வெளிப்படுத்தல் 16 : 17 “ஏழாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை ஆகாயத்தில் ஊற்றினான்; அப்பொழுது பரலோகத்தின் ஆலயத்திலுள்ள சிங்காசனத்திலிருந்து: ஆயிற்று என்று சொல்லிய பெருஞ்சத்தம் பிறந்தது.”
கிறிஸ்துவின் வருகைக்கு முன்னர் நடைபெறும் ஏழு நியாயத்தீர்ப்பு வரிசையில் இது கடைசி நியாயத்தீர்ப்பாக இருக்கிறது. இது மகா உபத்திரவ காலத்தின் கடைசி காலம். ஏழாவது கோபக்கலசம் பூமியின்மேல் ஊற்றப் படவில்லை. ஆகாயத்தில் ஊற்றப் படுகிறது. இயேசு ஆகாய மண்டலத்திலும் அதிகாரமுடையவராயிருக்கிறார். ஆகாயத் தின்மேல் வருவதற்கு ஆயத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார். வானமண்டலங்களில் செயல்பட்ட சாத்தான் ஏற்கெனவே பூமியில் தள்ளப்பட்டாயிற்று (வெளிப்படுத்தல் 12 : 7 – 9). “ஆயிற்று” என்ற சத்தம் பரலோகத்திலிருக்கும் ஆலயத்துக்குளிருக்கும் சிங்காசனத்திலிருந்து வருகிறது. ஏழாவது எக்காளம் ஊதப்பட்ட போதும் வெளிப்படையான எந்த சம்பவங்களும் உண்டாகாமல்,
வெளிப்படுத்தல் 11 : 15 ல் “ ஏழாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்கும், அவருடைய கிறிஸ்துவுக்குமுரிய ராஜ்யங்களாயின; அவர் சதாகாலங்களிலும் ராஜ்யபாரம்பண்ணுவார் என்னும் கெம்பீர சத்தங்கள் வானத்தில் உண்டாயின.”
என்ற கெம்பீர சத்தம் மட்டும் வானத்தில் உண்டானது. ஏழாவது முத்திரை உடைக்கப்பட்ட போது பரலோகத்தில் ஏறக்குறைய அரை மணி நேரமளவும் அமைதல் உண்டானது என்று வெளிப்படுத்தல் 8 : 1 ல் பார்க்கிறோம். பரலோகத்திலிலுள்ள ஆலயத்திலிருந்து “ஆயிற்று” என்ற சத்தம் உண்டானதி னால் தேவனாகிய கர்த்தர் பேசுகிறார் என்று தெரிகிறது. யோவான் 19 : 10 ல் முடிந்தது என்று சொல்லி இயேசு தலையைச் சாய்த்து ஆவியை ஒப்புக்கொடுத்தார் என்று பார்க்கிறோம். மனித மீட்புக்கான தேவனுடைய தீர்மானம் கல்வாரியில் பூர்த்தியாகி விட்டதென்பதை கிறிஸ்துவின் அறிவிப்பு வெளிப்படுத்துகிறது. சிங்காசனத்திலிருந்து வந்த அறிவிப்போ ஏழாவது கோபக்கலசத்தோடு அந்த மீட்பை ஏற்றுக்கொள்ளாதவர்கள் மேல்வரும் தேவ கோபாக்கினை பூர்த்தியாயிற்று என்பதை உறுதிப்படுத்துகிறது.
வெளிப்படுத்தல் 16 : 18 “சத்தங்களும் இடிமுழக்கங்களும் மின்னல்களும் உண்டாயின; பூமி மிகவும் அதிர்ந்தது, பூமியின்மேல் மனுஷர்கள் உண்டான நாள்முதற்கொண்டு அப்படிப்பட்ட பெரிய அதிர்ச்சியுண்டானதில்லை.”
ஏழாவது முத்திரை உடைக்கப்படும்போது சிறிதுநேர அமைதிக்குப் பின் பலிபீடத்து நெருப்பு பூமியில் கொட்டப்பட்டது. அப்போது சத்தங்களும், இடி முழக்கங்களும், மின்னல்களும், பூமியதிர்ச்சியும் உண்டாயின” (வெளிப்படுத்தல் 8 : 5). ஏழாம் தூதன் எக்காளம் ஊதியபோதும் பரலோகத்தில் ஆலயம் திறக்கப்பட்டு உடன்படிக்கை பெட்டி காணப்பட்ட போது “மின்னல்களும், சத்தங்களும், இடிமுழக்கங்களும்,பூமியதிர்ச்சியும், பெருங்கல்மழையும் உண்டாயின (வெளிப்படுத்தல் 11 : 19). இதில் ஏழாவது கோபக்கலசம் ஊற்றப்படும் போதும் சத்தங்கள், இடிமுழக்கங்கள், மின்னல்கள், பூமியதிர்ச்சி உண்டாயின இப்படிப்பட்ட பூமியதிர்ச்சி இதற்கு முன் உண்டானதே யில்லை. கிறிஸ்துவினுடைய பகிரங்க வருகையின்போது அவருடைய பாதங்கள் ஒலிவ மலையின் மேல் நிற்கும் என்றும், அப்போது உண்டாகும் பூமியதிர்ச்சியினால் ஒலிவ மலை தன் நடுமையத்திலே கிழக்கு மேற்காய் எதிராகப் பிளந்துபோம் என்றும் சகரியா 14 : 4 ல் வாசிக்கிறோம். கடைசி நாட்களில் பாலஸ்தீன் தேசத்து பூகோள அமைப்பில் பெரிய மாற்றம் உண்டாகும் என்பதை எசேக்கியேல் 47 : 1 – 12 உறுதிப்படுத்துகிறது.
வெளிப்படுத்தல் 16 : 19 “அப்பொழுது மகா நகரம் மூன்று பங்காகப் பிரிக்கப்பட்டது, புறஜாதிகளுடைய பட்டணங்கள் விழுந்தன. மகா பாபிலோனுக்கு தேவனுடைய உக்கிரமான கோபாக்கினையாகிய மதுவுள்ள பாத்திரத்தைக் கொடுக்கும்படி அது அவருக்கு முன்பாக நினைப்பூட்டப்பட்டது.”
மகாநகரம் ஏன் மூன்று பங்காகப் பிரிக்கப்படுகிறது என்று தெரியவில்லை. மூன்று அசுத்த ஆவிகள் செயல்படுவதினால் அப்படி நடந்திருக்கலாம். அல்லது நகரம் முற்றிலுமாக அழிக்கப்படுவதாக எடுத்துக் கொள்ளலாம். எசேக்கியேல் 5 : 2 ல் மூன்றில் ஒரு பங்கு குறிப்பிடப்படுகிறது. இந்த மகா பாபிலோன் என்பது கடைசி நாட்களில் முந்தின பாபிலோன் இருந்த இடத்தில் கட்டப்படவிருக்கும் உலகத் தலைநகரைக் குறிக்கிறது. இதைத்தவிர புறஜாதிகளின் பட்டணங்கள் விழுந்தன என்றும் பார்க்கிறோம். அப்படியானால் ஏழாவது கோபக்கலசம் ஊற்றப்படும் போது நியூயார்க், லண்டன், பாரீஸ், டோக்கியோ, டில்லி, மும்பை, சென்னை போன்ற உலகின் பெரிய பட்டணங்களில் பெரிய அழிவு உண்டாகுமென்று தெரிகிறது. இவ்வாறு பட்டணங்கள் சேதமடையும் போது உலகம் முழுவதும் பெரிய பாதிப்பு உண்டாகும். மகாபாபிலோனுக்கு தேவனுடைய உக்கிரமான கோபாக்கினையாகிய மதுவின் பாத்திரம் கொடுக்கப்பட வேண்டும் என்று அவருக்கு நினைவு படுத்தப்பட்டது. தேவநீதிக்கு எதிராகச் செயல்படும் இந்த வல்லமையான சக்தி நாளுக்குநாள் பெலனடைந்து கொண்டு வருவதை அறிவோம். கடைசி நாட்களில் தேவன் இந்த சக்தியை நிர்மூலமாக்குவார் (எரேமியா 51 : 62 – 64).
வெளிப்படுத்தல் 16 : 20, 21 “தீவுகள் யாவும் அகன்றுபோயின, பர்வதங்கள் காணப்படாமற்போயின. தாலந்து நிறையான பெரிய கல்மழையும் வானத்திலிருந்து மனுஷர்மேல் விழுந்தது; அந்தக் கல்மழையினால் உண்டான வாதையினிமித்தம் மனுஷர்கள் தேவனைத் தூஷித்தார்கள் அந்த வாதை மகா கொடியதாயிருந்தது.”
வெளிப்படுத்தல் 6 : 14 ல் “மலைகள் தீவுகள் யாவும் தங்கள் இடங்களை விட்டு அகன்று போயின” என்றுள்ளது. இதில் தீவுகளும், பட்டணங்களும்கூட பெருமளவில் பாதிக்கப்படுகின்றன. பூமியதிர்ச்சி எருசலேமில் மையம் கொண்டிருந்தாலும், உலகமெங்கும் பரவுகிறது. இதன் விளைவாக பெரிய சேதம் உண்டாகும். கல்மழையானது வேதத்தில் நியாயத்தீர்ப்புக்கு அடையாளமாகக் குறிப்பிடப்படுகிறது (யாத்திராகமம் 9 : 23, 24, யோசுவா 10 : 11, சங்கீதம் 78 : 47, 105 : 32, ஏசாயா 28 : 2, 30 : 30, எசேக்கியேல் 13 : 11, 38 : 22, ஆகாய 2 : 17). எகிப்தின் ஏழாவது வாதை சம்பந்தப்பட்டது கல்மழையாகும் (யாத்திராகமம் 9ம் அதிகாரம்). முதலாவது எக்காளம் ஊதியபோதும் (வெளிப்படுத்தல் 8 : 7), ஏழாவது எக்காளம் ஊதியதை அடுத்தும் (வெளிப்படுத்தல் 11 : 19) கல்மழை விழுந்தது. எசேக்கியேல் தீர்க்கதரிசி தன்னுடைய எசேக்கியேல் 13 : 13 லிலும், 38 : 22 லிலும் கல்மழையை வருஷிக்கப் பண்ணுவார் என்றுள்ளது.
ஆனால் இந்தக் கல்மழை மிகக் கொடுமையானதாக இருக்க வேண்டும். ஏனென்றால் ஒரு தாலந்து என்பது சுமார் 114 பவுண்டு எடையைக் குறிப்பிடுகிறது. இவ்வளவு எடையுள்ள கல் வானத்திலிருந்து விழுமானால் பெரிய பாதிப்பு உண்டாகும். இந்தக் கடினமான நியாயத்தீர்ப்பு உலகமெங்கும் பெரிய நாசத்தை உண்டு பண்ணியது என்றாலும் ஜனங்கள் யாரும் மனம் திரும்பவில்லை. வெளிப்படுத்தல் 14 : 10 ல் “தேவனுடைய கோபாக்கினையாகிய பாத்திரம்” என்று அழைக்கப்படும் கோபக்கலசங் கள் ஊற்றப்பட்டு முடிந்தது. இந்த வாதைகளின்போது கூடுதலாகப் பாதிக்கப் பட்டவர்கள் அந்திகிறிஸ்துவும், அவனையும் வலுசர்ப்பத்தையும் அங்கீகரித்துக் கொண்டவர்களும், அவனுடைய சாம்ராஜ்ஜியமும்தான். இந்த வாதைகளின் முடிவில் அர்மகெதோன் யுத்தம் நடக்கிறது. பாபிலோன், எருசலேம் மற்றும் புறஜாதியாரின் பட்டணங்களை பெருத்த சேதத்தைச் சந்திக்கின்றன. ஆமென்.
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…