இயேசுவின் உவமைகள்

முளைத்து வளரும் விதை – மாற்கு 4 : 26 – 29

ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து தமது செய்திகளை மக்களும், சீடர்களும் புரிந்துகொள்ளும் வண்ணம் போதனை செய்தார். பரலோகத்தின் இரகசியங்களை எளிய உவமையின் மூலம் விளக்கிக் காட்டினார். எல்லா உவமைகளும் ஒரு முக்கிய செய்தியை நாக்கு உணர்த்துவதோடு கர்த்தரை நெருங்கும் பாடங்களையும் தெரிவிக்கின்றன. முளைத்து வளரும் விதை உவமையை மாற்கு மட்டுமே எழுதியிருக்கிறார். இதை மாற்கு 4 : 26 – 29ல் பார்க்கலாம். இது ஒரு வித்தியாசமான உவமையாக இருக்கிறது. இதுவும் செயல்பாடுகள் நிறைந்த உவமை. இது தேவனுடைய ராஜ்யத்தைக் குறிக்கிறது. தேவனுடைய ராஜ்ஜியம் என்றும், பரலோக ராஜ்யம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் இயேசு வளரும் விதையை குறித்து சொல்லுகிறார். இந்த உவமையானது தேவனுடைய வார்த்தையின் வல்லமையை வெளிப்படுத்துகிறது..

விதை முளைக்கும் விதம்:

மாற்கு 4 : 26 – 28 “பின்னும் அவர் அவர்களை நோக்கி: தேவனுடைய ராஜ்யமானது, ஒரு மனுஷன் நிலத்தில் விதையை விதைத்து;”

“இரவில் தூங்கி, பகலில் விழித்திருக்க, அவனுக்குத் தெரியாதவிதமாய், விதை முளைத்துப் பயிராகிறதற்கு ஒப்பாயிருக்கிறது.”

“எப்படியென்றால், நிலமானது முன்பு முளையையும், பின்பு கதிரையும், கதிரிலே நிறைந்த தானியத்தையும் பலனாகத் தானாய்க் கொடுக்கும்.”

விதையை விதைத்துவிட்டு இரவில் தூங்கி காலையில் பார்க்கும் போது அதில் ஒரு சின்ன முளை வந்திருக்கும். அந்த விதைக்குள்ளிருந்து எப்பொழுது அந்த முளை கிளம்பியது என்று தெரியாது. அது கண்களுக்குத் தெரியாதவிதமாய் வந்தது. அது வளர்ச்சிபெற்ற காலங்களிலும் ஒரு விதையிலிருந்து எவ்வாறு ஒரு செடியானது வளருகிறது, கனி கொடுக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடிவதில்லை. இது மறைபொருளாகவே இருக்கிறது. இன்று உலகத்தில் எவ்வளவோ விஞ்ஞானத்தில் வளர்ச்சி பெற்றிருந்தாலும் மனிதன் இதைப் பற்றி எதையுமே இணைக்க முடியாதவனாக இருக்கிறான். தேவனுடைய ராஜ்ஜியத்தின் வளர்ச்சியும் அப்படித்தானிருக்கும். மனிதனானவன் தரிசு நிலத்தைப் பண்படுத்தி விதைகளை விதைக்கிறான் (ஓசியா 10 : 12). ஆண்டவர் மழையைப் பெய்யப்பண்ணி விதைகளை முளைத்தெழும்பப் பண்ணுவார். அது விளைச்சலுக்கு வரும்போது கர்த்தர் பின்மாரி மழையை அனுப்புவார். அப்பொழுது அந்த நிலம் முப்பதும், அறுபதும், நூறுமாகப் பலன் கொடுக்கும். விதைப்பிலும், அறுப்பிலும் தேவனுடைய பங்கு இருப்பதால் விதைப்பின் காலத்தில் முன்மாரியையும், அறுவடையின் காலத்தில் பின்மாரியையும் வருஷிக்கப் பண்ணுவார் (யோவேல் 2 : 23). 

விதையென்பது தேவனுடைய வசனம் (1பேதுரு 1 : 23). இதை ஜீவனுள்ள வித்து என்று இதில் பார்க்கிறோம். வேதவசனத்தில் ஜீவன் இருக்கிறபடியால் அது விதைக்கு ஒப்பிடப்பட்டிருக்கிறது. இதில் விதைக்கும் மனிதன் இயேசு. ஊழியர் விசுவாசி. வசனம் பயிராகும் நிலமாகிய அவிசுவாசிகளின் இருதயம். விதையாகிய தேவனுடைய வசனம் விதைக்கப் படும்போது அது முளைத்துப் பயிராகி வளர்ச்சியடைகிறது. இங்கே விதைக்கிற வசனத்தை முக்கியப்படுத்தி கூறப்பட்டிருக்கிறது. விவசாயி விதைத்தான், தூங்குகிறான், விழித்தெழுக்கிறான், எதிர்பார்க்கிறான். ஒரு விதை விதைக்கப்படும்போது, அது மரமாகி கனி தந்து கோடிக்கணக்கான விதைகளை உற்பத்தி செய்து விடுகிறது. தேவனே அப்படிப்பட்ட விளைச்சலைத் தருகிறார். அது விவசாயிக்குத் தெரியாமலேயே நடக்கிறது. தேவனுடைய வார்த்தையை விசுவாசியின் இதயத்தில் விதைக்கப்படும்போது, அந்த வார்த்தையின் வல்லமையானது வளர்ந்து கனி கொடுக்கக் கூடியதாக இருக்கிறது. வசனத்திற்கு எவ்வளவு ஆற்றல் இருக்கிறது, எவ்வளவு வல்லமை இருக்கிறது, எவ்வளவாய் கிரியை செய்கிறது என்பதைப் பவுல் 

1கொரிந்தியர் 1 : 18 “சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.” என்றும் 

1 கொரிந்தியர் 1 : 21 “எப்படியெனில், தேவஞானத்துக்கேற்றபடி உலகமானது சுயஞானத்தினாலே தேவனை அறியாதிருக்கையில், பைத்தியமாகத் தோன்றுகிற பிரசங்கத்தினாலே விசுவாசிகளை இரட்சிக்க தேவனுக்குப் பிரியமாயிற்று.”

சிலுவையின் உபதேசமென்பது இயேசு நடந்து சென்ற வழியாகும். அந்த வழியில் நடந்து செல்லுபவன் தன்னுடைய பெலவீனத்தை உணருகிறான். அவன் மற்றவர்களால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு புறக்கணிக்கப்படுகிறான். தன்னைத்தான் தாழ்த்துகிறான். பதிலுக்குப் பதில்செய்ய மாட்டான். மனிதரிடமிருந்து யாதொரு மகிமையும், கனத்தையும் தேட மாட்டான். சிலுவையைப் பற்றிய உபதேசம் அவிசுவாசிகளுக்கு பைத்தியமாய்த் தோன்றினாலும், நமக்கு அது ஞானத்தையும், சத்தியத்தையும் காட்டி, நம்மை இரட்சிக்க, சுகமாக்க, பிசாசுகளைத் துரத்த, பாவத்தின் வல்லமையிலிருந்து மீட்டெடுக்க செயலாற்றும் தேவபலனைக் கொண்டுள்ளதாயிருக்கிறது. நாம் சுவிசேஷத்தை எத்தனை விருப்பத்தோடும், தாகத்தோடும், வாஞ்சையோடும், கரிசனையோடும், சொன்னாலும், தேவனின் வார்த்தையைச் சொன்ன நபர், சொன்ன ஸ்தாபனத்தில், சொன்ன இயக்கத்தில், அவிசுவாசியின் இதயத்தில் அது தேவ பலனாய் இருக்கிறது. கேட்கிறவர்களுக்கு அது பைத்தியமாகத் தோன்றுகிற நற்செய்தி சொற்பொழிவுகளால் விசுவாசிக்கிறவர்களை இரட்சிப்பது தேவனுக்கு விருப்பமான திட்டமாகும். பவுல், 

1கொரிந்தியர் 15 : 37, 38ல் “நீ விதைக்கிறபோது, இனி உண்டாகும் மேனியை விதையாமல், கோதுமை, அல்லது மற்றொரு தானியத்தினுடைய வெறும் விதையையே விதைக்கிறாய்.” 

“அதற்கு தேவன் தமது சித்தத்தின்படியே மேனியைக் கொடுக்கிறார்; விதை வகைகள் ஒவ்வொன்றிற்கும் அததற்கேற்ற மேனியையே கொடுக்கிறார்.” 

வேதமாகிய விதையை விதைத்தவனுக்கு தேவன் தனது சித்தத்தின்படி மேனியைக் கொடுக்கிறார். வேதத்திலுள்ள ஒரு வசனம் நம்முடைய உள்ளத்துக்குள் போகும்போது பரிசுத்த ஆவியானவரின் துணையோடு ஜீவத்தண்ணீரால் வேதத்தைக் குறித்த வியாக்கியானம், அதன் வெளிப்பாடு, பரலோகத்தைக் குறித்த வெளிப்பாடு, நமது வாழ்க்கையைக் குறித்த கருத்தும் வெளிப்படும். இது மனித அறிவுக்கு எட்டாதது. அப்பொழுது மனம்திரும்பி ஞானஸ்நானம் பெற்று, அபிஷேகம் பெற்ற பின் நம்முடைய ஜென்மகுணம் மாறி இயேசுவின் குணங்கள் வெளிப்படும். மண்ணுக்குரிய சுபாவமுள்ளவர்களாகிய நாம் விண்ணுக்குரிய சுபாவமுள்ளவர்களாக மாறுவோம். இயேசுகிறிஸ்து வசன விதைகளை விதைப்பதற்காகவே இந்த உலகத்திற்கு வந்தார். சுவிசேஷம் ஒருவனை இரட்சிக்க வல்லமையுள்ளது. முதலில் இயேசு 12 பேரையும் அதன் பின் 70 பேரையும் தெரிந்து கொண்டார். அவர்களை அனுப்பும்போது அறுப்பு மிகுதி வேலையாட்கள் கொஞ்சம் என்றார். இயேசு அனுப்புகிற வேலையாளாக நாம் செயல்பட வேண்டும். நாம் ஒருவரிடம் போய் வசனத்தை சொல்லும் போது, நமக்குத் தெரியாத விதமாய் அது செயல்படத் துவங்கும். வேலை பார்க்கிற இடத்திலும், நம் பக்கத்தில் உள்ளவர்களுக்கும், உறவினர்களுக்கும் எந்த இடத்தில் இருந்தாலும் நாம் அவர்களுக்கு விதைத்த விதையானது நமக்கு தெரியாத விதத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும். பவுல் போகிற இடங்களிலெல்லாம் சுவிசேஷத்தைச் சொல்லி இரட்சிப்பைக் கொண்டு வந்தார். நாம் அறிவித்த எல்லா இடத்திலும் அந்த வசனமானது செயல்படத் துவங்கும். 

அறுவடைக் காலம்:

மாற்கு 4 : 29 “பயிர் விளைந்து அறுப்புக்காலம் வந்தவுடனே, அறுக்கிறதற்கு ஆட்களை அனுப்புகிறான் என்றார்.”

பயிரிடும் காலம் வரும்போது எல்லோரும் சந்தோஷத்துடன் போய் நிலத்தை உழுகிறார்கள். பயிரிடுவதற்கு தேவையான அத்தனை ஆயத்தங்களையும் மகிழ்ச்சியோடு செய்கிறார்கள். எதற்கு செய்கிறார்கள் என்றால், அறுப்பு காலத்தை எதிர்நோக்கித்தான் அதைச் செய்கிறார்கள் ஆனால் இயற்கையிலே ஆண்டவர் கொடுக்கிற வளர்ச்சியை குறித்து விவரிக்கவே முடியாது. விதைத்துவிட்டு ஊழியக்காரன் வந்துவிட்டான். விதை விழுந்து முளை விட்டது. தானியத்தைக் கொண்டு வந்தது. படிப்படியான வளர்ச்சியையும், முதிர்ச்சியையும் கொண்டு வந்தது. எவ்வாறு அறுவடை வரும் என்று பவுல் கூறுகிறாரென்றால்,

1கொரிந்தியர் 3 : 4, 6, 7, 8 “ஒருவன் நான் பவுலைச் சேர்ந்தவனென்றும், வேறொருவன் நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவனென்றும் சொல்லுகிறபடியால் நீங்கள் மாம்சத்திற்குரியவர்களல்லவா?”

“நான் நட்டேன், அப்பொல்லோ நீர்ப்பாய்ச்சினான், தேவனே விளையச்செய்தார்.”

“அப்படியிருக்க, நடுகிறவனாலும் ஒன்றுமில்லை, நீர்ப்பாய்ச்சுகிறவனாலும் ஒன்றுமில்லை, விளையச்செய்கிற தேவனாலே எல்லாமாகும்.”

“மேலும் நடுகிறவனும் நீர்ப்பாய்ச்சுகிறவனும் ஒன்றாயிருக்கிறார்கள்; அவனவன் தன்தன் வேலைக்குத் தக்கதாய்க் கூலியைப் பெறுவான்.”

பவுல் சுவிசேஷ ஊழியத்தைச் செய்து முடித்தார். அதாவது அந்த நிலத்தைக் கொத்தி விதைத்தார். பவுலைத் தொடர்ந்து வந்த அப்பல்லோ அதற்கு நீர் பாய்ச்சினான். பவுலும் அப்பொல்லாவும் சேர்ந்தே ஊழியம் செய்தனர். அவர்கள் மூலம் மனம் மாறியவர்கள் கர்த்தருக்கென்றே சேர்க்கப்பட்டார்கள். அவர்களுடைய சபைகளும் கர்த்தருக்காகவே நிலைத்து நின்றது. ஆகவே சகல மகிமையும் தேவனுக்கே உரித்தாக வேண்டும். பவுல் தன்னைக் குறித்தும், அப்பொல்லொலாவைக் குறித்தும் கூறும்போது நாங்கள் ஒன்றுமில்லை என்கிறார். விவசாயி விதைக்க மட்டும் செய்கிறான். ஆனால் அதற்குப் பலனைக் கொடுக்கிறவர் தேவன். தேவனுடைய சுவிசேஷத்தை அவிசுவாசியின் இருதயத்தில் விதைக்கிறோம். அதற்கு விளைச்சலையும், கனியையும், கொடுப்பது தேவன். விதைத்தது ஜீவனுள்ள தேவனாகிய இயேசு. அவர் தான் நமக்காகப் பாடுபட்டார். அவர் தன் பாவத்தைச் சுமந்தார். சுவிசேஷத்தை அறிவிக்க வேண்டியது ஊழியக்காரர்கள், மற்றும் விசுவாசிகளின் கடமை. விளையச் செய்வது தேவன். விதைத்ததற்கான கூலியை விதைத்தவன் பெறுவான். நம் ஒவ்வொருவரைக் கொண்டும் தேவன் செயல்படுகிறார். நமக்குக் கூலி கொடுக்கிறார். தேவனது இந்த சுவிசேஷத்தை எடுத்துக்கொண்டு நமக்காகவும், பிறருக்காகவும் பயன்படுத்தும்போது ஜீவனுள்ள அழிவில்லாத வித்தினால் மறுபிறப்பு அடைவோம். ஒருவனை மறுபடியும் பிறக்க வைப்பது அழிவில்லாத வித்தாகிய வசனம்.

ஏசாயா 40 : 6 – 8 “பின்னும் கூப்பிட்டுச் சொல்லென்று ஒரு சத்தம் உண்டாயிற்று; என்னத்தைக் கூப்பிட்டுச் சொல்வேனென்றேன். அதற்கு: மாம்சமெல்லாம் புல்லைப்போலவும், அதின் மேன்மையெல்லாம் வெளியின் பூவைப்போலவும் இருக்கிறது.”

“கர்த்தரின் ஆவி அதின்மேல் ஊதும்போது, புல் உலர்ந்து, பூ உதிரும்; ஜனமே புல்.”

“புல் உலர்ந்து பூ உதிரும்; நமது தேவனுடைய வசனமோ என்றென்றைக்கும் நிற்கும் என்பதையே சொல்லென்று உரைத்தது.”

யாக்கோபு 1 : 21 “ ஆகையால், நீங்கள் எல்லாவித அழுக்கையும் கொடிய துர்க்குணத்தையும் ஒழித்துவிட்டு, உங்கள் உள்ளத்தில் நாட்டப்பட்டதாயும் உங்கள் ஆத்துமாக்களை இரட்சிக்க வல்லமையுள்ளதாயுமிருக்கிற வசனத்தைச் சாந்தமாய் ஏற்றுக்கொள்ளுங்கள்.

நம்முடைய மாம்சம், நம்முடைய புகழ், மகிமையெல்லாம் ஒருநாள் மறைந்து விடும். ஆனால் எது அழிந்தாலும் கர்த்தருடைய வசனம் என்றென்றைக்கும் நிற்கும் என்று ஏசாயா தீர்க்கன் கூறுகிறான். வசனத்தை விசுவாசித்தவன் இயேசுவை விசுவாசிப்பான். பாவத்தை அறிக்கையிடுவான். பாவ மன்னிப்பைப் பெறுவான். இரட்சிப்படைவான். ஆலயத்துக்கு வருவான். ஞானஸ்தானம் பெறுவான். இயேசுவுக்காய் சாட்சியாய் வாழ்ந்து பரலோகத்திற்குச் செல்வான். எனவே ஒருவன் இரட்சிக்கப்பட, மனம் திரும்ப, இந்த சுவிசேஷம் ஆகிய வசனத்தை அவனுடைய இருதயத்தில் விதைக்கப்பட வேண்டும். அழிவில்லாத இந்த வித்தினாலே ஜனங்கள் இரட்சிக்கப்படப் போகிறார்கள். தேவனுடைய வசனமானது எத்தனை வல்லமையோடு நமது இதயங்களில் நம்முடைய வாழ்க்கையிலே செயல்படுகிறது என்பதைக் குறித்து இதில் நாம் பார்க்கிறோம். நம்மிடமுள்ள எல்லாவித அழுக்கையும், கொடிய துர்குணத்தையும் ஒழித்து விட வேண்டும். ஆத்துமாவை இரட்சிக்க வல்லமையுள்ள திருவசனத்தைச் சாந்தமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். 

இயேசுவும் வசனமும்:

இயேசுவின் ஊழியத்தின் வெற்றிக்கான காரணம்(first???) எந்த சித்தத்துக்கு பிதா அவரை அனுப்பினாரோ அந்த சித்தத்தை வெற்றியுடன் தாழ்மையுடன் நிறைவேற்றத் தன்னை ஒப்புக் கொடுத்ததுதான். அவர் வசனத்தின்படி வாழ்க்கையையும் ஊழியத்தையும் அமைத்துக் கொண்டதால், சரியான தேவ திட்டத்தை அறிந்த மக்களை நேரான பாதைக்கு வழி நடத்திச் சென்றார். இயேசு வார்த்தை வடிவாய் வந்தவர் ஆகவே வேத வார்த்தைக்கு அவர் கனத்தைக் கொடுத்தார். மக்களுக்கு சரீர சுகத்தை கொடுத்த பின்பு ஆத்ம சுகத்தை கொடுக்க வசனத்தைப் போதித்தார். யாருக்கும் பயந்து தேவனது வார்த்தையை மறக்கவும் இல்லை, மறுக்கவும் இல்லை. அவர் வசனத்தோடு வாழ்ந்தார் என்பதற்கு பல உதாரணங்களைக் கூறலாம் அவர் தன்னைத்தேடி வந்தவர்களுக்கு வசனத்தைப் போதித்தார் (மாற்கு 2 : 2). அவர் வசனத்தை விதை என்று கூறினார் (மாற்கு 4 : 14). வசனம் கேட்கும் மக்களை வகை பிரித்தார் (மாற்கு 4 : 15 – 20). மக்களின் திராணிக்கேற்றபடி வசனத்தைக் கூறினார் (மாற்கு 4 : 33). வசனத்தைப் பிரசங்கிக்கச் சொன்னார் (மாற்கு 16 : 15). வசனத்தைப் பிரசங்கிப்போருடன் இருந்தார் (மாற்கு 16 : 20) எனவே என்னில் பாவம் உண்டென்று உங்களில் எவன் என்னைக் குற்றப்படுத்த கூடும் என்று சவால் விட்டார். ஒருவரும் அவரைக் குற்றப்படுத்த முடியாமல் போனதால், அவரது வாழ்க்கை வெற்றியுள்ள வாழ்க்கையாகவும், அவரது ஊழியம் ஜெயம் நிறைந்த ஊழியமாகவும் இருந்தது. நம்முடைய வாழ்க்கையும் வசனத்தின் மேல் கட்டப்பட்டு ஆவியானவரால் நடத்தப்படுமானால், நாமும் அவரைப் போலவே விசுவாச ஜீவியத்தை வேகத்தோடு ஓடிமுடித்து நமக்குரிய கிரீடத்தைப் பெறுவோம். 

கருத்து:

வசனத்தைக் கேட்டு இரட்சிக்கப்பட்ட நாம் நம்முடைய வாழ்க்கை மாறியிருப்பதை சாட்சியின் ஜீவியத்தால் காட்ட வேண்டும். வசனத்தைக் கேட்டு மறக்காமல் அதன்படி நாம் செயல்பட வேண்டும். ஒவ்வொருவரும் வசனமாகிய விதைகளை விதைக்க வேண்டும். ஆவியானவரின் வல்லமையை விதைக்க வேண்டும். தேசத்தின் எழுப்புதலின் விதைகளை விதைக்க வேண்டும். விதைக்கிறதற்கு வயது வரம்பு கிடையாது. எனவே எல்லோரும் சுவிசேஷ விதைகளை விதைக்க வேண்டும். கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவே சீக்கிரமாய் வாரும்.

Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago