இந்த உவமையை மத்தேயு 9 : 17லும், மாற்கு 2 : 22லும், லூக்கா 5 : 37, 38, 39லும் பார்க்கலாம். இயேசு மத்தேயுவின் வீட்டில் விருந்துக்குச் சென்றிருக்கும் போது நடந்த உரையாடலின் போது இந்த உவமையைக் கூறினார். யோவான் ஸ்நானகனின் சீஷர்களும், பரிசேயர்களும், ஆயக்காரர்களும் இயேசுவிடம் வந்து நாங்கள் அநேகந்தரம் உபவாசிக்கிறோமே உம்முடைய சீஷர்கள் உபவாசம் பண்ணுகிறதில்லையே என்று கேட்ட போது இயேசு இந்த உவமையைக் கூறினார். மேலும் இதில் பழையஏற்பாட்டின் கட்டளைக்கும், புதியஏற்பாட்டின் கிருபைக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்த்துகிறார்.
உவமையின் பின்னணி:
இயேசுவின் காலத்தில் யோவான்ஸ்நானகனின் சீஷர்கள், பரிசேயர்களின் சீஷர்கள் என்று இரண்டு பிரிவினர் இருந்தனர். யோவான்ஸ்நானகனின் சீஷர்கள் அனைவரும் உபவாசித்து ஜெபம் பண்ணிக் கொண்டிருந்தனர். பரிசேயர்களின் சீஷரும் அவ்வாறே உபவாசித்து ஜெபித்தனர். ஆனால் இயேசுவின் 12 சீடர்களும் உபவாசிப்பதில்லை ஏன் என்று இயேசுவிடம் அவர்கள் கேட்டனர். யோவான் ஸ்நானகனின் சீஷர்கள் மேசியா வரப்போகிறார். அவர் வரும்போது ஜனங்களின் மனம் பக்குவப்பட வேண்டும் என்பதற்காகவும், இருதயத்தில் மனம் திரும்பி மேசியாவின் வார்த்தைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக உபவாசித்தனர். யூதர்கள் பாவங்களை விட்டு மனந்திரும்ப உபவாசித்தனர். இஸ்ரவேல் ஜனங்கள் மனம் திரும்புவதற்கு இது ஒரு அடையாளம் என்பதற்காக உபவாசித்தனர். நினிவே பட்டணத்தார் தாங்கள் அழிந்து போகாமலிருக்க தேவனின் இரக்கத்திற்காக உபவாசித்தனர். ஆனால் இயேசுவின் சீஷர்களுக்கு மேசியா வந்துவிட்டதால் உபவாசம் இருக்க வேண்டிய அவசியமில்லை. முதலாம் வருகையில் அவர்கள் இயேசுவோடு இருப்பதால் உபவாசிக்க வேண்டியதில்லை. இயேசு அவர்களை விட்டு எடுக்கப்படும்போது உபவாசிப்பார்கள் என்று இயேசு கூறினார்.
ஆனால் இப்பொழுது நம்முடைய மாம்சத்தை அடக்க நினைக்கும் பொழுது உபவாசம் இருக்க வேண்டும். கண்டிப்பாக உபவாசம் இருக்கலாம். கர்த்தரோடு நேரத்தை செலவழிக்க உபவாசம் இருக்கலாம். ஆனால் பாரம்பரியத்திற்காக உபவாசம் இருக்க வேண்டாம். இயேசுவுக்குப் பின்னும் அப்போஸ்தலர்கள் உபவாசித்தனர். இக்காலத்தில் இயேசுவின் இரண்டாம் வகையை எதிர் நோக்கி நாம் உபவாசம் இருக்க வேண்டும். அந்த நேரத்தில் பரிசேயரிடமிருந்த தற்பெருமை, சடங்குகள், குறை கூறுதல் போன்ற குறைகளை நாம் விட்டுவிட வேண்டும். அவ்வாறு இருக்கும் போது ஆவியானவர் நம்மோடு கூட பேசுகிறார். யூத யுகத்தில் பரிசுத்த ஆவியைப் பெற்றார்கள். அவைகள் சரீரத்தில் கொடுக்கப்பட்டது. ஆனால் இன்றைக்கு பரிசுத்த ஆவி நமது இருதயத்தில் உள்ளதென்று கலாத்தியர் 4 : 6ல் பார்க்கிறோம். பழைய ஏற்பாட்டில் பரிசுத்த ஆவியானவரின் செயலைப் பலன் கொடுக்கும் போது கண்டுபிடிக்கலாம் ஆனால் இன்று அவ்வாறு கண்டுபிடிக்க முடியாது ஏனெனில் இதயத்தை சுத்தம் பண்ண, சிந்தனையில் மாற்றம் உண்டாக பரிசுத்த ஆவியானவர் நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
திராட்சை ரசம்:
இந்த திராட்சை இஸ்ரவேலர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும், மத விஷயங்களிலும் பயன்படுகிறது. லேவியராகமம் 23 : 11, 21ல் பழைய ஏற்பாட்டு இஸ்ரவேலர்கள் தேவனுடைய பலிபீடத்தண்டை திராட்சை ரசத்தைப் பலியாகக் கொண்டு வரலாம் என்றுள்ளது. தேவனுடைய சமூகத்தில் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்றாக திராட்சைரசம் உள்ளது. புதிய ஏற்பாட்டில் இயேசு புதிய உடன்படிக்கையை கிறிஸ்தவர்களோடு செய்தார். உலகத்தில் உள்ள எந்த மனிதனும் இந்த உடன்படிக்கைக்குள் வரலாம். திருவிருந்து எடுக்கும் போது இந்த திராட்சை ரசம் தான் வழங்கப்படுகிறது. மத்தேயு 26 : 26, 27ல் இயேசு தன்னுடைய இரத்தத்தை திராட்சைரசம் என்று கூறியதைப் பார்க்கலாம்.
ஏசாயா கூறிய தீர்க்கதரிசனம்:
ஏசாயா 25 : 6, 7ல் “சேனைகளின் கர்த்தர் இந்த மலையிலே சகல ஜனங்களுக்கும் ஒரு விருந்தை ஆயத்தப்படுத்துவார்; அது கொழுமையான பதார்த்தங்களும், பழமையான திராட்சரசமும், ஊனும் நிணமுமுள்ள பதார்த்தங்களும், தெளிந்த பழமையான திராட்சரசமும் நிறைந்த விருந்தாயிருக்கும்.”
“சகல ஜனங்கள்மேலுமுள்ள முக்காட்டையும், சகல ஜாதிகளையும் மூடியிருக்கிற மூடலையும், இந்த மலையிலே அகற்றிப்போடுவார்.”
கர்த்தர் இந்த மலையில் சகல ஜனங்களுக்கும் ஒரு விருந்தை ஆயத்தப்படுத்துவார் என்று பார்க்கிறோம். இந்த மலை சீயோனை அல்லது எருசலேமைக் குறிக்கிறது. இந்த விருந்து தேவனுடைய பிரசன்னத்தில் விசுவாசிகள் அனுபவிக்கப் போகும் அற்புதமான ஆசீர்வாதங்களை இந்தக் கொழுமையான விருந்து பிரதிபலிக்கின்றது. இதில் கூறப்பட்ட திராட்சைரசம் பாதுகாக்கப்பட்ட பழைய ரசம் ஆகும். ஜனங்களுடைய அக்கிரமங்களை இயேசு மன்னித்து விடுவார். அக்கிரமங்களை மன்னிப்பது யூதர்களுக்கு மட்டுமல்ல, இயேசு எல்லா ஜனங்களையும் மன்னிக்கிறவர். இயேசு கொல்கதா என்ற சிறிய மலையில் வைத்து மரித்தாரென்பது உங்களுக்குத் தெரியும். இயேசுவின் உடலில் ஐந்து பெரிய காயங்கள். மொத்த உடலும் கிழிக்கப்பட்டது. அவரது உடலிலிருந்த மொத்த ரத்தமும் வெளியேறியது. இயேசுவின் இந்த சேவையானது இரண்டு காரியங்களை ஞாபகப்படுத்துகிறது. ஒன்று அவருடைய சரீரம், இரண்டாவது அவருடைய இரத்தம். இதில் முக்காடு என்பது மாம்சத்தைக் குறிக்கிறது. மனிதனுடைய இருதயத்தில் போடப்பட்டிருந்த பாவமாகிய முக்காடு இப்பொழுது நீக்கப்பட்டது. அங்கு நமது பாவமும் மன்னிக்கப்பட்டது. பாவங்களை மன்னிப்பதற்காகத்தான் இயேசு தன்னுடைய இரத்தத்தையும், சரீரத்தையும் கொடுத்தார். இதுவும் ஒரு தீர்க்கதரிசனம்.
துருத்தியும், திராட்சை ரசமும்:
லூக்கா 5 : 37, 38 “ஒருவனும் புது திராட்சரசத்தைப் பழந்துருத்திகளில் வார்த்துவைக்கமாட்டான்: வார்த்துவைத்தால் புதுரசம் துருத்திகளைக் கிழித்துப்போடும், இரசமும் சிந்திப்போம், துருத்திகளும் கெட்டுப்போம்.”
“புது ரசத்தைப் புது துருத்திகளில் வார்த்துவைக்கவேண்டும், அப்பொழுது இரண்டும் பத்திரப்பட்டிருக்கும்.”
துருத்தி என்பது தோலினால் செய்யப்பட்ட ஒரு பை. இது ஆட்டின் தோலினால் செய்யப்பட்டது. ஆட்டுத் தோலின் கழுத்துப் பகுதியை வாயாகவும் மற்ற பகுதிகளை எல்லாம் சேர்த்து பையாகவும் தைத்து விடுவர். இது ஆறு என்ற வடிவத்தில் இருக்கும். ஆட்டின் தோலை நன்றாகப் பக்குவப்படுத்திக் காய வைத்து அதன் பின் இதேபோல் செய்வர். திராட்சை இரசத்தை ஊற்றுவதற்காக சிறிய துவாரம் இருக்கும். அந்தப் பையில் திராட்சை ரசத்தை ஊற்றி வைப்பார்கள். திராட்சை ரசத்தில் ஊறிப்போய் அந்தப் பை விரிவடையும். ஒரு லிட்டர் திராட்சை ரசத்தை இந்தத் துருத்தியில் ஊற்றி வைக்கும் பொழுது அது இரசாயன மாற்றமடைந்து புளித்து ஒன்றரை லிட்டராக ஆகிவிடும். ஒரு கட்டத்தில் துருத்தி நைந்துவிடும். அப்போது துருத்திகளில் உள்ள திராட்சைரசம் அனைத்தும் வெளியே கொட்டிப் போய்விடும். அதற்காகத்தான் இயேசு கூறுகிறார் புதிய திராட்சை ரசத்தை புதிய துருத்திகளில் வைக்க வேண்டும் என்றார். திராட்சைரசம் சிந்தினவுடன் வைத்தவர்களின் மனம் வேதனைப்படும். இதில் பழைய துருத்தி பழைய மனுஷனையும், புதிய துருத்தி புதிய மனுஷனையும் குறிக்கிறது.
பழைய உடன்படிக்கையை யூதர்கள் அதிகமாக ஊறி விட்டதால் புதிய உடன்படிக்கைக்குள் இலகுவாக வர மாட்டார்கள். அதனால் அவர்களை கொஞ்சம் கொஞ்சமாகத் தான் வரவழைக்க முடியும். நியாயப்பிரமாணத்தின் படி நீதிமானாக மாற அத்தனை கட்டளைகளையும் தவறாமல் கைகொள்ள வேண்டும். அது ஆகாத காரியம். அதைத்தான் பவுல் கலாத்தியர் 3 : 11ல் நியாயப்பிரமாணத்தினால் ஒருவனும் தேவனிடத்தில் நீதிமானாகிறது இல்லை என்று கூறினார். எனவே அவைகளை விட்டு விட்டு இயேசுவின் மேல் விசுவாசம் வைத்தால் போதும் என்கிறார். நாம் எப்பொழுதும் புதுத் துருத்தியாக இருக்க வேண்டும். புதிய ரசத்தை ஏற்கனவே விரிவடைந்த அந்தப் பகுதியில் பழைய பையில் போட்டு வைத்தால் மறுபடியும் அந்தப் பை விரிவடைந்து கிழித்து விடும். ரசமும் கொட்டிப் போய்விடும். இந்தத் துருத்தியில் 60 லிட்டர் வரை திராட்சை ரசத்தை ஊற்றி வைக்கலாம். ஒரு முறை உபயோகித்த பின் மறுபடியும் அதை உபயோகிக்க முடியாது. தூர இடங்களுக்குச் செல்லும் போது இதைக் கொண்டு செல்வார்கள். இயேசுவானவர் புது ரசத்தை புதுத் துருத்திகளில் ஊற்றி வைக்க வேண்டும் என்றார். இது பரிசுத்த ஆவியினால் உண்டாகும் புதிய வாழ்க்கையைக் குறிக்கிறது. இது இயேசுவை ஏற்றுக்கொண்டு பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்ற விசுவாசிகளைக் குறித்து சொல்லப்பட்ட உவமையாகும்.
அப்போஸ்தலர் 2 : 4லில் இயேசு உயிர்த்தெழுந்து 40 நாட்களுக்குப் பின் அப்போஸ்தலர்களுக்குத் தரிசனமாகி நீங்கள் எருசலேமில் போய் காத்திருங்கள் என்று கூறினார். மரியாள் உட்பட 120 பேர் கூடி ஜெபித்த போது அப்போஸ்தலர் 2 : 13ல் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு அவர்கள் ஆவியானவர் அவர்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளில் பேசத்தொடங்கினார்கள். ஆனால் அங்கு வந்திருந்த ஜனங்கள் மதுபானத்தினால் நிறைந்திருப்பதாகப் பரிகாசம் பண்ணினார்கள். ஆனால் அது மதுபானத்தினால் உண்டான வெறி அல்ல. யோவேல் தீர்க்கதரிசி மாம்சமான யாவர்மேலும் ஆவியை ஊற்றுவேன் என்று கூறியதைப் போல ஊற்றப்பட்ட போது பலனடைந்து எருசலேமிலும், யூதேயாவிலும் சாட்சிகளாக நின்றார்கள். பரிசுத்த ஆவியால் உண்டாக்கப்படும் புதிய வாழ்க்கை தான் அது என்று இயேசு கூறுகிறார்.. அப்போஸ்தலர் 9 : 16ல் கூறப்பட்ட இரட்சிப்பு என்பது புதிய இரசத்தைக் குறிக்கிறது. இயேசுவை ஏற்றுக்கொண்ட பின் உள்ள புதிய வாழ்க்கையைக் குறித்துப் பேசுகிறது. இயேசுவை ஏற்றுக்கொண்டு இரட்சிக்கப்பட்டவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்று அந்நிய பாஷையில் பேசி கனி கொடுக்கும் அனுபவத்திற்குள் செல்ல வேண்டும்.
பழைய துருத்தி என்பது யூத மக்களின் கலாச்சாரம் கொள்கைகளைக் குறிக்கிறது. புதிய திராட்சரசம் கிறிஸ்துவின் நற்செய்தியைக் கேட்டு இரட்சிப்பையும் பரிசுத்த ஆவியையும் பெற்று வாழ்வதைக் குறிக்கிறது. சுவிசேஷமாகிய சத்தியத்தைக் கேட்டு புதிய வாழ்க்கை வாழவேண்டும். பழையதை விட்டுவிடவேண்டும். நியாயப்பிரமாணத்தின் காலம் முடிந்து கிருபையின் பிரமாணத்திற்குள் நாம் வந்துவிட்டோம். தேவனை அறியாத குடும்பத்திலிருந்து வந்திருந்தால் பழைய வாழ்க்கையை விட்டு புதிய வாழ்க்கைக்குள் வர வேண்டும். இருதயத்தில் மாற்றம் உள்ளவர்களைப் பார்த்துத் தான் இயேசு என்னைப் பின்பற்றி வா உங்களை மனுஷர்களைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார். தாழ்மையுள்ளவர்களை மட்டும் தான் இயேசு அழைத்தார். அவர்களும் இயேசுவை ஏற்றுக் கொண்டனர். அவர்களையும் இயேசு ஏற்றுக் கொண்டார். புதிய வாழ்க்கைகான நிலையில் 2 பகுதி இருக்கிறது. ஒன்று நாம் செய்வது. இரண்டாவது இயேசு செய்வது. பேதுருவின் பிரசாங்கத்தைக் கேட்டு இருதயத்தில் குத்தப்பட்டவர்கள் நாங்கள் பேதுருவிடம் நாங்கள் இரட்சிக்கப்பட என்ன செய்ய வேண்டும் என்று கேட்டனர். பிரசங்கித்தவனும் யூதன் கேட்டவனும் யூதன்.
அப்போஸ்தலர் 2 : 38 ல் “பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.” என்கிறார்.
ஒருவன் புதிய வாழ்க்கைக்குள் வரவேண்டுமானால் மனந்திரும்பி ஞானஸ்நானம் எடுக்க வேண்டும். அப்பொழுது இயேசு அவனுடைய பாவங்களை மன்னித்து , பரிசுத்தருளுவார்.
பழையன ஒழிந்து புதிதாக வேண்டும்:
இயேசு இஸ்ரவேல் ஜனங்கள் மத்தியில் சொன்ன சத்தியங்கள் அவர்களுக்குப் புதிதாக இருந்தது. இதற்கு முன்னாடி யாருமே இப்படி பேசவில்லையே என்று பார்த்தனர். இயேசுவின் புதிய கொள்கைகளும் அவர் கூறிய புதிய சத்தியங்களும், புதிய உபதேசங்களும் புது திராட்சைரசமாக இருந்து, மன மாற்றத்தையும், ஆவியானவரின் புதிய வாழ்வையும் அழிக்கின்றன. அவைகள் பரலோக ராஜ்ஜியம் வரை அவர்களை வழிநடத்தியது. ஒவ்வொரு கிறிஸ்தவனின் வாழ்க்கையிலும் உள்ளே ஒரு மாற்றம் வரவேண்டும். வெளிப்புறமான மாற்றத்தையல்ல ரோமர் 12 : 1, 2ல் உள்ளான மனம் புதிதாகிறதினால் மறுரூபமாகி, தேவனுடைய சித்தத்தை நிறைவேற்ற வேண்டும். பரிசேயர்களோ நியாயப்பிராணமாகிய பழைய சட்டத்தின் செயல்களாகிய பழைய மதுவைக் குடித்து பழைய தோற்பையாக இருந்தார்கள். அவர்கள் மனம் மாற விரும்பவில்லை. இயேசுவின் நற்செய்தி அவர்களைக் கிழிக்கச் செய்தது. அவர்கள் உள்ளத்தில் பதியாமல் சிந்திப்போய் விட்டது. இயேசுவின் சீஷர்களும் நாமும் ஆவியானவரால் புதுப்பிக்கப்பட்ட புதிய தோற்பையாக இருக்கிறோம். பழைய வாழ்க்கை முறை மாறி புதிய வாழ்க்கைக்குள் வரவேண்டும். இதைத்தான் பவுல்,
2கொரிந்தியர் 5 : 17ல் “இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின.” என்று கூறுகிறார்.
இந்த புதிய சத்தியத்தைப் புதிய துருத்தியாகிய நமது ஆத்துமாவிலே சேர்த்து வைக்க வேண்டும். உபவாசம் இருப்பது நல்லது. பாரம்பரியத்திற்காக உபவாசம் இருக்க வேண்டாம் அப்போஸ்தலர் 13 : 2ல் அந்தியோகியா பட்டணத்திலுள்ள சபையிலே போதகர்களும், தீர்க்கதரிசிகளும் உபவாசித்தனர் அப்பொழுது ஆவியானவர் இடைபட்டதைப் பார்க்கிறோம். பழைய வாழ்க்கை முறையை விட்டு புதிய வாழ்க்கைக்குள் வரவேண்டும். மதவாதிகள் இதை ஏற்றுக் கொள்ளாமல் கடினமான உபதேசம் என்றனர். இதைத்தான் பவுல்,
எபேசியர் 4 : 22 – 24 “அந்தப்படி, முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோட்டு,”
“உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி,”
“மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்.”
கூறப்பட்டதைப் போல பழைய மனிதனாக இல்லாமல், புதிய மனிதனாக, ஆவியில் நிறைந்தவனாக இருக்க வேண்டும். இயேசுவின் நீதியிலும், பரிசுத்தத்திலும், இயேசுவின் சாயலாக புதிய மனுஷனாக மாற வேண்டும். ஸ்தேவானைக் கொல்வதற்கான காரணம் அவர்கள் இயேசுவின் போதனையை ஏற்றுக்கொள்ளாததுதான். பவுலை எபேசு பட்டணத்தில் கல்லால் அடித்ததற்கு காரணம் புதிய ஏற்பாட்டைப் போதித்ததால்தான். இயேசுவை சிலுவையிலறைந்த யூதர்களும், இன்றிருக்கிற யூதர்களும் இன்றுவரை இயேசுவைத் தேவனுடைய குமாரன் என்று ஏற்றுக்கொள்ளவேயில்லை. அந்த தேசம் இன்றும் பழைய ஏற்பாட்டின்படியே நடந்து கொண்டிருக்கிறது.
லூக்கா 5 : 39 அன்றியும் ஒருவனும் பழைய ரசத்தைக் குடித்தவுடனே புது ரசத்தை விரும்பமாட்டான், பழைய ரசமே நல்லதென்று சொல்லுவான் என்றார்.”
ஒருவன் பழைய ரசத்தைக் குடித்தவுடனே புது ரசம் ருசியாக உள்ளது என்று கூற மாட்டான், பழைய ரசம்தான் நல்லதென்று சொல்லுவான் என்று இயேசு கூறுகிறார். அவைகளைக் கடைப்பிடிக்கும் போது தான் அதிலுள்ள கஷ்டம் தெரிய வரும். ஏனெனில் மோசே நியாயப்பிரமாணத்தின் நீதியின்படி செயல் பட்டால் மட்டுமே பிழைப்பான் என்று ரோமர் 10 : 5 ல் கூறியிருக்கிறார்.
நாம் கற்றுக்கொண்டது:
புதிய ஏற்பாட்டு சத்தியத்தைப் படிக்கிற நாம் இந்த சத்தியத்தை விளங்கிக் கொள்ள வேண்டும். மதவாதிகள் இதை ஏற்றுக் கொள்ளாமல் கடினமான உபதேசம் என்றனர். ஆனால் கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறாரென்று ரோமர் 10 : 4ல் பார்க்கிறோம். சிலுவைக்கு முந்தைய பாகம் பழைய ஏற்பாடு. பிந்திய பாகம் புதிய ஏற்பாடு. கிறிஸ்து வெறும் மாற்றங்களுக்காக மாற்றங்களை ஏற்க அழைப்பு கொடுக்கவில்லை. தேவ சித்தத்தின்படியான புதியதோர் வாழ்க்கை நிலைக்குத் தயாராக வேண்டுமென்கிறார். புதிய தரிசனம் பெற்ற நாம் நம்முடைய புதிய வாழ்க்கையில் இரட்சிப்பு, பரிசுத்த ஆவியின் அபிஷேகம் இரண்டையும் பத்திரப்படுத்தி வைத்திருக்க வேண்டும். தேவனுடைய சமூகத்துக்கு போகும்போது எதுவும் தெரியாது என்று நின்றால் புதிய போதனைகளை ஆவியானவர் தருவார். புதிதாக போதிக்க தேவனிடம் கேட்கும் பொழுது புதிதாக சத்தியங்களைத் தருவார். அன்றைக்கு எங்கேயோ மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்கள் இயேசுவின் அழைப்பு போய் அவர்கள் மூலம் 3,000 பேர் 5000 பேர் என்று இரட்சிக்கப்பட்டனர்.
நம்மில் பலர் இயேசுவின் நற்செய்தியைக் கேட்டாலும் அதைக் கைக்கொள்ள விரும்புவதில்லை. நாம் நம்முடைய தவறுகளை அறியவோ, மனம் மாறவோ இயேசுவின் கட்டளைகளைக் கைக்கொள்ளவோ விரும்புவதில்லை. வெளிவேஷக்காராகவே வாழ்கிறோம். இன்றைக்கு நம்மை இயேசு அழைத்திருக்கிறார். எனவே நாம் பாக்கியம் பெற்றவர்கள். அதனால் நாம் மனம் மாறி, தேவனுக்குப் பிரியமான வாழ்க்கை வாழ, அவரது சத்தியத்தை கைக்கொள்ள, அவருக்குப் பிடித்தமானதைச் செய்ய, புதிய உடன்படிக்கையின் புதிய மனிதனாக வாழ முயற்சியை ஒப்புக் கொடுப்போம். கர்த்தராகிய இயேசுவே சீக்கிரமாய் வாழும் ஆமென்.
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…
View Comments
Very much useful and knowledgeable for my spiritual growth. I praise God for your good work!
Thank you!