வெளிப்படுத்தல் : 9 : 1 ஐந்தாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது வானத்திலிருந்து பூமியின்மேல் விழுந்த ஒரு நட்சத்திரத்தைக் கண்டேன்; அவனுக்குப் பாதாளக்குழியின் திறவுகோல் கொடுக்கப்பட்டது.
ஒன்பதாம் அதிகாரம் மிகுந்த குழப்பமானது. மகா உபத்திரவக்காலம் மனித வரலாற்றிலேயே மிகவும் இருண்ட காலம் ஐந்தாம் தூதன் எக்காளம் ஊதிய போது இதற்கு முந்தி பறந்து வந்த தூதன் அறிவித்தபடி மிகப் பெரிய ஆபத்து உண்டாகிறது (வெளிப்படுத்தல் 8 : 13). ஒரு நட்சத்திரம் பூமியின்மேல் விழுவதையும், அவனுக்குப் பாதாளக்குழியின் திறவுகோல் கொடுக்கப்படுவதையும் யோவான் தரிசிக்கிறார். வெளிப்படுத்தல் 6 : 1 ல் ஆறாம் முத்திரை உடைக்கப்பட்ட போது வானத்தின் நட்சத்திரங்கள் அத்தி மரத்தின் காய்கள் பெருங்காற்று அடிக்கும் போது விழுவதைப் போல் பூமியில் விழுந்தன. வெளிப்படுத்தல் 8 : 10 லும் ஒரு நட்சத்திரம் தீவட்டியைப்போல் எரிந்து கீழே விழுந்தது. ஆனால் இங்கு கூறப்பட்ட நட்சத்திரம் இவைகளிலிருந்து வேறுபட்டதாக உள்ளது.
இந்த வசனத்தில் நட்சத்திரமென்பது உயிருள்ள, ஆள் தன்மையுள்ள ஒரு நபரென்று பார்க்கிறோம். இந்த நபர் யாரென்று சொல்லப்படவில்லை என்றாலும் அவனுக்கு யாரோ பாதாளக்குழியின் திறவுகோலைக் கொடுக்கிறார்கள். வெளிப்படுத்தல் 1 : 18 ன்படி பாதாளத்தின் திறவுகோலையுடையவர் இயேசு என்பதினால் அவர்தான் கொடுத்திருக்க வேண்டும். பாதாளம் என்பதும் நரகமென்பதும் ஒன்றல்ல. இயேசு மத்தேயு 12 : 40 ல் மனுஷகுமாரனும் இரவும் பகலும் மூன்றுநாள் பூமியின் இருதயத்தில் இருப்பார் என்றுள்ளது. பூமியின் இருதயமென்பது பாதாளமாகும். யோபு 26 : 6 ல் கர்த்தருக்கு முன்பாகப் பாதாளம் வெளியாய்த் திறந்திருக்கிறது என்றார்.
வெளிப்படுத்தல் 9 : 2 “அவன் பாதாளக்குழியைத் திறந்தான்; உடனே பெருஞ்சூளையின் புகையைப்போல அந்தக் குழியிலிருந்து புகைஎழும்பிற்று; அந்தக் குழியின் புகையில் சூரியனும் ஆகாயமும் அந்தகாரப்பட்டது.”
பாதாளக்குழி திறக்கப்பட்டதும் அங்கிருந்து பெருஞ்சூளையின் புகையைப் போல, எரிமலையிலிருந்து வருகிற புகையைப் போல புகை வெளிப்படுகிறது. பூமி முழுவதையும் அந்தப் புகை மூடிற்று, அந்தப் புகை கேடுண்டாக்குகிறவைகள். அதனால் சூரியனும் சந்திரனும் இருளடைகிறது. அந்தப் புகை அந்தகாரத்தை பூமியெங்கும் உண்டாக்குகிறது. ஆதியாகமம் 19 : 28 ல் சோதோம் கொமோரா பட்டணங்களைக் கர்த்தர் அழிக்கும்போது அந்தப் பூமியின் புகை சூளையின் புகையைப் போல எழும்பிற்று என்று பார்க்கிறோம்.
அப்போஸ்தலர் 2 : 19 ல் “அல்லாமலும் உயர வானத்திலே அற்புதங்களையும், தாழ பூமியிலே இரத்தம், அக்கினி, புகைக்காடாகிய அதிசயங்களையும் காட்டுவேன்.” என்றும்,
யாத்திராகமம் 19 : 18 ல் “கர்த்தர் சீனாய்மலையின் மேல் அக்கினியில் இறங்கின படியால், அது முழுவதும் புகைக்காடாய் இருந்தது; அந்தப் புகை சூளையின் புகையைப்போல எழும்பிற்று; மலை முழுவதும் மிகவும் அதிர்ந்தது.”என்றும்,
யோவேல் 2 : 10 ல் “சூரியனும் சந்திரனும் இருண்டுபோகும் என்றும் நட்சத்திரங்களும் ஒளிமழுங்கும்” என்றும்
யோவேல் 2 : 2 ல் “ அது இருளும் அந்தகாரமுமான நாள்” என்றுமுள்ளது.
வெளிப்படுத்தல் 8 : 4 ல் பலிபீடத்திலிருந்து எழும்பும் துபவர்க்கத்தின் புகை தேவனுக்கு முன்பாக எழும்பிற்று என்று பார்த்தோம். அதைத் தேவன் சுகந்த வாசனையாக ஏற்றுக்கொள்கிறார். குழியிலிருந்து வெளிவரும் புகையோ அந்தகாரத்தை உண்டாக்குகிறது. கடைசி நாட்களில் உலகமெங்கும் ஆவிக்குரிய இருட்டடிப்பு உண்டாயிருக்குமென்று பவுல்,
2 தெசலோனிக்கேயர் 2 : 11, 12 ல் ஆகையால் சத்தியத்தை விசுவாசியாமல் அநீதியில் பிரியப்படுகிற யாவரும் ஆக்கினைக்குள்ளாக்கப்படும்படிக்கு, அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய வஞ்சகத்தைத் தேவன் அவர்களுக்கு அனுப்புவார்.” என்கிறார்.
வெளிப்படுத்தல் 9 : 3 “அந்தப் புகையிலிருந்து வெட்டுக்கிளிகள் புறப்பட்டுப் பூமியின்மேல் வந்தது; அவைகளுக்குப் பூமியிலுள்ள தேள்களின் வல்லமைக்கொப்பான வல்லமை கொடுக்கப்பட்டது.”
அந்தப் புகையிலிருந்து தேள்களின் வலிமையைக் கொண்ட வெட்டுக்கிளிகள் புறப்பட்டு வருகின்றன. இவைகள் சாதாரண வெட்டுக்கிளிகள் அல்ல. ஏனென்றால் சாதாரண வெட்டுக்கிளிகள் புகையில் உயிர் வாழாது. மேலும் நீதிமொழிகள் 30 : 27 ல் வெட்டுக்கிளிகளுக்கு ராஜா இல்லையென்று சாலொமோன் ராஜா கூறுகிறார். ஆனால் 9 : 11 ல் இவைகளுக்கு ஒரு ராஜா இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட அற்பமான பிராணியைக் கூட தேவனால் வல்லமையாகப் பயன்படுத்த முடியும். எகிப்தியரின் வீடுகளை வெட்டுக்கிளிகளால் நிரப்பியதை யாத்திராகமம் 10 : 4 – 6 ல் வாசிக்கிறோம். தேசத்தை அழிக்க வெட்டுக்கிளிகளுக்குக் கட்டளை யிடுவேனென்று 2 நாளாகமம் 7 : 13 ல் எச்சரிக்கிறார். வெட்டுக்கிளிகள் தேவனுடைய சாபத்தின் அடையாளமாக இருந்தாலும், அந்தச் சாபத்தை நீக்கவும் தேவனால் கூடும் (யோவேல் 2 : 25).
பொதுவாக வெட்டுக்கிளிகள் பயிர்களையே அழிக்கும். ஆனால் இந்த வெட்டுக்கிளிகளோ மனிதரை அழிப்பதற்காக வருகின்றன. இந்த வெட்டுக்கிளிகள் அசுத்த ஆவிகளுக்கும், பிசாசுகளுக்கும், தீய ஆவிகளுக்கும் அடையாளங்களாக இருக்கின்றன. இந்த வெட்டுக்கிளிகளைக் குறித்தும், கர்த்தருடைய நாளைக் குறித்தும் யோவேல் முன்பே தீர்க்கதரிசனம் உரைத்திருக்கிறான் (யோவேல் 2 : 1 – 10). இந்த வெட்டுக்கிளிகள் தேள்களின் வலிமைக்கொப்பான வல்லமையுடையது. இது சாத்தானின் வல்லமையைக் குறிப்பிடுகிறது. தேள் கடியினால் பொதுவாக மரணம் சம்பவிப்பதில்லையென்றாலும், அதனால் உண்டாகும் வேதனை மிகவும் கடுமையானது.
தேளைக் குறித்து உபாகமம் 8 : 15, 2 நாளாகமம் 10 : 14 லூக்கா 10 : 19 ஆகிய வசனங்களிலும் வாசிக்கிறோம். தேளின் விஷம் வெட்டுக்கிளிகள் வாலில் இருக்கிறது.
வெளிப்படுத்தல் 9 : 4, 5 “பூமியின் புல்லையும் பசுமையான எந்தப் பூண்டையும் எந்த மரத்தையும் சேதப்படுத்தாமல், தங்கள் நெற்றிகளில் தேவனுடைய முத்திரையைத் தரித்திராத மனுஷரைமாத்திரம் சேதப்படுத்த அவைகளுக்கு உத்தரவு கொடுக்கப்பட்டது. மேலும் அவர்களைக் கொலைசெய்யும்படிக்கு அவைகளுக்கு உத்தரவு கொடுக்கப்படாமல், ஐந்துமாதமளவும் அவர்களை வேதனைப் படுத்தும்படிக்கு உத்தரவு கொடுக்கப்பட்டது; அவைகள் செய்யும்வேதனை தேளானது மனுஷரைக் கொட்டும்போது உண்டாகும் வேதனையையைப் போலிருக்கும்.”
இந்த வசனத்தில் யார் இந்த ஐந்து உத்தரவுகளைக் கொடுத்தாரென்று கூறப்படவில்லை. சிலர் தேவனென்றும், சிலர் பாதாளக்குழியின் திறவுகோலோடு விழுந்த தூதனென்றும் கூறுகின்றனர். என்ன உத்தரவென்றால் 1. புல், பூண்டு, மரங்களைச் சேதப்படுத்தக் கூடாதென்றும், 2. தேவனுடைய முத்திரையைத் தரித்த 144000 நபர்களைச் சேதப்படுத்தக் கூடாதென்றும், 3. மீதமுள்ள தேவனுடைய முத்திரையைத் தரித்திராத மனுஷரை மாத்திரம் சேதப்படுத்த வேண்டுமென்றும் 4. எவரையும் கொலை செய்யக் கூடாதென்றும் 5. ஐந்து மாதங்கள் மட்டுமே அவர்களை வேதனைப் படுத்த வேண்டும் என்றும் உத்தரவு கொடுக்கப்பட்டது.. வெட்டுக் கிளிகளினால் பாதிப்படைவது துன்மார்க்கமான உலகத்து மனிதர்கள்தான் என்றாலும், அவர்களுடைய ஜீவன் இன்னும் தேவனின் கரத்தில்தான் உள்ளது. சாத்தோனோ, மனிதனோ, இயற்கையோ தேவனால் அனுமதிக்கப்பட்ட பாதிப்புக்கு மேல் உண்டாக்க ஒருவராலும், ஒருக்காலும் முடியாது.
யோபு 1 : 12 ல் சாத்தானிடம் கர்த்தர் “அவன் பிராணனை மாத்திரம் தப்பவிடு” என்று கூறியதைப் பார்க்கிறோம். இந்த வெட்டுக்கிளிகளால் உண்டாகும் வேதனை தேள் கொட்டும் போது உண்டாகும் வேதனைக்கு ஒப்பானது என்று மீண்டும் வலியுறுத்தப் பட்டிருக்கிறது. தேள் கடியினால் உண்டாகும் வேதனை ஒரு வாரத்துக்கு மட்டுமே இருக்கும். வெட்டுக்கிளிகள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் வந்து பயிரை அழித்து விட்டுச் சென்று விடும். ஆனால் இங்கு கூறப்பட்டிருக்கும் வெட்டுக்கிளிகள், ஐந்து மாதம் வரைக்கும் ஜனங்களை வேதனைப்படுத்துவதாக இருக்கிறது. வெட்டுக்கிளிகளின் ஆயுசு காலம் ஐந்து மாதங்கள்தான். அதேபோல் இதில் வேதனை அனுபவிக்கிறவர்களும் ஐந்து மாதங்கள் மட்டுமே.
வெளிப்படுத்தல் 9 : 6 “அந்நாட்களில் மனுஷர்கள் சாவைத்தேடியும் அதைக் காணாதிருப்பார்கள், சாகவேண்டுமென்று ஆசைப்படுவார்கள், சாவோ அவர்களுக்கு விலகிஓடிப்போம்.”
தாங்கள் அனுபவிக்கும் தாங்க முடியாத வேதனையால் மனிதர்கள் சாவைத் தேடுவார்கள். ஆனால் அவர்கள் அதைக் காண மாட்டார்கள். யோவான் இப்படிப்பட்ட வெட்டுக்கிளிகள் தோற்றத்தை தெரிவிக்கிறார். அந்த வெட்டுக் கிளிகளின் உருவம் யுத்தத்திற்கு ஆயத்தம் பண்ணப்பட்ட குதிரைகளுக்கு ஒப்பாகவும், தலை களின் மேல் பொன்மயமான கிரீடமும், முகங்கள் மனுஷருடைய முகங்கள் போலும், கூந்தல் ஸ்திரீகளுடைய கூந்தல் போலும், பற்கள் சிங்கங்களின் பற்கள் போலும், இருப்புக் கவசங்களைப் போன்ற மார்க் கவசங்களும், அவைகளின் சிறகுகளின் இரைச்சல் இரதங்களின் இரைச்சலுக்கு ஒப்பாகவும், தேள்களின் வால்களுக்கு ஒப்பான வால்களும், அந்த வால்களில் கொடுக்குகளையும் உடையவைகளாயிருந்தன. அவைகள் ஐந்து மாதமளவும் மனுஷரைச் சேதப்படுத்துவதற்கு அதிகாரமுடையவைகளாயிருந்தன என்றுள்ளது (வெளிப்படுத்தல் 9 : 7 – 10).
வெளிப்படுத்தல் 9 : 11, 12 “அவைகளுக்கு ஒரு ராஜன் உண்டு, அவன் பாதாளத்தின் தூதன்; எபிரெயு பாஷையிலே அபெத்தோன் என்றும், கிரேக்கு பாஷையிலே அப்பொல்லியோன் என்றும் அவனுக்குப் பெயர். முதலாம் ஆபத்து கடந்துபோயிற்று; இவைகளுக்குப்பின்பு இன்னும் இரண்டு ஆபத்துகள், இதோ, வருகிறது.”
ஐந்தாம் தூதன் எக்காளம் ஊதுவதினால் பாதாளக் குழியிலிருந்து வெளிப்படும் வெட்டுக்கிளிகளுக்குப் பாதாளத்தின் தூதன் என்ற ராஜா இருக்கிறான். அவனுக்கு எபிரெய பாஷையிலே அபெத்தோன் என்றும், கிரேக்கு பாஷையிலே அப்பொல்லி யோன் என்றும் பெயர். இந்த இரண்டு வார்த்தைகளுமே “நிர்முலமாக்குகிறவன்” என்று பொருள்படும். முதலாம் ஆபத்து கடந்து போனாலும், இவைகளுக்குப் பின்பு அடுத்து வரும் இரண்டு எக்காளங்களும் இன்னும் பெரிதான ஆபத்துகளைக் கொண்டு வரவிருக்கிறது. இதைத்தான் வெளிப்படுத்தல் 8 : 13 ல் ஐயோ ஐயோ என்று பூமியில் குடியிருக்கிறவர்களைப் பார்த்துக் கூறுகிறதாக உள்ளது. பவுலடியார்,
எபேசியர் 6 : 12 ல் “ ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு.”
என்கிறார். ஆனாலும் அவைகளை மேற்கொள்ளத்தக்கதாக கிருபையின் நாட்களில் தேவனுடைய சர்வாயுத வர்க்கங்கள் வழங்கப்பட்டுள்ளன. முதலாம் ஆபத்து கடந்து போகும்போது ஒருவரும் மரணமடையவில்லை. இரண்டாம் ஆபத்தில் மூன்றில் ஒரு பங்கு மனிதர்கள் மரிப்பார்கள்.
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…