இயேசு எருசலேமை நோக்கி வந்து கொண்டிருக்கும் போது திரளான ஜனங்கள் அங்கிருந்தனர். அதில் இரண்டு விதமான கூட்டத்தார் இருந்தனர். ஒரு கூட்டத்தார் பரிசேயர்கள். இன்னொரு கூட்டத்தார் சீஷர்கள். ஆண்டவர் அழைத்த அழைப்புக்கு எல்லோரும் உண்மையாக இருக்க வேண்டுமென்றும், நமது கடமையை செய்து விட்டு அதற்குப் பிரதிபலனைப் பார்க்கிறவர்களாக இருக்கக் கூடாதென்பதையும் இயேசு இந்த உவமையின் மூலம் நமக்கு விளக்குகிறார். இதில் ஒரு எஜமானுடைய வயலில் அவனுடைய ஊழியக்காரன் சென்று உழுது, அவனுடைய மந்தைகளை மேய்த்து வயலில் இருந்து வரும் போது அவனுடைய மனநிலை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதையும், எஜமான் அதன் பின் அவனுக்குச் சொல்வதைப் பற்றியும் நமக்கு எடுத்துக் காட்டுகிறது. சீஷர்கள் இயேசுவை நோக்கி எவ்வாறு ஜெபம் பண்ண வேண்டும் என்றும், பிசாசுகளை ஏன் எங்களால் துரத்த முடியவில்லை என்றும், தங்கள் விசுவாசத்தை வர்த்திக்கப் பண்ண வேண்டும் என்றும் கேட்டனர். அதே போல இதையும் கேட்கின்றனர். (லூக்கா 17 : 5). நமக்கு முடியாததையும், கடினமானதையும் செய்ய விசுவாசம் தேவை என்பதையும் இந்த உவமையிலிருந்து அறிகிறோம். நம்முடைய கடமைகள், நம்முடைய பொறுப்புகள், நடைமுறையில் செய்ய வேண்டிய வேலைகள், அனைத்தையும் சரியாய்ச் செய்ய வேண்டும் என்பதை இந்த உவமை நமக்குப் புரிய வைக்கிறது. இதை லூக்கா 17 : 7 – 10ல் காணலாம்.
எஜமானின் வேலைக்காரன்:
இந்த உவமையில் சொல்லப்பட்ட வேலைக்காரன் எல்லா வேலையையும் செய்யத் தெரிந்தவனாக இருந்தான். அதனால் அவன் தோட்டத்திற்குப் போய் விவசாயம் செய்தான். மந்தையில் போய் மந்தையிலுள்ளவைகளை மேய்க்கிறவனாக இருந்தான். எஜமானுக்கு சாப்பாடு செய்யும் போது சமையற்காரனாயிருந்தான். சமையல் செய்து அவருக்குப் பரிமாறி சேவை செய்தான். இதிலிருந்து இவன் விவசாயம் செய்கிறவனாகவும், மேய்ப்பனாகவும், சமையற்காரனாகவும், பரிமாறுகிறவனாகவும் இருந்ததால் எல்லாவற்றிலும் தேறினவனாக இருந்ததைப் பார்க்கிறோம். அதே போல் நமக்கும் இயேசு என்ன அங்கீகாரம் கொடுத்திருக்கிறார் என்றால் மேய்ப்பன், போதகன், சுவிசேஷகன், தீர்க்கதரிசி, அப்போஸ்தலர்கள் என்பதாகும். எனவே நாம் நல்ல ஜெபம் பண்ணவும், பாடல்களைத் தாகத்தோடும் தாளத்தோடும் பாடவும், குறிப்புகளைச் சொல்லி ஜெபம் செய்யவும், தனியாகத் தியானம் பண்ணவும், ஆவியில் நிரம்பி பிரசங்கம் பண்ணவும் தேறினவனாக இருக்க வேண்டும். இந்த வேலைக்காரன் எஜமானுக்கு உண்மை உள்ளவனாக, கீழ்படிதல் உள்ளவனாக, பணிவிடை செய்கிறவனாக இருக்கின்றான். அதேபோல் நாமும் பரலோக எஜமானுக்கு உண்மையுள்ளவர்களாக, கீழ்ப்படிதலுள்ளவர்களாக இருக்க வேண்டுமென்று தேவன் எதிர்பார்க்கிறார். இவைகள் அனைத்தும் ஒவ்வொரு விசுவாசிக்கும் இருக்க வேண்டிய தகுதிகள். அதற்காக எந்தப் பெருமையும் கூடாது. யாக்கோபு,
யாக்கோபு 4 : 6ல் “…தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்.”
என்று கூறியிருப்பதைப் பார்க்கிறோம்.பெருமை உள்ளவர்களுக்கு இரண்டு பேர் எதிராளி ஆகிவிடுவார்கள் 1. சாத்தான் 2. கர்த்தர். பூலோக எஜமானுக்கு இவ்வாறு கீழ்ப்படிந்தால் பரலோக எஜமானுக்கு அதைவிட அதிகமாகக் கீழ்ப்படிய வேண்டும் என்ற எண்ணம் நமக்கு வேண்டும்.
எஜமானின் கட்டளை:
லூக்கா 17 : 7 – 8 “ உங்களில் ஒருவனுடைய ஊழியக்காரன் உழுது அல்லது மந்தை மேய்த்து வயலிலிருந்து வரும்போது, எஜமான் அவனை நோக்கி: நீ முன்பு போய்ச் சாப்பிட்டுவா என்று அவனுக்குச் சொல்வானோ?”
“நீ எனக்குச் சாப்பாடு ஆயத்தம்பண்ணி, அரைகட்டிக்கொண்டு, நான் போஜனபானம்பண்ணுமளவும் எனக்கு ஊழியஞ்செய், அதற்குப்பின் நீ புசித்துக்குடிக்கலாம் என்று அவனுக்குச் சொல்லுவானல்லவா.”
இதில் எஜமான் தன்னுடைய ஊழியக்காரன் அவனுடைய வயலில் வேலை செய்து வயலிலிருந்து களைப்பாக வரும் பொழுது வயலில் உள்ள வேலைகளையெல்லாம் முடித்து விட்டாயா? மந்தையில் உள்ள ஆடுகளை மந்தையில் சேர்த்தாயா என்று கேட்டுவிட்டு, சரி நேரமாகிவிட்டது சாப்பாடு தயார் பண்ணு என்றுதான் கூறுவான். “நீ களைப்பாக வந்திருப்பதால் முதலில் நீ போய் சாப்பிட்டுவிட்டு எனக்கு சாப்பாடு ஆயத்தம் பண்ணு” என்று கூறமாட்டான். வேலைக்காரனும் தான் காலையிலிருந்து வேலை பார்த்து களைப்பாக வந்திருக்கிறேன், சாப்பிட்டுவிட்டு உங்களுக்குப் பரிமாறுகிறேன் என்று கூறமாட்டான். கிறிஸ்தவ ஊழியம் என்பது உலக வேலைகளைச் செய்தாலும் ஆண்டவருக்கு ஊழியம் செய்ய வேண்டுமென்பதால், இதுவரை தோட்டத்தில் வேலை செய்தது போதும் பரலோக எஜமானுக்கு வேலை செய் என்பதைத் தான் இந்த உவமையின் மூலம் கூறுகிறார். நாம் தேவனுக்கு முக்கியத்துவம் கொடுத்து தேவனுடைய ராஜ்ஜியத்தையும் நீதியையும் முதலாவது தேட வேண்டும். உலகத்தில் நன்றாக வேலை செய்தாலும் எந்த பாராட்டும் கிடைக்கப் போவதில்லை. பரலோக எஜமானுடைய வேலையைத்தான் முதலாவது செய்ய வேண்டும். அதன்பின் உலக பிரகாரமான வேலைகளைப் பார்க்க வேண்டும். அவ்வாறு செய்யும் பொழுது மனுஷர்களைப் பிரியப்படுத்த அவர்கள் விரும்புகிறபடி ஊழியம் செய்யாமல் கிறிஸ்துவின் ஊழியக்காரர்களாக மனப்பூர்வமாக கர்த்தருடைய சித்தத்தின்படி செய்ய முடியும் இதைத்தான் பவுல்
எபேசியர் 6 : 6ல் “மனுஷருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு ஊழியஞ்செய்யாமல், கிறிஸ்துவின் ஊழியக்காரராக, மனப்பூர்வமாய் தேவனுடைய சித்தத்தின்படி செய்யுங்கள்.” என்றார். .
ஊழியன் இருக்க வேண்டிய விதம்:
லூக்கா 17 : 9, 10 “தான் கட்டளையிட்டவைகளை அந்த வேலைக்காரன் செய்ததற்காக அவனுக்கு உபசாரஞ்செய்வானோ? அப்படிச் செய்யமாட்டானே.”
“அப்படியே நீங்களும் உங்களுக்குக் கட்டளையிடப்பட்ட யாவற்றையும் செய்தபின்பு: நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர், செய்யவேண்டிய கடமையைமாத்திரம் செய்தோம் என்று சொல்லுங்கள் என்றார்.”
எஜமான் தான் கொடுத்த வேலைகளை வேலைக்காரன் சரியாகச் செய்து விட்டதால், அவனுக்கு நன்றி சொல்லவோ, பாராட்டவோ மாட்டான். ஏனெனில் இந்த வேலைக்காரனுக்கு அவன் பார்க்கிற வேலைக்கு எஜமான் சம்பளம் கொடுக்கிறார். எனவே அது அவனது கடமை. அதேபோல் நாமும் உலகத்திலும் 2, 3 வேலைகளைச் செய்கிறோம். அவைகளையும் நாம் கடமையோடும் பொறுப்போடும் செய்ய வேண்டும். உலகத்தில் நன்றாக வேலை செய்தாலும் இந்த எஜமானைப் போல எந்தப் பாராட்டும் கிடைக்கப் போவதில்லை. தேவனுக்கு நாம் செய்த ஊழியத்துக்கு தேவன் நன்றி சொல்ல வேண்டுமென்றோ, பாராட்ட வேண்டுமென்றோ நினைக்கக் கூடாது. ‘என் தேவனுக்கு நான் செய்த வேலை கொஞ்சமே” என்ற எண்ணம் நமக்கு வர வேண்டும். நம்முடைய எஜமான் நம்மை நேசிக்கிற எஜமான். இயேசுவின் அன்புக்கு நாம் அடிமை. தேவன் நம்மை அடிமைகளாக்கவில்லை. கர்த்தரையே முழுவதும் நாம் சார்ந்திருக்கப் பழகி “நான் ஒரு அப்பிரயோஜனமான ஊழியக்காரன்” என்று சொல்ல வேண்டும்.
பரிசேயர்கள் ஆண்டவருடைய வார்த்தையைக் கற்றுக் கொண்டு, அதை மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டுமென்று தங்களையே இந்த வேலைக்காரரைப் போல அர்ப்பணித்தவர்கள் ஆனால் அவர்கள் தங்களுக்கு முக்கியமான இடம் கொடுக்க வேண்டுமென்று எண்ணுவர். உண்மையும் உத்தமுமாக இருக்கிறவன் பிரதிபலனை எதிர்பார்க்க மாட்டான். இயேசு பூமியிலிருக்கும் போது நமக்கு எத்தனையோ காரியங்களைச் செய்தார். அதற்கு அவர் எந்த பிரதிபலனையும் நம்மிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. பாவத்தில் வாழ்ந்து கொண்டிருந்த நம்மைத் தேவன் தெரிந்து கொண்டது மட்டுமல்ல, ,நம்மை அழைத்து பரிசுத்த ஆவியின் மூலமாக அபிஷேகம் பண்ணி, அவரை அப்பா பிதாவே என்னும் புத்திர சுவீகாரத்தின் உரிமையை நமக்குக் கொடுத்துத் தன்னுடைய பிள்ளையாக நம்மைத் தெரிந்து கொண்டார். இயேசு தன்னுடைய விலையேறப்பெற்ற இரத்தத்தினால் நம்மை மீட்டெடுத்தார். அந்த இரட்சிப்பை அசட்டை பண்ணாமல் தேவனுக்குப் பிரயோஜனமுள்ளவர்களாக இருக்கப் பழகுவோம்.
யோசேப்பு தரிசனத்தைப் பார்த்தும், சகோதரர்களுக்கு சாப்பாடு கொண்டு போய், அவர்களால் குழியில் தள்ளப்பட்டாலும், போத்திபாரின் கையில் விற்கப்பட்டாலும், சிறைச்சாலையில் அடைக்கப் பட்டாலும் கடமையை மட்டும் செய்ததால் உயர்த்தப் பட்டான். மோசே ஆடுகளை மேய்த்துத் தன் மாமனாரோடு இருந்தாலும் தேவன் அழைத்தவுடன் அதற்கு கீழ்படிந்து தனக்குக் கொடுத்த கடமையை மட்டும் செய்ததால் உயர்த்தப்பட்டான். சவுல் தன்னுடைய தகப்பன் கொடுத்த கழுதையைத் தேடும் வேலையை உண்மையாய்ச் செய்ததால் தேவனால் அழைக்கப்பட்டு ராஜாவாக உயர்த்தப்பட்டான். தாவீது தன்னுடைய வீட்டிற்கு ஒரு தீர்க்கதரிசி வருகிறாரென்றும், அவர் என்ன செய்யப் போகிறாரென்றும் தெரிந்தும் தகப்பன் கொடுத்த ஆடுகளை மேய்க்கும் வேலையைச் செய்து கொண்டிருந்ததால் அந்த தீர்க்கதரிசி ஆட்களை அனுப்பி அபிஷேகித்து தனக்குப் பிரியமானவனாகதக் கர்த்தர் தெரிந்து கொண்டார்.
பிரயோஜனமாக ஊழியக்காரன்
நாம் தேவனுடைய ராஜ்ஜியத்தில் வேலை செய்யும் வேலையாட்களாய் நமக்குத் தேவன் அழைப்பு கொடுத்து சில பொறுப்புகளையும் கொடுத்திருக்கிறார். முந்தி வந்தவர்கள் ஆபிரகாமின் சந்ததியான யூதர்களாக இருக்கின்றனர். பிந்தி வந்தவர்கள் புறஜாதியான தேவனுடைய கிருபையைப் பெற்ற நாமாக இருக்கிறோம். முந்தி வந்தவர்களுக்கு நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்டது. புறஜாதியான நாமோ பாவத்தோடு இயேசுவிடம் வந்தபின், அவர் நமது பாவத்தைக் கழுவுகிறார். அதன்பின் அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து அவரிடம் நம்மை ஒப்புக் கொடுக்கிறோம். அவ்வாறு நாம் தேவனை விசுவாசித்து அவரிடம் நம்மை ஒப்புக்கொடுக்கும்போது தேவனுடைய பிள்ளையாக மாறுகிறோம். அதனால் அவருடைய பிள்ளைகளான நமக்குக் கிருபை, இரக்கம், ஜீவன், மன்னிப்பு போன்ற நிறைவான பலனைத் தேவன் தந்தருளுகிறார். மோசேயின் மூலம் நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்டது. இயேசு கிறிஸ்துவின் மூலம் கிருபையும் சத்தியமும் கொடுக்கப்படுகிறது. தேவன் கொடுத்த ஊழியத்தை தேவனுடைய சித்தத்தின்படி, தேவனுடைய பலத்தின்படி, தேவ ஞானத்தின்படி செய்கிறவன் தேவனுக்குப் பிரயோஜனமான ஊழியக்காரன் எனப்படுவான். இப்படிப்பட்டவனுக்கு தேவனுடைய தயவின்படி, கிருபையின்படி, இரக்கத்தின்படி சகல ஆசிகளையும் சம்பூர்ணமாகத் தேவன் தந்தருளுவார்.
தேவனுடைய இராஜ்ஜியத்தில் பெற்றுக்கொள்ளும் பலனானது நாம் எவ்வளவு காலம் வேலை செய்தோம் என்பதல்ல. அதை தேவனுடைய விருப்பத்தின்படி செய்திருக்கிறோமா என்பதுதான் முக்கியம். நாம் ஒவ்வொருவரும் கிருபையினால் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். கிறிஸ்தவத்தில் seniority கிடையாது. sincerity தான் உண்டு. முந்தின விசுவாசிகளானாலும் பிந்தின விசுவாசிகளானாலும் கடவுளுக்கு முன்பு எல்லோரும் சமமே. தேவன் நம்மை கொஞ்சம் ஆசீர்வதித்துவிட்டால் இறுமாப்புடன் நம்மை முக்கியமானவர்களாக கருதி தேவனுக்கென்று அதிகம் பயன்படுத்தப்படுகிறவர்களாக எண்ணிக் கொள்கிறோம். இது போன்ற எண்ணங்கள் ஒரு ஊழியக்காரனிடமும் காணப்படவே கூடாது. “நான் இன்னமும் தகுதியில்லாத ஊழியக்காரனாகவே இருக்கிறேன். தேவன் எனக்களித்த கிருபையினால் ஊழியக்காரனாக இருக்கிறேன்” என்ற தாழ்மையான சிந்தையே ஒவ்வொரு ஊழியக்காரனுக்கும் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் தேவனிடமிருந்து மேலானவைகளை அதிகதிகமாய் பெற்றுக்கொள்ள முடியும். ஐசுவரியவானான லாசரு எல்லாவற்றையும் விட்டு வரவில்லை. ஆனால் பேதுரு எல்லாவற்றையும் விட்டுத் தேவனைப் பின்பற்றி சந்தோஷமாக, மனப்பூர்வமாக வந்தான். ஆசீர்வதிக்கப்பட்டான். இதைத்தான்,
வெளிப்படுத்தல் 22 : 12ல் “இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.” வேதம் கூறுகிறது.
கருத்து:
யூதர்கள் புறஜாதிகளை சமமாகக் கருதவில்லை. வேதபாரகர், பரிச்சேயர் போன்றோர் புறஜாதிகள் இரட்சிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் கிறிஸ்தவத்தில் பாரபட்சம் கிடையாது. பணக்காரன், ஏழை, உயர்ந்தவன், தாழ்ந்தவன், படித்தவன், படிக்காதவன் என்று எந்த வித்தியாசமும் கிடையாது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் செல்லும்போது எல்லோரையும் சமமாகவே பார்ப்பார். தேவனுடைய வருகையின் போது நமது கிரியைகளுக்குத் தக்கதாகவே நமக்குப் பலனளிப்பார். பிரயோஜனமான ஊழியக்காரன், உண்மையான ஊழியக்காரன் தன்னைப் பெருமைப்படுத்தவே மாட்டான். அவர்களைத் தேவன் வலதுபக்கத்தில் நிற்கச் செய்து பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே என்று அழைத்து, உலகம் உண்டானது முதல் உங்களுக்காக ஆயத்தம் பண்ணப் பட்டிருக்கிற ராஜ்ஜியத்தைச் சுதந்தரித்துக் கொள்ளுங்கள் என்பார் (வெளிப்படுத்தல் 25 : 34). நமது கிரியைகளைப் பார்த்து நமக்குப் பரிசுகளை வழங்குவார். நம்மை அங்கு கனப்படுத்தி வாடாத கிரீடத்தைத் தந்தருளுவார். அவரோடு கூட நாம் அரசாளப் போகிறோம். ஆனால் பிரயோஜனமற்ற ஊழியக்காரனை அழுகையும் பற்கடிப்புமுள்ள புறம்பான இருளிலே தள்ளிப் போடுவார் (வெளிப்படுத்தல் 25 : 30). எனவே நாம் தேவனுடைய சித்தத்தின்படி, கிருபையின்படி, தாலந்தின்படி தேவனுக்கென்று பாடுபடுவோம். அதற்கான கூலியைத் தேவன் தருவார். எனவே நாம் அப்பிரயோஜனமான ஊழியக்காரனாக இருந்து ஊழியங்களில் கிரியைகளை நடப்பித்து வசனத்தை உறுதிப்படுத்தி கூட்டம் கூட்டமாய் ஆத்துமாக்களை தேவனண்டையில் சேர்ப்போம். தேவனுடைய ராஜ்ஜியத்தில் பிரவேசிப்பதற்குத் தடையாக இருக்கும் அனைத்தையும் கிறிஸ்துவுக்காய் விட்டுவிட்டு குறைவில்லா பரிசுத்தராய், விசுவாசியாய்,, பணிவிடைக்காரனாய் இருந்து தேவனுக்கென்று ஊழியம் செய்வோம். கர்த்தராகிய இயேசுவே சீக்கிரமாய் வாரும். ஆமென்.
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…