சிலுவையில் இயேசுவின் 7 வார்த்தைகள்

ஏழாவது வார்த்தை: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்

லூக்கா 23 : 46 “இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச்சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனைவிட்டார்.”

இயேசு பாவத்தையும், வியாதியையும், பிசாசையும், மரணத்தையும் ஜெயித்தவராக இந்த 7 வது வார்த்தையைச் சொல்லி முடித்தார். இயேசு சிலுவையில் கூறிய முதல் வார்த்தையிலும், கடைசி வார்த்தையிலும் பிதாவே என்றழைத்தார். இயேசு உலகத்தில் வாழ்ந்த போதும் பிதாவோடு ஐக்கியம் கொண்டவராகவும், பிதாவின் சித்தத்தை மட்டுமே செய்பவராகவும் இருந்தார். தன்னுடைய மலைப் பிரசங்கத்தில் 17 முறை பிதாவே என்று உச்சரித்தார். யோவான் 17ம் அதிகாரத்தில் தனது ஜெபத்தில் பிதாவை 6 முறை அழைத்தார். இயேசுவைப் பிடிக்க வந்த வேளையிலும் யோவான் 18 : 11ல் “பிதா எனக்கு கொடுத்த பாத்திரத்தில் நான் பானம் பண்ணாதிருப்பேனோ” என்று கூறுயதிலிருந்து அவர் பிதாவோடிருந்த ஐக்கியத்தை அறிகிறோம். 

சிலுவையில் தொங்கும் போதும் பிதாவோடு ஐக்கியம் உள்ளவராக தனது ஓட்டத்தை முடித்தார். சங்கீதம் 31 : 5 ல் கூறியபடி பிதாவின் கையில் தனது ஆவியை ஒப்புக் கொடுத்தார். மனிதனுக்குள் ஆவி, ஆத்துமா, சரீரம் என்ற 3 பிரிவுகள் இருக்கின்றன. இதில் ஆவி மேன்மையானது. ஏனென்றால் நீதிமொழிகள் 20 : 27ல் மனுஷனுடைய ஆவி கர்த்தர் தந்த தீபம் என்றுள்ளது. இதையே சாலமோன் ஞானி மண்ணான சரீரம் தான் முன்னிருந்த பூமிக்குத் திரும்பி ஆவியானது தன்னைத் தந்த தேவனிடத்திற்குத் திரும்பும் என்கிறார் (பிரசங்கி 12 : 7). இயேசு மனுஷ ரூபமெடுத்து வந்ததால் 

பிரசங்கி 8 : 8ல் “ஆவியை விடாதிருக்கிறதற்கு ஆவியின்மேல் ஒரு மனுஷனுக்கும் அதிகாரமில்லை; மரணநாளின்மேலும் அவனுக்கு அதிகாரமில்லை; அந்தப் போருக்கு நீங்கிப்போவதுமில்லை;” 

என்றது போல கர்த்தர் தந்த ஆவியை விடாமலிருக்க ஒரு மனுஷனுக்கும் அதிகாரமில்லை. எனவே தேவன் தந்த ஆவியை அணைக்காமல் தேவனிடம் ஒப்படைப்பதே வெற்றியுள்ள வாழ்க்கையாகும். 

எபிரேயர் 9 : 27, 28 “அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே, கிறிஸ்துவும் அநேகருடைய பாவங்களைச் சுமந்து தீர்க்கும்படிக்கு ஒரேதரம் பலியிடப்பட்டு, தமக்காகக் காத்துக் கொண்டிருக் கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும்படி இரண்டாந்தரம் பாவமில்லாமல் தரிசனமாவார்.” 

என்று எபிரேய ஆக்கியோன் கூறியிருப்பதைப்போல இயேசு தன்னை அர்ப்பணித்தார். கிறிஸ்து வெற்றியுள்ள வாழ்க்கை வாழ்ந்தது போல நாமும் வெற்றியுள்ள வாழ்க்கை வாழ அழைக்கப் பட்டிருக்கிறோம். “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்” என்றவர் தன் ஜீவனை பிதாவிடம் ஒப்படைத்தார். இயேசுவின் மரணம் முன்குறிக்கப் பட்டிருந்தது. உலகத்தோற்றமுதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டி என்று வெளிப்படுத்தல் 13 : 8 ல் கூறப்பட்டுள்ளது. பொதுவாக ஒருவர் இறக்கும் தருணத்தில் மெதுவாகத்தான் பேசுவர். ஆனால் இயேசுவோ தன் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுத் தன் ஜீவனை விட்டதைப் பார்க்கிறோம். 

மனிதனைத் தேவன் நித்திய ஜீவவாசியாக சிருஷ்டித்தார். ஆனால் அவனோ மரணத்துக்கு அதிகாரியான பிசாசின் மூலம் மரணத்தை உண்டாக்கினான். அதனால் நாம் மாம்சத்தையும், இரத்தத்தையும் உடையவர்களாயிருப்பதைப் போல அவரும் மாமிசத்தையும், இரத்தத்தையும் உடையவரானார். மரணத்துக்கு அதிகாரியான பிசாசை தமது மரணத்தினால் அழிக்கவும் ஜீவகாலமெல்லாம் மரண பயத்தினால் அடிமைத்தனத்துக்கு உள்ளானவர்களை விடுதலை பண்ண தன்னுடைய ஜீவனை இயேசு கொடுத்தார் (எபிரேயர் 2 : 14, 15). பவுலடியார்,

கொலோசெயர் 2 : 15ல் “துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றிசிறந்தார்.” என்று கூறுகிறார். 

ஆதாமின் மூலம் இழந்து போன ஆவிக்குரிய ஜீவனை மறுபடியும் பெறவும், அழியாத நித்தியஜீவனைத் தரவும் இயேசு மரணத்தை ருசி பார்த்தார். அவர் சிலுவையில் மரணத்துக்கு காரணமாயிருக்கும் பாவத்தை முறித்துப் போட்டார். இயேசு இந்த உலகத்துக்கு வந்ததன் நோக்கம் அக்கிரமங்களினாலும், பாவங்களினாலும் மரித்து ஆவிக்குரிய ஜீவனை இழந்தவர்கள், அந்த ஜீவனை மறுபடியும் பெற்றுக் கொள்ளவும், அது மறுபடியும் பரிபூரணப்படவும் வந்தார். இயேசுவின் மரணம் இயற்கைக்கு அப்பாற்பட்டது. இயேசு தனது ஆவியை விட்டவுடன் இரண்டு பெரிய அடையாளங்கள் தோன்றியது. 1. பூமியெங்கும் மூன்று மணி நேரம் அந்தகாரம் உண்டாகி சூரியன் இருளடைந்து. 2. தேவாலயத்தின் திரைச்சீலை மேல் தொடங்கி கீழ் வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது. அது போக நித்திரையடைந்த அநேக பரிசுத்தவான்களின் கல்லறைகள் திறந்தது. மரித்தவர்கள் எழுந்தது எத்தனை ஆச்சரியம். 

சாலமோன் கட்டிய தேவாலயத்தின் திரைச்சீலையானது 30 அடி உயரமும், 60 அடி அகலமும், 4 அல்லது 5 அங்குல கனமும் கொண்டு 72 தனித்தனி துணிகளால் இணைக்கப்பட்டு நடுச்சுவராக இருந்தது. .துணிகள் கீழிருந்து மேலாகக் கிழிவது இயற்கை. தேவாலயத்தில் பரிசுத்த ஸ்தலத்திற்கு, மகா பரிசுத்த ஸ்தலத்தையும் பிரிப்பதற்காகப் போடப்பட்டிருந்த திரைச் சீலை தேவனுடைய சமூகத்துக்குச் செல்லும் பாதையை மறைத்தது. இயேசு உயிரை விடுகிறவரை அது இருந்தது. இயேசுவின் மரணத்தின் மூலம் தேவனுடைய சித்தத்தினால், தேவனுடைய வல்லமையினால் மேலிருந்து கீழாகக் கிழிந்தது. அதுவரை மகாபரிசுத்தஸ்தலத்துக்குள் இருந்த தேவ மகிமை வெளியே வந்தது. இயேசுவின் சரீரத்துக்குள் இருந்த மகிமையும், ஜீவனும் வெளியே வந்தது. வெளியே வந்த மகிமை தேவனுடைய பிள்ளைகளை நிரப்ப ஆரம்பித்தது. இனி தேவாலயத்தின் திரைச்சீலை தேவ மகிமையைத் தடுத்துக் கொண்டு நிற்க முடியாது. இனி அந்த பிரதான ஆசாரியன் மட்டுமே உரிமை பாராட்ட முடியாது. சாதாரண விசுவாசிக்கும் அந்த மகிமை கிடைக்கக் கூடிய வழியை இயேசுவானவர் திறந்து கொடுத்தார். 

மோசேயின் நியாயப் பிரமாணத்தின்படி சுமார் 1500 ஆண்டு காலம் பிரதான ஆசாரியர் மட்டுமே அதற்குள் போக முடியும். எந்த இஸ்ரவேலனும் போகவோ, பார்க்கவோ முடியாது. அதாவது பிதாவாகிய தேவனின் சமூகத்திற்குச் செல்வதற்கு இருந்த தடைகள் யாவும் தேவனுடைய செயலால் அகற்றப்பட்டன. பழையஏற்பாட்டு ஆசாரியத்துவ முறை மாற்றப்பட்டு விட்டது. இயேசுவின் சரீரமாகிய திரை கிழிக்கப்பட்டதினால் நமக்குப் புதிதும், ஜீவனும், மகிமையான பாதை திறக்கப்பட்டது. ஊழியம் லேவி கோத்திரத்தார் மட்டுமே செய்ய முடியும் என்பதும் மாறியது. யார் வேண்டுமானாலும் ஊழியம் செய்ய அழைக்கப்படலாம். கிறிஸ்துவையும், அவருடைய வார்த்தையை விசுவாசிக்கும் யாவரும் இந்த வாசல் மூலமாக தேவனுடைய சமூகத்தில் பிரவேசிக்கலாம் (ரோமர் 5 : 1, 2, எபேசியர் 2 : 18, எபிரேயர் 10 : 19, 20). இயேசுவின் மரணம் வரை மரணத்திற்கு அதிபதியாக பிசாசு செயல்பட்டான் (எபிரேயர் 2 : 14). இயேசு மரணமடைந்ததும் மரணத்திற்கும், பாதாளத்திற்குமுரிய அதிகாரம் இயேசுவினிடம் வந்தது (வெளிப்படுத்தல் 1 : 18). இயேசுவின் மரணம் புதிய வாழ்விற்கு ஆரம்பம் என்று உணர்த்தியிருக்கிறார். 

இயேசுவின் பாடுகள் தேவ நோக்கத்தை நிறைவேறுவதுடன் அவரை விசுவாசிக்கும் அநேகரை இரட்சிக்கும். கிறிஸ்துவின் பரிகார மரணத்துக்கான தக்க பரிசைத் தருவதாக தேவன் வாக்களித்தார். அதே வேளையில் தான் பெற்ற ஈவுகளை தன்னைப் பின்பற்றுகின்ற, ஆவியின் பெலத்தால் சாத்தானுடன் போர் புரியும் பெலவான்களுடன் பகிர்ந்து கொள்வதாகக் கிறிஸ்து கூறுவதை ஏசாயா 53 : 11, 12ல் பார்க்கிறோம். இயேசு மரணத்தையும், பாதாளத்தையும் ஜெயித்தவராக மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார் என்றும், இயேசு உயிர்த்தெழுந்து நம்மோடுகூட இருக்கிறார் என்றும் நாம் விசுவாசிக்க வேண்டும். இயேசு தன்னுடையவர்களைப் பரலோக ராஜ்ஜியத்தில் சேர்க்க மறுபடியும் வருவார். அப்பொழுது அவருக்குள் மரித்த பரிசுத்தவான்கள் முதலாவது கல்லறைகளிலிருந்து எழுந்து மகிமையின் சரீரத்தோடு உயிர்த்து இயேசுவை அடைவார்கள். அதைத் தொடர்ந்து பூமியிலிருக்கும் அவருடைய பரிசுத்தவான்கள் மரணத்தை வென்று மகிமையின் மேல் மகிமையடைந்து கிறிஸ்துவை அடைவார்கள். மரணம் ஜெயமாக விழுங்கப்படும். இயேசு மரணத்தை ஜெயித்ததால் அவரை விசுவாசிக்கிற அனைவரும் மரணத்தை ஜெயித்து மகிமையின் சரீரத்தோடு என்றென்றும் இயேசுவோடு ஜீவிப்பார்கள். இதைத்தான் 

யோவான் 11 : 15, 16ல் “இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்;” 

என்கிறார். நம்மை அடிமைத்தனத்திலிருந்து வெளியே கொண்டு வருவதற்காக இயேசு சிலுவையில் தன்னுடைய ஜீவனைக் கொடுத்தார். இயேசுவின் சிலுவை மரணமும், உயித்தெழுதலும் வேதத்தில் உள்ள பழைய ஏற்பட்டில் கூறப்பட்ட தீர்க்கதரிசனங்கள் அனைத்தும் நிறைவேறியது. அதனால் இயேசு மலைப் பிரசங்கத்தில் 

மத்தேயு 5 : 17ல் “நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன்.” 

என்று கூறியிருப்பதைப் பார்க்கிறோம். அப்போஸ்தலர் 2 : 29 – 31 ல் தாவீதிடம் கூறியபடி அவருடைய சந்ததியில் கிறிஸ்துவை எழும்பப் பண்ணுவேன் என்றும், கிறிஸ்துவினுடைய ஆத்துமா பாதாளத்தில் விடப்படுவதில்லையென்றும், அவருடைய மாம்சம் அழிவைக் காணாது என்றும் இயேசுவின் உயித்தெழுதலைப் பற்றிக் கூறியதைப் பார்க்கிறோம். 

என்றைக்கும் அவர் உயிரோடிருப்பதால் அவரண்டை யார்யார் திரும்புகிறார்களோ அவருடைய சமூகத்துக்கு வருகிறார்களோ அவர்களுடைய எல்லாக் குறைகளையும் நீக்கி அவர்களுடைய பாவங்களைக் கழுவி அவருடைய சொந்த ஜனமாக ராஜரீக ஆசாரியக் கூட்டமாக ஆக்குவார். நம்மைப் பூமியிலே சாட்சியாக வைத்து கடைசியிலே மத்திய ஆகாயத்திலே அவர் வரும்போது எக்காளச் சத்தம் தொனிக்கும்போது அவரோடுகூட கடந்து போக கிருபை தருவார். எனவே புதிய ஏற்பாட்டு விசுவாசிகள் இயேசுவின் இரத்தத்தை விசுவாசித்து பாவமன்னிப்பைப் பெற இயேசுவண்டை செல்ல வேண்டும். இயேசுவின் மரணம் நியாயத்தீர்ப்பையும், பரிசுத்தவான்களின் உயித்தெழுதல் பாவியின் நரகாக்கினையும் காண்பிக்கிறது. லூக்கா 9 : 22 ல் இயேசு தன் வாயால் கூறின வார்த்தையை நிறைவேற்றினார். மேலும் யோவானிடம், 

வெளிப்படுத்தல் 1 : 18ல் “மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்.” என்று ஜெயம் பெற்றார். 

வெளிப்படுத்தல் 3 : 21ல் “நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடேகூட உட்கார்ந்ததுபோல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள்செய்வேன்.”

என்று கூறியது போல நாமும் இயேசுவோடுகூட அமர, ஜெயங் கொள்ளுகிறவர்களாகப் பாடுபடுவோம். இயேசு இந்த உலகில் தமக்காக வாழவுமில்லை. தமக்காக மரிக்கவும் இல்லை. இயேசு தம்முடையவர்களைப் பிதாவின் கரத்தில் ஒப்புவித்தார். எனவே தேவனுடைய பிள்ளைகளாகிய நாம் ஒவ்வொருவரும் கிறிஸ்துவுக்குள் நம்மைக் காத்துக்கொள்ளும்படியாக நம்மைப் பரிசுத்தமும், தேவனுக்குப் பிரியமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்க வேண்டும். இதுவே தேவனுக்குப் பிரியமான ஆராதனையாயிருக்கிறது. தேவனோடு இணைந்த வாழ்க்கைதான் உண்மையான வாழ்க்கை. மற்றதெல்லாம் மாயையானது. கிறிஸ்து இயேசுவினால் ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் நம்மை பாவம், மரணம் என்பவைகளின் பிரமாணத்திலிருந்து விடுதலையாக்கி விட்டது. நம்முடைய பழைய மனுஷன் இயேசுவோடுகூட சிலுவையில் அறையப்பட்டாகி விட்டது. எனவே நாம் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும், பிரியமும், பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, நம்முடைய மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாவோம் (ரோமர் 6 : 6, 8 : 2, 12 : 2). ஆமென்.

Sis. Rekha

Share
Published by
Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago