கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தேவவார்த்தைகளைப் போதிக்கும்போது மக்கள் மனதில் எளிதாகப் பதியும்படி உதாரணங்களோடும், உவமைகளோடும் விவரித்துக் காட்டினார். எனவே அவருடைய செய்திகள் பாமரமக்கள் கூட எளிதாகப் புரிந்து கொள்ளும்படியாக இருந்தன. இந்த உவமை வரப் போகிற நியாயத்தீர்ப்பைக் குறிக்கிறது. இதில் இயேசு “அப்பொழுது” என்று ஆரம்பிக்கிறார். இதற்கு முந்தின வசனங்களிலிருந்து நாம் பார்க்கும்போது மரணம் என்பது தேவனால் நியமிக்கப்பட்ட ஒன்று. அதற்கு காரணம் தேட வேண்டாம். கிறிஸ்தவ விசுவாசியின் மரணமென்பது ஆசீர்வாதத்துக்குப் போகவிருக்கும் ஒரு வாசலாகும். நாம் உயிரோடிருப்பதற்குக் காரணம் மனந்திரும்ப வேண்டுமென்பதுதான். இந்த உவமை நற்கனி தருவதைக் குறிக்கிறது. எருசலேமின் குடிகளுக்கும், யூதாவின் மக்களுக்கும் கூறப்பட்ட இந்த உவமை உலகிலுள்ள கிறிஸ்தவர்களுக்கும் பொருத்தமானது. இதை லூக்கா 13 : 6 – 9 ல் காணலாம்.
எஜமானின் திராட்சைத் தோட்டத்தில் அத்திமரம்:
லூக்கா 13 : 6 – 7 “அப்பொழுது அவர் ஒரு உவமையையும் சொன்னார்: ஒருவன் தன் திராட்சத் தோட்டத்தில் ஒரு அத்திமரத்தை நட்டிருந்தான்; அவன் வந்து அதிலே கனியைத் தேடினபோது ஒன்றுங் காணவில்லை.”
“அப்பொழுது அவன் தோட்டக்காரனை நோக்கி: இதோ, மூன்று வருஷமாய் இந்த அத்திமரத்திலே கனியைத் தேடிவருகிறேன்; ஒன்றையுங் காணவில்லை, இதை வெட்டிப்போடு, இது நிலத்தையும் ஏன் கெடுக்கிறது என்றான்.”
ஒருவன் தன்னுடைய திராட்சைத் தோட்டத்தில் தோட்டக்காரன் மூலமாக ஒரு அத்தி மரத்தை நட்டு வைத்திருந்தான். பொதுவாக திராட்சைத் தோட்டத்தில் யாரும் அத்தி மரத்தை நடுவதில்லை. எஜமான் இதை எதற்காக நட்டு வைத்தானென்று தெரியவில்லை. ஒருவேளை அத்திப்பழம் வேண்டுமென்று நினைத்து எஜமான் அதை நட்டிருப்பான். அதற்காகப் பிரயாசமும் பட்டிருப்பான். உடனே அதில் கனியைத் தேடாமல் காத்திருந்தான். இதைத் தான் ஏசாயா,
ஏசாயா 5 : 1, 2 “….என் நேசருக்கு மகா செழிப்பான மேட்டிலே ஒரு திராட்சத்தோட்டம் உண்டு.”
“அவர் அதை வேலியடைத்து, அதிலுள்ள கற்களைப் பொறுக்கி, அதிலே நற்குல திராட்சச்செடிகளை நட்டு, அதின் நடுவில் ஒரு கோபுரத்தைக்கட்டி, அதில் ஆலையையும் உண்டுபண்ணி, அது நல்ல திராட்சப்பழங்களைத் தருமென்று காத்திருந்தார்; அதுவோ கசப்பான பழங்களைத் தந்தது.”
என்று கூறினார். யூதாவை நீதியுள்ளதும், கனியுள்ளதுமான தேசம் ஆக்குவதற்கு தேவன் தம்மால் இயன்ற எல்லாவற்றையும் செய்கிறார் என்பதை இந்த திராட்சைத் தோட்டத்தைக் குறித்த பாடல் விளக்குகின்றது. தான் விரும்புகின்ற மாற்றத்தை அவர்கள் அடையாதபோது, தனது திராட்சைத் தோட்டத்தைத் தேவன் அழித்துப் போடுவார் என்று ஏசாயா கூறுகிறார்.
இந்த உவமையில் திராட்சைத் தோட்டம் என்பது திருச்சபையைக் குறிக்கிறது. தோட்டக்கார எஜமான் என்பது பிதாவைக் குறிக்கிறது. கனி இல்லாத அத்திமரம் இஸ்ரவேலின் ஒரு அடையாளச் சின்னமாக இருக்கிறது. அது இஸ்ரவேல் தேசத்திலிலுள்ள விசுவாசிகளைக் குறிக்கிறது. எஜமான் அந்த தோட்டத்திற்கு வந்து திராட்சைச் செடியில் கனியைத் தேடாமல் அத்திமரத்தில் கனியைத் தேடுகிறார். அதில் கனி இல்லாததைப் பார்த்த போது ஏமாற்றமடைகிறான். முதலில் அத்திமரமானது அவருடைய பார்வையில் சிறப்பான இடத்தைப் பெற்றிருந்தது. ஆனால் அதில் எஜமான் நினைத்தபடி கனி கொடுக்காததால் தோட்டக்காரனைப் பார்த்து மூன்று வருடமாய் கனிகளேயில்லை, எனவே இதை வெட்டிப்போடு, இது நிலத்தை கெடுத்துக் கொண்டிருக்கிறது என்று கூறினான். தோட்டக்காரனாகிய இயேசு “இன்னும் ஒரு வருஷம் இருக்கட்டும் அவர்கள் மனம்மாற நான் உழைக்கிறேன்” என்று சொல்லுகிறவராயிருக்கிறார். கர்த்தராகிய இயேசுகிறிஸ்து நம் ஒவ்வொருவரிடமும் ஆவியின் கனியைத் தேடி வருகிறார். நம்மிடத்தில் கனிதேடி வந்தால் நாம் கனி கொடுக்கிற அத்திமரமாக இருக்க வேண்டும். பயனுள்ளதாக இருந்தால் அழிக்கச் சொல்லியிருக்க மாட்டார். கனி கொடுக்கும்போது அதை எடுத்துக்கொள்ளவும், கனி கொடுக்காமலிருக்கும் போது அதை வெட்டிப் போடவும் எஜமானுக்கு எல்லா உரிமையும் உண்டு.
இந்த அத்திமரம் சபைக்கு நிழலாட்டமாகவும், சபைக்குள்ளிருக்கிறவர்களுக்கு நிழலாட்டமாகவும் உள்ளது. இஸ்ரவேல் ஜனங்கள் தேவனுடைய பார்வையில் சிறப்பான இடத்தைப் பெற்றிருந்தனர். அதனால் அவர்களுடைய ஆவியில், ஆத்மாவில், சரீரத்தில் கனி கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அதைச் செய்யவில்லை. இஸ்ரவேலர்கள் ஏன் கனி கொடுக்கவில்லையென்றால் ஆபிரகாம் முதல் இயேசு வருகிறவரை அற்புதங்களைச் செய்து தேவன் இஸ்ரவேல் ஜனங்களுக்கு கிருபையளித்தார். அதனால் இஸ்ரவேலர் எங்களுக்குத்தான் அந்தக் கடவுள், நாங்கள்தான் ஆபிரகாமின் வம்சம், எங்களுக்குத் தான் நியாயப்பிரமாணம், நாங்க மட்டும்தான் கடவுளின் மக்கள், எங்களுக்குத்தான் பாலும் தேனும் ஓடுகிற தேசம், நாங்கள்தான் ஆசாரியர்கள், யாருக்கும் இதில் பங்கு கிடையாது, வேறு யாருக்கும் இதில் உரிமை கிடையாது, என்ற எண்ணத்திலிருந்தனர். தேவாலயத்தில் ஒரு பகுதியிலுள்ள பிரகாரம் புறஜாதியாருக்காக ஒதுக்கப்பட்டது. அதைத்தான் அவர்கள் வியாபார ஸ்தலமாக மாற்றினார்கள். வெளியூரில் இருந்து வருகிறவர்கள் அந்த ஊரில் உள்ள பணங்களை இந்த ஊர் காணிக்கைப் பெட்டியில் போடக்கூடாது. அதை யூத காசாக மாற்றி அதன்பின் போட வேண்டும். பலிகள் செலுத்துவதற்குக் கூட பலிகளுக்கு வேண்டிய மிருகங்களை இங்குதான் வாங்க வேண்டும் என்று சட்டம் இயற்றியிருந்தனர். அப்போஸ்தலர் 8ஆம் அதிகாரத்தில் கந்தாகே ராஜஸ்ரீயின் மந்திரி வருகிறான். அவனால் ஆலயத்துக்குள் போக முடியவில்லை. அதற்காகத்தான் இயேசு அந்த தேவாலயத்தை சுத்திகரித்தார். மனம் திரும்பாமல் போனால் எல்லோரும் கெட்டுப் போவீர்கள் என்றார். இஸ்ரவேல் மக்கள் தேவனுக்குப் பயந்து வாழும்போது அவர்களுக்கு ஆசீர்வாதத்தையும், அவர்கள் கீழ்ப்படியாமல் போகும்போது தண்டனையையும் ஏற்கனவே தேவன் அறிவித்திருந்தார்.
அதேபோல் நம்மையும் தேவன் தெரிந்தெடுத்து நம்முடைய பாவங்களை அவருடைய இரத்தத்தினால் கழுவி, இரட்சிப்படைய வைத்து அவருக்குள் நட்டு உருவாக்குகிறார். நம்மை சபைக்குள்ளும் வைத்திருக்கிறார். தேவன் நம்மை உருவாக்கியதற்கு ஒரு நோக்கமுண்டு. அதென்னவெனில் நாம் தேவஜனங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும்படியாகவும், தேவன் நம்மிடம் எதிர்பார்க்கும் நல்ல கனியைக் கொடுக்கும்படியாகவும் வைத்திருக்கிறார். யோசேப்பைத் தேவன் எகிப்துக்கு அனுப்பியதற்குக் காரணம் தேவ ஜனங்களை உயிரோடு காக்கவும், ஜீவரட்சணை செய்யவும்தான். மோசேயின் வாழ்க்கையில் அவனை அரண்மனையில் வளர வைத்ததற்கு ஒரு நோக்கமிருந்தது. யாக்கோபுக்கு ஒரு சொப்பனத்தைக் காட்டியதற்கு ஒரு நோக்கமிருந்தது. பவுலின் வாழ்க்கையில் அவனை இயேசு சந்தித்ததற்கு ஒரு நோக்கமிருந்தது. தேவன் விரும்புவதை நாம் செய்யவில்லை என்றால் நாம் கெட்டுப்போவோம். நாம் தேவன் நம்மிடம் எதிர்பார்க்கும் தெய்வீக சுபாவங்களை வெளிப்படுத்தாமல் சபைக்குள் இருந்து கொண்டிருப்போமென்றால் நாம் கெட்டுப்போவது மட்டுமல்லாமல் மற்றவர்களையும் கெடுக்கிறவர்களாக இருப்போம். எனவே கர்த்தருடைய ராஜ்யத்தில் நாம் நம்மை சுத்திகரித்துக் கொண்டு தேவன் எதிர்பார்க்கும் நல்ல கனியைக் கொடுக்க வாஞ்சிக்க வேண்டும். ஏதாவது செய்து நீங்கள் பயன்பட வேண்டும்.
கனி கொடாவிட்டால் வரும் நியாயத்தீர்ப்பு:
மத்தேயு 3 : 10ல் “இப்பொழுதே கோடரியானது மரங்களின் வேர் அருகே வைத்திருக்கிறது. ஆகையால் நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும்.” என்றும் யோவான்,
யோவான் 15 : 2ல் “என்னில் கனிகொடாதிருக்கிற கொடி எதுவோ அதை அவர் அறுத்துப்போடுகிறார்; கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார்.” என்றும் கூறுகிறார்.
உண்மையான விசுவாசிகள் முடிவில் விசுவாசத்தை விட்டுவிட்டு அவரில் நிலைத்திராமல் போனால் நரகத்தில் நித்திய அக்கினியில் எறியப்படுவார்கள் என்று யோவான்ஸ்நானகன் கூறினார். கனி கொடுப்பதை நிறுத்திவிடும் கொடிகள் கிறிஸ்துவில் நிலைத்த விசுவாசமும், அன்பும் கொள்வதால் வரக்கூடிய ஜீவன் தங்களில் இல்லாமற் போனதால் இந்தக் கொடிகளைப் பிதா அறுத்து விடுகிறார். கனி கொடுக்கும் கொடிகள் கிறிஸ்துவில் நிலைத்திருக்கும் அன்பும், விசுவாசமும் கொண்டிருப்பதால் அவைகள் தங்களில் ஜீவன் உள்ளதாக இருக்கும். இந்தக் கிளைகளைப் பிதா அதிக கனிகளைக் கொடுக்கும்படி சுத்தம் பண்ணுகிறார் என்று இயேசு கூறியிருப்பதைப் பார்க்கிறோம். .
தோட்டக்காரன் பரிந்து பேசியது:
லூக்கா 13 : 8, 9 “அதற்கு அவன்: ஐயா, இது இந்தவருஷமும் இருக்கட்டும்; நான் இதைச் சுற்றிலுங் கொத்தி, எருப்போடுவேன்,”
“கனிகொடுத்தால் சரி, கொடாவிட்டால், இனிமேல் இதை வெட்டிப்போடலாம் என்று சொன்னான் என்றார்.”
ஆனால் இந்த அத்தி மரத்திற்கு இரண்டாவது வாய்ப்பு தரப்படுகிறது. அதற்குத் தோட்டக்காரன் அத்திமரத்துக்காகப் பரிந்து பேசுகிறான். “ஐயா இந்த வருடம் இந்த மரம் இருக்கட்டும். அதற்குரிய உரத்தைப் போட்டுப் பார்க்கிறேன் கனி கொடுத்தால் சரி கனி கொடுக்காவிட்டால் வெட்டி போடலாம்” என்று தோட்டக்காரன் கூறினான். தோட்டக்காரன் கொத்தி எரு போடுவேன் என்று கூறியதுபோல இயேசுகிறிஸ்து பிதாவினிடத்தில் உங்களுக்காகவும், எனக்காகவும் பரிந்து பேசிக்கொண்டிருக்கிறார். யூதர்களின் வரலாற்றுப் பின்னணியைப் பார்த்தால் அவர்களை எதற்காக எகிப்திலிருந்து கொண்டு வந்தார் என்பதை அறியலாம். இஸ்ரவேல் மக்களுக்குத் தேவன் தனிக்கவனம் செலுத்தி அதைக் கொத்தி உரம் போட்டார். அது கனி கொடுத்திருக்க வேண்டும். ஆனால் கனி கொடுக்காமல் இயேசுவை புறக்கணித்துவிட்டனர். அவர்கள் இயேசுவை சிலுவையிலறைய ஒப்புக்கொடுக்கும் போது என்ன சொன்னார்கள் என்றால், அந்த இரத்தப்பழி எங்கள் மேலும் எங்கள் பிள்ளைகள் மேலும் இருக்கட்டும். அதனால் இஸ்ரவேல் தேசமானது தேவனின் நியாயத்தீர்ப்பை அடைந்து உலகம் முழுவதும் சிதறடிக்கப் பட்டார்கள். இன்று அவர்கள் தங்கள் தேசத்திற்கு திரும்பி வந்தாலும் அவர்கள் தேவனைப் புறக்கணிக்கும் காலம் வரை அவர்கள் அந்த இடத்திலே சமாதானத்தோடு வாழ முடியாது. ஏனென்றால் தேவனால் தெரிந்தெடுக்கப்பட்ட ஜனம் இஸ்ரவேல் ஜனம். ஒரு நாள் அவர்களை விசுவாசத்தோடும், நம்பிக்கையோடும் அவருடைய தேசத்திலே திரும்பச் செய்யப்போகிறார். இப்பொழுதும் அவர்கள் வருத்தத்தோடு திரும்பி வருகிறார்கள். ஆனால் அவர்களுக்கு சமாதானம் இல்லை. இதுதான் இஸ்ரவேல் தேசத்தின் இன்றைய நிலை.
இந்த நாட்கள் உங்களுக்கும், எனக்குமான இரண்டாவது வாய்ப்பாகும். மாற்கு நிர்வாணியாய் ஓடிப் போனான். அவருக்கு இரண்டாவது வாய்ப்பு கொடுத்தார். பேதுரு மறுதலித்தான். அவனுக்கும் திரும்ப வாய்ப்பளித்தார். தாவீது பத்சேபாளிடம் தவறு செய்தான். ஆனால் அவனுக்கு இரண்டாவது வாய்ப்பு கொடுத்தார். எனவே நாமும் தேவனுடைய காரியத்தில் ஆசையோடும், பிரயாசத்தோடும் செய்ய வேண்டும். தேவன் நம்மிடம் எதிர்பார்க்கும் கனியைக் கொடுக்க வேண்டும். மற்றவர்களையும் கனி கொடுக்க வைக்க வேண்டும். தொடர்ந்து நாம் கனி கொடுக்காமல் இருந்தால், கிருபையே அசட்டை செய்தால் தேவனின் நியாயத்தீர்ப்பில் நிற்க வேண்டியதாகும். முன்பு நாம் கிறிஸ்துவை சேராதவர்களும், வாக்குத்தத்தின் உடன்படிக்கைக்கு அந்நியரும், தேவனற்றவர்களாகவும் இருந்தோம் (எபேசியர் 2 : 12). ஆனால் இப்பொழுது அந்தகாரத்திலிருந்த நம்மை, அவருடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்து, அவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படி தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாகவும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாகவும், பரிசுத்த ஜாதியாகவும், அவருக்குச் சொந்தமான ஜனமாகவும் இருக்கிறோம் (1 பேதுரு 2 : 10). ஏன் கடவுள் நம்மை இரட்சித்தார்? ஏன் இத்தனை ஆசீர்வாதத்தை, கனிதரும் வாழ்க்கையை தந்திருக்கிறார் என்றால் தேவனுக்குப் பிரியமான பலியாகும்படிக்கும், தேவனுடைய சுவிசேஷ ஊழியத்தை நடத்தும்படிக்கும், புறஜாதிகளுக்கு இயேசுவினுடைய ஊழியக்காரனாகும் பொருட்டாகத்தான் (ரோமர் 15 :15).
அத்திமரத்தின் கீழும், நிழலிலும்:
அத்திமரத்தின் கீழிருந்த நாத்தான்வேலைப் பார்த்த இயேசு “கபடற்ற உத்தம இஸ்ரவேலன்” என்கிறார் (லூக்கா 1 : 46, – 48). அவன் அத்திமரத்தின் கீழ் கபடற்றவனாகக் காணப்பட்டான். இதேபோன்ற கபடற்ற சுபாவத்தை தேவன் எதிர்பார்க்கிறார். கர்த்தர் நம்மை யாரென்று அறிந்திருக்கிறார் என்பதை இதிலிருந்து அறிகிறோம். நாத்தான்வேலுக்கு இயேசு சாட்சி கொடுத்ததைப்போல, நாமும் இதே போன்று சாட்சியுள்ள வாழ்க்கை வாழ வேண்டுமென்று விரும்ப வேண்டும். இருதயத்தில் ஒன்று வைத்து வெளியே ஒன்று பேசக்கூடாது. யோபு என் இருதயத்தின் வார்த்தை உண்மைக்கு ஒத்திருக்கிறது என்று கூறினான். சுத்த இருதயத்தோடு ஒருவருக்கொருவர் அன்புகூறுகிறவர்களாக இருக்க வேண்டுமென்கிறார். கபடு நமது இருதயத்தில் இருக்குமானால் நமது ஜெபத்திற்கு தேவன் பதில் கொடுக்க மாட்டாரென்று சங்கீதக்காரன் கூறுகிறான். மீகா 4 : 4ல் அத்திமரத்தின் நிழலில் பயமில்லாமல் இளைப்பாறலாம் என்றுள்ளது. இந்த நிழல் சமாதானத்தையும், இளைப்பாறுதலையும் தருகிறது. நமது ஜீவியத்தில் இந்த இரண்டும் காணப்பட வேண்டும். அவைகளை நாம் இழந்து போகக்கூடாது. யோவேல் 1 : 7ல் அத்திமரத்தின் பட்டையைப் பற்றிப் பார்க்கிறோம். அத்திமரத்தின் பாதுகாப்பு அதன் பட்டையிலும், தோலிலும் தானிருக்கிறது. அதை உரித்து விடுவோமானால் கொஞ்சநாளில் அந்த மரம் பட்டுப்போய் விடும். இது கர்த்தருடைய பாதுகாப்பைக் குறிக்கிறது. தேவனின் பாதுகாப்பு இல்லாமல் ஒருபோதும் நாம் ஜீவிக்க முடியாது. நியாயாதிபதிகள் 9 : 11ல் அத்திமரத்தின் மதுரத்தையும், நற்கனியையும் பார்க்கிறோம் . நம்முடைய வார்த்தைகள் இனிமையாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறார். இத்தனை சிறப்புகளுள்ள மரமாக இருந்தாலும் அது கனியைக் கொடாவிட்டால், அதைக் கொத்திப் போட இயேசு கூறியதைப் போல, நமக்குள்ளும் அத்தனை குணங்களிருந்தாலும், இயேசுவுக்கென்று கனி கொடாவிட்டால் தேவனுடைய நியாயத்தீர்ப்பில் நிற்கச்செய்வார்.
கருத்து:
ஆத்தும அறுவடைக்காக, கடவுளை மகிமை படுத்துவதற்காக தேவன் நம்மை வைத்திருக்கிறார். எனவே அதை ஒவ்வொருவரும் செய்ய வேண்டும். ஒவ்வொருவரும் கனி கொடுக்கும் வாழ்க்கை வாழ வேண்டும். இயேசுவிடம் நாம் காட்டும் அன்பிலும், அறிவிலும் அதிகதிகமாகப் பெருக்கவும், தேவனுக்கு மகிமையும், துதியும் உண்டாகும்படி இயேசுகிறிஸ்துவினால் வருகிற நீதியின் கனிகளால் நிறைந்து காணப்பட வேண்டும் (பிலிப்பியர் 1 : 9, 10). நாம் தேவனுடைய இரத்தத்தினாலே, கிருபையினாலே அனுதினமும் அனுபவித்து வரும் நன்மைகளுக்கும் நனறியுள்ளவர்களாக இருக்க வேண்டும். நன்றி கெட்ட யூதர்களைப் போல அன்பற்றவர்களாக இராமல் கிருபை என்னை பாதுகாக்கும், கிருபை என்னை வாழவைக்கும், கிருபை என்னை உயர்த்தும் என்று விசுவாசத்துடன் கர்த்தரைப் பற்றிக் கொண்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால்,
மத்தேயு 21 : 43 “தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்திலிருந்து நீக்கப்பட்டு, அதற்கேற்ற கனிகளைத் தருகிற ஜனங்களுக்குக் கொடுக்கப்படும்.”
என்று இயேசு கூறுகிறார். கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவே சீக்கிரமாய் வாரும். ஆமென்.
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…