குருடர்கள் இயேசுவை அழைத்தது:
மத்தேயு 9 : 27 “இயேசு அவ்விடம் விட்டுப் போகையில், இரண்டு குருடர் அவர் பின்னே சென்று; தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும் என்று கூப்பிட்டார்கள்.”
இந்த சம்பவம் கப்பர்நகூமில் நடந்தது. மத்தேயு மட்டுமே இந்த சம்பவத்தைக் குறிப்பிட்டுள்ளார். இயேசு ஜெபஆலயத்தலைவனான யவீருவின் மரித்துப் போன மகளை இயேசு உயிரோடு எழுப்பினதினாலும்,. பெரும்பாடுள்ள ஸ்தீரியின் 12 வருட வியாதி குணமடைந்ததாலும், அவருடைய கீர்த்தி அத்தேசமெங்கும் பிரசித்தமாயிற்று. (மத்தேயு 9 : 18 – 26) இயேசு அந்த இடத்தை விட்டுப் போகும்போது, இயேசுவைப் பற்றி அறிந்த இரண்டு குருடர்கள் இயேசுவின் பின்னால் வந்து “தாவீதின் குமாரனே எங்களுக்கு இரங்கும்” என்று கூப்பிட்டார்கள். மேசியா வரும்போது குருடர்கள் பார்வையடைகிறார்கள் என்று ஏசாயா போன்ற தீர்க்கதரிசிகள் கூறியிருப்பதால் அந்தக் குருடர்கள் இயேசுவுக்குப் பின் போயிருக்க வேண்டும். தாவீதின் குமாரனே என்று அழைத்தது மிகவும் முக்கியமானது. இது இயேசுவை ராஜாவாக, மேசியாவாகக் குறிப்பதாகும். மத்தேயு 21 : 9, 15 ல் திரளான ஜனங்கள் தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா என்று சொல்லி ஆர்ப்பரித்ததைப் பார்க்கிறோம். மத்தேயு 20 : 30 ல் குருடர்கள் தாவீதின் குமாரனே எங்களுக்கு இரங்கும் என்று கூப்பிட்டதையும், மாற்கு 10 : 47 ல் பர்திமேயு குருடன் அதேபோல் கூப்பிட்டதையும் பார்க்கிறோம். குருடர்களுக்கு மாம்சக்கண்கள்தான் மூடியிருக்கும். அகக்கண்கள் திறந்தேயிருக்கும். காதுகள் நன்றாகக் கேட்டதால் வருகிறவர் இயேசு என்று அறிந்து கூப்பிட்டனர்.
இயேசு கூறிய வார்த்தை:
மத்தேயு 9 : 28,29 “அவர் வீட்டிற்கு வந்த பின்பு, அந்தக் குருடர் அவரிடத்தில் வந்தார்கள். இயேசு அவர்களை நோக்கி: இதைச் செய்ய எனக்கு வல்லமை உண்டென்று விசுவாசிக்கிறீர்களா என்று கேட்டார். அதற்கு அவர்கள்: ஆம் விசுவாசிக்கிறோம், ஆண்டவரே என்றார்கள். அப்பொழுது, அவர்களுடைய கண்களை அவர் தொட்டு: உங்கள் விசுவாசத்தின் படி உங்களுக்கு ஆகக்கடவது என்றார்.”
அந்தக் குருடர்கள் இயேசு வீட்டிற்கு வந்த பின்னும், அங்கும் அவரைத் தேடி வந்தனர். ஏனெனில் அவர்கள் கூப்பிட்டதை கவனியாதவர் போல் வீட்டுக்குள் இயேசு நுழைந்தார். இயேசு ஏன் அவ்வாறு மௌனமாக இருந்தாரென்றால் அவர்கள் எதைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்று விரும்பினார்களோ அதில் உறுதியாயிருக்கிறார்களா என்று அறிய விரும்பினார். இயேசு குருடர்களிடம் “அவர்களுடைய குருட்டுக் கண்களை என்னால் மாற்றி ஒளிபெறச் செய்ய முடியுமென்றும் அந்த வல்லமை எனக்கு உண்டென்றும் விசுவாசிக்கிறீர்களா” என்று கேட்டார். அதற்கு அவர்கள் ஆம் விசுவாசிக்கிறேன் ஆண்டவரே என்றார்கள். அவர்களின் விசுவாசத்தின் உறுதியை இயேசு அறிந்தார். இதேபோல் பவுல் அப்போஸ்தலர் 14 : 9 ல் சப்பாணியிடம் இரட்சிப்புக்கேற்ற விசுவாசம் இருப்பதைக் கண்டான். தேவன் அவர்களுக்கு வீதியில் சுகம் கொடுக்க விரும்பவில்லை.
அவர்களை வீட்டுக்கு அழைத்துத் தனித்திருந்து சுகம் கொடுக்க விரும்பினார். அவர்கள் இயேசுவை முழுமையாகச் சார்ந்துகொள்ள வேண்டுமென்று விரும்பினார். மேலும் இயேசு அவர்களுடைய விசுவாசம் பலப்பட வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் வெறும் பார்வை மட்டும் பெற்றால் போதாது. அவர்களுடைய ஆத்துமக் கண்களும் திறக்கப்பட வேண்டும் என்பதற்காகவும் காலதாமதம் செய்தார். நாம் விரும்புவதைக் காட்டிலும் சிறப்பானதைத் தரத்தான் இயேசு தாமதிப்பார். இயேசுவின் வல்லமையுள்ள கரம், அற்புதங்களைச் செய்யும் கரம் அவர்களுடைய கண்களைத் தொட்டது. உங்கள் விசுவாசத்தின்படி ஆகக்கடவது என்றார். இயேசு இதேபோல் பெரும்பாடுள்ள ஸ்திரீயியிடமும் “மகளே திடன்கொள் உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது” என்றார்.
சங்கீதம் 72 : 12 “கூப்பிடுகிற எளியவனையும், உதவியற்ற சிறுமையானவனையும் அவர் விடுவிப்பார்.”
ஏசாயா 29 : 18 “அக்காலத்திலே செவிடர் புஸ்தகத்தின் வசனங்களைக் கேட்பார்கள்; குருடரின் கண்கள் இருளுக்கும் அந்தகாரத்துக்கும் நீங்கலாகிப் பார்வையடையும்.”
குருடர்கள் சாட்சி:
மத்தேயு 9 :30, 31 “உடனே அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டது. இதை ஒருவரும் அறியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள் என்று இயேசு அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார். அவர்களோ புறப்பட்டு, அத்தேசமெங்கும் அவருடைய கீர்த்தியைப் பிரசித்தம் பண்ணினார்கள்.’
அந்த இரண்டு குருடர்களின் விசுவாசத்தின்படியே உங்களுக்கு ஆகட்டும் என்று சொல்லி அவர்களுடைய கண்களை இயேசு தொட்டவுடன் அவர்கள் இருவரின் கண்களும் திறக்கப்பட்டது. இதுவரை இருளையே பார்த்துக் கொண்டிருந்தவர்கள், ஜீவ ஒளியான இயேசுவினால் வெளிச்சத்தைப் பெற்றனர். அவர்கள் இருவரின் விசுவாசமும், இயேசு நம்மைத் தொட்டால் கண்டிப்பாக நமக்குக் கண்பார்வை கிடைக்கும் என்பதுதான். அவர்களின் நம்பிக்கையின்படி இருளாய் இருந்த அவர்களுடைய வாழ்க்கை ஒளிமயமானது. இதை ஒருவருக்கும் அறிவிக்க வேண்டாம் என்று கண்டிப்பாக இயேசு கட்டளையிட்டார். இவ்வாறு இயேசு கூறியதற்குப் பல காரணங்கள் உண்டு. அதில் ஒரு காரணம் இயேசு செய்த அற்புதங்களைப் பார்த்தும், கேள்விப்பட்டும், கூட்டம் கூட்டமாக அவரைத் தேடி ஜனங்கள் வந்தனர். அவ்வாறு வரும்போது அவருடைய ஊழியம் தடைபடும். எனவே அவ்வாறு கூறினார்.
அவர்களிருவரும் இயேசுவின் சொல்லைக் கேளாமல், அத்தேசமெங்கும் போய் இயேசுவின் வல்லமையையும் அவர் தனக்குக் கொடுத்த கண் பார்வையையும், அதனால் தங்கள் இருவரின் வாழ்க்கை ஒளிமயமானதையும் அனைவருக்கும் அறிவித்தனர்.அதேபோல் கொன்னைவாய் செவிடனின் நாவின் கட்டுகளை அவிழ்த்து அவனை செவ்வையாய்ப் பேசச் செய்த போது, இயேசு அதை யாருக்கும் சொல்ல வேண்டாமென்றார். ஆனால் எவ்வளவு அதிகமாய் அவர்களுக்கு இயேசு கட்டளையிட்டாரோ அவ்வளவு அதிகமாய் அவர்கள் அதை பிரசித்தம் பண்ணினார்கள். மாற்கு 7 : 36 லும், மத்தேயு 4 : 24 லும், 9 : 26 லும் இயேசு செய்த அற்புதத்தை அத்தேசமெங்கும் பிரசித்தம் பண்ணினார்கள் என்று பார்க்கிறோம். நாமும் நும்முடைய சில ஜெபங்களுக்கும் உடனே பதில் கிடைக்க வில்லையென்று வருந்துகிறோம். இயேசுவின் பதில் சிலசமயங்களில் ஆம் என்றும், பலசமயங்களில் இல்லையென்றும், அடிக்கடி காத்திரு என்றும், பெரும்பாலும் அமைதியாகவும் இருக்கலாம்.
நாம் அவருடைய எந்தப் பதிலையும் ஏற்றுக்கொள்ள ஆயத்தமாயிருக்க வேண்டும். நாம் கேட்பதைவிட மகிமையான ஒன்றைத் தருவதற்காகத் தாமதிக்கிறார். பரம தகப்பனாக அவருக்கு எப்பொழுது, எதை, எவ்வாறு கொடுக்க வேண்டுமென்று தெரியும். இயேசுவை நோக்கி விசுவாசத்துடன் வந்த குருடர்கள் பார்வை பெற்று தன்னுடைய வாழ்க்கையின் இருளைப் போக்கியதைப் போல நாமும் நம்முடைய வாழ்க்கையின் இருளைப் போக்குவதற்கு இயேசுவண்டை சென்று ஒளியைப் பெறுவோம். அவர்கள் இயேசுவைப் பற்றி தேசமெங்கும் போய் சாட்சியாகக் கூறியதைப் போல நாமும் நமக்குத் தேவன் கொடுத்த அற்புதத்தை மற்றவர்களுக்குச் சாட்சியாகத் தயங்காமல் அறிவிப்போம். ஆமென்.
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…