மத்தேயு 27 : 46 “ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.”
இது இயேசு இயேசு சிலுவையில் கூறிய நான்காவது வார்த்தை. மதவாதிகள் இயேசுவைத் தற்பெருமையால் துரத்தினர். அதிகாரிகள் அவரை ஆணவத்தில் விரட்டினர். அப்பொழுது இந்த வார்த்தைகளைக் கூறுகிறார். தாவீது நீதிமான் கைவிடப்பட்டதைக் நான் காணவில்லை என்கிறார். ஆனால் இயேசு என்ற நீதிமான் கதறுகிறதைப் பார்க்கிறோம். இது இயேசு அடிக்கப்படுவதற்கு 1000 ஆண்டுகளுக்கு முன் தாவீது பரிசுத்த ஆவியினால் நிறைந்து சங்கீதம் 22 ஐ எழுதினார். இந்த சங்கீதம் இயேசுவின் சிலுவைக் காட்சிகளைக் கூறுவதாக உள்ளது.
சங்கீதம் 22 : 1ல் “என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்? எனக்கு உதவி செய்யாமலும், நான் கதறிச் சொல்லும் வார்த்தைகளைக் கேளாமலும் ஏன் தூரமாயிருக்கிறீர்?”
இயேசு கூறிய அதே வார்த்தை இதில் உள்ளது. மத்தேயு 24 : 35 ல் இயேசு வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை என்று கூறியது போல பழைய ஏற்பாட்டில் கூறிய தீர்க்கதரிசனங்கள் நிறைவேறியது. இயேசு இந்த வார்த்தைகளைக் கூறுவதற்கு முன் மத்தேயு 27 : 45 ல் 3 மணி நேரம் பூமியெங்கும் அந்தகாரம் உண்டாயிற்று என்று பார்க்கிறோம். இது சூரியகிரகணம் அல்ல. இந்த அந்தகாரம் இயற்கைக்கு மாறுபட்ட அந்தகாரம். அந்தகாரம் என்பது காரிருளைக் குறிக்கிறது. யாத்திராகமம் 19 : 16 – 19 ல் கர்த்தர் மோசேயோடு பேசின போது சீனாய் மலையில் கார்மேகமும், மகா பலத்த எக்காளச் சத்தமும்,, இடி முழக்கமும், மின்னல்களும் உண்டாயிற்று என்று பார்க்கிறோம். இது கர்த்தரின் பிரசன்னத்தைக் காட்டியது. அதேபோல் உபகாமம் 5 : 22 ல் கர்த்தர் மலையிலே அக்கினியிலும், மேகத்திலும், காரிருளில் சபையார் எல்லோரோடும் மகா சத்தத்தோடு சொன்னதைப் பார்க்கிறோம். சாலமோன் ஆலயம் கட்டி முடித்து பிரதிஷ்டை பண்ணும் போது கட்டளை கொடுப்பதற்காக 1இராஜாக்கள் 8 : 11, 12 ல் காரிருளில் வாசம் பண்ணுவேன் என்று கர்த்தர் சொன்னதாகவும், அப்பொழுது கர்த்தருடைய மகிமை ஆலயத்தை நிரப்பிற்று என்றும் கூறப்பட்டிருக்கிறது. நாம் ஜீவ ஒளியில் பிரவேசிப்பதற்கு இயேசு மரண இருளில் தள்ளப்பட்டார்.
மத்தேயுவில் ஏலி என்றும் மாற்குவில் எலோயீ என்றும் உள்ளது. மத்தேயு கிரேக்க மொழியில் ஏலி என்று கூறியிருக்கிறார். மாற்குவோ அன்று வழக்கத்தில் இருந்த மொழியாகிய அரேமிக் மொழியில் எழுதியுள்ளார். இயேசு இந்த மொழியில் ஜனங்கள் புரிந்து கொள்வதற்காகப் கூறியிருப்பார் என்று கூறுகிறார்கள். இயேசு பிதாவை நோக்கி ஏன் என்னைக் கைவிட்டீர் என்கிறார். மற்றவர்கள் மத்தேயு 27 : 49 ல் எலியா இயேசுவை இரட்சிக்க வருவானா என்கின்றனர். அந்நாட்களில் யூதர்களிடமிருந்த ஒரு நம்பிக்கை கஷ்டப்படும்போது எலியாவைக் கூப்பிட்டால் அவர் வந்து அவர்களுக்கு உதவி செய்வாரென்றும், அவர்களை எதிர்த்தவர்களை அக்கினியால் அழித்து விடுவாரென்றும் நம்பினர். சிலுவைத் தண்டனை கொடுத்தவர்களுக்கு அந்த மொழி தெரியாததால் இவ்வாறு கூறினர். ஆனால் இயேசு எலியாவைக் கூப்பிடவில்லை. பிதாவை நோக்கி மட்டுமே கூப்பிட்டார். நம்மைத் தூக்கி விட இயேசு பிதாவிடமிருந்து கைவிடப்பட்டார். நம்முடைய கரத்தைப் பிதாவின் கரத்தோடு சேர்ப்பதற்கு இயேசு கைவிடப்பட்டார். தாவீது பயத்தில் கர்த்தரிடம் முதிர்ந்த வயதில் தன்னைத் தள்ளி விடாமலும், தன்னுடைய பெலன் ஒடுங்கும்போது கைவிடாமலும் இருக்க வேண்டியதைப் பார்க்கிறோம். சங்கீதம் 71 : 18 ல் அந்த சந்ததிக்கு கர்த்தருடைய வல்லமையையும் பராக்கிரமத்தையும் அறிவிக்கும் வரை கைவிடவேண்டாமென்றும் பிதாவிடம் வேண்டினார். சங்கீதம் 9 : 10 ல் கூறியது போல கர்த்தர் தம்மைத் தேடுகிறவர்களை ஒருபோதும் கைவிடமாட்டார்.
இயேசு வாழ்ந்த காலத்தில் பிதாவுடன் இடைவிடாமல் ஐக்கியம் கொண்டிருந்தார் என்று யோவான் 8 : 16, 29, 10 : 30, 14 : 6, 9, ல் பார்க்கிறோம். பரலோகத்தில் இருவரும் எவ்வாறு ஒன்றாயிருந் தார்களோ அப்படியே இயேசு பூமியில் இருந்தபோதும் ஒன்றாகவே இருந்தனர். பிதாவுக்கும் குமாரனுக்குமிடையே ஒரு போதும் பிரிந்திராத உறவு, இருந்தது. மனுக்குலத்தின் பாவம் குறிக்கிட்டதால் மிகச் சிறிய கால அளவு பிளவு பட்டது. நமது பாவங்களை இயேசு சிலுவையில் சுமந்தார் (1பேதுரு 2 : 24) நமக்காக இயேசு பாவமாக்கப்பட்டபோது (2கொரிந்தியர் 5 : 21) பிதாவே என்றழைக்காமல் நமது பிரதிநிதியாக பிதாவை “என் தேவனே” என்று அழைத்தார். பிதாவை என் தேவனே என்றழைத்ததால் இயேசு தேவனல்ல என்று கூற முடியாது. ஏனெனில் தேவனே உம்முடைய தேவன் என்று எபிரேயர் 1 : 9 ல் எழுதப்பட்டுள்ளது. இயேசு தேவனாயிருக்கிறார் என்பதை சங்கீதம் 45 : 7, எபிரேயர் 1 :8, யோவான் 1 : 1, அப்போஸ்தலர் 20 : 28, தீத்து 2 : 13, 2 பேதுரு 1 : 1, 1யோவான் 5 : 20 ஆகியவை வெளிப்படுதுகின்றன. நாம் இயேசுவை அப்பா பிதாவே என்றழைக்கும் புத்திர சுவீகாரத்தின் உரிமையைப் பெற தன்னுடைய சொந்த பிதாவை தேவனே என்றழைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். எல்லாவற்றையும் பொறுமையோடு சந்தித்த இயேசுவால் பிதாவிடமிருந்து பிரிந்ததைச் சகிக்க முடியாமல் கதறினார். உலகத்தின் சாபங்கள் அனைத்தையும் பிதா இயேசுவின் மேல் வைத்தார். அந்த சாபங்களினால் பிதாவின் முகம் மறைக்கப்பட்டது. இயேசுவின் பாடுகளில் உச்சகட்டம் இது. நம்முடைய அக்கிரமங்கள் அவர்மேல் சுமத்தப்பட்டதால் தேவனுடைய நியாயத்தீர்ப்பும் அவர் மேல் விழுந்தது. நம்மைப் பாவத்திலிருந்து மீட்க நமைத் தண்டியாமல் இயேசு தம்முடைய இரத்தத்தினால் சுகந்த வாசனையாகவும், பலியாகவும் ஒப்புக் கொடுத்தார். நம்மை ஒரு நாளும் கைவிடக்கூடாது என்பதற்காகவும் (எபிரேயர் 13 : 5), மற்றவர்களால் கைவிடப்படுதல் என்றால் என்ன என்ற அனுபவத்தை புரிந்து கொள்வதற்காகவும், அவ்வாறிருப்பவர்களுக்கு ஆறுதல் செய்யும் படியாகவும் இயேசு பிதாவால் கைவிடப்பட்டார். மேலும் பிதா நமக்காக அவரை பாவமாக்கினார் என்று,
2 கொரிந்தியர் 5 : 21 “நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்.” லும், இயேசுவானவர் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தாரென்று,
கலாத்தியர் 1 : 4 “அவர் நம்மை இப்பொழுதிருக்கிற பொல்லாத பிரபஞ்சத்தினின்று விடுவிக்கும்படி நம்முடைய பிதாவாகிய தேவனுடைய சித்தத்தின்படியே நம்முடைய பாவங்களுக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்;” லும் பார்க்கிறோம்.
1 பேதுரு 2 : 24 “நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்;
கலாத்தியர் 3 : 13 “மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்லாக்கி மீட்டுக்கொண்டார்.” என்றும்
இயேசு நமக்காக அவர் செய்த தியாகத்தைப் பார்க்கிறோம். முந்தின நாள் இரவு இயேசு தன்னைக் கைது செய்த போதும் கலங்காதவர், பிலாத்துவின் அரண்மனையில் வைத்து இரத்தம் சிந்த சிந்த அடித்த போதும் அந்த வேதனையைத் தாங்கிக் கொண்டவர், தன்னுடைய கைகளிலும், கால்களிலும் ஆணி அடித்தபோது தாங்கிக் கொண்டவர் பிதா அற்பகாலம் தன்னை மறைத்தபோது இயேசுவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அந்தப் பிரிவைத் தாங்க முடியாமல் “ஏலி! ஏலி! லாமா சபக்தானி” (என் தேவனே! என் தேவனே! என் என்னைக் கைவிட்டீர்.) என்று கதறுகிறார். இயேசு பேசிய அராமிக் மொழியின் இவ்வார்த்தைகளை மாற்கு குறிப்பிடக் காரணம் அந்நாட்களில் பாலஸ்தீனர்களின் மூல மொழியாக இம்மொழி இருந்தது. இயேசுவும் சீஷர்களும் இம்மொழியை அறிந்திருந்தனர். இதைத்தான் ஏசாயா தீர்க்கதரிசி,
ஏசாயா 54 : 7ல் “இமைப்பொழுது உன்னைக் கைவிட்டேன்; ஆனாலும் உருக்கமான இரக்கங்களால், உன்னைச் சேர்த்துக்கொள்வேன்.” என்றும்
ஏசாயா 59 : 2ல் “உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினை உண்டாக்குகிறது; உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது.”
என்றும் கூறுகிறார். இதேபோல் இயேசு ஒரு மனிதனின் காதைத் திறக்கும் பொது “எப்பத்தா” என்றார். அதற்குத் திறக்கப் படுவாயாக என்று பொருள். அதன் பின் யவீருவின் மகளை உயிரோடெழுப்பும் போது தலீத்தாகூமி என்றார். இதற்கு சிறு பெண்ணே எழுந்திரு என்று பொருள்
பாவத்தின் சம்பளம் மரணம். ஆவியும், ஆத்துமாவும் சரீரத்தை விட்டுப் பிரிந்தால் அது சரீர மரணம். ஆவியும், ஆத்துமாவும் தேவனைப் பிரிந்தால் அது ஆத்தும மரணம். பாவமானது மனிதனுக்கும், தேவனுக்கும் பிரிவினையை உண்டாக்குகிறது. அது பிதாவின் முகத்தை மறைத்து, அவரது பிரசன்னத்தை வரவிடாமல் தடுத்தது. எகிப்தில் ஜனங்களின் கூக்குரலைக் கேட்ட பிதா, செங்கடலைப் பிளந்து தன்னுடைய ஜனங்களுக்கு வழி காட்டியவர், இவர் என்னுடைய நேசகுமாரன் என்று தன்னுடைய வாயால் கூறியவர், அக்கினிச் சூளையில் தன்னுடையவர்களுக்காக அவர்களோடு உலாவினவர், தன்னுடைய சொந்த மகன் பாடுபடும்போது தன் முகத்தைத் திருப்பினார். ஏனென்றால் பாவத்தைப் பார்க்கக் கூடாத சுத்தக் கண்ணனான பிதா இமைப் பொழுது தன்னுடைய பிரசன்னத்தை மறைத்தார். இயேசுவின் கதறுதலினால் பூமி நடுங்கியது. ஆனாலும் பிதாவானவர் மௌனமாயிருந்தார். இது பிதாவின் பூரண பரிசுத்தத்தையும், வளைந்து கொடுக்காத நீதியையும் வெளிப்படுத்துகிறது. நாம் சதாகாலம் மகிழ்ந்திருக்கும் படிக்கும், நம்மை மன்னிக்கும்படியும் இயேசு பிதாவால் மறக்கப்பட்டார்.
இந்த வார்த்தை பரிதவிப்பைக் கொடுக்கும் வார்த்தை. எல்லோருடைய பாவங்களும் அவர்மேல் சுமத்தப்பட்டதால் பாவ இருள் அவரை மூடிக் கொண்டது. உலகத்தின் ஒளியை இருள் மூடியதால் உலகமே இருள் சூழ்ந்தது. நம்மைப் புதிய உறவுக்குள் கொண்டு செல்லக் கதறுகிறார். அவர்
எபிரேயர் 8 : 12 “நான் அவர்கள் அநியாயங்களைக் கிருபையாய் மன்னித்து, அவர்கள் பாவங்களையும் அக்கிரமங்களையும் இனி நினையாமலிருப்பேன்.” என்கிறார்.
நாம் பாவத்துக்கு இடம் கொடுப்போமானால் தேவனுடைய முகம் நமக்கு மறைக்கப் படுகிறது. நன்மைகள் தடை படுகின்றன. நமக்காக சிலுவையில் இத்தனை கதறிய இயேசுவுக்காக நாம் வாழ்வதும் அவரைப்பற்றி அறிவிப்பதும் அனுதினமும் அவரைப் போற்றிப் பணிந்து கொள்வதும் நாம் செய்ய வேண்டிய கடமையாகும்
எபிரேயர் 10 : 10 “இயேசுகிறிஸ்துவினுடைய சரீரம் ஒரேதரம் பலியிடப்பட்டதினாலே, அந்தச் சித்தத்தின்படி நாம் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம்.”
1பேதுரு 1 : 14 “உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள்.”
இந்த வார்த்தையின்படி நாம் பரிசுத்தமாய் வாழ தேவனிடம் வேண்டுவோம். ஆமென்.
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…