கர்த்தர் மனிதனைப் படைத்த தேவசாயல், தேவ ரூபம்: 

கர்த்தர் ஆதியாகமம் 1 26 ல் “தேவன் நமது சாயலாகவும், நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக” என்றார். ஆதாமும் ஏவாளும் தேவனுடைய சாயலாக தேவனுடைய ரூபத்தின்படியேயும் உருவாக்கப்பட்டனர். இதில் நமது என்ற வார்த்தை இரண்டு தடவை வருகிறது. அவருடைய சாயலும், அவருடைய ரூபமும் மகா உன்னதமானது. நாம் அவருடைய (sample) தான். இணையாக அல்ல. தேவன் ஆவியாயிருக்கிறார். ஒரு மனுஷனும் ஆவியைப் பார்க்க முடியாது. தேவன் ஒளியாயிருக்கிறார். அந்த ஒளியையும் ஒருவரும் பார்க்க முடியாது. தேவன் அண்டசராசரங்களையும் ஆள்கிறார். மனிதன் பூமியை மட்டும் ஆள்கிறான். இந்த சாயலின் அடிப்படையில் அவர்கள் தேவனோடு தொடர்பு கொள்ளலாம், உறவு வைத்துக் கொள்ளலாம், அவருடைய அன்பையும், மகிமையையும், பரிசுத்தத்தையும், பிரதிபலிக்கலாம். படைக்கும் போது அவர்கள் பாவம் இல்லாமலும், பரிசுத்தவான்களாகவும், ஞானம் உள்ளவர்களாகவும், சரியானவற்றை மட்டும் செய்யும் தன்மையுள்ளவர்களாகவும், (எபேசியர் 4 : 24) இருந்தார்கள்.

ஆண் பெண்ணுடைய சரீர அமைப்பு தேவனுடைய சாயலாக இருந்தது. மிருகங்களுக்கு அப்படியில்லை. ஏனென்றால் அதே சாயலில் தான் மனுஷகுமாரனும் ஒருநாள் வரப்போகிறார் என்பதால். (லூக்கா 1 : 35, பிலிப்பியர் 2:7 எபிரேயர்10: 5, மத்தேயு 26:12, 26:38, லூக்கா 23:46) தம்முடைய சாயலில் படைத்தார். மனிதனுடைய படைப்பின் தொடர்பில், மூன்று எபிரேய சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றை ஏசாயா 43 : 7ல் வரிசையாகக் காணலாம். “நான் என் மகிமைக்கென்று சிருஷ்டித்து (பாரா), உருவாக்கிப் (ஆசா), படைத்து (யாற்சர்), ” இதில் பாரா என்பது ஒன்றும் இல்லாமையிலிருந்து படைத்தார் என்பது. ஆசா என்பது வடிவமைப்பது, யாற்சர் என்பது உருவாக்குவது என்பதாகும். தேவனே சிருஷ்டித்தார், வடிவமைத்தார், உருவாக்கினார். மனிதன் படைக்கப்பட்டான் என்ற உண்மை ஆதியாகமம் 2 : 7, 21, 23 ல் பார்க்கிறோம். மனிதன் தானாக உருவாகவில்லை. உருவாக்கப்பட்டான் என்பதை இயேசு உறுதிபடுத்தியுள்ளார். (மத்தேயு 19 : 4 மாற்கு 10 : 6)

Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates

தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்

ஆதாமைத் தேவன் படைத்த விதம்: (ஆதியாகமம் 2 : 7)

மற்ற எல்லா ஜீவராசிகளையும் படைத்ததைவிட வித்தியாசமான முறையில் தேவன் மனிதனைப் படைத்தார். தெய்வீகவாழ்க்கைக்கும், மானிடவாழ்க்கைக்கும் ஒரு தனித்தன்மை வாய்ந்த ஒற்றுமையும், தொடர்பும் உண்டு என்பதைக் காட்டவும், மானிடவாழ்வு மற்ற ஜீவராசிகளைக் காட்டிலும் வித்தியாசமானது, உயர்ந்தது என்று காட்டும்படியாகவும் அவ்வாறு செய்தார். தேவன் மண்ணினாலே மனிதனை உருவாக்கி, அவனது நாசியிலே ஜீவசுவாசத்தை ஊதினார். அவன் ஜீவாத்துமாவானான். எனவே மனிதனுக்குக் கண்ணுக்குத் தெரியக்கூடிய உடலும், கண்ணுக்குப் புலனாகாத ஆன்மீக சரீரமும் உண்டென்பது புலப்படுகிறது. மனிதன் தேவனுடைய பார்வையில் மிகவும் முக்கியமானவன். மனிதனுடைய உயிரின் மூலாதாரம் தேவனே. தேவன் ஆதாமை ஆவி ஆத்துமா சரீரம் உள்ளவனாய் சிருஷ்டித்தார். தேவத்துவத்தில் பிதா குமாரன் பரிசுத்தஆவியானவர் என்று இருப்பதைப் போன்று, மனிதன் ஆவி ஆத்துமா சரீரமாக இருக்கிறான் என்று கருதலாம். 1 தெசலோனிக்கேயர் 5 : 23, 1: 26, 27 ல் மனிதன் படைக்கப்பட்டான் என்ற உண்மையும், ஆதியாகமம் 2 :7, 21, 23 ல் அவன் எவ்வாறு படைக்கப்பட்டான் என்றும் கூறப்பட்டுள்ளன. 

தேவன் ஏவாளைப் படைத்த விதம்: (ஆதியாகமம் 2 : 21 – 25)

ஆதியாகமம் 2 :18 ல் “தேவனாகிய கர்த்தர் மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார்”. அவளை உண்டாக்குவதற்கு முன், ஆதாமின் அறிவை அதிகரிக்க மிருகங்களுக்கும், பறவைகளுக்கும் பெயரிடச் சொல்லி ஆதாமிடம் கொண்டுவந்தார். ஆதாம் அந்த ஜீவஜந்துக்களுக்குப் பெயரிட்டான். அப்பொழுது கர்த்தர் ஆதாமுக்கு அயர்ந்த நித்திரையை வரப்பண்ணி, அவன் நித்திரையாயிருக்கும் போது, அவனுடைய விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து, அந்த இடத்தைச் சதையினால் அடைத்தார். மனுஷரிலிருந்து எடுத்த எலும்பினால் மனுஷியை உருவாக்கினார். அந்த மனுஷியை ஆதாமினிடத்தில் கொண்டு வந்தார். ஆதாம் அவளைப் பார்த்தவுடன் அவனுடைய பேச்சு கவிதை வடிவில் மாறி, “இவள் என் எலும்பின் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள்; இவள் மனுஷனில் எடுக்கப்பட்டபடியால் மனுஷி என்னப்படுவாள் என்றான்.” “இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்” என்றும் தேவன் கூறினார். தேவன் ஆதாமையும், ஏவாளையும் சிறு குழந்தையாக அல்ல, பெரிய மனுஷனாக, பெரிய மனுஷியாகத் தான் படைத்தார். அவர்கள் இருவரும் நிர்வாணிகளாக இருந்தும் வெட்கப்படவில்லை. 

ஏதேன் தோட்டம்: (ஆதியாகமம் 2 : 8 – 14)

கர்த்தர் ஏதேன் என்ற இடத்தில் ஒரு தோட்டத்தை (English bible) உண்டாக்கி, மனுஷனை அதில் வைத்தார். ஏதேன் தோட்டம் இதெக்கேல், ஐபிராத்து நதிகளின் சமவெளியிலிருந்தது. கர்த்தர் அந்த தோட்டத்தில் முதலாவது பார்வைக்கு அழகான, புசிப்பதற்கு இனிமையான சகலவித விருட்சங்களையும், ஜீவவிருட்சத்தையும், நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தையும் பூமியில் முளைக்கப் பண்ணினார். ஜீவவிருட்சமானது நித்தியஜீவனோடு தொடர்புடையது. இது சரீரமரணத்தை இல்லாமற் செய்வதாயிருக்கலாம். வெளிப்படுத்தல் 2 : 7, 22 : 2 ல் புதிய வானத்திலும், புதிய பூமியிலும் ஜீவவிருட்சத்தின் கனி கிடைக்கும் என்று பார்க்கிறோம். இந்தக் கனியை உண்பதற்கு அவனுக்கு உரிமை அளித்தும், ஆதாம் அதை உண்பதற்குத் தவறி விட்டான். நன்மைதீமை அறியப்பட்ட விருட்சமானது தேவனுடைய வார்த்தையில் ஆதாமுக்கிருக்கும் விசுவாசத்தையும், அவனுடைய கீழ்படிதலையும் சோதிப்பதற்காக வைக்கப்பட்டது. கர்த்தர் அந்தத் தோட்டத்தில் தண்ணீர் பாய ஒரு பெரிய நதியை உண்டுபண்ணி, அதிலிருந்து நான்கு பெரிய ஆறுகளைப் பிரிந்து போகப் பண்ணினார். அதற்கு பைசோன், கீகோன், இதெக்கேல், ஐபிராத்து என்று பெயரிட்டார். அவைகள் ஆலிலா தேசத்தையும், எத்தியோப்பியா தேசத்தையும், அசீரியாவின் கிழக்கு தேசத்தையும் சுற்றி ஓடியது.

ஆதாமுக்குக் கர்த்தர் கொடுத்த வேலை, கட்டளை: (ஆதியாகாமம் 2 : 16,17) 

தேவனாகிய கர்த்தர் தாம் உருவாக்கிய மனிதனை, ஏதேன் தோட்டத்திற்கு அழைத்துக் கொண்டு வந்து, அதைப் பண்படுத்தவும், காக்கவும் வைத்தார். தேவன் தோட்டத்தைப் பண்படுத்தக் கூறினார். ஆனால் அங்கு கடப்பாரை, மண்வெட்டி எதுவும் அப்போது கிடையாது. தேவன் தன் வார்த்தையால் உலகத்தைப் படைத்ததைப் போல, ஆதாமுக்கு தன் நாவின் அதிகாரத்தைக் கொடுத்திருப்பார். அந்த அதிகாரத்தினால் ஆதாம் தோட்டத்தைப் பண்படுத்தியிருப்பான். மேலும் கர்த்தர் மனிதனிடம், தோட்டத்திலிலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கலாம். ஆனால் நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்க வேண்டாம், அதைப் புசிக்கும் நாளிலே சாகவே சாவாய் என்று எச்சரித்தார். இந்தக் கட்டளையைத் தேவன் கொடுத்ததற்குக் காரணம், மனுஷன் கர்த்தருடைய கட்டளைக்குக் கீழ்ப்படிகிறானா என்று சோதிக்க. ஏன் அந்தக் கனியைப் புசிக்கக் கூடாது என்று தேவன் கூறவில்லை. சாகவே சாவாய் என்று கர்த்தர் கூறுகிறார். அதுவரை சாவு என்றால் என்ன என்று அந்த மனுஷனுக்குத் தெரியாது. கர்த்தர் அந்த மனிதனிடம் பேசியதால், ஒரு மொழியைத் தேவன் உருவாக்கியிருப்பார். அதை அவன் புரியும் ஞானத்தையும் கொடுத்திருப்பார்.

சர்ப்பமும், ஏவாளும்: (ஆதியாகமம் 3 : 1 – 5)

ஆதாமிடம் தேவன் தோட்டத்தைக் காக்கக் கூறினார். காட்டு மிருகங்களை ஆதாம் உள்ளே வரவிடாமல் காத்திருக்க வேண்டும். அதில் அவன் தவறி விட்டான். ஆனால் அவைகளை ஆண்டு கொள்ளுங்கள் என்று தேவன் கட்டளையிருந்தார். கர்த்தர் உண்டாக்கின சகல காட்டு ஜீவன்களைப் பார்க்கிலும், சர்ப்பமானது தந்திரமுள்ளதாயிருந்தது. வெளிப்படுத்தல் 12: 9, 14,15, 20: 2 ல் சாத்தானை பாம்பு என்று கூறப்பட்டிருக்கிறது. சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி “சகல விருட்சங்களின் கனியையும் தேவன் புசிக்க வேண்டாம் என்று சொன்னதுண்டோ என்று கேட்டது.” தேவன் அவ்வாறு கூறவே இல்லை. தேவன் நடுவிலுள்ள விருட்சத்தின் கனியை மட்டும் தான் புசிக்க வேண்டாம் என்று கூறினார். ஆனால் ஸ்திரீ “தேவன் அதைப் புசிக்கவும், தொடவும் வேண்டாம்” என்று தேவன் கூறியதாகக் கூறினாள். தேவன் “அதைப் புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்றார்” ஆனால் சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி “நீங்கள் சாகவே சாவதில்லை.” என்றது. சாத்தான் தேவனோடு அவர்களுக்குள்ள உறவைக் குறைக்க, தேவனுடைய வார்த்தையில் சந்தேகத்தை எழுப்புகிறான். ஸ்திரீ ஒத்துக்கொள்ளும் வரை சர்ப்பம் பேசியது. மேலும் சர்ப்பம் அவளிடம் “நீங்கள் அதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப் போல இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார்.” என்றது. சர்ப்பம் “நீங்கள்” என்ற சொல்லைப் பயன்படுத்தி இருப்பதால், ஆதாமும் அங்கேயே இருந்திருக்கலாம். ஆதாம் பேச்சைக் கேட்டு புசிக்காதே, சர்ப்பத்தின் பேச்சைக் கேட்காதே, தேவன் வருகிற வரை பொறுத்திரு என்று கூறியிருக்கலாம். அவன் அதைச் சொல்லத் தவறி விட்டான்.

Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates

தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்

ஸ்திரீ செய்த செயல்: (ஆதியாகாமம் 3 : 6, 7) 

ஸ்திரீக்கு வைத்த சோதனை என்னவென்றால், சிருஷ்டிகரின் சொல்லைக் கேட்கிறாளா அல்லது சிருஷ்டியின் சொல்லைக் கேட்கிறாளா என்பது தான். ஸ்திரீ சர்ப்பத்தின் பேச்சில் கவரப்பட்டு, அந்த விருட்சம் பார்வைக்கு இன்பமாக இருக்கிறதென்றும், புசிக்க நல்லதாக இருக்குமென்றும், புத்தியைத் தெளிவுக்கும், என்றெண்ணி படிப்படியாகச் செயல்பட்டாள். ஸ்திரீயானவள் அதைப் பறித்தாள், புசித்தாள், அதை ஆதாமுக்கும் கொடுத்தாள். ஆதாமும் அதை வாங்கிப் புசித்தான். தேவனுடைய கட்டளையை மீறுகிறோமே என்ற பயம் ஆதாமுக்கு வரவில்லை. ஸ்திரீ புசித்தவுடன் அவளுடைய கண்கள் திறக்கப்படவில்லை. முதலில் அவளுடைய கண்கள் திறந்திருந்தால் ஆதாமுக்கு அதைக் கொடுத்திருக்க மாட்டாள். ஆதாம் புசித்த பின் தான் அவர்கள் இருவருடைய மாம்சத்தின் கண்கள் திறக்கப்பட்டது. தேவன் கூறிய ஆவிக்குரிய மரணம் அவர்களுக்கு நேர்ந்தது. ஆவிக்குரிய தேவனைப் பார்க்கும் கண்கள் மறைந்து, மனசாட்சி பிறந்தது. மாம்சத்தின் கண்கள் திறந்தவுடன் தாங்கள் நிர்வாணிகள் என்று உணர்ந்து, அத்தி இலைகளினால் அரைக்கச்சைகளை உண்டு பண்ணி அணிந்தனர்.

ஆதாமும், கர்த்தரும்: (ஆதியாகமம் 3 : 8 -13) 

ஆதாமிடம் தேவன் கேட்ட முதல் கேள்வி “ஆதாமே நீ எ ங்கே இருக்கிறாய்” இது வேதத்தின் இரண்டாவது கேள்வி. தேவனுக்குத் தம்மோடு, தம்முடைய சொல்லைக் கேட்டிருந்த அவர்கள், இப்பொழுது யாருடைய சொல்லைக் கேட்டு என்ன நிலைமையில் இருக்கிறார்கள் என்று நன்றாகத் தெரியும். ஆனாலும் அவர்கள் வாயிலிருந்து வரவழைக்கக் கேள்வி கேட்டார். ஆதாம் கர்த்தருடைய வார்த்தையை மீறின பின்பும், கர்த்தருடைய பாதத்தைத் தேடி வரவில்லை. அவர்களைத் தேடி தேவன் வந்தார். பாவத்தால் தேவனை விட்டு விலகி, அவர்களிருவரும் விருட்சங்களுக்குள் ஒளிந்து கொண்டனர். தேவமகிமையானது விலகி, பாவம் என்ற உணர்வு தோன்ற ஆரம்பித்தது. அவர்களுடைய பாவம் அனைத்து மக்களினத்துக்கும் பரவியது. கர்த்தரிடம் ஆதாம் தான் நிர்வாணமாக இருப்பதால் பயந்து ஒளிந்து கொண்டேன் என்றவுடன், தேவன் “நீ நிர்வாணி என்று உனக்குக் கூறியது யார் என்றும், நான் உனக்குப் புசிக்கக் கூடாது என்று சொன்ன கனியைப் புசித்தாயா” என்றும் கேட்டார். 

கர்த்தர் எல்லா விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம். ஆனால் நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியை மட்டும் புசிக்க வேண்டாம் என்று கூறியிருந்தார். ஆனால் அவர்கள் இருவரும் ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்கவில்லை. புசிக்கக் கூடாது என்ற கனியைப் புசித்தனர். மேலும் ஆதாம் நீங்கள் என்னுடனே இருக்கும்படி கொடுத்த ஸ்திரீ தான் அதை எனக்குக் கொடுத்தாள் என்று கர்த்தர் மேலும், ஸ்திரீயின் மேலும் பழியைப் போட்டான். ஸ்திரீயிடம் கேட்ட போது, சர்ப்பம் என்னை வஞ்சித்தது, நான் புசித்தேன் என்றாள். ஏவாள் வஞ்சிக்கப்பட்டாள். ஆதாம் மீறுதலுக்குட்பட்டான். பாவத்துக்கு சாக்குபோக்கு இல்லை. பிறர் மீதோ, சூழ்நிலையின் மீதோ, சாத்தானின் மீதோ, குற்றம் சாட்டினாலும் நியாயத்தீர்ப்பின் போது அவைகள் செல்லாது. அவரவர் பாவத்தை அவரவரே சுமக்க வேண்டும்.

கர்த்தர் கொடுத்த தண்டனைகள்: (ஆதியாகாமம் 3 : 14 -21) 

கர்த்தர் முதன்முதலில் சர்ப்பத்துக்குத் தான் தண்டனை கொடுத்தார். சர்ப்பத்தை சபிக்கப்பட்ட ஜந்துவாக இருப்பாய் என்றும், வயிற்றினால் தான் நகருவாய் என்றும், உயிரோடிருக்கிறவரை மண்ணைத் தான் தின்னபாய் என்றும் கட்டளையிட்டார். மேலும் சாத்தானின் வார்த்தையைக் கேட்கிற மக்களுக்கும், தேவனுடைய வார்த்தையைக் கேட்கிற மக்களுக்கும் பகையை உண்டாக்குவேன் என்ற பொருளில், “உனக்கும் ஸ்திரீக்கும் உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன்” என்றார். இங்கு குறிப்பிட்ட ஸ்திரீயின் வித்து இயேசு. இது இயேசுவைப் பற்றி வேதத்தில் கூறிய முதல் தீர்க்கதரிசனம். இயேசு சாத்தானின் தலையை நசுக்குவார் என்றும், சாத்தான் இயேசுவின் குதிங்காலை நசுக்குவாய் என்றும் கூறப்பட்டுள்ளது. இயேசுவை சிலுவையில் அறைந்ததையும், இரத்தம் சிந்தியதையும் இது குறிக்கும்.

ஆதாம் ஏவாளின் வீழ்ச்சியின் மூலம், சாத்தான் இந்த உலகத்தின் மீது அதிகாரம் பெற்று விட்டான். தேவன் நமக்காகத் தன்னுடைய குமாரனைத் தரச்சித்தம் கொண்டார். ஸ்திரீக்கு கொடுத்த சாபம் “கர்ப்பத்திலிருந்து குழந்தை பிறக்கும் போது வேதனையோடு பிள்ளை பெறுவாய் என்றும், அவளுடைய ஆசை புருஷனைப் பற்றியிருக்கும் என்றும், புருஷன் அவளை ஆண்டு கொள்ளுவான்” என்றும் கூறினார். கர்த்தர் ஆதாம் செய்த தவறினால் “பூமி சபிக்கப்பட்டிருக்கும் என்றும், அந்த பூமி முள்ளும் குருக்கையும் முளைப்பிக்கும். அதனால் வருத்தத்தோடு அதன் பலனைப் புசித்து, வெளியின் பயிர் வகைகளைப் புசிப்பாய்” என்றார். மேலும் “நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால் நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய். நீ மண்ணாயிருக்கிறாய் மண்ணுக்குத் திரும்புவாய்” என்றார். 

இவ்வாறு தேவன் சபித்த பின்பும், ஆதாம் தன் மனைவிக்கு ஏவாள் என்று பேரிட்டான். அதுவரை மனுஷி என்று தான் உள்ளது. ஏனென்றால் அவள் ஜீவனுள்ளோருக்குத் தாயானவள். தேவனது கட்டளையை இருவரும் மீறின பின்பும் தேவன் அதை நினைக்காமல், தோல் உடைகளை உண்டாக்கி அவர்களுக்கு உடுத்தினார். ஆதாம் பண்ணிய அத்தியிலைகளினால் பண்ணப்பட்ட உடையிலிலுள்ள சருகுகளும், இலைகளும் உதிர்ந்துவிடும். அவர்கள் அரைகச்சையாகத் தான் செய்தனர். அந்த உடை உடம்பை மறைந்ததே தவிர, மூடவில்லை. தேவன் கொடுத்த உடை நிரந்தரமானது, உடம்பை மூடக் கூடியது. உடையைத் தயாரிக்கத் தேவன் ஆட்டுக்குட்டியைப் பலியிட்டிருப்பார். அவர்களுடைய பாவத்திற்கான நிவாரணபலி அது. இதில் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியாக இயேசுவை ஆதியாகமத்தில் பார்க்கிறோம்.

ஆதாமைத் தேவன் ஏதேனை விட்டு அனுப்பினார்: (ஆதியாகாமம் 3 : 22 – 24)

ஆதாம், ஏவாள் தங்களைத் தேவனுக்குச் சமமாக்கி, தங்கள் தகுதி நிலைகளை தாங்களே தீர்மானிக்க முயற்சித்தனர். பாவத்தில் விழுந்து விட்ட மனிதன் நோயுடனும், வேதனையுடனும், தொடர்ந்து குழப்பத்துக்குள்ளாவான் என்பதால் அவர்களை வெளியேற்ற தேவன் நினைத்தார். அதற்குக் காரணமும் அவரது அன்பே. ஆதாமுக்கும், ஏவாளுக்கும் தேவனிடமிருந்த முழுமையான உறவு இழக்கப்பட்டு விட்டது. வெளியே அவர்களது வாழ்க்கை சோதனைகளும், வேதனைகளும் நிறைந்ததாக இருக்கப் போவதால், தேவனைச் சார்ந்து வாழும் வாழ்க்கை ஆரம்பமானது. கர்த்தர் ஜீவவிருட்சத்துக்குப் போகும்  வழியைக் காவல் செய்ய கேருபீன்களையும், வீசிக் கொண்டிருக்கிற சுடரொளிப் பட்டயத்தையும் வைத்தார். கேரூபீன்கள் தேவபிரசன்னத்தில் வாழும் உயிர்கள். அவைகள் செய்யும் பணிகளில் ஒன்று தான் ஜீவவிருட்சத்துக்குப் போகும் வழியைப் பாதுகாப்பது. இப்போது ஜீவவிருட்சம் பரதீசில் உள்ளது. 

Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates

தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்

ஆதாமுக்குத் தேவன் கொடுத்த ஆசிகள்: (ஆதியாகமம் 1:26 – 28, 2 :8 -17, 22,3:21)

  1. தேவசாயலாக, தேவரூபமாக ஆதாமை சிருஷ்டித்தார்.
  2. அவர்களுக்கு பூமியனைத்தையும், பூமியின் மேல் ஊரும் பிராணிகளையும் ஆளும் பாக்கியமளித்தார்.
  3. பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி ஆளும் அதிகாரத்தைக் கொடுத்தார்.
  4. அழகான ஏதேன் தோட்டத்தைக் கொடுத்தார்.
  5. ஏற்ற துணையைத் தேவனே சிருஷ்டித்துக் கொடுத்தார்.
  6. ஜீவவிருட்சத்தைக் கொடுத்தார்.
  7. சாகாலிருக்கும் பாக்கியமளித்தார்.
  8. தோல் உடைகளை உண்டாக்கி அவர்களுக்கு உடுத்துவித்தார்.

ஆதாமும், ஏவாளும் பாவத்தினால் இழந்தவைகள்: (ஆதியாகமம் 2 :17,3 : 8,10,11,16 – 19,24) 

  1. ஆதாமும், ஏவாளும் நித்தியஜீவனை இழந்தனர்.
  2. தேவனோடுள்ள ஐக்கியத்தை இழந்தனர்.
  3. தேவ சமாதானத்தை இழந்தனர்.
  4. தேவ மகிமையை இழந்தனர்.
  5. தெய்வீக சந்தோஷத்தை இழந்தனர்.
  6. பரலோகப் பிரவேசத்தை இழந்தனர்.
  7. ஏதேன் ஜீவியத்தை இழந்தனர்.

முடிவுரை: 

ஆதாமுக்குத் தேவன் எல்லா ஆசிகளும் நிறைந்த ஏதேன் தோட்டத்தையும், தன்னோடு உலாவும் பாக்கியத்தையும், ஆளுகையையும், வல்லமையையும் கொடுத்திருந்தார். ஆனால் தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியாமல் பாவத்திற்குட்பட்டு அத்தனையும் இழந்தான். ஆதாமின் வாழ்க்கை நமக்கு ஒரு பாடமாகத் திகழட்டும். நாம் ஆதாமைப் போலில்லாமல் தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து, தேவனுடைய ஆசிகளைப் பெற வாஞ்சிப்போம்.

Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates

தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்

Sis. Rekha

Share
Published by
Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago