ஏழு கோபக்கலசங்கள்

ஆறாவது கோபக்கலசம் – வெளிப்படுத்தல் 16:12

  1. ஐபிராத் நதியின் தண்ணீர் வற்றிப் போயிற்று:

வெளிப்படுத்தல் 16 : 12 “ ஆறாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை ஐப்பிராத்து என்னும் பெரிய நதியின்மேல் ஊற்றினான்: அப்பொழுது சூரியன் உதிக்குந் திசையிலிருந்தும் ராஜாக்களுக்கு வழி ஆயத்தமாகும்படி அந்த நதியின் தண்ணீர் வற்றிப்போயிற்று.”

ஆறாம் தூதன் எக்காளம் ஊதியபோது ஐபிராத் நதியண்டையில் கட்டப் பட்டிருந்த நான்கு தூதர்கள் அவிழ்த்து விடப்பட்டதை வெளிப்படுத்தல் 9 : 13 ல் உள்ளது. “ஐப்பிராத் நதி” என்ற வார்த்தை வேதத்தில் 21 இடங்களிலும், “ஐபிராத் நதியான பெரிய நதி” என்று நான்கு இடங்களிலும் குறிப்பிடப்படுகி றது. 1800 மைல் நீளமுடைய இந்தப் பெரிய நதியின் தண்ணீர் வற்றிப் போகும் படியாக தேவன் செய்கிறார். அதற்குக் காரணம் ராஜாக்களுக்கு வழியை ஆயத்தமாக்குவதற்காகத்தான். சூரியன் உதிக்கும் கிழக்குத் திசையிலிருந்து இராணுவ வீரர்கள் இதன் மூலமாகப் பாலஸ்தீனத்திற்குள் பிரவேசிக்கிறார்கள். பெர்சிய மன்னனான கோரேஸ் ஐபிராத் நதியைத் திசை திருப்பி வற்றிப் போகப்பண்ணிய பின்புதான் பாபிலோன் பட்டணத்தைக் கைப்பற்றினான் (எரேமியா 51 : 30 – 32, ஏசாயா 13 : 5 – 11). இந்த ராஜாக்களின் “குதிரைச் சேனைகளாகிய இராணுவங்களின் தொகை இருபது கோடியாயிருந்தது (வெளிப்படுத்தல் 9 : 16) என்றுள்ளது., 

நதியண்டையிலிருந்து அவிழ்த்து விடப்பட்ட நான்கு தூதர்களும் இந்த ராணுவத்தை ஆயத்தம் பண்ணுகிறார்கள் என்றுமுள்ளது. உலக சரித்திரத்தில் மகா அலெக்ஸ்சாண்டர், நெப்போலியன் போனபார்ட் போன்ற மேற்கத்திய நாட்டு அதிபதிகளின் இராணுவங்கள் ஆசியா போன்ற கிழக்கத்திய நாடுகளுக்குள் பிரவேசித்திருப்பதை அறிவோம். முதல்முறையாக கிழக்கு நாடுகளின் இராணுவம் மேற்கு நாடுகளுக்குள் வரும்படியாக ஐபிராத் நதி வற்றிப் போகிறது. உபத்திரவ காலத்தின் பின்பகுதியில் அந்திகிறிஸ்து உலகநாடுகள் அனைத்தையும் தன்னுடைய ஆட்சியின் கீழ் கொண்டு வருவான். சீனா, ஜப்பான், மலேசியா தாய்லாந்து, இந்தோனேசியா, இந்தியா, சிங்கப்பூர் முதலிய கிழக்கத்திய நாடுகள் அந்திகிறிஸ்துவின் ஆதிக்கத்தை ஏற்றுக்கொள்ள மறுத்து, அவனுக்கு எதிராக பிகப்பெரிய இராணுவத்தை ஆயத்தப்படுத்துவார்களென்றும், அவனுக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள் என்றும் சொல்லப்படுகிறது. 

அதனால்தான் ராஜாக்கள் என்று பன்மையில் குறிப்பிடப்படுகிறார்கள். ஆனாலும் வெளிப்படுத்தல் 16 : 13, 14 ல் சொல்லப்படும் அற்புதங்களைச் செய்கிற பிசாசுகளின் ஆவிகளினால் வஞ்சிக்கப்பட்டு, தேவாதி தேவனுக்கு விரோதமாக அந்திகிறிஸ்து வோடு தங்களை இணைத்துக் கொள்வார்கள். இஸ்ரவேலர் பார்வோனின் இராணுவத் தினால் அழிக்கப்படாதபடிக்குத் தேவன் செங்கடலை வற்றிப் போகப் பண்ணினார் (யாத்திராகமம் 14 : 21). கானானுக்குள் பிரவேசிக்கும்படியாக யோர்தான் நதியை இரண்டாகப் பிரிந்து போகச் செய்தார் (யோசுவா 3 : 17). அதேபோல் கிழக்குத் தேசத்து இராணுவம் அர்மகெதோன் யுத்தத்தில் கலந்துகொள்ள வேண்டுமென்பதற்காக ஐபிராத் நதியை வற்றிப் போகப் பண்ணப் போகிறார். 

ஏசாயா 11 : 15 ல் “எகிப்தின் சமுத்திரமுனையைக் கர்த்தர் முற்றிலும் அழித்து, தம்முடைய காற்றின் வலுமையினால் நதியின்மேல் தமது கையை நீட்டி, ஏழாறுகளாகப் பிரித்து, ஜனங்கள் கால்நனையாமல் கடந்துபோகும்படி பண்ணுவார்.”

சகரியா 10 : 11 ல் “ இடுக்கமென்கிற சமுத்திரத்தைக் கடக்கையில் அவர் சமுத்திரத்தின் அலைகளை அடிப்பார்; அப்பொழுது நதியின் ஆழங்கள் எல்லாம் வறண்டுபோம்;”

  1. தவளைக்கு ஒப்பான மூன்று ஆவிகள் புறப்படுதல்:

வெளிப்படுத்தல் 16 : 13, 14, 16 “அப்பொழுது, வலுசர்ப்பத்தின் வாயிலும் மிருகத்தின் வாயிலும் கள்ளத்தீர்க்கதரிசியின் வாயிலுமிருந்து தவளைகளுக்கு ஒப்பான மூன்று அசுத்த ஆவிகள் புறப்பட்டுவரக்கண்டேன். அவைகள் அற்புதங்களைச் செய்கிற பிசாசுகளின் ஆவிகள்; அவைகள் பூலோகமெங்குமுள்ள ராஜாக்களைச் சர்வவல்லமையுள்ள தேவனுடைய மகாநாளில் நடக்கும் யுத்தத்திற்குக் கூட்டிச்சேர்க்கும்படிக்குப் புறப்பட்டுப்போகிறது. அப்பொழுது எபிரெயு பாஷையிலே அர்மகெதோன் என்னப்பட்ட இடத்திலே அவர்களைக் கூட்டிச் சேர்த்தான்.”

“அப்பொழுது” என்ற வார்த்தை ஐபிராத் நதி வற்றிப் போவதினால் கிழக்குத் திசை ராஜாக்களின் இராணுவம் பாலஸ்தீனுக்குள் பிரவேசிக்கும் போகிறது என்பதாகும். பூலோகமெங்குமுள்ள ராஜாக்கள் கடைசி காலத்தில் கூட்டிச் சேர்க்கப்படுகிறார்கள். இஸ்ரவேல் ஒரு சிறிய நாடு. எனவே அதை எதிர்த்துப் போரிடுவதற்கு ஒரு பெரிய படை தேவையில்லை. ஆனால் தாங்கள் கிறிஸ்துவை எதிர்த்துப் போரிட நேரிடுமென்பது சாத்தானுக்குத் தெரியும் என்பதால் உலகநாடுகளின் படைகளைத் திரட்டுவதற்கு முயற்சி செய்வான். ஆறாவது கோபக்கலசத்துக்கும், ஏழாவது கோபக்கலசத்துக்கும் இடைப்பட்ட இடைவெளியில் இது நடக்கும். வலுசர்ப்பம், மிருகம், கள்ளத்தீர்க்கதரிசி ஆகிய மூன்று நபர்களின் வாயிலிருந்து தவளைக்கு ஒப்பான மூன்று அசுத்த ஆவிகள் புறப்பட்டு வருவதை யோவான் பார்க்கிறார். இவை தவளைகளைப் போல அசுத்தமானவை, அருவருப்பானவை (லேவியராகமம் 11 : 10). அவர்கள் பூமியெங்கும் பொய்யின் ஆவியாக செயல்படும் விதத்தை 1 இராஜாக்கள் 22 : 21, 22 ல் பார்க்கிறோம். 

இந்த மூன்று அசுத்த ஆவிகளும் வலுசர்ப்பம், மிருகம், கள்ளத்தீர்க்கதரிசி ஆகியோரின் வாயிலிருந்து வெளிப்படுகிறது. அவை அவர்களுடைய தூதுவர்களாகவும், செய்தியாளர்களாகவும் செயல்படும். அவைகள் அற்புதங்களைச் செய்கிற பிசாசின் ஆவிகள். இரண்டு வஸ்திரமுடுத்திய சாட்சிகளுக்குப் போட்டியாக இவைகள் பொய்யான அற்புத அடையாளங்களை நடப்பிக்கின்றன. இந்த அடையாளங்களின் மூலமாகப் பூமியின் ராஜாக்கள் கவரப்படுகிறார்கள். அந்த ஆவிகள் அர்மகெதோன் என்னப்பட்ட இடத்திலே அவர்களைக் கூட்டிச் சேர்த்தன. அந்தி கிறிஸ்துவுக்கு எதிராக ஆயத்தமாக்கப்பட்ட கிழக்குத் திசையிலிருந்து புறப்படும் இராணுவம் அவனோடிணைந்து சர்வவல்லமையுள்ள தேவனுடன் யுத்தம் செய்ய துணிகரம் கொள்ளுகிறது. தேவனுடைய மகாநாளுக்கென்று நியமிக்கப்பட்ட காரியங்கள் ஒவ்வொன்றாக வெகு வேகமாக நிறைவேறிக் கொண்டிருக்கின்றன. 

செப்பனியா 3 : 8 ல் “ ஆகையால் நான் கொள்ளையாட எழும்பும் நாள்மட்டும் எனக்குக் காத்திருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; என் சினமாகிய உக்கிரகோபத்தையெல்லாம் அவர்கள்மேல் சொரியும்படி ஜாதிகளைச் சேர்க்கவும், ராஜ்யங்களைக் கூட்டவும் நான் தீர்மானம்பண்ணினேன்; பூமியெல்லாம் என் எரிச்சலின் அக்கினியினால் அழியும்.”

ஏசாயா 41 : 25 ல் “ நான் வடக்கேயிருந்து ஒருவனை எழும்பப்பண்ணுவேன், அவன் வருவான்; சூரியோதய திசையிலிருந்து என் நாமத்தைத் தொழுதுகொள்ளுவான்; அவன் வந்து அதிபதிகளைச் சேற்றைப்போலவும், குயவன் களிமண்ணை மிதிப்பதுபோலவும் மிதிப்பான்.”

ஏசாயா 46 : 11 ல் “உராய்ஞ்சுகிற ஒரு பட்சியைக் கிழக்கிலிருந்தும், என் ஆலோசனையை நிறைவேற்றும் மனுஷனை தூரதேசத்திலிருந்தும் வரவழைக்கிறவராயிருக்கிறேன்; அதைச் சொன்னேன், அதை நிறைவேற்றுவேன்; அதைத் திட்டம்பண்ணினேன். அதைச் செய்து முடிப்பேன்.”

இதை யோவேல் 3 : 11 – 16 லிலும் பார்க்கலாம். பிசாசின் ஆவிகள் பூமியின் ராஜாக்களை வஞ்சித்து, தேவனுக்கு விரோதமாகக் கூட்டிச் சேர்ப்பது போல் காணப்பட்டாலும், அதில் தேவனுடைய தீர்மானமே நிறைவேறும்.

Sis. Rekha

Share
Published by
Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago