மத்தேயு 12 : 9 -13; மாற்கு 3 :1 – 5; லூக்கா 6 : 6 – 11

ஜெப ஆலயத்தில் இயேசு:

மாற்கு  3 : 1,2 “ மறுபடியும்  இயேசு  ஜெபஆலயத்தில்  பிரவேசித்தார். அங்கே சூம்பின  கையையுடைய  ஒரு மனுஷன்  இருந்தான். இயேசு  ஓய்வுநாளில் அவனைச்  சொஸ்தமாக்கினால்  அவர்பேரில் குற்றஞ்  சாட்டலாமென்று  அவர்மேல்  நோக்கமாயிருந்தார்கள்.”

இந்த  சம்பவமானது  பொதுவான  ஒரு  இடமாகிய  தேவாலயத்தில்  நடந்தது. இதேபோல்  ஒரு  ஓய்வுநாளில்  கப்பர்நகூமிலுள்ள  ஜெப  ஆலயத்திற்குச்  சென்றதை மாற்கு  1 : 21 ல் பார்க்கிறோம்.  இயேசுவிடம் தன்னிடம் வந்த  எண்ணற்ற மக்களை அவர்  குணமாக்கியிருந்தார். இதை  அவர்கள் அறிந்திருந்தனர். அறிந்தும்  ஓய்வுநாளில் இயேசு சுகமாக்கினால்  குற்றம்  கண்டுபிடிப்பதற்காக  சூம்பின  கையையுடைய  ஒருவனை  ஆலயத்துக்குள்  பரிசேயர்  கொண்டு  வந்து  வைத்திருந்தனர். வழியிலே அவனை  வைத்திருந்தாலும்  இயேசு  அவனை  சுகமாக்கியிருப்பார். ஆனால் அவர்கள்  அவனை  ஜெபஆலயத்துக்குள்  கொண்டு  வந்தது  இயேசுவுக்கு  மேலும் பெருமை  சேர்க்கிறதாக  ஆனது.  இயேசு  மனதுருக்கமுள்ளவர்  என்பதை அனைவரும்  அறிந்திருந்தனர். இத்தகைய  சூழ்ச்சியோடு  சூம்பின கையையுடைய  அவனை  ஜெபஆலயத்தில்  அவர்கள்  கொண்டு வந்து  வைத்திருந்தாலும், இயேசுவைப்பற்றி  அவர்கள் இரண்டு  காரியங்களை  ஒத்துக்  கொள்வதைப்  பார்க்கிறோம். 1. இயேசுவுக்கு சுகமாக்கும்  வல்லமை  உண்டு  என்று  அவர்கள்  ஒத்துக்  கொண்டதால்  தான் சூம்பின  கையையுடையவனை  அங்கு  கொண்டு  வந்து  வைத்திருந்தனர். 2. இயேசு  ஓய்வுநாளைப்  பற்றிக்  கவலைப்பட  மாட்டார்  என்றும், உதவியற்றவர்கள்  இயேசுவின்  பார்வையில்  படும்போது  கரிசனையோடு  அவர்களுக்கு உதவி  செய்வார்  என்பதையும்  ஒத்துக்  கொள்கிறார்கள்.

இயேசுவின் வார்த்தையும், பரிச்சேயர்களின் கேள்வியும்:

மாற்கு 3 : 3 “அப்பொழுது  இயேசு சூம்பின  கையையுடைய  மனிதனை  நோக்கி: எழுந்து  நடுவே  நில்  என்று  சொல்லி;”

மத்தேயு 12 : 11, 12  “அதற்கு  இயேசு: உங்களில்  எந்த  மனுஷனுக்காகிலும் ஒரு ஆடு, இருந்து, அது  ஓய்வுநாளில்  குழியிலே  விழுந்தால், அதைப்  பிடித்துத்  தூக்கிவிட மாட்டானோ? ஆட்டைப்  பார்க்கிலும்  மனுஷனானவன்  எவ்வளவோ  விசேஷித்திருக்கிறான்! ஆதலால், ஓய்வுநாளிலே  நன்மைசெய்வது  நியாயந்தான் என்று  சொன்னார்.”

இயேசு  சூம்பின  கையையுடைய  அவனை  நோக்கி  ஆலயத்தின்  நடுவே  வந்து நிற்கச்  சொன்னார். எல்லோரும்  பார்ப்பதற்கு  வசதியாக  அவ்வாறு  கூறினார். அவனும்  இயேசுவின்  வார்த்தையைக்  கேட்டு  மற்றவர்களைப் பார்க்காமல்  எழுந்து  நின்றான் (எபேசியர் 3 : 12). விசுவாசத்தோடுகூட  தைரியம்  வேண்டும்.  வெட்கத்தோடு  மறைந்திருந்தவனை  இயேசு  எழுப்பினார். மாற்கு  10 : 50 ல் பர்திமேயு  குருடன்  இயேசு  அழைத்தவுடன்  தன் மேல்  வஸ்திரத்தை  எறிந்துவிட்டு  எழுந்து இயேசுவிடம்  சென்றான்.  லூக்கா  15  :  18  ல்  தகப்பனை  விட்டுச்  சென்ற  இளைய  குமாரன்  மனந்திரும்பி  எழுந்து  தன்  தகப்பனிடம்  வந்தான்.  எழுந்துநில்  என்பதற்கு  என்ன  பொருளென்றால்  “உன்  வாழ்க்கையை  மாற்றிக்  காட்டப்  போகிறேன்.”  என்பதாகும். பரிசேயர்கள்  இயேசுவிடம்  ஓய்வுநாளில்  குணமாக்குவது  நியாயமா  என்ற கேள்வியை  எழுப்பினர்.  இயேசுவை  அந்த  வலையில்  சிக்க  வைக்க நினைத்தனர். ஆனால்  அவர்களும்  அந்த  வலையில்  சிக்கிக்  கொண்டனர். மோசேயின்  நியாயப்பிரமாணமும்  ஓய்வு  நாளில்  குழியில்  விழுந்த ஆட்டையோ, மாட்டையோ  தூக்கி  விடலாமென்று  அனுமதி கொடுக்கப்பட்டிருந்ததால், இயேசு  அவர்களைப் பார்த்து  உங்களுடைய ஆடு  ஒன்று  குழியில் ஓய்வுநாளில் விழுந்து  விட்டால்,  அந்த  நாளில்  அதைத்  தூக்கி  விடமாட்டீர்களா  என்று  கேட்டார்.  தூக்கிக் கண்டிப்பாக  விடுவீர்களல்லவா, ஆட்டைப்  பார்க்கிலும்  மனுஷன்  எவ்வளவு  விசேஷித்தவன் என்றார். மத்தேயு 6 :  26  ல்  ஆகாயத்துப்  பட்சிகளைவிட  நாம்  விசேஷித்தவர்கள்  என்றும்  10 : 31 ல்  அடைக்கலான் குருவிகளைப்  பார்க்கிலும்  விசேஷித்தவர்கள்  என்றும் இயேசு கூறியிருப்பதைப்  பார்க்கிறோம்.  எனவே  ஓய்வுநாளில் நன்மை  செய்வது  நியாயம்தான்  என்றார்.

இயேசு செய்த அற்புதம்:

மாற்கு 3 : 5 “அவர்களுடைய  இருதயகடினத்தினிமித்தம்  இயேசு  விசனப்பட்டு, கோபத்துடனே  சுற்றிலும்  இருந்தவர்களைப்  பார்த்து, அந்த  மனுஷனை நோக்கி: உன்  கையை  நீட்டு  என்றார்;  அவன்  நீட்டினான்; அவன்  கை  மறுகையைப்  போலச்  சொஸ்தமாயிற்று.” 

இயேசு  ஓய்வுநாளைக்  குறித்த  அவர்களது  சடங்காச்சாரத்தை  முறிக்கிறார். இயேசுவுக்குக் கோபம்  உண்டாயிற்று. அதனால்  இயேசு  விசனப்பட்டார். வேதவாக்கியத்தில் இந்த ஒரு  இடத்தில்தான்  “இயேசு  கோபமடைந்தார்” என்று  எழுதப்பட்டிருப்பதைக்  காண்கிறோம்.  தேவனுடைய  நாமத்தில்  பணம்  சம்பாதித்தவர்களை  தேவாலயத்திலிருந்து  துரத்தும்படி  ஒரு  சாட்டையை  உண்டு  பண்ணினார் என்ற  சம்பவத்திலும்  இயேசு  கோபமடைந்திருக்கக்  கூடும்.எபேசியர்  4 : 26 ல் “நீங்கள்  கோபண்கொண்டாலும்  பாவம்  செய்யாதிருங்கள்” என்றுள்ளது.  பாவம்  நிறைந்த  கோபமும்,  பாவமில்லாத  கோபமும்  உண்டு. இயேசுவின்  ஜீவியத்தில்  காணப்பட்ட  கோபம்  பாவமில்லாதது.  ஏழை  ஜனங்கள்  மீது  கடின  இருதயத்தைக்  காட்டின ஜனங்களிடம்  கோபப்பட்டார்.  ஏழை  ஜனங்களைச் சுரண்டி ஆலயத்தில்  தேவனுடைய  பெயரில்  பணம்  சம்பாதித்தவர்களிடம்  கோபமடைந்தார்.  ஆனால்  ஜனங்கள்  அவரைப் பிசாசு  என்று  கூறும் போதும்,  அவருடைய  முகத்தில்  காரித்  துப்பிய  போதும்,  ஜனங்கள்  அவரை  சிலுவையிலறைந்த  போதும்  கோபமடையவில்லை.  அது மட்டுமல்லாமல்  இஸ்ரவேலருக்குக்  கர்த்தர் ஓய்வுநாளைக்  கொடுத்ததின்  நோக்கத்தையும்  குறித்துப்  பேசுகிறார். அவர்கள்  ஏன்  அமைதியாக  இருந்தனர் என்றால்  அவர்கள்  என்ன  சொன்னாலும், வார்த்தையில்  பிடிபட்டு  விடுவோம் என்று  அறிந்திருந்தனர். ஓய்வுநாளை  நியமித்த  கர்த்தர்  அந்தாளுக்கென்று மனிதன்  ஏற்படுத்திய  பாரம்பரியங்களை  மாற்றுவதற்கும், நீக்குவதற்கும் இயேசு  அதிகாரமுடையவராக  இருக்கிறார் (கொலோசெயர்1 :16) என்பதை  நாம் அறிந்து  கொள்ள வேண்டும்.

இயேசு  இந்த  இடத்தில்  மட்டுமல்ல  தொடர்ச்சியாக அவர்  விசனப்பட்டதைப்  பார்க்கிறோம். ஒரு  சில  வினாடிகள்  கோபத்துடன்  அவர்களைப்  பார்க்கிறார். அவர்களுடைய  இருதயக்  கடினத்தைக்  குறித்து  விசனப்படுகிறார். இயேசு  அந்த சூம்பின  கையையுடைய  அவனைப்  பார்த்து  “உன் கையை  நீட்டு” என்றார். லூக்கா  மாத்திரம்  வைத்தியராதலால்  லூக்கா  6 : 6 ல்  வலதுகை  என்று  கூறியுள்ளார்.  வலது  கையானால்  எதையும்  செய்ய  முடியாமல்  ஆகிவிடும்.  என்னால்  முடியாதே  என்று அவன்  கூறாமல்  நீட்ட முயற்சித்தான். உடனே அவனுடைய  கை  மறுகையைப்  போல  சொஸ்தமாயிற்று.  வேதத்தில் ஆதியாகமம்  18 : 14 ல்  கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ?”  என்று  கூறியிருப்பதைப் பார்க்கிறோம்.  “இது  ஒரு  படைப்பின்  நிகழ்ச்சியைக்  குறித்த  அற்புதம். சூம்பின  கையை  சரியாக்குவதென்பது  முடியாத  காரியம். எந்த  விஞ்ஞானத்தாலும்  கண்டு  பிடிக்க  முடியாததை, மருத்துவர்களால்  முடியாததை,  இயேசுவின் வார்த்தையானது  செய்து  முடித்தது. தேவனுடைய  கட்டளைக்குக்  கீழ்படியும்போது  மட்டுமே  அற்புதம்  நடக்கும்.

பரிசேயரின் ஆலோசனை:

மத்தேயு 12 : 14, 15 “அப்பொழுது, பரிசேயர் வெளியே போய் அவருக்கு விரோதமாய் ஆலோசனை பண்ணினார்கள். இயேசு அதை அறிந்து, அவ்விடம் விட்டு விலகிப் போனார்…..”

இதற்குக் காரணம்  பல  வருடங்களாய்  சூம்பின  கையுடன்  இருந்தவனைக்  குணமாக்கப் பரிசேயர்களால்  முடியவில்லை.  ஆனால்  இயேசுவோ  உடனடியாக  அவனை  சுகப்படுத்தினார்.  இதனால்  இயேசுவின்மேல்  பொறாமை  கொண்டார்கள்.  பரிசேயர்களால்  செய்ய  முடிந்ததைவிட  இயேசு  தங்களுக்கு  அதிகமான  உதவி  செய்திடுவாரென்று  ஜனங்கள்  விசுவாசித்து  இயேசுவைப்  பின்பற்றினார்கள்.  ஆகவேதான்  இயேசுவையும்,  அவருடைய  ஊழியத்தையும்  அழிக்கத் திட்டமிட்டனர்.  அவர்கள்  ஓய்வுநாளில்  இதை  செய்யக்கூடாதென்று  மதத்துக்கும்,  பிரமாணத்துக்கும்  முக்கியத்துவம்  கொடுத்தனர்.  இதேபோல்  தேவன்  உங்களைப் பயன்படுத்துவதைக்  கண்டு,  பொறாமையடைந்து உங்கள்  ஊழியத்தை  அழிக்கவும்  முயற்சிப்பார்கள்.  அதற்காக  கலங்கத்  தேவையில்லை.  தேவன்  உங்களுக்கு  நியமித்த  ஓட்டத்தை  நோக்கித்  தளராமல்  ஓடுங்கள்.  

இயேசு அவர்களுடைய எண்ணத்தை அறிந்து, அந்த இடத்தை விட்டு அகன்று போனார். தம்மை எதிர்ப்பவர்களிடம்  சண்டை  போடாமல்  விலகிச்  செல்வதை,  இயேசுவிடமிருந்து  நாம் கற்றுக்  கொள்ள  வேண்டும்.  நம்முடைய  கருத்துக்களுக்கு  எதிராகப்  பேசுபவர்களை  எதிரிகளாகக்  கருதக்கூடாது.. இயேசு அற்புதத்தைச்  செய்து  சூம்பின  ஒரு  மனிதனின்  கையைக்  குணமாக்கின  பின்பும்,  இயேசுவைக்  கொலை  செய்வதற்கு  வெளியே  போய்  அவருக்கு  விரோதமாக  ஆலோசனை  பண்ணினார்கள். 

இந்த  அற்புதத்தில்  இயேசு  சூம்பின, உயிரில்லாத  கைகளுக்கு  உயிர்  கொடுத்து  வளரச் செய்ததைப்  பார்க்கிறோம். எந்த  மருத்துவர்களாலும்  சூம்பினகையை  சரியாக்குவதென்பது  இயலாத காரியம். ஜீவனுள்ள  தேவனாகிய  இயேசுவின்  ஜீவனுள்ள  வார்த்தைகள்  அந்த  மனிதனின்  கைகளுக்கு  ஜீவனைக்  கொடுத்தது. நாமும் நம்  ஒவ்வொருவர்  மீதும்  அன்புள்ளவராக, கரிசனை  உள்ளவராக இருக்கிற  இயேசுவின்  மீதும்  அவருடைய  வார்த்தையின்  மீதும்  விசுவாசம்  வைத்து நம்முடைய  உணர்வில்லாத  எண்ணங்களை, செயல்களை, நாளங்களை  உயிர்  பெறச்செய்ய இயேசுவை  நோக்கி  மன்றாடுவோம். ஆமென்.

Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago