நூலகம்

சிலுவை தியானம்

இயேசுவின் ஊழியத்தில் சிலுவைப் பாடுகள் மிகவும் முக்கிய இடத்தை வகிக்கின்றது. அவர் மனுக்குலத்துக்காகப் பிறந்து வந்தது மகிழ்ச்சியைக் கொடுத்தாலும், அதே மனுக்குலத்துக்காக மரித்தது, நம்மிடம் அவர் காட்டிய அன்பை வெளிப்படுத்துகிறது. நம்மை மீட்டு பரலோகத்தில் சேர்ப்பதற்காக அவரது உயிரையே தியாகம் செய்ய முன் வந்தார். தேவன் தனது அன்பை வெளிப்படுத்தப் பல வழிகள் இருந்தாலும், அவைகளை விட்டுவிட்டு கொடூர மான சிலுவை மரணத்தின் மூலம் தமது அன்பை வெளிப்படுத்தினார். இயேசு வின் பிறப்பு, சிலுவை மரணம் உயிர்த்தெழுதல், திரும்ப வருதல் நான்கும் இயேசுவின் வாழ்க்கையின் சிறப்பம்சங்களாகும். இயேசுவின் பிறப்பு அனைவருக்கும் மகிழ்ச்சியளிக்கிறது. அவரது மரணம் அனைவருக்கும் தேவ அன்பைப் புரிய வைக்கிறது. அவரது உயிர்த்தெழுதல் அனைவருக்கும் வெற்றியை அளிக்கிறது. இயேசு பிறந்ததால் பாவத்தின் வேர் பிடுங்கப்பட்டது. இயேசு மரித்ததால் பிசாசின் தலை நசுக்கப்பட்டது. அவர் உயித்தெழுந்ததால் மரணத்தின் கூர் ஒடுக்கப்பட்டது. இயேசு கிறிஸ்துவின் பிறப்பும், மரணமும், உயிர்த்தெழுதலும் இணைந்து தேவனின் மகிமையை வெளிப்படுத்துகிறது.

இயேசு அறையப்பட்ட சிலுவை:

சிலுவையானது உலகத்தின் பார்வையில் ஒரு கொலைக்கருவி. சிலுவை மரணம் என்பது மிகவும் கொடூரமான மரணம். சிலுவையில் அறையப் பட்ட வர்கள் மிகவும் சித்திரவதைப்பட்டு தாங்கொணா வேதனையை அனுபவிப்பர். சிலுவை மரணம் என்பது யூதர்களால் வெறுக்கப்பட்ட ஒரு அவமானச் சின்னம். ஆனால் பரலோக பார்வையில் சிலுவை மரணம் தியாகமானது. இயேசுவின் காலத்தில் முப்பதாயிரம் பேர் சிலுவையில் அறையப்பட்டதாகக் கூறுகின்றனர். ஆனால் அவர்களின் மரணம் ஒன்றும் உலகத்தில் பேசப்படவில்லை. ஆனால் இயேசுவின் சிலுவை மரணமோ அன்றும், இன்றும் பேசப்பட்டு வருகிறது. ரோமப் பேரரரசின் வழக்கப்படி அடிமைகளை, கொலைகாரர்களை, கலகம் செய்ப வர்களை கொடுமையான தண்டனையாகச் சிலுவையில் அறைவர். ஆனால் இயேசுவோ அப்படிப்பட்டவரல்ல. அவர் தேவ குமாரனானவர், சர்வத்துக்கும் சுதந்தரவாளியானவர், முதற்பேறானவர், சாவாமையுள்ளவர், பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருப்பவர், மகா பரிசுத்தர், பாவமே செய்யாதவர். அப்படிப் பட்டவரை நிந்தித்து, அவமானப்படுத்தி, சரீர வேதனைகளால் துன்புறுத்தி, கேவலமான குற்றவாளியாகச் சிலுவையில் நிறுத்தினார்கள். ஏசாயா 53 : 12 ல் கூறப்பட்டபடி “அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டார்” என்ற வேத வாக்கியம் நிறைவேறியது. இயேசு சுமந்த சிலுவையின் எடை 150 கிலோ, அதன் நீளம் 15 அடி, அதன் அகலம் 8 அடி. இயேசுவை சிலுவையில் அறையப்பட்ட ஆணியின் நீளம் 7 அங்குலம் நீளமுள்ள கூர்மையான ஆணி. இயேசுவை அறையப்பட்ட சிலுவையை நாம் புனிதச் சின்னமாகக் கருதுகிறோம். ஏனெனில் அது இயேசுவின் இரத்தம் பட்டுப் புனிதமானது.

இயேசு சிலுவையை சுமந்து சென்றது:

மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் தண்டனை நிறைவேற்றப்படும் இடம் வரை தாங்களே தங்கள் சிலுவையைச் சுமந்து செல்ல வேண்டும். அதேபோல் இயேசுவும் சரீரத்தில் சாட்டையடிகளினால் உண்டான சரீர வேதனைகள், வலிகள், இரத்தம் சிந்தப்பட்ட நிலையில் பிதாவின் சித்தத்தைச் செய்து முடிக்க அனைத்தையும் தாங்கி நடந்து சென்றார். இதைத் தான் எபிரேய ஆக்கியோன் “தனக்கு முன் வைத்திருந்த சந்தோஷத்தின் பொருட்டு அவமானத்தை எண்ணாமல் சிலுவையைச் சகித்தார்” என்கிறார். இயேசு இந்த உலகத்திலிருந்து நாட்களில் மனிதர்களால் அவமானப்படுத்தப்பட்டார். நாசரேத் ஊரார் “இவன் தச்சன் அல்லவா? மரியாளுடைய குமாரனல்லவா” என்று கேலி செய்தனர் (மாற்கு 6 : 3). கெர்கெசேனர் பட்டணத்தார் அவர்கள் எல்லைகளை விட்டுப் போகும்படி அவமானப்படுத்தினர் (மத்தேயு 8 : 34). ஜெப ஆலயத்திலிருந்த மூப்பர்கள் அவரைச் செங்குத்தான மலையின் சிகரத்திலிருந்து தலைகீழாய்த் தள்ளிக் கொலை செய்ய முயன்றார்கள் (லூக்கா 4 : 29).

எருசலேமிலிருந்து வந்த வேதபாரகர் “இவன் பெயல்செபூலைக் கொண்டிருக் கிறான், பிசாசுகளின் தலைவனால் பிசாசுகளைத் துரத்துகிறான்” என்றார்கள் (மாற்கு 3 : 22). இயேசுவானவர் இத்தனையும் சகித்ததைப் போல நமக்கும் சகிப்புத் தன்மை வேண்டுமென்று ஜெபிக்க வேண்டும். இயேசு தன் சிலுவையைச் சுமந்து கொல்கொதா என்று சொல்லப் படும் கபாலஸ்தலம் என்கிற இடத்திற்குப் போனார் (யோவான் 19 : 17). இதனை மண்டை ஓடுகளின் இடமென்றும் கூறுவார்கள். இது எருசலேமுக்கு வெளியே இருக்கிறது (எபிரேயர் 13 : 12). நாபோத் தேவனையும், ராஜாவையும் தூஷித்ததால் அவனைப் பட்டணத்திற்கு வெளியே கொண்டு போய்க் கல்லெறிந்து கொன்றார்கள் (1இராஜாக்கள் 21 : 13). ஸ்தேவானை நகரத்திற்கு புறம்பே தள்ளிக் கல்லெறிந்து கொன்றார்கள் (அப்போஸ்தலர் 7 : 58). அதேபோல் எருசலேமுக்கு வெளியே கபாலஸ்தலம் என்ற இடத்தில் இயேசு சேர்ந்த பொழுது இயேசுவைச் சிலுவையில் அறைந்து, அவருடைய வலது பக்கத்தில் ஒரு குற்றவாளியையும், இடது பக்கத்தில் ஒரு குற்றவாளியையும் சிலுவைகளிலரைந்தார்கள்.

இயேசு சிலுவை சுமக்கக் காரணம்: 

இயேசுவை சிலுவை வரை கொண்டு போனவர்கள், யூதர்களோ கிரேக்கர்களோ, ரோமர்களோ, பரிசேயர்களோ, சதுசேயர்களோ அல்ல. இயேசு பிதாவின் சித்தத்தின்படி முந்தின ஆதாமின் கீழ்ப்படியாமையினால் வந்த பாவத்திற்குப் பரிகாரியாக, பிந்தின ஆதாமாகிய இயேசு மனுவுருவெடுத்து வந்து தன் ஜீவனைத் தானாகவே ஒப்புக் கொடுத்தார். இதை ஏசாயா தீர்க்கதரிசி 700 வருடங்களுக்கு முன்பாக ,

ஏசாயா 5 .3 : 5 ல் “நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்“ என்கிறார். “ எபிரேய ஆக்கியோன்,

எபிரேயர் 2 : 14, 15 ல் “……..மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும், ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார்.” என்கிறார். 

பாவநிவாரண பலி 

பழைய ஏற்பாட்டில் லேவியராகமம் ஒன்றாம் அதிகாரத்தில் ஒருவன் பாவஞ் செய்தவனானால், அவன் மன்னிக்கப்பட ஒரு காளையை ஆசாரி யனிடம் கொண்டு வந்து அதன் தலையின் மேல் தன் கைகளை வைத்துத் தன் பாவங்களை அறிக்கையிட வேண்டும். அதன்பின் ஆசாரியன் அந்தக் காளை யைத் துண்டு துண்டுடாக்கி அதன் இரத்தத்தை பலிபீடத்தில் தெளிப்பர். இது அவனது பாவங்கள் மன்னிக்கப்பட செய்ய வேண்டிய பரிகாரம். கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களை எகிப்திலிருந்து விடுதலை பண்ண, பழுதற்ற ஒரு வயது ஆண் ஆட்டுக்குட்டியை எடுத்து அதன் இரத்தத்தைத் தம்முடைய ஜனங்கள் இருக்கும் வீடுகளின் நிலைக்கால்களில் பூசச் சொன்னார். அப்பொழுது கர்த்தர் மற்ற எதிரிகளை அழிக்கும் போது தன்னுடைய ஜனங்களின் வீட்டை விட்டு சங்காரதூதன் கடந்து போவான் என்றார். (யாத்திராகமம் 12 : 5). ஆனால் இது எகிப்திலிருந்து விடுதலையாவதற்கு மட்டுமே. இதில் நிலைக் கால்களில் பூசப்பட்ட இரத்தம் உறைந்து விடும். காய்ந்து விடும். ஆனால் இயேசுவிடமிருந்து வழிந்தோடும் இரத்தம் ஒருநாளும் உறைந்து போகவோ காய்ந்து போகவோ மாட்டாது. நாம் இப்பொழுது சபையில் திருவிருந்து எடுக்கும் போது, திராட்சை ரசத்தை இயேசு நமக்காகச் சிந்தின இரத்தமாக நினைத்து, அவர் பட்ட பாடுகளைத் தியானித்துப் பானம் பண்ணுகிறோம். இதைப் பவுல் 1 கொரிந்தியர் 11 : 23 – 25 ல் கூறியிருப்பதைப் பார்க்கிறோம். ஆதியாகமம் 4 : 10 ல் காயீனால் ஆபேல் கொலை செய்யப்பட்ட சிந்தின இரத்தம் பூமியி லிருந்து பழிவாங்கக் கூப்பிட்டது. ஆனால் இயேசுவின் இரத்தம் எபிரேயர் 12 : 24 ல் நன்மையானவைகளைப் பேசுமென்கிறார்.

சிலுவையின் போது நடந்த நிகழ்வுகள்:

யோவான் 19 : 19, 21, 22 ல் பிலாத்து இயேசுவின் தலையில் மேல் “நசரேயனாகிய இயேசு யூதருடைய ராஜா” என்று எழுத வைத்தான். இதை எபிரேய, கிரேக்க, லத்தீன் பாஷைகளில் எழுதினர். இதை யூதர்களில் அநேகர் வாசித்தனர். ஆனால் இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முன்னமே பிலாத்துவின் அரண்மனையில் யூத போர் சேவகர்களால் அவருக்கு முள்முடி சூட்டி “யூதருடைய ராஜாவே வாழ்க” என்று வாழ்த்தியதை மாற்கு 15 : 18 ல் பார்க்கிறோம். யூதமதத் தலைவர்களின் கொடூரமான மனநிலை இயேசுவை சிலுவையிலறைந்த பின்னும் மாறவில்லை. எனவே அவர்கள் பிலாத்துவிடம் “யூதருடைய ராஜா” என்று எழுதாமல் “தான் யூதருடைய ராஜா என்று அவன் சொன்னதாக எழுதும்” என்றனர். ரோமப் பேரரசின் சட்டப்படி ஒருவிசை சொன்ன தீர்ப்பை மாற்ற முடியாது. அதனால் பிலாத்து “எழுதினது எழுதினதே என்றார் (யோவான் 19 : 22). கிறிஸ்துவை அவர்கள் ஏளனம் செய்வது போல் எழுதப்பட்டாலும் உண்மையில் யூதருக்கும், பிற மதத்தவருக்கும், அகிலம் முழுவதற்கும் இயேசு இராஜாதி ராஜா தான் (வெளிப்படுத்தல் 19 : 16). சிலுவையிலிருந்து தன்னுடைய வாயைத்திறந்து முதல் வார்த்தையாக இயேசு பிதாவை நோக்கி:

லூக்கா 23 : 34 “அப்பொழுது இயேசு: பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார்.” 

இயேசு இதைக் கூறும் போது பிதாவுடன் உறவு இருந்தது. இயேசு தம்மைக் கொடுமைப்படுத்திக் கொலை செய்பவர்களை தாம் மன்னித்து, பிதாவையும் மன்னிக்கும்படி வேண்டினதைப் பார்க்கிறோம். இயேசுவோடு அறையப்பட்ட கள்ளனில் ஒருவன் அவர் தான் ஆண்டவர் என்று முழுமையாக விசுவாசித்து,

லூக்கா 23 : 42, 43 “இயேசுவை நோக்கி: ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான். இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.”

எந்தப் பாவியையும் தள்ளாத இயேசு கள்ளனின் விசுவாசத்திற்குப் மதிப்பளித்து தனது வாயால் சிலுவையில் இரண்டாவதாக இவ்வாறு கூறினார். கள்ளன் சென்ற பரதீசு பூமிக்குள் இருந்தது என்பதை எபேசியர் 4 : 8 – 10 ல் காணலாம். மூன்றாவதாக இயேசு சிலுவையில் மரிக்கும் நேரத்திலும் தன்னுடைய தாயின் மேல் அக்கறை உடையவராய் யோவானிடம் தன் தாயைக் கவனிக்கும் பொறுப்பை ஒப்படைத்தார் (யோவான் 19 : 25 – 27). மத்தேயு 27 : 39 – 42 ல் இயேசுவைச் சிலுவையில் அறையப்பட்ட பின் அந்த வழியாய் நடந்து போகிறவரும், பிரதான ஆசாரியரும், வேதபாரகரும், மூப்பரும் பரியாசம் பண்ணினார்கள் .இயேசு தேவனுடைய குமாரனேயானால் அவர் இவனை இரட்சிக்கட்டும். இயேசு இஸ்ரவேலின் ராஜாவானால் இப்பொழுது சிலுவை யிலிருந்து இறங்கி வரட்டும் என்று பரிகசித்தனர். ஆனால் நடந்தது என்ன வென்றால் 3 மணி நேரம் பூமியெங்கும் அந்தகாரம் உண்டாயிற்று. பூமியை இருள் சூழ்ந்தது. அப்பொழுது பிதாவின் முகம் மறைக்கப்பட்டதால் சிலுவையிலிருந்து நான்காவதாக,

மத்தேயு 27 : 46ல் “ ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.”

ஏனெனில் மனுக்குலத்தின் பாவம் முழுவதும் அவர்மேல் இறங்கியதால் அவருக்கும் பிதாவுக்குமிடையே மிகச் சிறிது நேரம் பிரிவினை உண்டாகியது. எல்லாவற்றையும் பொறுமையோடு சகித்த இயேசுவால் பிதாவிடமிருந்து பிரிந்ததைச் சகிக்க முடியாமல் கதறினார். இயேசு பிதாவே என்று அழைக்காமல் நமது பிரதிநிதியாக அவரைத் தேவனே என்றழைத்தார். ஐந்தாவதாக இயேசு சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த போது,

யோவான் 19 : 28 ல் “அதன்பின்பு, எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக: தாகமாயிருக்கிறேன் என்றார்.”

இயேசு சிலுவையில் தாகமாயிருக்கிறேன் என்றார். ஏனெனில் சரீரத்திலிருந்து ஆறரை லிட்டர் இரத்தம் சிந்தப்பட்டது. இயேசு சிலுவையை சுமார் 17 மணி நேரம் சுமந்து வந்ததால் சரீரப்பிரகாரமான தாகத்தில் இவ்வாறு கேட்டார். ஆனால் அவருடைய தாகம் ஆத்ம தாகம். மத்தேயு 27 : 34 ல் கசப்புக்கலந்த காடியை இயேசுவுக்கு குடிக்கக் கொடுத்தனர் என்றுள்ளது. அது சிலுவையில் அறையப் படுவதற்கு முன் அவர்கள் கொடுத்த அடியின் வலி மறக்கப் படுவதற்காக எல்லோருக்கும் கொடுக்கும் பானம் தான் அது. அதை இயேசு குடிக்க மறுத்தார். அதற்குக் காரணம் அந்த வேதனையை, வலியை அவர் சகித்துக் கொண்டார். இது சங்கீதம் 69 : 21 ல் சங்கீதக்காரன் கூறிய தீர்க்கதரிசனம் நிறைவேறி யதாகும். ஆறாவதாக,

யோவான் 19 : 30 “இயேசு காடியை வாங்கினபின்பு, முடிந்தது என்று சொல்லி, தலையைச் சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார்.

இயேசுவின் இவ்வுலக வாழ்க்கை வெற்றிகரமாக முடிந்தது. அவரது மரணத்தைக் குறித்த தீர்க்கதரிசனங்கள் நிறைவேறி முடிந்தது. சாத்தானின் அதிகாரம் முடிந்து பாம்பின் தலை நசுக்கப்பட்டாயிற்று. நம்முடைய இரட்சிப்புக்குரிய எல்லா கிரியைகளையும் அந்த வேளையில் முடித்து விட்டார். பாவத்திற்கு விரோதமான தேவகோபம் முடிந்து விட்டது. பழைய ஏற்பாட்டு சட்டதிட்டங்கள் மேல் வெற்றி முடிந்தது. பாவமன்னிப்புக்கான இரத்தம் சிந்தி முடித்தாயிற்று. மனிதனுக்கும் தேவனுக்குமிடையே சமாதானம் உண்டாகி முடிந்தது. மனிதனின் பாடுகளுக்கும் நோய்களுக்கும் பரிகாரம் உண்டாகி முடிந்தது. ஏழாவதாக,

மத்தேயு 27 : 51 “இயேசு மறுபடியும் மகாசத்தமாய்க் கூப்பிட்டு, ஆவியை விட்டார். அப்பொழுது, தேவாலயத்தின் திரைச்சீலை மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது, பூமியும் அதிர்ந்தது கன்மலைகளும் பிளந்தது.”

கடைசியாக பிதாவின் கையில் தன்னுடைய ஆவியை ஒப்புவித்தார். 70 அடி நீளமும் 30 அடி உயரமும் 4 அங்குல கனமுமுள்ள திரைச்சீலை, பிதா அங்கு நடப்பித்த வல்லமையான கிரியையினால், கிறிஸ்துவின் சரீரம் பிட்கப்பட்டதின் விளைவாக மேலிருந்து கீழாக இரண்டாகக் கிழிந்தது. அதனால்தான் எபிரேய ஆக்கியோன் எபிரேயர் 10 : 19 ல் பரிசுத்த ஸ்தலத்தில் நாம் பிரவேசிப்பதற்குப் புதிய மார்க்கம் வந்தது என்கிறார். பரிசுத்த ஸ்தலத்தையும், மகா பரிசுத்த ஸ்தலத்தையும் பிரிப்பதற்காகப் போடப்பட்டிருந்த திரைச்சீலை தேவனுடைய சமூகத்திற்குச் செல்லும் பாதையை மறைத்தது. கிறிஸ்துவின் மரணத்தின் மூலம் அந்தத் திரை நீக்கப்பட்டது. அதாவது பிதாவின் சமூகத்திற்குச் செல்வதற்கு இருந்த தடைகள் யாவும் தேவனுடைய செயலால் அகற்றப் பட்டன.

இயேசுவின் வழியாக பிதாவின் முன்னிலைக்கு நாம் செல்ல முடியும்.

கன்மலைகள் பிளந்தது என்பது 1கொரிந்தியர் 10 : 4ல் கூறப்பட்டதைப் போல ஞானக் கன்மலையான இயேசு அடிக்கப்பட்டதைக் காட்டுகிறது. இது இயேசுவின் சரீரம் கிழிக்கப்பட்டதைக் காட்டுகிறது. பழையஏற்பாட்டில் மரித்த பரிசுத்தவான்களை இயேசு உயிரோடெழுப்பி அழைத்துச் சென்றார். இதேபோல் கர்த்தர் ஆரவாரத்தோடும், பிரதான தூதனோடும், எக்காளச் சத்தத்தோடும் வானத்திலிருந்து இறங்கி வரும்போது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள் என்று பவுல் 1 தெசலோனிக்கேயர் 4 : 16 ல் கூறுகிறார். இயேசு தம்மைக் காப்பாற்றும்படியாக இவ்வுலகத்திற்கு வராமல், சிலுவையில் மரணமடைவதற்காகவே வந்தார். சிலுவையிலிருந்து இறங்கி வர அவரால் முடியும். ஆனால் அவ்வாறு செய்திருந்தால் அவர் இந்த உலகிற்கு வந்த நோக்கம் நிறைவேறியிருக்காது. மேலும் பாவங்களுக்கு மன்னிப்பு, பரலோகம் சேரும் பாக்கியம் போன்றவை நமக்கு கிடைத்திருக்காது.

சிலுவையில் வழிந்தோடிய இரத்தம்: 

உலகத்தில் எத்தனையோ தேவர்கள் இருந்தாலும் பாவ மன்னிப்பைக் கொடுக்கக் கூடியவர் இயேசு ஒருவரே. நம்முடைய பாவங்களைச் சிலுவை யில் சுமந்து, இயேசு இரத்தம் சித்தியதால் நமக்குப் பாவமன்னிப்பாகிய மீட்பு கிடைத்தது (எபேசியர் 1 : 7). இயேசு நம்முடைய எல்லா நோய்களையும் சுமந்து தீர்த்து விட்டதால், அவரை வாரினால் அடிக்கும் போது வழிந்தோடிய இரத்தம் நமக்கு எல்லா நோய்களிமிருந்தும் சுகத்தைக் கொடுக்கிறது (ஏசாயா 53 : 5). அவருடைய தலையில் முள்முடி சூட்டப்படும் போது வழிந்தோடிய இரத்தம் நம்முடைய சாபங்கள் அனைத்திருந்தும் விடுதலை கிடைக்க வைத்தது. கைகளில் ஆணி அறைந்ததால் வழிந்த இரத்தம், பிசாசின் கிரியைகளை, மந்திரவாத சக்திகளை நம்மேல் அணுகாதபடி தடுக்கிறது. ஏற்கெனவே இயேசு லூக்கா 10 : 19 ல் சர்ப்பங்களையும், தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகல வல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரம் கொடுக்கிறேன் என்றார். இயேசுவின் மேலிருந்து வழியும் இரத்தம் (யோவான் 19 : 34) கர்த்தருடைய மணவாட்டியாக நம்மைக் கரைதிரை இல்லாதவர்களாக மாற்றுகிறது.

முடிவுரை:

நமக்குத் பாவமன்னிப்பை அருளுவதற்காகவே இயேசு இரத்தம் சிந்த இந்த உலகத்திற்கு வந்தார். கிறிஸ்து பிறக்கும் போது வானத்திலுள்ள நட்சத்திரம் ஞானிகளுக்கு வழிகாட்டியது. கிறிஸ்து மரிக்கும் போதோ, வானமும் இருண்டு பூமியும் அதிர்ந்தது. கிறிஸ்துவானவர் ஆசாரியர்களைப் போல் பலிகளைச் செலுத்திக் கொண்டிராமல், ஒரே ஒரு பலியைக் கல்வாரிச் சிலுவையில் செலுத்தி விட்டு, தன்னுடைய ஆசாரிய ஊழியத்தை நிறைவேற்றி முடித்து விட்டுத் தேவனுடைய வலது பாரிசத்தில் உட்கார்ந்திருக்கிறார். நாம் இயேசுவின் சிலுவைப் பாடுகளைத் தியானித்து அவருடைய இரத்தம் நம்முடைய சிந்தையில், நம்முடைய ஆத்மாவில், நம்முடைய உடம்பில் சொட்டு, சொட்டாக விழ அனுமதித்து, பரிசுத்தமான வாழ்க்கை வாழ்ந்து, தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றவும், அவரண்டை இன்னும் நெருங்கவும் வாஞ்சிப்போம். அதனால் நாம் உயிர்த்தெழுந்த இயேசுவின் வல்லமையைப் பெற்று, நம்மைப் பாவத்திலிருந்தும், சாபத்திலிருந்தும், சாத்தானின் வல்லமையிலிருந்தும் மீட்டெடுத்த இயேசுவோடு பரலோகத்தில் பிரவேசிக்கப் பாடுபடுவோம். ஆமென்.

Sis. Rekha

Share
Published by
Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago