யோவான் 19 : 27 “அதன்பின்பு, எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக: தாகமாயிருக்கிறேன் என்றார்.”

இயேசு ஒன்பதாம் மணி நேரத்தில் சிலுவையில் அறையப்பட்டார். மூன்று மணி நேரங்கள் கடுமையான வெயிலில் கழித்தார். பின்பு இருள் சூழ்ந்தது. அதன்பின் தாகமாயிருக்கிறேன் என்றார். இயேசு சிலுவையில் கூறிய ஐந்தாவது வார்த்தை இது. எருசலேம் மேல் வீட்டறையில் தன் சீஷர்களுடன் இராப்போஜனம் அருந்தினார். அதில் திராட்சைரசம் அருந்தியபின் இயேசு எதையும் அருந்தவோ, குடிக்கவோ இல்லை. கெத்சமெனே தோட்டத்தில் அவரது இரத்தத்தின் பெருந்துளிகள் வேர்வையாய் வந்தது. தன்னோடிருந்த யூதாஸின் துரோகத்தினால் எதிரிகள் அங்கு வந்து கைது செய்து நடு இரவில் காயப்பாவிடம் கொண்டு போனார்கள். அங்கு அவர் விசாரிக்கப்பட்டு பிலாத்துவிடம் கொண்டு போனார்கள் அவர் விசாரித்த பின் கொடூரமான போர்சேவகர்கள் கையில் ஒப்புக் கொடுக்கப்பட்டார். அவர்கள் அடித்துத் துன்புறுத்தியதால் கோரச் சிலுவையைச் சுமந்து கொண்டு கொல்கொதாவின் கொடுமுடிக்கு ஏறினார். இயேசுவின் உடம்பில் 39 பெரிய காயங்கள் ஏற்பட்டதாக வேத ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அதனால் மிகுந்த களைப்பும், வேதனையும் அடைந்தார். ஆனாலும் அதை அவர் வெளிப்படுத்தவில்லை. தாங்க முடியாத வெயிலில் மூன்று மணிநேரம் தொங்கினார். அடுத்த மூன்று மணிநேரம் காரிருள் சூழ்ந்தது. எல்லாப் பாடுகளையும் பொறுமையோடு சகித்தார். 

எல்லாவற்றிலும் இயேசு முறுமுறுக்கவோ, முறையிடவோ இல்லை. தன்னைக் காப்பாற்றும்படி கெஞ்சவும் இல்லை. தாகமாயிருக்கிறேன் என்பது இயேசுவின் சரீரத்துக்குரியது. முடிந்தது என்பது அவரது ஆத்துமாவுக்குரியது. தண்ணீரில்லாமல் நாவு வறண்டதால் தாகமாயிருக்கிறேன் என்றார். இதை சங்கீதக்காரன் சங்கீதம் 22 : 15 ல் கூறியிருப்பதைக் காணலாம். இது சாதாரண தாகமல்ல. ஆத்மாவில் உண்டான வேதனை. ஆத்மாவின் உள்ளார்ந்த வேதனை எப்பொழுதும் சரீரத்தில்தான் வெளியாகும். இயேசுவின் மேல் ஊற்றப்பட்ட கோபத்தின் உக்கிரத்தால் பிதாவோடு பேச முடியாததால் அவருடைய ஆத்துமாவில் ஏற்பட்ட துன்பத்தின் வெளிப்பாடுதான் இந்த தாகம். அவரது சரீர வேதனையில் ஏற்பட்ட தாகம் அது. தன்னுடைய சரீர வேதனையை எளிதாக்குவதற்காக அவர் கூறவில்லை. இயேசு தன்னுடைய சரீரப் பாடுகளிலிருந்து விடுதலை பெற பிரயாசப்படவேயில்லை. இயேசுவுக்கு சரீரத்தில் ஏற்பட்ட வேதனையை விட ஆத்மாவில் ஏற்பட்ட துன்பத்தின் வெளிப்பாடு தான் மிகவும் தாக்கியது. ஒவ்வொரு நாளும் பிதாவோடு பேசி இன்புற்றிருந்தவர் இப்போது பிதாவின் முகம் மறைக்கப் பட்டதால் அந்த ஏக்கமும், அவருடைய ஆத்துமாவில் காணப்பட்ட வியாகூலமும் அவரது சரீரத்தில் வெளிப்படலாயிற்று. தாவீது 

சங்கீதம் 42 : 2ல் “என் ஆத்துமா தேவன்மேல், ஜீவனுள்ள தேவன்மேலேயே தாகமாயிருக்கிறது; நான் எப்பொழுது தேவனுடைய சந்நிதியில் வந்து நிற்பேன்?” 

என்று கூறியிருப்பதைப் பார்க்கிறோம். மனுஷன் அப்பத்தினால் மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படும் ஒவ்வொரு வார்த்தையிலும் பிழைப்பான் என்ற வார்த்தையின்படி இயேசு மாம்ச போஜனத்தை விட வார்த்தையை நிறைவேறுவதற்கு மிகவும் அக்கறை எடுத்துக் கொண்டார். ஆவியானவர் இதில் தாகமாயிருக்கிறேன் என்று மட்டும் கூறாமல் வேத வாக்கியம் நிறைவேறத்தக்கதாகத் தாகமாயிருக்கிறேன் என்று எழுதியிருக்கிறார். அது என்னவென்றால் இயேசுவானவர் பூமியில் வந்து பிறந்து வளர்ந்து, ஊழியம் செய்யத் தகுதியடையும்படி ஞானஸ்நானம் பெற்று ஆவியால் நிரப்பப்பட்டார். தன்னைப் பூமிக்கு அனுப்பின பிதாவாகிய தேவன் தன்னைக் கொண்டு என்னென்ன காரியம் செய்ய வேண்டுமென்றும், என்னென்ன வார்த்தைகள் பேச வேண்டுமென்றும் கூறினாரோ அவைகளையே செய்யவும், அவைகளையே பேசவும் தன்னை அர்ப்பணித்திருந்தார். தன்னைக் குறித்த பிதாவின் சித்தம் என்னவென்பதை வேதவாக்கியங்கள் மூலமாகவும், பிதாவோடு தொடர்ந்து ஐக்கியமாக இருந்ததின் மூலமாகவும் இயேசு கிரியைகளை செய்தார். இரவும், பகலும் தேவனுடைய வார்த்தையைத் தியானம் செய்து தனது இருதயத்தை நிரப்பினார். பிதாவின் சித்தம் நிறைவேற இயேசு தன்னை அர்ப்பணித்ததை இது காட்டுகிறது. 

வானத்திலும், பூமியிலும் சகல அதிகாரம் பெற்றவர், கற்பாறையில் தண்ணீரை வரவழைத்தவர், தண்ணீரையே திராட்சைரசமாக மாற்றினவர், தன்னுடைய நலனுக்காக அவர் எந்த அற்புதமும் செய்யவில்லை. சோதனைக்காரன் அவர் பசியாயிருந்த போது கல்லுகளை அப்பமாக்கும் என்றபோது அவர் அதைச் செய்யவில்லை. அவர் தாகம் தணியக்கடவது என்று நினைத்தாலே போதும் அவரது தாகம் தணிந்துவிடும். ஆனால் அவர் அதைச் செய்யவில்லை. கசப்புக்கலந்த காடியை அவரிடம் கொடுக்க வேண்டும், அவர் தாகமாயிருக்க வேண்டுமென்பது பிதாவின் சித்தமாயிருந்தது. இயேசு தன்னுடைய சொந்த விருப்பத்தை நிறைவேற்ற இந்த உலகத்துக்கு வரவில்லை. பிதா தன்னை அனுப்பின சித்தம் நிறைவேறுவதற்கு எந்தப் பாடுகளையும் அனுபவிக்க ஆயத்தமாயிருந்தார். பிதாவுக்கு எப்போதும் கீழ்ப்படிந்திருந்தார். எந்த உலகப்பொருட்களினாலும் இந்தத் தாகத்தைத் தீர்க்க முடியாது. “தாகமாயிருக்கிறவர்களே என்னிடத்தில் வாருங்கள்” என்று இயேசு அழைக்கிறார். “வருத்தப்பட்டுப் பாரம் சுமக்கிறவர்களே என்னிடத்தில் வாருங்கள்” என்றும் இயேசு அழைக்கிறார். எந்த மதத்தாலும், மத வழிபாடிகளினாலும் இந்தத் தாகத்தைத் திருப்தி படுத்த முடியாது. இயேசு ஒருவரால் மட்டுமே நமது ஆத்தும தாகத்தைத் தீர்க்க முடியும். 

இயேசு ஒரு தடவை சமாரிய நாட்டிலுள்ள யாக்கோபின் கிணற்றண்டை களைப்புடன் அமர்ந்திருந்தார். அங்கு தண்ணீர் மொள்ள வந்த ஒரு பெண்ணிடம் தான் தாகமாயிருக்கிறேன் என்றார். அவளுடைய பழைய வாழ்க்கையைப் பற்றி அவளிடம் கூறினார். அநேக ஆண்களுடன் அவள் தொடர்பு வைத்திருந்ததைக் கூறினார். சிற்றின்பங்களால் அவளுடைய தாகம் தீர்க்கப்படவில்லை. அவள் கொஞ்சம் கொஞ்சமாக இயேசு யாரென்று அறிந்து கொண்டாள். முதலில் இயேசு தீர்க்கதரிசி என்றும், பின் மேசியா என்றும் அவள் அறிந்து கொண்டாள். அவளிடமிருந்து இயேசு தண்ணீர் வாங்கிக் குடித்ததாக வேதத்தில் இல்லை. ஆனால் அதற்குப் பதிலாக அந்த முழு கிராம மக்களின் ஆத்தும தாகத்தைத் தீர்த்ததை யோவான் நான்காம் அதிகாரத்தில் பார்க்கிறோம். சீஷர்கள் கொண்டு வந்த மாம்ச போஜனத்தை விட சமாரியர்களின் ஆத்தும மீட்புக்குத்தான் இயேசு அதிக தாகம் கொண்டதைப் பார்க்கிறோம். மேலும் அவளிடம் தான் கொடுக்கும் தண்ணீரானது நித்தியஜீவ காலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும் என்றார். கலாத்தியர் 3 : 14 ல் கூறப்பட்டது போல ஆபிரகாமுக்கு உண்டான ஆசீர்வாதம் கிறிஸ்து இயேசுவினால் புறஜாதிகளுக்கு வரும்படியாக இயேசு அங்கு சென்றார். அந்தப் பெண் விசுவாசித்து அதை பெற்றாள். இதை பவுலடியார் 

1 கொரிந்தியர் 12 : 13ல் “நாம் யூதராயினும், கிரேக்கராயினும், அடிமைகளாயினும், சுயாதீனராயினும், எல்லாரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம்பண்ணப்பட்டு, எல்லாரும் ஒரே ஆவிக்குள்ளாகவே தாகந்தீர்க்கப்பட்டோம்.” என்கிறார். மேலும் இயேசு 

யோவான் 7 : 37, 38ல் “ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன். வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனோ அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார்.”

நம்முடைய தாகம் தீர்க்கும்படி ஜீவநதியாகிய பரிசுத்த ஆவியானவரை நமக்காக அனுப்பினார். யோவான் சுவிசேஷத்தில் மட்டுமே இயேசு காடியை வாங்கினார் என்று உள்ளது. இயேசு அதைக் குடித்து தன்னுடைய தாகத்தை தீர்த்தார் என்று எந்த சுவிசேஷகனும் குறிப்பிடவில்லை. மாற்கு 15 : 23 ல் வெள்ளைப் போளம் கலந்த திராட்சை ரசத்தைக் குடிக்கக் கொடுத்தார்கள் என்றும் அதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் சங்கீதக்காரன் கூறியிருக்கிறார். அந்தத் தண்ணீரைக் குடித்தால் வேதனைகள் மறந்து போகச் செய்யுமாம். அவைகளை மறுத்துப் போகச் செய்ய இயேசு விரும்பவில்லை. வேதனையிலிருந்து தப்பித்துக் கொள்ள அவர் விரும்பவில்லை. வேதனைகள் அனைத்தையும் இயேசு தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார். இழந்து போனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் உலகத்திற்கு வந்தார். இழந்துபோன ஆத்துமாவைத் தேடுவதோடு அதைக் கண்டுபிடித்து , இரட்சித்து தன்னுடைய மந்தையில் சேர்க்கும் பணியை செய்கின்றார். 

ஒரு பெண் பத்து வெள்ளிக்காசில் ஒன்றைத் தொலைத்துத் தேடியது போல, ஒரு மேய்ப்பன் நுறு ஆடுகளில் தொலைந்த ஒன்றைத் தேடுவதுபோல, ஒரு தகப்பன் இரண்டு பிள்ளைகளில் தன்னை விட்டுத் தூரம்போன ஒரு பிள்ளையைத் தேடியதுபோல தேவன் தொலைந்த ஆத்துமாக்களைத் தேடிக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு விசுவாசியின் உள்ளான தாகமும், விருப்பமும் தேவனது சித்தத்தை நிறைவேற்றுவதாகவே இருக்க வேண்டும். தேவனை நாம் எந்த அளவிற்கு அறிந்து கொள்கிறோமோ அந்த அளவிற்கு அவரது சித்தத்தை நிறைவேற்றுவதற்குத் தாகமுள்ளவர்களாய் இருக்க வேண்டும். நாம் பரிசுத்த ஆவியில் நிறைந்திருந்தால் நம்முடைய தாகமும் தீர்க்கப்படும். தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டு அனுப்பப் பட்டவர்களானால் உயிரோடிருக்கும் காலம் வரை உங்களைக் குறித்த தேவ சித்தம் நிறைவேறும்படி இயேசுவுடன் இடைவிடாத ஐக்கியம் கொண்டு நிலைத்திருங்கள். அப்போது தேவனுக்கென்று மிகுந்த கனிகளைக் கொடுக்க முடியும். 

இதில் இயேசுவின் மூன்று சாயலைப் பார்க்கிறோம். பாடுபடும் மனுஷ குமாரனாகவும், தேவனுக்குக் கீழ்ப்படியும் ஊழியக்கா ரனாகவும், பாவிகளை நேசிக்கும் அன்புள்ள இரட்சகராகவும் பார்க்கிறோம். ஆண்டவர் நமக்காய் வந்தார், நமக்காய் வாழ்ந்தார், நமக்காய் மரித்தார், நமக்காய் உயிர்த்தார், நமக்காய் பரமேறினார். நமக்காய்த் திரும்பவும் வரப்போகிறார். அவர் அன்புள்ளவராய் நம்மைப் பார்க்க முதல்முறை எப்படி வந்தாரோ அப்படியே அன்புள்ளவராய் நம்மை அவரிடம் சேர்த்துக்கொள்ள இரண்டாம் முறையும் வருவார். இதற்கு நாம் ஆயத்தமாயிருக்க வேண்டுவது நமது கடமை. அவர் திரும்ப எப்பொழுது வருவாரென்று ஆவலோடு அனுதினமும் காத்திருந்து அவரோடு இணைந்து கொள்ள நாம் தயாராவோம். ஆமென்!

Sis. Rekha

Share
Published by
Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago