கோலியாத்தும் யுத்தகளமும்:
1 சாமுவேல் 17 : 1 – 7ல் இஸ்ரவேலர்களுக்கும், பெலிஸ்தியர்களுக்கும் எதிராக யுத்தம் நடந்ததைப் பார்க்கிறோம். பெலிஸ்தியன் என்பதற்கு எபிரேய பாஷையில் ஊருகிறவன், அல்லது நகருகிறவன் என்று பொருள். பெலிஸ்தியர் தங்கள் சேனைகளுடன் யூதாவிலுள்ள சோக்கோவிலே ஒருமித்து கூடி சோக்கோவுக்கும் அசெக்காவுக்கும் நடுவேயிருக்கிற எபேஸ்தம்மீமிலே பாளையமிறங்கினர். சவுல் ராஜா தனது சேனைகளுடன் ஏலா பள்ளத்தாக்கில் பாளையமிறங்கி, இருவரும் மலைகளின் மேல் நின்றனர். நடுவே பள்ளத்தாக்கு இருந்தது. அதில் ஆறு ஓடுகிறது. தாவீது கோலியாத்தை வெல்ல கூழாங்கற்களை எடுத்தது இந்த ஆற்றில் தான். பெலிஸ்தியருக்காக இஸ்ரவேலருடன் யுத்தம் பண்ண ஒரு ராட்சதன் நின்றான். அவன் காத் ஊரைச் சேர்ந்தவன். அவனுடைய பெயர் கோலியாத். கோலியாத் என்பதற்கு முன்னறிவிக்கிறவன் என்று பொருள். அப்படியானால் தேவன் கோலியாத்தைக் கொண்டு ஏதோ ஒரு காரியத்தை முன்னறிவிக்கப் போகிறார் என்று பொருள். அவனுடைய உயரம் ஆறு முழம் ஒரு ஜாண். அவன் தன்னுடைய தலையில் வெண்கல சீராவை அணிந்திருப்பான். 5000 சேக்கல் நிறை கொண்ட வெண்கலத்தால் ஆன போர்க்கவசத்தை தரித்துக் கொண்டிருப்பான். அதேபோல் கால்களிலும் வெண்கல கவசத்தையும், தோள்களில் வெண்கலக் கேடகத்தையும் தரித்திருப்பான். அவன் வைத்திருக்கும் ஈட்டியின் எடை 600 சேக்கல் இரும்பாகும் (1 சாமுவேல் 17 : 1 – 7).
கோலியாத்தின் சவால்:
முதலில் பெலிஸ்தியர்தான் யுத்தத்துக்குப் புறப்பட்டு வந்தார்கள். கோலியாத் ஒவ்வொருநாளும் யுத்தகளத்துக்கு வந்து இஸ்ரவேல் சேனைகளைப் பார்த்து சத்தமாக “நான் பெலிஸ்தன் அல்லவா, நீங்கள் சவுலின் சேவகர் அல்லவா, உங்களில் ஒருவனைத் தெரிந்து கொள்ளுங்கள் அவன் தன்னோடு யுத்தத்திற்கு வரட்டும்” என்று கூப்பிட்டான். இதில் பெலிஸ்தன், பெலிஸ்தன் என்றுதான் வரும். தாவீதுகூட கோலியாத் என்று கூறாமல் பெலிஸ்தன் என்றுதான் கூறுவான். அவன் கோலியாத்தோடு போட்டியிட்டு ஜெயித்தால் பெலிஸ்தியர் இஸ்ரவேலர்களுக்கு வேலைக்காரர்களாயிருப்போம் என்றான். அதேபோல் கோலியாத் ஜெயித்தால் இஸ்ரவேலர்கள் பெலிஸ்தியர்களுக்கு வேலைக்காரர்களாயிருந்து அவர்களை சேவிக்க வேண்டும் என்று சவால் விட்டான். இவ்வாறு நாற்பது நாட்கள் தினமும் வந்து சவால் விட்டான். சவுல் ராஜாவும் மற்றவர்களும் அவனுடைய வார்த்தைகளைக் கேட்டு மிகவும் கலங்கினர், பயந்தனர். இஸ்ரவேலின் ராஜாவாகிய சவுல் மிகவும் உயரமானவர், கம்பீரமானவன். அவனுக்கும் கோலியாத்தை எதிர்க்க தைரியமில்லை. (1 சாமுவேல் 17 : 8 – 11).
ஈசாய் தாவீதை போர்க்களத்துக்கு அனுப்பியது:
தாவீதின் மூன்று சகோதரர்களான எலியாப் (தேவனே எனது தந்தை என்று பொருள்), அபினதாப் (சிறப்புமிகு தந்தை என்று பொருள்), சம்மா (தள்ளப்பட்டவர் என்று பொருள்) யுத்தத்துக்குப் போயிருந்தார்கள். சவுலிடம் ஆயுததாரியாக இருந்த தாவீது அந்தப் பதவியை விட்டு திரும்பிப்போய் பெத்லகேமிலிருக்கிற ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான். தாவீதின் தந்தையான ஈசாய் தாவீதிடம் ஒரு மரக்கால் வறுத்த பயிரையும் பத்து அப்பங்களையும் கொடுத்து அதைக் கொண்டுபோய் அவன் சகோதரர்களிடம் கொடுத்து அவர்கள் சுகமாய் இருக்கிறார்களா என்று கேட்கவும், அவர்களிடம் அடையாளம் வாங்கி வரவும், அதேபோல் பத்து பால்கட்டிகளை ஆயிரம் பேருக்கு அதிபதியிடம் கொடுக்கவும் அனுப்பினார். தாவீது அவனது மந்தையில் உத்தமனாக இருந்ததால்தான் கர்த்தர் அபிஷேகம் பண்ணினார். ஆடுகளின் பின்னால் நடந்த தாவீதை அங்கேயே வைத்திருக்க தேவன் விரும்பவில்லை. தந்தையின் கட்டளையை ஏற்று தாவீது அதிகாலையில் எழுந்து போர்க்களம் சென்றார். போர்க்களத்தில் சேனைகள் அணிவகுத்து நின்று யுத்தத்திற்கென்று ஆர்ப்பரித்தனர். அங்கு அவன் கண்ட காட்சி அவனை வியப்பில் ஆழ்த்தியது. தான் அங்கு வந்த வேலையை முதலில் செய்தார். தாவீது தன் தகப்பன் கொடுத்ததை அதிபதியிடமும், தன் சகோதரர்களிடமும் கொடுத்து விட்டு நிற்கும் போது, ஒரு இராட்சதனான கோலியாத்தின் சவாலையும், இஸ்ரவேலர்கள் பயந்து ஓடுவதையும் தாவீது பார்த்தான் (1 சாமுவேல் 17 : 12 – 24)
கர்த்தரின் தெரிந்தெடுப்பு:
கர்த்தர் ஞானிகளை வெட்கப்படுத்த உலகத்தில் பைத்தியமானவர்களையும், பலமுள்ளவர்களை வெட்கப்படுத்த பலவீனமானவர்களையும் தெரிந்தெடுக்கிறார். இஸ்ரவேல் தேசத்தில் நல்ல போர்வீரரான அப்னேர், பெனாயா, ஆசகேல், யோவாப் போன்ற பலவான்களும் இருந்தனர். அந்த பலவான்களை தேவன் பயன்படுத்தாமல் ஆடு மேய்க்கும் தாவீதை கோலியாத்தைக் கொல்ல பயன்படுத்தினார். ஏனென்றால் தாவீது தன் தகப்பனைப் போலவோ, சகோதரர்களை போலவோ, அங்குள்ள ஜனங்களை போலவோ, அங்குள்ள ராஜாவைப் போலவோ அங்குள்ள யுத்தவீரர்களைப் போலவோ அல்லாமல் வித்தியாசமுள்ளவனாக இருந்தான். தேவன் வித்தியாசமுள்ளவர்களை, அவருக்கென்று பிரித்தெடுக்கப் பட்டவர்களை, அவருக்கென்று முத்திரை குத்தப்பட்டவர்களை, அவருக்கென்று தேசத்தை, உலகத்தை வெறுத்து உலகத்தின் ஆசாபாசங்களுக்குப் பின்னால் போகாமல் கர்த்தருக்கென்று வித்தியாசமாக வாழும் கூட்டத்தைத்தான் கோலியாத்துக்களை வீழ்த்தப் பயன்படுத்துகிறார்.
1 சாமுவேல் 16 : 5ல் சவுல் இனி ராஜாவாக இருக்க முடியாதென்று நிராகரித்தபின் சாமுவேல் தாவீதின் நகரத்துக்குச் சென்றார், கர்த்தர் சாமுவேலிடம் ஈசாயின் புதல்வர்களில் ஒருவனை ராஜாவாகத் தெரிந்தெடு என்று சொல்லி அனுப்புகிறார். அங்கு தாவீதைத் தவிர மற்ற சகோதரர்கள் இருந்தனர். சாமுவேல் அவர்களிடம் “நீங்கள் பரிசுத்தம் பண்ணிக் கொண்டு பலிவிருந்துக்கு வாருங்கள்” என்றார். ஏனென்றால் அவர்கள் யாரும் பரிசுத்தமாக இல்லையென்று சாமுவேலுக்குத் தெரிந்தது. அவர்கள் அனைவரையும் கர்த்தர் நிராகரித்தார். தேவன் சூழ்நிலைகளுக்காக ஆயத்தப்படுகிறவர்களை ஒருநாளும் கர்த்தர் பயன்படுத்துவதில்லை. அவர்கள் ராஜபதவி கிடைக்குமென்பதால் ஆயத்தமானார்கள். சாமுவேல் வேறு யாருமில்லையா என்று கேட்ட பின்தான் அவர்களுக்குத் தாவீதைப் பற்றி ஞாபகம் வருகிறது. உடனே கூட்டி வரச் சொல்கிறார். தாவீது ஆடு மேய்த்த கையோடு வந்தான். 1சாமுவேல் 16 : 12ல் “இவன்தான் இவனை அபிஷேகம் பண்ணு” என்று சாமுவேலிடம் கர்த்தர் கூறினார். அவனை சாமுவேல் பரிசுத்தமாக்கவில்லை. ஏனெனில் தாவீது எப்பொழுதுமே ஆயத்தமாயிருந்தான். ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது கர்த்தரை நோக்கித் துதித்தான். பாடினான். பாடல்களை இயற்றினான். கர்த்தர் தாவீதை எல்லோரும் அறியச் செய்வதற்காகவும். அவனுடைய பெயர் பிரஸ்தாபப்படுவதற்காகவும் அங்கு கொண்டு வந்திருந்தார்.
ராஜாவின் பரிசும், தாவீதின் சகோதரர்களும்:
தாவீது அங்கு நிற்கும் போது அங்கு நின்றவர்கள் கோலியாத்தைக் கொல்லுகிறவனுக்கு ராஜா என்ன கொடுப்பார் என்று கூறினார்கள். ராஜா அவனை மிகுந்த ஐசுவரியவானாக்குவார். ராஜா தன் மகளை அவனுக்கு மணம் முடித்துக் கொடுப்பார். அவன் வீட்டாருக்கு சர்வ மானியம் வழங்கப் படும் என்றனர். சர்வமானியமென்றால் அந்தக் குடும்பம் அதன்பின் வரியேகட்டத் தேவையில்லை. தாவீது இதைக் கேட்டு தேவனுடைய நாமத்தை ஒருவன் துஷித்துக் கொண்டிருக்கிறான். இவர்களோ என்ன கொடுப்பார் என்று பார்த்துக் கொண்டிருக்கிறார்களே என்று நினைத்தான். தாவீது அவர்களைப் பார்த்து
“ஜீவனுள்ள தேவனுடைய சேனைகளை நிந்திக்கிறதற்கு விருத்தசேதனம் இல்லாத இந்த பெலிஸ்தியன் எம்மாத்திரம் “ என்றான்.
தாவீதின் மூத்த சகோதரரான எலியாப் கோபத்தில் தாவீது கூறியதைக் கேட்டு தாவீதிடம் உன் துணிகரத்தையும், உன் இருதயத்தின் அகங்காரத்தையும் நான் அறிவேன் என்றான். ஆனால் தாவீதோ மிகவும் கனிவாக, மெதுவாக பிரதியுத்திரம் சொல்லி, துவண்டு போகாமல் தேவ சித்தத்தைச் செய்ய நினைத்தான். அந்த இடத்தை விட்டு அடுத்த இடம் போகிறான். தான் அங்கு தன் தந்தை அனுப்பியதற்கு முகாந்திரம் இருப்பதாக நினைத்தான். அவனை வீட்டுக்கு அனுப்ப முற்பட்டனர். ஆனால் தாவீது திரும்பிப் போகவில்லை. அங்குள்ளவர்கள் தாவீது கூறின வார்த்தையைக் கேட்டு அதை ராஜாவிடம் தெரிவித்தனர். உடனே ஒரு அபாயகரமான முடிவை தாவீது எடுக்கிறான் (1சாமுவேல் 17 : 25 – 30).
சவுல் ராஜாவும், தாவீதும்:
ராஜா அவனை அழைப்பித்தான். தாவீது ராஜாவைப் பார்த்து உம்முடைய அடியானாகிய நான் போய் அந்தப் பெலிஸ்தியனோடு யுத்தம் பண்ணுகிறேன் என்றான். அதற்கு சவுல் ராஜா நீ இளைஞனாயிருக்கிறாய். அவன் சிறுவயது முதல் யுத்த வீரன் என்றான். அதற்கு தாவீது தான் வனாந்தரத்தில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கும் போது ஒரு விசை சிங்கமும், ஒரு விசை கரடியும் வந்து ஆட்டைப் பிடித்தது. தான் அவைகளை அடித்துக் கொண்றதைக் கூறினான். விருத்தசேதனமில்லாத இந்த பெலிஸ்தியனும் தேவனுடைய சேனைகளை நிந்தித்ததால் அவைகளில் ஒன்றைப்போல்தான் என்றான். மேலும் தாவீது சிங்கத்தின் கைக்கும், கரடியின் கைக்கும் தப்புவித்த கர்த்தர் இந்தப் பெலிஸ்தனுடைய கைக்கும் தப்புவிப்பார் என்றான். அப்பொழுது சவுல் “கர்த்தர் உன்னுடனே கூட இருப்பாராக” என்று கூறினான். சவுல் ஏன் தன்னுடைய வாயால் தாவீதிடம் அவனை அனுப்பி தன்னுடைய இராணுவத்தை அவமானப்படுத்த மாட்டேன் என்று கூறவில்லையென்றால் தாவீதைக் குறித்து ஒரு சிறு அனுபவம் சவுலுக்கு இருந்தது. தாவீது சவுலுக்கு முன்பாக சுரமண்டலம் வாசித்து ஆவியானவரால் நிறைந்திருப்பதை சவுல் பார்த்திருக்கிறான். சவுலுக்குள் இருந்த வேண்டாத ஆவியை விரட்டின தாவீதால் கோலியாத்தை ஜெயம்பெற முடியுமென்று நினைத்திருக்கலாம். அதேபோல் தாவீதும் சவுல் தன்னை கோலியாத்தை எதிர்க்க அனுப்புகிறார் என்றால் இது கர்த்தருடைய சித்தம். எனவே கர்த்தர் நிச்சயமாக உதவி செய்வார் என்று நினைத்திருப்பான்.
தாவீது யுத்தத்துக்குச் செல்ல புறப்பட்டபோது சவுல் ராஜா தன்னுடைய யுத்தத்துக்கான உடைகளைக் கொடுத்து அவனுக்கு உடுத்துவித்தான். தாவீது தனக்கு அது அப்பியாசம் இல்லை என்று மறுத்து விட்டான். தாவீது போர் உடைகளையோ, அவர்கள் பயன்படுத்தும் ஆயுதங்களையோ தான் பயன்படுத்த முடியாது என்பதை அறிந்திருந்தான். தன்னுடைய சொந்தமான ஆயுதத்தையும் கர்த்தர் அவனுக்குப் பயிற்றுவித்த வந்த காரியங்களையே பயன்படுத்த வேண்டுமென்று அறிந்து கொண்டான். தாவீது தேவையற்ற சுமைகளை சுமந்து கோலியாத்தை எதிர்க்க விரும்பவில்லை. சவுலின் தேய்ந்துபோன பழைய, அவருக்கே வெற்றியைக் தேடிக் கொடுக்காத ஆயுதங்கள் தாவீதுக்குத் தேவையில்லை. கர்த்தரால் உருவாக்கப்பட்ட அந்த யுத்த வீரனுக்கு கர்த்தரின் நாமமே போதுமானது (1சாமுவேல் 17 : 31 – 39).
தாவீதின் தைரியம்:
தாவீது ஒரு கவணுடனும், ஐந்து கூழாங்கற்களுடனும் கோலியாத்தை எதிர்க்கச் சென்றார். அவனுக்கிருந்த பக்தி வைராக்கியத்தினாலும், கர்த்தரிடம் அவன் வைத்திருந்த அளவற்ற அன்பினாலும் எதிர்க்கச் சென்றான். நாமும் இந்த உலகத்தை ஜெயிப்பதற்கு தேவன் மேலேயுள்ள விசுவாசத்தையே பயன்படுத்த வேண்டும். ஆண்டவர் நம்மை யாராக அழைக்கவில்லையோ அப்படிப்பட்ட ஒருவராக நாம் நிற்க முற்படக்கூடாது. சிறுவனான தாவீதின் விசுவாசம் இராட்சதனான கோலியாத்தை வீழ்த்த போதுமானதாக இருந்தது. கோலியாத்துக்கு 2 சாமுவேல் 21 : 22ல் நான்கு குமாரர்கள் இருந்ததை பார்க்கிறோம். கோலியாத் இறந்தபின் அவர்கள் யுத்தத்துக்கு வருவார்கள் என்றுதான் தாவீது 5 கூழாங்கற்களை முன்னமே எடுத்து வைத்திருந்தான். அவன் நினைத்ததைப்போல கோலியாத்தின் நான்கு சகோதரர்களும் தாவீதின் யுத்த வீரர்களால் வெட்டப்பட்டு மரித்தனர் (2 சாமுவேல் 21 : 15, 16, 18 – 20).
தாவீது யுத்தகளத்தில்:
கோலியாத் நாற்பது நாட்கள் காலை, மாலை இரண்டு தடவை வந்து தான் சொன்னதையே சொல்லி சவால் விடுகிறான். அங்கு நின்றவர்கள் அனைவரும் ஓடினர். தாவீதோ தைரியமாக அவனண்டையில் போனான் இந்தக் காரியத்தில் மனிதனுடைய தைரியத்தை விட மேலான தைரியத்தை தாவீதைக் கொண்டு கர்த்தர் வெளிப்படச் செய்தார். ஒரு சிறுவன் கூட தேவனுக்கேற்ற இதயத்தில் இருக்கிறான் என்பதை இதிலிருந்து அறிகிறோம். தாவீது இஸ்ரவேல் ஜனங்களை கோலியாத் தூஷித்ததினால் செல்லவில்லை. தேவனுடைய நாமத்தை தூஷித்ததினால் கோலியாத்தோடு யுத்தத்துக்குச் சென்றான். கோலியாத்தை எதிர்க்கப் போகும்போது விசுவாச அறிக்கையிடுகிறான். கோலியாத் சவுலையும், அவனது கூட்டாளிகளை மட்டுமல்ல சேனைகளின் கர்த்தரையே கேலி செய்கிறான், இது தேவ தூஷணம். கோலியாத் தாவீதின் உருவத்தைப் பார்த்தும் அவன் கையில் பிடித்திருக்கும் கோலைப் பார்த்தும் அசட்டை பண்ணினான். தாவீதைப் பார்த்துக் கோலியாத் “கையில் தடியை எடுத்துக் கொண்டு வருகிறாயே நான் நாயா” என்று கூறி தன்னுடைய தேவர்களைக் கொண்டு சபிக்கிறான். மேலும் தாவீதைக் கொன்று அவனுடைய மாம்சத்தை ஆகாயத்துப் பறவைகளுக்கும், காட்டு மிருகங்களுக்கும் கொடுப்பேன் என்றான். அதற்கு தாவீது,
“1 சாமுவேல் 17 : 45 – 47 “அதற்குத் தாவீது: பெலிஸ்தனை நோக்கி: நீ பட்டயத்தோடும், ஈட்டியோடும், கேடகத்தோடும் என்னிடத்தில் வருகிறாய்; நானோ நீ நிந்தித்த இஸ்ரவேலுடைய இராணுவங்களின் தேவனாகிய சேனைகளுடைய கர்த்தரின் நாமத்திலே உன்னிடத்தில் வருகிறேன்.”
“இன்றையதினம் கர்த்தர் உன்னை என் கையில் ஒப்புக்கொடுப்பார்; நான் உன்னைக் கொன்று, உன் தலையை உன்னை விட்டு வாங்கி, பெலிஸ்தருடைய பாளயத்தின் பிணங்களை இன்றையதினம் ஆகாயத்துப் பறவைகளுக்கும், பூமியின் காட்டுமிருகங்களுக்கும் கொடுப்பேன்; அதனால் இஸ்ரவேலில் தேவன் ஒருவர் உண்டு என்று பூலோகத்தார் எல்லாரும் அறிந்துகொள்ளுவார்கள்.”
“கர்த்தர் பட்டயத்தினாலும் ஈட்டியினாலும் ரட்சிக்கிறவர் அல்ல என்று இந்த ஜனக்கூட்டமெல்லாம் அறிந்துகொள்ளும்; யுத்தம் கர்த்தருடையது; அவர் உங்களை எங்கள் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றான்.”
கர்த்தர் பட்டயத்தினால் மட்டும் இரட்சிக்கிறவர் அல்ல. அற்பமான காரியங்களை வைத்தும் இரட்சிக்க வல்லவர் என்பதைத் தாவீது அறிந்திருந்தான். எனவேதான் தான் பட்டயம் எதுவுமில்லாமல் கர்த்தரின் நாமத்தில் வருகிறேன் என்கிறான். அங்கு ராஜாவோ, அங்கிருந்தவர்களோ, அவனுடைய சகோதரர்களோ தாவீதை உற்சாகப் படுத்தவில்லை. அவனோடு கூட யாரும் செல்லவில்லை. தேவன் நமக்குப் பயத்தின் ஆவியைத் தராமல் அன்பும், தெளிந்த புத்தியுமுள்ள ஆவியைத் தந்திருக்கிறார் என்பதை தாவீது அறிந்திருந்தான். தேவ பிள்ளைகளுக்குப் பயமென்பது கிடையாது. ஏனென்றால் தேவன் நமக்குள் இருக்கிறார். அவர் அத்தனை பெரியவர். உலகத்திலிருப்பவரைக் காட்டிலும் நம்மோடிருப்பவர் பெரியவர் என்பதை அறிந்திருந்தான். தாவீது கரடியையும், சிங்கத்தையும் அதன் அருகில் சென்று கிழித்துப் போட்டதைப் போல் கோலியாத்தின் மிக அருகில் செல்லத் தேவன் அனுமதிக்கவில்லை. தாவீது அடைப்பையிலிருந்து ஒரு கல்லை எடுத்து கவணில் சுழற்றி நெற்றியில் எறிந்தான். அந்தக் கல்லைக் கர்த்தர் சரியான இடத்தில் அடிபடும்படிச் செய்தார். கோலியாத் தரையில் முகங்குப்புற விழுந்தான். யுத்தம் முடிய வேண்டுமெனில் கோலியாத்தின் தலையை வெட்ட வேண்டும். தலையை வெட்ட பட்டயம் வேண்டும். சிறிது யோசித்து தாவீது அவன்மேல் நின்று அவனுடைய பட்டயத்தையே எடுத்து அவனைக் கொன்று அவன் தலையை வெட்டினான். கொஞ்ச நேரத்துக்கு முன் சவுலின் பட்டயத்தை தூக்க முடியாதவன் கோலியாத்தின் பட்டயத்தையே தேவன் தூக்க வைத்தார். பலத்தினால் அல்ல. பராக்கிரமத்தினாலும் அல்ல. என்னுடைய ஆவியினாலே ஆகும் என்ற வசனத்தின் படி தாவீது கோலியாத்தை வென்றான். தாவீது கோலியாத்தை தமது விசுவாசத்தால் வென்றான். கர்த்தர் தாவீதுக்கு எப்படியெல்லாம் இரட்சிப்பளிக்க வேண்டுமென்று நினைத்தாரோ அதை அவன் மூலம் செய்ய வைத்தார். இதன் மூலம் தாவீதின் நாமம் பிரசித்தமாக வேண்டும் என்பது தேவ சித்தம். கர்த்தர் விருதாவாக எதையும் செய்வதில்லை.
கோலியாத்தின் தலை:
பெலிஸ்தியர் ஓடிப்போனார்கள். தாவீது அந்தத் தலையை எருசலேமுக்கு கொண்டு போனான். சவுலின் நாட்களில் எருசலேம் இஸ்ரவேலின் கட்டுப்பாட்டுக்குள் இல்லை. அது எபூசியர்களின் கரத்தில்தான் இருந்தது. தாவீது ராஜாவானபின்தான் அதைப் பிடித்தான். சவுலின் நாடே கிடையாது. இரண்டு இடங்களுக்கும் இடைவெளி 17 மைல். வெற்றி பெற்றவுடன் மலையிலோ, உயரத்திலோ சடலத்தை தொங்க விடுவது அவர்களுடைய வழக்கம். எனவே அவர்களுடைய வழக்கத்தின்படி எருசலேமின் அலங்கம் பூட்டப்பட்டிருந்தாலும், அங்கு மண்டையோட்டின் வடிவில் இருந்த பாறையில் குழியைத் தோண்டி மரத்தை நட்டு கோலியாத்தின் தலையைத் தாவீது தொங்க விட்டான். இயேசு ஜீவனை விட்ட மலை கபாலஸ்தலம் என்று அர்த்தம் கொள்ளும் கொல்கொதா மலை. அது கோலியாத்தின் மண்டையோட்டைப் புதைத்த இடம்.
சரியான நேரம் வருகிற வரை தாவீது காத்திருந்தான். அவனுடைய பெயர் வெளியே தெரிய ஒரு இராட்சதனை எழுப்பினார். ஜனங்களுக்காக யுத்தம் பண்ண வேண்டிய ராஜா பயந்தான். ஆனால் தாவீதுக்கோ தேவனைப் பற்றிய தைரியம் அவனுக்குள் இருந்ததால் ஜெயம் பெற்றான். சிம்சோனுக்கும் தாவீதுக்கும் இங்கு வித்தியாசத்தைப் பார்க்கிறோம். சிம்சோன் பெலிஸ்தியர்களை நண்பர்களைப்போல பாவித்தான். பெலிஸ்தியப் பெண்ணையே தனக்கு மனைவியாக்கினான். ஆனால் தாவீது அவர்களை எதிரியாக பாவித்தான். ஒரு அரக்கனை அழிக்கத் தேவன் சிறியவனான, இந்தப் படைபலமுமில்லாத தாவீதை பயன்படுத்தினார். எகிப்தின் மாபெரும் சக்தியை அளிக்க எளிய மோசேயைத் தெரிந்தெடுத்தார். பாகாலின் தீர்க்கதரிசிகளை அழிக்க எலியாவைத் தெரிந்தெடுத்தார். நாம் யாரும் அற்பமானவர்கள் கிடையாது. அற்பமான கூழாங்கல்லான நாம் கர்த்தருடைய கரத்தில் இருப்பதால் அவர் நம்மைப் பராக்கிரமசாலிகளாய், விலையேறப் பெற்றவர்களாய் மாற்றுகிறார்.
இந்த யுத்தம் கர்த்தருடையதாக இருந்ததால் தாவீது வெற்றி பெற்றான். கோலியாத் இதில் நமக்கு எதிரியாக இருக்கும் உலகத்தையும் சாத்தானையும் குறிக்கிறதாக இருக்கிறது. தாவீது கிறிஸ்துவுக்குள் இருக்கும் விசுவாசியாக பிரதிபலிக்கிறான். நமது வாழ்க்கையிலும் கோலியாத்தைப் போல பாவங்களும், எதிரிகளும் இருக்கலாம். இவைகளைத் தேவனுடைய பலத்தால் மட்டுமே எதிர்க்க முடியும். நம்முடைய சுய பலத்தால் அவைகளை எதிர்க்க முடியாது. தேவ பலன் நம்மை ஆட்கொள்ள வேண்டும். தேவ ஆவியால் நாம் நிரப்பப்பட வேண்டும். அப்பொழுதான் சாத்தானையும், உலகத்தையும், எதிரிகளையும் நாம் ஜெயிக்க முடியும். மோசேயோடும், தாவீதோடுமிருந்த தேவன் நம்மோடும் இருப்பார். ரோமர் 10 : 11ல் உலகத்தின் முடிவு பரியந்தம் உங்களோடிருப்பேன் என்ற தேவன் நம்மோடிருப்பார். ஆதலால் நாம் பிசாசைப் பார்த்தோ, போராட்டங்களைப் பார்த்தோ நோயைப் பார்த்தோ பயப்படத் தேவையில்லை. கர்த்தராகிய இயேசுவே சீக்கிரமாய் வாரும். ஆமென்.
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…