இயேசு செய்த அற்புதங்கள்

ஐந்து அப்பம் இரண்டு மீனைப் பெருகச் செய்தல்

மத்தேயு 14 : 14 – 21; மாற்கு 6 : 34 – 44; லூக்கா 9 : 11 – 17; யோவான் 6 : 5 – 14 

இயேசுவின் மனதுருக்கம்:

மாற்கு 6 : 34 – 36 ‘இயேசு  கரையில்  வந்து, அனேக, ஜனங்களைக்  கண்டு, அவர்கள்  மேய்ப்பனில்லாத  ஆடுகளைப் போலிருந்தபடியால், அவர்கள்மேல்  மனதுருகி, அநேக காரியங்களை அவர்களுக்கு உபதேசிக்கத்  தொடங்கினார். வெகுநேரம்  சென்றபின்பு,  அவருடைய சீஷர்கள் அவரிடத்தில்  வந்து: இது வனாந்தரமான  இடம், வெகுநேரமுமாயிற்று; புசிக்கிறதற்கும்  இவர்களிடத்தில் ஒன்றும்  இல்லை; ஆகையால்  இவர்கள்  சுற்றியிருக்கிற  கிராமங்களுக்கும் ஊர்களுக்கும்  போய்,  தங்களுக்காக  அப்பங்களை  வாங்கிக்  கொள்ளும்படி இவர்களை  அனுப்பிவிட வேண்டும் என்றார்கள்.’

இயேசு  கலிலேயாகடலின்  அக்கரையில் (யோவான் 6 :1) பெத்சாயிதா பட்டணத்தைச்  சேர்ந்த  வனாந்தரமான  ஒரு  இடத்திற்குத்  தனித்திருக்கும்படி சென்றார் (லூக்கா 9 : 10).  அந்த நாட்கள்  யூதருடைய  பஸ்கா  பண்டிகையின் வேளையாயிருந்தது (யோவான் 6 :4).  அந்த  இடத்தில்  சீஷர்களுடன் மலையின்  மேலேறி  உட்கார்ந்தார் (யோவான் 6 : 3).  சகல  பட்டணங்களிலுமிருந்து  அநேக  ஜனங்கள்  கால்நடையாய்  அவ்விடத்திற்குக்  கூடி  வந்தனர். தனிமையான  இடத்தை  இயேசு  தேடியதிலிருந்து  ஓய்வில்லாமல்  ஊழியம் செய்தாரென்று  அறிகிறோம். இந்த  அற்புதம் மிகவும் முக்கியமானதால் நான்கு  சுவிசேஷங்க ளிலும்  கூறப்பட்டுள்ளது  (மத்தேயு 14 :  13  –  21,  மாற்கு  6 :  35  –  43,  லூக்கா  9  :  10  –  17,  யோவான்  6  :  5  –14).  ஓய்வெடுக்க  வந்தவர் ஜனக்கூட்டத்தைப்  பார்த்து  மனதுருகினார். இதேபோல்  மத்தேயு  9 : 36 லும் திரளான  ஜனங்கள்  மேல்  மனதுருகினதைப்  பார்க்கிறோம். முதன் முதல் ஆவிக்குரிய பசியைப்  போக்க  அவர்களுக்குப்  போதித்தார். வெகுநேரம்  ஆகிவிட்டதாலும்  வனாந்தரமாக இருந்ததாலும்  சீஷர்கள்  ஒரு  குழுவாக  இயேசுவிடம்  வந்து  அவர்களை  அனுப்பி  விட  ஆலோசனை  கூறினர்.

Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates

தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்

இயேசுவின் கேள்வி, பிலிப்பு, அந்திரேயாவின் பதில் 

யோவான் 6 : 5 – 9 ‘ ‘இயேசு  தம்முடைய  கண்களை  ஏறெடுத்து,  திரளான ஜனங்கள் தம்மிடத்தில்  வருகிறதைக்  கண்டு,  பிலிப்புவை  நோக்கி;  இவர்கள் சாப்பிடத்தக்கதாக  அப்பங்களை  எங்கே  கொள்ளலாம் என்று  கேட்டார். தாம் செய்யப்போகிறதை அறிந்திருந்தும், அவனைச்  சோதிக்கும்படி  இப்படிக் கேட்டார். பிலிப்பு  அவருக்குப் பிரதியுத்தரமாக: இவர்களில் ஒவ்வொருவன்  கொஞ்சங்  கொஞ்சம்  எடுத்துக்கொண்டாலும், 200 பணத்து அப்பங்களும் இவர்களுக்குப் போதாதே  என்றான். அப்பொழுது  அவருடைய  சீஷர்களிலொருவனும், சீமோன்பேதுருவின் சகோதரனாகிய  அந்திரேயா அவரை நோக்கி,  “இங்கே  ஒரு பையன்  இருக்கிறான், அவன்  கையில் ஐந்து  வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு  மீன்களும்  உண்டு,  ஆனாலும்  அவைகள்  இத்தனை ஜனங்களுக்கு  எம்மாத்திரம்  என்றான்.” 

வெளியூரிலிருந்து  வந்த  ஜனங்களை  வெறுமையாக  அனுப்பிவிட  மனதில்லாமல், இயேசு  பிலிப்புவிடம்  இத்தனை  ஜனங்களும்  சாப்பிடுவதற்கு  அப்பங்களை எங்கே  கொள்ளலாம்  என்று  கேட்டார்.  அவர்களைப் பார்த்து  இயேசு  மனதுருகினார்.  சுவிசேஷங்களில்  12  முறை மனதுருகினார்  என்று  உள்ளது.  அதிலும்  8முறை  இயேசு மனதுருகினார்  என்று  உள்ளது.  ஏன்  பிலிப்புவைப்  பார்த்து  இயேசு இவ்வாறு  கேட்டாரென்றால்  அவன் பெத்சாயிதா  பட்டணத்தைச்  சேர்ந்தவன்.  பிலிப்பு  அமைதியான  சுபாவம் உடையவன். யோவான் 1 : 43 ல்  இயேசு  பிலிப்புவை  தனக்குப்  பின்  வரச் சொல்லி  அழைத்தார். அதேபோல் யோவான்ஸ்நானகன்  சொன்னதைக்  கேட்டு  இயேசுவுக்குப்  பின்  சென்றவர்கள்  அந்திரேயாவும்,  பேதுருவும். பிலிப்புவும்,  அந்திரேயாவும்  மிகவும்  சுறுசுறுப்புடையவர்கள். அந்திரேயா  தான் பேதுருவை  இயேசுவிடம்  அழைத்து  வந்தான். அதேபோல் பிலிப்பு  தான்  நாத்தான்வேலை  இயேசுவிடம்  அழைத்து  வந்தான். கிரேக்கர்கள் இயேசுவைக் காண விருப்பப்  பட்டவுடன் ,  அவர்களை  இயேசுவண்டை  கூட்டி வந்ததும்,  இந்த பிலிப்புவும், அந்திரேயாவும்  தான். இருவரும்  உடனே  செயலில் இறங்கினார்கள். இயேசு  பிலிப்பிடம்  ஆலோசனைக்காக  இந்தக்  கேள்வியைக்  கேட்கவில்லை. எந்த  இடத்திலும்  இயேசு  யாரிடமும்  ஆலோசனை கேட்டதில்லை. பிலிப்புவை சோதிப்பதற்காக  இந்தக்  கேள்வியைக்  கேட்டார். 

அவர்களைப் போஷிக்கும்படியாக  அவர்  ஒரு  திட்டத்தை  ஏற்கெனவே  தெரிந்து  வைத்திருந்தார்.  யாக்கோபு  அதைத்தான்  “உலகத்தோற்றமுதல்  தேவனுக்குத்  தம்முடைய  கிரியைகளையெல்லாம்  தெரிந்திருக்கிறது”  என்று  அப்போஸ்தலர்  15  :  18  ல்  கூறினான். தேவனால்  எதையும்  செய்யமுடியும்  என்ற  எதிர்பார்ப்பு  பிலிப்புவிடம்  இல்லை. சமீபத்தில்  கானாவூர்  கல்யாண  வீட்டில்  திராட்சைரசம்  குறைப்பட்டபோது  கிறிஸ்து  நடப்பித்த  அற்புதத்தை  மறந்து  விட்டான்.  தீர்க்கதரியான  மோசே  வனாந்தரத்தில்  ஜனங்கள்  சாப்பிட  இறைச்சி  வேண்டுமென்று  கேட்டபோது  கர்த்தர்  உங்களுக்கு  கொடுப்பார்  என்று  எண்ணாகமம்  11 :  18  ல்  கூறினாலும்,  அவனுடைய  விசுவாசம்  குறைவுபட்டதாயிருந்தபடியால்  கர்த்தரிடம்  ஆறுலட்சம்  ஜனங்களுக்கு  அது  ஆகுமா  என்று  கேட்டான்,  அதற்குக் கர்த்தர்  “கர்த்தருடைய  கை குறுகியிருக்கிறதோ?  என்  வார்த்தையின்படி  நடக்குமோ  நடவாதோ  என்று,  நீ  இப்பொழுது  காண்பாய்”  என்று  கூறியதை  எண்ணாகமம்  11 :  21  –  23  ல்  பார்க்கிறோம்.  

அதற்கு  பிலிப்பு  200  பணத்துக்கு  அப்பம்  வாங்கினாலும்  அங்கு  வந்திருக்கும்  திரளான  ஜனங்களை  போஷிக்க  முடியாதே  என்றான்.  இயேசுவோடிருந்தும்,  அவர்  செய்த அத்தனை  அற்புதங்களையும்  நேரில் கண்டும்,  இயேசுவை  விசுவாசியாமல்  அவர்கள் கணக்குப்  போட்டுப் பார்த்ததைப்  பார்க்கிறோம். இதேபோல்  எலிசாவுக்கு  பாகால்சலீஷா  இருபது  வாற்கோதுமை  அப்பங்களையும் தாள்  கதிர்களையும்  கொடுத்தான்.  எலிசா  அங்குள்ள  நுறு  பேருக்கு  கொடுக்கக்  கட்டளையிட்ட  போது  எலிசாவின்  பணிவிடைக்காரன்  இதை  நுறு  பேருக்கு  கொடுப்பது  எப்படி  என்றதை  2 இராஜாக்கள்  4 :  43  ல்  பார்க்கிறோம்.  அப்பொழுது  அந்திரேயா  ஒரு  சிறுவனிடம், அவனுடைய  தாயார் அவன்  சாப்பிடுவதற்காகக் கொடுத்த,  ஐந்து  வாற்கோதுமை  அப்பங்களும், இரண்டு  மீன்களும்  உண்டு  என்றான். அத்தனை  திரள்கூட்ட  ஜனங்களிடம் போய்க்  கண்டுபிடித்துக்  கூறியதைப்  பார்க்கிறோம்.  வாற்கோதுமை  என்பது கோதுமையினால்  செய்யப்பட்ட  அப்பமல்ல.  அந்த  நாட்களில்  ஏழை  எளியவர்கள்  பயன்படுத்தும்  பார்லியினால்  செய்யப்பட்ட  அப்பத்தை அது  குறிக்கிறது.  5  அப்பம்  2  மீன்களினால்  ஆயிரக்கணக்கான  ஜனங்களைப் போஷிக்க  இயலாது  என்பதை  அறிந்திருந்தும்  அந்தப்  பிரச்சனையை  தேவனுடைய  சமூகத்துக்கு  கொண்டு  வரும்  தைரியம்  அந்திரேயாவுக்கு  இருந்தது.  

இயேசு செய்த அற்புதம்:

மத்தேயு 14 ; 18 “அவைகளை இயேசு என்னிடத்தில்  கொண்டு  வாருங்கள் என்றார்.”

மாற்கு 6 ; 39 – 41 “அப்பொழுது  இயேசு  எல்லோரையும்  பசும்புல்லின்மேல் பந்திபந்தியாக  உட்காரவைக்கும்படி  அவர்களுக்குக்  கட்டளையிட்டார் அப்படியே  வரிசை  வரிசையாய்,  நூறுநூறுபேராகவும்  ஐம்பதைம்பது பேராகவும்,  உட்கார்ந்தார்கள். இயேசு  அந்த  ஐந்து அப்பங்களையும், அந்த  இரண்டு  மீன்களையும்  எடுத்து, வானத்தை  அண்ணாந்துபார்த்து, ஆசீர்வதித்து, அப்பங்களைப்பிட்டு, அவர்களுக்குப்  பரிமாறும்படி  தம்முடைய  சீஷர்களிடத்தில் கொடுத்தார். அப்படியே  இரண்டு  மீன்களையும் எல்லாருக்கும் பங்கிட்டார்.”

இயேசு  அவைகளை  என்னிடத்தில் கொண்டுவாருங்கள்  என்றார். அப்பமும் மீனும்  வைத்திருந்த  சிறுவன்  மனப்பூர்வமாகக் கர்த்தருக்கென்று கொடுத்தான். அவனுடைய  உள்ளத்தில்  கொடுக்கவேண்டும்  என்ற  எண்ணத்தைத்  தேவன் கொடுத்திருந்தார். கொடுத்த அந்த  சிறுவனின் செயலால்  அனேகர் பயனடைந்தனர். நம்மிடத்திலும்  இருக்கிற  தாலந்தைக்  கொண்டு  இயேசு  பெரிய  காரியங்களைச்  செய்வார்.  உண்மையுள்ளவர்களாக  அவருடைய சித்தத்தின்படி  செயல்பட  நம்மை  நாமே  விட்டுக்கொடுக்க  ஆயத்தமாயிருக்க வேண்டும். அப்பொழுது  தேவன்  நம்  மூலமாக  பெரிய  காரியங்களைச் செய்வார். இயேசு  சீடர்களிடம்  அவர்களைப் பசும்புல்லின் மேல் பந்திபந்தியாக உட்கார வைக்கக்  கட்டளையிட்டார். இயேசு  எந்த  ஒரு காரியத்தைச்  செய்தாலும்  ஒழுங்கோடும்,  கிரமத்தோடும்  செய்வார்.  

இதேபோல்  நாமும் எதைச்செய்தாலும்  ஒழுங்காகச்  செய்ய  வேண்டும். ஜனங்களை  அனுப்பிவிட வேண்டுமென்று  கூறினவர்கள்,  இப்பொழுது  பந்தி  பரிமாறுகிறவர்களாக மாறினார்கள். அவர்களால்  செய்ய  முடியாத  காரியத்தை இயேசு அவர்கள்  கைகளினால் செய்யும்படி கட்டளையிட்டார். இயேசு  ஐந்து  அப்பங்களையும் இரண்டு  மீன்களையும்  எடுத்து  வானத்தை  அண்ணாந்து  பார்த்து  அவைகளை ஆசீர்வதித்து ஜனங்களுக்குக் கொடுக்கும் படி  சீடர்களிடம்  கொடுத்தாரென மத்தேயு, மாற்கு, லூக்காவில்  உள்ளது. யோவான்  இயேசு  அந்த  அப்பங்களை எடுத்து  ஸ்தோத்திரம்  பண்ணி சீடர்களிடம் கொடுத்தாரென்றும், அப்படியே மீன்களையும்  எடுத்து  அவர்களுக்கு  வேண்டியமட்டும்  கொடுத்தாரென்றும் கூறப்பட்டுள்ளது.

Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates

தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்

சீஷர்களுக்குக்  கிடைத்தது:

 மாற்கு  6 : 42 ‘எல்லோரும் சாப்பிட்டுத்  திருப்தியடைந்தார்கள்.’

யோவான்  6  : 12 – 14 ‘அவர்கள்  திருப்தியடைந்த  பின்பு, அவர்  தம்முடைய சீஷர்களை  நோக்கி: ஒன்றும்  சேதமாய்  போகாதபடிக்கு மீதியான துணிக்கைகளைச்  சேர்த்து  வையுங்கள் என்றார். அந்தப்படியே அவர்கள்  சேர்த்து,  வாற்கோதுமை அப்பங்கள்  ஐந்தில்  அவர்கள் சாப்பிட்டு  மீதியான  துணிக்கைகளினாலே 12 கூடைகளை  நிரப்பினார்கள். இயேசு  செய்த  அற்புதத்தை  அந்த மனுஷர்  கண்டு: மெய்யாகவே  இவர்  உலகத்தில் வருகிறவரான  தீர்க்கதரிசி என்றார்கள்.”

எல்லோரும்  சாப்பிட்டு  திருப்தியடைந்தது  மட்டுமல்லாமல்  மீதியானதை பன்னிரண்டு கூடைகள் நிறைய  எடுத்தனர். ஒவ்வொரு  அப்போஸ்தலருக்கும் ஒவ்வொரு கூடை கிடைத்தது. இது  ஒரு  படைப்பின் அற்புதம். தமது வார்த்தையால்  உணவைப் பெருகச் செய்தார். ஆண்கள் மட்டும் 5 ஆயிரம்  பேர் இருந்தனர். பெண்களும், பிள்ளைகளுமாகக்  குறைந்தது  15000 பேர் இருக்கலாம். இயேசு  தன்  பிள்ளைகளின்  தேவைகளுக்காகப்  புதிய  படைப்புகளை  உருவாக்க வல்லவராகவும், ஆவலுள்ளவராகவும்  இருக்கிறார். இயேசு  இதில்  கண்களை மூடாமல்  வானத்தைப்  பார்த்து  ஆசீர்வதித்ததைப் பார்க்கிறோம்.  யாவற்றையும் வார்த்தையால்  படைத்த  ஆண்டவர்  சமைத்த  ஆகாரத்தையும்  படைக்கும் ஆற்றலுள்ளவர்  என்றறிகிறோம். இயேசு  5 அப்பம் 2 மீனைக்  கொண்டு  திரளான ஜனங்களுக்குப்  போஷித்ததைப்  பார்த்த  ஜனங்கள்  மெய்யாகவே  இவர்  உலகத்தில்  வருகிறவரான தீர்க்கதரிசி என்றனர்.  மத்தேயு  21  :  11  லும் ஜனங்கள்  கலிலேயாவிலுள்ள  நாசரேத்திலிருந்து  வந்த  தீர்க்கதரிசியாகிய  இயேசு  என்றார்கள். 

உபாகமம்  18 : 15, 18 ல்- “உன் தேவனாகிய கர்த்தர் என்னைப் போல ஒரு தீர்க்கதரிசியை உனக்காக உன் நடுவே உன் சகோதரரிலிருந்து எழும்பப் பண்ணுவார்; அவருக்குச் செவிகொடுப்பீர்களாக.”

என்று  கூறியிருப்பதையும்  அறிகிறோம்.  அவர்கள்  இயேசுவைத்  தேவனால்  அனுப்பப்பட்ட  தேவ  குமாரனாகவோ,  மேசியாகவோ  அவர்கள்  காணவில்லை.  இயேசு  திரித்துவத்தின்  இரண்டாவது  நபர்  என்பதையும்  முழுமையாக  அறிந்து  கொள்ளாமல்  இருந்தார்கள்.  தேவனுடைய  வல்லமையையும்  தேவன் மக்கள்  மீது  காட்டிய  இரக்கத்தையும்,  அனுதாபத்தையும்  பார்க்கிறோம். நம்முடைய  கையிலிலுள்ள  கொஞ்சப்  பொருள்  ஆண்டவரின்  கையில் கொடுக்கப்படும்  போது, அந்தப்  பொருள்  கர்த்தரால்  ஆசீர்வதிக்கப்படும்  போது, பன்மடங்காக  அது  பெருகும்  என்பதை  இந்த  அற்புதம்  நமக்குக்  காட்டுகிறது.  மூன்று  நாட்கள்  இரவும்  பகலும்  வசனத்தைக் கேட்ட  ஜனங்களுக்குக்  கர்த்தர்  உலகப்பிரகாரமாகப்  பசியாற்றும்படி  இவ்வுலகத்தில்  ஆசீர்வாதங்களைக்  கொடுத்தார். இயேசுவே  ஆத்மாவுக்கும்,  சரீரத்திற்கும்  தேவையானதைத்  தந்து  போஷிக்கிறவர்  என்று  அறிகிறோம்.  ஆன்மீக  அற்புதங்களையும்  காட்டுவார். யோவான் 6 : 27 ல் கூறியதைப்  போல  நாமும்  நித்தியஜீவன்  வரை  நிலைத்திருக்கும்  போஜனத்திற்காகக்  கிரியை  நடப்பிப்போம்.  இதிலிருந்து நாம்  கற்றுக்கொண்ட  பாடம்,  நாம்  முதலாவது  நம்மிடமுள்ள  அனைத்தையும்  ஆண்டவருடைய  கரத்தில்  கொடுக்க  வேண்டும்.  இரண்டாவதாக  நாம்  அவரிடத்தில்  கொடுப்பதை  அவருடைய  கரம்  ஆசீர்வதிக்க  வேண்டும் என்று  விண்ணப்பிக்க  வேண்டும்.  மூன்றாவதாக  இயேசு  அப்பத்தைப்  பிட்டதுபோல  ஆண்டவர்  நம்மை  உடைப்பதற்கு  அனுமதிக்க  வேண்டும்.  ஆமென்.

Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates

தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்

Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago