விருந்துக்கு அழைப்பு:
லூக்கா 14 : 16 – 24 “அதற்கு அவர்: ஒரு மனுஷன் பெரியவிருந்தை ஆயத்தம்பண்ணி, அநேகரை அழைப்பித்தான்.”
“விருந்து வேளையில் தன் ஊழியக்காரனை நோக்கி: நீ அழைக்கப்பட்டவர்களிடத்தில் போய், எல்லாம் ஆயத்தமாயிருக்கிறது, வாருங்கள், என்று சொல்லென்று அவனை அனுப்பினான்.”
ஐசுவரியவானான ஒரு மனுஷன் ஒரு பெரிய விருந்தைக் கொடுக்கிறான். இந்த விருந்துக்காக எஜமான் பல மாதங்களுக்கு முன்னே திட்டமிட்டிருக்க வேண்டும். அந்த விருந்துக்குத் தனிப்பட்ட விதத்தில் அநேகருக்கு அழைப்பைக் கொடுக்கிறான். அங்கு இரண்டு விதமான அழைப்பு கொடுக்கப்படுகிறது. முதலில் யார் யாருக்கு கொடுக்க வேண்டும் என்று தேர்வு செய்து கொடுத்தான். இரண்டாவது அழைப்பை உணவு ஆயத்தமாயிருப்பதாகக் கூறி விருந்துக்கு அழைக்கிறார். பரலோக விருந்தில் அழைக்கப்பட்டவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். அழைப்பு பெரும்பாலும் ஊழியக்காரர் மூலமாகவே வரும். அவர்களே நற்செய்தியை அறிவிக்கும் உரிமையாளர்கள். அழைப்புக் கிடைக்காதவர்கள் விருந்தில் நுழைய முடியாது.
அழைத்தவர்கள் கூறிய சாக்குப்போக்கு:
லூக்கா 14 : 18 – 20 “அவர்களெல்லாரும் போக்குச்சொல்லத் தொடங்கினார்கள். ஒருவன்: ஒரு வயலைக்கொண்டேன், நான் அகத்தியமாய்ப்போய், அதைப் பார்க்கவேண்டும், என்னை மன்னிக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்.”
“வேறொருவன்: ஐந்தேர்மாடு கொண்டேன், அதைச் சோதித்துப் பார்க்கும்படி போகிறேன், என்னை மன்னிக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்.”
“வேறொருவன்: பெண்ணை விவாகம் பண்ணினேன், அதினால் நான் வரக்கூடாது என்றான்.”
அழைத்தவர்கள் அனைவரும் ஏதேதோ சாக்குபோக்குச் சொன்னார்கள். அது சாக்குப்போக்கு அல்ல. சாக்குப்போக்கு என்ற போர்வைக்குள்ளாக மறைத்துக் கூறப்பட்ட பொய். அதில் ஒருவன் ஒரு வயலை வாங்கியிருப்பதால் அதைப் பார்க்கப் போகிறேன், எனவே தன்னை மன்னிக்கும்படி வேண்டுகிறேன் என்றான். வயலை அவன் வாங்குமுன் நிச்சயமாக அதைப் பார்த்துத்தான் வாங்கியிருக்க வேண்டும். எனவே அவன் சொன்னது பொய் என்றறிகிறோம். அவனுக்கிருந்த பொருள்மேல் ஆசை அவனது அழைப்பை நிறைவேற்றாதபடி தடை சொல்ல வைத்தது. அடுத்தவன் தான் ஐந்து ஏர்மாடு வாங்கியிருப்பதாகவும், அதைச் சோதித்துப் பார்க்கப் போவதாகவும் அதனால் தன்னை மன்னிக்கும்படி வேண்டினான். ஏர்மாடு வாங்கும்போது சோதித்துப் பார்த்துத்தான் வாங்கியிருக்க வேண்டும். இவன் சொன்னதும் பொய் என்றறிகிறோம். அவனுக்கு வேலை மேலிருந்த ஆர்வம் அவனை அழைப்புக்குச் செல்லாதபடி தடை விதித்தது. மூன்றாவது நபர் தான் திருமணம் பண்ணியிருப்பதால் வரக்கூடாது என்றான். யூதர்களின் சட்டம் விவாகம் பண்ணினவுடன் போருக்குத்தான் போகாமலிருக்கலாம். ஆனால் திருமணத்துக்கு கூட்டிச் செல்ல எந்தத் தடையுமில்லை. எல்லோருடைய சாக்குப்போக்கிலும் இதுவே மிகவும் பலவீனமானது. இவன் நினைத்திருந்தால் மனைவியைக் கூட்டிப் போயிருக்கலாம். இவனுக்கு உறவின் மேலிருந்த ஆசை தடையைக் கொண்டு வந்தது. இதில் எவருமே விருந்துக்கு வரமாட்டேன் என்று நேரடியாகக் கூறாமல் தான் வரமுடியாது என்பதை மறைத்து அதற்குக் காரணமும் சொல்லி உதாசீனப் படுத்துகின்றனர். அவர்களுக்கு மீண்டும் அழைப்பு கிடைப்பதில்லை.
அழைப்பு வந்ததும் ஏற்றுக்கொள்ளும் மக்களுக்கே நித்திய வாழ்வு கிடைக்கும். அழைப்பை நிராகரிப்பவர்களைத் தேவனும் நிராகரிக்கிறார். இயேசு என்னும் ஆட்டுக்குட்டி அடிக்கப்பட்டு மாபெரும் மீட்பின் விருந்து தயாராகிக் கொண்டிருக்கிறது. அந்த விருதுக்கான அனுமதி இலவசமாய் வழங்கப்படுகிறது. அந்த விருந்தை நிராகரிப்பவர்கள் தேவனின் தியாகத்தையும், மீட்பின் திட்டத்தையும் முழுமையாக புறக்கணிப்பவர்களாகின்றனர். யூதர்கள் தேவன் கொடுத்த அழைப்பை நிராகரித்தனர். மத்தேயு 3 : 2ல் யோவான்ஸ்நானகன் கூறியதையும் அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அதேபோல் இயேசுவையும் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இயேசுவின் அழைப்பை அசட்டைபண்ணி, அவருடைய சுவிசேஷத்தையும் அலட்சியம் பண்ணினார்கள். இந்த உவமை அன்றைய யூதர்களுக்கு பொருத்தமாக அமைந்தது போன்று, இன்றைய கிறிஸ்தவர்கள் பலருக்கும் பொருத்தமாக அமைந்துள்ளது. மனம் திரும்பும்படியும், நீரினாலும், ஆவியினாலும் பிறக்கும்படியும், சுவிசேஷ பணிகளைச் செய்யும்படியாகவும் கர்த்தர் கொடுத்த அழைப்பை ஏதேனும் காரணத்தைச் சொல்லி ஏற்றுக்கொள்ளாமல் இருக்கிற அநேகர் இன்றும் உள்ளனர். அவர்களுடைய மனதை பிசாசு திசை திருப்புகிறான். பிசாசானவன் அவர்களுடைய கண்கள் தேவனிடம் திரும்பாதபடி, இரட்சிப்பை உணரமுடியாதபடி குருடாக்கி வைத்திருக்கிறான். இருளடைய பண்ணியிருக்கிறான். ஒரு காலம் உண்டு, அதன்பின் அழைப்பு கிடைப்பதில்லை. நிராகரித்தவர்கள் விலக்கப்படுகின்றனர். அவர்களுக்கு மீண்டும் அழைப்பு கொடுக்கப்படுவதில்லை.
எஜமான் ஊழியக்காரனுக்குக் கொடுத்த கட்டளை:
லூக்கா 14 : 21 – 22 “அந்த ஊழியக்காரன் வந்து, இவைகளைத் தன் எஜமானுக்கு அறிவித்தான்; அப்பொழுது வீட்டெஜமான் கோபமடைந்து, தன் ஊழியக்காரனை நோக்கி: நீ பட்டணத்தின் தெருக்களிலும் வீதிகளிலும் சீக்கிரமாய்ப்போய், ஏழைகளையும் ஊனரையும் சப்பாணிகளையும் குருடரையும் இங்கே கூட்டிக்கொண்டுவா என்றான்.”
“ஊழியக்காரன் அப்படியே செய்து: ஆண்டவரே, நீர் கட்டளையிட்டபடி செய்தாயிற்று, இன்னும் இடம் இருக்கிறது என்றான்.”
எஜமானின் ஊழியக்காரன் அவர்கள் கூறிய சாக்குப் போக்குகளை தன்னுடைய எஜமானனிடம் அறிவித்தான். இதனால் எஜமான் மிகவும் கோபமடைந்தான். எஜமான் தான் அழைத்தவர்கள் கூறிய சாக்குப் போக்குகளையும், அவர்கள் தன்னை உதாசீனப்படுத்தியதையும் பார்க்கிறான். எனவே விருந்தை ரத்து பண்ண மாட்டேன், அவர்கள் வராவிட்டால் பரவாயில்லை, நீ போய் பட்டணத்தின் தெருக்களிலும், வீதிகளிலும், உள்ள ஏழைகளையும், ஊனரையும், சப்பாணிகளையும் இங்கே கூட்டிக்கொண்டு விருந்துக்கு அழைத்து வா என்று கூறினார். இயேசு காணாமல் போனவர்களைத் தேடி வந்தார் என்ற கருத்து இங்கே நிறைவேறுவதைப் பார்க்கிறோம். எருசலேமைச் சுற்றி வரி வசூலிப்பவர்களும், ஏழைகளும் இருந்தனர். அங்கு பரிசேயர்கள் ராஜ்ஜியத்தைப் புறக்கணித்தனர். அங்கு சுவிசேஷத்தை ஏற்றுக்கொண்ட ஏழை ஜனங்களைக் கூட்டி வரச் சொன்னார். இதற்கு முன் முடவனையும் ஊனனையும் கூட்டிக் கொண்டு வா என்றார். பழையஏற்பாட்டு காலத்தில் ஊனனும், சப்பாணியும் தேவாலயத்தில் வந்து ஆராதிக்க முடியாது. ஆரோனுடைய குடும்பத்தில் கூட இப்படிப்பட்டவர்கள் இருந்தாலும் அவர்களும் உள்ளே வரமுடியாது. ஆனால் இயேசுவோ எல்லோருக்கும் அழைப்பு கொடுக்கிறார். ஊனனும், சப்பாணியும் நாங்கள் அங்கு வருவதற்கு தகுதியற்றவர்கள் என்கின்றனர். அந்தத் தாழ்மையைத்தான் இயேசு விரும்புகிறார். அப்படியே எஜமான் சொன்னபடி ஊழியக்காரன் தெருக்களிலும் வீதிகளிலும் உள்ள ஏழைகளையும், ஊனரையும் சப்பாணிகளையும் அழைப்பு மட்டும் கொடுக்காமல் கையோடு கூட்டி வரும் முயற்சியில் ஈடுபடுகிறான். அதேபோல் அவர்களை அழைத்துக் கொண்டு வந்து, இன்னும் இடம் இருக்கிறது என்றான். தேவன் கொடுக்கிற பெரிய விருந்தாகிய பரலோக ராஜ்யத்திற்குள் அநேகர் பிரவேசிக்க இடம் இருக்கிறது.
மறுபடியும் எஜமான் கொடுத்த கட்டளை:
லூக்கா 14 : 23, 24 “அப்பொழுது எஜமான் ஊழியக்காரனை நோக்கி: நீ பெருவழிகளிலும் வேலிகளருகிலும் போய், என் வீடு நிறையும்படியாக ஜனங்களை உள்ளே வரும்படி வருந்திக் கூட்டிக்கொண்டுவா;”
“அழைக்கப்பட்டிருந்த அந்த மனுஷரில் ஒருவனாகிலும் என் விருந்தை ருசிபார்ப்பதில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றான் என்று சொன்னார்.”
திரும்பவும் எஜமான் ஊழியக்காரரை நோக்கி நீ வழிகளிலும் வேலிகளிலும் வீடு இல்லாமல் இருப்பவர்களை வருந்தி அழைத்துக் கொண்டு வா என்றார். தேர்வு செய்யப்பட்டவர்கள் அந்த அழைப்பை புறக்கணித்தனர். அந்த அழைப்பிற்கு தகுதி இல்லாதவர்கள் அழைப்பை ஏற்றுக்கொண்டனர். இயேசு மூன்றாவது மனிதராகப் பேசாமல் இதைப் பரிசேயரிடம் நேரடியாகச் சொல்லுகிறார் அவர்கள் இயேசுவை மறுதலித்தபடியினால் பரலோக ராஜ்ஜியத்திலிருந்து வெளியேற்றப்படுவீர்கள் என்றார். எஜமான் கொடுத்த விருந்தை அவமதித்தவர்கள் அந்த விருந்தில் இடம் பெறமாட்டார்கள் என்று பார்க்கிறோம். தேவனுடைய அழைப்பு மாறாதது. தேவனுடைய ராஜ்ஜியம் வரும்போது அங்கு முழுமையான இரட்சிப்பு இருக்கும். அந்த உயிர்த்தெழுதல் இருக்கும். நித்திய சமாதானம் கிடைக்கும் என்றார்.
உவமையின் கருத்து:
தேவன் மனிதனுக்கு இரட்சிப்பை கொடுப்பதற்கான விருந்தாக இது காணப்படுகிறது. இது நித்திய தேவனுடைய இராஜ்யமாகக் காணப்பட்டது. இது நீதிமானின் உயிர்த்தெழுதலைக் காண்பிக்கிறது. இது இயேசுவின் வருகையையும், பரலோக சந்தோஷத்தையும் காண்பிக்கிறது. இது மகிமையில் ஒரு பெரிய விருந்தாகக் காணப்படுகிறது. இந்த விருந்துக்கு முதலாவது அழைக்கப்பட்டவர்கள் யூதர்கள். அந்த யூதர்கள் தீர்க்கதரிசிகள் மூலமாகவும் இயேசுவின் மூலமாகவும் அழைக்கப்பட்டார்கள். முதலில் வருகிறேன் என்று சொன்னார்கள். ஆனால் இயேசுவைப் பிதா அனுப்பின பின் அந்த அழைப்பை அவர்கள் மறுதலித்து, அவர்கள் மேசியா வருவார் என்று காத்திருந்தார்கள். ஆனால் மேசியா வந்தபோது தீர்க்கதரிசிகளைக் கல்லெறிந்து கொன்றதைப் போல, இயேசுவையும் சிலுவையில் அறைந்து கொன்றனர். அவர்கள் தொடர்ந்து சாக்குப்போக்குச் சொன்னதால், தேவன் அவர்களை வெளியேற்றினார். அவர்கள் மேல் தேவ கோபாக்கினை வந்தது.
70 ஆம் நூற்றாண்டிலே தேவன் ரோம சாம்ராஜ்ஜியத்தினரைக் கொண்டு யூதர்களின் திட்டங்களையும் ஆலயங்களையும் அழித்துப்போட்டார். அப்பொழுது தெருக்களிலும் வீதிகளிலும் இருப்பவர்களை கூட்டிக் கொண்டுவா என்று கூறியதைப் போல ஒரு சின்ன கூட்டம் இயேசுவை விசுவாசித்தனர். அதில் கொஞ்சம் பெண்கள், கொஞ்சம் ஏழைகள், வரி வசூலிப்பவர்கள் மனந்திரும்பி இயேசுவை ஏற்றுக் கொண்டவர்கள் இருந்தனர். அவர்கள்தான் யூதரல்லாத புறஜாதி ஜனங்கள். அவர்களைத் தான் இயேசு கொடுக்கப்படப்போகிற விருந்திற்கு வருந்தி அழைக்கவேண்டும். இயேசுவின் அழைப்பை மறுதலித்தவர்கள், தேவனுடைய ராஜ்யத்தில் இடம்பெற மாட்டார்கள். அவர்கள் நித்தியத்தை சுதந்தரிக்கப் போவதில்லை. பிதாவாகிய தேவன் யாருக்கு அந்த விருந்தை ஆயத்தப்படுத்தி வைத்திருக்கிறார் என்றால் தன்னுடைய குமாரனை நேசிக்கிறவர்களுக்கு அந்த சுவிசேஷம் தேவனுடைய அழைப்பாய் இருக்கிறது. இந்த நாளில் தேவனுடைய ராஜ்யத்தின் அழைப்பு நமக்குக் கொடுக்கப்படுகிறது.
உலகத்தில் மூன்று வகையான மக்கள் இருக்கின்றனர். முதல் வகையினர் தாங்கள் ஏற்கெனவே நீதிமான்களாதலால் நிச்சயம் பரலோகம் செல்வோமென்ற கர்வத்தில் இருப்பவர்கள். இரண்டாவது வகையினர் மீட்பின் திட்டத்துக்கு வெளியே இருப்பவர்கள். அவர்களுக்கு அழைப்பு விடுவிக்கப்படும்போது அவர்களும் அதற்காகத் தயாராக வந்து விடுகின்றனர். மூன்றாவது வகையினர் தாங்கள் எதற்கும் லாயக்கற்றவர்கள் என்று புழுங்கிக் கிடப்பவர்கள். அவர்களுக்கு அழைப்பு விடுக்கும்போது அவர்களால் அதை நம்ப முடியவில்லை. அழைப்பு விடுக்கப்படுவதால் மட்டும் ஒருவர் மீட்பில் நுழைவதில்லை. அழைப்பை ஏற்றுக்கொண்டு பயணிக்கும்போது தான் இரட்சிப்பில் நுழைய முடியும். அழைப்புக்குச் செவி கொடுக்காத எவருமே இந்த விருந்தில் பங்கு கொள்வதில்லை. அழைப்பை நிராகரிக்கும் போது தேவகோபம் நம்மீது வந்துவிடும். அழைப்பு எளிமையானதல்ல. அது இயேசுவின் மரணத்தின் மீது உருவாக்கப் பட்டது. அதை நிராகரிப்பதென்பது தேவனின் அதிக பட்ச அன்பை உதாசீனம் செய்வது போலாகும். அதனால் தேவகோபம் வெளிப்படுகிறது. எல்லா ஏற்பாடும் செய்த பின்தான் அழைப்பு விடுக்கப்படுகிறது. அந்த விருந்துக்காக நாம் செய்ய வேண்டிய பணிகள் எதுவுமே இல்லை. அழைப்பை ஏற்பதும், அழைப்பின்படி நடப்பதும் மட்டுமே நாம் செய்ய வேண்டிய காரியங்கள்.
நாம் கற்றுக் கொண்டது:
அவர் உங்களுக்கு அழைப்பு கொடுத்திருக்கிறார். அதற்குச் சாக்குபோக்கு சொல்லாதீர்கள். சாக்குப் போக்குகள் தேவனுடைய ராஜ்ஜியத்தை விட்டுப் பிரிக்கிறதாயிருக்கிறது. தேவனுடைய ராஜ்ஜியத்திற்கு முதல் உரிமை கொடுக்க வேண்டும். தேவனுக்கு முன்னுரிமை கொடுப்போம். ஒவ்வொருவரும் இந்த உவமையில் இயேசுவிடம் செல்வதற்கு சாக்குப்போக்கு சொல்லாமல் தேவனுடைய அழைப்புக்கிணங்க நமது இருதயத்தைத் திறக்க வேண்டும். தேவன் இரத்தாம்பரம் விற்கிற லீதியாள் என்ற ஸ்திரீயின் இருதயத்தைத் திறந்ததைப் போல (அப்போஸ்தலர் 16 : 14), ரோம சிறையதிகாரியின் மனதைத் திறந்ததைப் போல (அப்போஸ்தலர் 16 : 30), நம்முடைய மனதை தேவன் திறக்கும்படி ஒப்புக்கொடுப்போம். கர்த்தராகிய இயேசுவே சீக்கிரமாய் வாரும் ஆமென்.
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…