இந்த உவமையை மத்தேயு 21 : 33 – 44லும், மாற்கு 12 : 1 – 12லும், லூக்கா 20 : 9 – 19லும் பார்க்கலாம். இயேசு பெத்தானியாவிலிருந்து எருசலேமுக்கு பஸ்கா பண்டிகையின் போது பவனியாக வந்து, தேவாலயத்துக்குள் பிரவேசித்து, “என் பிதாவின் வீட்டை கள்ளர் குகையாக்காதீர்கள்” என்று கூறி அதை சுத்திகரித்தார். பிரதான ஆசாரியரிடமும், பரிசேயரிடமும் இந்த உவமையைக் கூறி நேருக்கு நேர் பேசினார். இது தேவனுக்கும், சாத்தானுக்கும் நடக்கும் யுத்தத்தைப் போலவும், இருளுக்கும், ஒளிக்குமிடையே நடக்கும் யுத்தத்தைப் போலவும், பரலோகத்திற்கும், நரகத்திற்கும் இடையே நடக்கும் யுத்தத்தைப் போலவும் உள்ளதைப் பார்க்கிறோம். இது யூத தேசத்தாரின் குற்றத்தைக் காட்டுகிறது. அவர்கள் தேவனுடைய வார்த்தையை வெறுத்து இயேசுவுக்குக் கீழ்ப்படிய மறுத்து விட்டார்கள்.
எஜமானின் திராட்சைத் தோட்டம்:
மத்தேயு 21 : 33 வேறொரு உவமையைக் கேளுங்கள்: வீட்டெஜமானாகிய ஒரு மனுஷன் இருந்தான், அவன் ஒரு திராட்சத்தோட்டத்தை உண்டாக்கி, அதைச் சுற்றிலும் வேலியடைத்து, அதில் ஒரு ஆலையை நாட்டி, கோபுரத்தையும் கட்டி, தோட்டக்காரருக்கு அதைக் குத்தகையாக விட்டு, புறதேசத்துக்குப் போயிருந்தான்.”
ஒரு எஜமான் வெறுமையான தன்னுடைய இடத்தில் ஒரு தோட்டத்தை உண்டாக்கினான். அதில் அவன் திராட்சையைப் பயிரிட்டான். அந்த தோட்டத்தைச் சுற்றிலும் மதில் சுவரை எழுப்பி வேலியடைத்தான். அதில் ஒரு ஆலையை நாட்டி, கோபுரத்தையும் கட்டினான். இவ்வாறு அந்தத் தோட்டத்தை எல்லா வசதியுடனும், பராமரிப்புடனும் முழுமையாக உண்டாக்கி வைத்தான். அதற்குப் பின் அந்தத் தோட்டத்தை தோட்டக்காரரிடம் குத்தகைக்குக் கொடுத்து விட்டு, தான் திரும்பி வரும்போது தனக்கு என்ன தரவேண்டுமென ஒப்பந்தம் பண்ணி விட்டு புற தேசத்துக்குத் தன்னுடைய பயணத்தை அந்த எஜமான் மேற்கொண்டான். இந்த உவமையில் வருகிற வீட்டெஜமான் – தேவனுக்கும்,
திராட்சைத் தோட்டம் – இஸ்ரவேலுக்கும், குத்தகைக்காரர் – இஸ்ரவேலரின் மதத்தலைவர்களுக்கும், இயேசுவைப் புறக்கணித்தவர்களுக்கும், ஊழியக்காரர்களென்பது – தீர்க்கதரிசிகளுக்கும், உண்மையுள்ள தேவதாசர்களுக்கும், குமாரன் – இயேசுவுக்கும் அடையாளமாயிருக்கிறது. எஜமானின் நெடும் பயணம் இயேசுவின் இரண்டாம் வருகையைக் குறிக்கிறது.
அவர் எப்போது வருவாரென்று தெரியாது. ஆனால் நிச்சயமாக வருவார். இதில் குத்தகைக்காரன் என்பவன் மேற்பார்வையாளன் அல்லது உக்கிராணக்காரன். இவன் அந்த நிலத்தில் விளைச்சல் எவ்வளவு கிடைக்கிறதோ அதில் பாதி எடுத்துக் கொள்ளலாம், அல்லது எஜமான் பேசியபடி பணத்தைக் கொடுக்க வேண்டும். இந்த உவமையானது பழைய ஏற்பாட்டில் ஏசாயா தீர்க்கதரிசி,
ஏசாயா 5 : 1 – 2ல் “இப்பொழுது நான் என் நேசரிடத்தில் அவருடைய திராட்சத்தோட்டத்தைக் குறித்து என் நேசருக்கேற்ற ஒரு பாட்டைப் பாடுவேன்; என் நேசருக்கு மகா செழிப்பான மேட்டிலே ஒரு திராட்சத்தோட்டம் உண்டு.”
“அவர் அதை வேலியடைத்து, அதிலுள்ள கற்களைப் பொறுக்கி, அதிலே நற்குல திராட்சச்செடிகளை நட்டு, அதின் நடுவில் ஒரு கோபுரத்தைக்கட்டி, அதில் ஆலையையும் உண்டுபண்ணி, அது நல்ல திராட்சப்பழங்களைத் தருமென்று காத்திருந்தார்; அதுவோ கசப்பான பழங்களைத் தந்தது.”
கூறப்பட்டவைகளுக்கு ஒப்பனையாக இருக்கிறது. அதிலும் ஆண்டவருக்கு ஒரு திராட்சைத் தோட்டம் மகா செழிப்பான மேட்டிலே இருந்ததாகக் கூறப்பட்டிருப்பதைப் பார்க்கிறோம். இந்தத் திராட்சைத் தோட்டம் இஸ்ரவேல் ஜனங்களைக் குறிக்கிறது. இஸ்ரவேல் ஜனங்களை பரிசேயர்களும், சதுசேயர்களும்தான் பராமரித்து வழிநடத்தி வந்தார்கள். இயேசு முதன்முதலாக இஸ்ரவேல் தேசத்திற்குத்தான் வந்தார் (மத்தேயு 15 : 24). ஆனால் யோவான் 3 : 16ல் பிதா முழு உலகத்திற்காகத் தந்தருளினாரென்று பார்க்கிறோம். இவர்களுக்கு இயேசு யாரென்று தெரியவில்லை. இயேசு தான் சுதந்தரவாளியென்று கண்டுபிடித்தவர்கள் சீஷர்களும், இயேசுவைப் பின்பற்றியவர்களும் தான். ரோமர்களுக்கும், பரிசேயர்களுக்கும், சதுசேயர்களுக்கும் இயேசு யாரென்று புரியாததால் இயேசுவைக் கொலை செய்தனர். கர்த்தர் அதை வேலி அடைத்ததைப் போல தேவன் நமக்குக் கேடகமாக, கோட்டையாக, அரணாக இருந்து நம்மைக் காக்கிறார். அதில் உள்ள கற்களைப் பொறுக்கி, நற்குல திராட்சைச் செடிகளை நட்டு, அதன் நடுவில் ஒரு கோபுரத்தைக் கட்டி ஆலையை உண்டு பண்ணியதாகவும் பார்க்கிறோம். இதில் அமைக்கப்பட்ட வேலி தோட்டத்தை பாதுகாப்பதற்காகவும், ஆலை திராட்சைப் பழங்களின் ரசத்தை எடுப்பதற்காகவும், கோபுரம் திராட்சைத் தோட்டத்தைக் கண்காணிப்பதற்கு வைக்கப்பட்டதாகவும் பார்க்கிறோம். அந்தச் செடி நல்ல திராட்சைப் பழங்களைத் தருமென்று காத்திருந்தார். ஆனால் அதுவோ கசப்பான பழங்களைத் தந்தது என்று ஏசாயா தீர்க்கதரிசி கூறுகிறான்.
குத்தகைக்காரனின் கொடூர செயல்:
மத்தேயு 21 : 34 – 36 “கனிகாலம் சமீபித்தபோது, அதின் கனிகளை வாங்கிக்கொண்டுவரும்படி தன் ஊழியக்காரரைத் தோட்டக்காரரிடத்தில் அனுப்பினான்.”
“தோட்டக்காரர் அந்த ஊழியக்காரரைப் பிடித்து, ஒருவனை அடித்து, ஒருவனைக் கொலைசெய்து, ஒருவனைக் கல்லெறிந்து கொன்றார்கள்.”
“பின்னும் அவன் முந்தினவர்களிலும் அதிகமான வேறே ஊழியக்காரரை அனுப்பினான்; அவர்களையும் அப்படியே செய்தார்கள்.”
கனி காலம் சமீபித்த போது, அதாவது அறுவடை காலம் வந்தபோது, அந்த தோட்டத்தில் எஜமான் தன்னுடைய வேலைக்காரரை குத்தகைக்காரனிடம் தன்னுடைய பங்கை வாங்கி வருவதற்காக அனுப்பினார். ஆனால் அந்தக் குத்தகைக்காரன் எஜமான் அனுப்பிய வேலைக்காரர்களைப் பிடித்து அவர்களில் ஒருவனை அடித்து விரட்டினான். மற்றொரு வேலைக்காரனை எஜமான் அனுப்பியபோது அவனைக் கல்லால் அடித்து கொன்றான். எனவே தோட்டத்தின் சொந்தக்காரன் முதலில் அனுப்பிய வேலைக்காரர்களை விட அதிக எண்ணிக்கையில் வேலைக்காரர்களை அனுப்பினான். ஆனால் குத்தகைக்கு எடுத்தவர் முதலில் செய்தது போலவே இந்த முறையும் செய்து அவர்களைக் கொலை பண்ணினான். ஏன் அவன் இவ்வாறு செய்தான் என்றால் எஜமானிடம் கனி கொடுக்க விருப்பமில்லை. எஜமானிடம் தான் பேசிய ஒப்பந்தத்திற்குக் கீழ்ப்படியாமல் புறக்கணித்தான். தனக்காகவே சுயநலத்தோடு தோட்டத்தில் பாடுபட்டு வேலை செய்தான். ஆனால் வீட்டு எஜமான் ஏன் கனியை எதிர்பார்க்கிறார் என்றால் தோட்டம் அவருக்குச் சொந்தமானது. அந்த தோட்டத்தை அவரே உண்டாக்கினார். அவரே வேலியடைத்து, கோபுரத்தையும் கட்டி கொடுத்திருந்தார்.
ஆதியாகமத்தில் ஒரு தோட்டத்தை உண்டாக்கி அந்த நிலத்தைப் பண்படுத்த ஆதாமை அதில் வைத்தார். அவன் தனிமையாக இருப்பது நல்லதல்லவென்று ஏற்ற துணையைக் கொடுத்தார். அதுமட்டுமல்லால் பலுகிப்பெருகி பூமியை ஆண்டு கொள்ளும் சுதந்தரத்தையும் கொடுத்தார். ஆனால் ஆதாமும், ஏவாளும் கர்த்தருடைய கட்டளைக்குக் கீழ்ப்படியாமல் போனார்கள். தேவ பக்தியுள்ள சந்ததியைக் கொடுத்தவர் தேவன். நாம் பார்க்கிற, தங்கியிருக்கிற, அனுபவிக்கிற எல்லாமே கர்த்தருடையது. பூமியும் நிறைவும் கர்த்தருடையது. நம்முடைய குடும்பம், வேலை எல்லாம் கர்த்தர் கொடுத்தது. அதை நாம் ஆண்டு, அனுபவித்து, களிகூறலாம். நம்மிடத்திலும் தேவன் கனி கொடுக்கும் காலம் வருகிற வரை பொறுமையாயிருக்கிறார். அந்த நேரம் வரும் போது நம்மிடம் கனியை எதிர்பார்க்கிறார். இயேசு நடந்து போகையில் வழியருகே நிற்கிற அத்திமரத்தைப் பார்க்கிறார். கனி கொடுக்க வேண்டிய காலம் அது. ஆனால் அதில் இலைகள் மட்டும் நிறைய இருந்தது. கனிகள் இல்லை. கனியிருக்கிறது போல் மக்களை ஏமாற்றுகிறதை உணர்ந்ததால் இயேசு அதை சபித்தார். நாமும் இதேபோல் மாய்மாலம் பண்ணக் கூடாது. நாம் அத்திமரத்தைப் போலல்ல எந்நேரத்திலும் கனி கொடுக்க வேண்டும்.
இதேபோல்தான் தேவன் அனுப்பிய பழையஏற்பாட்டுத் தீர்க்கதரிசிகளும், ராஜாக்களும் தேவனுடைய நீதியைப் பிரசங்கித்தனர். விபச்சாரம், வேசித்தனம், திருட்டு, கொலை, விக்கிரக ஆராதனை இவைகளை விட்டுவிட்டு மனந்திரும்புங்கள் என்று பிரசங்கித்தனர். கர்த்தரை தவிர வேறே தேவன் இல்லை என்றனர். ஜனங்கள் அவர்களில் சிலரைக் கல்லெறிந்து கொன்றனர். சிலரை அடித்தனர். சிலரை சிறையிலடைத்தனர். தீர்க்கதரிசியான எரேமியாவை கிணற்றுக்குள் போட்டனர் (எரேமியா 26 : 7 – 11). யோவான்ஸ்நானகன் மனந்திரும்புங்கள் பரலோக ராஜ்ஜியம் சமீபமாயிருக்கிறதென்றான். எனக்குப்பின் வருகிறவர் என்னிலும் மேன்மையுள்ளவர் என்றார். அவரையே ஏரோது கொலை செய்தான் (மத்தேயு 14 : 1 – 14). ஒருவரும் கெட்டுப்போகக் கூடாதென்றுதான் இத்தனையும் செய்தார்.
எஜமானின் குமாரனை அனுப்பியபோது:
மத்தேயு 21 : 37 – 41 “கடைசியிலே அவன்: என் குமாரனுக்கு அஞ்சுவார்கள் என்று சொல்லி, தன் குமாரனை அவர்களிடத்தில் அனுப்பினான்.”
“தோட்டக்காரர் குமாரனைக் கண்டபோது: இவன் சுதந்தரவாளி, இவனைக் கொன்று, இவன் சுதந்தரத்தைக் கட்டிக்கொள்ளுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு;”
“அவனைப் பிடித்துத் திராட்சத்தோட்டத்திற்குப் புறம்பே தள்ளிக்கொலை செய்தார்கள்.”
“அப்படியிருக்க, திராட்சத்தோட்டத்தின் எஜமான் வரும்போது, அந்த தோட்டக்காரரை என்ன செய்வான் என்று கேட்டார்.”
“அதற்கு அவர்கள்: அந்தக் கொடியவரைக் கொடுமையாய் அழித்து, ஏற்றகாலங்களில் தனக்குக் கனிகளைக் கொடுக்கத்தக்க வேறே தோட்டக்காரரிடத்தில் திராட்சத்தோட்டத்தைக் குத்தகையாகக் கொடுப்பான் என்றார்கள்.”
எஜமான் தன்னுடைய மகனுக்குக் குத்தகைக்காரன் பயப்படுவானென்று நினைத்துத் தன்னுடைய மகனை அனுப்பினான். தோட்டக்காரனின் சொந்தக் குமாரனே அவர்கள் முன் நின்றார். ஆனால் குத்தகைக்காரனோ அவனைப் பார்த்து இவனைக் கொன்றுவிட்டால் திராட்சைத்தோட்டம் தனக்குச் சொந்தமாகிவிடுமென்று நினைத்து அவனைக் கொன்று போட்டனர். இவனுக்குப் பின் எஜமான் வருவானென்ற உணர்வு அவனுக்கில்லை. அந்த எஜமான் வந்து அந்த குத்தகைக்காரனை என்ன செய்வானென்று இயேசு கேட்டார். அதற்கு அவர்கள் அந்தக் கொடிய குத்தகைக்காரனை அழித்து தனக்கு கீழ்ப்படிகிற சரியாகக் கனி கொடுக்கிற வேறு தோட்டக்காரரிடத்தில் குத்தகைக்குக் கொடுப்பான் என்றார்கள்.
இதேபோல்தான் இயேசுவை பிதா அனுப்பினார். பிதா, தான் அனுப்பிய ஊழியக்காரர்களைக் கொடுமையாக நடத்தியும், ஏன் தன்னுடைய குமாரனை அனுப்பினாரென்றால் தேவனுடைய ராஜ்ஜியத்தின் ஊழியங்கள் பூமியில் நடக்க வேண்டுமென்பதற்காகவும், தேவனுடைய அன்பினாலே ஜனங்களுக்கு நித்திய மீட்பைக் கொடுப்பதற்காகவுந்தான். தேவனுடைய ராஜ்ஜியத்தில் கனி கொடுக்கிறவர்களாக நாம் மாற வேண்டும். பிதா நமக்கு முதலீடாக தன்னுடைய குமாரனையே கொடுத்திருக்கிறார். நாம் கனி கொடுக்காவிட்டால் நம்மிடமிருந்து பிடுங்கி கனி கொடுக்கிறவர்களிடம் கொடுத்து விடுவார்.
மத்தேயு 21 : 42 : 44
“இயேசு அவர்களை நோக்கி: வீடு கட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே மூலைக்குத் தலைக்கல்லாயிற்று, அது கர்த்தராலே ஆயிற்று, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது என்று நீங்கள் வேதத்தில் ஒருக்காலும் வாசிக்கவில்லையா?”
“ஆகையால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்திலிருந்து நீக்கப்பட்டு, அதற்கேற்ற கனிகளைத் தருகிற ஜனங்களுக்குக் கொடுக்கப்படும்.”
“இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன் மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.”
பரிசேயர்களும், சதுசேயர்களும், இயேசுவின் மரணத்தை ஏற்கனெவே திட்டமிட்டு விட்டார்கள். அதனால் இயேசு அவர்களின் திட்டத்தை அறிந்தவராய் அதை வெளிச்சத்துக்கு கொண்டு வருகிறார். சமயத்தலைவர்கள் செய்யப்போகிற ஒவ்வொரு செயலையும் தீர்க்கதரிசனமாகச் சொல்லி, அதை எதிர்பார்த்துக் காத்திருக்கிறவராக இருந்தார். இயேசு அவர்களிடம் அவர்கள் அவரைக் கொலை செய்வதற்கு முன்னமே அதைக் குறித்த குற்றச்சாட்டை அவர்களிடத்திலேயே சொல்லுகிறார். இது மிகவும் குறிப்பிடத்தக்க சம்பவம். ஆனால் குத்தகைக்காரனாகிய இஸ்ரவேல் ஜனங்கள் இயேசுவைக் கொலை செய்தனர். ஆனால் பிதாவின் அநாதித் திட்டத்தை அளிக்க முடியாது. அவர்கள் ஆகாதென்று தள்ளப்பட்ட கல் கிறிஸ்துவே. இஸ்ரவேலர் அவரைப் புறக்கணித்துத் தள்ளி விட்டனர். ஆனால் அவரே தேவனுடைய புதிய மக்களைக் கொண்ட திருச்சபைக்கு மூலைக்கல்லானார் (அப்போஸ்தலர் 4 : 11, 12,) தேவன் கட்டியெழுப்புகிற இந்த புதிய அமைப்பின் முக்கியமானவர் கிறிஸ்துவே.
இதுவரை பரலோக ராஜ்ஜியம் என்று இயேசு கூறினவர், இங்கு தேவனுடைய இராஜ்ஜியம் என்று கூறுகிறார். ஏனென்றால் இந்த தேவ இராஜ்ஜியத்திலே யூதரல்லாத பலரும் சேர்க்கப்படப் போகிறார்கள். யாரெல்லாம் அவரண்டை வருகிறார்களோ அவர்களெல்லோரையும் இயேசு அவரண்டை சேர்த்துக் கொள்வார். தேவனைப் பற்றி உலகமெங்கும் அறிவித்து அவர்களை நல்வழிப்படுத்தும் பணியை இஸ்ரவேலர் செய்யத் தவறியதால், அது மற்ற இனத்தவரிடம் அளிக்கப்படுமென்று இந்த உவமையின் வாயிலாக இயேசு அறிவித்தார். நற்செய்திக்குச் செவிகொடுக்கும் மக்கள் யூதர்களாயிருந்தாலும், புறஜாதியாராயிருந்தாலும் அவர்களுக்கு கொடுக்கப்படும் (1பேதுரு 2 : 9). கல்லை வீடு கட்டுவதற்கும் மற்ற வேலைகளுக்கும் பயன்படுத்தலாம். ஆனால் கல்லின் மீது மனிதன் விழுந்தால் அம்மனிதன் நசுங்கிப் போவான். அதேபோல் இயேசுவை ஏற்றுக் கொள்ளாதவர்கள் அவருடைய நியாயத்தீர்ப்புக்கு உட்பட்டு நொறுக்கித் தூளாக்கப்படுவார்கள். ஏசாயா 8 : 14லிலும், லூக்கா 2 : 34லிலும் இயேசு ஒரு தடைக்கல்லாகவும், தடுக்கும் இடறுதற்கல்லாகவும் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
கருத்து:
இந்த எஜமான் குத்தகைக்காரனை மாற்றியதைப் போல, இயேசுவின் சீஷர்களும், இயேசுவை விசுவாசித்த புறஜாதி மக்களும் இயேசுவோடு சேர்த்துக் கொள்ளப்பட்டு அவர்கள் தான் திராட்சைத் தோட்டத்தின் பங்குதாரர்களாக, உரிமையாளர்களாக மாறி விட்டார்கள். தேவனுடைய இராஜ்ஜியத்திற்குள் பிதா நம்முடைய தகப்பனாக, இயேசுவானவர் நம்முடைய சகோதரனாக, பரிசுத்த ஆவியானவர் நம்முடைய தேற்றரவாளனாக கர்த்தர் நமக்குக் கொடுத்திருக்கிறார். இந்தத் தோட்டத்தில் செய்ய வேண்டிய பணிகளை நாம் நன்றாகச் செய்வோம். தேவனுக்கென்று கனி கொடுக்கிறவர்களாக மாறுவோம். மாரநாதா சீக்கிரமாய் வாரும். ஆமென்.
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…