பரலோக ராஜ்ஜியத்தின் இரகசியங்களை எல்லோரும் புரிந்து கொள்ளும்படி இயேசு உவமைகளாகக் கூறினார். கல்யாண விருந்தாகிய இந்த உவமையை மத்தேயு 22 : 2 – 14ல் காணலாம். இந்த உவமையில் பரலோகராஜ்யமானது தன் மகனுக்குக் கல்யாணம் செய்கிற ஒரு ராஜாவுக்கு ஒப்பாயிருக்கிறது என்று இயேசு கூறினார். இதை இயேசு தன்னுடைய ஊழியத்தின் மூன்றரை ஆண்டின் இறுதியில் கூறினார். இந்த உவமை இஸ்ரவேலரையும், அவர்கள் நற்செய்தியைப் புறக்கணித்ததைப் பற்றியதாக இருந்தாலும் இன்றைய சபைகளுக்கும், ஒவ்வொரு விசுவாசிக்கும் பொருத்தமானது. இந்த செய்தி பரிசேயர்களுக்கும், ஆசாரியர்களுக்கும், தேவாலயத்திற்கு வந்த மூப்பர்களுக்கும் கூறப்பட்ட செய்தி.
ராஜா தன்னுடைய மகனின் திருமணத்திற்குக் கொடுத்த அழைப்பு:
மத்தேயு 22 : 2 -4 “பரலோகராஜ்யம் தன் குமாரனுக்குக் கலியாணஞ்செய்த ஒரு ராஜாவுக்கு ஒப்பாயிருக்கிறது.”
“அழைக்கப்பட்டவர்களைக் கலியாணத்திற்கு வரச்சொல்லும்படி அவன் தன் ஊழியக்காரரை அனுப்பினான்; அவர்களோ வர மனதில்லாதிருந்தார்கள்.”
“அப்பொழுது அவன் வேறு ஊழியக்காரரை அழைத்து: நீங்கள் போய், இதோ, என் விருந்தை ஆயத்தம்பண்ணினேன், என் எருதுகளும் கொழுத்த ஜெந்துக்களும் அடிக்கப்பட்டது, எல்லாம் ஆயத்தமாயிருக்கிறது; கலியாணத்திற்கு வாருங்கள் என்று அழைக்கப்பட்டவர்களுக்குச் சொல்லுங்களென்று அனுப்பினான்.”
இந்த உவமையில் ராஜா பிதாவுக்கு ஒப்புமையாகவும், குமாரன் இயேசுவுக்கு ஒப்புமையாகவும், குமாரரின் கல்யாணம் இயேசுவின் விருந்தையும் குறிக்கிறது. சுட்டெரிக்கப்பட்ட பட்டணம் இஸ்ரவேல் தேசத்தைக் குறிக்கிறது. யூதர்களின் திருமணம் இயேசுவின் காலத்தில் எவ்வாறு நடக்குமென்றால் பெண் வீட்டாரும், மாப்பிள்ளை வீட்டாரும் முதலில் ஒப்பந்தம் செய்வார்கள். ஒப்பந்தம் செய்தபின் மாப்பிள்ளை வீட்டார்தான் எல்லா ஆயத்தமும் செய்வார்கள். திருமணம் ஓரு வாரகாலம் நடக்கும். இயேசு கூறிய இந்த உவமையில் ராஜா தன்னுடைய மகனுடைய கல்யாணத்திற்குப் பெரிய விருந்து நடத்துகிறான். ராஜா வீட்டில் திருமணம் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்னே எல்லோருக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டது. அழைக்கப்பட்டவர்களைக் கல்யாணத்திற்கு வரச் சொல்லி தன்னுடைய ஊழியக்காரரை அனுப்பினான். அவர்களுக்குக் கல்யாணத்திற்கு வர விருப்பமில்லை. திரும்பவும் ராஜா வேறு ஒரு ஊழியக்காரனை அழைக்கப்பட்டவர்களிடம் அனுப்பினார். அவர்கள் போய் எருதுகளும், கொழுத்த ஜெந்துகளும் அடிக்கப்பட்டு விருந்து ஆயத்தமாயிருக்கிறது என்று கூறி கல்யாணத்திற்கு அழைத்தான்.
இது எதைக்காட்டுகிதென்றால் இயேசுவின் இரண்டாம் வருகைக்குப்பின் ஒரு கல்யாணவிருந்து பரலோகத்தில் பிதாவின் வீட்டில் நடக்கும் (வெளிப்படுத்தல் 19 : 7). ஆயிரவருட அரசாட்சியின் ஆரம்பத்தில் கர்த்தருடைய பிள்ளைகள் எல்லோரும் அதில் கலந்து கொள்வார்கள். அதற்காகத் தேவன் தன்னுடைய பிள்ளைகளை அழைத்துக் கொண்டே வருகிறார். பழைய ஏற்பாட்டுக் காலத்தில் தீர்க்கதரிசிகள் மூலமாகவும், ராஜாக்கள் மூலமாகவும் தன்னுடைய பிள்ளைகளை அழைத்தார். தேவன் முதன்முதலில் அழைத்தது இஸ்ரவேல் தேசத்து மக்களைத்தான். அவர்களுக்கு இரட்சிப்பைக் கொடுத்து, நித்திய ராஜ்யத்தில் அவரோடு இருப்பதற்காக அழைத்தார். ஆனால் அவர்கள் தேவனுடைய அழைப்பை ஏற்றுக்கொள்ளத் தவறிவிட்டனர். புதிய ஏற்பாட்டு காலத்தில் இயேசு “வருத்தப்பட்டுப் பாரஞ்சுசுமக்கிறவர்களே எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள் இளைப்பாறுதல் தருவேன்“ என்று எல்லோருக்கும் அழைப்பு கொடுத்தார். அதன்பின் சீஷர்கள் மூலமாகவும் பவுல் மூலமாகவும் அழைப்பு கொடுக்கப்பட்டது.
ராஜாசெய்ததும், கட்டளையிட்டதும்:
மத்தேயு 22 : 6 – 10 “மற்றவர்கள் அவன் ஊழியக்காரரைப் பிடித்து, அவமானப்படுத்தி, கொலைசெய்தார்கள்”
“ராஜா அதைக் கேள்விப்பட்டு, கோபமடைந்து, தன் சேனைகளை அனுப்பி, அந்தக் கொலைபாதகரை அழித்து, அவர்கள் பட்டணத்தையும் சுட்டெரித்தான்.”
“அப்பொழுது, அவன் தன் ஊழியக்காரரை நோக்கி: கலியாண விருந்து ஆயத்தமாயிருக்கிறது, அழைக்கப்பட்டவர்களோ அதற்கு அபாத்திரராய்ப்போனார்கள்.”
“ஆகையால், நீங்கள் வழிச்சந்திகளிலே போய், காணப்படுகிற யாவரையும் கலியாணத்திற்கு அழைத்துக்கொண்டு வாருங்கள் என்றான்.”
“அந்த ஊழியக்காரர் புறப்பட்டு, வழிகளிலே போய், தாங்கள் கண்ட நல்லார் பொல்லார் யாவரையும் கூட்டிக்கொண்டுவந்தார்கள்; கலியாணசாலை விருந்தாளிகளால் நிறைந்தது.”
மற்றவர்கள் ராஜா அனுப்பின ஊழியக்காரரை அவமானப்படுத்திக் கொலை செய்தனர். ராஜா ஒருவருக்கு அழைப்புக் கொடுக்கிறாரென்றால் அழைக்கப்பட்டவர்கள் சந்தோஷத்தில் அல்லவா போக வேண்டும். ஆனால் இங்கு நேர்மாறாக அழைக்க வந்தவர்களையே கொலை செய்தனர் என்று பார்க்கிறோம். அதைக் கேள்விப்பட்டு ராஜா கடுங்கோபங்கொண்டு தன்னுடைய சேனைகளை அனுப்பி அந்தக் கொலைபாதகர்களை மட்டும் அழிக்காமல் அவர்களுடைய பட்டணத்தையும் சுட்டெரித்துப் போடச் செய்திருக்கிறார் என்றுள்ளது. அந்தப் பட்டணத்தையும் சுட்டெரித்தார் என்பதிலிருந்து ராஜா அந்தப் பட்டணத்துக்குத் தனியாக அழைப்பு கொடுத்திருப்பார். எனவேதான் அந்தப் பட்டணத்தையும் சுட்டெரித்திருக்கிறார். ராஜா வேறு ஊழியக்காரரை அழைத்துக் கல்யாண விருந்து ஆயத்தமாயிருந்தும் அழைக்கப்பட்டவர்கள் அபாத்திரமானதால் தெருவிலே, வீதியிலே இருக்கிறவர்களைக் கூட்டி வரச்சொன்னார். விருந்தை நிறுத்தவில்லை. அதன்படியே ஊழியக்காரர்கள் போய் நல்லவர்கள், பொல்லாதவர்கள், ஏழைகள், பணக்காரர்கள், படித்தவர்கள், படிக்காதவர்கள், சின்னவர், பெரியவர் யாவரையும் அழைத்து வந்தனர். கல்யாணசாலை விருந்ததாளிகளால் நிறைந்தது. கல்யாணசாலையில் நுழையும் அனைவருக்கும் ராஜாவின் சார்பாக புதிய வஸ்திரத்தைக் கொடுப்பார்கள் (2இராஜாக்கள் 10 : 22).
இயேசுவுக்கும் அதேபோல் நடந்த சம்பவம் என்னவென்றால், நாசரேத்தில் ஒரு பிரசங்கம்தான் இயேசு பண்ணினார். ஏசாயா தீர்க்கதரிசியின் வார்த்தைகளைத்தான் பிரசங்கித்தார் அவர்கள் இயேசுவைக் கொலை செய்யப் பார்த்தார்கள். யூதர்கள் காலத்தில் சுவிசேஷத்தை அறிவிக்கும்போது இயேசு நல்லவர் என்று சொன்னால் அவர்களைக் கொலை பண்ணுவதற்கும் தயங்கினதில்லை. இஸ்ரவேலின் 10 கோத்திரங்களையும் இரண்டாகப் பிரித்திருந்தனர். அதனால்தான் இயேசு மத்தேயு 23 : 37 ல் எருசலேமே, எருசலேமே என்று இரண்டு தடவை அழைக்கிறார். 2 கோத்திரத்துச் ஜனங்களுக்கும் தீர்க்கதரிசிகள் போயும் அவர்கள் அவர்களை ஏற்றுக்கொள்ளாமல் கொலை செய்தனர். அதனால் மத்தேயு 23 : 38ல் கூறியதைப் போல் எருசலேம் பட்டணம் கி. பி 70 ம் ஆண்டிலே நொறுக்கப்பட்டு அழிக்கப்படப் போகிறதற்குரிய முன்னறிவிக்கும் வார்த்தைகளாக உள்ளது. ரோமதளபதி டைட்டஸ் இதைச் செய்தான். அவர்கள் உலகமெங்கும் சிதறடிக்கப் பட்டார்கள். முதல் வருகையில் இயேசு புறஜாதிகளை அழைக்கக் கவனம் செலுத்தினார். ஆனால் இயேசு பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டபின் அவரோடிருந்த 12 சீஷர்களும் உலகமெங்கும் போய் எல்லோருக்கும் சுவிசேஷம் அறிவித்தனர். அப்போஸ்தலர் 13 : 46ல் பவுலும், பர்னபாவும் தைரியமாகப் புறஜாதிகளுக்கு சுவிசேஷம் அறிவித்ததைப் பார்க்கிறோம்.
கர்த்தரின் அழைப்பையும், இயேசுவின் அழைப்பையும், அவருடைய உபதேசத்தையும் இஸ்ரவேல் ஜனங்கள் புறக்கணித்ததால் புறஜாதிகளுக்கு அந்த அழைப்பு போனது. மேலும் பல தலைமுறைகளாக கிறிஸ்தவர்களாக இருப்பவர்கள் இயேசுவைப் பின்பற்றாதபடியால் புதிதாக அவரை ஏற்றுக்கொள்ளுகிறவர்கள் பரலோக ராஜ்யத்தின் விருந்திற்கு அனுமதிக்கப்படுவர். பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு. பரலோகமானது தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட பரிசுத்தவான்களால் நிரம்பும்.
ராஜா கொடுத்த தண்டனை:
மத்தேயு 22 : 11 – 13 “விருந்தாளிகளைப் பார்க்கும்படி ராஜா உள்ளே பிரவேசித்தபோது, கலியாண வஸ்திரம் தரித்திராத ஒருமனுஷனை அங்கே கண்டு:”
“சிநேகிதனே, நீ கலியாண வஸ்திரமில்லாதவனாய் இங்கே எப்படி வந்தாய் என்று கேட்டார். அதற்கு அவன் பேசாமலிருந்தான்.”
“அப்பொழுது, ராஜா பணிவிடைக்காரரை நோக்கி: இவனைக் கையுங்காலும் கட்டிக்கொண்டுபோய், அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கிற புறம்பான இருளிலே போடுங்கள் என்றான்.”
கல்யாணத்திற்கு வந்திருக்கிற விருந்தாளிகளைப் பார்க்கும்படி அங்கு ராஜா விருந்துசாலைக்குள் பிரவேசித்தார். அங்கு கூட்டம் நிரம்பியிருந்தது. ராஜா பார்த்துக்கொண்டே வந்தார். ராஜா வந்திருந்தவர்களிடம் விருந்துண்டதைப் பற்றிக் கேட்காமல், அவர்கள் வஸ்திரம் அணிந்திருக்கிறார்களா என்றுதான் பார்த்தார். அங்கு கல்யாண வஸ்திரம் இல்லாத ஒரு மனிதனைப் பார்க்கிறார். அவர்கள் தங்கள் ஆடையோடு வந்தது பிரச்சனையில்லை. உள்ளுக்குள் வந்த பின் அழுக்கு ஆடையோடு இருந்தது தவறு. அவர்களுக்குரியதைக் களைந்து, கல்யாண வீட்டில் கொடுக்கும் வஸ்திரத்தை வாங்கி அணிந்திருக்க வேண்டும். அவனைப் பார்த்து ராஜா கல்யாண வஸ்திரம் இல்லாதவனாய் எப்படி வந்தாய் என்று கேட்டார். அவன் அதற்குப் பதில் பேசாமலிருந்தான். ராஜாவுக்கு முன்பாக யாரும் பேசமுடியாது. எனவே ராஜா அவனுடைய கையையும், காலையும் கட்டி அழுகையும் பற்கடிப்பும் உள்ள நரகத்தில் போடுங்கள் என்று கட்டளையிட்டார்.
கல்யாண வஸ்திரம் என்பது இரட்சிப்பிற்குத் தேவையான நீதியின் வஸ்திரத்தைக் குறிக்கிறது (ஏசாயா 61 : 10). இது இயேசுவை விசுவாசிக்கிற ஒவ்வொருவருக்கும் இலவசமாகவே கொடுக்கப்படுகிறது. இரட்சிப்பின் வஸ்திரத்தைத் தரித்த பின் ஞானஸ்நானம் எடுக்கவேண்டும். சபையின் அங்கத்தினராக மாற வேண்டும். சபையின் பந்தியில் பங்குபெற வேண்டும். இதுதான் நியமம். இவ்வாறாக நாம் பெற்றுக்கொள்ளுகிற நீதியைக் குறித்து அப்போஸ்தலனாகிய பவுல்,
ரோமர் 3 : 21, 22 ல் “இப்படியிருக்க, நியாயப்பிரமாணமில்லாமல் தேவநீதி வெளியாக்கப்பட்டிருக்கிறது; அதைக்குறித்து நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களும் சாட்சியிடுகிறது.”
“அது இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவநீதியே; விசுவாசிக்கிற எவர்களுக்குள்ளும் எவர்கள்மேலும் அது பலிக்கும், வித்தியாசமே இல்லை.”
வேதத்தில் இரட்சிப்பின் வஸ்திரம் (ஏசாயா 61 : 10), நீதியின் சால்வை (ஏசாயா 61 : 10), துதியின் உடை (ஏசாயா 61 : 3), அலங்கார வஸ்திரம் (ஏசாயா 52 : 1), பொன் சரிகை (சங்கீதம் 45 : 13), சித்திரத் தையலாடை (சங்கீதம் 45 : 14), மெல்லிய வஸ்திரம் (வெளிப்படுத்தல் 19 : 8) என்று தேவன் நமக்கு முக்கியமான வஸ்திரங்களைத் தந்திருக்கிறார். இயேசுகிறிஸ்துவை தேவனென்று விசுவாசித்து அவருடைய நீதியை நிறைவேற்றும் போது இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ள முடியும். நாம் ஞானஸ்நானம் எடுத்து, நீதியின் சால்வையை அணிந்திருந்தாலும் கிறிஸ்துவின் வஸ்திரத்தை தரித்துக் கொண்டிருந்தாலும் தேவன் தந்திருக்கும் இத்தகைய வஸ்திரங்களை பாதுகாக்கப்பட வேண்டியது மிகமிக அவசியம்.
தேவனுடைய நீதியை நிறைவேற்றும்போது கிறிஸ்துவின் குடும்பத்தில் அப்பாபிதாவே என்று கூப்பிடும் தேவனுடைய பிள்ளைகளாகிறோம். அதனால் தேவனுடைய புத்திரர் என்றும் (கலாத்தியர் 3 : 26), தேவனுடைய ஆவியினால் நடத்தப்பட்டு தேவனுடைய புத்திரராயிருக்கிறோமென்றும் (ரோமர் 8 : 14), அழைக்கப்படுகிறோம். எனவே நாம் ஒவ்வொருவரும் அழுகையும் பற்கடிப்புமான இடத்துக்குப் போகாமல் தேவன் அழைக்கும் போது அந்த கல்யாணசாலைக்குள் பிரவேசித்து நித்தியஜீவனை சுதந்தரித்துக் கொள்ளப் பிரயாசப்பட வேண்டும். அப்பொழுது ஏசாயா 25 : 6 — 8 ல் கூறப்பட்டதைப்போல சகல ஜனங்களுக்கும் தேவன் அந்த விருந்தை ஆயத்தப்படுத்துவார். அந்த விருந்தானது கொழுமையான பதார்த்தங்களும், பழமையான திராட்சரசமும், ஊனும் நிணமுமுள்ள பதார்த்தங்களும் நிறைந்த விருந்தாயிருக்கும். சகல ஜாதிகளுக்கும் அந்த விருந்தில் கலந்து கொள்ளப் போகிறார்கள்.
இயேசுவின் கட்டளை:
மத்தேயு 22 : 14 “அந்தப்படியே, அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துக்கொள்ளப்பட்டவர்களோ சிலர் என்றார்.”
உலகெங்கிலுமுள்ள அநேகருக்குக் கிறிஸ்துவின் நற்செய்தி அறிவிக்கப் படுகிறது. கர்த்தர் கொடுத்துள்ள அழைப்பை ஏதேனும் காரணத்தைச் சொல்லி ஏற்றுக்கொள்ளாதவர்கள், இறுதியில் தேவனுடைய ராஜ்யத்தின் விருந்திற்கு பிரவேசிக்க முடியாமல் போய்விடும்.
கலாத்தியர் 3 : 27, 28ல் “ஏனெனில், உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக, ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே.”
“யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை; நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்.”
இஸ்ரவேலர்கள் தேவனது அழைப்பை நிராகரித்ததால் அந்த அழைப்பு மற்ற எல்லோருக்கும் கொடுக்கப்பட்டதென்றும் அதனால் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்ற எல்லோரும் கிறிஸ்துவைத் தரித்துக் கொண்டதாகவும் பவுல் கூறுகிறார். ஞானஸ்நானம் எடுத்து வெளியே வந்த பின் கிறிஸ்துவின் குணம் நமக்குள் வரவேண்டும். கிறிஸ்தவரல்லாத பலர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு ஆவியில் அனலுள்ளவர்களாக நற்செய்திப்பணி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டவர்கள் தேவனுடைய ராஜ்யத்தின் விருந்திற்கு நுழைவார்கள். தேவன் உங்களை இரட்சிப்பு என்ற பெரிய விருந்துக்கு அழைக்கிறார். கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு முடிவு பரியந்தம் நிலை நிற்பவர்களாக (தெரிந்து கொள்ளப்பட்டவர்கள்) இருக்க வேண்டுமென்று வாஞ்சியுங்கள்.
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…