யோவான் 19 : 30 “இயேசு காடியை வாங்கினபின்பு, முடிந்தது என்று சொல்லி, தலையைச்சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார்.

இந்த வார்த்தை பிதாவைப் பார்த்துக் கூறிய ஆறாவது வார்த்தை. இயேசு பழுதற்ற பலியாகத் தன்னை ஒப்புக் கொடுத்துக் கூறிய வார்த்தை. பிதா கொடுத்த மீட்பின் திட்டத்தைச் செய்து முடித்துக் கூறிய வார்த்தை. இயேசுவின் சிலுவை மரணமானது அவர் நம்மிடம் காட்டிய அன்பையும், அவர் நம்மேல் காட்டுகிற கிருபையையும் பார்க்கிறோம். ஏசாயா 53 : 5, 6 ல் கூறியுள்ளது போல அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்; நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நாமெல்லாரும் ஆடுகளைப் போல வழிதப்பித்திரிந்து, அவனவன் தன்தன் வழியிலே போனோம்; கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார். என்ற தீர்க்கதரிசனம் நிறைவேறியது. யோவான் 6 : 38 ல் இயேசு என்னை அனுப்பினவருடைய சித்தத்தின் படி செய்யவே நான் வானத்திலிருந்திறங்கி வந்தேன் என்று தான் வந்ததன் நோக்கத்தைக் கூறியதைப் பார்க்கிறோம். 

மேலும் பிதாவின் சித்தத்தைச் செய்து அவருடைய கிரியை முடிப்பதே தன்னுடைய போஜனமாயிருக்கிறது என்று சீஷர்களிடம் யோவான் 4 : 34 ல் கூறியுள்ளார். எருசலேம் மேல் வீட்டறையில் இயேசு தன் சீஷர்களுடன் இராப்போஜன வேளையில் திராட்சைரசம் அருந்தியபின் எதையும் அருந்தவோ குடிக்கவோ இல்லை. மரணதண்டனை தீர்ப்பு பெற்றபின் சிலுவையைச் சுமந்து கொண்டு கரடு முரடான கொல்கொதா மலை உச்சிக்குக் கூட்டி வந்து சிலுவையில் அறைந்தனர். சுமார் 17 மணி நேரம் தண்ணீர் குடியாமலிருந்தார் என்று கூறப்படுகிறது. அவர் சரீரத்திலுள்ள ஈரப்பசை எல்லாம் போய்விட்டது. 

சங்கீதம் 22 : 15 ல் “என் பெலன் ஓட்டைப்போல் காய்ந்தது; என் நாவு மேல்வாயோடே ஒட்டிக்கொண்டது; என்னை மரணத்தூளிலே போடுகிறீர்.” 

என்று கூறப்பட்டது போல வேதனை அனுபவித்தார். உலகத்தில் தான் பட்ட பாடுகள் முடிந்துவிட்டதால் கூறிய வார்த்தை அல்ல. உடம்பில் உள்ள வலிகள் தாங்க முடியாமல் அழுது கூறிய வார்த்தையும் அல்ல. பரத்திலிருந்து மனுஷ உருவெடுத்து வந்து பிதா தன்னை அனுப்பியதன் நோக்கம் நிறைவேறியதால் மகிழ்ச்சியுடன் வந்த சத்தம் (ஏசாயா 53 : 10). எதற்காக உலகத்திற்குப் பிதா அனுப்பினாரோ அந்த சித்தத்தை நிறைவேற்றி முடித்ததால் வந்த வெற்றியின் சத்தம். பாவிகளை இரட்சிக்கும்படி வந்த நோக்கம் நிறைவேற்றி முடித்து விட்டேன் என்று கூறிய வார்த்தை தான் அது. இயேசு பாதாளத்தின் திறவுகோலை எடுப்பதற்கு முன், உயிரோடு இயேசு எழும்புவதற்கு முன் முடிந்தது என்று கூறுகிறார். எபிரேயர் 9 : 12 ல் கூறப்பட்டது போல வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினால அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நமக்காக நித்திய மீட்பை உண்டு பண்ணினார். யாராலும் நியாயப்பிரமாணத்தின் பத்து கட்டளைகளையும் மிகச்சரியாகப் பின்பற்றி பரிசுத்தமாய் வாழ முடியாது. ஏனெனில் யாக்கோபு 2 : 10 கூறுவது என்னவெனில் 

“ஒருவன் நியாயப்பிரமாணம் முழுவதையும் கைக்கொண்டிருந்தும், ஒன்றிலே தவறினால் எல்லாவற்றிலும் குற்றவாளியாயிருப்பான்.” 

என்பதால் இயேசு பழைய ஏற்பாட்டின் நியாயப்பிரமாணங்களையும், தீர்க்கதரிசனங்களையும் நிறைவேற்றி முடித்தார் (மத்தேயு 5 : 17). இயேசுவானவர் நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருந்தார். எனவே பழைய ஏற்பாட்டுப் பிரமாணம் கிறிஸ்துவில் முடிந்து விடுகிறது. புதிய ஏற்பாட்டுப் பிரமாணம் கிறிஸ்துவால் துவங்கப்பட்டு நடைமுறையில் இருக்கிறது. பழையஏற்பாட்டிற்கும், புதியஏற்பாட்டிற்கும் இயேசு ஒருவரே பாலமாக இருக்கிறார். கிறிஸ்து வந்த பின்பு நியாயப் பிரமாணத்துக்கும், பழைய உடன்படிக்கைக்கும் யாரும் கட்டுப்படத் தேவையில்லை. நியாயப்பிரமாணம் நமக்குச் செய்ததை விட கிறிஸ்து செய்வது அதிகமாயிருக்கிறது. பிரமாணத்தின்படி பலியிடுவதில் கிடைக்கும் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைவிட கிறிஸ்துவின் பலியால் கிடைக்கும் ஆவிக்குரிய நித்திய ஆசீர் நமக்கு அதிக பலனைக் கொண்டு வருகின்றது. காரணம் கிருபையையும், சத்தியத்தையும் இயேசு உண்டாக்கினார் (யோவான் 1 : 17).நாமோ கிறிஸ்துவினால் புதிய ஏற்பாட்டு கிருபைக்குள் வாழ்கிறோம். எனவே இயேசு தன் வாயால்

மத்தேயு 22 : 37 – 40ல் “இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக; இது முதலாம் பிரதான கற்பனை. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே. இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார்.” 

நியாயப்பிரமாணத்தின் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து மனுக்குலத்தின் கிரயத்துக்காகத் தான் முழுக்கிரயத்தையும் கொடுத்து வெற்றியோடு முடிந்தது என்கிறார். ஆறு மணி நேரம் சிலுவையில் தொங்கி தன்னுடைய விலையேறப்பெற்ற இரத்தத்தை ஊற்றி நமக்கு மீட்பைக் கொடுத்தார். தன்னுடைய முடிவு என்னவென்பதை இயேசு ஏற்கனேவே அறிந்திருந்தார். கானா ஊர் கல்யாணத்தில் தன் தாயிடம் “தன்னுடைய வேளை இன்னும் வரவில்லை” என்றார் (யோவான் 2 : 4). நிக்கோதேமு என்ற பரிசேயன் யூதருக்குள் அதிகாரியாகவும், இஸ்ரவேலில் ஒரு போதகனுமாய் இருந்தவன். அவன் ஒருநாள் இயேசுவிடம் தன்னுடைய சந்தேகங்களைக் கேட்க இரவு நேரத்தில் வந்து கேட்டுத் தெரிந்து கொண்டான். இவனிடம் இயேசு தனக்கு நடக்கப் போவதைப் பற்றி 

யோவான் 14, 15ல் ‘ சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டது போல மனுஷகுமாரனும், தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, உயர்த்தப்படவேண்டும்.” என்று கூறியதைப் பார்க்கிறோம். 

ஒருநாள் இயேசு தன்னுடைய சீடர்களிடம் தான் யார் என்று கேட்ட போது பேதுரு “நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து” என்றார். அப்பொழுது தன்னுடைய சீடர்களிடம் மத்தேயு 16 : 21ல் தாம் பாடுபடப் போவதை பற்றிக் கூறியதைப் பார்க்கிறோம். மறுரூப மலையில் மோசேயும், எலியாவும் இயேசுவோடு எருசலேமில் அவர் பாடுகளுக்குட்படுத்தப்பட்டுக் கொலை செய்யப்போவதைக் குறித்துப் பேசினதை மத்தேயு 17 : 3 ல் பார்க்கிறோம். மேலும் கெத்சமெனே தோட்டத்தில் முகங்குப்புற விழுந்து பிதாவை நோக்கி : “என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது” என்று ஜெபித்ததையும் பார்க்கிறோம். இஸ்ரவேலரின் பாவங்களைப் போக்குவதற்காகப் பாவம் சுமத்தப்பட்ட ஆடு பாளையத்தின் புறம்பே அனுப்பப்பட்டது. எல்லோருடைய பாவங்களுக்காகவும் ஆசாரிப்புக்கூடாரத்தில் ஆட்டைப் பலியிட்டனர். இயேசுவோ பூமியிலுள்ள சகல ஜனங்களுக்காகவும் போக்காடாகவும், பலியாடாகவும் மாறினார். பாளையத்திற்கு புறம்பே இயேசு சிலுவையில் அறையப்பட்டு நம் எல்லோருக்காகவும் பலியிடப்பட்டு நம் பாவங்களைப் போக்கினார். 

ஜனங்களும், பிசாசும் இயேசுவை முடிந்த அளவு கொடுமைப் படுத்தினர். இனி அந்தப் பாடுகள் இல்லை. இருளுக்கு முடிவுண்டாயிற்று. பாவத்தின் சம்பளம் கொடுக்கப்பட்டு விட்டது (ரோமர் 8 : 2, 1 கொரிந்தியர் 15 : 54 – 56). பாவத்திற்கான கிரயம் செலுத்தப்பட்டாயிற்று (ரோமர் 14 : 7 – 9, 1கொரிந்தியர் 6 : 19, 20). எல்லாப் பாவங்களுக்கும் இரட்சிப்பு இயேசுவின் சிலுவை மரணத்தினால் கிடைத்தது (மத்தேயு 26 : 28, 1 யோவான் 1 : 7). பாடுகளைப் பற்றிய வேதவாக்கியங்கள் அனைத்தையும் நேர்த்தியாய் நிறைவேறி முடித்தாயிற்று (சங்கீதம் 22 ம் அதிகாரம், ஏசாயா 53 ம் அதிகாரம், லூக்கா 24 : 25, 26, 44, 1 பேதுரு 1 : 11, 3 : 18). இனி ஒருபோதும் இயேசுவுக்கு வேதனை இல்லை. பாடுகளுக்காக அவர் இனி ஒருபோதும் ஒப்புக் கொடுக்கப் போவதும் இல்லை. இயேசுவின் வாயிலிருந்து ஜெயமாய்ப் புறப்பட்ட வார்த்தை எல்லோருடைய காதுகளிலும் தொனித்தது. யூதர், புறவினத்தாரின் திரை கிழிந்தது. பகையாக இருந்த நடுச்சுவர் தகர்க்கப்பட்டது (1 கொரிந்தியர் 12 : 13, கலாத்தியர் 3 : 28, எபேசியர் 3 : 6, ரோமர் 10 : 12, 13). அதனால் இயேசு நாம் அவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு தமது மாம்சமாகிய திரையின் வழியாக புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை உண்டு பண்ணினார். பிதாவிடம் நேரடியாகச் செல்லும் பாக்கியம் கிடைத்தது (எபிரேயர் 10 : 19, 20). 

கிறிஸ்து நமக்காக சாபமாகி நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீக்கலாக்கி மீட்டார். இயேசு கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாய் இருக்கிறார் (ரோமர் 10 : 4). ஆகவே நாம் நியாயப் பிரமாணத்துக்குக் கீழ்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்பட்டிருக்கிறோம். நியாயப்பிரமாணம் முழுவதையும் இயேசு நிறைவேற்றி முடித்த படியால் முடிந்தது என்றார் (ரோமர் 6 : 14, கொலோசெயர் 2 : 14, 15). இது சாத்தானின் வல்லமையின் அழிவை வெளிப்படுத்தியது. மரணத்தின் அதிகாரியான பிசாசானவனைத் தன் மரணத்தினால் அழிக்கும் படிக்கும் ஜீவகாலமெல்லாம் அடிமைத்தனத்திற்குள்ளான யாவரையும் விடுதலை பண்ணும் படிக்கும் தேவகுமாரன் தம்மைச் சிலுவையில் ஒப்புக் கொடுத்தார் (1யோவான் 3 : 8, யோவான் 12 : 31, கொலோசெயர் 2 : 14, எபிரேயர் 2 : 14, 15). இருளின் அந்தகாரத்தினின்றும், பாவம் மரணம் என்பபவைகளின் பிரமாணத்தினின்றும் நம்மை விடுதலையாக்கி தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு நம்மை உட்படுத்தி விட்டார் (ரோமர் 6 : 9, 8 : 2, எபிரேயர் 2 : 14, 15). 

நாம் இனி மரண பயத்துக்கு அடிமைப்பட்டிராமல் கிறிஸ்து இயேசுவுக்குள் தைரியமாக இருக்கத்தக்கதாக எல்லாவற்றையும் சிலுவையில் செய்து முடித்து ஜெயதொனியுடன் கூறிய வார்த்தை தான் முடிந்தது என்பதாகும். அதாவது பிதா தனக்கு கொடுக்கப்பட்ட வேலை முழுமையாக முடிந்தது என்பதாகும். இனி ஒரு இரத்தப் பலி தேவையில்லை. இயேசுவே தகனபலியாக தன்னை ஒப்புக்கொடுத்தார். இதை கிரேக்க மொழியில் tetelestai என்பர். இது ஊழியக்காரனோ, அடிமைகளோ தன்னுடைய எஜமான் கொடுத்த வேலையை செய்து முடித்து விட்டேன் என்று கூறுவதற்கு இந்த வார்த்தையைத்தான் உபயோகப்படுத்துவர். இயேசு பாவிகளை இரட்சிக்க வந்தார் (1 தீமோத்தேயு 1 : 15), இழந்து போனதைத் தேட வந்தார் (லூக்கா 19 : 10), கெட்டுப் போனதை இரட்சிக்க வந்தார் (மத்தேயு 18 : 11), தனது ஜீவனையே கொடுத்து அத்தனையையும் நிறைவேற்றினார் (லூக்கா 20 : 28). 

கிறிஸ்து தந்த வெற்றியால் நாம் பாவத்திற்கு அடிமைகளாய் இருக்க வாய்ப்பில்லாமல் போனது. அவர் சாத்தானை ஜெயித்ததால் அவன் நம் மீது அதிகாரம் இனி செலுத்த முடியாது. இப்பொழுது பிசாசு உலகத்தில் இருந்தாலும் அவன் தலை நசுக்கப்பட்டவனாய் கிரியை செய்து வருகிறான். இயேசுகிறிஸ்து தமது சிலுவை மரணத்தால் பிசாசின் தலையை நசுக்கி அவனது திட்டங்களை சீர்குலைத்தார். அந்த வெற்றியை தமது பிள்ளைகளிடம் ஒப்புக்கொடுத்தார். மரணத்திற்கு பின் இனி என்ன சம்பவிக்கும் என்று நாம் பயப்படத் தேவையில்லை. சமாரிய ஸ்திரீ, கள்ளன், சகேயு போன்றவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தின ஆண்டவர் நம் வாழ்க்கையிலும் அப்படிப்பட்ட மாற்றத்தைக் கொடுப்பார். ஏசாயா 60 : 20 ல் கூறியது போல நம்முடைய துக்க நாட்கள் முடிந்தது. கர்த்தராகிய இயேசு நமது பயங்கள் அனைத்தையும் நீக்கி நித்திய வாழ்வை நமக்குத் தந்தருளுவார். 

நமது இரட்சிப்பு சிலுவை மரணத்தினால் மட்டுமே கிடைத்தது. நமக்காகக் கல்வாரி சிலுவையில் அனைத்தையும் நிறைவேற்றி முடித்து விட்டார். அவருக்காக வாழ நம்மை ஒப்புக் கொடுப்போம். 

பிரசங்கி 7 : 8ல் “ஒரு காரியத்தின் துவக்கத்தைப் பார்க்கிலும் அதின் முடிவு நல்லது;” 

என்று சாலமோன் கூறியதைப் போல, இயேசு தனக்குப் பிதா கொடுத்த வேலையை வெற்றிகரமாகச் செய்து முடித்த்தைப்போல, நாமும் கர்த்தர் நம்மை இந்த உலகத்துக்கு அனுப்பியதன் சித்தத்தை அறிந்து அதை நிறைவேற்றி முடிக்க வேண்டும். அதை ஆவியானவரின் துணையோடு செய்து முடிப்போம். இரட்சிப்பைப் பெறாதவர்களை இயேசுவண்டை அழைத்து வந்து வெளிச்சத்துக்குள் அமர்த்துவோம். இயேசு கடைசியாக கூறின வார்த்தையின்படி நாம் உலகமெங்கும் புறப்பட்டுப் போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி ஜீவனுள்ள தேவனைப் பற்றிச் சொல்லி அவர்கள் கண்கள் திறக்கப்பட பாடுபடுவோம் (மத்தேயு 28 : 19, 20). ஆமென்.

Sis. Rekha

Share
Published by
Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago