வார்த்தையின் வல்லமை

சீஷனாய் மாற்றும் தேவனுடைய வார்த்தை

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, தேவனின் வார்த்தை ஒரு மனிதனை மாற்ற வல்லமையுள்ளது. அவன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும், எந்த இடத்தில் இருந்தாலும் தேவன் அவனைத் தெரிந்தெடுத்தால் அவன் தேவனின் வார்த்தையால் உன்னத நிலையை அடைவான். இப்படி சீமோன் என்ற மனிதனைத் தேவன் தெரிந்தெடுத்து, அவனுடைய வாழ்க்கையை மாற்றின விதத்தை இந்தப் பகுதியில் பார்ப்போம்.

சீமோனுக்கு ஆண்டவர் சூட்டிய பெயர் பேதுரு. இவர் ஆத்திரக்காரர், மிகவும் பலம் நிறைந்தவர். இயேசுவின் 12 சீடர்களில் ஒருவர். இயேசுவை மேசியாவாகப் புரிந்து கொண்டவர். 12 சீடர்களுக்குள் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டவர். எருசலேம் சபையின் மூப்பர். புற ஜாதிகளுக்கு ஞானஸ்நானம் கொடுத்தவர். I பேதுரு, II பேதுரு நிருபங்களை எழுதியவர். இத்தனை அந்தஸ்துக்களைப் பேதுரு எப்படிப் பெற்றார். அவர் இயேசுவின் அடிச்சுவடுகளை எப்படிப் பின்பற்றினார் என்று பார்ப்போம்.

பேதுரு பரம்பரை, பரம்பரையாக மீன் பிடி தொழில் செய்து வந்தவர். ஒருநாள் அவர் இரவு முழுவதும் பிரயாசப்பட்டும் மீன் ஒன்றும் கிடைக்காததால் சோர்ந்து போனார். பேதுருவுக்கு எந்த இடத்தில், எந்த நேரத்தில் எப்படிப்பட்ட மீன்கள் கிடைக்கும் என்று நன்கு தெரியும். அப்படியிருந்தும் ஒரு மீனும் கிடைக்காததால் சோர்ந்து போன உள்ளத்தோடு படகை விட்டிறங்கி தன் வலைகளைத் தன் சகோதரருடன் அலசிக் கொண்டிருந்தான்.

அந்த வேளையில் கெனெசெரெத் கடலருகே இயேசு நின்று கொண்டிருந்தார். அதைப் பார்த்த ஜனங்கள் அவருடைய வார்த்தையைக் கேட்கக் கூடினார். அப்பொழுது இயேசு பேதுருவின் படகைப் பார்த்து அவரிடம் கேட்டு அதில் ஏறிப் போதகம் பண்ணினார் (லூக் 5:3)

எத்தனை பிரயாசப் பட்டும் எனக்கு ஒரு வேலை கிடைக்கவில்லையே, என அங்கலாய்க்கும் வாலிப உள்ளங்களே, எவ்வளவு பிரார்த்தனை பண்ணியும் ஒரு குழந்தையில்லையே என தவிக்கும் சகோதரிகளே, எவ்வளவு தான் கடினமாக உழைத்தும் ஆசீர்வாதமில்லையே என கலங்கும் உள்ளங்களே, பேதுரு தன் படகை இயேசுவுக்குக் கொடுத்தது போல நீங்களும் உங்களிடத்தில் இருப்பவைகளை இயேசுவுக்குக் கொடுத்துப் பாருங்கள், ஆசீர்வாதம் உங்கள் வீட்டுக் கதவைத் தட்டும். 

இயேசு போதகம் பண்ணி முடித்தவுடன், சோர்ந்து போன உள்ளத்தோடு இருக்கும் பேதுருவை நோக்கி; “அவர் போதகம் பண்ணி முடித்த பின்பு சீமோனை நோக்கி ஆழத்திலே தள்ளிக் கொண்டு போய் மீன் பிடிக்கும்படி உங்கள் வலைகளைப் போடுங்கள் என்றார்” (லூக்:54) இயேசு கூறிய வார்த்தைகளைக் கேட்ட பேதுருவுக்கு ஒரே ஆச்சரியம். “நான் ஒன்றுமே சொல்லவில்லையே, எனக்கு மீன் தேவை என இயேசு அறிந்து கொண்டாரே” என வியப்பில் ஆழ்ந்தார். அதற்கு பேதுரு “ஐயரே இரவு முழுவதும் நாங்கள் பிரயாசப்பட்டு விட்டோம். என்று கூறிவிட்டு ஆனாலும் உம்முடைய வார்த்தையின்படியே வலையைப் போடுகிறேன்” என்றார். ஆனாலும் என்ற வார்த்தையை உபயோகப்படுத்தியதிலிருந்து, அவருக்கு மீன் கிடைக்கும் என்ற நம்பிக்கை சிறிதளவு கூட இல்லை என்று அறியலாம்.

இந்தப் பதிலில் பேதுருமுதலில் தனது இயலாமையை ஒப்புக்கொள்கிறார். 2. தேவனின் வார்த்தைக்குக் கீழ்படிகிறார். 3. தேவன் சொன்னதை உடனே செயலில் செய்கிறார். இந்த மூன்று காரியங்களையும் ஆண்டவர் கூறின உடன் செயல் படுத்தியதைப் பார்க்கிறோம். நீங்களும் பேதுருவைப் போல உங்கள் இயலாமையை இயேசுவிடம் அறிக்கையிடுங்கள். சிலர் தவறாக “என் மகனுக்கு நல்ல மதிப்பெண் இருப்பதால் வேலை தேடி வரும்” என்பர். சிலர் “நல்ல வழக்கறிஞர் வைத்து வாதாடினால் என் கேஸ் வெற்றி பெறும்” என்பர். இப்படிப்பட்ட சிந்தை உள்ளவர்களுக்கு கர்த்தர் எந்த கிரியையும் செய்யாமல் அமைதியாக இருந்து விடுவார். எப்பொழுது உங்களால் முடியாது என தேவனிடம் அறிக்கையிடுகிறீர்களோ அந்த நிமிடமே தேவனின் கரம் உங்களைத் தாங்கும், தப்புவிக்கும், கனப்படுத்தும். பேதுரு இயேசுவின் சொற்படி கீழ்படிந்ததால் என்ன நடந்ததெனில்,

“அந்தப்படியே அவர்கள் செய்து தங்கள் வலை கிழிந்து போகத் தக்கதாக மிகுதியான மீன்களைப் பிடித்தார்கள்” (லூக் 5:6) என்ன அற்புதம் பாருங்கள். இயேசுவின் வார்த்தைக்கு அவர்கள் கீழ்படிந்து ஆழத்தில் படகைத் தள்ளிக்கொண்டு போய் வலையைப் போட்டபோது வலைகள் கிழியும் படியான மீன்களைப் பிடித்தனர். மீன்களே இல்லாத இடத்திலும் புது மீன்களை சிருஷ்டித்துக் கொடுக்க வல்லமையுள்ளவர் என்று இதிலிருந்து அறியலாம்.

பேதுருவும் அவனுடைய கூட்டாளிகளான யாக்கோபும், யோவானும் பிரமித்து நின்றனர். இயேசு பேதுருவை நோக்கி “இதுமுதல் நீ மனுஷரை பிடிக்கிறவனாயிருப்பாய்” என்றார். (லூக் 5:10) பேதுருவுக்கு மீன்பிடி தொழில் ஆதலால் மனுஷரைப் பிடிக்கிற தொழில் என்னவென்று தெரியாது. ஆனாலும் தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்படிந்து அப்படியே போட்டுவிட்டு இயேசுவுக்குப் பின் சென்றார். பேதுருவுக்குள் இருந்த விசுவாசம் என்னவென்றால் ஒன்றும் கூறாமலேயே நமக்கு இன்னது தேவை என்றறிந்தவர், மீன்களே இல்லாத இடத்தில் அந்த நிமிடமே மீன்களை சிருஷ்டித்துக் கொடுத்தவர், அவருடைய வல்லமையின்படியே இயேசுவின் சித்தம் நிறைவேற நம்மையும் உருவாக்குவார் என்பதே.

ஒரு முறை இயேசு பேதுருவிடம் “தான் யார்” என்று கேட்டபோது “ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து” (மத்16:16) என்று பதிலளித்தார். இந்த இடத்தில் பேதுரு இயேசுவைக் கடவுளாகத் தன் வாயினால் அறிக்கையிட்டார். ஆனால் இயேசுவைச் சிலுவையிலறையக் கொண்டு போகும் போது, பேதுருவைப் பார்த்து அங்குள்ள பெண்மணி “இவனும் இயேசுவோடு இருந்தவன்” என்றாள். அதற்குப் பேதுரு “…அந்த மனுஷனை அறியேன் என்று சொல்லி, சபிக்கவும், சத்தியம் பண்ணவும் தொடங்கினான்….” (மத் 26:74) இயேசுவை முன்பு கடவுளாகக் கூறிய வாய் இப்பொழுது மனுஷர் என்று கூறுவதைப் பார்க்கிறோம். ஏனெனில் பேதுருவுக்குள் அப்போது தெய்வீக வல்லமை இல்லாதிருந்தது. 

கற்பாறையாக இருக்க வேண்டும் என்று தான், சீமோன் என்ற பெயரை பேதுருவாக மாற்றினார். ஆனால் பேதுருவோ அந்த ஆசையை மணல் கோட்டையாக்கினார். ஆனாலும் இயேசு பேதுருவைப் புறக்கணியாமல் உயிர்த்தெழுந்த பின் அவரைப் பார்த்து மூன்று முறை “என்னை நேசிக்கிறாயா” எனக் கேட்டு (யோவான் 21:15, 16,17) மீண்டும் உயர்ந்த பணியான ஆடுகள் மேய்க்கும் பணியைக் கொடுத்தார். பேதுருவிடம் முதலில் இல்லாத வல்லமை பின்னாட்களில் எப்படி வந்ததெனில், இயேசு உயிர்த்தெழுந்த பின் அப்போஸ்தலர்களைப் பரிசுத்த ஆவியினால் நிரப்ப நினைத்து, எருசலேமில் காத்திருக்கச் சொன்னார். (அப்1:4,5) அப்படி அப்போஸ்தலர்கள் காத்திருந்த போது பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டார்கள். பல்வேறு பாஷைகளைப் பேசினர் (அப் 2:2, 3, 4) பேதுரு இப்படிப்பட்ட அபிஷேகத்தைப் பெற்றபின் பிரசங்கம் பண்ணும் போது (அப் 2:38) ஒரு தடவை 3000 பேரும். (அப் 2:41) ஒரு முறை 5000 பேரும் (அப் 4:4) இரட்சிக்கப்பட்டார்கள் என்று பார்க்கிறோம்.

பேதுருவின் நிழலில் கூட தேவ வல்லமை இருந்ததால், பிணியாளிகளைப் பேதுருவின் நிழல் படும் இடத்தில் கிடத்தினர். அவருடைய நிழல் பட்டவர்கள் சுகம் பெற்றனர் என (அப் 5:15) ல் வாசிக்கிறோம். பிறவி சப்பாணியாயிருந்த ஒரு மனிதன் பேதுருவை நோக்கிப் பார்த்து குதித்தெழுந்து நடந்ததை (அப் 3:8)ல் வாசிக்கிறோம். இவைகளிலிருந்து பேதுருவுக்கு முதலிலிருந்த பயம், நடுக்கம் எல்லாம் தேவ ஆவியைப் பெற்றபின் மாறியதைக் காண்கிறோம். இயேசு ஒரு நபரை தெரிந்தெடுக்கும் பொழுது மாறுபான வழியில் தான் தெரிந்தெடுப்பார். அந்த வழி அதுவரை அந்த நபருக்கு கண்டிராத, தெரிந்திராத வழியாகத் தான் இருக்கும். பேதுருவின் வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடம் என்னவென்றால் தோற்றுப் போனாலும், தொடர்ந்து வருபவர் இயேசு. இல்லாமையில் உருவாக்குபவர் இயேசு. நம்பி வந்தவர்களைக் கடைசி வரை கைவிடாமல் காப்பவர் இயேசு.

இதே போல் படிப்பறிவு இல்லாத ஒரு தேவமனிதனை எப்படி இயேசு பயன்படுத்தினார் என்று பார்ப்போம். ஸ்மித்விக்கிள்ஸ்வொர்த் என்பவர் பிளம்பிங் வேலை செய்து கொண்டிருந்தவர். அவருடைய மனைவி இரட்சிக்கப்பட்டு அபிஷேகம் பெற்றவள். ஆனால் ஸ்மித்தோ முதலில் இரட்சிக்கப் படாமல் மனைவியின் ஊழியத்திற்கு எதிரிப்பாயிருந்தவர். ஆலயத்திற்கு இரவு போய் விட்டு வந்தாள் என்பதற்காக இரவு முழுவதும் தன்னுடைய மனைவியை வீட்டின் வெளியே தள்ளிக் கதவைப் பூட்டினார். அந்த இரவோ மிகவும் குளிரான காலம். காலையில் ஸ்மித் கதவைத் திறந்த போது மனைவி ஒன்றும் சொல்லாமல் உள்ளே போய் காபி போட்டு சிரித்த முகத்துடன் கொடுத்தாள். அந்த செய்கை அவரை மிகவும் தொட்டது. இரட்சிக்கப்பட்டார், மிகப்பெரிய ஊழியக்காரனானார். 

அவர் 15 நிமிடத்திற்கு ஒருமுறை வேதத்தை எடுத்து சில அதிகாரங்களை வாசிப்பார். அவர் இருக்கும் போதும்,நடக்கும் போதும் அன்னியபாஷையைப் பேசிக்கொண்டேயிருப்பார். 23 செத்த சடலங்களை உயிரோடு எழுப்பியிருக்கிறார். ஒருநாள் அவர் ஊழியம் செய்து விட்டு வரும்போது தன் மனைவி மரித்து விட்டாள் என்ற செய்தி தெரிந்தது. வீட்டிற்குப் போய் மரித்த தன்னுடைய மனைவியின் சடலத்தைப் பார்த்து “மரணமே நான் இல்லாத வேளையில் என் மனைவியின் உயிரை எடுக்க என்ன தைரியம். இயேசுவின் நாமத்தில் நடந்து வா” என்று தன் மனைவியின் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டாராம். உடனே மனைவி எழுந்து வந்தாளாம். எப்படிப்பட்ட வல்லமை பாருங்கள். நீங்களும் இதே போன்று தேவ மனிதர்கள் செய்த அற்புதத்தை அவர்கள் பெற்ற வல்லமையை திரும்ப, திரும்ப படித்து உங்கள் விசுவாசத்தை அனல் மூட்டி எழுப்புங்கள்.

நீங்கள் ஒவ்வொருவரும் சாதிக்க முடியாது என்ற எண்ணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு “எனக்குள் வாசம் பண்ணும் இயேசுவினால் சாதிக்க முடியும்” என்ற நினைவுகளோடு அடியெடுத்து வையுங்கள். நேற்றைய சோதனைகளையும், இழப்புகளையும் நினைத்துக் கொண்டிராமல், நாளைய சாதனைகளுக்காகவும், வெற்றிகளுக்காகவும், தேவனிடம், மன்றாடுவோம். தேவன் உங்களை (ஏசாயா 11:15ல்) கூறப்பட்டதைப் போல் ஆக்குவாராக. “…நான் உன்னை புதிதும் கூர்மையுமான பற்களுள்ள யந்திரமாக்குகிறேன்…” கர்த்தர் உங்களோடிருப்பாராக. ஆமென்.

Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago