இயேசு செய்த அற்புதங்கள்

பிறவிக் குருடனைப் பார்வை பெறச் செய்தார்

சீஷர்களின்  சந்தேகம்: 

யோவான் 9 : 1 – 3 “இயேசு அப்புறம்  போகையில்  பிறவிக் குருடன் ஆகிய  ஒரு  மனுஷனைக்  கண்டார். அப்பொழுது  அவருடைய  சீஷர்கள்  அவரை  நோக்கி:  ரபீ,  இவன்  குருடனாய்ப்  பிறந்தது  யார்  செய்த பாவம், இவன் செய்த பாவமோ,  இவனைப்  பெற்றவர்கள்  செய்த பாவமோ  என்று  கேட்டார்கள். இயேசு பிரதியுத்தரமாக: அது  இவன் செய்த  பாவமுமல்ல, இவனைப்  பெற்றவர்கள்  செய்த  பாவமுமல்ல, தேவனுடைய கிரியைகள்  இவனிடத்தில்  வெளிப்படும் பொருட்டு  இப்படிப் பிறந்தான்.” 

இயேசு  பிறப்பதற்கு  முன்னே  ஏசாயா  தீர்க்கதரிசி  இயேசுவைப்  பற்றி  கூறும்  போது  ஏசாயா 42 : 6 ல் குருடரின் கண்களைத்  திறப்பார்  என்றார். இயேசு இந்த  ஒரு  இடத்தில்தான்  பிறவிக்குருடனைக் குணமாக்கிய  சம்பவம்  கொடுக்கப்  பட்டுள்ளது. இயேசு  பிறவிகுருடனான  ஒரு  மனுஷனைத் தற்செயலாகக் கண்டார்.  இந்த  மனிதன்  இயேசுவைக்  குறித்து  அறிந்ததுமில்லை.  அவரைத்தேடி  வரவுமில்லை.  ஆனால்  இயேசு  அவனைக்  கண்டார்.  சீஷர்கள்  அவரைப்  பார்த்து  இவன்  குருடனாய்  பிறந்தது  யார்  செய்த  பாவம், இவன்  செய்த  பாவமா  இவனைப்  பெற்றவர்கள்  செய்த  பாவமா  என்று கேட்டனர். இவர்கள்  இவ்வாறு  கேட்டதற்குக்  காரணம்  பாவத்தைப்  பற்றி வேதம்  முற்பிறப்பின்  பாவம், முற்பிதாக்களின்  பாவம், ஆதாமின்  பாவம்  தாயின்  கர்ப்பத்தில்  இருக்கும்  போது  செய்த பாவம்  என்றெல்லாம் கூறப்  பட்டிருப்பதால்  அவர்கள்  இவ்வாறு  கேட்டனர்.  எசேக்கியேல்  18 : 20 ல்  குமாரன்  தகப்பனுடைய  அக்கிரமத்தைச்  சுமப்பதுமில்லை,  தகப்பன்  குமாரனுடைய  அக்கிரமத்தைச்  சுமப்பதுமில்லை என்று  எழுதியிருப்பதைக்  காண்கிறோம். ஒரு  பிறவிக்குருடன்  தான்  பிறப்பதற்கு  முன்னே  எப்படிப்  பாவஞ்  செய்ய  முடியுமென்று அவர்கள்  யோசித்துப்  பார்க்கவில்லை.  ஆனாலும்  அவனுடைய  முற்பிதாக்கள்  செய்த  பாவத்தின்  விளைவாக  இந்த மனிதன்  குருடனாகப்  பிறந்திருக்கலாம்  என்று  முடிவு  செய்கிறார்கள். அதைக்குறித்து  இயேசுவிடம்  நேரில்  கேட்டதுதான்  அவர்கள்  செய்த  புத்திசாலித்தனமான  காரியம். மேலும்  சீஷர்களின்  பார்வை  கடந்த  காலத்தைப்  பார்க்கிறது.  இயேசுவின்  பார்வையோ  எதிர்காலத்தைப்  பார்க்கிறது.  அவர்கள்  எதிர்பார்த்த  பதிலை  இயேசு  கூறவில்லை.

ஏனென்றால்  யார்  செய்த  பாவம்  என்று  கண்டுபிடிப்பது  முக்கியமல்ல.  அந்த மனிதனுக்குச்  சுகமளிப்பது  தான் முக்கியம்.  ஒரு வியாதி  வருவதற்கு முன்னால்  தடுப்பதற்கு  என்ன  செய்ய வேண்டும்  என்று  பார்க்க  வேண்டும். வந்தபின்  அதைக்  குணமாக்க  என்ன  செய்ய  வேண்டும்  என்று பார்க்க வேண்டும். தேவன்  எல்லா  வியாதிகளுக்கும்,  பிரச்சனைகளுக்கும்  ஞானமுள்ள காரணங்களை  வைத்திருக்கிறார். அதனால்  தேவன்  “இவனோ,  இவனுடைய பெற்றோர்களோ  செய்த  பாவங்களல்ல, தேவனுடைய கிரியைகள்  இவனிடம் வெளிப்படும்  பொருட்டு  இவ்வாறு  பிறந்தான்”. என்றார்.  எல்லா  நோய்களும், பலவீனங்களும், பாடுகளும்  பாவத்தினால்  வந்தது  என்று  கூறமுடியாது. ஒருவன்  நோயுற்றிருக்கும்  போது  அது  அவனுக்கு  மகிமையைக்  கொண்டு வராது. தேவன்  அந்த  நோயிலிருந்து  விடுதலை  பெற, அற்புதம்  செய்யும் போதுதான்  தேவனுடைய  நாமம்  மகிமைப்படுகிறது. அவன்  குருடனாய்ப்  பிறந்ததினிமித்தம்  இயேசுவை  சந்திக்கவும்,  சுகம்  பெறவும்,  அவரை  விசுவாசிக்கவும்  ஒரு  சந்தர்ப்பம்  கிடைக்கிறது.  கிறிஸ்துவின்  சுகமளிக்கும்  வல்லமை  வெளிப்படுத்த  ஒரு  சந்தர்ப்பம்  கிடைக்கிறது.  பல  வேளைகளில்  நாம்  சந்திக்கும்  பாடுகள்  நமக்கு  வேதனையை  உண்டாக்கலாம்.  மனிதர்களுக்குப்  பாடுகள்  வருவதற்கு  பாவம்  மட்டுமே  காரணமாகாது  என்பதை  இயேசு  இந்த  வசனத்தின்  மூலம்  நமக்குப்  போதிக்கிறார்.  அவைகளின்  மூலமாகப்  பிதாவும்,  குமாரனும்  மகிமைப்படக்  கூடும்.  நம்முடைய  பாடுகள்  மூலமாகத்  தேவன்  மகிமைப்படுவாரானால் நாம்  அதை  மகிழ்ச்சியோடு  ஏற்றுக்கொள்ள  வேண்டும்.  இதேபோல்  லாசரு  வியாதியாயிருந்ததை அறிந்த  இயேசு 

யோவான் 11 : 4 ல் “ இயேசு அதைக் கேட்டபொழுது: இந்த வியாதி மரணத்துக்கு ஏதுவாயிராமல் தேவனுடைய மகிமை விளங்குவதற்கு ஏதுவாயிருக்கிறது; தேவனுடைய குமாரனும் அதினால் மகிமைப்படுவார் என்றார்.” 

 இயேசு செய்த அற்புதம்:

யோவான் 9  4 – 7 “பகற்காலமிருக்குமட்டும்  நான்  என்னை அனுப்பினவருடைய  கிரியைகளைச்  செய்ய  வேண்டும்;  ஒருவனும்  கிரியை  செய்யக்கூடாத  இராக்காலம்  வருகிறது. நான்  உலகத்திலிருக்கையில்  உலகத்திற்கு  ஒளியாயிருக்கிறேன்  என்றார். இவைகளைச்  சொல்லி, அவர்  தரையிலே  துப்பி,  உமிழ்நீரினால்  சேறுண்டாக்கி, அந்தச்  சேற்றைக் குருடனுடைய  கண்களில் பூசி: நீ போய், சீலோவாம்  குளத்திலே  கழுவு  என்றார்.  சீலோவாம்  என்பதற்கு  அனுப்பப்பட்டவன்  என்று  அர்த்தமாம்.  அப்படியே  அவன்  கழுவி,  பார்வையடைந்தவனாய்த்  திரும்பி  வந்தான்.”

“பாகற்காலமிருக்குமட்டுமென்பது” இயேசுகிறிஸ்து  இந்தப்  பூமியிலிருக்கும் போது  என்று  பொருள்  கொள்ள  வேண்டும்.  அந்தப்  பாகற்காலத்தில்  பிதா  அவருக்குக் கொடுத்த  அத்தனை  வேலைகளையும்  செய்து  முடித்தே  ஆக  வேண்டும்.  ஒருவனும்  கிரியை  செய்ய கூடாத  இராக்காலம்  என்பது  அந்திக்கிறிஸ்துவின் காலத்தைக்  குறிக்கிறது.. அந்தக்  காலத்தில் சுவிசேஷம் அறிவிப்பது  கடினமென்று இயேசு  கூறுகிறார். இயேசு  உலகத்துக்கு  ஒளியாயிருக்கிறார். ஆவிக்குரிய ஒளியைத்  தருபவரும்  அவரே. யோவான்  8 :  12ல்  “நான்  உலகத்துக்கு  ஒளியாயிருக்கிறேன்  என்றும்,  1  யோவான்  1 :  5  ல்  “தேவன்  ஒளியாயிருக்கிறார்.  அவரில்  எள்ளளவேனும்  இருளில்லை ”  என்றும் கூறியிருப்பதை  வேதத்தில்  பார்க்கிறோம்.  தம்மைப்  பின்பற்றுகிறவர்களை  ஒளியாக மாற்றுகிறார். இயேசுவின் ஒளியினால் தான் நாம்  வெளிச்சத்தின் பிள்ளைகளாக, ஆவிக்குரிய  பிள்ளைகளாக  இருக்கிறோம் என்றும், எபேசியர் 5 :8ல் அவர் இல்லாவிட்டால்  நாம் ஒவ்வொருவரும்  பார்வையற்றவர்களாகவே இருப்போம்  என்றும்  பார்க்கிறோம். 

தேவனுடைய  குமாரன்  பரிசுத்த ஆவியானவர்  மூலமாக  நம்  கண்களைத் திறக்கா விட்டால்  ஆவிக்குரிய காரியங்களை  நாம்  அறிந்து கொள்ள  முடியாதவர்களாகப் பார்வையற்றவர்களாகவே  இருப்போம். இவைகளுக்குப் பின் இயேசு  வித்தியாசமான  முறையில்  இந்த  அற்புதத்தைச்  செய்தார்.  இயேசு  தரையிலே  துப்பி  உமிழ்நீரினால்  சேறுண்டாக்கி அதை அந்தக் குருடனின்  கண்களில்  பூசினார். ஏனென்றால்  குணமாக்கும்  வல்லமை  கிறிஸ்துவின்  சரீரத்தின்  எந்தப்  பகுதியிலிருந்தும்  வெளிப்படக்கூடும்.  இதேபோல்  மாற்கு  7 :  33  லும் கொன்னைவாய்ச் செவிடனைக்  குணமாக்கும் போது  இயேசு  தம்முடைய  விரல்களை  அவன்  காதுகளில்  வைத்து, உமிழ்ந்து,  அவனுடைய  நாவைத்  தொட்டு  சுகமாக்கினார். மாற்கு  8 :  23  ல்  பெத்சாயிதா  குருடனைக்  குணமாக்கும்  போதும்  இயேசு  அவன்  கண்களில்  உமிழ்ந்து  பார்வையடையச்  செய்தார். அதன் பின்  அவனிடம் சீலோவாம்  குளத்திலே  போய்  கழுவு  என்றார்.  சீலோவாம்  என்பதற்கு அனுப்பப் பட்டவன்  என்று  பொருள். இந்தக்  குளம்  எருசலேமில்  எசேக்கியா  ராஜா  கட்டின  குளம்  (2 நாளாகமம்  32 : 30). 

எதற்காக  இயேசு  இந்த அனுப்பப்பட்ட குளத்தில் அனுப்புகிறாரென்றால், இயேசு  பிதாவினிடத்திலிருந்து  அனுப்பப்பட்டவன் (யோவான்  3 : 17, 34,  5  :  36, 37,  6 :  57,  7  :  29,  8  :  18,  26,  29) என்பதைப்  புரிந்து  கொள்ள  வேண்டும் என்பதற்காக.  சீலோவாமின்  தண்ணீர்  இஸ்ரவேலரால்  அசட்டை  பண்ணப்பட்டிருந்தது  என்று  ஏசாயா  8 :  6ல்  பார்க்கிறோம். இயேசுவும்  இஸ்ரவேலரால்  அசட்டை  பண்ணப்பட்ட வராயிருந்தார். மேலும் . குருடன் பார்வையடையத்  தண்ணீர்  தேவையாயிருந்தது. தண்ணீர் கர்த்தருடைய  வார்த்தைகளைக்  குறிக்கிறது. கர்த்தருடைய  வார்த்தை இல்லாமல்  யாரும்  மனந்திரும்ப  முடியாது. நாமும் தேவனுடைய  கட்டளைக்குக்  கீழ்ப்படிந்து,  நமது  சரீரங்களைப் பாவமன்னிப்புக்கென்று  தண்ணீரிலே ஞானஸ்நானம்  பெற்றுக்கொள்ள  வேண்டும். இயேசு  பிதாவினிடத்திலிருந்து  வந்தவர்  என்ற  சாட்சியை  யூதர்கள் அறிவது  அவசியமாயிருந்தது. இயேசு  கூறிய  வார்த்தையின்படியே போகும்போது  குருடனாய் போனான். வரும்போது  பார்வை  பெற்றவனாய்  எதிர்கால  சந்தோஷத்தோடு  வந்தான். இவன்  அற்புதம்  பெற்றது  சேற்றினாலோ  குளத்தினாலோ  அல்ல.  அவன்  இயேசுவின்  வார்த்தைக்கு  கீழ்ப்படிந்தான்  அற்புதம்  பெற்றான்.  

பரிச்சேயரின் கேள்விக்குக், குருடனின் பதில்:

யோவான் 9 : 10 – 13 “அப்பொழுது  அவர்கள்  அவனை  நோக்கி: உன்  கண்கள்  எப்படி  திறக்கப்பட்டது  என்றார்கள். அவன்  பிரதியுத்தரமாக  இயேசு  என்னப்பட்ட  ஒருவர் சேறுண்டாக்கி  என்  கண்களின்மேல் பூசி, நீ போய்  சீலோவாம்  குளத்திலே கழுவு  என்றார். அப்படியே  நான்  போய்  கழுவி  பார்வையடைந்தேன் என்றான். அப்பொழுது அவர்கள்: அவர்  எங்கே  என்றார்கள். அவன்: எனக்கு தெரியாது; என்றான். குருடனாயிருந்த  அவனைப் பரிசேயரிடத்திற்குக்  கொண்டு போனார்கள்.” 

அயலகத்தார்  இவன்  பார்வையிடைந்ததைப்  பார்த்து, பிறவிக்  குருடன்  ஒரே  நாளில்  பூரணமாகக்  குணமடைந்ததால்,  நீ  ஒரு  பிச்சைக்காரன் அல்லவா  என்றதற்கு  இவன்  ஆமாம்  என்றான். நம்மையும்  அயலகத்தார்  கிறிஸ்துவுக்குள்  வருவதற்கு  முன்  நாம்  எப்படி  இருந்தோம், வந்தபின்  நாம் எப்படியிருக்கிறோம்  என்பதைக்  காண  வேண்டும். அவர்களுக்குப் பிரகாசமான மனக்கண்கள் இல்லாததால் இயேசுவைப் பற்றி அவர்களால்  புரிந்து கொள்ள முடியவில்லை.  ( 1 : 19 ) அவர்கள் குருடனிடம்  உனக்கு  எப்படி  பார்வை  கிடைத்தது  என்று  கேட்டனர். அதற்கு  அவன் தெளிவாக  “இயேசு என்ற  ஒருவர்  சேறுண்டாக்கி  அதை  என் கண்களில்  பூசினார். சீலோவாம்  குளத்தில்  கழுவச்  சொன்னார், கழுவி நான் பார்வை பெற்றேன்” என்றான்.  தான்  பெற்ற  அற்புத  சுகத்தை  அவன்  சாட்சியாக  அறிவிக்கத்  தயங்கவில்லை. நாமும்  தேவன்  நமக்குச்  செய்யும்  நன்மைகளைச் சாட்சியாக  அறிவிக்க ஒருபோதும் தயங்கக் கூடாது.  அப்போஸ்தலனாகிய  பவுல்  தன்னுடைய  சாட்சியை  1 தீமோத்தேயு  1 : 13 – 17  ல்  தயங்காமல்  அறிவித்ததைப் பார்க்கிறோம்.  இப்பொழுது  அவர்  எங்கே  என்று  கேட்டனர். இவன்  எனக்குத்  தெரியாதென்றதால்  அவனைப்  பரிசேயர்களிடம்  கூட்டிச் சென்றார்கள். உண்மையில்  அவன்  இயேசுவை  அதற்குமுன்  அறிந்ததில்லை. அவருடைய  பெயரைக்கூட  தான்  குணமடைந்தபின்  அங்கிருந்த  மனிதர்களிடம்  கேட்டுத்தான்  தெரிந்திருக்க  வேண்டும்.  

இயேசுவை  தீர்க்கதரிசி என்றான்:

யோவான் 9 : 14 – 17 “ இயேசு சேறுண்டாக்கி, அவன் கண்களைத்  திறந்த  நாள்  ஓய்வுநாளாயிருந்தது. ஆகையால் பரிசேயரும் அவனை நோக்கி: நீ  எப்படி  பார்வையடைந்தாய்  என்று  மறுபடியும்  கேட்டார்கள், அதற்கு அவன்: “அவர் என்  கண்களின்மேல் சேற்றைப்  பூசினார், நான் கழுவினேன், காண்கிறேன்”  என்றான். அப்பொழுது  பரிசேயரில் சிலர்:அந்த  மனுஷன் ஓய்வுநாளைக் கைக்கொள்ளாததினால்  அவன் தேவனிடத்திலிருந்து  வந்தவனல்ல என்றார்கள். வேறு சிலர்:  பாவியாயிருக்கிற மனுஷன்  இப்படிப்பட்ட  அற்புதங்களை எப்படிச் செய்வான்  என்றார்கள்.  இவ்விதமாய்  அவர்களுக்குள்ளே பிரிவினை  உண்டாயிற்று. மறுபடியும்  அவர்கள்  குருடனை  நோக்கி: உன்  கண்களைத்  திறந்தானே, அவனைக்  குறித்து  நீ  என்ன  சொல்லுகிறாய் என்றார்கள்.  அதற்கு அவன்: “அவர் தீர்க்கதரிசி என்றான்.”  

சமாரிய  ஸ்திரீயும்  இயேசுவிடம்  பேசிக்கொண்டிருந்தபின்  அவரைப்  பார்த்து  “நீர்  தீர்க்கதரிசி  என்று  காண்கிறேன்”  என்றாள்.  இயேசு  5 அப்பம்  2  மீனையும்  கொண்டு  5000  பேருக்கு  போஷித்த  அற்புதத்தைக்  கண்டு அங்குள்ளவர்கள்  யோவான்  6 :  14  ல் “மெய்யாகவே இவர் உலகத்தில் வருகிறவரான  தீர்க்கதரிசி”  என்றார்கள். இயேசு  சுகமாக்கின  நாள்  ஓய்வு நாள்.  ஓய்வுநாளை  அனுசரிக்க  வேண்டுமென்பது  தேவன்  வழங்கிய  முக்கியமான  பத்து  கற்பனைகளில்  ஒன்று  (யாத்திராகமம்  20  :  8  –  11).  அதனால்  இயேசுவை  நியாயசபைக்கு  முன்பாக  நிறுத்தி  விசாரிக்க  அவர்களுக்கு  நல்ல  சந்தர்ப்பம்  கிடைத்தது.  பரிசேயர்  குருடனிடம்  நீ  எவ்வாறு பார்வையடைந்தாய்  என்று  கேட்டனர். அவன்  சுருக்கமாக  கண்களில்  அவர் சேற்றைப்  பூசினார், கழுவினேன், காண்கிறேன் என்றான். அவர்களில்  சிலர் ஓய்வுநாளை இயேசு  கைக்கொள்ளாததால்  தேவனிடத்திலிருந்து  வரவில்லை என்றும், பாவியாயிருக்கிறவன்  இப்படிப்பட்ட  அற்புதங்களைச்  செய்ய முடியாது என்று ஒரு  சிலரும்  கூறினர். அவர்களுக்குள்ளே  பிரிவினை  உண்டாயிற்று. யோவான்  7 :  43  லும்,  “அவரைக்  குறித்து  ஜனங்களுக்குள்ளே  பிரிவினை  உண்டாயிற்று”  என்று  கூறப்பட்டதைப் பார்க்கிறோம்.  யோவான்  10  :  19  லும் “யூதருக்குள்ளே  மறுபடியும்  பிரிவினை  உண்டாயிற்று”  என்று  வாசிக்கிறோம்.  இதைத்தான்  இயேசு  லூக்கா  12 :  51  லும்,  மத்தேயு  10 :  35  லும் கூறியிருப்பதைப் பார்க்கிறோம்.  இப்படிப்பட்ட  கேள்விகள்  பார்வையற்றவனின்  அறிவை  வளரச் செய்தது. அதனால்  தம்மைக்  குணமாக்கினார்  பாவியானவர்  அல்ல, நிச்சயமாக  அவர் ஒரு  தீர்க்கதரிசி, தேவனிடத்திலிருந்து  வந்தவர்  என்ற  முடிவுக்கு வந்து  அதைத்  தைரியமாக  அவர்களிடம்  கூறினான். தீர்க்கதரிசிகளால்  அற்புத  அடையாளங்களைச் செய்யமுடியுமென்று  நம்பிக்கை  அவனுக்கிருந்தது. 

பெற்றோர்களிடம் கேட்ட கேள்வியும் பதிலும்: 

யோவான் 9 : 18,19,21,22  “….. யூதர்கள் நம்பாமல்,…… தாய் தகப்பன்மாரை  அழைப்பித்து,  ….. இவன்  எப்படி  பார்வையடைந்தான்  என்று  கேட்டார்கள்.

 …. இவன் வயதுள்ளவனாக இருக்கிறான்,…….  இவனைக்  கேளுங்கள், இவனை  சொல்லுவான் என்றார்கள்.. அவனுடைய  தாய்தகப்பன்மார்  யூதர்களுக்குப்  பயந்ததினால்  இப்படிச்  சொன்னார்கள். ஏனெனில்  இயேசுவைக்  கிறிஸ்து  என்று  எவனாவது அறிக்கை பண்ணினால் அவனை ஜெபஆலயத்துக்குப்  புறம்பாக்க வேண்டுமென்று  யூதர்கள் அதற்கு முன்னமே  கட்டுப்பாடு  செய்திருந்தார்கள்.”

யூதர்கள் இயேசுவை  எப்படியாவது  தண்டிக்க  வேண்டும்  என்ற  நோக்கத்துடன் அவனுடைய  தாய்தகப்பனிடம்  அவனைப்  பற்றிக்  கேட்டனர். அவர்கள் ஞானமாய்த் தப்பித்துக்  கொண்டனர். அவர்களுக்குத்  தன் மகனுக்கு  அற்புதம் நடந்திருக்கிறதென்பதை நன்றாக  அறிந்திருந்தார்கள். ஆனால்  அதை  அவர்களிடம்  கூற அவர்களுக்கு  விருப்பமில்லை. ஆனால்  மூன்று  தகவல்களை  அவர்களுக்குக்  கொடுத்தனர்.1. இவன்  பிறவியிலேயே  கண்  தெரியாதவன். 2. இவனுடைய கண்களை  யார் திறந்தான்  என்று  எங்களுக்குத்  தெரியாது. 3. இவன்  நன்றாக வளர்ச்சியடைந்தவன், எனவே என்ன நடந்தது  என்பதை  அவனே  சொல்லுவான்  என்றார்கள்.  யூதர்களுக்குப்  பயந்ததினாலும் இயேசுவே  கிறிஸ்து  என்று  யாராவது  கூறினால், அவர்களை  ஆலயத்துக்குப் புறம்பாக்குங்கள்  என்ற  கட்டளை  இருந்ததாலும், யூதர்கள்  என்ற  முறையில்  அவர்களுக்கிருந்த  சகல  உரிமைகளும்  அவர்களிடமிருந்து  பறிக்கப்படும்  (யோவான்  12 :  42,  லூக்கா  6 :  22)  என்பதாலும் அவர்கள்  பயத்தில்  இவ்வாறு கூறினார்கள். ஆலயத்துக்குப்  புறம்பாக்கப்படுதலைக்  குறித்து  யோவான்  சுவிசேஷத்தின்  மட்டுமே  சொல்லப்படுகிறது (யோவான்  9  :  22,  12  :  42,  16 :  2).  மற்ற  சுவிசேஷகர்கள்  இந்த வார்த்தையைக்  கூறவில்லை. “மனுஷனுடைய  பயம்  கண்ணியை  வருவிக்கும்”  என்று  நீதிமொழிகள்  29  :  25  ல்  கூறப்பட்டிருக்கிறது.  பயத்தினிமித்தம்  அவர்கள்  அறிந்திருந்த  சத்தியத்தை  வெளிப்படுத்தத் தயங்குகிறார்கள்.  கிறிஸ்து  நம்முடைய  வாழ்க்கையில்  நடப்பித்த  கிரியைகளை  மற்றவர்களிடம்  தயங்காமல்  சொல்லுகிறவன்  உண்மையான  கிறிஸ்தவன்.  

குருடனின்  திட்டவட்டமான  பதில்: 

யோவான்  9 : 26 – 30  “அவர்கள் மறுபடியும் …….. எப்படித்  திறந்தான்  என்றார்கள். அவன்…….. முன்னமே  உங்களுக்குச்  சொன்னேன்,  நீங்கள் கேளாமற்போனீர்கள்; மறுபடியும்  கேட்க  வேண்டியது  என்ன?  அவருக்குச்  சீஷராக  உங்களுக்கும்  மனதுண்டோ  என்றான். அவர்கள்  அவனை  வைது: நீ அவனுடைய  சீஷன், நாங்கள்  மோசேயினுடைய  சீஷர்.…….  நீங்கள்  அறியாதிருக்கிறது  ஆச்சரியமான  காரியம்.”

மீண்டும்  மீண்டும்  பழைய  கேள்விகளையே  கேட்டதினிமித்தம்  குருடன்  மிகுந்த  எரிச்சலடைகிறான்.  மறுபடியும்  அவர்கள்  பார்வையடைந்தவனிடம்  “நீ  தேவனை  மகிமைப்படுத்து”  இந்த  மனுஷன்  பாவி  என்றனர். உடனே  சுகம்  பெற்றவன்  அவர்களிடம்  அவர் பாவி  என்று  எனக்குத்  தெரியாது. என்  குருட்டுக்  கண்களைப்  பார்வையடையச் செய்தார்  என்று  கூறி, மறுபடியும்  நீங்கள்  ஏன்  கேட்கிறீர்கள்? அவருக்குச்  சீஷராக  மனதுண்டோ?  என்று  கிண்டலாகக்  கேட்டான். இதனால்  அவன்  ஏற்கெனவே  இயேசுவின்  சீஷனாகி  விட்டான்  என்பதை  அறிந்து  கொள்கிறோம்.  இந்தப்  பரிசேயர்கள் உலகத்தில்  ஒளியான  இயேசுவைக்  காண  முடியாத  பார்வையற்றவர்களாக இருக்கின்றனர். கர்த்தர்  நம்முடைய  வாழ்க்கையை  மாற்றியிருப்பாரென்றால் அது  அவர்கள்  காணக்கூடியதாக  இருக்கும். அவர்கள்  உடனே  “நீ அவனுடைய  சீஷனாக  இருக்கலாம், நாங்கள்  மோசேயின் சீஷர் என்றனர். சுகமடைந்தவன்  இன்னும்  நீங்கள்  அறியாதிருக்கிறது  ஆச்சரியம்  என்று  திட்டவட்டமாகக்  கூறினான்.  தேவனிடத்திலிருந்து  வந்த ஒருவனால்தான்  இப்படிப்பட்ட  அற்புதங்களைச்  செய்ய  முடியும்  என்று  மிகத் தெளிவாக  அவர்களிடம்  கூறினார். 

இயேசு  யாரென்று  வெளிப்படுத்தினார்:

யோவான் 9 : 32 -39 “ பிறவிக்குருடனுடைய  கண்களை  ஒருவன் திறந்தானென்ன்று உலகமுண்டானது  முதல்  கேள்விபட்டதில்லையே. அவர்  தேவனிடத்திலிருந்து  வராதிருந்தால்  ஒன்றும்  செய்ய மாட்டாரே என்றான். …….. நீ எங்களுக்குப்  போகிறாயோ  என்று  சொல்லி, அவனை  புறம்பே தள்ளிவிட்டார்கள்.  …..இயேசு  கேள்விப்பட்டு, அவனைக்  கண்டபோது:  நீ  தேவனுடைய குமாரனிடத்தில்  விசுவாசமாயிருக்கிறாயா  என்றார் .அதற்கு  அவன் …. அவர்  யார் என்றான்.….உன்னுடனே  பேசுகிறவர்  அவர்  தான்  என்றார். உடனே  அவன்: ஆண்டவரே,  விசுவாசிக்கிறேன்  என்று  சொல்லி, அவரைப் பணிந்து  கொண்டான். அப்பொழுது  இயேசு: காணாதவர்கள்  காணும்படியாகவும், காண்கிறவர்கள் குருடராகும்படியாகவும்  நியாயத்தீர்ப்புக்கு  நான்  இந்த  உலகத்திற்கு வந்தேன்  என்றார்,”

பிறவிக்குருனுடைய  கண்களை  யாரும்  திறந்ததாக  உலகம்  உண்டானது முதல்  கேள்விப்படவில்லை, எனவே  அவர்  தேவனிடத்திலிருந்து வந்தவர் என்றான். ஏனென்றால்  அவர்கள்  அவனை குஷ்டரோகியை  ஆலயத்துக்குப்  புறம்பாக்குவது  போல, தேவாலயத்தின்று புறம்பே  தள்ளி  விட்டனர். சமுதாயத்திலும்  சமயத்  தொடர்பான  காரியங்களிலும்  தொடர்பு கொள்ள முடியாதவனாகத் தள்ளிவிட்டனர். அந்த  மனிதனுக்கு  நடந்த  நல்ல காரியங்களில் ஒன்று  என்னவென்றால்  அவனை  முந்திய  மதத்திலிருந்து  தள்ளியதே. யூதர்களுடைய  ஆலயத்துக்குள்  அவன்  சேர்க்கப்பட்டிருந்தால் அவன்  கிறிஸ்துவிடமிருந்து  விலகியே  இருந்திருக்க வேண்டியதாகும். இதுவரை இயேசுவைச் சந்திக்காமலே  அவர்களிடம்  வாதாடிக்  கொண்டிருந்த அந்த  மனிதன், இப்பொழுது  இயேசுவை  நேரில்  சந்தித்தான். 

அவனிடம்  இயேசு “தேவனுடைய  குமாரனிடத்தில்  விசுவாசமாயிருக்கிறாயா”  என்று  கேட்டார். அவன்  உடனே  அவரை  அறிந்து  கொள்ளும்  வாஞ்சையுடன்  அவர்  யாரென்று கேட்டான்.  இயேசு  “நான்  தான்” என்றவுடன்  “ஆண்டவரே விசுவாசிக்கிறேன்” என்று  சொல்லி  இயேசுவைப்  பணிந்து  கொண்டான். அவனைத் தேடி இயேசு அங்கு  வந்ததைப்  பார்க்கிறோம். பழையஏற்பாடு  அவனை  புறம்பே  தள்ளியது. புதியஏற்பாடு  அவனை  அணைத்துக் கொண்டது. இயேசுவைக்  காண வேண்டும் என்ற  ஆவல்  உள்ளவர்கள்  காணும்படியாகவும்  தேவனை  அறியாதவர்கள் தேவனை  விட்டு  தூரமாயிருக்கிறவர்கள்  குருடாகும்படியான  நியாயத்தீர்ப்பு அளிக்க  இந்த  உலகத்திற்கு  வந்தேன்  என்று  இயேசு  கூறினார். குருடன்  சரீரக் கண்களையும்,  ஆவிக்குரிய  கண்களையும்  பெற்றுக் கொண்டான். குருடன் பார்வையடைந்தவுடன்  இயேசுவை  ஒரு  மனிதனாக  மட்டும்  கண்டான். பின்பு தீர்க்கதரிசியாக  அறிகிறான். இறுதியில்  தேவகுமாரனாக  உணர்ந்து கொள்கிறான். பிச்சையெடுத்து  ஆலயத்துக்கு  புறம்பாக  இருந்தவன்  இப்போது இயேசுவுக்காக  வாழத்  தீர்மானித்தான். பெற்றோர்  நழுவிய  போதும் பயமில்லாமல்  அதிகாரிகளுக்கு  முன்பாகத்  துணிவுடன்  பேசினான். இயேசு யாரென்று  அவரிடமே  கேட்டு  அறிந்து  கொண்டான். 

பிறவிக்குருடன் பார்வை பெற்ற சம்பவம்  எந்த  உலக வரலாற்றிலும், எந்த  மதத்திலும்  நடக்கவில்லை. யோவானின்  கூறப்பட்ட ஏழு அற்புதங்களில் மூன்று அற்புதங்கள்  சரீரத்தோடும்,  வியாதியோடும்  தொடர்புடையது. இவைகள்  ஆண்டவருக்கு  மனித  சரீரத்தின் மேலிருந்த  வல்லமையைக்  காட்டுகிறது. கண்ணானது  சரீரத்தின்  விளக்காயிருக்கிறது  என்றும்,கண்  தெளிவாக  இருந்தால்  சரீரம்  முழுவதும் வெளிச்சமாக இருக்குமென்றும்  இயேசு  மத்தேயு 6 :22 ல்  கூறினார். இயேசு பாவிகளுக்காக  மரித்தாரென்றும், அவர்  சிந்திய இரத்தத்தினால்  நமக்கு பாவமன்னிப்பு  உண்டாயிருக்கிறது  என்ற  இயேசுவின்  வார்த்தைகள்  நமக்கு வெளிச்சத்தைக் கொடுக்கிறது  என்றும்  உணர  வேண்டும். அந்த வெளிச்சமானது  நமக்குள்  வரும்  போது  நம்முடைய  சரீரமும்  நம்முடைய ஆத்மாவும்  வெளிச்சத்தைப் பெறுகிறது. இயேசுவை  விசுவாசத்தால்  இரட்சிப்பு,  விசுவாசியாதவனுக்கு  நியாயத்தீர்ப்பு  (யோவான்  3  :  18).  ஆமென்.

Sis. Rekha

View Comments

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago