இயேசு எங்கெல்லாம் ஊழியத்திற்குச் சென்றாரோ அங்கெல்லாம் ஒரு கூட்டம் அவரைப் பின்பற்றிச் சென்றனர். இயேசுவிடமிருந்து சுகத்தைப் பெறவும் அவர்களுடைய குறைவை நிறைவாக்கவும் பின் சென்றனர். இன்னுமொரு கூட்டம் இயேசுவின் வார்த்தையில், அவருடைய செயலில் என்ன குற்றம் கண்பிடிக்கலாமென்று பின்பற்றினர். இயேசு சகல ஆயக்காரரோடும், பாவிகளோடும் போஜனம் பண்ணியதால் குற்றம் சாட்டினர். அப்பொழுது இந்த உவமையைக் கூறினார். இதை லூக்கா 15 : 8 – 10ல் காணலாம். இயேசு இந்த பூமியில் வந்ததற்குப் பல காரணங்கள் உண்டு. அதில் ஒன்று பழையஏற்பாட்டுத் தீர்க்கதரிசனங்களை நிறைவேற்றும்படி இந்த உலகத்திற்கு வந்தார். இயேசு வந்ததின் நோக்கத்தை இந்த உவமையில் கூறியிருப்பதைப் பார்க்கலாம்.
காசை இழந்த ஸ்திரீ:
லூக்கா 15 : 8 – 10 “அன்றியும், ஒரு ஸ்திரீ பத்து வெள்ளிக்காசை உடையவளாயிருந்து, அதில் ஒரு வெள்ளிக்காசு காணாமற்போனால், ……..”
யூதர்களின் முறைமையின்படி ஒரு பெண்ணை விவாதத்திற்கு நியமிக்கும்போது அந்த மணவாளன் 10 வெள்ளிக்காசைக் கொடுப்பான். அந்த மணவாட்டி அந்த வெள்ளிக்காசைப் பத்திரமாக வைத்திருந்து விவாக நாளில் அதை மணவாளனுக்குக் காண்பிக்க வேண்டும். அவள் அந்த வெள்ளிக்காசைப் பத்திரமாக வைத்திருப்பாள் என்ற உத்திரவாதம் அவனுக்கிருந்தால் தான் அவன் அவளை விவாகம் செய்வான். அந்த வெள்ளிக்காசில் ஒன்று காணாமல் போனாலும் அவள் விவாகம் பண்ண உத்தரவாதம் இல்லாதவளென்று புறக்கணித்து விடுவான். அந்த வெள்ளிக்காசுகள் எருசலேமில் நியாயப்பிரமாணத்தின் பத்து கட்டளைகளை நினைவு கூறும் படி அமைக்கப்பட்டிருக்கும். இந்த வெள்ளிக்காசுகள் ஒரே வரிசையில் அடுக்கிக் கட்டப்பட்டதாக இருக்கும். ஒவ்வொரு வெள்ளிக்காசும் அதன் வரிசையிலிருக்க வேண்டும். அதில் ஒன்றுகூட தொலைந்து போகக்கூடாது. அந்த ஸ்திரீ வைத்திருந்த 10 வெள்ளிக்காசில் ஒரு வெள்ளிக்காசு காணாமல் போய்விட்டது. வெள்ளிக்காசு காணாமல் போனதைப் போல ஒரு மனிதன் பாவம் செய்யும் போது காணாமல் போகிறான். ஆதாம் தேவனுடைய கட்டளையை மீறி தேவன் புசிக்கக் கூடாதென்று சொன்ன பழத்தைப் புசித்து பாவம் செய்தான். அவன் செய்த பாவமானது தேவன் கூப்பிடும் போது முன்னே வரக்கூடாதபடி ஒளிந்து கொண்டதைப் பார்க்கிறோம் (ஆதியாகமம் 3 : 8).
தேடின ஸ்திரீ:
லூக்கா 15 : 8 “விளக்கைக் கொளுத்தி, வீட்டைப் பெருக்கி, அதைக் கண்டுபிடிக்கிறவரைக்கும் ஜாக்கிரதையாய்த் தேடாமலிருப்பாளோ?”
அந்த வெள்ளிக் காசு வேறு எங்கும் போகவில்லை. வீட்டில்தான் காணாமல் போனது. அங்குள்ள இருlளினால் அது தெரியவில்லை. இந்த ஸ்திரீ தன்னுடைய வெள்ளிக்காசு காணாமல் போனவுடன் அதை யாரிடமும் சொல்லாமல் அவள் மட்டுமே தனியாகத் தேடுகிறாள். ஏனெனில் அவளுடைய பார்வையில் அந்த வெள்ளிக்காசு விலையேறப்பெற்றது. காணாமல் போன ஆட்டிற்கு மேய்ப்பனின் குரல் கேட்டால், அது பதில் கொடுக்கும். ஆனால் வெள்ளிக்காசு பதில் கொடுக்காது. அந்த ஒரு வெள்ளிக்காசு காணாமல் போனால் போகட்டும், தன்னிடம் இன்னும் ஒன்பது வெள்ளிக்காசு இருக்கிறதே என்று அவள் எண்ணவில்லை. அந்தக்காலத்தில் வீடுகள் மண்ணினால்தான் கட்டியிருப்பார்கள். இவ்வாறு கட்டப்பட்ட வீட்டிற்கு ஜன்னல்கள் கிடையாது. வீட்டிற்குள் எப்பொழுதும் இருளே காணப்படும். அந்தக்காலத்தில் மின்சாரமும் கிடையாது.
“தேடுங்கள் கண்டடைவீர்கள்” என்று கர்த்தர் சொன்ன வார்த்தையின்படியே (மத்தேயு 7 : 7), வெள்ளிக்காசைத் தேடிய ஸ்திரீ கண்டுபிடித்தாள். இயேசு பன்னிரண்டு வயது சிறுவனாயிருந்த போது, இயேசுவின் தாய் அவர் தன்னோடிருப்பதாக எண்ணிக் கொண்டிருந்தாள். ஆனால் மூன்றாவது நாளில்தான் இயேசு தன்னோடு இல்லை என்பதை உணர்ந்து தேடிப்போய்க் கண்டுபிடித்தாள். நம்முடைய வாழ்க்கையிலும் இருள் வந்துவிட்டால் நாம் ஆசிகளை இழந்து விடுவோம். கர்த்தர் நமது இருண்ட வாழ்க்கைக்கு வெளிச்சத்தைக் கொடுக்க விரும்புகிறார். நம்முடைய மனம், இருதயம், இருளடைந்து அந்தகாரத்தில் இருந்தாலும் அவைகளில் வெளிச்சத்தைக் கொடுக்க வல்லவர் இயேசு ஒருவரே. எவ்வாறு வெளிச்சம் தருவாரென்றால் தேவனுடைய வசனத்தைப் நம்முடைய உள்ளத்தில் பிரவேசிக்க இடம் கொடுக்கும் போது நமக்குள் இருக்கிற இருள் மறைந்துவிடும் (சங்கீதம் 119 : 130). இதைத்தான் ஏசாயா ,
ஏசாயா 51 : 4ல் “என் ஜனங்களே, எனக்குச் செவிகொடுங்கள்; என் ஜாதியாரே, என் வாக்கைக் கவனியுங்கள்; வேதம் என்னிலிருந்து வெளிப்படும்; என் பிரமாணத்தை ஜனங்களின் வெளிச்சமாக ஸ்தாபிப்பேன்.”
என்கிறார். பழைய ஏற்பாட்டில் ஆசரிப்புக் கூடாரத்தில் உள்ள குத்துவிளக்கு அணைந்து போகாமலிருக்க ஆசாரியன் அதை அடிக்கடி சுத்தப்படுத்துவான். இது நம்முடைய ஜீவியத்தில் அடிக்கடி சுத்திகரிக்கப்படும் அனுபவத்தைக் காட்டுகிறது. நாம் ஒவ்வொருவரும் விளக்காக இருக்கிறோம். மனுஷனுடைய ஆவி கர்த்தர் தந்த தீபமாயிருக்கிறது. நம்முடைய விளக்கு அணைந்து போகாமலிருக்க தேவனிடமிருந்து அபிஷேகத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இங்கு விளக்கு என்பது பரிசுத்த ஆவியானவரைக் குறிக்கிறது. அங்கு விளக்குகளுக்கு ஒலிவ எண்ணெயைத்தான் ஊற்றுவார்கள். அந்த எண்ணெயானது அபிஷேகத்துக்கு அடையாளமாயிருக்கிறது. எனவே அவள் விளக்கைக் கொளுத்தி வைத்து, வீட்டைப் பெருக்கி ஜாக்கிரதையாய், கரிசனையோடும், கண்ணீரோடும், ஆர்வத்தோடும், தேடி விளக்கு வெளிச்சத்தில் கண்டு பிடிக்கிறாள். நாமும் இயேசுவின் வெளிச்சத்திற்குள் செல்லும் போது வெளிச்சத்தின் பிள்ளைகளாய் மாறுவோம். கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவே சுடர்களைப் போல பிரகாசிப்போம். பாவத்தில் மரித்தவர்களுக்கு அந்தப் பாவத்தின் இருளைப் போக்க வந்த ஒளி இயேசு.
யோவான் 1 : 4, 5, 9ல் “அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது.”
“அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதைப் பற்றிக்கொள்ளவில்லை.”
“உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி.”
அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது. இயேசு கொடுக்கிற ஒளி இருளால் மூட முடியாத ஒளி. எந்த நாட்டில் உள்ளவனாயிருந்தாலும், பாவம் செய்தவனாயிருந்தாலும், பணக்காரனாயிருந்தாலும் எல்லோருக்கும் ஒளியாயிருப்பவர் இயேசு.
மனுஷன் தேவனுடைய பார்வையில் விழுந்து போயிருந்தாலும், தேவனை அறியாமல் துன்மார்க்கமான ஜீவியம் செய்து கொண்டிருந்தாலும், பாவத்தில் நாள்தோறும் மூழ்கிக் கொண்டிருந்தாலும், தேவனால் சிருஷ்டிக்கப்பட்டதால் அவன் விலையேறப்பெற்றவன். ஆனபடியால் தேவன் இன்றைக்கும் தேடி வருகிறார். தேவன் நம்மை விலையேறப்பெற்ற இடத்திலேயே வைத்திருக்கிறார். அவர் தொலைந்து போன ஒவ்வொருவரையும் தேடிக்கொண்டு வந்து, அவர்கள் இருக்க வேண்டிய இடத்திலே வைக்கிறார். நாம் இயேசுவோடுள்ள உறவிலே சரியான இடத்தில் இருக்க வேண்டும். ஆவியானவர் அதை சரி செய்ய விரும்புகிறார். வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து நித்திய வழியிலே நடத்தும் என்று சங்கீதக்காரன் ஜெபித்ததைப் போல நாமும் ஜெபிக்க வேண்டும். ஆவியானவரின் கரத்திலே நம்மை அர்ப்பணிக்க வேண்டும். நம்முடைய குறை குற்றங்களை பரிசுத்த ஆவியானவர் உணர்த்தும்பொழுது அதை நாம் அறிக்கை செய்து, சரி செய்ய வேண்டிய காரியங்களை சரி செய்து அவருக்குப் பிரியமாக வாழ நம்மை அர்ப்பணிக்க வேண்டும். பாவம் செய்கிறவனும் இருட்டில்தான் இருக்கிறான். நம் ஒவ்வொருவருக்கும் தேவன் பொறுப்பைக் கொடுத்திருக்கிறார். காணாமல் போனவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் பொறுப்பு. இருட்டில் இருப்பவர்களையும், உபயோகம் இல்லாமல் இருக்கிறவர்களையும் கண்டுபிடித்து இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்டு இயேசுவின் பிள்ளைகளாக மாற்றுவதற்கு நம்மை அழைத்திருக்கிறார். உலகமெங்கும் புறப்பட்டுப் போங்கள் கிராமங்களில் ஊழியம் செய்யுங்கள். இருளில் வாழ்கிற ஆத்மாக்களுக்கு இயேசு என்ற வெளிச்சத்தைக் காட்டுங்கள்.
கண்டுபிடித்த ஸ்திரீ:
மத்தேயு 8 : 9, 10 “கண்டுபிடித்தபின்பு, தன் சிநேகிதிகளையும் அயல்வீட்டுக்காரிகளையும் கூட வரவழைத்து: காணாமற்போன வெள்ளிக்காசைக் கண்டுபிடித்தேன், என்னோடுகூட சந்தோஷப்படுங்கள் என்பாள் அல்லவா?”
“அதுபோல மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் தேவனுடைய தூதருக்கு முன்பாகச் சந்தோஷமுண்டாயிருக்கிறது என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.”
அந்த வெள்ளிக்காசைக் கண்டு பிடித்தவுடன் இரட்டிப்பான சந்தோஷம் அடைகிறாள். உடனே அவள் தான் காணாமல் போன வெள்ளிக்காசைக் கண்டுபிடித்ததை தன் சிநேகிதரிடமும், அயல்வீட்டில் உள்ளவர்களிடமும் கூறி அந்த சந்தோஷத்தைத் தன்னோடு கூட அவர்களையும் சந்தோஷப்படச் செய்தாள். இதைத்தான் வேதம் உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும் என்று வேதம் கூறுகிறது.
ரோமர் 3 : 23 “எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி,”
1பேதுரு 1 : 18, 19 “உங்கள் முன்னோர்களால் பாரம்பரியமாய் நீங்கள் அநுசரித்து வந்த வீணான நடத்தையினின்று அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்படாமல்,”
“குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே.”
நாம் எல்லோரும் பாவம் செய்து தேவனுடைய மகிமையை இழந்து தவிக்கும்போது, வெள்ளியினாலும், பொன்னினாலும் நம்மை மீட்டெடுக்காமல், இயேசுவின் குற்றமில்லாத, மாசற்ற கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே நம்மை மீட்டெடுத்தார். ஏனெனில் வெள்ளியும் பொன்னும் அழிந்து போகக்கூடியது. இந்த உவமையிலுள்ள காணாமற்போன வெள்ளிக்காசைவிட மேலான ஒன்றை இயேசு நமக்குக் கொடுத்திருக்கிறார். காணாமற்போன வெள்ளிக்காசை வீட்டைப் பெருக்கிக் கண்டுபிடித்து விடலாம். ஆனால் இந்த விலையேறப்பெற்ற இரத்தத்தை நம்மேல் ஊற்றத் தேவனிடம் கிட்டி சேர்ந்து அவருடைய பிள்ளையாகமாறி அபிஷேகிக்க வாஞ்சிப்போம். வெள்ளி காசைக் கண்டுபிடித்தவுடன் எல்லோரையும் கூப்பிட்டு அவர்களிடம் சொல்லி சந்தோஷப்படுவதைப் போல மனம் திரும்புகிற ஒரு பாவியினிமித்தம் தேவனுடைய தூதனுக்கு முன்பாக பரலோகத்தில் சந்தோஷம் உண்டாகும் என்றார். நாம் கெட்டுப் போவதோ, நரகத்திற்குப் போவதோ தேவனுடைய சித்தம் அல்ல. இயேசு நமக்காகத் தன்னையே சிலுவையில் ஒப்புக் கொடுத்தார். நமது அக்கிரமங்களைச் சுமந்தார். சமாதானத்தை உண்டு பண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது. பிதாவானவர் நாம் கெட்டுப்போகாமலிருக்க தம்முடைய ஒரே குமாரனை இந்த உலகத்திற்கு அனுப்பினார். இதை,
யோவான் 3 : 16 “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.” என்று பார்க்கிறோம்.
இரட்சிப்பின் சந்தோஷம்:
இரட்சிப்பின் சந்தோஷத்திற்கு ஈடு எதுவும் இல்லை. நாமும் இழந்துபோன சந்தோஷத்தை, இரட்சிப்பை தேடிக் கண்டுபிடிக்கிறவர்களாக இருக்க வேண்டும். கண்டுபிடித்த பின் நாம் பெற்ற சந்தோஷத்தை, நாம் பெற்ற அபிஷேகத்தை, நாம் பெற்ற இரட்சிப்பை நமது அயல் வீட்டாரிடமும், நமக்குத் தெரிந்தவர்களிடமும் சினேகிதரிடமும் சொல்ல வேண்டும். என்ன சொல்ல வேண்டுமென்றால், இயேசு ஒருவரே ஜீவனுள்ள தேவன் என்றும், உண்மையான தேவன் என்றும், நமக்காக மரித்தார் என்றும், நம்முடைய பாவங்களை மன்னிக்கிறவர் என்றும், அவர்களுக்குச் சொல்ல வேண்டும். இயேசு தொலைந்து போனவர்களை விட்டு விடுகிற தேவன் அல்ல. தேடி வருகிற தேவனாக இருக்கிறார். கண்டுபிடித்து அவருடைய கூட்டத்தில் சேர்க்கும் வரை இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குவதுமில்லை, தூங்குவதுமில்லை கிடைத்தவுடன் ஆண்டவரிடத்தில் மகிழ்ச்சி தோன்றுவதைப் பார்க்கிறோம்.
காணாமல் போன ஆதாம் ஏவாளைத் தேடி, தேவன் ஏதேன் தோட்டத்திற்குச் சென்றார். அவர்களுக்கு ஆத்தும மீட்பாகிய இரட்சிப்பை கொடுக்கும்படி போனார். அன்றைக்கே அந்த மிருகத்தைக் கொன்று தோல் உடைகளை உண்டாக்கி உடுத்துவித்தார். பிசாசு பாவம் செய்த மனிதனை நிர்வாணியாக்குகிறான். தேவனோ அந்த நிர்வாணத்தை மூடுகிறவராயிருக்கிறார். அதேபோல் பிசாசு பிடித்த லேகியோன் என்பவனிடமும் இருந்த வஸ்திரத்தை பிசாசானவன் உரிந்து போட்டான். ஆனால் தேவன் அவனை உடுத்திக்கொள்ளச் செய்தார்.
இந்த உவமையை இயேசு கூறும் போது இயேசுவின் தாயும் அவருடைய சகோதரர்களும் அவரைப் பார்க்க வந்தனர் (லூக்கா 8 : 19). அப்போது ஜனக் கூட்டம் அதிகமாக இருந்ததால் அவரை அவர்களால் பார்க்க முடியவில்லை. ஞானஸ்நானம் பெற்றபின் இயேசு அவருடைய வீட்டில் இல்லை. எனவே அவர்கள் வந்திருப்பதை இயேசுவுக்குத் தெரிவித்தனர். அப்பொழுது இயேசு,
லூக்கா 8 : 21ல் “இயேசு தேவனுடைய வசனத்தைக் கேட்டு, அதின்படி செய்கிறவர்களே எனகுத் தாயும் எனக்குச் சகோதரருமாயிருக்கிறார்கள்”
என்று கூறியதைப் பார்க்கிறோம். தாயைவிட, சகோதரர்களைவிட தேவ வசனத்தின்படி நடக்கிறவர்களும், அதின்படி செய்கிறவர்களும்தான் தன்னுடைய தாயும், சகோதரும் என்கிறார். பாக்கியவான் யாரென்று,
லூக்கா 11 : 27, 28 ல் “ஐனக்கூட்டத்திலிருந்த ஒரு ஸ்திரீ அவரை நோக்கி: உம்மைச் சுமந்த கர்ப்பமும் நீர் பாலுண்ட முலைகளும் பாக்கியமுள்ளவைகளென்று சத்தமிட்டுச் சொன்னாள்.
“அதற்கு இயேசு: அப்படியானாலும், தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்துக் கொள்கிறவர்களே அதிக பாக்கியவான்கள் என்றார்.”
அவளுடைய ஆவேசமான வார்த்தைகளுக்கு இயேசு எவ்வாறு பதில் கூறினாரென்று அறிகிறோம். இயேசு என்ற ஒளியை நோக்கிப் போக வேண்டும். தேவவசனத்தை இருதயங்களில் முளைக்க வைத்து இருதயத்தை வெளிச்சமாக்கும் ஜீவவசனத்தை விளக்குத் தண்டின் மேல் வைத்து எல்லா இரகசியங்களையும், எல்லா மறைபொருட்களையும் விளங்க நம்மை அழைக்கிறார்.
நாம் கற்றுக்கொண்ட பாடம்:
யோவான் 8 : 32ல் “சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.”
என்று யோவான் அப்போஸ்தலன் கூறியதைப் போல, சத்தியத்தை அறிந்து எல்லா துர்கிரியைகளிலிருந்து விடுதலை பெறுவோம். நாம் நம்மை முழுமையாக கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுக்கும்போது பூரண விடுதலை கிடைக்கும். பாவம் அணுகாது. இயேசுவின் ஒளியால் பாவத்தின் வல்லமை, பிசாசின் வல்லமை, சாபத்தின் வல்லமை, அந்தகார வல்லமை இவைகள் அனைத்தும் நீங்கும்.
தொலைந்து போன அந்த ஒரு வெள்ளிக் காசை அந்த ஸ்திரீ தேடியதைப் போல, ஒவ்வொரு தனி மனிதர் மேலும் இயேசு கிறிஸ்து அக்கறை உள்ளவராக இருக்கிறார். அதற்காக நம்மை மீட்க, எதையும் இழக்கத் தயாராக இருக்கிறார். நம்மைக் கண்டுபிடிக்கும் வரை தேடுகிறார். ஆனால் மனம் திரும்பும் வரை காத்திருக்கிறார். அவரது சொத்துதான் நாம். பிதா அளித்த பொக்கிஷம்தான் நாம். அவருடைய உறவினர்கள்தான் நாம். நம்மைத் தோளில் சுமந்து செல்கிற தகப்பன்தான் இயேசு. எனவே நாம் அவரைத் தேடிக்கண்டுபிடித்து அவர் காட்டிய வழியில் செல்வோம். மரநாதா சீக்கிரமாய் வாரும். ஆமென்.
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…