எஸ்தர் புத்தகத்தின் கண்ணோட்டம்:
எஸ்தர் நூலை எழுதியவர் மொர்தெகாய் அல்லது நெகேமியாவாக இருக்கலாம் என்று வேதவல்லுனர்கள் கருதுகின்றனர். இந்த நூலில் கர்த்தர், ஆண்டவர், தேவன், என்ற சொற்கள் இடம் பெறவில்லை. ஆனால் கர்த்தரின் கரம் தம்முடைய ஜனத்தின் சார்பாகப் பின்னணியிலிருந்து கிரியை செய்வதை இதில் பார்க்கலாம். தேவனை அறியாத அகாஸ்வேரு ராஜாவின் பெயர் இந்தப் புத்தகத்தில் 192 இடங்களில் வருகிறது. இந்தப் புத்தகம் யூத ஜனங்கள் எவ்வாறு பாதுகாக்கப்பட்டார்கள் என்பதையும், எஸ்தர் ராணியின் மூலமாக தேவன் குறுக்கிட்டு அவர்களைப் பெரிய அழிவிலிருந்து எவ்வாறு விடுவிக்கப்பட்டார் என்பதையும் பற்றி கூறப்பட்டுள்ளது. யூதப் பண்டிகையான பூரிம் பண்டிகையை ஆண்டுதோறும் கொண்டாடப் படுவதற்கான காரணத்தையும், இந்நூல் நமக்குத் தெரிவிக்கிறது. (எஸ்தர் 9 : 24, 28,32) பெர்சியாவிலிருந்த யூத மக்களுடைய மிகப்பெரிய விடுதலையைப் பற்றி கூறப்பட்டுள்ளது.
வேதாகமத்தில் பெண்ணின் பெயரால் கூறப்பட்டுள்ள இரண்டு புத்தகங்களில் ஒன்று எஸ்தர் புத்தகம். இன்னொன்று ரூத். ரூத் புத்தகம் மீட்பைப் பற்றியும், எஸ்தர் புத்தகம் தேவனுடைய பாதுகாப்பைப் பற்றியும் கூறுகிறது. இந்தப் புத்தகம் ஒரு பண்டிகையோடு ஆரம்பமாகி, ஒரு பண்டிகையோடு முடிகிறது. இதில் 10 விருந்துகளைக் காணலாம். இதில் உபவாசமிருப்பதைப் பார்த்தாலும், தேவனைப் பற்றிய குறிப்போ, வெளிப்படையான தொழுகையோ அல்லது ஜெபமோ கிடையாது. தேவனுடைய நாமம் காணப்படாவிட்டாலும் தேவனுடைய அதிசய வழிநடத்துதலை இந்தப் புத்தகம் எங்கும் காணலாம். (எஸ்தர் 2 : 7, 17, 22, 4 : 14,16, 5 : 2, 6, 14, 9 : 1)
பாபிலோனிய சிறையிருப்பில் 70 ஆண்டுகள் இஸ்ரவேலர்கள் இருந்த போது, கோரேஸ் ராஜா இஸ்ரவேலர் தங்கள் தேசத்திற்குப் போகலாம் என்று கட்டளை கொடுத்தார். 60 ஆயிரத்துக்கும் குறைவான ஜனங்களே திரும்பிச் சென்றனர். இன்றும் யூதர்கள் உலகத்தின் பல பகுதிகளில் உள்ளனர். அவர்கள் திரும்பிச் செல்ல வேண்டும் என்பது தான் கர்த்தருடைய சித்தம். பாபிலோனிய சிறையிருப்பிலிருந்துத் திருப்பிச் செல்லாத யூதர்களைக் குறித்த சரித்திரப் புத்தகம் தான் எஸ்தர்.
Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates
தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்
அகாஸ்வேரு ராஜா: (எஸ்தர் 1: 1, 2)
இந்தியாவிலிருந்து எத்தியோப்பியா தேசம் வரை உள்ள 127 நாடுகளை ஆண்டவர் அகாஸ்வேருராஜா. அகாஸ்வேரு என்பது ஒரு பட்டம். உயர்ந்த தகப்பன் என்பது இதன் பொருள். இவருடைய பெயர் செர்செஸ். இவர் உயர்வான நிலமைக்கு ராஜ்ஜியத்தைக் கொண்டு சென்றவர். இவர் தகப்பனின் பெயர் மகாதரியு. இவர் கிமு 486 முதல் 465 வரை அரசாண்டார். அகாஸ்வேருவுக்கும் எஸ்தருக்கும் பிறந்தவர் கோரேஸ் ராஜா. அகாஸ்வேருவுக்கும், தள்ளிவிட்ட ராணியான வஸ்திக்கும் பிறந்த மகன் தான் அர்தசஷ்டா. இவர் தான் எஸ்ராவையும், நெகேமியாவையும் எருசலேமுக்கு அனுப்பி வைத்தவர். (எஸ்ரா 7:1, நெகேமியா 2 :1 – 6)
அகாஸ்வேரு ராஜா கொடுத்த விருந்து: (எஸ்தர் 1 : 3 – 9)
அகாஸ்வேரு ராஜா 177 நாடுகளிலிலுள்ள பிரதிநிதிகளை அழைத்து 180 நாட்களாக ஒரு பெரிய விருந்து பண்ணினார். ராஜா இந்த விருந்தை நடத்தியதின் நோக்கம், கிரேக்க நாட்டிற்குப் படையெடுக்கத் தான் போகப் போவதால் எல்லா தேசங்களின் படையும் தனக்கு உதவி செய்ய வேண்டும் என்பதற்காக. அதன் பின் ஏழு நாட்கள் ராஜா சூசான் அரண்மனையில் உள்ளவர்களுக்காக விருந்து கொடுத்தார். இது ராஜா கொடுத்த இரண்டாவது விருந்து. இந்த விருந்துகள் கற்பனைக்கு எட்டாதவைகள். ராஜாங்கத்தின் செல்வச் செழிப்பை இந்த விருந்துகள் காட்டியது. வஸ்தியும் பெண்களுக்காக அரண்மனையில் விருந்து கொடுத்தாள்.
வஸ்தி ராணி நீக்கப்படுதல்: (எஸ்தர் 1 : 10 – 22)
வஸ்தியின் சௌந்தரியத்தை மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காகத், தன்னுடைய ஏழு பிரதானிகளிடம் வஸ்தியை ராஜ கிரீடம் தரித்து அழைத்துக் கொண்டு வர ராஜா கட்டளையிட்டார். இது ராஜா நன்றாகக் குடித்துக் கொண்ருந்த நிலைமையில் இருக்கும் போது வந்த விபரீத ஆசை. வஸ்தி அடக்கமுள்ளவளாகவும், நாணமுள்ளவளாகவும் இருந்ததால், அவள் தன்னுடைய அழகை மற்றவர்களுக்குக் காட்டிக்கொள்ள விரும்பவில்லை. தான் போகாவிட்டால் கணவனுக்கு அவமானம் என்பதை அவள் நினைத்திருக்க வேண்டும். தானாகத் தனியாக ராஜாவைச் சந்தித்து வஸ்தி சமாதானப் படுத்தியிருக்க வேண்டும். இவைகள் ஒன்றையும் வஸ்தி செய்யாமல் அந்த பிரதானிகளிடம் தான் வருவதில்லை என்று மட்டும் கூறினாள். இதனால் ராஜா கடுங்கோபம் கொண்டார். ராஜநீதியையும், நியாயப்பிரமாணத்தையும் அறிந்த பண்டிதர்களிடம் ஆலோசனை பண்ணி சட்டத்தின்படி வஸ்தியை என்ன செய்யலாம் என்று கேட்டார்.
அதில் ஒருவனான மெகுகான் என்பவன் மிகவும் தைரியமாக ராஜாவிடம், வஸ்தி ராஜாவை அவமானப்படுத்தி, மற்ற எல்லோரையும் அற்பமாக எண்ணியதால், அவளுடைய பதவியைப் பறித்து அவளை விட உண்மையான வேறு ஒருத்திக்கு அதைக் கொடுக்க வேண்டும் என்றான். ஒவ்வொரு மனைவியும் கணவனைக் கனம் பண்ண வேண்டும் என்றும் அது மீறப்படாமல் பெர்சிய, மேதிய தேசசட்டத்தில் எழுதப்பட வேண்டும் என்றான். சட்டத்தினாலும், கண்டிப்பினாலும், அடக்கி ஆள்வதினாலும், குடும்பத்தை நடத்த வேண்டுமென்பது மெமுகானின் கொள்கையாகும். இதை அனைவரும் ஆமோதித்ததால், அந்தந்த நாடுகளின் பாஷையில், அதை சகல நாடுகளுக்கும் ராஜாவின் உத்தரவுடன் அனுப்பப்பட்டது. ஆனால் தேவன் அரியணையை இழந்த வஸ்தியை மறக்காமல், அவளது மகனான அர்தசஷ்டாவை அடுத்த அரியணைக்குத் தகுந்தவராக உயர்த்தினார். அர்தசஷ்டா பிறந்த வருடத்தில் தான் வஸ்தி பதவி நீக்கம் செய்யப்பட்டாள்.
ராஜாவுக்கு ஊழியக்காரர்கள் சொன்ன ஆலோசனை: (எஸ்தர் 2 : 1 – 4)
விருந்துகள் முடிந்தபின், அகாஸ்வேரு ராஜா கிரேக்கர்களுடன் போரிட்டுத் தோல்வியடைந்து திரும்பிய பின் வஸ்தியின் ஞாபகம் வந்தது. ராஜாவின் ஏக்கத்தை அறிந்த ஊழியக்காரர்கள் அரசனிடம் ஒரு அதிரடியான ஆலோசனையைக் கூறினர். அதன்படி தேசமெங்கும் ஆளனுப்பி அழகிகளைத் தேர்வு செய்து, அதில் மிகச் சிறந்த அழகியை ராணியாக்க வேண்டுமென்று ஆலோசனை கூறினர். அதற்கு ராஜா ஒப்புதல் அளித்தார். இவ்வளவு காரியங்களும் யூதரல்லாத மக்களிடத்தில் நடந்தது.
மொர்தெகாய்: (எஸ்தர் 2 : 5 – 8)
அங்குள்ள சூசான் அரண்மனையில் பென்யமீன் கோத்திரத்திலுள்ள யாவீரின் குமாரனான மொர்தெகாய் என்னும் பேருள்ள யூதன் இருந்தான். இவன் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார், யூதாவின் ராஜாவாகிய எகொனியாவைப் பிடித்துக் கொண்டு போகிற போது, அவனோடு கூட எருசலேமிலிருந்து பிடித்துக் கொண்டு போகப் பட்டவர்களின் ஒருவன். இவன் சவுல் ராஜாவின் குடும்பத்தைச் சேர்ந்தவன். அங்குள்ள அரசு வேலையில் அமர்ந்து இருந்தான். யோசேப்பும், தானியேலும் கர்த்தருடைய சித்தத்தினால் அன்னிய தேசத்தில் பெரிய பதவியில் இருந்தனர். ஆனால் இவனோ கர்த்தருடைய சித்தத்திலில்லை. இவனுடைய சித்தப்பாவும் சித்தியும் கொலை செய்யப்பட்டு விட்டதால், அவர்களுடைய குமாரத்தியான எஸ்தர் என்னும் அச்சாளை தன்னுடைய குமாரத்தியாக வளர்த்து வந்தான். எஸ்தர் மிகுந்த சௌந்தரியம் உள்ளவள். மொர்தெகாய் எஸ்தரை அழகுப் போட்டியில் கலந்து கொள்ளச் செய்தான். இவன் யூதரல்லாத ஒருவனுக்குத் திருமணம் செய்ய நினைத்தது, யூத சட்டத்துக்குக் கீழ்ப்படியாத செயல். ஆனால் பாபிலோனியர் இதை அனுமதித்தனர்.
எஸ்தர் ராணியாக தேர்வு செய்யப்படல்: (எஸ்தர் 2 : 8 – 17)
எஸ்தர் அரண்மனைக்குக் கொண்டு போகப்பட்டாள். அவள் யூதரல்லாத ராஜாவைத் திருமணம் செய்ய மாட்டேன் என்று கூறவில்லை. எஸ்தர் யூத குலம் என்பதை அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டாம் என்று மொர்தெகாய் கூறியிருந்தான். எனவே அவளும் தன் குலத்தைப் பற்றித் தெரிவிக்கவில்லை. ஓரு ஆண்டு காலம் எஸ்தருக்கு அரண்மனையிலுள்ள கன்னி மாடத்தில் சுத்திகரிப்பு நிறைவேறின பின்பு அரண்மனைக்கு அழைத்து வரப்பட்டாள். எஸ்தர் தன்னுடைய அழகுக்கேற்ப அருங்குணமும் உள்ளவளாக இருந்ததால், காண்பவர் அனைவர் கண்களிலும் தேவன் தயவு கிடைக்கச் செய்தார். ராஜா சகல ஸ்திரீகளைப் பார்க்கிலும் எஸ்தர் மேல் அன்பு வைத்தார். ராஜகிரீடத்தை எஸ்தரின் சிரசின் மேல் வைத்து அவளை வஸ்தியின் ஸ்தானத்தில் பட்டத்து ராணியாக்கினார். ராஜா இதனால் மிகவும் சந்தோஷமடைந்து, எல்லா பிரபுக்களுக்கும், ஊழியக்காரர்களுக்கும் ஒரு பெரிய விருந்து செய்து, ராஜாத்திக்குத் தக்க வெகுமானங்களைக் கொடுத்தார். ஒரு ஆண்டு காலம் வரி கொடுக்க வேண்டாமென்று கட்டளையிட்டார்.
Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates
தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்
மொர்தெகாயின் செயல்: (எஸ்தர் 2 : 21 – 23)
மொர்தெகாய் அரண்மனை வாசலில், அரசு பணியில், பெரியதொரு பதவியில் இருக்கும்போது, வாசல் காக்கிற ராஜாவின் இரண்டு பிரதானிகளாகிய பிக்தானும், தேரேசும் ராஜாவைக் கொல்லத் திட்டம் தீட்டினர். மொர்தெகாய் இதை அறிந்து, அதை எஸ்தர் மூலமாக ராஜாவுக்கு அறிவித்தான். எஸ்தர் அதை மொர்தெகாயின் பெயரால் ராஜாவுக்குத் தெரிவித்தாள். ராஜா அவர்களை விசாரித்து அவர்களிருவரையும் தூக்கிலிடக் கட்டளையிட்டார். ஆனால் இதைத் தெரிவித்த மொர்தெகாய் பாராட்டப்படவில்லை. தேவனுடைய கண்களுக்கு இது தப்பவில்லை.
ஆமானின் சதித்திட்டம்: (எஸ்தர் 3 : 1 – 15)
ராஜா ஆமான் என்ற ஆகாகியனை தனக்குப் பிரதம மந்திரியாக நியமித்திருந்தார். இவன் அம்மெதாத்தாவின் குமாரன். ஆகாகியன் என்பதன் விளக்கம் என்னவென்றால், ஆகாகு என்பவன் அமலேக்கியரின் அரச பரம்பரையைச் சேர்ந்தவன். சவுல் தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து அமலேக்கியரை முற்றிலும் அழிக்கவுமில்லை ஆகாகைக் கொலை செய்யவுமில்லை. அவர் கொலை செய்திருந்தால் இந்த சம்பவம் நடந்திருக்காது. ஆமான் அரண்மனைக்குள் வரும்போது எல்லோரும் அவனை வணங்குவார்கள். ஆனால் மொர்தெகாய் மட்டும் வணங்க மாட்டான். இதில் மொர்தெகாய்க்குள் தேவன் செயல்பட்டதைப் பார்க்கிறோம் மொர்தெகாய் தேவனை நோக்கி ஜெபிக்கா விட்டாலும் தேவன் ஒருவர் உண்டு என்பதை அறிந்திருந்தான். மொர்தெகாயிடம் “ஆமானை ஏன் வணங்க மாட்டேன்கிறீர்” என்று கேட்ட அரண்மனை ஊழியக்காரரிடம் முதன்முதலாக தான் ஒரு யூதன் என்று கூறினான். ஆமான், மொர்தெகாய் தன்னை வணங்காததால் அவனை அழிக்கத் திட்டம் தீட்டி, அவனுடைய பின்னணியை அறிந்தபின், அந்த குலத்தையே அழிக்கத் திட்டம் தீட்டினான்.
அவர்களை அழிக்கச் சீட்டு போட்டு முதல் மாதம் 13ம் தேதி கட்டளையை எழுத வைத்து, 12 மாதம் 13ம் தேதியில் முற்றிலும் யூதர்கள் அழிக்கப்படவும், அவர்களுடைய சொத்துக்கள் கொள்ளையிடப்படும் தேதி குறித்தான். ஆமான் ராஜாவிடம் போய், இந்த நாட்டிலுள்ள யூதர்கள் சட்டங்களைக் கைக்கொள்ளுவதில்லை என்று பொய் சொன்னான். ராஜா வஸ்தியின் விஷயத்தில் தன் குடும்பத்தின் சிக்கல்களுக்கு, மற்ற நாடுகளின் ஆலோசனையை நாடியவர், ஒரு குலத்தையே அழிக்க முற்படுவதற்கு முன் மற்றவர்களின் ஆலோசனைகளைக் கேட்காமல், ஆராயாமல், மொர்தெகாய் செய்த நன்மையையும் அறியாமல், அனைவரையும் கொலை செய்ய ஒப்புதல் அளித்தார். அதற்கு 10000 தாலந்து வெள்ளியை லஞ்சமாக அளிக்க ஆமான் முன் வந்தான். அதற்கு இப்போதைய மதிப்பு 600 கோடி. அரசர் அரச முத்திரை மோதிரத்தைக் கொடுத்தார். ஆமான் தேசத்தின் அனைத்து மொழிகளிலும் அரசு ஆணை எழுதி முத்திரை பதித்து அஞ்சல்காரரிடம் கொடுத்துனுப்பினான். இந்த செய்தி அனைத்து நாடுகளுக்கும் சென்றடைந்தது.
யூதர்களின் கலக்கம், மொர்தெகாயின் தவிப்பு: (எஸ்தர் 4 : 1 – 14)
ஆமானின் திட்டத்தை அறிந்த மொர்தெகாய் கலங்கினான். தன் வஸ்திரங்களைக் கிழித்து, இரட்டுடுத்தி, சாம்பல் போட்டுக் கொண்டு, நகரத்தின் நடுவே அமர்ந்தான். ஒவ்வொரு நாட்டிலிலுமுள்ள யூதர்களும் மகா துக்கம் அடைந்தனர். ஜெபம் பண்ணா விட்டாலும் உபவாசமிருந்து, இரட்டுடுத்தி, சாம்பலில் அமர்ந்தனர். 11 வது மாதத்தில் தங்கள் குலம் அழிக்கப்படப் போகிறதே என்று கலங்கினர். மொர்தெகாய் எஸ்தரிடம், ராஜாவை சந்தித்து யூத ஜனங்களுக்காக வேண்டிக் கொள்ளும்படி ஆலோசனை கூறி அனுப்பினான். மேலும் அவளிடம் “நீ இந்தக் காலத்திலே மௌனமாயிருந்தால், யூதருக்குச் சகாயமும் இரட்சிப்பும் வேறு ஒரு இடத்திலிருந்து எழும்பும், அப்பொழுது நீயும் உன் தகப்பன் குடும்பதாரும் அழிவீர்கள்; நீ இப்படிப்பட்ட காலத்துக்கு உதவியாயிருக்கும்படி உனக்கு ராஜமேன்மை கிடைத்திருக்கலாமே, யாருக்குத் தெரியும், என்று சொல்லி அனுப்பினான். ”
எஸ்தர் மொர்தெகாய்க்கு கொடுத்த ஆலோசனை: (எஸ்தர் 4 : 15 17)
எஸ்தர் வஸ்திக்குப் போட்ட சட்டமும், தானியேலுக்குப் போட்ட சட்டமும் மாற்ற முடியாததை அறிந்திருந்ததால் கலங்கினாள். எஸ்தர் மொர்தெகாயிடம் சூசானிலிருக்கிற யூதர்களிடம் மூன்று நாள் அல்லும் பகலும் புசியாமலும், குடியாமலுமிருந்து, உபவாசம் பண்ணச் சொன்னாள். அதேபோல் தானும் தன்னுடைய தாதிமாரும் உபவாசம் இருப்பதாகக் கூறியனுப்பினாள். இதுவரை மொர்தெகாய் சொல்லைக் கேட்ட எஸ்தர், இப்போது எஸ்தரின் சொல்லை மொர்தெகாய் கேட்டான். ராணி ராஜாவிடம் சென்றவுடன் ராஜா “எஸ்தர் ராஜாத்தியே உனக்கு என்ன வேண்டும் நீ கேட்கிற மன்றாட்டு என்ன? நீ ராஜ்ஜியத்தின் பாதி மட்டும் கேட்டாலும், உனக்குக் கொடுக்கப்படும் என்றார். ” அவள் தான் ஒரு விருந்து செய்யப் போவதாகவும் அதற்கு ராஜாவும் ஆமானும் வரவேண்டும் என்றாள்.
எஸ்தர் கொடுத்த முதல் விருந்து: (எஸ்தர் 5 : 3 – 4)
எஸ்தர் அழைத்தபடியே ராஜாவும, ஆமானும் அந்த விருந்துக்கு வந்தனர். ராஜா மறுபடியும் எஸ்தரைப் பார்த்து “உன் வேண்டுதல் என்ன? அது உனக்குக் கொடுக்கப்படும்; நீ கேட்கிறது என்ன? நீ ராஜ்ஜியத்தில் பாதிமட்டும் கேட்டாலும் கிடைக்கும் என்றார். ”எஸ்தர் அந்த விருந்து முடிந்த பின், நாளைக்கும் தான் விருந்து செய்யப் போவதாகவும் அதற்கும் இருவரும் வர வேண்டும் என்றாள். ஆமான் மிகவும் சந்தோஷமாகப் புறப்பட்டு வீட்டுக்குப் போய், தன் மனைவியிடமும், தன் சினேகிதர்களிடமும், ராணி தன்னைத் தவிர வேறு யாரையும் விருந்துக்கு அழைக்கவில்லை என்று பெருமையுடன் கூறினான்.
ஆமான் மனைவியின் செயல், ராஜா மொர்தக்காய்க்குக் கொடுத்த கனம்: (எஸ்தர் 5 : 10 – 6 : 13)
ஆமானின் மனைவி ஆமானின் வெறுப்பைத் தூண்டிவிட்டு, மொர்தெகாயை கொலை செய்ய ஐந்து முழம் அதாவது 75 அடி உயரமான தூக்கு மரத்தைச் செய்யச் சொல்லி, ஒரே நாளில் செய்து முடித்து வைத்தாள். அதில் மொர்தெகாயைத் தூக்கிலிட ராஜாவிடம் சொல்லச் சொன்னாள். ராஜாவுக்கு அன்று இரவு தூக்கம் வராததால், ராஜா அனுதினம் நடக்கிற விவரங்களுள்ள நடபடி புத்தகத்தைப் படிக்கச் சொன்னார். அதில் தன்னுடைய உயிரைக் காத்த மொர்தெகாயின் செயலைக் கேட்டறிந்தார். மேலும் அவனை அதற்குக் கனப்படுத்தப்படவில்லை என்பதை அறிந்து அவனைக் கனப்படுத்த விரும்பினார். அந்த நேரத்தில் ஆமான் மொர்தெகாயைத் தூக்கிலிட ராஜாவிடம் உத்தரவு கேட்டு வந்தான். ராஜா ஒரு நாள் அந்தப் புத்தகத்தை வாசிக்கத் தவறி இருந்தாலும் மொர்தெகாய் தூக்கிலிடப்பட்டிருப்பான். கர்த்தர் ராஜாவுக்குத் தூக்கம் வராமலிருக்கவும், அந்த செய்தியை ராஜாவுக்கு அறியவும் வைத்தார்.
அந்த நேரத்தில் ராஜா அங்கு வந்த ஆமானிடம், “ராஜா கனம் பண்ண விரும்புகிறவனுக்கு என்ன செய்யப்பட வேண்டுமென்று கேட்டார். ” ராஜா தன்னைத்தான் கனம் பண்ண விரும்புகிறார் என்று ஆமான் நினைத்தான். ஆமான் ராஜாவிடம், ராஜா உடுத்திக் கொள்ளுகிற ராஜவஸ்திரத்தை உடுத்துவித்து, ராஜாவின் சிரசில் தரிக்கப்படும் ராஜமுடியும் தரிக்க வைத்து, ராஜா ஏறுகிற குதிரையின் மேலே ஏற்றி, நகரவீதியில் உலாவரும்படி செய்யவேண்டும் என்றான். ராஜா அதைக் கேட்டு, ஆமானின் கைகளினால் மொர்தெகாய்க்கு அதை செய்யச் சொல்லிக் கட்டளையிட்டார். ராஜா கூறியதைக் கேட்ட ஆமான் சஞ்சலத்தோடு வஸ்திரத்தையும், குதிரையையும் கொண்டு போய் மொர்தெகாயை அலங்கரித்து, அவனைக் குதிரையின் மேல் ஏற்றி, நகர வீதியில் உலா வரும்படி செய்தான். ஆமான் தன் வீட்டுக்குப் போய் எல்லாவற்றையும் மிகுந்த வருத்தத்துடன் தன் மனைவியிடம் கூறினான்.
Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates
தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்
எஸ்தர் கொடுத்த இரண்டாவது விருந்து, ஆமானுக்குக் கிடைத்த தண்டனை: (எஸ்தர் 7 : 1 – 8; 2)
ராஜாவும் ஆமானும் எஸ்தர் ஆயத்தம் பண்ணின விருந்துக்கு வந்தனர். இந்த முறையும் ராஜா எஸ்தரிடம் “உன் வேண்டுதல் என்ன ராஜ்ஜியத்தின் பாதியைக் கேட்டாலும் தருவேன்” என்றார் எஸ்தர் ராஜாவிடம், அந்த நேரத்தில் தான் ஒரு யூதப் பெண் என்பதை வெளிப்படுத்தி, தானும் தன்னுடைய ஜனங்களும் கொலை செய்யத் திட்டம் தீட்டியிருக்கிற சதித் திட்டத்தைப் பற்றி கூறினாள். ராஜா, ராஜாத்தியிடம் அப்படிச் செய்ய துணிகரம் கொண்டவன் யார் என்றார். ராணி அதற்குப் பதிலாக ஆமானைச் சுட்டிக்காட்டி, இந்த துஷ்ட ஆமான் தான் அவன் என்றாள். ராணி கூறியதைக் கேட்ட ஆமான் திகிலடைந்தான். தன்னுடைய செயல் ராணியைப் பாதிக்கும் என்று ஆமான் எண்ணவில்லை. ராஜா என்ன செய்வது என்று தெரியாமல் சிந்திக்கத் தோட்டத்துக்குச் சென்றார். ஆமான் எழுந்து ராணியிடம், தன் உயிருக்காக விண்ணப்பம் பண்ண எஸ்தரிடம் போய், எஸ்தரின் மெத்தையில் விழுந்தான். மொர்தெகாய் தன்னை வணங்க வேண்டுமென்று ஆமான் நினைத்தான். ஆனால் அன்று ஆமான் யூத பெண்மணியான எஸ்தரின் காலில் கர்த்தர் விழச் செய்தார்.
ராஜா எஸ்தரின் மெத்தையில் ஆமானைப் பார்த்த போது, “ராணியைப் பலவந்தம் பண்ண வேண்டுமென்றிருக்கிறானோ” என்றவுடன் ஆமானின் முகத்தை மூடினர். அப்பொழுது பிரதானிகளில் ஒருவன் மொர்தெகாய்க்கு ஆமான் செய்து வைத்திருக்கும் தூக்குமரத்தைப் பற்றி கூறினான். அதைக் கேட்ட ராஜா, ஆமானை அந்தத் தூக்குமரத்தில் தூக்கிலிடக் கட்டளையிட்டார். கலாத்தியர் 6 : 7 ல் “மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். ” என்று கூறியிருப்பதைக் காணலாம். ஆமான் மொர்தெகாய்க்குச் செய்த தூக்குமரத்தில் அவனைத் தூக்கிலிட்டனர். ஆமானின் வீடு எஸ்தர் ராஜாத்திக்குக் கொடுக்கப்பட்டது ராஜா தன்னுடைய முத்திரை மோதிரத்தை மொர்தெகாய்க்குக் கொடுத்தார். ராஜா தன்னுடைய முத்திரை மோதிரத்தை முதலில் ஆமானுக்கும், பின் மொர்தெகாய்க்கும் கொடுத்தது தவறு. எஸ்தர் மொர்தெகாயை ஆமானின் அரண்மனைக்கு அதிகாரி ஆக்கினாள்.
எஸ்தர் ராஜாவிடம் கேட்ட வேண்டுகோள், ராஜாவின் கட்டளை: (எஸ்தர் 8 : 3 – 10)
எஸ்தர் ராஜாவின் பாதங்களில் விழுந்து அழுதாள். ராஜா காரணம் கேட்ட போது, தன்னுடைய மக்களை அழிப்பதற்கு ஆமான் எழுதிய கட்டளை களைச் செல்லாமற் போகப்பண்ணும் படி ராஜா எழுதி அனுப்ப வேண்டுமென்று விண்ணப்பித்தாள். அரசனுடைய கட்டளையை மாற்றவோ நீக்கவோ முடியாது என்பதால், அதற்குப் பொருத்தமான முறையில் ஒரு புதிய கட்டளையை எழுதும்படி அரசர் ஆணையிட்டார். முதலாம் மாதம் 13ம் தேதி எழுதிய ஆணை செயல்படுவதற்கு முன், யூதர்களுக்குச் சாதகமாக புதிய ஆணை ஒன்றை 3ம் மாதம் 23 ம் தேதி எழுதி 127 நாடுகளின் தேசாதிபதிகளுக்கும், அதிபதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் அந்தந்த நாட்டில் வழங்கும் பாஷையில் எழுதி, யூதர்களுக்கும் அவர்களுடைய பாஷையில் எழுதி அனுப்பப்பட்டது. ஆமானுடைய கட்டளை அனுப்பப்பட்டதைக் காட்டிலும் வேகமாக மொர்தெகாய் அனுப்பிய கட்டளை போனது.
ராஜாவின் 2வது கட்டளை, யூதர்களின் செயல்: (எஸ்தர் 8 12 – 17)
ஆமான் யூதர்களைக் கொல்வதற்கு ஏற்பாடு செய்திருந்த நாளில் யூதர்கள் ஒன்று சேர்ந்து தங்களைக் காத்துக் கொள்ளவும், தங்கள் எதிரிகளைத் தாக்கி அழித்து, அவர்கள் பொருட்களை எடுத்துக் கொள்ளவும் ராஜா புதிய ஆணையைப் பிறப்பித்தார். முதல் ஆணையைப் பார்த்து யூதர்கள் கலங்கினர். ஆனால் இரண்டாவது ஆணையைப் பார்த்து பெருமகிழ்ச்சி அடைந்தனர். ஏனெனில் இது யூதருக்கு ஒத்தாசையாக அனுப்பப்பட்டது. முதல் ஆணை அனுப்பப்பட்ட போது சூசான் கலங்கியது. இரண்டாம் முறை ஆணை அனுப்பப்பட்ட போது சூசான் நகரமே ஆர்ப்பரித்தது. அனேகர் யூத மதத்தில் சேர்ந்தனர். முதலிலுள்ள உடன்படிக்கை நியாயப்பிரமாணமாக வந்தது. அதைப் பார்த்த மக்கள் தங்கள் அவல நிலையை உணர்ந்து வேதனை அடைந்தனர். இரண்டாவது உடன்படிக்கை இயேசுவின் இரத்தத்தினால் முத்திரை இடப்பட்டது. மக்கள் தங்கள் பாவங்களுக்கான பரிகாரத்தை அடைகின்றனர். நாடுகளின் சகல அதிகாரிகளும், தேசாதிபதிகளும், துரைகளும், ராஜாவின் காரியங்களை நடப்பிக்கிறவர்களும், யூதர்களுக்குத் துணை நின்றார்கள்.
மொர்தெகாயின் காலத்திலிருந்த ஜனங்களுக்குத் தற்கால விடுதலையும் சந்தோஷமும் தான் கிடைத்தது. ஆனால் இயேசுவோ எல்லா ஜனத்துக்கும் நிரந்தரமான மகிழ்ச்சியைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். யூதர்கள் தங்கள் சத்துருக்களை வெட்டிக் கொன்றனர். சூசான் அரண்மனையிலிலுள்ள 500 பேரையும் கொன்றனர். ஆமானின் குமாரர் 10 பேரையும் கொன்றனர். இவைகளனைத்தும் ராஜாவிடம் அறிவிக்கப்பட்டதால் திரும்பவும் ராஜா ராணியிடம் வந்து “இப்போதும் உன் வேண்டுதல் என்ன? அது உனக்குக் கட்டளையிடப்படும்; உன் மன்றாட்டு என்ன? அதின்படி செய்யப்படும் என்றான். ”அதற்கு எஸ்தர் “இன்றைய தினத்துக்குக் கட்டளையிட்டபடியே சூசானிலிருக்கிற யூதர் நாளையதினமும் செய்யவும், ஆமானின் 10 குமாரர்களின் உடலையும் தூக்குமரத்தில் தூக்கிப்போடவும் உத்தரவாக வேண்டும் என்றாள். அப்படியே செய்யும்படிக்கு ராஜா உத்தரவு கொடுத்தார். ஆமானின் 10 குமாரர்களின் உடலையும் தூக்கிப் போட்டார்கள். ஆனால் யூதர்கள் அவர்களைக் கொள்ளையிட தங்கள் கைகளை நீட்டவில்லை. மொர்தெகாயின் கீர்த்தி எல்லா நாடுகளிலும் பிரசித்தம் ஆயிற்று. மேன்மேலும் மொர்தெகாய் பெரியவனானான்.
Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates
தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்
பூரீம் பண்டிகை: (எஸ்தர் 9 17 – 32)
ஆமான் பூர் என்னும் சீட்டைப் போட்டு, பதினோரு மாதங்களுக்குப் பின் யூதர்களை அழிப்பதற்கான நாளைக் குறித்தான். இது அவனது மத நம்பிக்கையுடன் தொடர்புடையது. பூர்சீட்டு ஜோசிய நிலையில் போடப்பட்டது. அந்த ஜோதிடம் அவனுக்கு ஆபத்தாக முடிந்தது. யூதர்கள் தங்களை அழிக்கப்படும் நாளினின்று தப்புவிக்கப்பட்ட நாளைப், பண்டிகை நாட்களாக கொண்டாட மொர்தெகாய் அறிவித்தான். இந்தப் பண்டிகையை இரண்டு நாட்கள் கொண்டாடுவர். பூர் என்ற சீட்டைப் போட்டு யூதர்களை அழிக்க நினைத்ததால், அந்தப் பண்டிகை பூரிம் என்று பெயரிடப்பட்டது. சந்தர்ப்பத்திற்காக விதிக்கப்படும் சட்டதிட்டங்களையும் தேவன் பயனற்றதாக மாற்ற வல்லவர் என்பதை பூரிம் நமக்கு நினைவுபடுத்துகின்றது. இந்தப் பண்டிகையில் 3 ஜெபங்களை ஏறெடுப்பர். 1. தங்களை தகுதியுள்ளவர்களாக ஏற்றுக் கொண்டதற்காக 2. தங்கள் முன்னோர்களைக் காத்துக் கொண்டதற்காக 3. இன்னுமொரு பூரிம் கொண்டாட வேண்டும் என்பதற்காக. சத்துருக்களின் சதித்திட்டத்தை தேவன் மாற்றுவார். தூங்கிக் கொண்டிருக்கும் போதும் தேவன் நமது பின்னாலிருந்து உதவி செய்வார்.
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…
View Comments
Excellent explanation. I like all your posts.
Glory to God .. Good Work ..
Good explanation! Easy understandable explanation..