இயேசு செய்த அற்புதங்கள்

பெத்சாயிதா குருடன் பார்வையடைந்தான்

இயேசுவிடம் குருடனை அழைத்து வந்தனர்:

மாற்கு 8 : 22 “ பின்பு  இயேசு பெத்சாயிதா  ஊருக்கு வந்தார்; அப்பொழுது  ஒரு குருடனை  அவரிடத்தில் கொண்டுவந்து,  அவனைத்  தொடும்படி  அவரை வேண்டிக்கொண்டார்கள்.”

இயேசு  ஏழு  அப்பம்  சில  மீன்களைக்  கொண்டு  நாலாயிரம்  பேரைப்  போஷித்த  பின்  நடந்த  அற்புதம்.  இயேசு  பெத்சாயிதா  ஊருக்குள் வந்தார்.  இதையறிந்த  ஜனங்கள்  அவர்  செய்த அற்புதங்களைக்  கேள்விப்பட்டு  ஒரு  குருடனை  இயேசுவிடம்  கூட்டி வந்தார்கள்.  அவர்களுடைய  விசுவாசமும், நம்பிக்கையும்  என்னவென்றால் இயேசு  தொட்டால்  பார்வையடைவான்  என்பது  தான். இவ்வாறு  பலவீனப்பட்டவர்களை  இயேசுவண்டை கொண்டு  வருவது  மேன்மையான  ஊழியம்.  எனவே  அவனைத்  தொடும்படி  இயேசுவிடம்  வேண்டினர்.  இதைத்தான்  பவுல்,

கலாத்தியர்  6 : 2, 10  “ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து, இப்படியே கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறைவேற்றுங்கள்.” என்றும் 

“ஆகையால் நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக, யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மைசெய்யக்கடவோம்.”

என்றும் கூறியிருப்பதைப் பார்க்கிறோம். கொண்டு  வந்தவர்கள்  தள்ளியிருந்து இயேசு  செய்வதைப் பார்த்துக்  கொண்டிருந்தனர்.  அந்தக்  குருடனின்  வாழ்க்கை  இருளாக இருந்தது. இன்றும்  அனேகர்  இருளில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். சாத்தான்  ஒழுங்கின்மையும்  இருளையும்  கொண்டு  வருகிறான். ஆனால் சிருஷ்டிப்பின்  முதல்  வார்த்தை  வெளிச்சம்  உண்டாகக்கடவது  என்பதுதான் (ஆதியாகமம் 1 : 3).  இந்த  பெத்சாயிதா  ஊராருக்கு  இயேசு  எத்தனையோ அற்புதங்களைச்  செய்தும்  அவர்கள் நாசரேத்  ஊராரைப் போலிருந்தனர். பெத்சாயிதாவின்  மேல்  இயேசு  ஏற்கனவே  லூக்கா 10 : 13 ல்  “பெத்சாயிதா  பட்டணமே உனக்கு  ஐயோ” என்று  நியாயத்தீர்ப்பு  கொடுத்துவிட்டார்.

இயேசு அவனை வெளியே அழைத்துச் சென்றார்: 

மாற்கு  8 : 23  “இயேசு  குருடனுடைய கையைப் பிடித்து,  அவனை கிராமத்துக்கு  வெளியே  அழைத்துக்கொண்டு,போய், அவன்  கண்களில் உமிழ்ந்து, அவன் மேல் கைகளை வைத்து: எதையாவது  காண்கிறாயா  என்று  கேட்டார்.”

இயேசு  பெத்சாயிதா  ஊர்மக்கள்  அனேக  அற்புதங்கள்  செய்தும்  விசுவாசியாததால் தன்னைத்  தேடி  வந்த  அந்த  தனிமனிதனின்  விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக  அவனுடைய  கையைப்  பிடித்து, அந்தக்  கிராமத்துக்கு வெளியே  அழைத்துக் கொண்டு  போனார். அவனுடைய  விசுவாசத்தை  அதிகரிக்க,  பலப்படுத்த,  விசுவாசத்தில்  வளர  அவனுடைய  கையைப்  பிடித்து  அவனோடுகூட  சிறிதுதூரம்  நடந்தார்.  அண்டசராசரங்களைப்  படைத்த தேவனின்  கரம்  ஒரு  மனிதனின்  கையைப்  பிடித்து  வழிநடத்தியத்தைப்  பார்க்கிறோம். அந்த  மனிதனின்  சிந்தை  முழுமையாக  இயேசுவைச்  சார்ந்து  கொள்ள  அவனைக் கிராமத்துக்கு  வெளியே  அழைத்துக்  கொண்டு  போனார்.  நாமும்  தேவனிடமிருந்து  அற்புதத்தைப்  பெற இயேசுவோடு  தனிமைப்பட  வேண்டும்.  நமது  இருதயம்  அவரைச்  சார்ந்திருக்க  வேண்டும். ஆண்டவர்  நமக்கு  ஒரு  அற்புதம்  செய்ய  இருக்கிற  இடத்தில்  இருந்து  கொண்டு  எனக்கு  ஒரு  அற்புதம்  செய்யுமென்று  சொன்னால்  செய்யமாட்டார். பாவம்  நிரம்பிய  இடம்,  கர்த்தர்  விரும்பாத  இடம்,  பரிசுத்தத்தைக்  கெடுக்கும்  இடம்  இவைகளை  விட்டு  வெளியே  வந்தால்  தான்  கர்த்தர்  அற்புதம்  செய்வார்.  மாற்கு 7 : 31  –  37  ல் இயேசு  செய்த  அற்புதத்தில்  அவனை  ஜனக்கூட்டத்தை  விட்டு  வெளியே  அழைத்துக்  கொண்டு போனார். இந்த  இரண்டு  அற்புதங்களும்  மாற்குவில்  மட்டுமே  உள்ளது.  அவனுடைய  கண்களில் உமிழ்ந்து அவன்  மேல்  தன்  கைகளை  வைத்து, எதையாவது  காண்கிறாயா  என்று கேட்டார். உமிழ்நீரில்  மருத்துவ  வல்லமை  இல்லா  விட்டாலும்  அவனுடைய விசுவாசத்தை  அதிகரிக்க  அவ்வாறு  செய்தார்.  அது  அவனுக்கு  இகழ்ச்சியாக  இருந்தாலும்  அதன்பின்தான்  அற்புதம்  நடக்கிறது.  ஆண்டவர்  முதலில்  நம்மைத்  தாழ்த்துவார்.  அதன்பின்தான்  உயர்த்துவார்.  இயேசு  எதைக்கொண்டும்,  யாரைக்கொண்டும்,  இருப்பதைக்  கொண்டும்  அற்புதம்  செய்வார்.  அவரால்  செய்யக்கூடாத  காரியம்  ஒன்றுமில்லை.  

இயேசு  செய்த  அற்புதம்:

மாற்கு  8 : 24, 25 “அவன் ஏறிட்டுப்  பார்த்து:  நடக்கிற  மனுஷரை  மரங்களைப்  போலக்  காண்கிறேன்  என்றான். பின்பு  இயேசு  மறுபடியும்  அவன் கண்களின்  மேல்  கைகளை  வைத்து, அவனை  ஏறிட்டுப்  பார்க்கச்  செய்தார் அப்பொழுது  அவன்  சுத்தமடைந்து, யாவரையும்  தெளிவாய் கண்டான்.”

இயேசு  அவனிடம்  எதையாகிலும்  காண்கிறாயா  என்று  கேட்டதற்கு  அவன் மனுஷரை  மரங்களைப்  போலக்  காண்கிறேன்  என்றான். அவனுடைய  பார்வை அரைகுறையாக  இருப்பதையறிந்த  இயேசு,  மறுபடியும்  அவன்  கண்களின் மேல் தன்னுடைய  கைகளை  வைத்து  ஏறிட்டுப்  பார்க்கச்  செய்தபோது,  அவன்  சொஸ்தமடைந்து  யாவற்றையும்  தெளிவாய்க்  கண்டான். இந்த  ஒரு  இடத்தில்தான்  இயேசு  இரண்டாவது  முறை  தொட்டதைப் பார்க்கிறோம்.  இயேசு  யாரென்றால்  கொஞ்சத்திலிருந்து  அதிகமாக  மாற்றுகிறவர்.  சிறியதிலிருந்து  பெரியதைச்  செய்கிறவர்.  மாற்கு  5 :  23  ல்  ஜெப ஆலயத்தலைவனான  யவீருவின்  குமாரத்தி  மரண  அவஸ்தைப்  பட்டுக்கொண்டிருந்ததால்,  அவர்  இயேசுவிடம்  வந்து  இயேசு  அவள்  மேல்  கைகளை  வைத்தால்  போதும்  பிழைப்பாள்  என்றார்.  இது  அவனுக்கும் நமக்கும்  ஒரு பாடத்தைக்  கற்பிக்கிறது. இந்த அற்புதத்தில் மூன்று  நிலைகளைப்  பார்க்கிறோம். 1. ஆவிக்குரிய  வாழ்க்கையில்  எல்லோருமே  இந்தக் குருடனைப் போல் பார்வையற்றவர்களாகவே  இருக்கிறோம்.  2. குருடனுக்கு அரைகுறையாகத்  தெரிகிறது  என்று  கூறியது  போல, நாமும்  ஆவிக்குரிய  நிலமையில் அரைகுறையாக  இருந்தோம். 3 இயேசு  திரும்பவும்  கை  வைத்தவுடன்  முழுமையான  பார்வையடைந்ததைப்  போல தேவனுடைய  பிரசன்னத்தில்  நாம் செல்லும்போது  பரிபூரணமான  பார்வையைப்  பெறவும்,  நாம் அறியப்பட வேண்டியவைகளை  அறிந்து  கொள்ளவும்  முடியும்.

 இயேசு கூறிய கட்டளை:

மாற்கு  8 : 26 “ பின்பு  இயேசு அவனை நோக்கி: நீ கிராமத்தில் பிரவேசியாமலும், கிராமத்தில்  இதை  ஒருவருக்கும்  சொல்லாமலும்  இரு  என்று சொல்லி,  அவனை  வீட்டிற்கு அனுப்பிவிட்டார்.”

இயேசு  அவன்  பெற்ற  சுகத்தை  ஒருவரிடமும்  சொல்ல  வேண்டாமென்றார். இவ்வாறு  சொன்னதற்குக்  காரணம்  அங்கிருக்கிறவர்கள்  இருதயத்தில்  கடினமுள்ளவர்கள்.  ஆண்டவரின்  வார்த்தையைப்  பரிகாசம்  பண்ணினவர்கள்.  அவிசுவாசிகள்  நிறைந்த  பட்டணம்.  அவர்களுக்கு  மனம்  திரும்புவதற்கு எத்தனையோ  வாய்ப்புகள்  கொடுத்தும்  அவர்கள்  அதை  அலட்சியம் செய்ததால் அந்தப்  பட்டணத்துக்குள்  செல்லாமல்  வீட்டுக்குப்  போ என்கிறார். ஆண்டவரின்  இரட்சிப்பை,  அற்புதத்தைப்  பெற்ரறவர்கள் ஆண்டவர்  விரும்பாத  இடத்துக்கு,  பழைய  பாதைக்கு,  பழைய  மனுஷ  சுபாவத்துக்குப்  போகக் கூடாது.  நாமும்  எந்த  சூழ்நிலையில் இருந்தாலும்  நம்மையும்  சந்திக்கக்  கர்த்தர்  ஆவலோடிருக்கிறார். நம்மேல்  அசைவாடுகிற ஆவியானவர்  தம்முடைய  ஆவியை  நமக்கனுப்பி  வெளிச்சத்தை உண்டு பண்ணுகிறது  மட்டுமல்ல, இருளையும்  நம்மை  விட்டு  விலக்குகிறார். வேறுபாட்டின்  ஜீவியத்திற்குள்  நம்மைக்  கொண்டு வருவார். உலகத்திலேயே  வந்து  எந்த  மனுஷனையும்  பிரகாசிப்பிக்கிற  ஒளியே  அந்த  மெய்யான  ஒளி. அவர்  தான் இயேசு.  

பார்வையற்றவர்களை  இயேசு  திறக்கச்  செய்யும்  போது  வெவ்வெறு முறைகளை  பயன்படுத்தியதைப்  பார்க்கிறோம். பெத்சாயிதா  குருடனைத்  தொட்டு  சுகமாக்கினார். பர்த்திமேயு  குருடனுக்குத் தள்ளி  நின்று  பார்வை பெறச்  செய்தார். பிறவியிலேயே  பார்வையிழந்தவன்  இயேசுவிடம்  வந்த  போது, அவனை  சீலோவாம்  குளத்தில்  போய்  கழுவு  என்றார். ஒவ்வொரு முறையும்  வித்தியாசமான  முறையில்  பல  முறைகளைக்  கையாண்டு பரிபூரண  சுகத்தைக் கொடுத்ததைப்  பார்க்கிறோம்.  நாமும்  நம்முடைய இருளான  வாழ்க்கையிலிருந்து  வெளியே  வருவதற்கு  இயேசுவிடம்  சென்று  நித்திய  ஒளியைப்  பெறுவோம். ஆமென்.

Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago