பெதஸ்தா குளம்:
யோவான் 5 :1,2 “இவைகளுக்குப் பின்பு யூதருடைய பண்டிகை ஒன்று வந்தது; அப்பொழுது இயேசு எருசலேமுக்குப் போனார். எபிரேய பாஷையிலே பெதஸ்தா என்னப்பட்ட ஒரு குளம் எருசலேமில் ஆட்டு வாசலினருகே இருக்கிறது, அதற்கு ஐந்து மண்டபங்களுண்டு”.
இயேசு யூதருடைய பண்டிகையை அனுசரிக்கும்படியாக எருசலேமுக்குப் போகிறார். மற்ற சுவிசேஷங்களில் இந்த சம்பவம் சொல்லப்படவில்லை. இயேசு ராஜாவின் மனுஷனின் மகன் சாகக்கிடந்தவனை அந்த இடத்துக்குப் போகாமலேயே பிழைக்க வைத்தார். அதன்பின் எருசலேமில் நடக்கும் பஸ்கா பண்டிகைக்கு எருசலேமுக்குப் போனார். எருசலேம் தேவாலயத்தைச் சுற்றியுள்ள மதில் சுவருக்கு பன்னிரண்டு வாசல்கள் இருந்தன. அதில் ஒரு வாசல்தான் ஆட்டுவாசல். இந்த ஆட்டுவாசலின் அருகே தான் பெதஸ்தா குளம் இருக்கிறது. இஸ்ரவேல் ஜனங்கள் எருசலேமுக்குப் பண்டிகைக்கு வரும்போது பாவநிவாரணபலி செலுத்த ஆடுகளை அழைத்துக் கொண்டு, இந்த ஆட்டுவாசல் வழியாகத்தான் வருவார்கள். நெகேமியா 3 : 1 ல் பிரதான ஆசாரியரும், அவனுடைய சகோதரராகிய ஆசாரியர்களும் எழுந்து இந்த ஆட்டுவாசலைக் கட்டினார்கள். பெதஸ்தா என்ற வார்த்தைக்கு இரக்கத்தின் வீடு என்று பொருள். வேதத்தில் பல வகையான குளங்கள் இருக்கிறது.
ஆனால் பெதஸ்தாகுளம் முற்றிலும் வித்தியாசமானது. அதில் தெய்வீக வல்லமை வெளிப்படும். அற்புதங்கள் நடந்துகொண்டிருக்கும். சுகம் பெற வேண்டும் என்பதற்காக வெளி ஊர்களிலிருந்து வரும் வியாதிக்காரர்கள் எருசலேமில் தங்க வேறு இடம் கிடைக்காதபடியால் இந்த மண்டபங்களில் படுத்து ஓய்வெடுத்துக் கொண்டிருப்பார்கள். இந்தக் குளம் பழைய ஏற்பாட்டிலுள்ள நியாயப்பிரமாணத்தின் நிழலாட்டமாய் இருக்கிறது. ஆனால் இயேசு புதியஏற்பாட்டின் அன்பின் பிரமாணத்திற்கு அடையாளமாயிருக்கிறார். இந்தக் குளத்தில் 5 மண்டபங்கள் உண்டு. இந்த 5 மண்டபங்களும் நியாயப்பிர மாணத்திலுள்ள ஆதியாகமம், யாத்திராகமம், லேவியராகமம், எண்ணாகமம், உபாகமம் என்ற ,ஐந்து ஆகமங்களைக் குறிக்கிறது. அந்த நியாயப்பிரமாணங்கள் இஸ்ரவேல் ஜனங்களுக்கு உதவவில்லை. அவர்கள் வாழ்க்கையை மாற்றவோ இரட்சிக்கவோ இல்லை. அவர்களை மாற்றுவதற்கும், இரட்சிப்பதற்கும் ஒரே வழி இயேசுவே என்று கூறுவது தான் இந்த 5 மண்டபங்களும், 38 வருட வியாதியஸ்தனும்.
தேவதூதனின் செயல்:
யோவான் 5 :3, 4 “அவைகளிலே குருடர், சப்பாணிகள், சூம்பின உறுப்புடையவர்கள் முதலான வியாதிக்காரர் அனேகர் படுத்திருந்து, தண்ணீர் எப்பொழுது கலங்கும் என்று காத்துக் கொண்டிருப்பார்கள். ஏனெனில் சில சமயங்களிலே தேவதூதன் ஒருவன் அந்தக் குளத்தில் இறங்கி, தண்ணீரைக் கலக்குவான்; தண்ணீர் கலங்கினபின்பு யார் முந்தி அதில் இறங்குவானோ அவன் எப்பேர்ப்பட்ட வியாதியஸ்தனாயிருந்தாலும் சொஸ்தமாவான்.”
இரக்கத்தின் வீடு என்ற பொருள் கொண்ட அந்தக் குளத்தின் இரக்கம் என்னவென்றால், ஒரு தேவதூதன் எப்பொழுதாவது அந்தக் குளத்திலிறங்கி தண்ணீரைக் கலக்குவான். அவ்வாறு அவன் கலக்கப்படும் போது எந்த வியாதியஸ்தர் முதலில் அந்தக் குளத்தில் இறங்குகிறானோ அவன் எத்தனை வருட வியாதியஸ்தனாக இருந்தாலும், எப்படிப்பட்ட வியாதி உடையவனாய் இருந்தாலும், அவன் சுகம் பெறுவான். அந்த சுகத்தையும் இரக்கத்தையும் பெற ஏராளமான குருடர்கள், சப்பாணிகள், சூம்பின உறுப்புடையவர்கள் எப்பொழுது தண்ணீர் கலங்குமென்று காத்திருப்பார்கள். இதில் முதலில் இறங்குகிற மனிதனுக்கு மட்டுமே சுகம் கிடைக்கும். அதன்பின் இறங்குகிறவர்களுக்குச் சுகம் கிடைப்பதில்லை. தேவதூதன் எப்பொழுதாவது ஒரு தடவை தான் வருவான். அடிக்கடி வருவதுமில்லை. கால்கள் நல்ல நிலைமையில் இருப்பவர்கள் தான் இந்த அற்புத சுகத்தைப் பெற முடியும். நீண்ட நாட்களாக நடக்கமுடியாமல் இருப்பவர்களுக்கு யாரும் உதவி செய்வதும் இல்லை. தேவதூதன் அப்படிப்பட்டவர்களைப் பார்த்துத் தானாகக் கரம்பிடித்து குளத்தினுள் அழைத்துச் செல்வதும் இல்லை.
Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates
தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்
வியாதியஸ்தனின் அங்கலாய்ப்பு:
யோவான் 5 ; 5 – 7 முப்பத்தெட்டு வருஷம் வியாதி கொண்டிருந்த ஒரு மனுஷன் அங்கே இருந்தான். படுத்திருந்த அவனை இயேசு கண்டு, அவன் வெகுகாலமாய் வியாதியஸ்தனென்று அறிந்து, அவனை நோக்கி: சொஸ்தமாக வேண்டுமென்று விரும்புகிறாயா என்று கேட்டார். அதற்கு வியாதியஸ்தன் ஆண்டவரே, தண்ணீர் கலக்கப்படும் போது என்னைக் குளத்தில் கொண்டுபோய் விடுகிறதற்கு ஒருவரும் இல்லை, நான் போகிறதற்குள்ளே வேறொருவன் எனக்கு முந்தி இறங்கி விடுகிறான் என்றான்.”
இந்தக் குளக்கரையில் 38 வருடமாக கை, கால்கள் இயங்காமலுள்ள பரிதாபமான நிலமையில் திமிர்வாதத்தினால் பாதிக்கப்பட்ட ஒரு மனிதனைப் பார்க்கிறோம். இஸ்ரவேலரை 38 ஆண்டுகள் கானானுக்குள் பிரவேசிக்க விடாமல் வனாந்தரத்தில் அலையும்படி தேவன் அளித்த தண்டனைக்கு இந்த மனிதனின் 38 ஆண்டுகள் ஒப்பாயிருக்கிறது (உபாகமம் 2 : 14). அந்த 38 ஆண்டுகளில் யுத்தமனிதர்கள் அனைவரும் மாண்டு போனார்கள் (உபாகமம் 2 : 14). பெதஸ்தாவில் படுத்திருந்த மனிதன் , பாவத்தில் தோற்கடிக்கப்பட்டு, பாவத்தின் மீது ஜெயித்து நடக்க முடியாத இன்றைய விசுவாசிகளைக் குறிக்கிறது. மனித முயற்சிகளும், அவனுடைய வல்லமைகளும் கர்த்தருக்கு முன் ஒன்றுமில்லை என்றெண்ணம் வேண்டும். நாம் பூஜ்ஜிய நிலைக்கு வரும் வரை கர்த்தர் காத்திருக்கிறார். இவன் தனது வாழ்க்கையின் பெரும் பகுதியை வியாதியில் தான் கழித்திருக்கிறான்.
இந்த மனிதன் தன்னுடைய வீட்டாரால், உறவினரால், நண்பர்களால் கைவிடப்பட்டவனாய், உதவியற்ற வனாய், நம்பிக்கை அற்றவனாயிருந்தான். அவனது ஒரே நம்பிக்கை இந்த குளம்தான். அதிலும் வேறொருவர் உதவி செய்யாததால் அந்த நம்பிக்கையையும் இழந்து விட்டான். இதுவே நியாயப்பிரமாணத்தின் கீழ் வாழும் மக்களின் நிலமையாயிருக்கிறது. இவன் இத்தனை கேடான நிலமைக்கு வந்ததற்குக் காரணம் அவனுடைய பாவமே. பாவமானது ஒரு மனிதனை 38 வருடங்கள் செயலற்றவனாக மாற்றியிருப்பதைப் பார்க்கிறோம். எனவே நம்பிக்கையில்லாத நிலமையில் இருந்த அவனைத் தேடி இயேசு வந்தார். இயேசுவின் ஒரு பக்கம் பெதஸ்தா குளம், மறுபக்கம் ஆட்டுவாசல். இரண்டுக்குமிடையே நின்று கொண்டிருந்தார். இயேசு ஒரு பக்கம் இரக்கம் நிறைந்தவராகவும், நோய்களைக் குணமாக்குகிறவராகவும், மறுபக்கம் இரத்தம் சிந்தி பாவமன்னிப்பை அருளுகிறவராகவும் நின்றார்.
இயேசு அந்த மனிதனின் நிர்பந்தமான நிலமையைக் கண்டார். வியாதியஸ்தன் இயேசுவைப் பார்த்ததாகச் சொல்லப்படவில்லை. அதனால் அந்த மனிதனிடம் இயேசு சொஸ்தமாக வேண்டுமென்று விரும்புகிறாயா என்று கேட்டார். அவன் சொஸ்தமடைய வேண்டுமென்ற வாஞ்சையை இயேசு அவனிடம் உருவாக்கினார். தன்னுடைய பலவீனத்தைக் குறித்து அவன் தன்னிடம் விண்ணப்பம் பண்ண வேண்டுமென்று எதிர்பார்க்கிறார் (எசேக்கியேல் 36 : 37). அதற்கு அவன் ஆம் என்றோ, இல்லை என்றோ பதில் சொல்லாமல், தன்னுடைய கடந்த காலத்தைச் சொல்லிப் புலம்புகிறான். எத்தனை முறையோ அந்தக் குளத்தில் தூதன் கலக்கியதையும், நோயாளிகள் சுகம் பெற்றதையும் தான் பார்த்திருப்பதாகவும், ஆனால் தன்னைத் தூக்கிக்கொண்டு போய்விட யாருமில்லை என்று உருக்கத்தோடு கூறுகிறான். அவனுக்கு இயேசு எப்படிப்பட்டவர் என்று தெரியவில்லை.
ஏசாயா 65 : 1ல் “என்னைக் குறித்து விசாரித்துக் கேளாதிருந்தவர்களாலே தேடப்பட்டேன்; என்னைத் தேடாதிருந்தவர்களாலே கண்டறியப்பட்டேன்.” என்று கூறியதைப் போல இயேசுவைத் தேடாத இந்த மனிதனைத் தேடி இயேசு சென்றார். அவனோ தன்னைத் தூக்கிச் செல்லும் மனிதர்களை எதிர்பார்க்கிறார், தூதனால்தான் தன்னை சுகமாக்க முடியும் என்று எண்ணுகிறான். முறுமுறுக்கிறவனாயும், மற்றவர்களைக் குறை சொல்லுகிறவனாயும் இருந்தான். இயேசு ஏன் இவ்வாறு கேட்டாரென்றால் அவனது சம்மதத்தை அறிந்து செயல்பட விரும்பினார். எசேக்கியேல் 36 : 37 ல் “… அவர்கள் என்னிடத்தில் விண்ணப்பம் பண்ண வேண்டும்” என்கிறார். இயேசு தன்னுடைய மலைப் பிரசங்கத்தில் “கேளுங்கள், அப்பொழுது உங்களுக்கு கொடுக்கப்படும் ….. கேட்கிறவன் எவனும் பெற்றுக் கொள்கிறான்” என்று மத்தேயு 7 : 7, 8 ல் கூறுகிறார்.
இயேசு செய்த அற்புதம்:
யோவான் 5 : 8 – 11 “ இயேசு அவனை நோக்கி: எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்றார். உடனே அந்த மனுஷன் சொஸ்தமாகி, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு, நடந்துபோனான். அந்த நாள் ஓய்வு நாளாயிருந்தது. ஆதலால் யூதர்கள் குணமாக்கப்பட்டவனை நோக்கி: இது ஓய்வுநாளாயிருக்கிறதே, படுக்கையை எடுத்துக்கொண்டு போகிறது உனக்கு நியாயமல்ல என்றார்கள். அவன் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: என்னை சொஸ்தமாக்கினவர், உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடவென்று எனக்குச் சொன்னார் என்றான்.”
அவன் மேல் மனதுருகுகிற கர்த்தர் அவனிடம் எழுந்திரு என்றும் படுக்கையை எடுத்துக் கொண்டு நட என்றும் கூறினார். அவனிடம் விசுவாசம் இருந்ததாகவும் சொல்லப்படவில்லை. தான் சுகமடைய வேண்டுமென்று இயேசுவிடம் அவன் விண்ணப்பிக்கவும் இல்லை. இதில் இயேசு அவனுக்கு மூன்று அற்புதங்களைச் செய்தார். 38 வருடமாக நடக்க முடியாமலிருந்தவனுக்கு, அந்த வியாதியிலிருந்து சுகம் கொடுத்தார். படுக்கையையும் எடுத்துக்கொண்டு நடக்கிற பலத்தைக் கொடுத்தார். அவனுடைய பாவங்களையும் மன்னித்தார். இயேசு அவனிடம் எழுந்து நட என்ற வார்த்தையைத்தான் கூறினார். பெதஸ்தா குளத்துக்குள் அவனை அழைத்துக் கொண்டு செல்லவில்லை. 38 வருடமாக அவனை முடக்கி வைத்த அவனுடைய நாடி நரம்புகள் உயிரடைந்தது. அந்த நிமிடமே அவன் குனிந்து தன் படுக்கையை எடுத்துக்கொண்டு போனான். ஏசாயா 55 :11ல் கூறியபடி கர்த்தரின் வாயிலிருந்து புறப்படும் வசனம் வெறுமையாகப் போகாது. அது தான் விரும்புகிறதைச் செய்யும். தேவன் அனுப்பின காரியத்தை வாய்க்கப்பண்ணும்.
Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates
தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்
நம்மையும் தேவன் நம்மால் செய்ய முடியாத காரியத்தைச் செய்யும்படியாக தேவன் கட்டளையிடக் கூடும். கட்டளையிட்ட தேவன் அதைச் செய்யக்கூடிய பெலனையும் தருவார். ஒருவேளை 38 வருடமாகப் படுக்கையில் கிடந்த மனிதன் எழும்பி நிற்கவும், படுக்கையை எடுத்துக் கொண்டு நடக்கவும் முயற்சி செய்யாமலிருந்தால் அவன் தேவனிடமிருந்து தெய்வீக சுகத்தைப் பெற்றிருக்க முடியாது. அவனைக் குணமாக்கின நாள் ஓய்வுநாளாக இருந்தபடியால், யூதர்கள் அந்த நாளில் அவனிடம் படுக்கையை எடுத்துக்கொண்டுப் போக விடாதபடித் தடுத்தனர். இயேசு கிறிஸ்துவோ ஓய்வுநாளில் நன்மைசெய்வது பாவமாகக் கருதப்படக் கூடாது என்று போதித்தார் (மாற்கு 2 : 23 – 28, 3 : 1 – 5, லூக்கா 13 : 10 – 17). “மனுஷன் ஓய்வுநாளுக்காக உண்டாக்கப் படவில்லை, ஓய்வுநாள் மனுஷனுக்காக உண்டாக்கப்பட்டது.” என்றும் இயேசு மாற்கு 3 : 4 ல் கூறினார். பிறவிக்குருடனுக்கு இயேசு பார்வை கொடுத்ததும் ஓய்வுநாளில்தான் என்று யோவான் 9 : 14 ல் பார்க்கிறோம். வியாதியஸ்தன் குணமானது அவர்களுக்குப் பெரிய காரியமாகத் தெரியவில்லை.
ஓய்வுநாளில் எந்த வேலைகளைச் செய்யலாம், எந்த வேலைகளைச் செய்யக் கூடாது என்று எண்ணற்ற சட்டதிட்டங்களை பரிசேயர்களும், வேதபாரகர்களும் யாத்திராகமம் 20 : 8, 34 : 21, 35 : 3 ஆகிய வசனங்களின் அடிப்படையில் வகுத்துக் கொண்டு அவற்றைக் கடைப் பிடிக்கும்படியாக வற்புறுத்தி வந்தார்கள். ஆனால் அவனோ என்னை சுகப்படுத்தினவர் என்னைப் படுக்கையை எடுத்துக்கொண்டு போகச் சொன்னார் என்று கூறினான். இதேபோல் லூக்கா 13 : 10 – 16 ல் ஒரு ஓய்வுநாளில் 18 வருடங்களாக நிமிரமுடியாமலிருந்த கூனியை இயேசு சுகமாக்கினபோது அந்த ஆலயத்திலிருந்து ஜெபஆலயத்தலைவன் முறுமுறுத்தான். அப்பொழுது இயேசு “சாத்தான் பதினெட்டு வருஷமாய்க் கட்டியிருந்த ஆபிரகாமின் குமாரத்தியாகிய இவளை ஓய்வுநாளில் இந்தக் கட்டிலிருந்து அவிழ்த்து விடவேண்டியதில்லையா” என்று கூறியதைப் பார்க்கிறோம்.
இயேசு தன்னைக் காட்டியது:
யோவான் 5: 12 – 17 “அதற்கு அவர்கள்: உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடவென்று உன்னுடனே சொன்ன மனுஷன் யார் என்று அவனிடத்தில் கேட்டார்கள். சொஸ்தமாக்கப்பட்டவன் அவர் இன்னாரென்று அறியவில்லை; அவ்விடத்தில் ஜனங்கள் கூட்டமாய் இருந்தபடியினால் இயேசு விலகியிருந்தார். அதற்குப் பின்பு இயேசு அவனை தேவாலயத்திலே கண்டு; இதோ, நீ, சொஸ்தமானாய் அதிக கேடானதொன்றும் உனக்கு வராதபடி இனிப் பாவஞ் செய்யாதே என்றார். அந்த மனுஷன், போய், தன்னைச் சொஸ்தமாக்கினவர் இயேசு என்று யூதர்களுக்கு அறிவித்தான். இயேசு இவைகளை ஓய்வுநாளில் செய்தபடியால், யூதர்கள் அவரைத் துன்பபடுத்தி, அவரைக் கொலை செய்ய வகை தேடினார்கள் இயேசு அவர்களை நோக்கி: என் பிதா இதுவரைக்கும் கிரியைசெய்துவருகிறார். நானும் கிரியை செய்து வருகிறேன் என்றார். ”
யூதர்கள் அவனிடம் உன்னிடம் படுக்கையை எடுத்துக்கொண்டு போகச் சொன்னவர் யாரென்று கேட்டார்கள். அவன் அதற்கு “அவர் யார் என்று எனக்குத் தெரியாது” என்றான். திரள்கூட்டமான ஜனங்கள் அங்கு கூடியிருந்தபடியால் இயேசு விலகியிருந்தார். 38 வருடங்களாகப் படுக்கையிலிருந்து ஒரு வினாடியில் பரிபூரண சுகத்தைக் பெற்ற இந்த மனிதனைக் குறித்த எந்தக் கரிசனையும் இந்தப் பரிசேயர்களுக்கு இருந்ததாகத் தெரியவில்லை. இந்த அற்புதத்தினிமித்தம் திரள் கூட்டமான ஜனங்கள் கூடி விட்டதால், இயேசுவை அவர்கள் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் அற்புதத்தை நடப்பித்த இயேசு தன்னை அந்த இடத்தில் வெளிப்படுத்த மனதில்லாமல் மறைத்துக் கொண்டார். சுகம் பெற்ற மனிதன் தேவனை மகிமைப்படுத்த உடனடியாக தேவாலயத்துக்குச் சென்றான்.
இயேசு அவனைத் தேவாலயத்தில் கண்டு நீ சுத்தமானாய் என்று கூறி, இனிமேலும் உனக்கு கேடுகள் வராதபடி பாவம் செய்யாதே என்றார். இயேசு கூறியபடி அந்த மனிதனின் நோயானது பாவத்தினால் விளைந்ததாகும். பாவத்தினால் உண்டான வியாதிகள், அந்தப் பாவம் அறிக்கை செய்யப்பட்டு ஒப்புரவாகி சுத்திகரிக்கப்படும் வரை அந்த வியாதி சுகமாகாது. நம்முடைய பாவங்களை மன்னிக்க இயேசுவுக்கு மட்டுமே முடியும் (மத்தேயு 9 : 6, மாற்கு 2 : 5). உடனே அந்த மனிதன் யூதர்களிடம் சென்று தன்னை குணமாக்கினார் இயேசு என்று அறிவித்தான். இயேசுவின் எதிரிகளிடம் இயேசுவைக் காட்டிக் கொடுத்ததைப் பார்க்கிறோம். அதனால் என்ன விளைவு என்பதை அவன் அறியாதவனாயிருந்தான். இயேசு ஓய்வுநாளில் இந்த அற்புதத்தைச் செய்ததால், அவர்கள் இயேசுவைக் கொலை செய்யத் தேடினார்கள்.
பிதாவாகிய தேவன் மனுஷன் பாவத்தில் விழுவதற்கு முன்பாக ஆதியாகமம் 2 : 2 ல் ஓய்ந்திருந்தார் என்று பார்க்கிறோம். அதன்பின்பு மனுஷன் வீழ்ச்சியடைந்ததின் நிமித்தம் தேவன் கிரியை செய்து கொண்டுதான் இருக்கிறார். இயேசுவோ வாரத்தின் 7 நாளும் 24 மணி நேரமும் கிரியை செய்து கொண்டிருந்தார். இந்த யூதர்கள்தான் பிலாத்துவினிடத்தில் கூக்குரலிட்டு இயேசுவைச் சிலுவையில் அறையச் சொன்னவர்கள். பிலாத்துவும் சட்டமேற்றி இயேசுவைச் சிலுவையில் அறைய ஒப்புக்கொடுத்தார். இயேசு பிதாவை என் பிதா என்று கூறி தன்னைத் தேவனுக்குச் சமமாகினபடியால் அவரைக் கொலை செய்ய முடிவு செய்தனர். அதற்குக் காரணம் என்னவென்று இயேசு,
யோவான் 8 : 37 ல் “நீங்கள் ஆபிரகாமின் சந்ததியாரென்று அறிவேன்; ஆனாலும் உங்களுக்குள்ளே என் உபதேசம் இடம்பெறாதபடியால், என்னைக் கொலைசெய்யத் தேடுகிறீர்கள்.” என்று கூறியதைப் பார்க்கிறோம்.
இந்த அற்புதத்தில் தனிப்பட்ட ஒரு மனிதனை இயேசு தேடிச்சென்று அற்புதத்தைக் கொடுத்ததைப் பார்க்கிறோம். இதேபோல் இயேசு ஒரு தனிப்பட்ட திருமண வீட்டிற்குச் சென்று அவர்களின் குறையை நிறைவாக்கியதையும், ஒரு தனிப்பட்ட நபரான நிக்கோதேமுவின் சந்தேகத்திற்குப் பதில் அளித்ததையும் பார்க்கிறோம். எனவே இயேசு தனிப்பட்ட முறையில் நம்முடைய ஜெபத்தைக் கேட்டு அற்புதத்தைச் செய்கிறவர் என்று அறிகிறோம். இயேசுவின் 5 காயங்களில் வழிந்த இரத்தமானது ஆறாய் ஓடுகிறது. கல்வாரி குளமானது கிறிஸ்துவின் இரத்தத்தால் நிரம்பி இருக்கிறது. அந்தக் குளத்தில் முழுகி நம்முடைய பாவங்களைக் கழுவ வேண்டும். அவருடைய இரத்தம் நம்முடைய சகல பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கும்.
இயேசுவின் இரத்தம் நிரம்பிய இந்தக் குளத்தில் யார் வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் இறங்கலாம். தேவதூதன் கலக்கும் வரைக் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. இயேசு தம்மண்டை வருகிற ஒருவரையும் புறம்பே தள்ளுவதில்லை. எப்படிப்பட்ட பாவங்களையும் மன்னிப்பதற்கு இயேசுவின் இரத்தமும், அவரது மனதுருக்கமும் காத்திருக்கிறது. பாவத்தில் விளைவாகத் தான் சாபங்கள் வருகிறது, அசுத்தஆவிகள் பிடிக்கிறது. எனவே அதிக கேடு நமக்கு வராதபடி நாம் பாவம் செய்யாதபடி நம்மைக் காத்துக்கொள்வோம்.
Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates
தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்
சமாரியஸ்திரீ வருகிறவரையிலும் கிணற்றண்டையில் இருந்து அவளோடு பேசி அவளை இரட்சித்தவர், நிம்மதியில்லாதவனாய், சமாதானமில்லாதவ னாயிருந்த ஐசுவரியவானான சகேயுவைத் தேடித் சென்று அவனுக்கும் அவனது குடும்பத்தாருக்கும் இரட்சிப்பைக் கொடுத்தவர், 38 வருடமாக படுக்கையிலிருந்த ஒரு மனிதனைத் தேடிச் சென்று சுகமளித்ததை இந்த அற்புதத்தின் மூலம் அறிகிறோம். மாற்கு 10 : 46 – 52 ல் பர்திமேயு குருடனைத் தன்னிடம் இயேசு அழைத்துவரச் சொல்லி சுகமளித்தார். வரமுடிந்தவர்களைத் தன்னிடம் அழைத்து வரச் சொல்கிறார். முடியாதவர்களைத் தானே தேடிப்போகிற தேவன் இயேசு. அதைத்தான் யோவான் 15 : 16 ல் “நீங்கள் என்னைத் தெரிந்து கொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்துகொண்டேன்;” என்று கூறியிருப்பதைப் பார்க்கிறோம்.
யோவான் 5 : 24 “என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்கு ட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.”
இந்த வசனத்தின் செய்தியைக் கொடுக்கத்தான் இயேசு பெதஸ்தா குளத்துக்குச் சென்றார். இயேசு ஜீவனைக் கொடுக்கிறவரென்றும், விசுவாசிக்கிறவனுக்கு அற்புதத்தைச் செய்கிறவரென்றும், நித்தியஜீவனைக் கொடுக்கிறவரென்ற செய்தியைச் சொல்லும்படி அங்கு சென்றது மட்டுமல்ல அவனுக்கு சுகத்தையும் கொடுத்து ஆசீர்வதித்தார். இயேசு ஏற்ற காலத்தில் மனிதனாக வந்தார். நம்முடைய பாவங்களை நீக்கும்படியாகவும், சுமக்கும்படியாகவும், நம்முடைய மரணத்தைத் தடுக்கும்படியாகவும் வந்தார். நம்முடைய சூழ்நிலைகளை மாற்றும்படி வந்தார். நம்முடைய இருப்பிடத்திற்கு வர, நம்முடைய பார்வைக்கு வர, நம்மை சுகமாக்க ஆவலாயிருக்கிறார். அவருடைய பிரசன்னத்தில் சென்று நாம் அனைவரும் சுகம் பெறுவோம். ஆமென்.
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…