வேதத்தில் புதிய ஏற்பாட்டில் 7 மரியாள்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

1. இயேசுவின் தாயாகிய மரியாள்.

2. மகதலேனா மரியாள்.

3. மாற்குவின் தாயாகிய மரியாள்.

4. கிலேயோப்பாவின் மனைவியாகிய மரியாள்.

5. யோசேயின் தாயாகிய மரியாள்.

6. ரோமாபுரி சபையில் அதிகமாக ஊழியம் செய்த மரியாள்.

7. லாசருவின் சகோதரியாகிய மரியாள்.

இந்த மரியாள் மகதலேனா என்ற ஊரைச் சேர்ந்தவள். மகதலேனா என்றால் கோபுரம் என்றும், உயரமான, சிகரமான என்றும் பொருள். இவளை அந்த ஊரோடு சேர்த்து அடையாளப்படுத்தி மகதலேனா மரியாள் என்று அழைக்கப்பட்டாள். இயேசுவை நசரேயனாகிய இயேசு என்றதைப் போல, சீமோனை செலோத்தே என்னப்பட்ட சீமோன் எண்றதைப் போல் இவளையும் அந்த ஊரின் பெயரோடு சேர்த்து அழைத்தனர். இந்தப் பட்டணம் கலிலேயாக் கடற்கரையின் மேற்குக் கரையோரப் பகுதியிலுள்ளது. 

இயேசுவானவர் கலிலேயாவை மையமாகக் கொண்டுதான் ஊழியம் செய்தார். இயேசு கலிலேயாவை ஏன் தெரிந்து கொண்டாரென்றால் அந்தப் பட்டணத்தில் உள்ளவர்கள் இருளில் வாழ்ந்து கொண்டிருந்தனர் (மத்தேயு 4 : 12, 13). யூதர்கள் இந்தக் கலிலேயாவை இழிவாகப் பேசினர். அது புறஜாதிகளின் கலிலேயா. அங்கு அநேகர் பிசாசின் கட்டில் வாழ்ந்து கொண்டிருந்தனர் (மாற்கு 1 : 23, 32, 34, 39). இந்த ஊர் மீன் வியாபாரத்துக்குப் புகழ் பெற்ற இடம். கப்பர்நாகூமிலிருந்து 3 கிலோமீட்டர் துரத்திலுள்ளது. இயேசு கலிலேயா பகுதியில் ஊழியம் செய்து கொண்டிருந்த போது இவளை சந்தித்தார். இவளொரு மீனவப் பெண். இவளுக்கு உயர்ந்த சமூகத்திலுள்ள யோவன்னாளுடனும், சூசன்னாளுடனும் தொடர்பு வைத்திருந்தாள். இயேசுவின் அப்போஸ்தலர்களில் பேதுரு முக்கிய இடத்தைப் பிடித்ததைப் போல இயேசுவின் சீஷிகளில் மகதலேனா மரியாள் முக்கிய பங்கு வகித்திருந்தாள். 

  1. மரியாள் பெற்ற விடுதலை:

மரியாள் ஏழு கொடிய பிசாசின் பிடியில் அகப்பட்டு வேதனை பட்டுக் கொண்டிருந்தாள். அதனால் அவள் அற்பமாய் எண்ணப்பட்டாள். சமுதாயம் அவளைத் தள்ளி வைத்திருந்தது. உறவினர்கள் அவளை ஒதுக்கி வைத்திருப்பர். அப்படிப்பட்டவளை இயேசு வெறுக்காமல், ஒதுக்காமல் பிசாசின் பிடியிலிருந்து விடுதலை கொடுத்தார் (லூக்கா 8 : 2). அவள் பெற்ற விடுதலையினால் இயேசுவின் மீது அளவுகடந்த பாசம் வைத்தாள். அவள் பெற்ற அற்புதம் இயேசுவின் மேல் அசைக்க முடியத விசுவாசம் வைக்க வைத்தது. அதன்பின் அவளுடைய வாழ்க்கைப் பாதை மாறியது. தனக்கு விடுதலை கொடுத்த ஆண்டவரை முழு மனதோடு பின்பற்றத் தீர்மானித்தாள். இயேசுவோடுகூட அநேக பெண்கள் ஊழியத்தில் ஈடுபட்டிருந்தனர். மரியாள் பெண் சீடர்கள் பட்டியலில் முதல் இடம் பெற்றிருந்தாள். அவர்களோடுகூட நன்றியோடு இயேசு சென்ற இடமெல்லாம் சென்று ஊழியம் செய்தாள். இயேசுவிடம் நன்மை பெற்ற அநேகர் நன்மைகளைப் பெற்றவுடன் அவரை விட்டுச் சென்றனர். ஆனால் இவள் அவ்வாறில்லாமல் இயேசுவைப் பின் தொடர்ந்தாள். இந்த மரியாளைப் பற்றி வேதத்தில் பதினான்கு இடங்களில் கூறப்பட்டுள்ளது. 

  1. இயேசு அறையப்பட்ட சிலுவையினடியில் மரியாள்:

இயேசுவோடிருந்த யூதாஸ் இயேசுவைக்காட்டிக் கொடுக்கச் சமயம் தேடி, அவர் கெத்சமெனே தோட்டத்திற்குத் தன்னுடைய சீஷர்களுடன் ஜெபம் பண்ணச் சென்ற பொது பிரதான ஆசாரியரையும், ஜனத்தின் மூப்பர்களையும் திரளான ஜனங்களையும் கூட்டிக்கொண்டு சென்றான் (மத்தேயு 26 : 47). அப்பொழுது சீஷர்களெல்லாரும் இயேசுவை விட்டு ஓடிப்போனார்கள் (மத்தேயு 26 : 56). இயேசுவின் மீது பொய்யான குற்றங்களைச் சுமத்தி அநியாயமாய்ச் சிலுவையிலறைய ஒப்புக் கொடுத்தனர். இயேசு கபாலஸ்தலத்திற்குச் சிலுவையைச் சுமந்து கொண்டு தள்ளாடிச் சென்று கொண்டிருந்த போது, திரள்கூட்டமான ஜனங்கள் அவருக்குப்பின் சென்றனர். இயேசுவோடிருந்த சீஷர்கள் பயத்தில் ஓடிப்போனாலும், அவர்களோடுகூட அவருடன் ஊழியம் செய்த ஸ்திரீகள் தைரியமாகத் துணிச்சலுடன் (மகதலேனா மரியாளும்) அழுது கொண்டே பின் சென்றனர் (லூக்கா 23 : 26, 27). இயேசு சிலுவை சுமந்து கபாலஸ்தலம் வந்தபின் இரண்டு கள்ளர்களுக்கு நடுவில் இயேசுவை சிலுவையில் அறைந்தனர் (லூக்கா 23 : 33). 

இயேசுவின் சிலுவையின் அருகே இயேசுவின் தாயும், அவருடைய தாயின் சகோதரியான கிலெயோப்பா மரியாளும், மகதலேனா மரியாளும், செபெதேயுவின் குமாரருடைய தாயும் நின்று கொண்டிருந்தனர் (மத்தேயு 27 : 36, யோவான் 19 : 25). இம்மூவரில் ஒருவள் தாய், மற்றோருத்தி மரியாளுக்கு சொந்தமானவன். ஆனால் மகதலேனா மரியாளோ சொந்தபந்தம் என்ற உறவு எதுவுமின்றி இயேசுவிடம் தனக்குள்ள பாசத்தால் அங்கு நின்று கொண்டிருந்தாள். பவுல் ரோமர் 12 : 15 ல் “சந்தோஷப்படுகிறவர்களுடனே சந்தோஷப்படுங்கள்; அழுகிறவர்களுடனே அழுங்கள்.” என்று கூறியுள்ளது போல துக்கமான வேளையிலும் மரியாள் சிலுவையினடியில் நின்று கொண்டிருந்தாள். இவர்கள் அதிகாரிகளுக்கோ, மதத்தலைவர்களுக்கோ, ரோம போர்சேவகர் களுக்கோ, இயேசுவின் எதிகளுக்கோ பயப்படாமல் நின்று கொண்டிருந்தனர். பூரண அன்பு பயத்தை புறம்பே தள்ளும் என்பதை இதிலிருந்து அறிகிறோம். 

  1. மரியாள் இயேசுவை அடக்கம் பண்ணிய இடத்தில்:

ரோம போர்சேவகர்கள் இயேசு இறந்த செய்தியைக் நுற்றுக்கதிபதிகளிடம் கூறினபின், ஓய்வநாளுக்கு முந்தின நாள் மாலையில் அரிமத்தியா ஊரைச்சேர்ந்த, கனம் பொருந்திய ஆலோசனைக்காரனான, இயேசுவின் அந்தரங்க சீஷனான யோசேப்பு தேவனுடைய ராஜ்ஜியம் வரக் காத்திருந்தவன். இவன் உத்தமனும், நீதிமானுமாயிருந்தவன். யூதர்களின் ஆலோசனைக்கும், செய்கைக்கும் சம்மதியாதவன். அப்படிப்பட்டவன் பிலாத்துவிடம் போய் இயேசுவின் சரீரத்தை எடுத்துக் கொண்டு போக உத்தரவு கேட்டான். பிலாத்துவும் உத்தரவு கொடுத்தான் (மாற்கு 15 : 42 – 47, லூக்கா 23 : 50 – 52, யோவான் 19 : 38 – 40). உடனே இயேசுவைக் சிலுவையிலிருந்து இறக்கினர். ஏற்கனேவே இயேசுவை சந்தித்திருந்த நிக்கோதேமு என்பவன் நுறு ராத்தல் வெள்ளைப்போளமும், கரியபோளமும் கொண்டு வந்தான். 

யோசேப்பு ஒரு மெல்லிய துப்பட்டியை வாங்கிக் கொண்டு வந்து அந்தத் துப்பட்டியிலே இயேசுவின் உடலைச் சுற்றி, யூதர்கள் அடக்கம் பண்ணும் முறைமையின் படி இயேசுவோடு கூட சுகந்த வர்க்கங்களை சீலைகளில் சுற்றிக் கட்டினார்கள். இயேசுவை சிலுவையில் அறையப்பட்ட இடத்தின் பக்கத்தில் ஒரு தோட்டம் இருந்தது. அந்தத் தோட்டத்தில் யோசேப்பு தான் கன்மலையில் வெட்டியிருந்த புதிய கல்லறையிருந்தது. அதில் இயேவை வைத்தனர். அந்த இடத்தையும் மகதலேனா மரியாளும், யோசேயின் தாயாகிய மரியாளும் பார்த்தனர். மரியாள் தன்னுடைய கர்ப்பத்தை இயேசுவுக்கு கொடுத்தைப் போல யோசேப்பு தன்னுடைய கல்லறையை இயேசுவுக்குக் கொடுத்தான். மகதலேனா மரியாள் சிலுவையில் இயேசு இறந்தவுடன் செல்லாமல், அவரைக் கல்லறையில் வைத்த இடம் வரை சென்றதைப் பார்க்கிறோம் (மாற்கு 15 : 45 – 47, லூக்கா 23 : 50 – 55, யோவான் 19 : 41, 42). இயேசுவோடிருந்த மற்றவர்களுக்குக் கல்லறை வரை செல்ல துணிச்சல் வரவில்லை. 

  1. மூன்றாம் நாள் சுகந்தவர்க்கமிடச் சென்ற மரியாள்:

மாற்கு 16 : 1 – 3 ஓய்வுநாளான பின்பு மகதலேனா மரியாளும், யாக்கோபின் தாயாகிய மரியாளும், சலோமே என்பவளும், அவருக்குச் சுகந்தவர்க்கமிடும்படி அவைகளை வாங்கிக்கொண்டு, வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையிலே சூரியன் உதயமாகிறபோது கல்லறையினிடத்தில் வந்து, கல்லறையின் வாசலிருக்கிற கல்லை நமக்காக எவன் புரட்டித்தள்ளுவான் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.” 

லூக்கா 24 : 1 – 4 “வாரத்தின் முதலாம்நாள் அதிகாலையிலே தாங்கள் ஆயத்தம்பண்ணின அந்த கந்தவர்க்கங்களை அவர்கள் எடுத்துக்கொண்டு வேறு சில ஸ்திரீகளோடுங்கூடக் கல்லறையினிடத்தில் வந்தார்கள். கல்லறையை அடைத்திருந்த கல் புரட்டித் தள்ளப்பட்டிருக்கிறதைக் கண்டு, உள்ளே பிரவேசித்து, கர்த்தராகிய இயேசுவின் சரீரத்தைக் காணாமல், அதைக் குறித்து மிகுந்த கலக்கமடைந்திருக்கையில், … “

எகிப்தியர் இறந்த சடலத்தைப் பதப்படுத்துவார்கள். யூதர்கள் சடலத்துக்குத் தைலம் பூசுவார்கள். வாசனைத் தைலங்கள் பூசும்போது சாவின் கொடூர அடையாளங்கள் மாறி மரித்த தோற்றத்தின் அகோரம் குறையும். எனவே இயேசுவை வைத்த இடம் தெரிந்ததால் யாக்கோபின் தாயாகிய மரியாளும், சலோமி என்பவளும், மகதலேனா மரியாள் ஆயத்தம் பண்ணி வைத்திருந்த சுகந்தவர்க்கங்களை எடுத்துக் கொண்டு வாரத்தின் முதல் நாள் அதிகாலையில் (மத்தேயு 28 : 1) இருட்டோடு (யோவான் 20 : 1) எந்த ஆண் துணையுமில்லாமல் கல்லறைக்குச் சென்றனர். இது அந்தப் பெண்கள் இயேசுவின் மீது கொண்டிருந்த அன்பையும், அவர்களது மன தைரியத்தையும் காட்டுகிறது. இயேசுவின் சகோதரர்கள் கூட அதைச் செய்யவில்லை. அவர்கள் போகும்போது கல்லறையின் வாசலை அடைத்து வைத்திருக்கும் கல்லை நமக்காக யார் புரட்டித் தள்ளுவார்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக் கொண்டே சென்றனர். ஆனால் அங்கு சென்று பார்த்தபோது கல்லறைக்கு வைத்திருந்த சீல் உடைக்கப்பட்டு, அதை அடைத்திருந்த மிகவும் பெரிதான கல் புரட்டப்பட்டிருந்ததைப் பார்த்தனர். கல்லறையின் கல் புரட்டப்பட்டிருப்பதை முதலில் அதிசயமாகப் பார்த்தனர். இயேசுவின் சரீரம் கல்லறையில் இல்லை என்றறிந்த மரியாளுக்கு மிகுந்த கலக்கமும் ஆச்சரியமுமடைந்தாள். 

இயேசு கல்லறையில் இல்லை என்பதை இரண்டாவது அதிசயமாகப் பார்த்தனர். இயேசு உயிரோடிருக்கும் போதே தனது மரணம், உயிர்த்தெழுதல் போன்றவற்றைக் குறித்துப் பேசியிருந்தார். மரியாள் இயேசு சொன்னதை நினைத்துப் பார்க்கவில்லை. (யோவான் 20 : 1 – 8).

  1. கல்லறையில் மரியாள் சந்தித்த தேவதூதர்கள்:

மத்தேயு 28 : 2 – 7 “அப்பொழுது, பூமி மிகவும் அதிரும்படி, கர்த்தருடைய தூதன் வானத்திலிருந்திறங்கி வந்து, வாசலிலிருந்த கல்லைப் புரட்டித் தள்ளி, அதின்மேல் உட்கார்ந்தான். அவனுடைய ரூபம் மின்னல் போலவும், அவனுடைய வஸ்திரம் உறைந்த மழையைப்போல வெண்மையாகவும் இருந்தது. காவலாளர் அவனுக்குப் பயந்ததினால் திடுக்கிட்டுச் செத்தவர்கள் போலானார்கள். தூதன் அந்த ஸ்திரீகளை நோக்கி: நீங்கள் பயப்படாதிருங்கள்; சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என்று அறிவேன். அவர் இங்கே இல்லை; தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்; கர்த்தரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்; சீக்கிரமாய்ப் போய், அவர் மரித்தோரிலிருந்து எழுந்தார் என்று அவருடைய சீஷர்களுக்குச் சொல்லுங்கள். அவர் உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்குப் போகிறார்; அங்கே அவரைக் காண்பீர்கள்; இதோ, உங்களுக்குச் சொன்னேன் என்றான்.”

மாற்கு 16 : 8 “நடுக்கமும் திகிலும் அவர்களைப் பிடித்தபடியால், அவர்கள் சீக்கிரமாய் வெளியே வந்து, கல்லறையை விட்டு ஓடினார்கள்; அவர்கள் பயந்திருந்தபடியினால் ஒருவருக்கும் ஒன்றும் சொல்லாமற்போனார்கள்.” 

லூக்கா 24 : 7 “மனுஷகுமாரன் பாவிகளான மனுஷர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படவும், சிலுவையில் அறையப்படவும், மூன்றாம்நாளில் எழுந்திருக்கவும் வேண்டுமென்பதாக அவர் கலிலேயாவிலிருந்த காலத்தில் உங்களுக்குச் சொன்னதை நினைவுகூருங்கள் என்றார்கள். 

இதைத்தான் இயேசு உயிர்த்தெழுந்தபின் லூக்கா 24 : 25 ல் எம்மாவு ஊருக்கு அவருடன் சென்ற சீஷர்களை நோக்கி தீர்க்கதரிசிகள் சொன்னதை விசுவாசிக்கவில்லையென்றும், புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்கள் என்றும் கூறினார். காவலாளர்கள் அங்கு நின்று கொண்டிருந்தபோது பூமி மிகவும் அதிரும்படி கர்த்தருடைய தூதன் இறங்கி வந்தான். அவன் வாசலை அடைத்திருந்த கல்லைப் புரட்டித் தள்ளி அதன் மேல் உட்கார்ந்தான். அவர்களிருவரும் பிரகாசமுள்ள வெண் வஸ்திரம் தரித்திருந்தனர். காவலாளர் அவனைப் பார்த்துத் திடுக்கிட்டு செத்தவர்களைப் போலாயினர் என்று மத்தேயு 28 : 4 ல் பார்க்கிறோம். மாற்கு 16 : 3 ல் ஒரு தூதன் என்றுள்ளது. ஆனால் லூக்கா 24 : 5 ல் இரண்டு தூதர்கள் என்றுள்ளது. இயேசு கல்லறையின் கல்லைப் புரட்ட தூதர்கள் வரவில்லை. அவரது வார்த்தையால் கட்டளையிட்டிருப்பார். ஆனால் இயேசுவோடிருந்த பெண்களுக்காகவும், சீஷர்களுக்காகவும் இயேசு தம்முடைய தூதர்களை அனுப்பினார். தூதர்கள் மகதலேனா மரியாளை நோக்கி “ஏன் அழுகிறாய்” எனக் கேட்டு, இயேசு இங்கே இல்லையென்றும், அவர் உங்களிடம் கூறினபடியே உயிர்த்தெழுந்தார், அவரை வைத்த இடத்தை வந்து பாருங்கள் என்றும், இயேசு உயித்தெழுந்த செய்தியை அவருடைய சீஷர்களுக்குச் சொல்லச் சொல்லியும், அவர் உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்குப் போகிறார் என்றும் கூறினார்கள் (மத்தேயு 28 : 7). இவைகளைக் கேட்ட சீஷிகள் ஆச்சரியத்தில் நடுங்கினர். மகதலேனா மரியாளும், யோவன்னாளும், யாக்கோபின் தாயாகிய மரியாளும் மிகவும் பயந்ததினால் இந்தச் செய்தியை வேறு யாருக்கும் சொல்வதற்கு முன் அவருடைய சீஷர்களுக்குப் போய் அறிவிக்க நினைத்தனர். 

மேலும் அவர்கள் அவளிடம் இயேசு கலிலேயாவில் இருந்த காலத்தில் தான் சிலுவையில் அறையப்படப் போவதாகவும், மூன்றாம் நாளில் உயிர்த்தெழுவேன் என்றும் சொன்னதை நினைவு படுத்தக் கூறினர். அப்பொழுது மரியாள் அதை நினைவுகூர்ந்தாள் (லூக்கா 24 : 7). மரியாள் பயத்தோடும், நடுக்கத்தோடும் மிகுந்த சந்தோஷத்துடனும் இயேசு உயிர்த்தெழுந்த செய்தியை அவருடைய சீஷர்களுக்கு அறிவிக்க ஓட்டமாகச் சென்று சீமோன் பேதுருவினிடமும், யோவானிடத்திலும் இயேசுவைக் கல்லறையிலிருந்து யாரோ எடுத்துக் கொண்டு போய் விட்டார்கள் என்றாள். அவரை வைத்த இடமும் தங்களுக்குத் தெரியவில்லை என்றாள். இது அவர்களது அறியாமையைக் காட்டுகிறது. சீஷர்கள் முதலில் சீஷிகளின் வார்த்தைகளை நம்பவில்லை. பேதுருவும், யோவானும் அவள் சொன்னதைக் கேட்டுக் கல்லறைக்கு ஓடிச் சென்று பார்த்தனர். யோவான் முன்னே ஓடினாலும் வெளியே நின்று குனிந்து பார்த்துச் சீலைகள் மட்டுமே கிடந்ததைப் பார்த்தான். ஆனால் பேதுருவோ உள்ளே சென்று இயேசுவை சுற்றியிருந்த சீலை தனியாகவும், அவருடைய தலையில் சுற்றியிருந்த சீலை தனியாகவும் ஓரிடத்தில் சுருட்டி வைத்திருப்பதைக் கண்டான். இயேசுவை அடக்கம் பண்ணும்போது அவரைச் சுற்றியிருந்த சீலைகள் அனைத்தும் அங்கிருப்பதை மூன்றாவது அதிசயமாகப் பார்த்தனர். அதன் பின் யோவானும் உள்ளே பிரவேசித்து அதைப் பார்த்தான். பின்பு பேதுருவும், யோவானும் தங்களிடத்துக்குத் திரும்பிப் போனார்கள் 

6. உயிர்த்தெழுந்த இயேசுவை மரியாள் சந்தித்தாள்: யோவான் 20 : 11 

“சீஷர்கள் திரும்பிப் போனதைப் போல மகதலேனா மரியாள் திரும்பிப் போகாமல் கல்லறையினருகே வெளியே நின்று அழுது கொண்டிருந்தாள்.”

யோவான் 20 : 16, 17 “.இயேசு அவளை நோக்கி: மரியாளே என்றார். அவள் திரும்பிப் பார்த்து: ரபூனி என்றாள்; அதற்குப் போதகரே என்று அர்த்தமாம். இயேசு அவளை நோக்கி: என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை; நீ என் சகோதரரிடத்திற்குப் போய், நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார்.”

சீஷர்கள் போன பின்னும் மரியாள் அந்த இடத்தை விட்டுப் போகாமல் இயேசுவின் சரீரத்தைப் பார்க்க முடியாததால் மனங்கசந்து அழுதாள். அவள் தூதர்களிடம் தன்னுடைய ஆண்டவரை யாரோ எடுத்துக் கொண்டு போய் விட்டார்கள் என்றாள் (யோவான் 20 : 13, 14). மரியாள் தூதர்களிடம் பேசிவிட்டு பின்னால் திரும்பியபோது அங்கு இயேசு நின்று கொண்டிருந்தார். ஆனால் அவளுக்கு அவர் இயேசு என்று தெரியவில்லை. ஏனெனில் இயேசு மகிமையடைந்த சரீரத்தோடு நின்று கொண்டிருந்தார். இயேசுவுக்கு அவளைத் தெரியும் எனவே “ஸ்திரீயே, ஏன் அழுகிறாய், யாரைத் தேடுகிறாயென்றார்.” அவள் அவரைத் தோட்டக்காரர் என்றெண்ணி “நீர் அவரை எடுத்துக் கொண்டு போனதுண்டானால், அவரை வைத்த இடத்தை தனக்குச் சொன்னால் தான் போய் அவரை எடுத்துக் கொள்வேன் என்றாள். இயேசுவோ தோட்டக்காரர் அல்ல. கர்த்தர். நல்ல மேய்ப்பர், நல்ல இரட்சகர். 

ஒரு பெண்ணுக்கு எத்தனை துணிச்சல். ஒரு ஆணை எடுத்துக் கொண்டு போவேன் என்று கூறக்கூடிய அளவுக்குப் அவளுடைய பாசம் இருந்தது. அவள் இயேசுவின் சரீரத்தைப் பார்க்க விரும்பினபடியால் தன்னுடைய பக்கத்தில் உயிரோடு நிற்கும் இயேசுவை அறியவில்லை. அவளுடைய அன்பையும், பாசத்துடன் தன்னைத் தேடிக் கொண்டிருக்கும் துணிச்சலையும் பார்த்த இயேசு, அவளை சந்தோஷமாக்க “மரியாளே” என்றார். இயேசுவைப் பார்க்கச் சென்றப் பெண்களைத் தேடி இயேசுவே அங்கு வந்ததைப் பார்க்கிறோம். மரியாள் இயேசுவின் குரலைக் கேட்டவுடன் “ரபூனி” என்றாள். உடனே இயேசுவின் பாதத்தில் விழுந்து பணிந்து கொண்டனர். இயேசு மரியாள் தன்னைத் தவறான இடத்தில் தேடிய அவளது அறியாமையையும், தான் அவளிடம் முன்னமே கூறியதை நினைவில் கொள்ளாததையும் குறித்துக் கடிந்து கொள்ளவில்லை. அவள் தன்மீது வைத்துள்ள அளவற்ற அன்பைப் பார்த்து அவளுக்குத் தன்னை வெளிப்படுத்தினார். 

விசுவாசத்துடன் தேடுகிறவர்களுக்குப் பலன் தருகிறவர் இயேசு. இயேசு அதுவரை தன்னை அனுப்பின பிதாவிடத்திற்குப் போகவில்லை. அதற்கு முன்பே மரியாளுக்கு முதன்முதலில் தரிசனமானார் (மத்தேயு 28 : 8 – 10, யோவான் 20 : 11 – 17). இயேசுவின் மார்பில் சாய்ந்து கொண்டிருந்த யோவானுக்கோ, அவரது தாய்க்கோ முதன்முதல் தரிசனமாகவில்லை. இந்த மகதலேனா மரியாள் பிசாசினால் பிடிக்கப்பட்ட ஒரு பாவியாயிருந்தாள். ஆகிலும் அவளையே தேவன் தெரிந்து கொண்டு “பாவிகளை இரட்சிக்க இயேசு உலகத்துக்கு வந்தார்” என்ற உண்மையை உலகிலுள்ளோருக்கு நிரூபித்தார். ஆண்களை மட்டுமே கனம் பண்ணக்கூடிய அந்நேரத்தில் ஒரு பெண்ணை இயேசு தெரிந்து கொண்டார். இயேசு அவளிடம் ஒரு கட்டளை கொடுத்தார், இதேபோல் இயேசு உயிர்த்தெழுந்தது தெரிந்த பின்னும் சீஷர்கள் மீன் பிடிக்க திபேரியா கடலுக்குச் சென்றநர். அங்கும் இயேசு சென்று சீஷர்களை சந்தித்தார் (யோவான் 21 : 4). 

யோவான் 20 : 17 “இயேசு அவளை நோக்கி: என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை; நீ என் சகோதரரிடத்திற்குப் போய், நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார்.”

இயேசு கூறியபடி மரியாள் தான் இயேசுவைப் பார்த்த சங்கதிகளையும், அவர் தன்னிடம் சொன்னதையும் சந்தோஷத்துடன் சீஷர்களிடம் கூறினாள். 

  1. இயேசுவின் இறப்புக்குப்பின் மரியாள்:

இயேசு பரமேறிய பின், இயேசுவின் தாயாகிய மரியாளுடன் சேர்ந்து மகதலேனா மரியாள் எபேசு பட்டணத்தில் ஊழியம் செய்ததாக ஆதி திருச்சபையின் வரலாறு கூறுகிறது. அங்கேயே மகதலேனா மரியாள் மரித்ததாகவும், கி.பி 886 ன் குறிப்புகள் அவளுடைய எலும்புகள் கான்ஸ்டாண்டிநோபிளுக்கு எடுத்துச் சென்று பாதுகாக்கப் பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. பிரெஞ்சு மரபுச் செய்தி மகதலேனா மரியாள் பெத்தானியா மரியாளுடனும், இன்னும் சில சீஷர்களுடனும் சேர்ந்து, மார்சலஸ் (marscles) என்ற இடத்தில் ஊழியம் செய்ததாகவும், பின் lasainte baume என்ற நகருக்கு அருகில் உள்ள மலையில் துறவு வாழ்க்கை மேற்கொண்டதாகவும் கூறுகிறது, அவள் இறந்தபின் அவளது உடல் oratory st, maximinus ல் பாதுகாக்கப்படுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது. இதில் எது உண்மை என்று தெரியவில்லை. ஜூலை 22ம் தேதியை அவளுடைய நினைவுநாளாகக் கொண்டாடுகின்றனர். கத்தோலிக்க சபையினர், ஆங்கிலிக்கன் சபையினர், லுத்தரன் சபையினர் மகதலேனா மரியாளை புனிதராகக் கருதுகின்றனர். 

முடிவுரை:

இயேசு இந்த உலகில் வாழ்வதற்காக, இரட்சகராகப் பிறப்பதாக மரியாள் என்ற பெண்ணைத்தான் தெரிந்தெடுத்தார். அதேபோல் தான் உயிரோடெழுந்தபின் முதன்முதலில் மகதலேனா மரியாளுத்தான் தரிசனமானார். இயேசுவின் உயிர்த்தெழுந்த நற்செய்தியை உலகில் முதன்முதலில் அறிவித்தவளும் அவளே. இயேசு அவளுடைய பிரயோஜனமற்ற வாழ்க்கையை, அர்த்தமற்ற வாழ்க்கையை, பிறருக்கு உதவும் ஆசீர்வாதமான வாழ்க்கையாக மாற்றினார். நாமும் நம்முடைய பழைய வாழ்க்கை மாறி, இயேசுவுக்குள் வந்தபின் அவருக்காகவே நமது புதிய வாழ்க்கையை அர்ப்பணிக்க வேண்டும். இயேசு மரியாளை பார்த்து “என் அழுகிறாய்” என்று கேட்டதைப் போல, நாமும் கண்ணீரோடு, துக்கத்தோடு, பாடுகளோடு நின்று கொண்டிருக்கும் போது நம்மைப் பார்த்தும் கேட்பார். மரியாளின் அழுகையைக் களிப்பாக மாற்றின இயேசு, நம்முடைய அழுகையையும் மாற்றுவார். மரியாளை ஆட்கொண்டிருந்த ஏழு பிசாசின் பிடியிலிருந்து இயேசு விடுதலை கொடுத்ததைப் போல, பிசாசின் பிடியிலிருப்பவர்களை இயேசுவண்டை கொண்டு வந்தால், அவைகளிலிருந்து அவர்கள் விடுதலை பெறுவார்கள். மரியாளைப் பெயர் சொல்லி அழைத்ததைப் போல நம்மையும் பெயர் சொல்லி அழைப்பார். மரியாள் இயேசு உயிர்த்தெழுந்த நற்செய்தியைப் பரப்பியதைப் போல, நாமும் இந்த சுவிசேஷத்தை உலகமெங்கும் பரப்ப முற்படுவோம். ஆமென்.

Sis. Rekha

Share
Published by
Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago