நோவாவின் தலைமுறை: (ஆதியாகமம் 5 : 6 – 32)

  1. ஆதாம் சேத்தைப் பெற்றான். சேத் ஏனோஸைப் பெற்றான்.
  2. ஏனோஸ் கேனானைப் பெற்றான். கேனான் மகலாலெயேலைப் பெற்றான்.
  3. மகலாலெயேல் யாரேத்தைப் பெற்றான். யாரேத் ஏனோக்கைப் பெற்றான்.
  4. ஏனோக் மெத்தூசலாவைப் பெற்றான். மெத்தூசலா லாமேக்கைப் பெற்றான்.
  5. லாமேக் நோவாவைப் பெற்றான். நோவா சேம், காம், யாப்பேத்தைப் பெற்றான்.

Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates

தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்

தேவன் பூமியை அழிக்க நினைக்கக் காரணம்: ( ஆதியாகமம் 6 : 4, 5, 11, 12 ) 

 தேவன் மேல் விசுவாசம் வைக்காமல், பாவம் நிறைந்த வாழ்க்கையில் மூழ்கி, மாம்சத்தின் இச்சைகளின்படி நடந்து, தேவனுக்குப் பிரியமில்லாத காயீனின் சந்ததியான மனுஷ குமாரத்திகள், தேவன் மேல் விசுவாசம் வைத்து, தேவனுக்குப் பிரியமானவர்களாக, தேவனுடைய நீதியையும், பரிசுத்தத்தையும் விரும்பிய சேத்தின் சந்ததியாரான தேவ குமாரர்களோடு கலந்தனர். புதிய ஏற்பாட்டில் விசுவாசிகளைத் தேவகுமாரர்கள் என்று அழைக்கின்றனர். (யோவான் 1 :12,ரோமர் 8 :14) தேவதூதர்கள் ஆவியாயிருக்கிறார்கள். அவர்களுக்குச் சரீரம் கிடையாது. உடலும், உறுப்பும் கிடையாது. மனுஷனைப் போலப் பலுகிப் பெருகும் ஆற்றலும் கிடையாது. எபிரேயர்1 : 4,5 ல் தேவதூதர்கள் தேவகுமாரன் அல்ல என்றுள்ளது. 

காயீனின் சந்ததி, பலவானான சேத்தின் சந்ததியோடு கலந்ததால், அவர்களும் பலசாலிகளாக எழும்ப ஆரம்பித்தனர். விசுவாசிகள் அவிசுவாசிகளோடு சேர்ந்தனர். ஆதியாகமம் 6 : 4 ல் அங்கு இராட்சதர்கள் இருந்தார்கள் என்றிருக்கிறது. (மோசே கானான் எப்படியிருக்கிறது எனப் பார்க்க கானானுக்குள் தன்னுடைய ஆட்கள் 12 பேரை அனுப்பினான். அவர்கள் அங்கு போய்ப் பார்த்து விட்டு எண்ணாகாமம் 13 : 33 ல் “அங்கே இராட்சதப் பிறவியான ஏனோக்கின் குமாரராகிய இராட்சதரையும் கண்டோம் என்றனர்.”) மனுஷர்கள் அக்கிரமம் பெருகி, அவர்களின் இருதயம் பொல்லாப்பாய் இருந்ததையும், பூமியானது சீர்கெட்டுப் போய், நிறைந்திருப்பதையும், ஜனங்கள் தங்கள் வழிகளைக் கெடுத்துக் கொண்டிருப்பதையும் பார்த்து, தேவன் அதை அழிக்க நினைத்தார்.

கர்த்தரின் கோபம்: ( ஆதியாகமம் 6 : 6, 7, 13 ) 

கர்த்தர் பூமியிலே மனுஷரை உண்டாக்கியதற்காக அவருடைய இருதயத்தில் விசனப்பட்டு மனஸ்தாபப்பட்டார். கர்த்தர் தான் சிருஷ்டித்த மனுஷன் முதற்கொண்டு மிருகங்கள், ஊரும் பிராணிகள், ஆகாயத்துப் பறவைகள் அனைத்தையும் நிக்கிரகம் பண்ணுவேன் என்றார். “நான் எல்லோரையும் பூமியோடுங்கூட அழித்துப் போடுவேன் என்றார்.” 

நோவாவின் குடும்பம்: ( ஆதியாகமம் 5 : 25, 29, 32 ) 

நோவாவின் வீடு யூப்பிரட்டிஸ் நதியோரம் உள்ள பாரா என்ற ஊரில் இருந்ததாக பாபிலோனிய பரம்பரைச் செய்தி கூறுகிறது. 

இந்த பாரா என்ற ஊர் ஏதேனிலிருந்து 70 மைல் அல்லது 112 கிலோமீட்டர் தூரத்தில் இருந்தது. ஆதாமின் பத்தாவது தலைமுறையில் நோவா பிறந்தார். நோவாவின் தந்தையின் பெயர் லாமேக்கு. இவர் மெத்தூசலாவின் மகன். லாமேக்கு 182 வது வயதில் கர்த்தர் சபித்த இந்த பூமியில் தனக்கு உண்டான வேலையிலும், தன் கைகளின் பிரயாசத்திலும் தேற்றுவான் என்று சொல்லி அவனுக்கு நோவா என்று பெயரிட்டான்.

நோவாவின் 498 வது வயதில் ஏனோக்கின் மகளான நாமா என்ற பெண்ணைத் திருமணம் செய்தார். அவளுடைய வயது 580. இருவருக்குமுள்ள வயது வித்தியாசம் 82. நோவாவின் 500 வது வயதில் சேம், காம், யாப்பேத் என்ற பிள்ளைகளைப் பெற்றெடுத்தான். மெத்தூசலாவின் மகனான எலியாக்கீமின் 3 குமாரத்திகளைத் தன் பிள்ளைகள் மூவருக்கும் திருமணம் செய்து வைத்தான். 

Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates

தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்

நோவாவின் குணங்கள்: ( ஆதியாகமம் 6 : 8, 9, 19 – 22, 7 : 7, 8, 8 : 20 ) 

நோவா தீய ஜனங்களின் மத்தியில் உத்தமனாயிருந்தான். நோவா அந்தக் காலத்தில் இருந்த ஜனங்களுக்குள் நீதிமானாயிருந்தான். தேவனோடு சஞ்சரித்துக் கொண்டிருந்தான். நோவா தேவனுடைய கண்களில் கிருபை பெற்றவன். நோவா தேவநீதியைப் பிரசங்கித்தவன். நோவா காணாதவைகளைக் குறித்து தேவஎச்சரிப்புப் பெற்றவன். (எபிரேயர்11:7) தேவனுடைய வார்த்தையை விசுவாசித்து அதன்படி செயல்பட்டான். தேவ கட்டளைக்குக் கீழ்ப்படிந்தான். நோவா பயபக்தியுள்ளவன். நோவாவின் காலத்தில் கடலில்லை, கப்பலைப் பார்த்ததில்லை, ஜலப்பிரளயத்தைப் பார்த்ததில்லை. தேவன் சொல்லச்சொல்ல அதை அப்படியே செய்தான். எத்தனை நாள் தங்க வேண்டும் என்று தெரியா விட்டாலும், துஷ்ட மிருகங்களோடு எவ்வாறு ஜீவிப்போம் என்று தெரியா விட்டாலும், கர்த்தர் பார்த்துக் கொள்வார் என்ற விசுவாசம் அவனுக்கிருந்தது. பேழையை விட்டு வெளியே வந்த பின், கொஞ்சம் மிருகங்கள் தானே தன்னிடமுள்ளது என்று எண்ணாமல், அதிலுள்ள சுத்தமான மிருகங்களிலும், சுத்தமான சகல பறவைகளிலும் சிலவற்றைத் தெரிந்து கொண்டு அவைகளைப் பலிபீடத்தின் மேல் தகனபலியாகப் பலியிட்டான்.

நோவாவுக்கு தேவன் காட்டிய கிருபை:

முழு உலகத்தையும் தேவன் அழிக்க நினைத்த போதும், மிருகங்களைக் கூட ஒட்டு மொத்தமாக ஜனங்களில் அக்கிரமத்திற்காக அழிக்க நினைத்த போதும், அந்த பூமியில் ஒரு மனுஷனை நினைத்து அவன் மூலம் பூமியைப் பெருக வைத்தார். அவன்தான் நோவா. நோவாவுக்கு தேவனுடைய கண்களில் கிருபை கிடைத்தது. (ஆதியாகமம் 6 : 8) கர்த்தரின் பார்வைக்கு மறைவான சிருஷ்டி எதுவும் இல்லை. சகலமும் கர்த்தருடைய கண்களுக்கு முன்பாக நிர்வாணமாயும், வெளியரங்கமாயும் இருக்கிறது. (எபிரேயர் 4 : 13) நீதிமானானாலும், பாவிகளானாலும் கர்த்தரின் நியாயத்தீர்ப்புக்கு முன் நிற்க வேண்டும். மற்ற மதங்கள் நரகம் என்று கூறுவர். ஆனால் அவர்களுக்கு நியாயத்தீர்ப்பு என்ற ஒன்று இல்லை. கிருபை என்றால் தேவன் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் தேவன் கொடுக்கிற ஈவு. தேவனுடைய கிருபையை மனிதனால் விலை கொடுத்து வாங்க முடியாது. கர்த்தர் யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம். இது தேவனிடமிருந்து மனுஷனுக்கு வரக்கூடியது

தேவனோடு சஞ்சரித்தல்:

 தேவனோடு சஞ்சரிப்பது என்பது தேவனும் நாமும் இணைபிரியாமல் வாழ்வது. தேவனோடு சஞ்சரிப்பதால் இருதயம் தேவனோடு இசைந்திருக்கும். சஞ்சரித்தல் என்பது தினம் தினம் நடப்பது. சஞ்சரிப்பவரின் சிந்தை தேவனை நேசிக்கும். தேவனோடு சஞ்சரிப்பவர்களின் ஆத்துமா தேவனோடு கூட பேச, பழக, ஜெபிக்க, அவரோடு கூட நடக்க, வாஞ்சிக்கும்.தேவனோடு சஞ்சரிக்கும் போது அறிவு பெருகுகிறது. வேதத்தின் ஆழங்கள் புரிகிறது. தேவதரிசனம் கிடைக்கிறது. தேவவெளிப்பாடுகளைப் பெற முடிகிறது.உலகத்தின் ஆசாபாசங்கள் பற்றற்றுப் போகிறது. பெயர் புகழ் வேண்டாம் என்ற எண்ணம் வருகிறது. பூமிக்குரிய வாழ்க்கை சின்னதாகவும், பரலோக வாழ்க்கை பெரியதாகவும் தெரிகிறது. சுவிசேஷம் அறிவிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது.ஆவிக்குரிய வளர்ச்சியைக் கொடுக்கிறது. உலகத்தின் அந்தகார லோகாதிபதிகளை ஜெயிக்க முடிகிறது.வானத்துக்குரியவர்களாக நம்மை மாற்றுகிறது. ஊழியத்தின் ரகசியமும் இதுதான்.

Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates

தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்

பேழையை தேவன் உண்டாக்க சொன்ன விதம்: ( ஆதியாகமம்: 6 : 15, 16, 7 : 16 )

தேவன் கொப்பேர் மரத்தால் பேழையை உண்டாக்கச் சொன்னார். எபிரேய பாஷையில் கொப்பேர் என்றால் பாவ நிவர்த்தி என்று பொருள். தேவன் பாவ நிவர்த்தி பண்ணுகிற மரத்தால் பேழையை உண்டாக்கு என்றார். பேழை என்றால் மனிதனின் சரீரம் என்று பொருள். இந்த பேழை கிறிஸ்துவைக் குறிக்கும் முன் அடையாளம். இயேசுவாகிய சரீரத்தில் பிரவேசித்தால் தான் நாம் பிழைக்க முடியும். இது ஆவிக்குரிய அர்த்தமாக இயேசுவின் சரீரத்தை அடையாளப்படுத்துகிறது. பேழையின் உள்ளும் புறமும் கீல் பூசச் சொன்னார். கொப்பேர் மரத்தை லேசாக வெட்டின உடன் கீல் வரும். அந்த கீலினால் அந்த மரம் பாதுகாக்கப்படுகிறது. அந்தக் கீலை பேழையில் பூசும்போது பேழையும் பாதுகாக்கப்படும். இப்போது அந்த கொப்பேர் மரம் இல்லை. தேவன் ஏதேன் தோட்டத்தில் ஆதாமுக்கு வைத்தது நன்மை தீமை அறியத்தக்க மரம். மோசேயிடம் உடன்படிக்கை செய்யப் பயன்படுத்தச் சொன்ன மரம் சித்தீம் மரம்.

பேழையின் நீளம் முந்நூறு முழம் இருக்க வேண்டும் என்றார். வேதத்தில் கிதியோன் 300 பேரைக் கூட்டிக் கொண்டு போய் வெற்றி பெற்றான். சிம்சோன் 300 நரிகளை பிடித்து வாலோடு வால் சேர்த்து பெலிஸ்தியரின் வேளாண்மையை அழித்து வெற்றி பெற்றான். அபிசாய் ஒரே நேரத்தில் 300 பேரைக் கொன்று வெற்றி பெற்றான். 300 வருகிற இடங்களில் எல்லாம் தனிமனிதனின் வெற்றியைப் பார்க்கிறோம்.பேழையின் அகலம் 50 முழம் இருக்க வேண்டும் என்று தேவன் கூறினார். 50 என்பது நியாயப்பிரமாணத்தை அடையாளப்படுத்துகிறது. இஸ்ரவேல் எகிப்து தேசத்திலிருந்து வெளியே வந்த 50 ஆவது நாளில் தான் நியாயப்பிரமாணம் அருளப்பட்டது.பேழையின் உயரம் 30 முழம் இருக்க வேண்டும் என்று தேவன் கூறினார். 30 வெள்ளிக் காசுக்குத் தான் ஆட்டுக்குட்டி வாங்கப்படுகிறது. அந்த இரத்தத்தால் பாவமன்னிப்பு கிடைக்கிறது. (லேவியராகமம் 5 :15,16)

அந்தப் பேழையில் ஒரு ஜன்னலையும், கதவையும் உண்டு பண்ணச் சொல்லி, மூன்று அடுக்குகளையும் பண்ணச் சொல்லி, தேவன் கட்டளையிட்டார். அந்த பேழையில் சதுரமான மூலைகள் கிடையாது. இதன் கொள்ளளவு 300 பெரிய லாரிகளின் கொள்ளளவுக்குச் சமமானது.நோவா பேழையைக் கட்டி முடிக்க 100 ஆண்டுகள் ஆனது.பேழைக்குள் எந்த எஞ்சினும் டீசல், பெட்ரோல் எதுவும் கிடையாது.பேழையின் கதவைத் தேவனே அடைத்தார். தேவன் மனிதர்களிடம் எவ்வளவு கரிசனை உள்ளவர் என்று தேவனின் இந்த செயலில் இருந்து அறிகிறோம். பேழை தங்கின மலை அரராத் என்ற மலை. இது துருக்கி தேசத்தில் உள்ளது. 

பேழைக்குள் போனவர்கள்: (ஆதியாகமம் 6 : 21, 7 : 2, 3, 13 -16)

நோவாவும், மனைவியும், நோவாவின் 3 குமாரர்களும், 3 குமாரர்களின் மனைவிகளும் உள்ளே பிரவேசித்தனர்.சுத்தமான சகல மிருகங்களில் ஆணும் பெண்ணுமாக 7 ஜோடிகளும், சுத்தமில்லாத மிருகங்களில் ஆணும், பெண்ணுமாக ஓவ்வொரு ஜோடும், ஆகாயத்துப் பறவைகளில் சேவலும், பேடுமாக எவ்வேழு ஜோடிகளும், ஊறும் பிராணிகளும், சகலவித பட்சிகளும் உள்ளே பிரவேசிக்கச் சொல்லி தேவன் கட்டளையிட்டார். தேவன் கட்டளையிட்டபடியே நோவா செய்தான்.நோவாவின் குடும்பத்தாருக்கும், உள்ளே வரவிட்ட அனைத்து ஜீவ ராசிகளுக்கும் போஜன பதார்த்தங்களைச்  சேர்த்து வைக்கச் சொல்லி தேவன் கூறினார். நோவா அதைச் செய்தான்.(நோவா வெளியே வந்த பின் சுத்தமானதில் எடுத்து ப் பலியிடுவான் அப்போது குறைந்து விடும் என்பதால்ஆதியாகமம் 6 : 20 ல் தேவன் வகை ஒன்றுக்கு ஒவ்வொரு ஜோடு என்றவர் ஆதியாகமம் 7 : 2 ல் எவ்வேழு ஜோடு என்று மாற்றினதைப் பார்க்கிறோம்.) தேவன் எல்லாவற்றையும் சரியாகத் திட்டமிடுகிறவர். மனுஷனின் நிகழ்காலத்தை வைத்து எதிர்காலத்தை யோசிக்கிறவர்.கர்த்தர் அவர்களை உள்ளே விட்டுக் கதவை அடைத்தார். 

ஜலப்பிரளயம்: ( ஆதியாகமம் 7 :4, 11, 12, 17 – 21, 23, 24 )

ஜலப்பிரளயம் பூமியில் உண்டானபோது நோவாவின் வயது 600. நோவாவின் 600 ஆவது வயது, இரண்டாம் மாதம், 17ஆம் தேதியில் மகா ஆழத்தின் ஊற்றுக்கண்களெல்லாம் திறந்தன. மதகுகளும் திறவுண்டன. நாற்பதுநாள் இரவும் பகலும் பூமியின் மேல் பெருமழை பெய்தது.ஜலம் பெருகிய போது பேழை கிளம்பியது. பூமியின் மேல் பேழை மிதந்தது.ஜலம் அதிகமாகப் பெருகியதால் வானத்தின் கீழ் எங்குமுள்ள உயர்ந்த மலைகளெல்லாம் மூடப்பட்டன.மூடப்பட்ட மலைகளுக்கு மேலாய் 15 முழ உயரத்திற்கு ஜலம் பெருகியது.அந்த பெருவெள்ளத்தில் மாம்ச ஜந்துக்களாகிய பறவைகள், மிருகங்கள் ஊரும் பிராணிகள் பூமியின்மேல் சஞ்சரித்தவைகள் யாவும் மாண்டன. பூமியிலிருந்த மனிதர்களும் மாண்டனர்.150 நாட்கள் வெள்ளம் பெருக்கெடுத்து பூமியை அழித்தது.மத்தேயு 24 :38, 39 ல் நோவாவின் காலத்தில் உள்ளவர்கள் புசித்தும், குடித்தும், பெண் கொண்டும், பெண் எடுத்தும், மாம்சத்தினால் செயல்பட்டனர். அவர்களது சடலங்கள் ஜலத்தில் மிதந்தது என்றுள்ளது. ஆனால் தேவனோடு உறவுள்ளவர்கள் பேழைக்குள் அழைத்துச் சென்று காப்பாற்றப்பட்டனர்.

நோவாவும் தேவனால் ஏவப்பட்டவர்களும் பேழைக்குள் சென்று 7 நாட்களுக்குப் பின் தான் தேவன் மழையை வரவழைத்தார்.பேழைக்குள் 1 வருடம் 17 நாட்கள் இருந்தனர். நோவா உள்ளே சென்ற போது சந்தோஷமாகச் சென்றிருக்க முடியாது. பேழையைக் கட்டியதற்கே 100 வருடங்கள் ஆனதே, சொந்த வீடு, சொந்த ஜனங்கள் அனைத்தையும் விட்டு போகிறோமே என்று நினைத்திருக்கலாம். எல்லாவற்றையும் அழிக்கப் போகிறாரே, திரும்ப என்ன செய்வோம் என்று எண்ணியிருக்கலாம். தேவன் திரும்ப எப்போது பேசுவார் என்று தெரியாது. இவைகள் அனைத்தும் இருந்தாலும் தேவன் கூறினதால் அவரே அனைத்தையும் பார்த்துக் கொள்வார் என்று விசுவாசித்தான்.

ஜலப்பிரளயத்தில் பேழை மாட்டிய போதும் நோவா எதையும் தேவனிடம் கேட்கவில்லை. ஆனால் அந்த பேழையைக் கட்டிக்கொண்டிருந்த 100 வருடங்களும் தேவனுடைய நீதியைப் பற்றி ஜனங்களிடம் கூறிக்கொண்டே இருந்தார். தேவன் சொன்ன எல்லா உயிரினங்களையும் எவ்வாறு சேகரிப்பது என்ற கவலை கொள்ளவில்லை. தேவனே அவைகள் அனைத்தையும் வழிநடத்தினார். இந்த வெள்ளத்தில் தாவரங்கள் அழிந்து போகவில்லை அதனால்தான் புறாவின் கைகளில் ஒலிவ இலை கிடைத்தது.தேவன் நோவாவிடம் வெளியே வரச் சொல்லும் வரை நோவா பொறுமையாக உள்ளே காத்திருந்தான். 

ஜலப் பிரளயத்தில் முடிவு: ( ஆதியாகமம் 8 : 1 – 5 )

தேவன் பேழைக்குள் இருந்த நோவாவையும் அவனுடன் இருந்த சகல காட்டு மிருகங்களையும், நாட்டு மிருகங்களையும் நினைத்தருளினார்.தேவன் காற்றை வீசப் பண்ணி ஜலத்தை அமரச் செய்தார்.ஊற்றுக்கண்களையும், வானத்தின் மதகுகளையும் தேவன் அடைத்தார்.வானத்தில் பெய்த மழையை நிறுத்தினார். நாளுக்கு நாள் பூமியிலிலுள்ள ஜலத்தை தேவன் வற்றிப் போகப் பண்ணினார். 150ஆவது நாளில் ஜலம் வடிந்தது.7ம் மாதம் 17 ஆம் தேதி பேழையை அரராத் என்ற மலையின் மேல் தங்கப் பண்ணினார்.பத்தாம் மாதம் முதல் தேதியில் மலை சிகரங்களை தேவன் காணச் செய்தார்.

Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates

தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்

ஜலப்பிரளயத்தினால் நமக்குத் தெரிந்தது:

ஜலப்பிரளயத்தின் வரலாறு நியாயத்தீர்ப்பையும், அதே வேளையில் இரட்சிப்பையும் காட்டுகிறது. ஆண்களும், பெண்களும் செய்த ஒழுக்கக்கேடான பாவங்கள் முற்றிலும் கழுவப்பட வெள்ளம் தேவையாயிருந்தது. மீதியாயிருந்த ஜனம் தேவனிடம் நல்லுறவு கொள்ள ஒரு வாய்ப்பானது. கர்த்தரிடம் நிலைத்திருக்கும் எவனும் பரலோகத்தின் உள்ளே சேர்க்கப்படுவர். மற்றவர்கள் வெளியே நிற்பர். கதவு அடைக்கப்படும் என்பதை அறிகிறோம். (மத்தேயு 25 : 10, 11)

காகம் புறாவிடமிருந்து கற்றுக் கொண்ட ஆவிக்குரிய பாடம்: (ஆதியாகமம் 8 : 6 – 12 )

நோவா காகத்தை வெளியே விட்டான். பூமியிலுள்ள ஜலம் வற்றிப் போகிற வரை போவதும் வருவதுமாய் இருந்தது என்று பார்க்கிறோம். இங்கே தண்ணீர் என்பது ஆவியானவரைக் குறிக்கிறது. ஆனால் இங்கு குறிக்கப்பட்ட ஜலம் பொங்குகிற, பிரவாகிக்கிற, கொந்தளிக்கிற சமுத்திரத்தைக் குறிக்கிறது. ஏசாயா 57 : 20 ல் துன்மார்க்கர் கொந்தளிக்கும் கடலைப் போல் இருக்கிறார்கள் எனப் பார்க்கிறோம். எனவே இங்கு ஜலம் துன்மார்க்கரைத் தான் குறிக்கிறது. வெளிப்படுத்தல் 21 : 13 ல் ஆண்டவரது ஆட்சியில் துன்மார்க்கர்கள் இல்லை என்பதற்கு சமுத்திரமும் இல்லாமல் போயிற்று என்று போட்டிருப்பதைப் பாரக்கிறோம். புறா என்பது பரிசுத்த ஆவியானவரைக் குறிக்கும். நோவா ஒரு புறாவை விட்ட போது அதற்கு இளைப்பாற இடமில்லாததால் திரும்பி பேழைக்குள் அவனிடம் வந்தது. காகமான சாத்தானுக்கு இளைப்பாற இடம் இருந்தது. ஆனால் புறாவான ஆவியானவருக்கு இளைப்பாற இடம் இல்லை. 

இதைப் புரிந்து கொள்ள ஆவியானவரின் யுகங்களை மூன்றாகப் பிரிக்கலாம். முதல் யுகம் ஆதியிலே ஆதாமிலிருந்து நோவா வரை உள்ளது. அந்த நாட்களில் துன்மார்க்கர்கள் ஏராளமாய்ப் பெருகி இருந்தார்கள். ஆவியானவர் எட்டு நீதிமான்களை அனுப்பி எவ்வளவோ போராடிப் பார்த்தார். நோவாவைத் தவிர யாரும் கேட்கவில்லை. அதனால் தான் தேவன் “என் ஆவி என்றைக்கும் மனுஷனோடு போராடுவதில்லை” என்று முழு பூமியையும் அழித்தார். புறா இளைப்பாற இடமில்லாதிருந்தது முதல் யுகத்தைக் குறிக்கிறது. இதோடு முதல் யுகம் முடிந்தது. இரண்டாவது யுகம் இயேசு மரித்து உயிர்த்தெழுந்த பெந்தகோஸ்தே நாளில் ஆவியானவர் மீண்டுமாக பரலோகத்திலிருந்து இறங்கி வந்தார். அன்றைக்கு ஆரம்பித்த அவருடைய கிரியைகள் இன்னும் முடிவடையவில்லை. நமக்குள்ளிருந்து செயலாற்றிக் கொண்டுதானிருக்கிறார் எப்போது அவர் தமது கிரியையை முடிப்பார் என்றால், முதன் முதலாக இயேசு வரும்போது. சபை எடுத்துக் கொள்ளப்படும் போது பகற் காலம் முடிகிறது. பகற் காலம் முடியும்போது இராக்காலம் வருகிற வரை ஆவியானவர் இந்த பூமியில் இருப்பார். போகிற போது அவர் சும்மா போகப்போவதில்லை. விசுவாசிகளாகிய நம்மை எடுத்துக்கொண்டு மணவாளனாகிய இயேசுவிடம் ஒப்படைக்கப் போகிறார். இது ஆவியானவருடைய இரண்டாவது யுகம். மூன்றாவது யுகம் 1000 வருட அரசாட்சியின் போது, அரசாளுவதற்கு இயேசு பரலோகத்திலிருந்து இறங்கி வரும்போது, ஆவியானவரும் அவரோடு கூட வருவார். ஆயிரம் வருட அரசாட்சியில் இறங்கி வருகிறவர் திரும்பிப் போவதில்லை. வெளிப்படுத்தல் 21: 3 பரலோகத்தில் இருந்து இறங்கி வருகின்ற தேவன் பூமியில் உலாவி நம்முடைய தேவனாய் இருப்பார். இதுதான் மூன்றாவது யுகம்.

பின்னும் ஏழு நாள் பொறுத்து மறுபடியும் புறாவை வெளியே விட்டார். அது சாயங்காலத்தில் ஒரு ஒலிவ மரத்தின் இலையைக்  கொத்திக்கொண்டு வந்தது. புறா ஒலிவ இலையைக் கொண்டு வந்தது இரண்டாவது யுகத்தைக் குறிக்கிறது. சாயங்காலம் என்பது பகற் காலத்தின் முடிவு அல்லது இராக்காலத்தின் ஆரம்பம் என்று பொருள். ஒலிவ இலை விசுவாசிகளை அடையாளப்படுத்துகிறது. எட்டாம் அதிகாரத்தில் நோவா என்ற வார்த்தை 7 தடவை வருகிறது. 7 தடவை வந்தால் அது இயேசுவைக் குறிக்கும். ( ஆதியாகமம் 8 :1,6,11,13, 15,18, 20 ) நோவா விட்ட காகமானது பூமியைச் சுற்றி சுற்றி வந்தது. பேழையின் பக்கத்தில் வந்தும் சுற்றி சுற்றி வந்தது. ஆனால் பேழைக்குள் வரவில்லை. ஜலம் முழுவதும் வற்றுகிற வரை போகிறதும், வருகிறதுமாய் இருந்தது. சாத்தான் மகிமையான தூதனாக இருந்தவன். தேவனை விட்டு வந்தவன். மனம் திரும்பி அவன் திரும்பிப் போகவே இல்லை. போகிறதும் வருவதுமாய் இருக்கிற சாத்தானின் கிரியை, துன்மார்க்கர் இருக்கிற வரை இருக்கும். இன்றைக்கும் சாத்தானின் கிரியைகள் இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஆவியானவர் நம்மோடும், நமக்குள்ளும் இருந்து கிரியை புரிகிறார். புறா ஒலிவ இலையை நோவாவிடம் கொடுத்ததைப் போல ஆவியானவர் நம்மை இயேசுவிடம் ஒப்படைக்கப் போவதைக் குறிக்கிறது. நோவா வெளியே வந்து இருந்ததைப் போல இயேசுவானவருடன் ஆவியானவர் இறங்கி வருவது மூன்றாம் யுகத்தைக் குறிக்கிறது. ஏழு வசனத்தில் 7000 ஆண்டு சரித்திரம் அடங்கி இருப்பதைக் காணலாம். கர்த்தரை மாதிரி முன்னறிவித்து நடத்துகிறவர் யாரும் கிடையாது. சங்கீதம் 78 : 2 ல் வேதம் உவமைகளால் தான் எழுதப்பட்டிருக்கிறது என்று கூறியிருப்பதைப் பார்க்கிறோம். ஆண்டவர் வாயைத் திறந்தால் உவமைகளால் தான் திறப்பார். ஆழங்களை வெளிப்படுத்தும் போதும் உவமைகளால்தான் வெளிப்படுத்துவார். உவமை என்பது ஒன்று சொல்வதற்குப் பதில் இன்னொன்று சொல்வது. 

நோவாவின் பலியும், தேவனின் ஆசியும் : (ஆதியாகமம் 8 : 15, 16, 18 – 22 ) 

தேவன் நோவாவையும் அவனோடு இருந்தவர்களையும் பேழையை விட்டுப்  புறப்பட்டுப் போகக் கட்டளையிட்டார். நோவா ஒரு பலிபீடம் கட்டி சுத்தமான சகல மிருகங்களிலும், சுத்தமான சகல பறவைகளிலும் சிலவற்றைப் பலியிட்டார். கர்த்தர் நோவாவிடம் மனுஷனின் நிமித்தம் இனி நான் பூமியை ச் சபிப்பதில்லை என்றும், இப்பொழுது செய்தது போல் இனி சகல ஜீவன்களையும் சங்கரிப்பதில்லை என்றும், பூமி இருக்கிற வரை விதைப்பும், அறுப்பும் ஒழியாது என்றார். காலநிலையை நினைத்து பகலும், இரவும் ஒழியாது என்று தன் உள்ளத்தில் பேசினார்.

நோவாவுக்குத் தேவன் கொடுத்த ஆசிகள்: ( ஆதியாகமம் 9 : 1 – 3, 7 )

தேவன் நோவாவையும், அவன் குமாரரையும் ஆசீர்வதித்து “நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்புங்கள் என்றார்.” 

“பூமியிலிலுள்ள சகல மிருகங்களும், ஆகாயத்துப் பறவைகளும் உங்களைப் பார்த்துப் பயப்படும் என்றார்.” 

“பூமியில் நடமாடுகிறவைகளையும், சமுத்திரத்தின் மச்சங்களையும் உங்களுக்குக் கொடுக்கிறேன் என்றார்.”

“நீங்கள் பலுகிப் பெருகி, திரளாய் வர்த்தித்து விருத்தியாக்குங்கள் என்றார்.” 

பசும் பூண்டுகளைத் தந்தது போல இனி அசைவ உணவையும் சாப்பிட தேவன் அனுமதி அளித்தார்.

இரத்தத்தைக் குறித்த தேவனின் கட்டளை: (ஆதியாகமம் 9 : 4, 5, 6 ) 

மாம்சத்தைப் புசிக்கும் போது, அதன் இரத்தத்தோடு புசிக்க வேண்டாம்.அந்த இரத்தத்திற்காகப் பழிவாங்குவேன். சகல ஜீவ ஜந்துக்களிடத்திலும், மனுஷனிடத்திலும் பழி வாங்குவேன்.மனுஷனின் உயிருக்காக அவன் சகோதரனிடத்தில் பழிவாங்குவேன். மனுஷனுடைய இரத்தத்தை எவன் சிந்துகிறானோ, அவனுடைய இரத்தம் மனுஷனாலே சிந்தப்படும் என்று கட்டளையிட்டார்.

தேவன் செய்த உடன்படிக்கை: (ஆதியாகமம் 9 : 9, 10 ) 

தேவன் நோவாவோடும், அவனுக்குப் பின்வரும் அவனுடைய சந்ததியோடும், பேழையிலிருந்து புறப்பட்ட சகல ஜீவ ஜந்துக்களோடும், அதற்குப் பின்னால் உண்டாகப் போகிற சகல ஜீவ ஜந்துக்களோடும், பறவைகளோடும், நாட்டு மிருகங்களோடும், பூமியிலுள்ள சகல காட்டு மிருகங்களோடும், உடன்படிக்கை செய்தார். கர்த்தர் பண்ணின உடன்படிக்கை என்னவென்றால், மாம்சமானவைகளை ஜலப்பிரளயத்தினால் சங்கரிக்க, பூமியை அழிக்க, இனி ஜலப்பிரளயம் வராது என்றார். 

கர்த்தர் வைத்த உடன்படிக்கையின் அடையாளம்: (ஆதியாகமம் 9 :13 – 16 ) 

கர்த்தர் தன் வில்லை மேகத்தில் வைத்தார். அது தேவனுக்கும், பூமிக்குமுள்ள அடையாளம் என்றார். கர்த்தர் மேகத்தை வரவழைக்கும் போது, அந்த வில் மேகத்தில் தோன்றும் என்றார். அந்த வில்லைப் பார்க்கும் போது, கர்த்தர் தான் பண்ணின உடன்படிக்கையை நினைவு கூறுவேன் என்றார். இந்த உடன்படிக்கை மாம்சமான யாவரோடும் தேவன் செய்த உடன்படிக்கை. வானவில், உள்ளான வாக்குறுதிக்கு வெளியான ஒரு அடையாளம். இதேபோல் வேதத்தில் பஸ்காபண்டிகை, வெண்கலசர்ப்பம், கிதியோனின்தோல், ஞானஸ்நானம், கருத்தருடையபந்தி, போன்ற அடையாளங்கள் உள்ளன. வார்த்தையும், அடையாளமும் ஒன்றையொன்று இணைந்து செல்வதாய் இருக்கிறது. வாக்குத்தத்தத்தில் விசுவாசம் இல்லையென்றால் அடையாளத்தில் உறுதிப்பாடு இல்லை. வானவில் நோவாவின் பலிபீடத்திற்குத் தேவன் கொடுத்த விடை என்று கூறலாம். இந்த வானவில்லில் ஏழு நிறங்கள் தோன்றும். அதை சேர்த்தால் VIBGYOR என்பர். அந்த நிறங்கள் Violet, Indigo, Blue, Green, Yellow, Orange, Red என்பதாகும்.

நோவாவின் உடன்படிக்கையிலுள்ள ஏழு சிறப்பு அம்சங்கள்: ( ஆதியாகமம் 8 : 21, 22, 9 : 1 – 6, 24 – 27 ) 

  1. மனிதனுக்குப் பூமியிலிலுள்ள உறவு நிலைநிறுத்தப்பட்டது. மனிதர் நிமித்தம் இனி பூமியை சபிக்க மாட்டேன் என்றார்.
  2. பூமியின் ஒழுங்கு நிலை நிறுத்தப்பட்டது. பூமி உள்ளவரை விதைப்பும் அறுப்பும், பருவ காலங்களும் இருக்கும் என்றார்.
  3. மனித ஆட்சி நிறுவப்பட்டது.
  4. ஜலப்பிரளயத்தால் இனி பூமியை நியாயம் தீர்க்க மாட்டேன் என்று தேவன் உறுதி அளித்தார்.
  5. காமுக்கு ஒரு கொடிய சந்ததி உருவாகும் என்று முன்னறிவித்தார்.
  6. சேமுக்கும் கர்த்தருக்கும் ஒரு சிறப்பு உறவு வாக்குறுதி செய்யப்பட்டது.
  7. யாப்பேத்தின் சந்ததி பெருகும் என்று கூறப்பட்டது.

நோவா செய்த தவறு சாபமும்: ( ஆதியாகமம் 9 : 21, 26, 27 )

  1. நோவா திராட்சைரசத்தைக் குடித்து, வெறி கொண்டு தன் கூடாரத்தில் வஸ்திரம் விலகி படுத்திருந்தான்.
  2. இதை நோவாவின் மகன் காம் பார்த்து அதை மூடாமல் தன் சகோதரர்களிடம் போய் விளம்பரப்படுத்தினான். இது தவறு.
  3. நோவா காமை சபிக்காமல் காமின் ஒரு மகனான கானானை சபித்தான். பாபிலோனிய மக்களும், எகிப்தின் மக்களும் காமின் சந்ததியில் வந்தவர்கள்.
  4. கானானுக்குக் கொடுக்கப்பட்ட சாபம் அவன் மற்ற சகோதரர்களுக்கு அடிமையாயிருப்பான் என்பது தான்.
  5. தேவன் சேம், யாப்பேத்தின் சந்ததியை தேவன் விருத்தி ஆக்குவேன் என்றார்.
  6. வரலாற்றின் அடிப்படையிலும், உடன்படிக்கைகளிலும், நோவாவின் உடன்படிக்கை மிக முக்கியமானது. புதிய ஏற்பாட்டு சபை உருவான போது இது தெளிவாகிறது.
  7. அப்போஸ்தலர் 8, 9, 10 அதிகாரங்களில் எத்தியோப்பிய மந்திரி காம் வம்சத்தானும், பவுல் சேம் வம்சத்தானும், கொர்நெலியு யாப்பேத் வம்சத்தானும் ஆவார்கள்.

Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates

தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்

முடிவுரை:

பூமியெங்கும் பாவமும், கொடுமையுமாக இருந்த சூழ்நிலையில், உத்தமனாக, நீதிமானாக வாழ்ந்த நோவாவைப் போல, நாமும் வாழ முயற்சிப்போம்.நோவா தேவனுடைய கட்டளைகள் அனைத்துக்கும் கீழ்ப்படிந்ததைப் போல, நாமும் தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து, தேவனது சித்தத்திற்கு ஒப்புக் கொடுத்து அதன்படி வாழத் தீர்மானம் எடுப்போம். தேவன் நோவாவோடு செய்த உடன்படிக்கையின் அடையாளமாக வானவில்லை வைத்தார்.அதன் பின் தேவன் செய்த அனைத்து உடன்படிக்கைகளும், யூதர்களை இலட்சியமாகக் கொண்டு செய்ததாக உள்ளது. நோவாவோடு செய்த உடன்படிக்கை மட்டும் அனைத்து உயிரினங்களுக்கும் இலட்சியமாகக் கொண்டது. இன்றும் நாம் அதை பார்த்துக் கொண்டிருக்கிறோம். 

Sis. Rekha

View Comments

Share
Published by
Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago