இயேசு இந்த உவமையை நடந்த ஒரு நிகழ்ச்சியிலிருந்து பரிசேயர்களுக்குக் கூறுகிறார். அந்த நபரின் பெயரைக் கூட குறிப்பிட்டுக் கூறியிருக்கிறார். இல்லாத ஒரு பெயரை இயேசு சொல்லியிருக்க மாட்டார். இயேசு இந்த உவமையில் ஐசுவரியவான், ஏழை என்ற இரண்டு மனிதர்களைப் பற்றி கூறுகிறார். இதில் ஐசுவரியவானின் வாழ்க்கையும், ஏழையின் வாழ்க்கையும் எவ்வாறு இருக்கிறதென்பதைப் பார்க்கலாம். இதை லூக்கா 16 : 19 – 31ல் பார்க்கிறோம். இயேசு இதில் நாம் ஒன்றுமே அறிந்திராத ஒரு இடத்திற்கு அழைத்துச் செல்கிறார். உலகத்திலிருந்து மறுமைக்கும் எந்த ஒரு இடைவெளியுமில்லாமல் இந்த உவமையைக் கூறுவதைப் பார்க்கிறோம். நாம் மறுமைக்குள் கடந்து செல்வதற்கு இடையிலிருக்கும் இந்தத் திரையைக் கடந்து செல்ல இயலாது. ஆனால் இயேசு உலக வாழ்க்கையைப் பற்றி சாதாரணமாகக் கூறுவதைப் போல மறுஉலகத்தைப் பற்றியும் சாதாரணமாகவே சொல்வதைப் பார்க்கிறோம்.
ஐசுவரியவான், தரித்திரன்:
லூக்கா 16 : 19 – 21 “ஐசுவரியமுள்ள ஒரு மனுஷன் இருந்தான்; அவன் இரத்தாம்பரமும் விலையேறப்பெற்ற வஸ்திரமும் தரித்து, அநுதினமும் சம்பிரமமாய் வாழ்ந்துகொண்டிருந்தான்.”
“லாசரு என்னும் பேர்கொண்ட ஒரு தரித்திரனும் இருந்தான்; அவன் பருக்கள் நிறைந்தவனாய், அந்த ஐசுவரியவானுடைய வாசலருகே கிடந்து,”
“அவனுடைய மேஜையிலிருந்து விழுந் துணிக்கைகளாலே தன் பசியை ஆற்ற ஆசையாயிருந்தான்; நாய்கள் வந்து அவன் பருக்களை நக்கிற்று.”
இங்கு இரண்டு மனிதர்களைப் பற்றி இயேசு கூறியிருக்கிறார். ஒருவன் பணக்காரன், மற்றவன் தரித்திரன். ஐசுவரியவான் உலகத்தில் இருக்கும் பொழுது சுகபோகமான வாழ்க்கையை வாழ்ந்தான். அவனது வாழ்க்கை மிகவும் ஆடம்பரம் நிறைந்ததாக இரத்தாம்பரமும், விலையுயர்ந்த வஸ்திரமும் அணிந்தவனாக, எதற்கும் குறைவில்லாததாக, உயர்ந்த வாழ்க்கையை வாழ்ந்தவன். இவன் தேவனைத் தேடாமலேயே வாழ்ந்து மரித்த ஒரு பணக்காரன். இந்த .ஐசுவரியவானின் வாசலிலே ஏழைகளும் மாற்றுத்திறனாளிகளும் உதவிக்காகக் காத்திருப்பார்கள். இந்தப் பணக்காரனை ஆசீர்வதிக்கப்பட்டவன் என்று சொல்வார்கள். மனிதன் பார்க்கும் பார்வை வேறு, தேவனுடைய பார்வை வேறு. இந்தப் பணக்காரன் எவ்வளவு கொடியவனாக இருந்தான் என்பதை இயேசு அழகாக வர்ணிக்கிறார்.
இந்த ஏழை மனிதனின் வாழ்க்கை உணவுக்குக் கூட கஷ்டப்படும், மிகவும் தாழ்ந்த நிலையில் காணப்படுகிறது. ஏழையானவனோ தரித்திரத்தில் வாழ்ந்தான். ஏழையாய் இருந்த மனிதனின் பெயர் இங்கு குறிப்பிடப்பட்டிருக்கிறது. அவனுடைய பெயர் லாசரு. ஆனால் இந்த ஐசுவரியவானின் பெயரோ குறிப்பிடப்படவில்லை. பணக்காரன் வீட்டில் நடக்கும் விருந்தில் ஏதாவது உணவு கிடைக்கும் அல்லது அங்கு வருகிறவர்கள் நமக்கு ஏதாவது தர மாட்டார்களா என்று எதிர்பார்ப்போடு தரித்திரர்கள் காத்திருப்பார்கள். லாசரு என்ற பெயருக்கு தேவ உதவி என்று பொருள். ஐசுவரியவானுக்கு தேவ உதவி தேவைப்படவில்லை. ஏழைக்குத் தான் தேவ உதவி தேவை. இரண்டாவது லாசரு வியாதியுள்ளவனாய் காணப்பட்டான். ஏனெனில் சரீரத்தில் பருக்கள் நிறைந்தவனாக இருக்கிறான் என்றும் அவனுடைய பருக்களை நாய்கள் நக்கியது என்றும் கூறப்பட்டிருப்பதைப் பார்க்கிறோம். ஐசுவரியவானுடைய வீட்டில் நடக்கும் விருந்திலுள்ள மீதமுள்ள உணவை இந்த ஏழை சாப்பிடுகிறவனாயிருக்கிறான். இவன் கந்தையான ஆடையோடு சாப்பாட்டுக்கு வழியில்லாதவனாக, ஒன்றுக்கும் உதவாதவனாக, வாழ்வில் எந்த நம்பிக்கையுமில்லாதவனாக வாழ்ந்து மரித்தான்.
இருவரும் இறந்த பின்னுள்ள நிலை:
லூக்கா 16 : 22, 23 “பின்பு அந்தத் தரித்திரன் மரித்து, தேவதூதரால் ஆபிரகாமுடைய மடியிலே கொண்டுபோய் விடப்பட்டான்; ஐசுவரியவானும் மரித்து அடக்கம் பண்ணப்பட்டான்”
“பின்பு அந்தத் தரித்திரன் மரித்து, தேவதூதரால் ஆபிரகாமுடைய மடியிலே கொண்டுபோய் விடப்பட்டான்; ஐசுவரியவானும் மரித்து அடக்கம் பண்ணப்பட்டான்”
இரண்டு பேருமே ஒரு காலகட்டத்தில் மரிக்கிறார்கள். இரண்டு பேரும் இறந்த பின் வெவ்வேறு இடத்திற்குப் போகிறார்கள். உலகத்திலும் வெவ்வேறு இடத்தில் தான் இருந்தார்கள். ஐசுவரியவான் மரிக்கும்போது ஒரு பெரிய கூட்டமே வந்து அடக்கம் பண்ணி இருப்பார்கள். ஆராதனையில் பிரசங்கியாரின் வார்த்தைகள் அவனைப் பரலோகம் வரைத் தள்ள முயன்றிருக்கும். ஆனால் அந்தோ! அந்த பணக்கார மனிதனின் ஜீவன் வேறு வழியை நோக்கிப் பாய்ந்தது. நரகத்திற்கு முன்பாக உள்ள ஒரு இடத்திற்குக் கொண்டு செல்லப்படுகிறான். ஆனால் இந்த தரித்திரனுக்கு எந்த கூட்டமும் வந்திருக்காது, ஆராதனையும் நடந்திருக்காது. ஆனால் லாசரு மரணவாசல் வழியாகப் பிரவேசித்த மறுநிமிடத்தில் தேவ தூதர்கள் அவனை அழைத்துச் சென்று ஆபிரகாமுடைய மடியிலே கூட்டிப்போய் சேர்க்கப்பட்டான். உலகத்தில் குப்பைமேட்டில் இருந்தவன் பரதீசில் ஆபிரகாமின் மடியிலிருக்கிறான். உயர்ந்த நிலையிலிருந்தவன் வாதிக்கப்பட்டான். பரதீசில் உதவியற்ற நிலையில் ஐசுவரியவான் இப்போது இருக்கிறான்.
பாதாளத்திலிருந்து பணக்காரன் பார்த்ததும், பேசியதும்:
லூக்கா 16 : 24, 25 “பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது, தன் கண்களை ஏறெடுத்து, தூரத்திலே ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசருவையும் கண்டான்.”
“அப்பொழுது அவன்: தகப்பனாகிய ஆபிரகாமே, நீர் எனக்கு இரங்கி, லாசரு தன் விரலின் நுனியைத் தண்ணீரில் தோய்த்து, என் நாவைக் குளிரப்பண்ணும்படி அவனை அனுப்பவேண்டும்; இந்த அக்கினிஜுவாலையில் வேதனைப்படுகிறேனே என்று கூப்பிட்டான்.”
பாதாளத்திலிருந்து ஐசுவரியவான் வேதனைப் பட்டுக்கொண்டிருந்தான். அக்கினியினால் அவனது நாவு வறண்டது. அங்கிருந்து தூரத்திலே தன்னுடைய வீட்டின் வாசலில் உணவுக்காக ஏங்கி நின்ற பருக்கள் நிறைந்து நாயோடு வாழ்ந்த அந்த ஏழையைப் பார்த்தான். மேலும் அவன் தான் அக்கினியில் வேதனைப்படும் போது லாசரு ஆபிரகாமின் மடியில் சௌகரியமாக இருப்பதையும் பார்த்தான். உடனே அவன் ஆபிரகாமைப் பார்த்து தன்னுடைய நாவு வரளுவதால் ஏழை லாசருவின் விரலினால் தண்ணீரைத் தோய்த்து தானிருக்குமிடத்துக்கு அனுப்ப வேண்டுமென்று கெஞ்சினான். இதிலிருந்து பாதாளத்திலிருந்து பரதீஸிலிருப்பவரிடம் பார்க்கவும், பேச முடியுமென்று பார்க்கிறோம். மரித்த பின்பும் ஒருவரையொருவர் அடையாளம் கண்டுகொள்ள முடியுமென்றும் பார்க்கிறோம். நம்முடைய அடையாளத்தை அங்கு இழந்து போகப்போவதில்லை.
ஒருவன் மரணமடைந்தவுடன் அவனுடைய ஆவி அவனது உடலை விட்டுச் சென்று விடுவதால் சரீரமானது உயிரற்றதாக ஆகிவிடுகிறது. அதைக் குழியிலே வைத்து மூடப்படுவதால் அது மண்ணோடு மண்ணாகிறது. நரகம் என்பதற்கு கிரேக்கப்பதம் ஹடாய்ஸ் என்பதாகும். அதற்கு காணப்படாத உலகம் என்று பொருள். இது இரண்டு பிரிவுகளுடன் காணப்படுகிறது.
அந்திகிறிஸ்துவும், கள்ளத்தீர்க்கதரிசியுமே முதலாவது தள்ளப்படுவதாக வாசிக்கிறோம். அவர்களே நரகத்தின் முதலாவதுவாசிகள். இயேசு பரத்துக்கு ஏறும்போது புதிய ஏற்பாட்டு விசுவாசிகளைத் தம்மோடு அழைத்துச் சென்று விட்டார். எனவே பரதீசு காலியாக்கப்பட்டது. விசுவாசிகள் மரிக்கும் போது அவர்களது உடல் கல்லறையில் வைக்கப்பட்டு பின் அது மண்ணோடு மண்ணாக மாறும். ஆனால் அவர்களுடைய ஆவி கிறிஸ்துவோடு இருக்கும்படி போகும்.
ஆபிரகாமும், ஐசுவரியவானும்:
லூக்கா 16 : 26 – 31 “அதுவுமல்லாமல், இவ்விடத்திலிருந்து உங்களிடத்திற்குக் கடந்துபோகவும், அவ்விடத்திலிருந்து எங்களிடத்திற்குக் கடந்துவரவும் மனதுள்ளவர்களுக்குக் கூடாதபடிக்கு, எங்களுக்கும் உங்களுக்கும் நடுவே பெரும்பிளப்பு உண்டாக்கப்பட்டிக்கிறது என்றான்.”
“அப்பொழுது அவன்: அப்படியானால், தகப்பனே, எனக்கு ஐந்து பேர் சகோதரருண்டு, அவர்களும் வேதனையுள்ள இந்த இடத்துக்கு வராதபடி, அவன் போய் அவர்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும் பொருட்டு,”
“நீர் அவனை என் தகப்பன் வீட்டுக்கு அனுப்பும்படி உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்.”
“ஆபிரகாம் அவனை நோக்கி: அவர்களுக்கு மோசேயும் தீர்க்கதரிசிகளும் உண்டு, அவர்களுக்கு அவர்கள் செவிகொடுக்கட்டும் என்றான்.”
“அதற்கு அவன்: அப்படியல்ல, தகப்பனாகிய ஆபிரகாமே, மரித்தோரிலிருந்து ஒருவன் அவர்களிடத்திற்குப் போனால் மனந்திரும்புவார்கள் என்றான்.”
“அதற்கு அவன்: அவர்கள் மோசேக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் செவிகொடாவிட்டால், மரித்தோரிலிருந்து ஒருவன் எழுந்துபோனாலும், நம்பமாட்டார்களென்று சொன்னான் என்றார்.”
ஐசுவரியாவான் கேட்ட கேள்விக்கு ஆபிரகாம் தான் இருக்கிற இடத்திலிருந்து யாரும் அங்கு வரமுடியாது என்று விளக்குகிறான். உடனே அவன் உயிரோடிருக்கும் தன்னுடைய சகோதரர்களைக் குறித்துக் கரிசனைப்படுகிறான். தன்னுடைய சகோதரர்கள் மனந்திரும்பி அவர்களது சிந்தையை மாற்றிக்கொள்ளச் சொல்லிவிட விரும்புகிறான். தன்னைப்போல் அவர்களும் இந்த நிலைமைக்கு வந்து விடக்கூடாதென்று நினைக்கிறான். இது பிந்தி வந்த ஆத்மபாரம். இவைகளை நினைத்து லாசருவை தன்னுடைய தகப்பன் வீட்டுக்கு அனுப்ப வேண்டுமென்று கேட்கிறான். அதற்கு ஆபிரகாம் பூமியிலுள்ள மோசேயும், தீர்க்கதரிசிகளும் சொல்கிற வார்த்தைகளுக்கு அவர்கள் செவி கொடுக்கட்டும் என்றான். அதற்கு ஐசுவரியவான் ஆபிரகாமைப் பார்த்துத் தகப்பனே என்றழைத்து மரித்தோரிலிருந்து ஒருவன் போனால் கண்டிப்பாக அவர்கள் மனந்திரும்புவார்கள் என்றான். அதற்கு ஆபிரகாம் மோசேயும், தீர்க்கதரிசிகளும் கூறிய வார்த்தைகளுக்குச் செவிகொடாதவர்கள் மரித்து ஒருவன் எழுந்து போனாலும் நம்பமாட்டான் என்று கூறினான்.
நாம் கற்றுக்கொள்ள வேண்டியது:
பூமியில் உதவி செய்யத்திராணி இருக்கும் போது கண்டிப்பாக உதவி செய்யுங்கள். ஏழைகளை ஒருநாளும் ஒடுக்காதீர்கள், அவமதிக்காதீர்கள். புறம்பே தள்ளாதீர்கள். ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன் கொடுக்கிறான். ஏழைகளுக்கு உதவி செய்யுங்கள். ஏழைகளை நேசியுங்கள். ஐசுவரியவானாக இருப்பது தவறல்ல. ஆனால் அந்த ஐசுவரியத்தைக் குறித்து உங்கள் ஆத்மாவில் என்ன சிந்திக்கிறீங்க என்பதுதான் தவறு. கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும் என்று வேதம் கூறுகிறது. ஐசுவரியத்தின் மேல் சிந்தையை செலுத்தினாலும், அதனால் ஆதாயம் தேட நினைத்தாலும், அது தவறாகும். வேதம் முழுவதும் அநேகர் ஐசுவரியவான்களாக இருந்திருக்கின்றனர். ஐசுவரியத்தை சம்பாதியுங்கள். சேமித்து வையுங்கள். எவ்வளவு முடியுமோ அவ்வளவு கர்த்தருக்குக் கொடுங்கள். கொடுக்கிறவராக இருந்ததால் இந்த சிந்தை வராது. இதைத்தான் பவுல் தன்னுடைய நிருபத்தில்
1தீமோத்தேயு 6 : 9 – 11 “ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள்.”
“பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்.”
“நீயோ, தேவனுடைய மனுஷனே இவைகளை விட்டோடி, நீதியையும் தேவபக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும் அடையும்படி நாடு.”
1தீமோத்தேயு 6 : 17 “இவ்வுலகத்திலே ஐசுவரியமுள்ளவர்கள் இறுமாப்பான சிந்தையுள்ளவர்களாயிராமலும், நிலையற்ற ஐசுவரியத்தின் மேல் நம்பிக்கை வையாமலும், நாம் அனுபவிக்கிறதற்குச் சகலவித நன்மைகளையும் நமக்குச் சம்பூரணமாய்க் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைக்கவும்,”
இம்மையைக் குறித்து மாத்திரமே ஐசுவரியாவான் சிந்தித்துக் கொண்டிருந்தான். நாம் இம்மைக்காக மாத்திரம் அழைக்கப்பட்டவர்களல்ல. மறுமை ராஜ்யத்திற்காக அழைக்கப்பட்டிருக்கிறோம். தேவனுடைய இராஜ்யம் ஸ்தாபிக்கப்பட்டு ஆதாமை அதில் வைத்தார். ஆனால் ஆதாம் அங்கு சாத்தானால் வஞ்சிக்கப்பட்டு அவருடைய கையில் இருந்த அந்த ராஜ்ஜியம் பிடுங்கப்பட்டது. பின்பும் தேவன் தம்முடைய ராஜ்யத்தை ஸ்தாபிப்பதற்காக தான் மிகவும் நேசித்த தன்னுடைய ஜனங்களுக்குக் கொடுப்பதற்காக இந்த உலகத்தில் மனுஷனை ஆண்டாண்டு காலமாக தன்னுடைய தீர்க்கதரிசிகளைக் கொண்டும், ஊழியக்காரர்களைக் கொண்டும், போதகர்களைக் கொண்டும் நடத்தி வருகிறார். பின்பும் தன்னுடைய ராஜ்யத்தைக் நம்மிடம் கொடுப்பதற்காக இரண்டாவது முறை வருகிறார். உலகத்திலுள்ள ராஜ்ஜியங்கள் எல்லாம் தேவனுடைய ராஜ்ஜியங்களாயின என்று வேதம் கூறுகிறது. இதுதான் வேதத்தின் சாரம்சம். இதை அறியாத மனிதனாக இந்த ஐசுவரியவான் வாழ்ந்தான். யூதர்களும் அதேபோல்தான் தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளைக் கேட்டும் இந்த உண்மையைக் குறித்து அறியாதிருந்தார்கள். நாம் இம்மைக்காக வாழக்கூடியவர்களாக இருக்கக் கூடாது. சுயநலம் உள்ளவர்களாக இருக்க கூடாது. அப்போது தேவனுக்கு அபாத்திரராயில்லாமல் பாத்திரவான்களாய்க் காணப்படுவோம். பேராசை உள்ளவர்களாக இருக்க கூடாது. எதைப் பார்த்தாலும் ஆசைப்படக்கூடாது. இம்மையைக் குறித்து மாத்திரம் நாம் சிந்திக்கக் கூடியவர்களாக இல்லாமல் மறுமையைக் குறித்தும் சிந்தித்து இயேசுவுடன் வாழ பிரயாசப்படுவோம்.
மரித்த பின்னர் நாம் எங்கே செல்வது என்பதைக் குறித்து, மரித்த பின்னர் முடிவு செய்ய முடியாது. இப்பொழுதே நாம் முடிவெடுக்க வேண்டும். இயேசுவுக்காய் வாழ நம்மை அர்ப்பணிப்போம். இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்வோமென்றால் இங்கும் ஆசீர்வாதமான வாழ்வு, பரலோகத்திலும் நித்திய வாழ்வைத் தர ஆவலுள்ளவராயிருக்கிறார். மாரநாதா சீக்கிரமாய் வாரும். ஆமென்.
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…