இயேசுவின் உவமைகள்

பணக்கார முட்டாள் – லூக்கா 12 : 13 – 21

ஒருவன் இயேசுவிடம் விண்ணபித்தது:

லூக்கா 12 : 13 – 15 “அப்பொழுது ஜனக்கூட்டத்தில் ஒருவன் அவரை நோக்கி: போதகரே, ஆஸ்தியைப் பாகம்பிரித்து என் வீதத்தை எனக்குத் தரும்படி என் சகோதரனுக்குக் கட்டளையிடவேண்டும் என்று கேட்டுக்கொண்டான்.”

“அதற்கு அவர்: மனுஷனே, என்னை உங்களுக்கு நியாயாதிபதியாகவும் பங்கிடுகிறவனாகவும் வைத்தவன் யார் என்றார்.”

“பின்பு அவர் அவர்களை நோக்கி: பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல என்றார்.”

இயேசுவோடு ஜனக்கூட்டத்தில் சென்றுகொண்டிருந்த ஒருவன் இயேசுவின் உதவியை நாடி அவனுடைய சகோதரர்களுக்கும், அவனுக்கும் இருக்கிற சொத்துப் பிரச்சனையைத் தீர்த்து வைக்கும்படி வேண்டினான். பேராசை மிக்க அவர்களின் பாகப்பிரிவினையில் தலையிடுவது தன்னுடைய வேலை அல்ல என்பதால் இயேசு அவர்களைப் பார்த்து பொருளாசையைக் குறித்து எச்சரிக்கையாயிருக்க வேண்டுமென்று கூறினார். ஏனென்றால் எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவனைக் கொடுக்க முடியாதென்று மாற்கு 8 : 36ல் “மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?” என்று இயேசு தன்னுடைய வாயால் கூறியிருப்பதைப் பார்க்கிறோம். அதன் பின் இந்த உவமையை இயேசு ஜனங்களுக்கு அறிவித்ததைப் பார்க்கிறோம். இதை லூக்கா 12 : 16 – 25ல் பார்க்கலாம். குமாரனாகிய இயேசுதான் நமக்கு ஜீவன். குமாரனில்லாதவன் ஜீவனில்லாதவன். நம்முடைய சரீரத்தின் நாசியில் உயிர் இருக்கிறது. ஆவியில் ஜீவன் இருக்கிறது. இந்த ஆஸ்தியெல்லாம் சரீரத்தைப் போஷிப்பதற்கும், வளர்ப்பதற்கும் பயன்படுகிறது. நமக்குள் இருக்கிற ஆவியிலே இயேசுவே ஜீவனாகவும், நித்தியஜீவனாகவும் இருக்கிறார். இயேசு மலைப்பிரசங்கத்தில், 

மத்தேயு 6 : 25 “ஆகையால் என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆகாரத்தைப் பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா?” என்கிறார்.

ஐசுவரியவானின் செயல்:

லூக்கா 12 : 16 – 18 “அல்லாமலும், ஒரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: ஐசுவரியமுள்ள ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந்தது.”

“அப்பொழுது அவன்: நான் என்ன செய்வேன்? என் தானியங்களைச் சேர்த்து வைக்கிறதற்கு இடமில்லையே;”

“நான் ஒன்று செய்வேன், என் களஞ்சியங்களை இடித்து, பெரிதாகக் கட்டி, எனக்கு விளைந்த தானியத்தையும் என் பொருள்களையும் அங்கே சேர்த்து வைத்து,”

ஐசுவரியவான் ஒருவனுக்கு அந்த ஆண்டு நல்ல விளைச்சல் விளைந்தது. அதனால் அவன் தனது மனதிற்குள் அந்தக் கோதுமையை சேர்த்து வைக்க நல்ல ஒரு களஞ்சியத்தை கட்ட வேண்டுமென்று தீர்மானித்தான். இதில் “நான்”, “என்” என்ற வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதைப் பார்க்கிறோம். இவைகளை பதினோரு முறை பயன்படுத்தியிருக்கிறான். செல்வந்தரான இந்த மனிதன் தன்னைக் குறித்தும், தன்னுடைய செல்வத்தைக் குறித்தும் அதிகமாக யோசித்துக் கொண்டிருந்தான். மற்றவர்களுக்கும் உதவி செய்ய வேண்டும் என்பதற்கும்தான் தன்னை ஐசுவரியவானாக வைத்திருக்கிறாரென்பதை உணரவில்லை. ஏழைகள், விதவைகள், அனாதைகள், கைவிடப்பட்டவர்கள் போன்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இவனுக்கில்லை. தனக்காகவே திட்டம் போட்டுத் தன்னை வளர்த்துக் கொண்டிருக்கிறான். ஜனங்களுக்கு மத்தியில் நல்ல பணக்காரன் என்ற பெயர் பெற வேண்டுமென்று நினைக்கிறான். தேவனைத் தேடுவதற்கோ, ஜெபம் பண்ணுவதற்கோ வேதம் வாசிப்பதற்கோ அவனுக்கு நேரமில்லை. அவனுடைய எண்ணமெல்லாம் வேலைசெய்ய வேண்டும், சம்பாத்தியம் பண்ண வேண்டும், சேமிக்க திட்டமிட வேண்டுமென்பதுதான் 

இதில் இயேசு நமக்கு முக்கியமான ஒரு காரியத்தைச் சொல்கிறார். இந்த ஐசுவரியவான் ஆண்டவரின் ஆசீர்வாதம்தான் நம்மை ஐசுவரியவானாக மாற்றுகிறது என்பதை மறந்து விட்டான். தேவனுடைய பார்வையில் அந்த நிலம் பட்டதால்தான் வெளிச்சமும், மழையும் அதன் மீது பட்டு அது நன்றாக விளைந்திருக்கிறது. நல்ல மழையைக் கொடுத்ததும் தேவன்தான். அதை நல்ல விளைய வைத்ததும் தேவன்தான் என்பதை ஐசுவரியவான் மறந்து விட்டான். என் சாமர்த்தியமும் என் கைப்பெலனும் இந்த ஐசுவரியத்தை எனக்குச் சம்பாதித்தது என்று நீ உன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளாமலும் இருக்க எச்சரிக்கையாயிருக்க வேண்டுமென்று உபாகமம் 8 : 17ல் வேதத்தில் கூறியிருப்பதை மறந்து விட்டான். அதிகமாக விளைந்ததை என்ன செய்யலாமென்று யோசிக்கிறான். அதற்குத் தேவனுக்குக் கணக்கு கொடுக்க வேண்டுமென்பதையும் மறந்து விட்டான். இதில் அவனது சுயநலத்தைப் பார்க்கிறோம். அவனிடமுள்ள ஐசுவரியத்திற்காக இயேசு குற்றம் சொல்லவில்லை. இயேசுவின் மேல் நம்பிக்கை வைக்காமல் ஐசுவரியத்தின் மேல் நம்பிக்கை வைத்ததுதான் தவறு என்கிறார். நமக்குள் இருக்கும் ஐசுவரியம் நம்மை இரட்சிக்காது. ஐசுவரியம் தீமையும் அல்ல. தரித்திரம் போற்றப்படக் கூடியதும் அல்ல. இயேசு இல்லாத, இரட்சிப்படையாத ஐசுவரியவானும், இயேசு இல்லாத, இரட்சிப்படையாத தரித்திரனும் நரகத்திற்குத்தான் செல்வார்கள். அப்படியானால் எது தீமையென்றால் பணஆசைதான் என்று பவுல், 

1தீமோத்தேயு 6 : 9ல் “ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள்.”

எந்தக் காரியத்திலும் சுயநலம் கூடாது. பேராசை கூடாது. இவன் உலகத்துக்குரியவைகளைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கிறான். நாம் இந்த உலகத்திற்காக அழைக்கப்பட்டவர்கள் அல்ல. தேவனுடைய நித்திய ராஜ்ஜியத்திற்குச் செல்ல அழைக்கப்பட்டவர்கள். ஆனால் இவனுக்கு அந்த சிந்தை இல்லை. இம்மைக்குரிய காரியத்தை மட்டும் சிந்திக்கிறான். பரலோக ராஜ்ஜியத்தைப் பற்றிய சிந்தை அவனுக்கில்லை. தேவனுடைய இராஜ்ஜியத்தை மனுஷனுக்குக் கொடுக்கவே இயேசு வந்தார். தான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி உங்களை சேர்த்துக் கொள்வேன் என்றார். தேவன் தந்த ஆஸ்திகளுக்கு நாம் எஜமானல்ல. நாம் அவற்றை பராமரிக்கிறவர்கள் நம்மை அதற்கு நிர்வாகம் பண்ணக் கொடுத்திருக்கிறார். இயேசு தான் அத்தனைக்கும் சொந்தக்காரர். ஐசுவரியம் நம்மை அடிமைப்படுத்தி வைக்க விடாமல் நாம் அதை அடிமைப் படுத்தி வைத்திருக்க வேண்டும்.

ஐசுவரியவானைப் பற்றி இயேசு: 

லூக்கா 12 : 19 – 21 “பின்பு: ஆத்துமாவே, உனக்காக அநேக வருஷங்களுக்கு அநேகம் பொருள்கள் சேர்த்துவைக்கப்பட்டிருக்கிறது; நீ இளைப்பாறி, புசித்துக் குடித்து, பூரிப்பாயிரு என்று என் ஆத்துமாவோடே சொல்லுவேன் என்று தனக்குள்ளே சிந்தித்துச் சொல்லிக்கொண்டான்.”

“தேவனோ அவனை நோக்கி: மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக் கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும் என்றார்.”

“தேவனிடத்தில் ஐசுவரியவானாயிராமல், தனக்காகவே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கிறவன் இப்படியே இருக்கிறான் என்றார்.”

ஐசுவரியாவான் தன்னுடைய ஆத்துமாவை நோக்கி தான் அநேக வருஷங்களுக்கான பொருட்களைச் சேர்த்து வைத்திருப்பதாகவும், அவைகளைப் புசித்து, குடித்து இளைப்பாறு என்று தானாகவே பேசுகிறான். ஆத்துமா ஒரு நாளும் சாப்பிடாது. அவன் உலகத்தில் சேர்க்கிற எல்லாம் தன்னுடைய ஆத்துமாவைத் திருப்திப்படுத்தும் என்ற தவறான எண்ணம் கொண்டிருந்தான். தன்னுடைய ஆத்துமா அழிவற்றது என்றும் எண்ணுகிறான். அவன் அவனுடைய ஆத்துமாவோடு பேசும் போது, இயேசு அந்த மனிதனோடு பேசுகிறார். வேதத்தில் ஏழைகளுக்கும் தேவைப்படுகிறவர்களுக்கும் கொடுக்க வேண்டும் என்று அநேகந்தடவை வருகிறது. அதனால் இயேசு அவனைப் பார்த்து மதிகேடன் என்று கூறுகிறார். ஏனென்றால் தேவன் இந்த உலகத்தில் வைத்திருக்கிற இந்தக் காரியங்களால் நாம் ஐசுவரியவான்களாக இல்லையென்கிறார். அவனுடைய வாழ்க்கையைக் குறித்து இயேசு என்ன சொல்கிறாரென்றால், இந்த ஐசுவரியவான் உலகத்திலே அவனுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்து வைத்தான். ஆனால் பரலோகத்திற்காக அவன் எதையுமே சேர்க்கவில்லை. அதற்காகத்தான் இயேசு மதிகேடனே என்கிறார். மேலும் அவனைப் பார்த்து “உன் ஆத்துமா இன்று இரவே எடுத்துக்கொள்ளப்படும் அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும்” என்று கேட்டார். இதைத்தான், 

நீதிமொழிகள் 1 : 19ல் “பொருளாசையுள்ள எல்லாருடைய வழியும் இதுவே; இது தன்னையுடையவர்களின் உயிரை வாங்கும்.” 

என்று சாலமோன் கூறுகிறார். அவனது வெளிப்புறமான காரியங்களைப் பார்க்கும்போது அவன் நல்லவன் போல் தெரிகிறான். தேவனுடைய சட்டங்களுக்குக் கீழ்ப்படிகிற மனிதனாகவே இருந்திருக்கிறான். அதனால் அவனைக் குறித்து வேறு எந்த விதத்திலும் சந்தேகப்பட முடியாது. ஏனெனில் அவனைக் குறித்து வேறு எந்தக் குறையும் சொல்லவில்லை. இன்றைய உலகத்தில் அனேகர் மரிக்கத்தானே போகிறோம், எனவே நன்றாகச் சாப்பிடுவோம், குடிப்போம் மகிழ்ச்சியாக இருப்போம் என்று எண்ணுகின்றனர். ஆண்டவர் இப்படிப்பட்ட எண்ணம் கொண்டிருப்பவர்களை மதிகேடன் என்கிறார். வாழ்க்கை என்பது இந்த உலகத்தோடு முடிந்து விடுகிறது என்று நினைக்கிறவர்கள் மதிகேடர்கள். ஐசுவரியத்தைச் சேர்த்து வைப்பது தவறான ஒன்றல்ல. ஆனால் இந்த ஐசுவரியவானுடைய மதிகேடான பிரச்சனை என்னவென்றால் எல்லாமே எனக்கு, என்னுடையது என்றுதான் எண்ணிக் கொண்டிருந்தான். மேலும் அதிகமதிகமாகச் சேர்க்க வேண்டும் என்பதே அவனுடைய விருப்பமாக இருந்தது. தேவனற்ற முதலாளித்துவம் இப்படித்தான் இருக்கும். இவ்வளவு லாபத்தைத் தேவன் கொடுத்ததால், தேவனுக்கும் கொடுத்திருந்தால் அது அவனுக்கு எத்தனை ஆசீர்வாதமாக இருந்திருக்கும். அதைக்கூட தனக்காகச் சேர்த்து வைக்க வேண்டுமென்று நினைத்தது பெரிய தவறு. 

செல்வம் பற்றி:

செல்வம் நம்முடைய பிரச்சினைக்கு எப்பொழுதெல்லாம் தீர்வாகும் என்று எண்ணிக் கொண்டிருக்கிறோமோ, அப்போது மேலும் மேலும் பிரச்சனை வருவதைப் பார்க்கலாம். பண ஆசையுள்ள ஒரு மனிதன் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்ற முடியாது. ஏனெனில் பணமானது அவனை விசுவாசத்தை விட்டு விலகிப் போகச் செய்யும். .அதனால் அந்த ராத்திரியிலே தன்னுடைய ஆத்துமாவை, ஜீவனை இழக்கக் கூடியவனாக இருக்கிறான். நாம் ஒவ்வொருவரும் நமது இருதயத்தை அலசி ஆராய்ந்து பார்த்து “நான் இந்த உலகத்திற்கு மட்டுமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேனா” என்று கேட்கவேண்டும். இயேசு சீஷர்களைப் பார்த்து, 

லூக்கா 12 : 24, 25 “காகங்களைக் கவனித்துப்பாருங்கள், அவைகள் 

விதைக்கிறதுமில்லை அறுக்கிறதுமில்லை, அவைகளுக்குப் பண்டசாலையுமில்லை, களஞ்சியமுமில்லை, இல்லாவிட்டாலும் அவைகளையும் தேவன் பிழைப்பூட்டுகிறார்; பறவைகளைப்பார்க்கிலும் நீங்கள் எவ்வளவோ விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்.’

“கவலைப்படுகிறதினால் உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்.” என்று கூறினார்.

 நாம் கவலைப்படுவதில் நமக்கு எதுவும் கிடைக்கப்போவதில்லை. மாறாக நம்முடைய சுகத்தையும், சந்தோஷத்தையும் இழந்து போகப்போகிறோம். ஒவ்வொரு நாளிலும் அந்தந்த நாள் செய்கிற காரியங்களைச் செய்யாமல் போகிறோம். 

நாம் இறந்த பின்னர் நாம் சேர்த்த தானியத்தை நம்மிடம் எடுத்துச் செல்ல முடியாது. நாம் பூட்டி வைத்தால் பூச்சிகள் அரிக்கும். திருடர்கள் கைப்பற்றினால் அது அவர்களுக்கு சொந்தமாகும். ஆனால் நம்மிடம் உள்ள மிகுதியான தானியத்தைக் கொண்டு பசியால் வாடுபவர்களுக்கு உதவி செய்தால் அந்த செல்வமானது அழியாத செல்வமாகும். அச் செல்வம் பரலோக செல்வமாக மாறிவிடும். பரலோக செல்வத்தைத் திருடர் கைப்பற்ற முடியாது. நாம் இறந்த பின்னரும் அது நம்முடன் வந்து, நம்மை பரலோக வாழ்வில் சேர்க்கும். நம்முடைய உடலும், உயிரும், செல்வமும் தேவனால் நம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இயேசு நமக்கு கூறும் அறிவுரை என்னவென்றால் ஐசுவரியத்தைச் சேர்ப்பது தவறல்ல. ஆனால் அவைகள் அனைத்தும் நமக்கு உரியது என்று எண்ணுவதும், தேவைக்கதிகமாகச் சேர்ப்பதும், அடுத்தவர்களுக்கு உதவாமல் தன்னலத்துடன் வாழ்வதும், பேராசை ஆகிறது. எனவே அழியாத செல்வமாகிய அன்பையும், பரிவையும் நாம் பரலோகத்தில் சேர்க்க முற்படுவோம். அழியாத நித்திய வாழ்வைப் பெறுவோம்.

கருத்து:

நாம் உலகில் பிறந்தது தற்செயலான நிகழ்ச்சி அல்ல. கடவுளின் பிள்ளைகளாக நம்மைப் படைத்தார். நம்மை பரலோக ராஜ்ஜியத்தில் சேர்ப்பதற்காகவே ஆறறிவு உள்ள மனிதர்களாக உலகில் நம்மை உண்டாக்கினார். நாம் மதியோடு உலக வாழ்வை திட்டமிடுவதில் தவறு இல்லை. ஆனால் அதற்கும் ஒரு அளவு உண்டு. நம்மிடம் பல ஆண்டுகளுக்குத் தேவையான தானியம் இருக்கும்போது உலகில் உள்ள மக்களுக்கு இறைவன் அளித்த தானியத்தை பேராசையுடன் பூட்டி வைக்க நினைப்பது தவறு. தேவைக்கு மீறி தானியத்தைச் சேமிக்கிறபடியால் உலகில் உள்ள மற்றவர்களைப் பசியால் துன்புறச் செய்கிறோம். நம் வாழ்வின் கணக்கை நாம் கடவுளிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதையும் நாம் அறியவில்லை. தேவனுடைய ராஜ்ஜியத்தைத்தான் முதலில் தேட வேண்டும். தேவனுடைய ராஜ்ஜியத்தைக் கட்ட செலவழிக்க வேண்டும். கிறிஸ்தவன் ஐசுவரியவானாக இருப்பது தவறில்லை. அது அவனுக்குப் பிரச்சனையில்லை. கர்த்தர் நோவா, ஆபிரகாம், யாக்கோபு, ஈசாக்கு, யோபு, சாலமோன், தாவீது போன்றவர்கள் ஐசுவரியவான்களாகத் தானிருந்தார்கள். ஆபிரகாமைக் கூறும்போது அவன் செல்வச் சீமானாக இருந்தான் என்று வேதம் கூறுகிறது. பவுல், 

1தீமோ 6 : 17ல் “இவ்வுலகத்திலே ஐசுவரியமுள்ளவர்கள் இறுமாப்பான சிந்தையுள்ளவர்களாயிராமலும், நிலையற்ற ஐசுவரியத்தின் மேல் நம்பிக்கை வையாமலும், நாம் அனுபவிக்கிறதற்குச் சகலவித நன்மைகளையும் நமக்குச் சம்பூரணமாய்க் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைக்க வேண்டும்,”

என்கிறார். மாரநாதா சீக்கிரமாய் வாரும். ஆமென்.

Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago