வெளிப்படுத்தல் 9 : 13, 14 “ஆறாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது அவனுக்கு முன்பாக இருந்த பொற்பீடத்தின் நான்கு கொம்புகளிலுமிருந்து ஒரு சத்தந்தோன்றி, எக்காளத்தைப் பிடித்திருந்த ஆறாம் தூதனை நோக்கி: ஐப்பிராத்தென்னும் பெரிய நதியண்டையிலே கட்டப்பட்டிருக்கிற நான்கு தூதர்களையும் அவிழ்த்துவிடு என்று சொல்லக்கேட்டேன்.”
ஆறாம் தூதன் எக்காளம் ஊதியபோது யோவான் அங்கிருந்த பொற்பீடத்தின் நான்கு கொம்புகளிருந்து சத்தம் வெளிப்படுவதைக் கேட்டான். வெளிப்படுத்தல் 8 : 3 லும் தேவனுக்கு முன்பாக இருந்த பொற்பீடம் என்றுள்ளது. அந்தப் பொற்பீடம் ஜெபத்தைக் குறிக்கிறது. இது இந்தப் பூமியிலுள்ள ஆசாரிப்புக் கூடாரத்தைத் குறிப்பிடுகிறது. மோசே உருவாக்கின உடன்படிக்கைப் பெட்டியிலும், சாலொமோன் கட்டிய தேவாலயத்தின் பலிபீடத்திலும் நான்கு கொம்புகள் இருந்தது போல், பரலோகத்துப் பொற்பீடத்திலும் நான்கு கொம்புகள் காணப்படுகின்றன. கொம்பு என்ற வார்த்தை வல்லமையைக் குறிக்கிறது (சங்கீதம் 118 : 27, 89 : 17, 24, 92 : 10, 132 : 17).கொம்புகளிலி ருந்து வெளிப்பட்ட சத்தம் யாருடையது என்பதை யோவான் கண்டு கொள்ளவில்லை. அந்தச் சத்தம் ஐப்பிராத்தென்னும் பெரிய நதியண்டையிலே கட்டப்பட்டிருக்கிற நான்கு தூதர்களையும் அவிழ்த்து விடும்படியாக உத்தரவிடுகிறது. தீய தூதர்கள் அவிழ்த்து விட்டபடியினால் பூமியில் பெரும் அழிவு உண்டாகிறது.
அந்த நான்கு தூதர்களும் செய்கின்ற கொடுமையினிமித்தமாக மற்றவைகளிலிருந்து தனியாகக் கட்டப்பட்டிருக்கின்றனர். ஐப்பிராத்து நதி ஆதியாகமம் 2 : 14 ல் ஏதெனில் உற்பத்தியாகிறது என்று பார்த்தோம். உலகின் முதல் பாவம், முதலாவது கொலை, முதலாவது யுத்தம் இந்த நதியருகே தான் நடந்தது. முதலாவது கோபுரம் இதனருகேதான் கட்டப்பட்டது. முதலாவது பட்டணம் (பாபிலோன்) இதனருகேதான் உருவானது. பாபிலோனியர்களால் இஸ்ரவேலர் சிறைபிடிக்கப்பட்டு இங்குதான் கொண்டுவரப்பட்டனர். இந்த நதிக்கு அப்புறத்திலே காணப்படுகின்ற கீழ்த்தேசங்களிலே உலக ஜனத்தொகையில் பெரும்பகுதி காணப்படுகிறது. வெளிப்படுத்தல் 7 : 1 – 3ல் ஒரு தூதன் நான்கு காற்றுகளைப் பிடித்துக் கொண்டிருந்த தூதனிடம் தேவனுடைய ஊழியக்காரர்களுக்கு முத்திரை போடுமளவும் அவருடைய நியாயத்தீர்ப்பை நிறுத்தி வைத்ததைப் பார்த்தோம். இப்போது நியாயத்தீர்ப்பு துரிதப்படுத்தப்படுகிறது.
வெளிப்படுத்தல் 9 : 15, 16 “அப்பொழுது மனுஷரில் மூன்றிலொருபங்கைக் கொல்லும்படிக்கு ஒருமணிநேரத்திற்கும், ஒரு நாளுக்கும், ஒரு மாதத்திற்கும், ஒரு வருஷத்திற்கும் ஆயத்தமாக்கப்பட்டிருந்த அந்த நான்கு தூதர்களும் அவிழ்த்து விடப்பட்டார்கள். குதிரைச்சேனைகளாகிய இராணுவங்களின் தொகை இருபது கோடியாயிருந்தது; அவைகளின் தொகையைச் சொல்லக்கேட்டேன்.”
தேவனின் கால அட்டவணைப்படி ஆயத்தமாக்கப்பட்டிருந்த நான்கு தூதர்களும் தேவன் முன்குறித்த நேரத்தில் விடுவிக்கப்படுகிறார்கள். இவர்கள் நான்கு பேரும் இருபது கோடி போர்வீரர்கள் அடங்கிய மிகப்பெரிய படைக்குத் தளபதிகளாக இருப்பார்கள் என்று தெரிகிறது. இந்த யுத்தத்தின் முடிவில் பூமியிலிலுள்ள மனிதர்களில் மூன்றில் ஒரு பங்குபேர் மரணமடைகின்றனர். ஏற்கனவே நாலாம் முத்திரை உடைக்கப்பட்டு பூமியில் காற்பங்கு மனித இனம் மரணமடைந்தது என்று வெளிப்படுத்தல் 6 : 8 ல் பார்த்தோம். இப்போது கொலை செய்யப்படுபவர்களின் எண்ணிக்கையையும் சேர்த்தால் உலகத்தின் ஜனத்தொகை பாதியாகக் குறைந்திருக்கும். ஒருமணி, ஒரு நாள், ஒரு மாதம், ஒரு வருஷம் இவர்கள் மூலமாக யுத்தம் நடைபெறும் என்று கூறப்படுகிறது.
அதாவது தேவன் குறித்த நாளில் குறித்த மாதத்தில், குறித்த வருடத்தில், இந்த யுத்தம் ஆரம்பிக்கும் என்று எடுத்துக் கொள்ளலாம். வெளிப்படுத்தல் 9 : 16 ல் கடைசி உலக மகா யுத்தத்தில் இருபது கோடி குதிரை போர்வீரர்கள் கலந்து கொள்வார்கள் என்று யாரோ யோவானிடம் கூறுகின்றனர். அவரால் அந்தத் தொகையை எண்ண முடியவில்லை. கூறுவது இருபத்துநாலு மூப்பர்களில் ஒருவராக இருக்கலாம். இந்தத் தளபதிகள் ஆறாவது எக்காளம் ஊதப்பட்டபோதே யுத்தத்துக்கான ஆயத்தங்களைத் துவங்கினாலும் உபத்திரவ காலத்தின் இறுதியில் அர்மகெதோனில் தான் யுத்தம் நடக்கும் அந்த மகா யுத்தத்தில் எல்லா தேசத்தாரும் கலந்து கொள்வார்கள் என்றறிகிறோம்.
வெளிப்படுத்தல் 9 : 17 “குதிரைகளையும் அவைகளின்மேல் ஏறியிருந்தவர்களையும் நான் தரிசனத்தில் கண்டவிதமாவது; அவர்கள் அக்கினிநிறமும் நீலநிறமும் கந்தகநிறமுமான மார்க்கவசங்களை யுடையவர்களாயிருந்தார்கள்; குதிரைகளுடைய தலைகள் சிங்கங்களின் தலைகளைப்போலிருந்தன; அவைகளுடைய வாய்களிலிருந்து அக்கினியும் புகையும் கந்தகமும் புறப்பட்டன”.
குதிரையில் ஏறியிருந்தவர்களைவிட குதிரைகள் கூடுதலான அழிவை உண்டாக்குமென்பதால் குதிரைகளைக் குறித்தே யோவான் அதிகமாகப் பேசுகிறார். குதிரையில் ஏறியிருந்தவனின் நிறம் வித்தியாசமாக இருந்தது. குதிரையில் ஏறியிருந்தவர்கள் அக்கினி நிறமும் (சிவப்பு), நீலநிறமும் கந்தக நிறமுமான (மஞ்சள்) மார்க்கவசங்களை அணிந்திருந்தார்கள்; குதிரைகளுடைய தலைகள் சிங்கங்களின் தலைகளைப் போலும், அவைகளுடைய வாய்களிலிருந்து அக்கினியும், புகையும், கந்தகமும் புறப்பட்டன. கந்தகம் என்ற வார்த்தை துன்மார்க்கருக்கு விரோதமான நியாயத்தீர்ப்பையே வெளிப்படுத்தும் (ஆதியாகமம் 19 : 24, 25, யோபு 18 : 15, சங்கீதம் 11 : 6, ஏசாயா 30 : 33, எசேக்கியேல் 38 : 22)
வெளிப்படுத்தல் 9 : 18, 19 “அவைகளுடைய வாய்களிலிருந்து புறப்பட்ட அக்கினி புகை கந்தகம் என்னும் இம்மூன்றினாலும் மனுஷரில் மூன்றிலொருபங்கு கொல்லப்பட்டார்கள். அந்தக் குதிரைகளின் வல்லமை அவைகளுடைய வாயிலேயும் வால்களிலேயும் இருக்கிறது; அவர்களுடைய வால்கள் பாம்புகளுக்கு ஒப்பானவைகளாயும், தலைகளுள்ளவைக ளாயுமிருக்கிறது, அவைகளாலே சேதப்படுத்துகிறது.”
குதிரைகளின் வாய்களிலிருந்து புறப்படும் அக்கினி, புகை, மற்றும் கந்தகம் ஆகியவைகளினால் மூன்றில் ஒரு பங்கு மனிதர்கள் இப்படிப்பட்ட வாதையினால் கொல்லப்படுகிறார்கள். இதில் குதிரைகள்தான் யுத்தம் செய்கின்றன. அவைகளின் பெலன் அவைகளின் வாயிலும், வால்களிலும் இருக்கிறது. வால்கள் பாம்பின் உருவமுடையதாகவும் தலைகளுடனும் காணப்படுகிறது. மிகப்பெரிய சேதத்தை விளைவிப்பது குதிரைகளின் வால்கள் தான். முந்தின வாதையிலும் வெட்டுக்கிளிகள் வால்களிலிருந்த கொடுக்குகளினால் தான் மிகுந்த சேதம் உண்டானது (வெளிப்படுத்தல் 9 : 10). மகா உபத்திரவ காலத்தில் சோதோமுக்கு நேரிடுவதைக் காட்டிலும் பயங்கரமான சம்பவங்கள் நடைபெறும். மூன்றில் ஒரு பகுதி ஜனங்கள் கொல்லப்பட்டாலும், மூன்றில் ஒரு பகுதி இயற்கையால் அழிக்கப்பட்டாலும் ஜனங்கள் அதை பற்றிக் கவலைப்படவில்லை.
வெளிப்படுத்தல் 9 : 20, 21 ல் “ அப்படியிருந்தும், அந்த வாதைகளால் கொல்லப்படாத மற்ற மனுஷர்கள் பேய்களையும், பொன் வெள்ளி செம்பு கல்மரம் என்பவைகளால் செய்யப்பட்டவைகளாயும் காணவும் கேட்கவும் நடக்கவுமாட்டாதவைகளாயு மிருக்கிற விக்கிரகங்களையும் வணங்காதபடிக்குத் தங்கள் கைகளின் கிரியைகளை விட்டு மனந்திரும்பவுமில்லை; தங்கள் கொலைபாதகங்களையும், தங்கள் சூனியங்களையும், தங்கள் வேசித்தனங்களையும், தங்கள் களவுகளையும் விட்டு மனந்திரும்பவுமில்லை.”
ஜனங்கள் இரட்சிப்படையாதபடி அவர்கள் விக்கிரக ஆராதனையும், பேய்களையும், பொன், வெள்ளி, செம்பு, கல், மரம் என்பவைகளால் செய்யப்பட்டவைகளையும் வணங்கினர். பேய்களை ஆராதிக்கப்படுவதைக் குறித்து உபாகமம் 32 : 17 , லேவியராகமம் 17 : 7, சங்கீதம் 106 : 37, 1 கொரிந்தியர் 10 : 20, , வெளிப்படுத்தல் 9 : 20, 13 : 4 ஆகிய வசனங்களிலும் கூறப்பட்டுள்ளது. இவர்கள் பத்து கற்பனையில் இரண்டாவது கற்பனையை மீறுகிறார்கள்.
யாத்திராகமம் 20 : 4 ,5 ல் “ மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்; நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன்.” என்றும், யாத்திராகமம் 20 : 23 ல் “ நீங்கள் எனக்கு ஒப்பாக வெள்ளியினாலே தெய்வங்களையும் பொன்னினாலே தெய்வங்களையும் உங்களுக்கு உண்டாக்கவே வேண்டாம்.” என்ற தேவ கட்டளைகளைப் பார்க்கிறோம்.
இப்படிப்பட்ட தேவனுக்கு விரோதமான பாவங்களிலிருந்து ஜனங்கள் மனந்திரும்பவில்லை. அதன்பின் மனிதர்களுக்கு விரோதமான பாவங்களான கொலை பாதகம், சூனியம், வேசித்தனம், களவு இவைகளை விட்டும் மனந்திரும்பவேயில்லை. இவைகளில் கொலை, வேசித்தனம், களவு ஆகிய பாவங்கள் பத்து கற்பனையின் 6, 7, 8 வது கற்பனைகளில் இடம் பெறுகிறது. சூனியமானது பத்து கற்பனைகளில் சொல்லப்படாவிட்டாலும், சூனியக்காரர்கள் கொலை செய்யப்பட வேண்டுமென்பது விதிமுறை. இதை உபாகமம் 18 : 10 – 12, லேவியராகமம் 20 : 27, யாத்திராகமம் 22 : 18 ஆகிய வசனங்களில் காணலாம்… ஆறாவது எக்காள வாதையினால் கோடிக்கணக்கான மனிதர்கள் மரித்ததின் விளைவாக மீதமுள்ள மனிதர்கள், இவை தேவனுடைய கரத்திலிருந்து வருகிறதென்பதை உணர்ந்தவர்களாய் தேவனிடத்தில் திரும்புவார்கள் என்று எதிர்பார்ப்போம்.
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…