இயேசு கூறிய உவமைகள் அனைத்தும் முக்கியமானவை. அவர் ஜனங்களோடு பேசும்போது அவர்கள் எளிதாகப் புரிந்து கொள்வதற்காக உவமைகளினால் பேசினார். பரலோகராஜ்ஜியமானது நித்தியமானது, சமாதானமானது, என்னென்றைக்கும் நிலைத்திருப்பது. அந்த ராஜ்ஜியம் நல்லமுத்துக்களைத் தேடுகிற வியாபாரிக்கு ஒத்ததாக இருக்கிறது என்று இயேசு இந்த உவமையில் கூறியிருக்கிறார். இதை மத்தேயு 13 : 45, 46ல் காணலாம். 

தேடுகிற வியாபாரி:

மத்தேயு 13 : 45, 46 “மேலும், பரலோகராஜ்யம் நல்ல முத்துக்களைத் தேடுகிற வியாபாரிக்கு ஒப்பாயிருக்கிறது.”

“அவன் விலையுயர்ந்த ஒரு முத்தைக் கண்டு, போய், தனக்குண்டான எல்லாவற்றையும் விற்று, அதைக் கொள்ளுகிறான்.”

பரலோகராஜ்யத்தை நல்ல முத்துக்களைத் தேடுகின்ற வியாபாரிக்கு ஒப்புமைப்படுத்தி இயேசு இந்த உவமையில் கூறியிருக்கிறார். இதில் விலை உயர்ந்த முத்து என்பது கர்த்தருடைய சபை அல்லது சபைக்குள் இருக்கும் நாம் என்றும், அதைக் கொள்ளுகிற வியாபாரி கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்றும் ஒப்புமைப்படுத்தி கூறப்பட்டுள்ளது. தேவன் சபையை தனது சுய இரத்தத்தால் சம்பாதித்தாரென்று அப்போஸ்தலர் 20 : 28ல் பார்க்கிறோம். வியாபாரியான இயேசுவானவர் விலையுயர்ந்த முத்தைப் பெற்றுக்கொள்ளும்படியாக தேவன் நம்மை அவருடைய அநாதி தீர்மானத்தின்படியே தெரிந்து கொண்டார். இதில் வியாபாரி நல்ல முத்துக்களைத் தேடித்தேடி விலையேறப்பெற்ற முத்தைக் கண்டுபிடிக்கிறான். எதையும் வேதம் 

மத்தேயு 6 : 33 “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; ….”

என்று இயேசு கூறியிருப்பதைப் பார்க்கிறோம். இயேசு நமது வாழ்க்கையில் தேவனுடைய ராஜ்ஜியத்திற்கே முதலிடம் கொடுக்க வேண்டும் என்று கட்டளையிட்டிருப்பதைப் பார்க்கிறோம். எனவே நாமும் உலகத்துக்குரிய எல்லாவற்றையும் விட்டு அந்த ராஜ்ஜியத்தில் பிரவேசிக்கப் பாடுபட வேண்டும். முத்தை எல்லோராலும் தேடிக் கண்டுபிடிக்க முடியாது. அதேபோல் பரலோக ராஜ்ஜியத்தையும் எல்லோரும் பார்க்க முடியாது. அங்கு எல்லோரும் செல்லவும் முடியாது. பரலோக ராஜ்யத்திற்குச் செல்லவும் அதன் பலனை அனுபவிக்கவும் சில தகுதிகள் வேண்டும். இதைத்தான் பேதுருவும், பவுலும்,

1 பேதுரு 1 : 18 19 “ உங்கள் முன்னோர்களால் பாரம்பரியமாய் நீங்கள் அநுசரித்து வந்த வீணான நடத்தையினின்று அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்படாமல்,”

“குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே. 

எபேசியர் 2 : 8 “கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு;”

ஆதாமின் பாவத்தினால் பாவத்திற்குள் இருக்கும் ஜனங்களை மீட்க பிதா தன்னுடைய ஒரே குமாரனை அனுப்பினார். 

யோவான் 3 : 16 “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.”

நமக்காக இயேசு செலுத்தப்பட்ட கிரயம் மிகவும் அதிகம். நாம் பாவத்தில் அழிந்து போகக்கூடாதென்பதற்காக அவர் கொடுத்த கிரயம்தான் அவருடைய ஜீவன். நாம் பரலோக ராஜ்ஜியத்தையடைய வேண்டுமானால் இரட்சிப்பைப் பெற வேண்டும். இரட்சிப்பு என்பது தேவன் கொடுக்கும் இலவச வெகுமதி. தேவனுடைய கிருபையினாலும், அவருடைய ஈவினாலும்தான் இரட்சிப்படைய முடியும் அடுத்ததாக அதற்குள் பிரவேசிக்க ஜலத்தினாலும் ஆவியினாலும் ஞானஸ்நானம் எடுக்க வேண்டும் (யோவான் 3 : 5). இவ்வாறு வேதத்தில் கூறப்பட்ட தேவநீதிகளை நிறைவேற்றும்போது சபைக்குள் இருக்கிற ஒவ்வொருவரும் விலையேறப்பெற்ற முத்துக்களாக மாறுவோம். 

முத்து

கடலுக்குள்ளிருக்கிற சிப்பிக்குள் முத்து உருவாகும். 10000 சிப்பிகளைத் தேடினால் அவைகளில் ஒரேயொரு சிப்பிக்குள் தான் முத்து இருக்கும். உருவாகும் சிப்பிக்குள் சிறு பூச்சியோ, மணலோ புகுந்து விட்டால் அது அந்த சிப்பிக்கு வேதனையைக் கொடுத்து உறுத்திக் கொண்டேயிருக்கும். அப்போது அது தன்னை உறுத்தாதபடிக்கு தன்னுடைய சரீரத்திலிருந்து ஒரு விதமான திரவத்தை உண்டுபண்ணி அதைச் சுற்றிக் கொண்டேயிருக்குமாம். இவ்வாறு உருவாக்கப்பட்டு வருவதுதான் முத்து. எனவே அது அத்தனை பாடுகள் அனுபவித்த பின் தான் அது முத்தாக மாறுகிறது. இக்காலத்திலும் முத்துக்கள் விலைமதிப்புள்ளதாய் இருக்கின்றன. முத்துக்கள் மிகவும் அழகானவை, அதன் அழகை யாராலும் கூட்ட முடியாது. அதுவாகவே அழகாக உருவாகி விடுகிறது. முத்துக்கள் குளிர்ச்சியானவை, பிரகாசமானவை. யாவராலும் விரும்பப்படுகிறவை. முத்துக்கள் கிடைப்பது மிகவும் அரிது. அதிலும் பெரிதான அழகிய முத்துக்கள் விலைமதிக்க முடியாததாக இருக்கும். முத்துக்குளிக்க அநேகர் கடலின் ஆழங்களுக்குச் சென்று முத்துக்களை எடுத்துக் கொண்டு வரும்போது உயிரிழந்திருக்கிறார்கள். 

அக்கிரமங்களினாலும், பாவங்களினாலும், மரித்தவர்களாயிருந்த நம்மை, யாரும் திரும்பிக்கூட பார்க்காத நம்மைத் தேவன் கண்டு அந்தப் பாவத்தை தன்னுடைய சொந்த சரீரத்தில் ஏற்றுக்கொண்டார். பாவம் அவருக்கு வேதனையைக் கொடுக்கும் காரியம். நமக்காக அவர் பாவமானார். அதற்காக தம்முடைய வெண்மையான நீதியை பாவியின் மேல் மூடினார். நாம் அவருடைய செய்கைகளாயிருக்கிறோமென்று பவுல் எபேசியர் 2 : 10ல் கூறியிருக்கிறார். அவருடைய அன்பினாலும், இரக்கத்தினாலும், கிருபையினாலும் நம்மை உயிர்பித்து உன்னதங்களில் அவரோடு கூட உட்கார வைத்திருக்கிறார் (எபேசியர் 2 : 1 – 7). பரலோகராஜ்ஜியம் செல்வதற்கு இடுக்கமான வாசல் வழியாகத்தான் செல்ல வேண்டியிருக்கிறது. பவுல் சீஷர்களிடம் அப்போஸ்தலர் 14 : 22ல் நாம் அநேக உபத்திரவங்கள் வழியாகத்தான் தேவனுடைய ராஜ்ஜியத்தில் பிரவேசிக்க வேண்டுமென்கிறார். இதேபோல் பவுல் கலாத்திய சபையைக் குறித்துக் கூறும் போது,

கலாத்தியர் 4 : 19 “என் சிறுபிள்ளைகளே, கிறிஸ்து உங்களிடத்தில் உருவாகுமளவும் உங்களுக்காக மறுபடியும் கர்ப்பவேதனைப்படுகிறேன்.” 

என்கிறார். ஒரு மனிதனுக்குள் கிறிஸ்து உருவாக்கப்படுவதென்பது கிறிஸ்துவின் திவ்யசுபாவங்களைக் காட்டுகிறது. அவருடைய தாழ்மை, பொறுமை, சாந்த குணம், அன்பு, அமைதலுள்ள ஆவி இவைகள் அனைத்தும் மனிதனுக்குள் உருவாக்கப்பட வேண்டியதாயிருக்கிறது. இவ்வாறுள்ள கிறிஸ்துவின் மகிமையை அடைய முத்துக்களைத் தேடுவதைப் போல நம்மைத் தேடிக் கண்டுபிடித்து அழைத்திருக்கிறார். வேதத்திற்குள் விலையேறப்பெற்ற ஆவிக்குரிய சத்தியங்கள் முத்தைப் போல் இருக்கின்றன. ஒவ்வொருவரும் இந்த ஆவிக்குரிய சத்தியத்தைத் தேட வேண்டும். வேதத்திலுள்ள ஒவ்வொரு வார்த்தையையும் வாசிக்கும் போது என்ன முத்து அதற்குள் மறைந்திருக்கிறது என்பதை ஆவியானவர் வெளிப்படுத்துவார். வேதத்தை வாசிக்க வாசிக்க ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகள் புறப்படும். 

முத்தின் வளர்ச்சி:

முத்து சின்னதாக இருந்து பெரிதாக வளர மூன்று வருடங்கள் ஆகுமாம். அதே போல் இயேசு தனக்கென்று சீஷர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை முத்துக்களாக மாற்ற மூன்றரை வருடங்கள் ஆனது. பவுலும் அதே போல் அரேபியாவில் போய் தேவனோடு தனித்திருந்து மூன்று வருடங்கள் கழித்து ஊழியத்திற்கு வந்ததாகக் கேள்விப்படுகிறோம். ஆவிக்குரிய காரியத்தில் வளர்ச்சி என்பது மிகவும் இன்றியமையாதது. தேவனுடைய பிள்ளைகளின் வாழ்க்கையில் வளருகிறது என்பது மிகவும் இன்றியமையாதது. தேவனுடைய பிள்ளைகளாகிய நாம் பரிசுத்தத்திலும், வேத வாசிப்பிலும், விசுவாசத்திலும், கர்த்தருக்கு கொடுப்பதிலும், ஐக்கியத்திலும், அன்பிலும், கர்த்தருக்கென்று பிரயாசப்படுவதிலும், தேவனை அறிகிற அறிவிலும் வளர வேண்டும் என்பதை 2 பேதுரு 3 : 18லும், மல்கியா 4 : 2லும் பார்க்கிறோம். 

உருவாகும் இடம்:

முத்தானது மறைவிலே உருவாகிறது. அதேபோல் நாமும் இரவும் பகலும் வேதத்தைத் தியானம் பண்ண வேண்டும். அந்தரங்க ஜெபம் நமக்கு மிகவும் முக்கியமானது. தேவனோடு தனியாகச் செலவிடும் நேரங்கள்தான் தேவன் நம்மை உருவாக்கும் நேரம். பரிசுத்தாவியின் நிறைவு நம்மில் காணப்பட வேண்டுமானால் அதற்குரிய மேன்மையான காரியங்கள் நமக்குள் காணப்பட வேண்டும். இயேசுவானவர் 12 வயதிலிருந்து 30 வயது வரை என்ன செய்தார் என்று வேதத்தில் கொடுக்கப்படவில்லை. அது ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் முக்கியமான காலம். முப்பதாவது வயதில் தான் இயேசுவைப் பார்த்து யோவான்ஸ்நானகன் இதோ பாவத்தை சுமந்து தீர்க்கிற ஆட்டுக்குட்டி என்று உலகத்துக்குக் காட்டினதைப் பார்க்கிறோம். இயேசுவினுடைய சகோதரர்கள் இயேசுவைப் பார்த்து “தேவனுடைய அற்புதங்களை அந்தரங்கத்தில் செய்கிறீர். பிரபலமாயிருக்க விரும்புகிற எவனும் அந்தரங்கத்தில் ஒன்றையும் செய்ய மாட்டான் எனவே உலகத்துக்கு உம்மை வெளிப்படுத்தும் என்றும், எருசலேம் பண்டிகைக்குப் போய் அங்கே அவைகளைச் செய்யும்” என்றும் கூறியதை யோவான் 7 : 3 – 5ல் பார்க்கிறோம். ஆனால் அவர்கள் கூறியபடி இயேசு வெளியரங்கமாகப் போகாமல் அந்தரங்கமாகத் போனார் என்று யோவான் 7 : 10லும் பார்க்கிறோம். அதற்குக் காரணம் பிதா காட்டுகிற வழியில், அவர் கூறுகிற நேரத்தில் செல்ல வேண்டும் என்பதற்காக அவர்கள் கூறியபோது செல்லவில்லை. 

 முத்தைப் பெற வியாபாரி இழந்தது:

அந்த வியாபாரி முத்தை வாங்க விசேஷித்த விலைக்கிரயம் செலுத்த வேண்டியதாயிருந்தது. தனக்கு உண்டான யாவற்றையும் விற்று அதைப் பெற்றுக் கொள்ளுகிறான். இயேசு கண்டெடுத்த நாம் இயேசுவை விலையேறப்பெற்ற பொக்கிஷமாகப் பார்ப்பதைப் போல, நம்மையும் இயேசு விலையேறப்பெற்ற முத்தாகக் காண்கிறார். வியாபாரி எல்லாவற்றையும் விற்று முத்தைப் பெற்றதைப் போல இயேசு பரலோகத்தையும் அவருடைய மகிமையையும் துறந்தார். தன்னையே பலியாக ஒப்புக்கொடுத்து நம்மைப் பாவங்களறக் கழுவினார் என்பதை,

வெளிப்படுத்தல் 1 : 6ல் “நம்மிடத்தில் அன்புகூர்ந்து தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக.” பார்க்கிறோம். 

சிப்பிக்குள் முத்து உருவாவதற்கு சிப்பி கஷ்டப்படுவதைப் போல நம்மை பாவங்களற கழுவுவதற்கு கசையடிபட்டார். ஆணி கடாவப்பட்டார். முள் முடிசூட்டப்பட்டார், சிலுவையில் அறையப்பட்டார். ஏளனம் பண்ணப்பட்டார். அவமானப் படுத்தப்பட்டார்.

எபிரேயர் 11ஆம் அதிகாரத்தில் அநேக நல்ல முத்துக்களைப் பார்க்கிறோம். இந்த அதிகாரத்தில் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு தானியேல் என்று அனேக பரிசுத்தவான்களைப் பார்க்கிறோம். ஆனாலும் 11ம் அதிகாரத்தின் கடைசியில் அவர்கள் பூரணராகவில்லை. அந்த குறைவை நிறைவாக்கியதுதான் புதிய ஏற்பாட்டு சபை. (எபிரேயர் 11 : 13, 39, 40) அந்த சபை ஒரு முத்தாக இருக்கிறபடியால் நம்மை அதில் அழைத்திருக்கிறார். அந்த சபைக்காக இயேசு தன்னையே ஒப்புக்கொடுத்தார். ஆட்டுக்குட்டியானவரின் கலியாண நாள் வரப்போகிறது. இயேசு தன்னை அதற்குக் காணிக்கையாகப் பலியாக ஒப்புக்கொடுத்தார் என்பதை பவுல்,

எபேசியர் 5 : 1, 2 “ஆதலால், நீங்கள் பிரியமான பிள்ளைகளைப்போல தேவனைப் பின்பற்றுகிறவர்களாகி,”

“கிறிஸ்து நமக்காகத் தம்மை தேவனுக்குச் சுகந்த வாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புகூர்ந்ததுபோல, நீங்களும் அன்பிலே நடந்துகொள்ளுங்கள்.”

கிறிஸ்து சபையின் மேல் மிகுந்த அன்பு வைத்திருந்தார். சிலுவையை சகித்தார், தன்னை வெறுமையாக்கினார், அடிமையின் ரூபமெடுத்து மனுஷ சாயலாக மாறி, சிலுவையின் மரணபரியந்தம் கீழ்படிந்து, தன்னைத் தாழ்த்தினார் என்று பிலிப்பியர் 2 : 5ல் பார்க்கிறோம். தேவனுடைய மணவாட்டி என்ற ஒருத்திதான் மகிமையுள்ள சபையாக இருக்கிறது. இந்த மகிமையுள்ள சபைக்கு பிதாவானவர் தமது குமாரனைக் காணிக்கையாகக் கொடுத்தார் (எபேசியர் 5 : 27). இயேசு சிலுவையில் அறையப்பட்டு, அடக்கம் பண்ணப்பட்டு உயர்த்தெழுந்து நாற்பதாவது நாளில் பரலோகம் போனார். அங்கு போய் பரிசுத்த ஆவியை அனுப்பினார். ஜனங்கள் பரிசுத்தாவியின் அபிஷேகம் பண்ணப்பட்டபின்தான் சபை உருவானது. நாம் அந்த சபைக்குள் இருக்கிறோம். வெளிப்படுதல் 12 : 1ல் கூறப்பட்டுள்ள வானத்தில் நின்று கொண்டிருக்கிற ஒரு ஸ்திரீக்குள்தான் ஒரு ஆண்பிள்ளை உருவாகிக் கொண்டிருக்கிறது என்று பார்க்கிறோம். அந்த ஆண் பிள்ளைதான் அவருடைய சிங்காசனத்திற்கு எடுத்துக் கொண்டு போகப் போகிறவர். அந்த ஆண் பிள்ளையின் பெயர்தான் மகிமையுள்ள சபை. கிறிஸ்துவின் பரிபூரணத்தைப் பெற்றுக்கொண்ட சபை. அவள்தான் கற்புள்ள கன்னிகை. தேவன் தன்னையே பலியாக ஒப்புக் கொடுத்து அந்த ஆண் பிள்ளைக்காக தமது மகிமையைக் கொடுத்தார். ஒருமனப்பாட்டில் நாம் தேறினவர்களாகக் காணப்பட தேவன் இயேசுவுக்கு கொடுத்த மகிமையை நமக்குக் கொடுத்தார். தேவனுடைய பிள்ளைகள் மகிமையின் மேல் மகிமையடைந்து, மேன்மை அடைந்து தன்னை மறுரூபப்படுத்திக் கொள்ள வேண்டும். புதிய ஏற்பாட்டு சபைக்கு இயேசு கொடுத்த பொக்கிஷம் பரிசுத்த ஆவி. ஒரு நாள் வரும் கிறிஸ்து மகிமையில் வெளிப்படும்போது நாமும் அவரோடு மகிமையில் வெளிப்படப் போகிறோம். 

வேதத்திலுள்ள சில பரிசுத்தவான்கள்: 

ஆபிரகாமைத் தேவன் அழைக்கிறார். வீட்டையும், தன் இனத்தையும், தேசத்தையும் விட்டு தேவன் காண்பிக்கிற தேசத்துக்குப் போனான். தான் போகிற இடம் இன்னதென்று அறியாமலே போனான் (எபிரேயர் 11 : 8). அதனால் தேவனாகிய பொக்கிஷத்தைப் பெற்று, அவர் சொற்படி நடந்ததால் எல்லோருக்கும் ஆசீர்வாதமாக இருந்தான். விசுவாசத்தின் தகப்பனானான். அது லேசான காரியம் அல்ல. தன் மகனையே பலியாகக் கொடுக்கத் துணிந்தான் (எபிரேயர் 11 : 17). 

ரூத் சகோதரியோடு திரும்பிப் போவதைப் பார்க்கிலும், தன் குடும்பத்தோடு இருப்பதைப் பார்க்கிலும், தன் சொந்த தேசத்திற்குப் போவதைப் பார்க்கிலும், நகோமியோடு தேவனுடைய தேசத்துக்குப் போவது நல்லது என்பதைக் கண்டு தேவனுடைய நகரத்துக்குச் சென்று ஆசீர்வதிக்கப்பட்டாள். அவளுடைய சந்ததியில் இயேசு பிறந்தார். எல்லாப் பெண்களைப் போலல்லாமல் ரூத் காணப்பட்டு வேதத்தில் இடம் பெற்றாள் (ரூத் 1 : 16). இவர்கள் இருவரையும் தேவன் முத்தாகக் கண்டெடுத்து ஆசீர்வதித்தார்.

நோவா காணாதவைகளைக் குறித்து எச்சரிப்பு பெற்றான். அவன் ஒரு சாதாரண மனிதனாக இருந்தவன். திடீரென்று அவனுக்குள் ஒரு வெளிச்சம் தோன்றுகிறது. தேவன் பேசுகிறார். தன் குடும்பத்தை இரட்சிப்பதற்காக, தான் அழிவிலிருந்து காக்கப்பட, சமுதாயத்தை உதறித் தள்ளுகிறான். எல்லோரும் அவனைப் பார்த்துக் கேலி பண்ணியிருக்கலாம். அது மதியீனமான காரியம் என்று சொல்லியிருக்கலாம். நோவா 120 ஆண்டுகளாக பேழை செய்தான். 7 நாட்கள் வரை மழை வராமல் பேழைக்குள்ளேயே இருந்தான். தேசம் அழியப்போகிறது. ஆனால் தேவன் மீட்பார் என்று நம்பினான். எல்லாவற்றையும் தள்ளி விட்டு காணாதவைகளைக் குறித்து எச்சரிப்பு பெற்று, பயபக்தி உள்ளவனாய் தேடிக்கொண்டே போகிறான். அதனால் அவனுக்கு முத்து கிடைக்கிறது. அவன் முத்தைக் கண்டு பிடிப்பதற்கு அவனுக்கிருந்த சொத்தை இழந்தான். ஆனால் அவன் பேழையை விட்டு இறங்கிய போது பெற்றுக் கொண்டது இந்த உலகமே அவனுடைய காலடியில் இருந்தது. பவுல் தன்னுடைய நிருபத்தில் 

பிலிப்பியர் 3 : 10, 11ல் “இப்படி நான் அவரையும் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும், அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் அறிகிறதற்கும், அவருடைய மரணத்திற்கொப்பான மரணத்திற்குள்ளாகி, எப்படியாயினும் நான் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்திருப்பதற்குத் தகுதியாகும்படிக்கும்,

“அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன்; குப்பையுமாக எண்ணுகிறேன்.”

என்று கூறுவதைப் பார்க்கிறோம். உலகத்தின் மேன்மைகளை பவுல் அப்போஸ்தலன் குப்பையாக எண்ணுகிறான். அதனால் அவன் தேவனால் அபரீதமான வகையில் ஆசீர்வதிக்கப்பட்டான். 

நாம் அறிய வேண்டிய கருத்து:

நாம் தேவனால் அழைக்கப்பட்டிருந்தால் சாதாரண ஜனங்களைப் போல் இருக்க முடியாது. நாம் நல்ல முத்துக்களைத் தேடுகிற வியாபாரியைப் போல நல்ல முத்துக்களைத் தேடுகிற ஊழியக்காரனாக, ஊழியக்காரியாக பாடுபட வேண்டும். 

மத்தேயு 25 : 13ல் “மனுஷகுமாரன் வரும் நாளையாவது நாழிகையையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள்.” 

என்று இயேசு தன வாயால் கூறியிருப்பதைப் பார்க்கிறோம். இயேசு பூமிக்குத் திரும்ப வரப்போகும் நாளை நாம் அறியாததால் விழித்திருந்து காத்திருப்போம். நம் கையில் கொடுக்கப்பட்டிருக்கிற பொக்கிஷமாகிய வேதம் விலையேறப்பெற்றது. தேவன் நமக்குத் தரப்போவது நித்திய வாழ்க்கை, ஜீவ கிரீடம். நாம் மறுமைக்குள் கடந்து போகும்போது நாம் பெற்றுக்கொள்ளுகிறவைகள் பெரிதானவைகள். தேவனுடைய வார்த்தையினால்தான் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறோம். விலையேறப்பெற்ற முத்துக்களைத் தேடுகிறதுபோல சத்தியத்தைத் தேடுவோம். வேதமாகிய முத்திலிருந்து வெளிச்சத்தையும் வெளிப்பாடுகளையும் பெற தேவனிடம் மன்றாடி நம்முடைய வாழ்க்கையை தேவனுக்கென்று அர்ப்பணிப்போம்.

Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago