இயேசுவிடம் கொன்னைவாய் செவிடன்:
மாற்கு 7 : 31, 32 “ மறுபடியும், இயேசு தீரு சீதோன் பட்டணங்களின் எல்லைகள விட்டுப் புறப்பட்டு, தெக்கப்போலியின் எல்லைகளின் வழியாய்க் கலிலேயாக் கடலருகே வந்தார். அங்கே கொன்னைவாயுடைய ஒரு செவிடனை இயேசுவிடம் கொண்டு வந்து, அவர் தமது கையை அவன் மேல் வைக்கும்படி வேண்டிக்கொண்டார்கள்.”
இயேசு கானானிய ஸ்திரீயின் மகளுக்கு சுகம் கொடுத்த பின் தீரு சீதோன் பட்டணங்களின் எல்லைகளை விட்டு தெக்கப்போலியின் எல்லைகள் வழியாக வந்தார்’ தெக்கபோலி பத்து பட்டணங்கள் சேர்ந்தது. இது கலிலேயா கடலருகே உள்ள பகுதி. இதில் அதிகமான பட்டணங்கள் யோர்தானின் கிழக்குப் பகுதியில் இருந்தன. தெக்கப்போலி அதிகமாக புறஜாதிகள் குடியிருந்த பட்டணம். ரோமர்கள் அங்கு அதிகமாகக் குடியிருந்தனர். இந்த இரண்டு அற்புதங்களும் மற்ற சுவிசேஷங்களில் காணப்படவில்லை. ஏனெனில் மாற்கு சுவிசேஷம் ரோமர்களுக்காக பிரத்தியேகமாக எழுதப்பட்டது. மத்தேயு 4 : 25 ல் “கலிலேயாவிலும், தெக்கப்போலியிலும், எருசலேமிலும், யூதேயாவிலும், யோர்தானுக்கு அப்புறத்திலும் இருந்த திரளான ஜனங்கள் வந்து, அவருக்குப் பின்சென்றார்கள்.” என்றுள்ளது. மாற்கு 8 : 22 – 26 லும் பெத்சாயிதா ஊரிலிலுள்ள ஒரு குருடனை சுகமாக்கினார்.
லேகியோன் என்ற பிசாசு பிடித்தவனை இயேசு சுகமாக்கிய பின் அவன் மாற்கு 5 : 20 ல் இயேசு தனக்குச் செய்தவைகளை தெக்கப்பொலி என்னும் நாட்டில் பிரசித்தம் பண்ணினான். எல்லா இடங்களிலும் இயேசுவின் வல்லமையைப் பற்றி பேசப்பட்டது. கொன்னைவாயையுடைய செவிடனை இயேசுவினிடம் கூட்டி வந்தார்கள். கூட்டி வந்தவர்கள் இயேசுவின் கையை அவன் மேல் வைக்கும்படி வேண்டினார்கள் (மாற்கு 7 :32). இயேசு பேதுருவின் மாமியைக் கையைப் பிடித்துத் தூக்கி விட்டார். ஜுரம் அவளை விட்டு நீங்கிற்று (மாற்கு 1 : 31). மாற்கு 8 : 23 ல் இயேசு குருடனின் கண்களின் மேல் தன் கைகளை வைத்து அவன் ஏறேடுத்துப் பார்க்கும்படி செய்தார். லூக்கா 13 : 13ல் 18 வருஷமாய்க் கூனியாயிருந்த ஒரு பெண்ணின்மேல் தன் கைகளை வைத்து நிமிரச் செய்தார். .ஏனென்றால் அவர்களுக்கு இயேசுவின் கரம் பட்டால் என்ன அற்புதம் நடக்கும், எப்படிப்பட்ட வல்லமை இறங்கும் என்பதை அறிந்திருந்ததால் அவ்வாறு வேண்டினார்கள். இந்த மனிதன் இரண்டு விதமான பலவீனமுடையவன். அவனால் சரியாகப் பேச முடியாதவனாக திக்கித்திக்கிப் பேசுபவன். அடுத்ததாக காதுகேளாத செவிடனாயுமிருந்தான்.
இயேசு செய்த அற்புதம்:
மாற்கு 7 :33 – 35 “அப்பொழுது, இயேசு அவனை ஜனக்கூட்டத்தை விட்டுத் தனியே அழைத்துக்கொண்டுபோய், தம்முடைய விரல்களை அவன் காதுகளில் வைத்து, உமிழ்ந்து, அவனுடைய நாவைத் தொட்டு; வானத்தை அண்ணாந்து பார்த்து, பெருமூச்சு விட்டு: எப்பத்தா என்றார்; அதற்குத் திறக்கப்படுவாயாக என்று அர்த்தமாம். உடனே அவனுடைய செவிகள் திறக்கப்பட்டு, அவனுடைய நாவின் கட்டும் அவிழ்ந்து, அவன் செவ்வையாய்ப் பேசினான்”.
இயேசு கொன்னைவாய் செவிடனை முதலாவது ஜனக்கூட்டத்திலிருந்து தனியே வெளியே அழைத்துக்கொண்டு போனார். இயேசு சிலருக்கு ஜனக்கூட்டத்துக்குள்ளும், சிலருக்கு ஜனக்கூட்டத்துக்கு வெளியேயும். சிலருக்கு தூரத்திலிருக்கும் போதும் அற்புதம் செய்திருக்கிறார். மாற்கு 8 : 22, 23 ல் ஒரு குருடனைப் பார்வையடையச் செய்யும்போது அவனைக் கிராமத்துக்கு வெளியே அழைத்துக் கொண்டு போய்தான் சுகமாக்கினார். இந்த மனிதனை ஏன் தனியே அழைத்துக் கொண்டு போனாரென்றால் இவன் மேல் இயேசுவுக்கிருந்த தனிப்பட்ட அக்கறை. நாமும் ஆண்டவருடைய அற்புதத்தைப் பெறத்தனிமைப் படவேண்டும். அந்த நேரம் இயேசு நம்மை சந்திக்கும் நேரம். இதைத்தான்
யோபு 37 : 14 ல் “ …தரித்துநின்று தேவனுடைய ஆச்சரியமான கிரியைகளைத் தியானித்துப்பாரும்.” என்றும்
சங்கீதம் 46 : 10 ல் “நீங்கள் அமர்ந்திருந்து, நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள்; ………..” என்றும் வேதத்தில் கூறியிருப்பதைப் பார்க்கிறோம்.
பின்னர் தன்னுடைய விரல்களை அவனுடைய காதுகளில் வைத்து, உமிழ்ந்து அவனுடைய நாவைத் தொட்டார். அதன் பின் வானத்தைப் அண்ணாந்து பார்த்து பெருமூச்சு விட்டு எப்பத்தா என்று கூறினார். லாசருவை உயிர்ப்பிக்கும் இடத்திலும் கண்களை ஏறெடுத்து ஜெபித்து உயிர்ப்பித்தார் (யோவான் 11 : 41). ஏனெனில் இயேசு நமக்காகப் பிதாவிடம் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார் (ரோமர் 8 : 34, 1யோவான் 2 : 1). எந்த நன்மையையும் பிதாவினிடத்திலிருந்து இறங்கி வருகிறதென்று யாக்கோபு 1 : 17 ல் பார்க்கிறோம். இயேசுவுக்கு அவன்மேலிருந்த மனதுருக்கத்தினால்தான் பெருமூச்சு விட்டார். எப்பத்தா என்றால் திறக்கப்படுவாயாக என்று பொருள். இயேசுவின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து அடைக்கப்பட்ட காதுகள் திறக்கப்பட்டது. சாத்தானால் கட்டி வைக்கப்பட்டிருந்த நாவுகள் அவிழ்க்கப்பட்டன. அவன் செவ்வையாய்ப் பேசினான். அவனுடைய காதுக்கும் வாய்க்கும் இடையே இருந்த தடையை இயேசு விலக்கினார்.
இயேசுவின் கரம் எல்லாத் தடைகளையும் விலக்கும். ஏசாயா தீர்க்கதரிசி ஏசாயா 35 : 5ல் குருடரின் கண்கள் திறக்கப்படுமென்றும், செவிடரின் காதுகள் திரவுண்டுபோம் என்று சொன்ன தீர்க்கதரிசனம் நிறைவேறியது. மாற்கு 5 : 41 தலித்தாகூமி (சிறு பெண்ணே எழுந்திரு) என்று அராமிக் மொழியிலும், மாற்கு 15 : 34 ல் “எலோயீ எலோயீ லாமா சபக்தானி (என் தேவனே என் தேவனே ஏன் என்னைக் கை விட்டீர் என்று அராமிக் மொழியிலும் பேசினார். இயேசுவுக்குப் பூலோக மொழிகள் அனைத்தும் தெரியும்.
ஜனங்கள் பிரமித்தனர்:
மாற்கு 7 : 36, 37 “ அதை ஒருவருக்கும் சொல்ல வேண்டாமென்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்; ஆகிலும் எவ்வளவு அதிகமாய் அவர்களுக்குக் கட்டளையிட்டாரோ அவ்வளவு அதிகமாய் அவர்கள் அதைப் பிரசித்தம் பண்ணி, எல்லாவற்றையும் நன்றாய்ச் செய்தார், செவிடன் கேட்கவும், ஊமையர் பேசவும் பண்ணுகிறாரென்று சொல்லி, மேன்மேலும் ஆச்சரியப்பட்டார்கள்.”
அவர்களிடம் இந்த அற்புதத்தை ஒருவருக்கும் சொல்ல வேண்டாமென்று இயேசு கட்டளையிட்டார். ஏனெனில் அவருடைய ஊழியம் தடைபடும் என்பதால். ஆனால் அவர்களோ இந்த அற்புதச் செயலை அனைவருக்கும் பிரசித்தப்படுத்தினர். அதற்குக் காரணம் தாங்கள் விடுதலை பெற்றதைப் போல சுகவீனர் அனைவரும் விடுதலை பெற வேண்டும் என்பது தான். இயேசு எல்லாவற்றையும் நன்றாகச் செய்கிறவராக இருக்கிறார். பரிபூரண சுகம் கொடுக்கிறவராக இருக்கிறார். மனிதர்களால் செய்ய முடியாத அற்புதங்களை செய்கிறவராயும் இருக்கிறார். செவிடர் கேட்கிறதையும், ஊமையர் பேசுகிறதையும் பார்த்து ஜனங்கள் ஆச்சரியப்பட்டனர். எல்லாவற்றையும் நன்றாகச் செய்தார் என்று கூறப்பட்டிருக்கிறது. ஏனென்றால் ஆதாமால் சீர்கெட்டுப்போயிருந்த இந்த உலகத்துக்கு வந்து தம்மையே ஒப்புக்கொடுத்து (மத்தேயு 18 : 11), சிலுவை மரணத்தினால் எல்லாவற்றையும் சீர்படுத்தினார். சிலுவையில் மரித்து உயிர்த்தெழுந்ததினால் நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீக்கலாக்கி மீட்டெடுத்தார் (கலாத்தியர் 3 : 13). இப்பொழுது நம்முடைய இதயக் கதவைத்தட்டித் தேடுகிறார் (வெளிப்படுத்தல் 3 : 20). நாம் நம்முடைய இதயக்கதவைத் திறக்கும் போது நமக்கு நித்தியஜீவனைக் கொடுத்து கட்டுகளை அறுத்து, சீர்கெட்டுப் போனவைகளை சீர்படுத்துவார்.
இங்கு இயேசு வேறு விதமாகக் குணமாக்கியதைக் காண்கிறோம். தனது வார்த்தையின் மூலமும், தொடுதலின் மூலமும் குணமாக்கினார். தேவனுடைய வழிகள் ஆராய்ந்து முடியாத வழிகள். கொன்னைவாய்ச் செவிடனை இயேசுவண்டை கூட்டி வந்து அவன் சுகம் பெற்றதைப் போல, நாமும் அடைக்கப்பட்ட காதுகளோடு, திறக்கப்படாத வாய்களோடு இருக்கிறவர்களை இயேசுவண்டை கூட்டி வர முயற்சிப்போம். இயேசுவிடம் நமது பாரத்தை வைத்துவிடுவோம். அவர் நமக்காக யாவற்றையும் செய்து முடிப்பார். ஆமென்.
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…