நேபுகாத்நேச்சார்:
நேபுகாத்நேச்சாரின் தந்தை ராஜாவாக பாபிலோனில் அரசாட்சி செய்த போது மூன்று வருடங்கள் நேபுகாத்நேச்சார் இளவரசராக இருந்தான். அப்பொழுது யுத்தங்களைச் செய்தான். அதில் ஒன்று எருசலேமை வென்றது. அங்கிருந்து தானியேலையும் அவனது நண்பர்களையும் சிறைப்பிடித்துக் கொண்டு வந்தான். நேபுகாத்நேச்சாரின் தந்தை இறந்தபின் முழு பாபிலோன் ராஜ்ஜியத்திற்கும் நேபுகாத்நேச்சார் ராஜாவாக அபிஷேகம் பண்ணப்பட்டான். நேபுகாத்நேச்சார் பல நாடுகளைக் கைப்பற்றி தன் ஆளுகைக்குள் கொண்டு வந்தான். 120 தேசங்கள் அவரின் கீழ் இருந்தது. இந்தக் காலகட்டத்தில் நேபுகாத்நேச்சார் எல்லா நாடுகளுக்கும் மேலாக உயர்த்தப்பட்டு மகிழ்ச்சியோடு இருந்தான். பாபிலோன் தான் உலக அளவில் பெரிய ராஜ்யமாக இருந்தது. எகிப்தியர் செய்ய முடியாத காரியங்களையும் நேபுகாத்நேச்சார் செய்து முடித்தான்.
தானியேல்:
எருசலேமை யோயாக்கீம் ராஜா அரசாண்ட காலத்தில், நேபுகாத்நேச்சார் அங்குள்ளவர்களைச் சிறைப்பிடித்துக் கொண்டு சென்றான். அதில் ஒருவராக தானியேல் இருந்தான். அப்பொழுது அவனுக்கு 14 அல்லது 16 வயதாக இருந்திருக்கலாம். இள வயதிலேயே தானியேல் குடும்பத்தை விட்டுப் பிரிந்து பாபிலோனுக்குக் கொண்டு போகப்பட்டான். அவனுடைய தகப்பனார், தாயார் யாரென்று கொடுக்கப்படவில்லை. வேதம் முழுவதிலும் மூன்று பேரை மிகச்சிறந்தவர்களாகக் காட்டுகிறது. அதில் ஓன்று ஏனோக்கு, இரண்டாவது யோசேப்பு, மூன்றாவது தானியேல். இந்த மூன்று பேரிலும் நாம் எந்தக் குறையையும் காண முடியாது. தானியேல் எவ்வாறு ராஜாவின் சொப்பனத்திற்கு அர்த்தம் கூறினார் என்பதைப் பார்ப்போம்.
நேபுகாத்நேச்சார் ராஜாவின் கலக்கம்:
தானியேல் 2 : 1, 2 “நேபுகாத்நேச்சார் ராஜ்யபாரம் பண்ணும் இரண்டாம் வருஷத்திலே, நேபுகாத்நேச்சார் சொப்பனங்களைக் கண்டான்; அதினால், அவனுடைய ஆவி கலங்கி, அவனுடைய நித்திரை கலைந்தது,”
“அப்பொழுது ராஜா தன் சொப்பனங்களைத் தனக்குத் தெரிவிக்கும்பொருட்டு சாஸ்திரிகளையும் ஜோசியரையும் சூனியக்காரரையும் கல்தேயரையும் அழைக்கச் சொன்னான்; அவர்கள் வந்து ராஜசமூகத்தில் நின்றார்கள்.”
ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் ராஜாவாகி இரண்டு வருடத்திற்கு பின்பு தூக்கத்தில் ஒரு சொப்பனத்தைக் கண்டான். அது அவனைக் கலங்கப் பண்ணுவதாக இருந்தது. அதனால் அவருடைய ஆவி கலங்கியது. தூக்கம் கலைந்து எழுந்து உட்கார்ந்தான். எழுந்தபின் ராஜாவுக்குத் தான் என்ன சொப்பனம் கண்டோம் என்று சரியாக ஞாபகத்துக்கு வரவில்லை. எல்லோருக்கும் சொப்பனம் வருவது இயற்கை. தொல்லையின் திரட்சியினால் சொப்பனங்கள் வருவதாக சாலமோன் ஞானி நீதிமொழிகளில் கூறுகிறான். சில சொப்பனங்கள் கர்த்தரிடமிருந்து வருகிறது. சில சாத்தானிடமிருந்து வருகிறது. வருங்காலத்தைப் பற்றித் தன் பிள்ளைகளுக்கு அறிவிக்கத் தேவன் சொப்பனங்களைத் தருகிறார்.
பார்வோனுக்கு 7 வருடம் அவருடைய ராஜ்யத்தில் என்ன நடக்கப் போகிறதென்பதைத் தேவன் காட்டினார். அதேபோல் யோசேப்புக்கும் அவனது வருங்காலத்தில் என்ன நடக்கப்போகிறதென்பதை சிறுவயதிலேயே காண வைத்தார். ராஜா தன்னுடைய சொப்பனத்துக்கு ஏதோ ஒரு அர்த்தமும், மறைபொருளும் இருப்பதாக உணர்ந்தானேயொழிய அந்தச் சொப்பனத்தின் அர்த்தத்தை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. தேவன் அதைத் தனக்கு வெளிப்படுத்தியிருக்கிறார் என்பதை அறிந்தான். எனவே தான் கண்ட சொப்பனத்தையும், அதின் அர்த்தத்தையும் தெரிவிக்க சாஸ்திரிகள், ஜோசியர், சூனியக்காரர், கல்தேயர் என்ற நான்கு கூட்டத்தாரை அழைத்தான். தானியேலையும், அவனது நண்பர்களையும் ராஜா அழைக்கவில்லை.
கல்தேயரின் பதில்:
தானியேல் 2 : 4 “அப்பொழுது கல்தேயர் ராஜாவை நோக்கி: ராஜாவே, நீர் என்றும் வாழ்க; சொப்பனத்தை உமது அடியாருக்குச் சொல்லும், அப்பொழுது அதின் அர்த்தத்தை விடுவிப்போம் என்று சீரிய பாஷையிலே சொன்னார்கள்.”
கல்தேயர் ராஜாவை நோக்கி ராஜாவே, நீர் என்றும் வாழ்க என்று வாழ்த்துகின்றனர். இந்த வாழ்த்துதல் உண்மைக்குப் புறம்பானது என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். எந்த ஒரு ராஜாவும் என்றென்றும் வாழப்போவதில்லை. அதை ராஜாவும் உணர்ந்திருப்பான். கல்தேயர் ராஜாவிடம், சொப்பனத்தைச் சொன்னால் அதன் அர்த்தத்தை தாங்கள் சொல்லுவோம் என்று சீரியபாஷையிலே கூறினார்கள். இந்த பாஷை அரசவையில் பயன்படுத்தப்பட்ட பாஷையாகும். இது யூதரல்லாத மற்ற ஜனங்களின் மொழியாயிருந்தது. ராஜா அழைத்த அனைவரும் அதேபோல் கூறினர். மேலும் ராஜா கேட்கிற காரியம் மிகவும் அருமையானது என்றும், அதை அறிவிப்பதற்கான மனுஷன் பூமியில் யாருமில்லை என்றும், எந்த ராஜாவும் இப்படிப்பட்ட ஒரு காரியத்தை சாஸ்திரிகளிடமோ, ஜோசியரிடமோ கேட்டதில்லை என்றும் கூறினர். அதாவது ராஜா கேட்பது நியாயமான கேள்வியல்ல என்கின்றனர். மாம்சமாயிருக்கிறவர்களோடே வாசம் பண்ணாத தேவர்கள் தான் இதை அறிவிக்க முடியும் என்றும் கூறினார்கள். குறி சொல்லுகிறவர்களுக்குள் அசுத்தஆவிகள் வாசம் பண்ணி சில காரியங்களை வியாக்கியானம் சொல்லும். அதைத்தான் அவர்கள் கூறுகின்றனர் (தானியேல் 2 : 10, 11).
ராஜாவின் கட்டளை:
தானியேல் 2 : 5, 6, 12, 13 “ராஜா கல்தேயருக்குப் பிரதியுத்தரமாக: என்னிடத்திலிருந்து பிறக்கிற தீர்மானம் என்னவென்றால், நீங்கள் சொப்பனத்தையும் அதின் அர்த்தத்தையும் எனக்கு அறிவியாமல் போனால் துண்டித்துப்போடப்படுவீர்கள்; உங்கள் வீடுகள் எருக்களங்களாக்கப்படும்.”
“சொப்பனத்தையும் அதின் அர்த்தத்தையும் தெரிவித்தீர்களேயாகில், என்னிடத்தில் வெகுமதிகளையும் பரிசுகளையும் மிகுந்த கனத்தையும் பெறுவீர்கள்; ஆகையால் சொப்பனத்தையும் அதின் அர்த்தத்தையும் எனக்குத் தெரிவியுங்கள் என்றான்.”
“இதினிமித்தம் ராஜா மகா கோபமும் உக்கிரமுங்கொண்டு, பாபிலோனில் இருக்கிற எல்லா ஞானிகளையும் கொலை செய்யும்படி கட்டளையிட்டான்.”
“ஞானிகளைக் கொலைசெய்யவேண்டுமென்கிற கட்டளை வெளிப்பட்டபோது, தானியேலையும் அவன் தோழரையும் கொலை செய்யத்தேடினார்கள்.”
ராஜா கொடூரமான ஒரு நியாயத்தீர்ப்பை கூறுகிறான். உண்மையில் ராஜா அந்தச் சொப்பனத்தை மறந்துவிடவில்லை. சொப்பனம் மிகவும் முக்கியம் என்பதை உணர்ந்து, அதை அவர்களுக்கு அறிவிக்க மறுக்கிறான். தான் அதற்குச் சரியான அர்த்தத்தைத் தெரிந்து கொள்ள முயற்சிக்கிறான். தன்னுடைய கட்டளையினாலே ஞானிகளை பயமுறுத்துகிறான். அவர்களே அந்தச் சொப்பனம் என்னவென்பதையும், அதன் அர்த்தத்தையும் தெரிவிக்க வேண்டும் என்கிறான். தெரிவிக்காவிட்டால் துண்டித்துப் போடுவேன் என்றும், அவர்கள் வீடும் எருக்களங்களாக்கப்படும் என்றும் அறிவிக்கிறான். அதை அவர்கள் தெரிவித்தால் வெகுமதிகளும், பரிசுகளும் தருவதாகக் கூறினான். அவர்கள் அனைவரும் தங்களால் அது முடியாது என்று கூறியவுடன், ராஜா மிகவும் கோபத்துடன் பாபிலோனிலிருக்கிற எல்லா ஞானிகளையும் கொலை செய்யும்படி கட்டளையிட்டான்.
பாபிலோனிலுள்ள அத்தனை ஞானிகளையும் கொலை செய்தால் அது ராஜாவுக்குத் தான் நஷ்டம். அவனுடைய கோபம் எல்லையை மீறுகிறது. இதிலிருந்து அந்தச் சொப்பனத்தினால் ராஜா எந்த அளவு பாதிக்கப்பட்டிருக்கிறான் என்பதை அறிகிறோம். ராஜா சொப்பனத்தைக் கூற ஞானிகளை அழைத்து வரச் சொன்னபோது, தானியேல் அப்பொழுது ஞானிகளின் வரிசையிலில்லை. ஆனால் இப்பொழுது ஞானிகளைக் கொலை செய்ய வேண்டுமென்றபோது தானியேலைக் கொலை செய்யத் தேடுகின்றனர். தேவன் தானியேலின் பின்னணியில் இருந்து கொண்டிருக்கிறார் என்பதற்கு இதுவும் ஒரு சாட்சியாக உள்ளது. தேவனிடம் அன்பு கூறுகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கேதுவாகவே நடக்குமென்பதை நாம் அறிந்திருக்கிறோம். அதனால் தானியேலையும், அவன் தோழர்களையும் கொலை செய்யத் தேடினார்கள்.
தானியேலும், ஆரியோகும்:
தானியேல் 2 : 15, 16 “இந்தக் கட்டளை ராஜாவினால் இத்தனை அவசரமாய்ப் பிறந்ததற்குக் காரணம் என்ன என்று ராஜாவின் சேர்வைக்காரனாகிய ஆரியோகினிடத்தில் தானியேல் கேட்டான்; அப்பொழுது ஆரியோகு தானியேலுக்குக் காரியத்தை அறிவித்தான்.”
“தானியேல் ராஜாவினிடத்தில் போய், சொப்பனத்தின் அர்த்தத்தை ராஜாவுக்குக் காண்பிக்கும்படித் தனக்குத் தவணைகொடுக்க விண்ணப்பம் பண்ணினான்.”
ராஜாவின் அவசரமான கட்டளையைக் கேட்டு தானியேல் பதற்றமடைந்தான். என்றாலும் ராஜா இந்தக் கட்டளையை அவசரமாகப் பிறப்பித்தததற்குக் காரணம் என்னவென்று தானியேல் ஆரியோகிடம் கேட்டான். ஆரியோகு தானியேலுக்கு ராஜாவின் காரியத்தை அறிவித்தான். ஆரியோகு ராஜாவினுடைய தலையாரிகளுக்கு அதிபதியாக இருந்ததால் அடிக்கடி ராஜாவினிடத்துக்குச் சென்று வரக்கூடியவனாக இருந்தான். தானியேல் ஞானிகள் அனைவரிலும் சிறந்தவனாகக் காணப்பட்டபடியால் ராஜசமுகத்திற்கு உடனே செல்ல அனுமதி பெற்றான். தானியேல் ராஜாவினிடத்தில் போய் சொப்பனத்தின் அர்த்தத்தைத் தெரிவிக்கத் தனக்குக் காலஅவகாசம் தரும்படி விண்ணப்பம் பண்ணினான். இது ஞானமுள்ள ஒரு இளைஞரின் செயலாகத் தோன்றினாலும், தொடர்ந்து வரும் நிகழ்ச்சிகளைப் பார்க்கும் போது, தானியேலுக்குத் தேவனிடமிருந்த விசுவாசமே இவ்வண்ணம் வழிநடத்தியது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
தானியேல் செய்ததும், தேவனைப் பற்றிக் கூறியதும்:
தானியேல் 2 : 17 – 19 “பின்பு தானியேல் தன் வீட்டுக்குப் போய், தானும் தன் தோழரும் பாபிலோனின் மற்ற ஞானிகளோடேகூட அழியாதபடிக்கு இந்த மறைபொருளைக்குறித்துப் பரலோகத்தின் தேவனை நோக்கி இரக்கம் கேட்கிறதற்காக,”
“அனனியா, மீஷாவேல், அசரியா என்னும் தன்னுடைய தோழருக்கு இந்தக் காரியத்தை அறிவித்தான்.”
“பின்பு இராக்காலத்தில் தரிசனத்திலே தானியேலுக்கு மறைபொருள் வெளிப்படுத்தப்பட்டது; அப்பொழுது தானியேல் பரலோகத்தின் தேவனை ஸ்தோத்தரித்தான்.”
தானியேல் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்ற தன்னுடைய நண்பர்களோடு சேர்ந்து ஜெபம் பண்ணினான். ஒருமனப்பாட்டின் ஜெபத்தின் வல்லமையை தானியேல் அறிந்திருந்ததால், அவர்களோடு சேர்ந்து முழு இரவும் தேவனிடம் இரக்கத்தைக் கேட்டு ஜெபம் பண்ணினான். தேவன் நம்முடைய தகுதியை வைத்து நம்முடைய ஜெபங்களுக்குப் பதில் கொடுப்பதில்லை. அவர் தம்முடைய இரக்கத்தினால் பதில் கொடுக்கிறார். தானியேலுக்குத் தேவன் தெய்வீக ஞானத்தைக் கொடுத்திருந்ததால் அந்த மறைபொருள் அவனுக்கு வெளிப்படுத்தப்பட்டது. தேவன் நேபுகாத்நேச்சாருக்கு வருங்காலத்தைப் பற்றிய விபரங்களைச் சொப்பனங்கள் மூலமாக தெரிவித்தார், அதே சொப்பனத்தை தானியேலுக்கும் வெளிப்படுத்தினார். அந்த இரவு நான்கு பேர் ஜெபம் பண்ணினாலும் தானியேலுக்கு அந்த மறைபொருள் வெளிப்படுத்தப்பட்டது. அவ்வளவு கருத்தாய் தானியேல் ஜெபம் பண்ணியிருப்பான். ஜெபத்திற்கு பதிலைப் பெற்றுக்கொண்ட தானியேல் உடனே ராஜாவிடம் ஓடவில்லை. முதலில் நன்றியுடன் தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்தினான். இதேபோல் நாமும் நமக்குத் தேவன் செய்த ஒவ்வொன்றுக்கும் ஸ்தோத்திரம் செலுத்த வேண்டும்.
அதன்பின் தானியேல் சொன்னது:
தானியேல் 2 : 21, 22 “ கர்த்தர் காலங்களையும் சமயங்களையும் மாற்றுகிறவர்; ராஜாக்களைத் தள்ளி, ராஜாக்களை ஏற்படுத்துகிறவர்; ஞானிகளுக்கு ஞானத்தையும், அறிவாளிகளுக்கு அறிவையும் கொடுக்கிறவர்.”
“அவரே ஆழமும் மறைபொருளுமானதை வெளிப்படுத்துகிறவர்; இருளில் இருக்கிறதை அவர் அறிவார்; வெளிச்சம் அவரிடத்தில் தங்கும்.”
தானியேல் செய்த பல ஜெபங்களில் இதுவும் ஒன்று. தானியேல் தேவனுடைய ஞானம் , ஆற்றலைப் பற்றியும், காலங்களின் மேலும், அரசுகளின் மீதும் அவருக்கிருந்த ஆளுகையைப் பற்றியும், ஞானத்தையும் அறிவையும் மக்களுக்குக் கொடுக்கும் தன்மையைப் பற்றியும், மறைபொருளை வெளிப்படுத்தும் தன்மையைப் பற்றியும், ஒளியிலிருக்கும் தேவனுடைய தன்மையைப் குறித்தும் இந்த ஜெபத்தில் புகழ்ந்ததைப் பார்க்கிறோம். இதேபோல் நாமும் தேவனைக் குறித்து ஆழ்ந்து சிந்தித்து துதிக்க வேண்டும்.
தானியேலும், ஆரியாகும், ராஜாவின் கேள்வியும்:
பின்பு தானியேல் ஞானிகளை அழிக்கக் கட்டளையிட்ட ஆரியோகிடம் பாபிலோனிய ஞானிகளை அழிக்க வேண்டாம் என்றும் தன்னை ராஜாவிடம் அழைத்துக் கொண்டு போனால் தான் அதன் அர்த்தத்தைத் தெரிவிப்பதாகக் கூறினான். நடைபெறவிருந்த ஒரு பெரிய அழிவைத் தடுத்து நிறுத்த தானியேல் நினைத்தான். ஞானிகளைக் கொலை செய்யாமலிருக்க ஒரு வாய்ப்பு கிடைத்ததால் ஆரியோகு தீவிரமாய்த் தானியேலை ராஜாவிடம் அழைத்துச் போய், ராஜாவிடம் ராஜாவின் சொப்பனத்தைத் தெரிவிக்கக் கூடிய ஒரு புருஷனைத் தான் கண்டுபிடித்ததாக மிகைப்படுத்திக் கூறினான். ராஜா தானியேலிடம் “தான் கண்ட சொப்பனத்தையும் அதன் அர்த்தத்தையும் உன்னால் அறிவிக்க முடியுமா” என்று கேட்டான். இது ஒரு ஏளனமான கேள்வியாக இருந்தது. இத்தனை வருடம் அங்கிருந்த ஞானிகளால் அதைச் சொல்ல முடியவில்லை. ஆனால் இளைஞனான நீ அதைச் சொல்லி விடுவாயோ என்று நினைத்தும், இன்னும் சற்று காலத்தைக் கடத்த நினைக்கிறான் என்று நினைத்தும் ராஜா இந்தக் கேள்வியைக் கேட்டிருப்பான் (தானியேல் 2 : 24 – 26).
தானியேல் ராஜாவின் நினைவைப் பற்றி கூறியது:
தானியேல் ராஜாவைப் பார்த்து ராஜா கேட்கிற மறைபொருளைத் தெரிவிக்க எந்த ஞானிகளாலும் கூடாது. பரலோகத்திலிருக்கிற தேவனே கடைசி நாட்களில் சம்பவிப்பதை ராஜாவுக்குத் தெரிவித்திருக்கிறார் என்ற உன்னதமான ஒரு பதிலைக் கொடுத்தான். ராஜா சொப்பனம் என்னவென்று தான் கேட்டான். ஆனால் தானியேலோ ராஜாவின் நினைவுவரை ஆண்டவருக்குத் தெரியும் என்கிறான். “இனி இந்த ராஜ்யம் எவ்வாறு இருக்கப் போகிறது, எதிர்காலம் எப்படி இருக்கும்” என்று ராஜா சிந்தித்திருக்கிறான். ஒரு சிறிய ராஜ்ஜியத்தின் அரசனாகத் தன்னுடைய பொறுப்பை எடுத்துக் கொண்டாலும், “இன்று உலகளாவிய மகாபெரிய ராஜ்ஜியத்தில் இருக்கிறேனே, இனி என்னவாகுமென்று” கலங்கியிருக்கிறான். அதனால் தான் அவனுக்கு அந்தச் சொப்பனத்தைத் தேவன் காட்டியிருக்கிறார் என்றான்.
தானியேல் மிகத் தெளிவாக, உறுதியாக பாபிலோனின் ஞானத்திற்கும், பரலோகதேவனின் ஞானத்திற்குமுள்ள வேறுபாட்டை ராஜா அறிந்து கொள்ளும்படியாக இவ்வாறு கூறுகிறான். பரலோகத்தின் தேவனே அதைத் தனக்கு வெளிப்படுத்தினார் என்றான். தேவனை அறியாத அந்த உன்னதஅரசனுக்கு தேவனைப் பற்றி அறிவிக்கும் பாக்கியத்தைத் தானியேல் பெற்றுக்கொண்டான். இந்த சத்தியம் மிகவும் முக்கியமானது. தானியேல் அந்த சொப்பனத்தைச் சொல்லும்பொழுது அது தன்னுடைய திறமையினால் அல்ல, பரலோகத்தின் தேவனே அதை தனக்கு வெளிப்படுத்துவதாகக் கூறினான். இதன் மூலம் ராஜாவின் கேள்விக்குப் பதில் கிடைக்கிறது. அழிக்கவிருந்த ஞானிகளும் தப்புவிக்கப் படுகிறார்கள் (தானியேல் 2 : 29, 30)
தானியேல் கூறிய சொப்பனமும், அதன் அர்த்தமும்:
தானியேல் 2 : 31 – 35 “ராஜாவே, நீர் ஒரு பெரிய சிலையைக் கண்டீர்; அந்தப் பெரிய சிலை மிகுந்த பிரகாசமுள்ளதாயிருந்தது; அது உமக்கு எதிரே நின்றது; அதின் ரூபம் பயங்கரமாயிருந்தது.”
“அந்தச் சிலையின் தலை பசும்பொன்னும், அதின் மார்பும் அதின் புயங்களும் வெள்ளியும், அதின் வயிறும் அதின் தொடையும் வெண்கலமும்,”
“அதின் கால்கள் இரும்பும், அதின் பாதங்கள் பாதி இரும்பும் பாதி களிமண்ணுமாயிருந்தது.”
“நீர் பார்த்துக்கொண்டிருக்கும்போதே, கைகளால் பெயர்க்கப்படாத ஒரு கல் பெயர்ந்து உருண்டுவந்தது; அது அந்தச் சிலையை இரும்பும் களிமண்ணுமாகிய அதின் பாதங்களில் மோதி, அவைகளை நொறுக்கிப் போட்டது.”
“அப்பொழுது அந்த இரும்பும் களிமண்ணும் வெண்கலமும் வெள்ளியும் பொன்னும் ஏகமாய் நொறுங்குண்டு, கோடைகாலத்தில் போரடிக்கிற களத்திலிருந்து பறந்துபோகிற பதரைப்போலாயிற்று; அவைகளுக்கு ஒரு இடமும் கிடையாதபடி காற்று அவைகளை அடித்துக்கொண்டு போயிற்று; சிலையை மோதின கல்லோவென்றால் ஒரு பெரிய பர்வதமாகி பூமியெல்லாம் நிரப்பிற்று.”
தானியேல் தேவன் கொடுத்த ஞானத்தினால் நேபுகாத்நேச்சார் கண்ட சொப்பனத்தை அப்படியே கூறி, அதன் அர்த்தத்தையும் ராஜாவுக்குத் தெரிவிக்கிறான். ராஜா பார்த்த அந்தச் சிலை பிரகாசமுள்ளதாயும், அதனுடைய ரூபம் பயங்கரமாயும், மிகவும் உறுதியாயிருந்தது. இந்தச் சிலையில் வெவ்வேறு உலோகங்கள், வெவ்வேறு ராஜ்ஜியங்களைக் குறிப்பதாக உள்ளது. இந்த சிலையிலிலுள்ள பொன்னாலான தலை நேபுகாத்நேச்சாரைக் குறிக்கிறதென்றும், தேவாதிதேவனே ராஜாவுக்கு ராஜரீகத்தையும், பராக்கிரமத்தையும், வல்லமையையும், மகிமையையும் அளித்து, அனைத்து ஜனங்களுக்கும் மேலாய் உயர்த்தினவர் என்றும், உலகமெங்குமிருந்த அத்தனை ஜனங்ளையும், வெளியின் மிருகங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும் தேவனே நேபுகாத்நேச்சாரின் கையில் கொடுத்து ஆளும்படி செய்தவர் என்றும் தானியேல் கூறினான்.
மேலும் நேபுகாத்நேச்சாருக்குப்பின் கீழ்த்தரமான ஒரு ராஜ்ஜியம் தோன்றும். அதன்பின் பூமியெல்லாம் ஆண்டு கொள்ளத்தக்க வெண்கலமான மூன்றாம் ராஜ்யம் எழும்பும். நாலாவது ராஜ்யம் எல்லாவற்றையும் நொறுக்கி, சின்னாபின்னமாக்கிப் போடுகிற இரும்பைப் போல, மற்ற எல்லோரையும் நொறுக்கித் தகர்த்துப் போடும். பாதங்களும் கால் விரல்களும் பாதி களிமண்ணும், பாதி இரும்புமாய் இருப்பதை ராஜா பார்த்ததைப் போல, அந்த ராஜ்ஜியம் பிரிக்கப்படும். அது ஒரு பங்கு உரமும், ஒரு பங்கு நெரிசலுமாயிருக்கும். களிமண்ணோடு இரும்பு கலவாதது போல, அவர்கள் மற்றவர்களோடு சம்பந்தம் கலந்தாலும், ஒருவரோடொருவர் ஒட்டிக் கொள்ள மாட்டார்கள்.
அந்த ராஜாக்களின் நாட்களிலே பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அறியாத ஒரு ராஜ்யத்தை எழும்ப பண்ணுவார். அந்த ராஜ்ஜியம் வேறு ஜனங்களுக்கு விடப் படுவதில்லை. கைகளால் பெயர்க்கப்படாத ஒரு கல்லானது மலையில் இருந்து உருண்டு வந்து இரும்பையும், வெண்கலத்தையும், களிமண்ணையும், வெள்ளியையும், பொன்னையும் நொறுக்கி போடும். இனிமேல் என்ன சம்பவிக்கப் போகிறது என்பதை பரலோகத்தின் தேவன் ராஜாவுக்கு தெரிவித்திருப்பதாகவும், இந்தச் சொப்பனம் நிச்சயம் என்றும், அதனுடைய அர்த்தம் சத்தியம் என்றும் கூறினான்.
ராஜா கண்ட சொப்பனத்தின் படி நடந்தது:
தேவன் ராஜாவுக்குக் காட்டிய சொப்பனத்தில் ராஜ்யத்தின் வெளிப்புறமான மகிமையைக் காட்டினார். இது ஒரு புறஜாதி சொப்பனம் என்றே கூறலாம். ஒரு சிலையைக் கொண்டு தேவன் பேசுகிறார். ராஜா கண்ட சிலை வழிபடக்கூடிய சிலை அல்ல. பாபிலோன் சிலை வழிபாட்டைச் சார்ந்திருந்ததாலும், ராஜா சிலைக்கு முன் விழுந்து கிடக்கிறவனாக இருந்ததாலும், எளிதில் புரிந்து கொள்வதற்காகவும் தேவன் அவனுக்கு அவ்வண்ணம் காட்டினார். தாவீதின் குமாரன் தோல்வி கண்டபடியினாலே இந்த உலகத்தின் செங்கோலைத் தாவீதின் கரத்திலிருந்து எடுத்து, புறஜாதி மக்களுடைய கரத்தில் தேவன் கொடுத்து விட்டார். இயேசுவின் வருகை மட்டும், அது புறஜாதிகளிடந்தானிருக்கும். நேபுகாத்நேச்சாரின் காலம் முதல் இயேசு வருகிற வரை உள்ள காலம், புறஜாதியரின் காலமாயிருக்கிறது. அவனுடைய அதிகாரத்தைக் கேள்வி கேட்க யாருமில்லை. அதற்குப் பின் அவனைப் போல் எவருமில்லை. பாபிலோன் சாம்ராஜ்ஜியம் 506 லிருந்து 568 வரை 68 வருடங்கள் அரசாண்டது. அதற்குக் காரணம் அவனிடமிருந்த தெய்வபயம். மறுபக்கம் அந்தகார வல்லமைகள் இருந்தது.
காலங்கள் மாறமாற ராஜ்ஜியத்தின் தரம் குறைந்து கொண்டே வருகிறது. அதிகாரமும் பிளவுபட்டுப் போகிறது. நேபுகாத்நேச்சார் ஒரே கரங்களால் ராஜ்ஜியத்தை ஆண்டான். அந்தச் சிலையின் மார்பும் புயங்களும் தரம் குறைந்து வெள்ளியினால் இருந்தது. இது பாபிலோன் ராஜ்ஜியத்திற்குப் பின்பு எழும்பும் இரண்டாம் தரமான மேதிய பெர்சிய ராஜ்ஜியத்தைக் குறிக்கிறது. இது மேதிய, பெர்சிய என்று இரண்டாக இருந்தது. இந்த ராஜ்யத்தில் கோரேஸ் 70 வருடம் ஆட்சி செய்வான். அவனது ராஜ்ஜியம் முடியும்போது இஸ்ரவேல் ஜனங்களுக்கு விடுதலை கொடுப்பான். அதே சாம்ராஜ்யத்தில் தரியு எழும்புவான். அவன் தானியேலைப் புரிந்து கொள்வான்.
அதற்குப் பின்பு தரம் கெட்டு சிலையினுடைய வயிறும் தொடையும் வெண்கலத்தினாலிருந்தது. இது மூன்றாவது ராஜ்ஜியமான கிரேக்க சாம்ராஜ்ஜியத்தைக் குறிக்கிறது. இந்த ராஜ்யம் மகா அலெக்சாண்டரின் ராஜ்யம். இவன் தன்னுடைய 18 ஆவது வயதிலேயே புறப்பட்டு, சென்ற தேசங்களையெல்லாம் வென்று 15 ஆண்டுகள் ஆட்சி செய்தான். தன்னுடைய முப்பத்திரண்டரை வயதில் இறந்து போனான். ஜூலியஸ்சீசர் தான் கிரேக்க சாம்ராஜ்யத்திற்கு முடிவுண்டாக்கினான். அவனுக்குப் பின் அவனது தளபதிகள் ராஜ்யத்தை ஆண்டு ராஜ்யபாரம் நான்காகப் பிரிந்தது.
கடைசியாக சிலையினுடைய கால்கள் இரும்பாயிருந்தது. அது ரோம சாம்ராஜ்யத்தைக் குறிக்கிறது. ஜூலியஸ்சீஸருக்குப் பின் அகஸ்துராயனின் காலம். அவனுடைய காலத்தில் தான் இயேசுவானவர் பிறந்தார், ஊழியம் செய்தார், சிலுவையிலறையப்பட்டு அடக்கம் பண்ணப்பட்டார், உயிரோடெழுந்தார். ரோமர்கள் ஆட்சி செய்யும் காலத்தில்தான் மாதங்களையும், நாட்களையும், வருஷங்களையும் வகுத்துப் பிரித்து காலண்டர்களைக் கண்டுபிடித்தனர். அதன்பின் ரோம அரசாங்கம் இரண்டு கால்கள் இருப்பது போல இரண்டாகப் பிரிந்தது. ரோம சாம்ராஜ்யத்திற்கு எதிராக யாரும் யுத்தம் செய்யவில்லை. அது மங்கிக் கொண்டே வந்தது. ரோம அரசாங்கத்திற்குப் பின் எந்த ஒரு ராஜ்யமும் அதுபோல அதிகாரத்தைச் செலுத்தவில்லை. இத்தாலி, பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி, ஸ்பெயின் இவைகள் அனைத்துமே பண்டைய ரோம சாம்ராஜ்யத்தின் பகுதிகள்தான். அங்கு ரோம சட்டங்களும் இருக்கின்றன. அதன் மொழியும் இருக்கின்றது. ஆனால் ரோம சாம்ராஜ்யம் எத்தனை நாடுகளாகப் பிரிந்தாலும் இன்றும் போர் நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது.
கடைசி காலத்தில் இரும்பும் மண்ணும் கலந்த உறுதியில்லாத ஒரு ராஜ்ஜியம் தோன்றும். காலங்கள் மாற மாற ராஜ்ஜியத்தின் தரமும் குறைந்து கொண்டே வந்து, அதிகாரமும் பிளவுபட்டுப் போகிறது. இரும்பும் களிமண்ணும் ஒருநாளும் ஒட்டாதது போல ஒட்டாமலிருக்கிற ராஜ்ஜியங்கள் கடைசி காலங்களில் தோன்றும். கூட்டணி ஆட்சி தோன்றும். இந்த 20ம் நூற்றாண்டில் தான் இந்த கூட்டணி ஆட்சி நடக்கிறது. கூட்டாட்சி நடப்பதால் அரசாங்கத்தால் பெலன் கொள்ள முடியவில்லை. கடைசியாக இருந்த கூட்டாட்சி ஸ்திரமாக இல்லாததால் அந்த சிலையால் ஸ்திரமாக நிற்க முடியவில்லை.
மீண்டும் ரோம சாம்ராஜ்யத்தைக் கொண்டு வரும் ஒருவனுக்காக அடிமையாக உருவாகிக் கொண்டிருக்கின்றன. இவனை பாவமனிதனென்றும் அந்திகிறிஸ்து என்றும் வேதம் அழைக்கிறது. இப்போது பழையபடியும் ஐரோப்பாவில் பொதுவான சந்தை உருவாகிவிட்டது. இதுவும் ரோம சாம்ராஜ்ஜியம் உருவாகுவதற்கான ஆயத்தமாயிருக்கிறது. ஆனால் தேவனுடைய நேரம் வரும் வரை இந்த பாவமனுஷன் வெளிப்படப் போவதில்லை. அவன் சாத்தானின் மனிதனாக இருக்கிறபடியினாலே மக்களைத் தனக்காகச் சேர்த்துக் கொள்ளும்வரை . அவனை அனுமதிக்கப் போவதில்லை. அந்த நாள் வரும்போது திருச்சபையை இயேசு எடுத்துக்கொள்வார். தேவன் இன்றும் செயல்பட்டுக் கொண்டேயிருக்கிறார்.
களிமண்ணோடு இரும்பு கலந்திருப்பது, இறுதியான உலக அரசாட்சியிலும், ரோம சாம்ராஜ்யம் உருவாகி வருவதைக் குறிக்கிறது. அந்திகிறிஸ்து என்ற பாவ மனிதனே, இந்த ரோம சாம்ராஜ்ஜியத்தைக் கொண்டு வரப் போகிறவன். அவனே சகல சம்பத்தையும் ஆளப் போகிறவன். நேபுகாத்நேச்சாரைப் போலவே, அவனும் சர்வாதிகாரியாக இருப்பான். கைகளால் பெயர்க்கப்படாத கல்லானது இயேசு கிறிஸ்துவைக் குறிக்கிறது (மத்தேயு 21 : 44). அதுவே ஜீவனுள்ள கல்லாகவும், அஸ்திபாரமான கல்லாகவும் இருக்கிறது (1கொரிந்தியர் 3 : 11). அந்தக் கல் உருண்டு வந்து, அந்தச் சிலையை மோதி நொறுக்கியது போல உலக சாம்ராஜ்ஜியங்கள் அனைத்தும் நொறுங்கிப் போகும். அந்தச் சிலையின் தூசியை காற்றானது அடித்துக்கொண்டு பூமியை நிரப்பினது போல கல்லானது பெருகும். களிமண்ணானது பல்வேறு ராஜ்ஜியங்களைக் குறிக்கிறது.
இயேசு வரும்போது இரட்சகராகவும், நீதிபதியாகவும் வருவார் என்பதையே அந்தக் கல் காட்டுகிறது. உபாகமம் 32 : 17 ல் இதைக்குறித்துக் கூறப்பட்டிருக்கிறது. மனிதனுடைய ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும்படியாக தேவன் வருகிறார். அந்த ராஜ்ஜியம் நிலைக்கும். அது ஆயிரம் ஆண்டுகள் கிறிஸ்துவின் கீழிருக்கும் அரசாட்சியைக் குறிக்கிறது. 7 வருடங்கள் ஜனங்கள் மத்திய ஆகாயத்தில் இயேசுவோடு செலவழிப்பர். அந்த 7 வருடங்களும் பூமியில் அந்திகிறிஸ்து ஆட்சிசெய்வான். 1000 வருட அரசாட்சிக்குப்பின் பூமியில் மனுஷ அரசாட்சி இருக்காது. இயேசு ஒருவரே ராஜாதிராஜாவாக இருந்து ஆட்சி செய்வார். அதைத்தான் அன்பின் குமாரனுடைய ஆட்சியென்று கூறப்படுகிறது. இந்த பூமி சுருட்டப்பட்டு அழிந்து போகும்.
ராஜா சந்தோஷத்தினால் செய்த செயலும், தானியேலின் உயர்வும்:
ராஜாவின் சொப்பனத்தையும், அதன் அர்த்தத்தையும் தானியேல் கூறியபோது, ராஜா தானியேல் முன் விழுந்து வணங்கி, அவனுக்குத் தூபங்காட்டவும், காணிக்கை செலுத்தவும் கட்டளையிட்டான். அவனுடைய அறிவு அவ்வளவு தான். விக்கிரகங்களை வணங்கிக் கொண்டு, ஜீவனுள்ள தேவனை வணங்கிக் கொண்டிருப்பதாக எண்ணிக் கொண்டிருந்தான். இப்பொழுது மனிதனை வணங்கி பரலோக தேவனை வணங்குவதாக எண்ணுகிறான். இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் பரலோகத்தின் தேவன் அவனுக்கு அறிமுகப்படுத்தப்படுகிறார். ராஜாவின் மனதிலே தேவனைக் குறித்த விசுவாசம் வளருவதைக் காணமுடிகிறது. தேவனைக் குறித்த சிறந்த அறிவுக்குள் வருகிறான்.
தானியேல் இஸ்ரவேலல்லாத, தேவனை மதியாத நாடான பாபிலோனிலிருந்தாலும் தேவனால் மறைபொருளை வெளிப்படுத்திக் காட்டியதால், நேபுகாத்நேச்சாரால் உயர்த்தப்பட்டு வெகுமதிகளைப் பெற்று பொறுப்பில் அமருகிறான். அந்த வேளையிலும் அவன் தன் நண்பர்களை மறந்து போகவில்லை. அவர்களுக்கும் பாபிலோன் சாம்ராஜ்யத்தின் பொறுப்புகள் கொடுக்கப்படுகின்றன. இளைஞனான தானியேல் ஒரு பொறுப்பான பதவியில் அமர்த்தப் படுகிறான். பாபிலோன் சாம்ராஜ்ஜியத்தின் நீதிபதியாகவும், அமைச்சராகவும் விளங்குகிறான்.
சொப்பனத்தின் மூலம் நாம் உணர்ந்து கொண்டது::
நேபுகாத்நேச்சாரின் மனதில் உலகத்தின் வருங்காலத்தைக் குறித்தும், முடிவைக் குறித்தும் அறியும் ஆவல் எழும்பியதால், புறஜாதியான அந்த ராஜாவுக்குத் தேவன் நடக்கப்போவதைச் சொப்பனத்தில் தெரிவித்தார். நாமும் தேவனுடைய பாதத்தில் அமர்ந்து விசுவாசத்தோடும், ஆவியோடும் கேட்கும்போது நமக்கும் சொப்பனங்களையும், தரிசனங்களையும் காட்டுவார். தானியேலுக்குத் தேவன் கொடுத்த ஞானமானது, ராஜா கண்ட சொப்பனத்தைக் கூறவும், அதன் அர்த்தத்தை தெரிவிக்கவும் முடிந்ததைப் போல நாமும் நம்முடைய வருங்காலங்களைப் பற்றி தேவன் நமக்கு வெளிப்படுத்த வேண்டுமென்றும், தேவனுடைய ஞானத்தினால் நம்மை நிரப்ப வேண்டுமென்றும் தேவனிடம் மன்றாட வேண்டும். தன்னோடு கூட சேர்ந்து ஜெபித்த தன்னுடைய தோழர்களையும் மறக்காமல், தானியேல் அவர்களுக்கும் பதவி உயர்வு வாங்கித்தந்த பண்பு நம்மிடமும் காணப்பட வேண்டும்.
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…