எலிசாவின் அற்புதங்கள்

எலிசா சபித்தான் கரடிகள் பீறிப்போட்டது

பெத்தேலிலுள்ள ஜனங்களின் குணங்கள்:

எலியா கடந்து சென்றபின் எலிசா அந்த பொறுப்பை எடுத்தவராய்த் திரும்ப வருகிறார். அந்த செய்தி ஏற்கெனவே ஊருக்குள் பரவி விட்டது. எலிசா யோர்தானைப் பிளந்து எரிகோவின் தண்ணீரைத் தூய்மைப் படுத்திக் கொண்டு பெத்தேலுக்கு வருகிறார். ஏல்பெத்தேல் என்று சொல்லும் போது அது தேவனுடைய வீடு என்று அழைக்கப்படுகிறது. முதலில் ஆபிரகாமும், பின் யாக்கோபும் இதைப் பற்றிக் கூறினர். ஆனால் பெத்தேல் அதன் பெயருக்கு ஏற்ப காணப்படவில்லை. தேவனுடைய ராஜ்ஜியமான இஸ்ரவேல் இரண்டாகப் பிளவு பட்டபோது யெரொபெயாம் ராஜாவானான். அவன் இஸ்ரவேல் ஜனங்கள் வணங்கும்படி ஒரு பொன் கன்றுக்குட்டியைச் செய்து வைத்தான். அங்கு கள்ளத் தீர்க்கதரிகளின் கூட்டமும் இருந்தது. அதனால் பெத்தேலில் இருந்த பிள்ளைகள் தேவனற்றவர்களாகவே இருந்தனர். எந்த முறையான பயிற்சியும் அவர்களுக்கு இல்லை. குடும்பத்தில் ஒழுக்கம் கற்றுக் கொடுக்கப்படவில்லை. அங்குள்ளவர்கள் பாகால் வணக்கத்திற்கும், பாகால் தீர்க்கதரிசிகளுக்கும் அடிமையாகவே வாழ்ந்து வந்தனர். 

எலிசா புறப்பட்டு வந்தவழியே திரும்பிச் செல்லும் போது பெத்தேலின் இளைஞரின் பழி சொல்லுக்கு ஆளானார். தேவனுடைய வழிபாட்டு இடமாக இருந்த பெத்தேல் இப்பொழுது சிலை வழிபாட்டு மையமாகி இருந்தது. அங்கு தீர்க்கதரிசி புத்திரரும் இருந்தனர் ஆனாலும் எந்தப் பயனும் இல்லை. அங்கிருந்த பிள்ளைகள் எலிசாவை இகழ்ந்தனர். வேதத்தில் பிள்ளைகள் என்ற சொல் வாலிபர்களுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது (ஆதியாகமம் 45 : 10, யாத்திராகமம் 10 : 2, எண்ணாகமம் 14 : 33, 1 சாமுவேல் 16 : 11 பிள்ளைகளுக்கும், வாலிபருக்கும் எபிரேய மொழியில் நார் அல்லது நாகர் என்ற ஒரே சொல்தான் பயன்படுத்தப் பட்டிருக்கிறது ). 

எலிசாவை நிந்தித்தது:

2 இராஜாக்கள் 2 : 23 “அவன் அவ்விடத்தை விட்டுப் பெத்தேலுக்குப் போனான்; அவன் வழி நடந்து போகையில் பிள்ளைகள் பட்டணத்திலிருந்து வந்து, அவனைப் பார்த்து: மொட்டைத்தலையா ஏறிப்போ, மொட்டைத்தலையா ஏறிப்போ என்று சொல்லி நிந்தித்தார்கள்.”

எலியா பரலோகத்துக்கு ஏறிப்போனதைக் குறித்து அவர்கள் நம்பிக்கையில்லாமல் இருந்தனர். கர்த்தர் தன்னுடையவர்களை இந்த பூமியிலிருந்து எடுத்துக் கொள்வார் என்பதை அவர்கள் விசுவாசிக்கவில்லை. எலியாவைப் போல நீயும் தொலைந்து போ என்ற பொருள்படக் கூறினர். அதனால் மொட்டைத்தலையா ஏறிப்போ என்று கூறினார்கள். மொட்டைத்தலையன் என்பது பரிகாசச் சொல். எலியாவால் தொல்லை சகிக்க முடியாதிருந்த விக்கிரக புத்திரர்களுக்கு எலிசா அடுத்த தொல்லையாகத் தோன்றினார். ஒரேயடியாக இருவரும் போயிருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்பது அவர்களது விருப்பம். இதன் மூலம் கர்த்தரையும், அவருடைய ஊழியர்களையும் தரக்குறைவாகப் பேசினார்கள். இதைத்தான் சாலமோன் தான் எழுதிய பிரசங்கி 8 : 11 ல் “துர்கிரியைக்குத்தக்க தண்டனை சீக்கிரமாய் நடவாதபடியால், மனுபுத்திரரின் இருதயம் பொல்லாப்பைச் செய்ய அவர்களுக்குள்ளே துணிக்கரங் கொண்டிருக்கிறது.” என்றான். அவர்கள் எலிசாவின் ஊழியத்தை அங்கீகரிக்காமல் அலட்சியம் செய்தார்கள். எலியா பரலோகத்துக்கு ஏறிப்போனதுபோல எலிசாவும் ஒளிந்து விட்டால் பாகால் தேவனுக்கு மகிமையை உருவாக்கும் என்ற நினைப்பில் அவ்வாறு கூறினர். 

எலியா கோபத்தில் கொடுத்த சாபம்:

2 இராஜாக்கள் 2 : 24 “அப்பொழுது அவன் திரும்பி அவர்களைப் பார்த்து: கர்த்தரின் நாமத்திலே அவர்களைச் சபித்தான்; உடனே காட்டிலிருந்து இரண்டு கரடிகள் புறப்பட்டு வந்து, அவர்களில் நாற்பத்திரண்டு பிள்ளைகளைப் பீறிப்போட்டது.”

எலிசா தங்கள் நாட்டிலிருந்து போக வேண்டுமென்ற ஆவல் தேவசித்தத்திற்கு எதிராக இருந்ததால் தான் எலிசா கர்த்தருடைய நாமத்தில் அவர்களை சபித்தார் (லேவியராகமம் 26 : 21, 22). மேலும் அவர்களின் தவறான நடத்தையினாலும், தவறான பேச்சினாலும்தான் எலிசா கோபங் கொண்டு சபித்தார். கரடிகள் வந்து கடித்துக் குதற வேண்டுமென்ற நினைப்பில் எலிசா விண்ணப்பிக்கவில்லை. ஆனால் அவ்வாறு நிகழ்ந்து விட்டது. உயிருடனிருக்காமல் ஏறிப்போக வேண்டியது யாரென்று தீர்மானமெடுக்க வேண்டியது பாகால் அல்ல, கர்த்தரே. கர்த்தரது தீர்மானம் எலிசாவிற்கு சாதகமாவும், பரிகாசக்காரருக்குப் பாதகமாகவும் அமைந்தது. இயேசுவும் இதேபோல் கோராசினுக்கும், பெத்சாயிதாவுக்கும், கப்பர்நகூமுக்கும் கூறியதை மத்தேயு 11 : 21 – 24 ல் 

“கோராசினே! உனக்கு ஐயோ, பெத்சாயிதாவே! உனக்கு ஐயோ, உங்களில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் தீருவிலும் சீதோனிலும் செய்யப்பட்டிருந்ததானால், அப்பொழுதே இரட்டுடுத்திச் சாம்பலில் உட்கார்ந்து மனந்திரும்பியிருப்பார்கள்.பார்க்கிறோம். நியாயத்தீர்ப்பு நாளிலே உங்களுக்கு நேரிடுவதைப்பார்க்கிலும் தீருவுக்கும் சீதோனுக்கும் நேரிடுவது இலகுவாயிருக்குமென்று உங்களுக்குச் சொல்லுகிறேன். வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூமே, நீ பாதாளபரியந்தம் தாழ்த்தப்படுவாய்; உன்னில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் சோதோமிலே செய்யப்பட்டிருந்ததானால், அது இந்நாள்வரைக்கும் நிலைத்திருக்கும். நியாயத்தீர்ப்பு நாளிலே உனக்கு நேரிடுவதைப்பார்க்கிலும் சோதோம் நாட்டிற்கு நேரிடுவது இலகுவாயிருக்குமென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.” 

அதுதான் நியாயத்தீர்ப்பு. கரடியை எலிசா வரவழைக்கவில்லை. கர்த்தர் கரடிகளை அனுப்பி பிள்ளைகளைப் பீறிப்போடச் செய்தார். கர்த்தர் காட்டு மிருகங்களையும் தமது சித்தத்தைச் செய்யப் பயன்படுத்துவதைப் பார்க்கிறோம். இதைத்தான் பவுல் ரோமர் 12 : 19ல் “பிரியமானவர்களே, பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன், என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறபடியால், நீங்கள் பழிவாங்காமல், கோபாக்கினைக்கு இடங்கொடுங்கள்.” என்றார். ஆனால் கொல்லவில்லை. ஒரு வகையில் அது எலிசாவுக்கு எதிரான பரிகாசம் என்பதைவிட தேவனுக்கு எதிரான செயல்பாடாக இருந்தது. இதேபோல் கர்த்தரின் இரண்டாம் வருகையைக் குறித்து நம்பாமல் ஏளனம் செய்ப்பவர்களுக்கும் நிச்சயமாகத் தண்டனை உண்டு என்பதை நமக்கு உணர்த்துவதற்காக இது கொடுக்கப்பட்டிருக்கிறது. இதே குணநலம் பூமியின் கடைசி நாட்களிலும் காணப்படுமென்று பேதுரு கூறியிருப்பதை 2பேதுரு 3 : 3, 4 ல் பார்க்கிறோம். 

இயேசு தேவாலயத்தை ஜனங்கள் கள்ளர் குகையாக்கின போது கோபம் கொண்டு விரட்டியடித்ததை வேதத்தில் பார்க்கிறோம். அப்போஸ்தலர் 8 : 18 – 20ல் மாயவித்தைக்காரனான சீமோன் தான் யார்மேல் கைகளை வைத்தாலும் அவன் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளத் தக்கதாக பேதுருவைப் போன்ற வரம் வேண்டுமென்று பணத்தைக் கொண்டு வந்து கொடுத்தான். அதனால் பேதுரு கோபமடைந்து அவன் வரத்தைப் பணத்தினால் சம்பாதிக்க நினைத்ததால் அவனோடுகூட அவனுடைய பணம் நாசமாய்ப் போகட்டுமென்று சபித்ததைப் பார்க்கிறோம். ஆரோனும், மிரியாமும் மோசேக்கு விரோதமாகப் பேசியதால் கர்த்தர் மிரியாமை குஷ்டரோகியாக ஆக்கினதை எண்ணாகாமம் 12 : 1 – 10ல் பார்க்கிறோம். எண்ணாகமம் 16 ம் அதிகாரத்தில் 250 பேர் மேசேக்கும், ஆரோனுக்கும் விரோதமாக எழும்பின போது கர்த்தர் மறுநாள் அவர்களுடைய அக்கினியை எடுத்துக் கொண்டு கர்த்தருடைய சந்நிதிக்கு கொண்டு வரக் கட்டளையிட்டார். கர்த்தருடைய சந்நிதியில் மகிமை வெளிப்பட்டது. மோசே கோபத்தில் தன் வாயால் பூமியைப் பிளக்கச் செய்து அவர்களையும், அவர்களுக்குரிய எல்லா மனிதரையும் விழுங்கிப் போடச் செய்தார். இதிலிருந்து கர்த்தருடைய ஊழியர்களை, அபிஷேகம் பண்ணப்பட்டவர்களை அவதூறாகப் பேசவோ, கேலி பண்ணவோ, அவர்களுக்கு விரோதமான செயல்களைச் செய்யவோ கூடாதென்றறிகிறோம். அவ்வாறு நாம் செய்தால் அவர்கள் சபிக்கும் போது அது நடக்கும். ஊழியர்களிடம் குறை இருப்பதாகத் தோன்றினால் அவர்களுக்காக ஜெபிக்க வேண்டும். பெத்தேலில் நடைபெற்ற இந்த நியாயத்தீர்ப்பு இஸ்ரவேலர் அனைவருக்கும் ஒரு எச்சரிக்கையாக அமைந்தது (உபாகமம் 30 : 15 – 20). அதன்பின் பெத்தேலில் யாரும் எலிசாவை ஏளனம் செய்யவில்லை. ஆமென்.

Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago