் மேல் வீட்டறையில் பத்து நாளளவும் பேதுருவும், பவுலும் சீஷர்களும் கர்த்தருக்காக வைராக்கியம் கொண்டு, ஜெபித்தனர். யூதர்களுக்கும், பரிசேயருக்கும் அவர்கள் பயப்படவில்லை. தைரியமாக நின்று கிறிஸ்துவைக் குறித்துப் பிரசங்கித்தார்கள். வேதம் கூறுகிறது,
அப்போஸ்தலர் 4 : 13ல் “பேதுருவும் யோவானும் பேசுகிற தைரியத்தை அவர்கள் கண்டு, அவர்கள் படிப்பறியாதவர்களென்றும் பேதமையுள்ளவர்களென்றும் அறிந்தபடியினால் ஆச்சரியப்பட்டு, அவர்கள் இயேசுவுடனேகூட இருந்தவர்களென்றும் அறிந்துகொண்டார்கள்.”
என்றிருப்பதைப் பார்க்கிறோம். நாம் தான் உலகத்தைக் கர்த்தருக்கென்று மாற்றுகிறவர்கள். நம்மோடு சாதாரணமான மனுஷரை இணைக்கும் போது நம்மிடமிருக்கிற சுவிசேஷத்தின் வல்லமையால் அவர்கள் விசேஷமுள்ளவர்களாய் மாறுவார்கள். தெசலோனிக்கேய பட்டணத்தில் எப்பொழுது கிறிஸ்தவம் வந்ததோ, அப்பொழுது அங்குள்ளவர்கள் உலகத்தைக் கலக்குகிறவர்கள் இங்கேயும் வந்து விட்டார்கள் என்று கூறியதை அப்போஸ்தலர் 17 : 6ல் பார்க்கிறோம். அதேபோல நம்மையும் பார்த்துக் கூற வேண்டும். நாமும் நம்மிடமுள்ள துர்க்குணம், பொல்லாப்பு என்ற பாவப்பழக்கங்களை அப்புறப்படுத்துவோம். கர்த்தருக்காக வைராக்கியம் கொண்டு சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க முற்படுவோம். பரிசுத்தத்தோடே கர்த்தருடைய வருகைக்கு ஆயத்தப்படுவோம். ஆமென்.
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…