லூக்கா 18 : 9 “அன்றியும், தங்களை நீதிமான்களென்று நம்பி, மற்றவர்களை அற்பமாயெண்ணின சிலரைக்குறித்து, அவர் ஒரு உவமையைச் சொன்னார்.”
பரலோக ராஜ்ஜியத்தை ஜெபத்தில் எவ்வாறு அணுகுவது என்றும், ஜெபிக்கும் போது இருக்க வேண்டிய மனப்பான்மையைப் பற்றியும் இயேசு இங்கு அறிவிப்பதைப் பார்க்கிறோம். ஆயக்காரன், பரிசேயன் இவர்களின் ஜெபம் எவ்வாறிருக்கிறதென்று இயேசு இந்த உவமையில் கூறுகிறார். முக்கியமாக பரிசேயரின் சுய நீதியையும், அவர்களது அவிசுவாசத்தையும் வெளிப்படுத்திக் காட்டியுள்ளார். தங்களை நீதிமான்களென்றும் மற்றவர்களை அற்பமாய் நினைக்கிறவர்களுக்காகவும் இயேசு இந்த உவமையைக் கூறுகிறார்.
தேவாலயத்தில் இரண்டு பேர்:
லூக்கா 18 : 10 “இரண்டு மனுஷர் ஜெபம்பண்ணுபம்படி தேவாலயத்துக்குப் போனார்கள்; ஒருவன் பரிசேயன், மற்றவன் ஆயக்காரன்.”
பரிசேயன், ஆயக்காரன் என்ற இரண்டு மனிதர்கள் ஒரே நோக்கத்தோடு, ஒரே இடமாகிய தேவாலயத்திற்கு ஜெபம் பண்ணுவதற்காகப் போனார்கள். இருவரும் நேர் எதிர்மறையான குணத்திலும் அந்தஸ்திலும் இருப்பவர்கள் ஆனால் இருவரும் யூதர்கள்தான். பரிசேயர்கள் என்றால் வேறுபிரிக்கப்பட்டவர்கள். வேதப்பிரமாணத்திற்கு விளக்கமளிப்பவர்கள். தேவாலயங்களில் முக்கிய பங்கு வகிப்பவர்கள். கிறிஸ்துவின் நாட்களில் இவர்கள் மிகுந்த செல்வாக்கு உடையவர்களாயிருந்தனர். நியாயப்பிரமாணத்திலுள்ள ஒவ்வொரு வார்த்தையையும் கவனமாகக் கடைப்பிடிக்க முயன்றவர்கள். வேதத்தை நன்கு கற்றுத் தேறினவர்கள். வெளிப்பார்வைக்கு நல்லவர்களாகத் தெரிகிறவர்கள். இயேசுவின் பார்வையில் மட்டுமே பாவிகளாகத் தெரிந்தவர்கள். பரிசேயர்கள் சமயமெனும் ஏணியின் உச்சியில் இருந்தவர்கள். தன்னை நீதிமானாக நினைத்துக் கொண்டிருக்கிற சுயநீதியுடையவர்கள். சுயநீதியென்பது தேவநீதிக்கும், தாழ்மைக்கும் எதிராக இருக்கக்கூடிய செயல். இவர்கள் புறம்பாக மட்டுமே நீதிமான்களைப் போலத் தோற்றமளித்தனர். உள்ளே தீமையினால் நிறைந்திருந்தனர். மாய்மால வாழ்க்கை வாழ்ந்தனர். இவர்கள் செய்வது எதுவும் தேவனுக்குப் பிரியமானதாகவோ, மற்றவர்களுக்குப் பிரயோஜனமானதாகவோ இல்லை. அது மாத்திரமல்ல.. பரிசேயனுக்கு தேவாலயத்தின் உட்புறம் செல்லவும் அனுமதி உண்டு. எனவே ஆலயத்துக்குள்ளாக நின்று ஜெபிக்கிறான். எல்லா பரிசேயர்களும் மாய்மாலக்காரர்கள் என்று சொல்லிவிட முடியாது. நிக்கோதேமுவும், கமாலியிலும் பரிசேயர்கள் தான் என்றாலும் அவர்கள் நீதியுள்ள, நேர்மையான மனிதர்களாக இருந்தனர் (யோவான் 3 : 1). அப்போஸ்தலனாகிய பவுலும் ஒரு பரிசேயன் தான் (அப்போஸ்தலர் 26 : 5, பிலிப்பியர் 3 : 5)
ரோமர்கள் இஸ்ரவேலர்களுக்கு ஒவ்வொரு மாதமும் வரி கட்ட வேண்டுமென்று சட்டம் போட்டார்கள். ரோம அரசாங்கத்தார் தங்களது ராஜ்ஜியத்திலுள்ள யூதர்களில் நம்பிக்கையானவர்களைத் தெரிந்து கொண்டு அவர்களுக்கு முறையான பயிற்சி கொடுத்து யூதர்களுக்கு அதிகாரியாக, வரிவசூலிப்பதற்காக நியமிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் தான் ஆயக்காரர்கள் என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் தன்னுடைய ஜனங்களை மிரட்டி அநியாயமாய் வரி வசூலித்து ரோம அரசாங்கத்துக்கு விசுவாசமாக நடந்து கொள்வார்கள். அதனால் அவர்களை ஜனங்கள் கொடுமைக்காரன், பாவி என்று கருதினர். இப்படிப்பட்டவன் தேவனுடைய பார்வையில் அருவருப்பானவர்கள் என்று அந்தக் காலத்து ஜனங்கள் எண்ணினார்கள். மேலும் அவர்களில் ஒரு சிலர் முறைகேடான முறையில் பணம் சம்பாதித்து அதிகமாக வரி வசூலித்து தங்களுக்கென்று ஆஸ்திகளையும், ஐசுவரியங்களையும் சேர்த்து வைத்திருந்தார்கள். ஒருவன் ஆயக்காரனாக மாறும் போது அவன் தன் தேசத்தை விட்டுக்கொடுத்து விடுகிறான். யூதனாக இருந்தால் அவனுடைய சமயத்தையும் விட்டுக்கொடுத்துத்தான் அந்தப் பணியில் சேருகிறான்.
இவ்வாறிருக்கும் போது அவன் தேவனுக்கு முதுகு காட்டி விட்டான் என்று தான் சொல்வார்கள். அவன் ஒரு வழிப் பாதையில் செல்கிறான். அவன் தேவனிடம் திரும்புவற்கு வாய்ப்பில்லை என்பது தான் அவனைக் குறித்து மற்றவர்களுடைய எண்ணம். அவனுடைய பாதையில் அவன் செல்வந்தனாகி விட முடியும். ஆனால் அவனுடைய இருதயத்தை அது திருப்திப் படுத்துவதில்லை. மத்தேயு ஒரு ஆயக்காரன் தான். ஆனால் தேவன் மத்தேயுவை தன்னுடைய சீஷனாக்கினார். சீஷனாக இருந்தது மட்டுமல்ல இயேசு பரமேறிச் சென்றபின்பும் அப்போஸ்தலர்களோடு சேர்ந்து தேவனுடைய ஊழியத்தைத் தொடர்ந்து செய்தவன். அதோடு மட்டுமல்லாமல் மத்தேயுவைக் கொண்டு தான் யூதர்களுக்கு இயேசுவே மேசியா என்று ஒரு மாபெரும் சுவிசேஷத்தை எழுத்தும்படியாக ஆவியானவர் பயன்படுத்தினார். அதுதான் மத்தேயு எழுதின சுவிசேஷம். மனுஷன் முகத்தைப் பார்க்கிறான். தேவனோ இருதயத்தைப் பார்க்கிறார். சகேயுவும் ஆயக்காரன் தான். சகேயுவுக்கும் இரட்சிப்பளித்தார். சிறியரில் ஒருவரையும் அற்பமாக எண்ணக்கூடாதென்று வேதம் கூறுகிறது.
பரிசேயனின் ஜெபம்:
லூக்கா 18 : 11, 12 “பரிசேயன் நின்று; தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும், இந்த ஆயக்காரனைப்போலவும் இராததனால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.”
“வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்திவருகிறேன் என்று, தனக்குள்ளே ஜெபம்பண்ணினான்.”
பரிசேயன் ஜெபத்தை ஆரம்பிப்பதற்கு அருவருப்பான ஒரு முகவரியை கூறுகிறான். ஜெபம் என்பது ஒருவனுடைய ஆவிக்குரிய நிலமையைக் காண்பிக்கும் கண்ணாடி. முதலில் அவன் தேவன் தந்த நன்மைக்கு ஸ்தோத்திரம் செலுத்தவில்லை. நாமும் அதே போல் வேதத்தைப் படிக்கிறேன், சேவை செய்கிறேன் என்று சொல்லி ஜெபிப்பதால் நமது ஜெபம் கேட்கப்பட மாட்டாது. நம்மைக் குறித்துத் தேவனுக்கு அறிமுகப்படுத்த வேண்டிய அவசியமில்லை. நம்முடைய எல்லா காரியங்களையும் தேவன் அறிந்திருக்கிறார். இவன் தன்னை தேவசந்நிதானத்தில் வைத்து தேவ நீதியின் அடிப்படையிலே தன்னை பரிசோதிக்காதபடி மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்த்தான். பரிசேயன் “பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும், ஆயக்காரனைப்போலவும் இல்லாததினால் உம்மை ஸ்தோத்தரிக்கிறேன்” என்றதால் அங்கே ஆயக்காரன் வெளியே நிற்பதை அறிந்தவனாக, அந்த ஆயக்காரனைப் போலவும் இல்லை என்கிறான். அதைத் தொடர்ந்து எதையெல்லாம் செய்கிறேன் என்று இறைவனிடம் ஞாபகப்படுத்துவதைப் போலச் சொல்கிறான். இதன் பொருள் என்னவெனில் தனது நற்கிரியைகளினாலே அவரோடு உறவு வைப்பதற்குத் தான் தகுதியுடையவனென்கிற உரிமையைக் கோருகிறான். நம்முடைய சிந்தை, எண்ணங்கள், சுபாவங்கள் தேவனுடைய பார்வையில் சரியாக இல்லையென்றால் ஜெபத்திற்குப் பதில் வராது. நற்கிரியைகளினால் நாம் ஒருபோதும் நீதிமானாக்கப் படுவதில்லை என்று வேதம் நமக்குத் தெளிவாகக் கூறுகிறது. விசுவாசத்தினாலும், கிருபையினாலும் மீட்கப்பட்ட நாம் நற்கிரியைகளைச் செய்யக் கடனாளிகளாயிருக்கிறோம் என்று வேதம் நமக்குப் போதிக்கிறது.
இவன் தனக்குத்தானே ஜெபித்துக் கொண்டிருக்கிறான். மனம் பேதலித்தவன் தங்களுக்குள்ளேயே பேசிக் கொண்டிருப்பதைப் போல தனக்குத்தானே பேசுகிறான். தேவனிடத்தில் பேசுவதாக நினைத்து தனக்குத்தானே பேசுகிறான். தேவனுடைய ஊழியத்திற்கென்று அழைக்கப்பட்டவனானாலும் எவ்வாறு ஜெபம் பண்ண வேண்டுமென்பதைக் குறித்து அறியாதிருந்தான். ஜெபமென்பது நமக்கும் தேவனுக்குமுள்ள ஐக்கியத்தின் தொடர்பு. ஆனால் பரிசேயனோ தனக்கும் ஆயக்காரனுக்குமுள்ள தொடர்ப்பைத்தான் கூறினான். பறிகாரர், அநியாயக்காரர் விபச்சாரக்காரர் என்று அநேக மனிதர்களைக் குறித்துக் கூறுகிறான். மற்றவர்களைக் குற்றஞ்சுமத்தித் தன்னை மேன்மைப்படுத்தி ஜெபிப்பது ஜெபமல்ல. நாம் மற்றவர்களைக் குற்றவாளியாக எண்ணக்கூடாதென்று மத்தேயு 7 : 1, 2லும், ரோமர் 2 : 1லும் கூறப்பட்டிருக்கிறது. குற்றஞ்சாட்டுகிறவர்கள் குற்றவாளியாவார்கள். நியாயப்பிரமாணத்தில் சொல்லியிருக்கிறபடி தான் உபவாசம் இருப்பதாகவும், தசமபாகம் செலுத்துவதாகவும் கூறுகிறான். வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன் என்றான். செவ்வாயும், வியாழனும் பரிசேயர்கள் உபவாசிப்பார்கள். உபவாசிப்பது நல்லதுதான். இப்படிப்பட்ட ஜெபத்தை பரிசேயன் செய்ததால் குற்றவாளியானான். சமுதாயத்தில் நல்ல மதிப்புள்ளவனாக இருந்தாலும், வேதத்தை நன்கு அறிந்தவனாக இருந்தாலும் ஜெபம் எவ்வாறு பண்ண வேண்டுமென்பதை அறியாதிருந்தான். அவனுடைய ஜெபம் கூரைக்கு மேல் செல்லாது. தன்னைப் பெருமைப்படுத்திக் உயர்த்திக் காட்டுகிற ஜெபத்தைத் தேவன் கவனிப்பதில்லை. இப்படிப்பட்டவர்கள் பரலோகராஜ்ஜியத்திற்குள் பிரவேசிக்க முடியாது.
ஆயக்காரனின் ஜெபம்:
லூக்கா 18 : 13 “ஆயக்காரன் தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்துக்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு; தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்றான்.”
ஆயக்காரன் தன்னுடைய உடைந்த உள்ளதோடும் சோர்ந்துபோன இதயத்தோடும் தேவனுடைய கிருபாசனத்தண்டையிலே செல்ல முடியாதே என்ற எண்ணமுள்ளவனாகத் தேவனை நோக்கிக் கூப்பிடுகிறான். அவனுடைய ஜெபம் என்னவென்றால் அவன் தான் ஒரு பாவியான மனிதனானபடியால் உம்முடைய ஆலயத்திற்குள், மகா பரிசுத்த ஸ்தலத்தினருகில் வர முடியாதவன். எனக்காக ஒரு கிருபாசனத்தை வேறு ஒரு இடத்தில் வைப்பீரென்றால் அங்கே நான் வர ஆயத்தமாயிருக்கிறேன் என்பதுதான். தன்னிடம் எந்த நற்கிரியையுமில்லாததால் தேவனுடைய இரக்கத்தால்தான் தன்னை இரட்சிக்க முடியுமென்றெண்ணினான். கண்களைக்கூட வானத்துக்கு நேரே ஏறெடுக்கத் துணிவில்லாமல் ஜெபிக்கிறான். வானம் என்பது தேவனுடைய சிங்காசனமாகவும். பூமி அவருடைய பாதபடியாகவும் இருப்பதால், அவன் வானத்திற்கு நேராக சிங்காசனத்தைப் பார்க்கத் துணியாதபடி பூமிக்கு நேராகத் தன்னுடைய தலையைத் தாழ்த்தி, தன்னுடைய மார்பில் அடித்துக் கொண்டு “தேவனே பாவியாகிய என்மேல் கிருபையாயிருமென்று ஜெபித்தான். அருமையான ஒரு சுருக்க ஜெபத்தைச் சொன்னான். இந்த ஆயக்காரன் தனக்கு முன்னால் நின்று கொண்டிருந்த பரிசேயனைப் பார்க்கவில்லை. தன்னுடைய பக்கத்திலிருந்த வேறு எவரையும் பார்க்காமல், தேவனைப் பார்த்து மாத்திரமே ஜெபித்தான். அரசாங்கத்தில் வேலை பார்த்தாலும், வசதியானவனாக இருந்தாலும், அவனுடைய உள்ளான நிலைமை அவனுக்குக் கண்ணாடியைப் போல் காட்டுகிறது. ஆயக்காரன் தன்னைத் தாழ்த்தினதைப் போல, நாமும் நம்மைத் தாழ்த்தி ஜெபிக்க வேண்டும். பாவியாகிய என்மேல் கிருபையாயிருமென்று ஜெபிக்காமல், வேதவசனத்தின் அடிப்படையில், பரிசுத்த ஆவியானவரின் துணையுடன் வசனத்தைச் சொல்லி, அந்நியபாஷையில் ஜெபம் பண்ண வேண்டும். அப்பொழுது தேவன் என்ன செய்வாரென்று பவுல்,
பிலிப்பியர் 4 : 6, 7 “நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.”
“அப்பொழுது, எல்லாப் புத்திக்கும்மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.” என்று கூறுவதைப் பார்க்கிறோம்.
சோர்ந்து போகாமல் தேவனை நோக்கி ஜெபம் பண்ணும் போது ஆவியானவர் நமக்கு உதவி செய்வார். உங்கள் ஜெபம் கேட்கிற வரையிலும் கேளுங்கள். திறக்கிற வரையிலும் தட்டுங்கள். தேவன் கண்டிப்பாக ஒத்தாசை அனுப்புவார்.
இயேசுவின் நியாயத்தீர்ப்பு:
லூக்கா 18 : 14 “அவனல்ல, இவனே நீதிமானாக்கப்பட்டவனாய்த் தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஏனெனில் தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்.”
இதில் பரிசேயனின் முடிவையும், ஆயக்காரனின் முடிவையும் பார்க்கிறோம். துவக்கத்தை விட முடிவைக் கவனிப்பது நலம். பரிசேயன் மேன்மையாக ஆரம்பித்தான், அது அற்பமாக முடிந்தது. ஆயக்காரன் தாழ்மையாக ஆரம்பித்தான், கர்த்தர் அவனை மேன்மையாக ஆக்கினார். ரோமர் 4 : 5ல் கூறப்பட்டதைப் போல அவனுடைய விசுவாசத்தினால் நீதிமானாக்கப்பட்டான். நீதிமானென்பவன் தேவனுடைய பார்வையில் குற்றமற்றவன். தேவனோடு சரியான உறவிலிருப்பவன். தேவனிடம் மன்னிப்பைப் பெற்றவன். தேவனிடம் கிட்டி சேருகிறவன். மாசற்றவன். தேவன்,
1பேதுரு 5 : 5 “…….பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்.”
மத்தேயு 23 : 12 “தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்.”
இயேசு அதற்கு ஆயக்காரனின் ஜெபம் கேட்கப்பட்டது என்றார். ஏன் கேட்கப்பட்டதென்றால் இயேசு அங்கே தான் இருந்தார். அவனுக்காக ஒரு சிலுவையை நோக்கிப் போய்க் கொண்டிருந்தார். ஆயக்காரனோ தேவனை நோக்கிப் பார்க்கவும் அருகதையற்றவன் என்று ஜெபித்தான். ஆயக்காரன் தன்னைத் தாழ்த்தினதினால் தேவன் அவனை உயர்த்தினார். தேவனுடைய பார்வையில் அவன் நீதிமானாக்கப்பட்டவனாக வீட்டிற்குச் சென்றான். பரிசேயன் தேவனுடைய பார்வையில் நீதிமானாக இல்லை. எனவே பரிசேயன் எப்படி வந்தானோ அப்படியே சலனமில்லாமல், மாற்றமில்லாமல் கடந்து போனான். லூசிபர் என்ற தூதன் வானத்திற்கு ஏறுவேன் என்றும், தேவனுடைய நட்சத்திரத்திரங்களுக்கு மேலாக சிங்காசனத்தை உயர்த்துவேன் என்றும், ஆராதனை கூட்டத்தில் பர்வதத்திலே வீற்றிருப்பேன் என்றும், மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் ஏறுவேன் என்றும், உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்றும் தன் இருதயத்தில் சொன்னான். அதனால் தேவனாகிய கர்த்தர் வானத்திலிருந்து விழும்படி பண்ணி, அகாதமான பாதாளத்திலே தள்ளுண்டு போனான் என்று ஏசாயா 14 : 12 – 15ல் பார்க்கிறோம்.
அதேபோல் அப்சலோம் தன் தகப்பன் தாவீதின் ஸ்தானத்தைப் பிடிக்க சூழ்ச்சியான திட்டத்தைப் பயன்படுத்தி, எருசலேமின் வாசல்களில் அமர்ந்து வருகின்றவர்களுக்கும் போகிறவர்களுக்கும் நல்ல நியாயத்தீர்ப்பு செய்வதுபோல் வஞ்சகமாக சூழ்ச்சி செய்தான். தன் தகப்பனார் தாவீதைப் பிடிப்பதற்காகக் கோவேரி கழுதையில் சென்று கொண்டிருந்தபோது அவனுடைய தலைமயிர் கர்வாலி மரத்தில் சிக்கி, அந்த மரத்தில் வானத்திற்கும் பூமிக்கும் நடுவே தொங்கினான். அப்பொழுது யோவாப் அவனைப் பார்த்துக் கொலை செய்தான் காட்டில் உள்ள ஒரு குழியில் அவனைப் போட்டனர்.
இதேபோல் ஆதியாகமத்தில் இரண்டுபேர் தேவனுக்குக் காணிக்கை செலுத்தினார்கள். காயீன் தேவனுக்குத் தன்னை ஒப்புக்கொடுத்து அவருக்குப் பிரியமான காணிக்கையைச் செலுத்த வேண்டுமென்ற எண்ணமில்லை. ஆனால் ஆபேலோ தேவனுக்குப் பிரியமான காணிக்கையென்னவென்று பார்த்துக் கொண்டு போனான். கர்த்தர் ஆபேலின் காணிக்கையை அங்கீகரித்தார். காயீனின் காணிக்கையை அங்கீகரிக்கவில்லை. இதிலும் நாம் பாவம் செய்யமுடியுமென்று வேதவசனம் நமக்கு ஆதாரம் காண்பிக்கிறது.
சங்கீதம் 66 : 18 “என் இருதயத்தில் அக்கிரமசிந்தை கொண்டிருந்தேனானால், ஆண்டவர் எனக்குச் செவிகொடார்.”
ஆண்டவர் செவிகொடாத ஜெபம் அருவருப்பானது. சுகந்த வாசனையானதல்ல. ஏரோதுராஜா தேவனுக்கு மகிமையைச் செலுத்தாதபடியினால் அவன் பிரசங்கம் பண்ணும் போது ஜனங்கள் இது மனுஷ சத்தமல்ல தேவ சத்தமென்று ஆர்ப்பரித்தனர். உடனே கர்த்தருடைய தூதன் அடித்து புழுபுழுத்து இறந்தான்.
நாம் கற்றுக்கொண்ட பாடம்:
இந்த உவமையின் மையக்கருத்து என்னவென்றால், தங்களை நீதிமான்களென்று எண்ணி மற்றவர்களை அற்பமாக எண்ணக் கூடாதென்பதாகும் (லூக்கா 18 : 9) இன்று நாம் “தேவனே என்மேல் கிருபையாயிரும்” என்று ஜெபிக்கத் தேவையில்லை. ஏனென்றால் அவர் கிருபையாயிருக்கிறார். அவர் நமக்காகத் தன்னுடைய சொந்த குமாரனையே மரிக்கும்படி கொடுத்து விட்டாரே. உலகத்திலே பாவத்தில் வாழ்கிற எந்த ஒரு மனிதனைக் குறித்தும் தேவன் “நீ என்னண்டை வா உனக்கு ஒரு கிருபாசனம் உண்டு” என்று சொல்லுகிறார். நாமும் அப்படிப்பட்ட கிருபாசனத்தண்டையில் சென்று ஜெபிக்க வேண்டும். நம்முடைய பாவத்திற்கான விலைக்கிரயத்தைச் இயேசு சிலுவையில் செலுத்தித் தீர்த்துவிட்டார். மகா பரிசுத்த ஸ்தலத்தில் தேவன் தன்னுடைய இரு கரங்களையும் நீட்டி அழைக்கிறார். அவரிடம் நாம் கெஞ்ச வேண்டியதில்லை. ஏனென்றால் நம்முடைய பலவீனங்களை அறிந்திருக்கிறார். இந்த ஆயக்காரனைப் போல இயேசுவண்டை நாம் கடந்து செல்வோம். நம்முடைய பாவங்களை மன்னித்து, அவைகளை நம்மை விட்டு விலக்கி, இரட்சித்து நமக்கு நித்தியஜீவனைத் தந்தருளுவார்.
பரிசேயன் நியாயப்பிரமாணங்களைக் கைக்கொள்ளுகிறவன். எனவே அவன் நீதிமான் என்றெண்ணுகிறான். ஆனால் மற்றவர்களை அவன் அற்பமாக எண்ணக்கூடாது. பரிசேயன் நீதிமான் என்று நினைப்பதற்கும், நாம் நீதிமான் என்று நினைப்பதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. பரிசேயன் தான் நியாயப்பிரமாணத்தின்படி நடப்பதால் நீதிமான் என்கிறான். நாம் நியாயப்பிரமாணத்தின்படி அல்ல, இயேசுவின் மேல் விசுவாசம் வைத்ததால் நீதிமான்களாகிறோம். அவன் ஆயக்காரனை மாதிரி இல்லை என்று தன்னுடைய சுயநீதியைத் தூக்கிப் பிடிக்கிறான். அது தவறு. “இயேசுவை விசுவாசிப்பதால் தான் நீதிமான். “நான் பாவி என்னிடம் குறைகள் உண்டு நீங்கள்தான் என்னை நீதிமானாக மாற்ற முடியும்” என்று இயேசுவிடம் முறையிட வேண்டும். ஆயக்காரனுக்கு நீதிமானாக ஆசை. ஆனால் என்னிடம் எந்தத் தகுதியும் இல்லை என்கிறான். ஆனால் பரிசேயனோ நான் நீதிமான் என்கிறான். நம்மை நாம் நீதிமான் என்று மதிப்பிடக் கூடாது. ஆணடவர் நம்மை நீதிமான் என்று அழைக்கும்படி வாழ்ந்து காட்ட வேண்டும். யாக்கோபு தன்னுடைய நிருபத்தில்,
யாக்கோபு 4 : 10 “கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார்.”
என்று கூறியிருப்பதைப்போல நாம் நம்மைத் தாழ்த்தி ஜெபம் பண்ணி தேவனின் ஆசி பெறுவோம். நாம் அவரில் நிலைத்திருக்கும் போது, அவருடைய வார்த்தைகள் நம்மில் வெளிப்படும்போது, நாம் கேட்கிற விண்ணப்பங்களுக்குத் தேவன் செவி கொடுப்பார் (யோவான் 15 : 7). யூதாஸ் 30 வெள்ளிக்காசை வாங்கி இயேசுவை முத்தத்தினால் காட்டிக் கொடுத்தான். ஆனால் அதன்பின் “இயேசுவுக்குத் துரோகம் செய்து விட்டேனே, குற்றமில்லாத இரத்தத்தைக் காட்டிக் கொடுத்து விட்டேனே” என்று அவனுடைய மனசாட்சி கடுமையாக வாதித்தும், இயேசுவிடம் செல்லாமல் பிரதான ஆசாரியரிடத்திற்கும், மூப்பரிடத்திற்கும் சென்று “குற்றமில்லாத இரத்தத்தைக் காட்டிக் கொடுத்து பாவம் செய்து விட்டேன்” என்று முறையிட்டான். அதற்கு அவர்கள் “எங்களுக்கென்ன, அது உன் பாடு” என்றனர். அப்பொழுது யூதாஸ் தனக்கு அவர்கள் கொடுத்த 30 வெள்ளிக்காசை தேவாலயத்தில் எறிந்து விட்டு புறப்பட்டுப்போய் நான்றுகொண்டு செத்தான். எனவே நாம் ஆவியானவரின் துணையோடு ஜெபிக்கும் போது நமக்குத் தெரியாத பின்பக்கத்தைச் சொல்லி ஜெபிக்க வைப்பார். எலியா ஜெபித்ததை போல கருத்தோடு ஜெபிப்போம். நம்முடைய ஜெப வேண்டுதல்களை ஸ்தோத்திரத்தோடு பிதாவுக்குத் தெரியப்படுத்துவோமானால், நமக்குள்ளே வாசம் பண்ணும் ஆவியானவர் நம்மை சகல சத்தியத்திற்குள்ளும் வழி நடத்திச் செல்வார் (யோவான் 16 : 13). கர்த்தராகிய இயேசுவே சீக்கிரமாய் வாரும். ஆமென்.
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…