எரிகோ பட்டணமானது அங்கு வாழ்ந்திருந்த மக்களால் மிகவும் சீர்கெட்டிருந்தது. சிலைகளை வழிபட்டனர். புனித விபச்சாரம் என்னும் தேவதாசிமுறை பழக்கத்திலிருந்தது. அந்தப் பட்டணத்தில் ராகாப் உயிர்குல விலைமகளாக வாழ்க்கை நடத்தி வந்தாள். ஆனால் நல்லதொரு உள்ளம் அவளுக்கிருந்தது. அதாவது உண்மையான தேவனை பற்றிய வாஞ்சை அவளிடமிருந்தது. அவள் தேவனின் பலத்த செய்கைகளைப் பற்றிக் கேட்டபோது, அவரில் விசுவாசம் வைத்தாள்.

Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates

தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்

யோசுவாவின் திட்டம்:

முதலில் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு கானானில் இருந்தனர். ஆனால் கடைசியாக யாக்கோபு தன் குடும்பத்தாருடன் எகிப்துக்குப் போய்விட்டான். அங்கு 430 ஆண்டுகள் முடிந்து, கர்த்தர் மோசேயின் மூலம் அவர்களை வெளியே அழைத்து வந்தார். மோசே மரித்த பின் யோசுவாவின் தலைமையில் கானானுக்குள் பிரவேசிக்க இஸ்ரவேல் ஜனங்களை வழி நடத்திய போது, எரிகோபட்டணம் அதற்குத் தடையாக இருந்தது. எரிகோ கானானிலிலுள்ள மிகவும் பெரிதான பட்டணம். இது செங்குத்தான மலையின் மேல் அமைந்திருந்தது. அதன் அடிவாரத்தைச் சுற்றிலும் பெரிய அகழி ஓடியது. இந்தப் பட்டணத்தின் கோட்டைச்சுவர் 32 அடியிலிருந்து 41 அடி உயரமும், 6 லிருந்து 10 அடி வரை அகலமும் கொண்டது. இதைப் பிடித்தால் கானானுக்குள் பிரவேசித்து . விடலாம். யோசுவா எரிகோ பட்டணத்தைச் சுதந்தரிக்க எது சிறந்த வழி என்று அறியவும், எதிரியைப் பற்றிய தகவல்களைத் தெரிந்து கொள்ளவும், இரண்டு ஒற்றர்களாக காலேபையும், பினெகாஸையும் அனுப்பினான். அவர்கள் ராகாப் என்னும் வேசியின் வீட்டுக்குள் பிரவேசித்து, அங்கே அவளிடம் எரிகோவைப் பற்றி விசாரித்தார்கள் ( 2 : 1).

 

ராகாபின் வீடு:

ராகாப் வேசியாக இருந்த போதிலும், தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவளாயிருந்ததால் ராகாபின் வீட்டிற்குத் தேவன் அவர்களை வழிநடத்தினார். ராகாபின் வீடு எரிகோ பட்டணத்தின் அலங்கத்திலிருந்தது. எனவே அந்நியர்கள் அங்கு வரவும், தகவல்களைச் சேகரிக்கவும், உகந்த இடமாக இருந்திருக்கும். இங்கு வருபவர்களை யாரும் சந்தேகிக்க மாட்டார்கள். ராகாபின் வீட்டில் எளிதாகத் தகவல் கிடைக்கும் என்று நினைத்ததாலும், தப்பித்து ஓட வசதியாக அலங்கத்திற்குள் அந்த வீடு இருந்ததாலும், அங்கு ஒற்றர்கள் தங்கியிருந்திருக்கலாம். காலேபும், பினெகாஸும் தவறான நோக்கத்தோடு ராகாபின் வீட்டிற்குச் செல்லாமல் விசாரிப்பதற்கு மட்டுமே அங்கு சென்றனர். ஏனென்றால் பினெகாஸ் இஸ்ரவேலர் வேசித்தனம் செய்தபோது எழுந்து நியாயந்தீர்த்தவன். 

ராகாப் ஒற்றர்களிடம் கூறியது:

ராகாப் ஒற்றர்கள் வந்த காரியத்தைக் கேட்டவுடன், எரிகோ தகர்க்கப்படுமுன்னே “கர்த்தர் உங்களுக்குத் தேசத்தை ஒப்புக்கொடுத்தார்” என்று அவர்களிடம் கூறினாள். தாங்கள் கர்த்தர் சிவந்த சமுத்திரத்தின் தண்ணீரை வற்றிப் போகப் பண்ணியதைக் கேள்விப்பட்டிருந்ததையும், யோர்தானுக்கு அப்புறத்தில் எமோரியரின் ராஜாவாகிய சீகோனுக்கும், ஓகுக்கும் செய்ததைக் கேள்விப்பட்டிருந்ததையும் கூறினாள் (2 : 10) எரிகோ பட்டணத்தின் ஜனங்கள் பயத்தில் உறைந்து போயிருப்பதாகக் கூறினாள். அவர்களுடைய தைரியம் அற்றுப் போனதாகவும், திகில் பிடித்திருப்பதாகவும், சோர்ந்து போயிருப்பதாகவும் கூறினாள் (2 : 9, 11). ராகாப் கானானியப் பெண்ணாக இருந்தாலும், கர்த்தர் செய்த அற்புதங்களைப் பற்றிக் கேள்விப் பட்டிருந்தாள். இந்தக் கேள்வி ஞானத்தினால் உண்மையான தேவன் யார் என்று கண்டுபிடிக்கத் தாகத்துடன் இருந்தாள். இவைகளைக் கேள்விப்பட்டு உண்மையான தேவன் கர்த்தர் தான் என்று விசுவாசித்திருந்தாள்.

எரிகோ ராஜாவின் கட்டளையும் செயலும்:

எரிகோ பட்டணத்தை வேவு பார்க்க ஒற்றர்கள் வந்திருக்கிறார்கள் என்பதையும், அதுவும் அவர்கள் ராகாபின் வீட்டிற்கு வந்திருப்பதையும் எரிகோவின் ராஜா கேள்விப்பட்டார். எனவே ராஜா ராகாபினிடத்திற்கு ஆளனுப்பி அவர்களை வெளியே கொண்டுவரக் கட்டளையிட்டார். 

ராஜாவின் ஆட்கள் ராகபினிடத்தில் வந்து, “உன் வீட்டிற்குள்ளிருக்கிற, தேசத்தை வேவுபார்ப்பதற்கு வந்த மனுஷர்களை வெளியே அனுப்பு” என்று கட்டளையிட்டனர் (2 : 2, 3). 

ராகாபின் பதில்:

ராகாப் தன்னிடத்தில் மனுஷர்கள் வந்தது மெய்தான் என்றாள். அவர்கள் எந்த தேசத்திலிருந்து வந்தவர்களென்று தனக்குத் தெரியாது என்று பொய் சொன்னாள். இருட்டு வேளையில் அவர்கள் தன்னுடைய வீட்டைவிட்டுப் போய் விட்டதாகக் கூறினாள். அவர்கள் எங்கே போனார்கள் என்று தனக்குத் தெரியாது என்றாள். சீக்கிரமாய் போய்த் தேடினால் அவர்களைப் பிடிக்கலாம் என்று வந்தவர்களுக்கு ஆலோசனை கூறினாள். தன்னுடைய வீட்டிற்கு வந்த மனிதர்களைப் காப்பதற்காகத், தன் சொந்த ஜனங்களிடம் பொய் கூறினாள். பொய், தேவன் வெறுக்கும் பாவமாக இருந்தாலும் ராகபின் சம்பவத்தைப் பொறுத்தவரை அவளது பொய்க்கான அடிப்படைக் காரணமாக விளங்கியது அவளது விசுவாசமே. இஸ்ரவேலின் தேவனைப் பற்றிக்கொண்டிருந்த விசுவாசமே ஒற்றர்களை ஒழித்து வைக்கக் காரணமாயிற்று.

Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates

தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்

ராகாப் செய்த செயலும், வேண்டுகோளும்: 

ராகாப் சணல் தட்டைகளைப் பக்குவப்படுத்தி, அவைகளை உடைத்து உள்ளே உள்ள மெல்லிய நூலை எடுத்து அவைகளைப் பயன்படுத்தி இரத்தாம்பர விலையுயர்ந்த ஆடைகளை செய்து விற்று வந்தவள். ஆதலால் சணல் தட்டைகள் அவள் வீட்டிற்குள் இருந்தது. எனவே தன் வீட்டிற்கு வந்த மனுஷர்களை தன்னுடைய வீட்டின் மேல் ஏறப்பண்ணி வீட்டின் மேல் பரப்பப்பட்ட சணல் தட்டைகளுக்குள்ளே அவர்களை மறைத்து வைத்திருந்தாள். ராஜாவின் அதிகாரிகள் தன் வீட்டை விட்டு போகும் வரை அவர்களைக் கீழே இறக்காமல் காத்திருந்தாள். அவர்கள் போன பின்பு, அந்த மனுஷர்கள் படுத்துக் கொள்வதற்கு முன்பே ராகாப் அவர்களிடத்திற்கு ஏறிப்போய் கர்த்தர் உங்களுக்குத் தேசத்தை ஒப்புக்கொடுத்தார் (2 : 6 – 8) என்றும் உங்கள் தேவனாகிய கர்த்தரே உயர வானத்திலும், கீழே பூமியிலும் தேவனானவர் என்றாள். ராகாப் வேவுகாரர்களுக்கு தான் உதவி செய்தபடியினால் தன்னுடைய தகப்பன் குடும்பத்துக்குத் தயவு செய்ய வேண்டும் என்றும், அதை உறுதிபடுத்த கர்த்தர் பேரில் ஆணையிட்டுக் கொடுக்க வேண்டும் என்றும் விண்ணப்பித்தாள். 

 

மேலும் அவளுடைய தகப்பனையும், தாயையும், சகோதரரையும், சகோதரிகளையும் அவர்களுக்குண்டான எல்லாவற்றையும் உயிரோடு காக்க வேண்டும் என்றும், எங்கள் ஜீவனை சாவுக்குத் தப்புவிக்க வேண்டும் என்றும் கூறி அதற்கு நிச்சயமான அடையாளத்தைத் தனக்குக் கொடுக்க வேண்டும் என்றும் வேண்டினாள். இதில் முதலில் தன்னுடைய வீட்டாருக்குத் தயவு பண்ணக் கேட்டுக்கொண்டு, இரண்டாவதாக தனக்கும் தயவு பண்ண வேண்டும் என்று விண்ணப்பித்ததைப் பார்க்கிறோம் (2 : 12, 13). ராகாப் வந்திருந்தவர்களைக் கயிற்றினாலே ஜன்னல் வழியாய் 40 அடி உயரமான சுவரில் இறங்க உதவி செய்தாள் (2 :15). மேலும் ராகாப் அவர்களை நோக்கி “தேடுகிறவர்கள் உங்களைக் காணாதபடி மலையிலே மூன்று நாட்கள் ஒளிந்திருந்து, அதன்பின் உங்கள் வழியில் செல்லுங்கள் என்று ஆலோசனை கூறினாள் (2 : 16)

ராகாபுக்கு ஒற்றர்களின் நிபந்தனைகள் :

  1. ராகாபிடம் வந்த மனுஷர்கள் அவர்களை இறக்கிவிட்ட சிவப்பு நூல் கயிற்றை, இறக்கிவிட்ட ஜன்னலில் கட்டி அடையாளமாக இருக்கக் கட்டளையிட்டனர் — 2 : 17
  2. ராகாபிடம் அவளுடைய தகப்பனையும், தாயையும், சகோதரர்களையும், தகப்பன் குடும்பத்தார் அனைவரையும், அவள் வீட்டிற்குள்ளே இருக்கச் செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டனர் — 2 : 17
  3. ராகாபிடம் ஒற்றர்கள் “யாராவது ராகாபின் வீட்டிலிருந்து வெளியே வந்தால், அவர்களுடைய இரத்தப்பழி அவர்களின் தலையில் மேலே இருக்கும் என்றும், அது தங்களைச் சாராது என்றும், வீட்டிலிருக்கிற எவன் மேலாகிலும் நாங்கள் கை போட்டால், அந்த இரத்தப்பழி எங்கள் மேல் வரும்” என்றும் கூறினர் — 2 : 19
  4. மேலும் ஒற்றர்கள் கண்டிப்பாகத் தாங்கள் வந்த காரியத்தை அவள் வெளிப்படுத்தினால், தாங்கள் கொடுத்த ஆணைக்கு நீங்கலாவோம் என்றார்கள்.

யோசுவாவின் செயல்:

வேவுகாரர்கள் திரும்பி யோசுவாவிடம் சென்று, தங்களுக்குச் சம்பவித்த யாவையும் அவனுக்குத் தெரிவித்தார்கள் . யோசுவா ஜனங்களை சித்தீமிலிருந்து புறப்படப் பண்ணி, தேவனுடைய கட்டளையின்படி அவர் செய்த செயலின்படி யோர்தானைக் கடந்தனர். பின் கில்காலில் பாளயமிறங்கி பஸ்காவை ஆசரித்தனர். கர்த்தர் யோசுவாவிடம் எரிகோவைப் பிடிக்க 6 லட்சம் புருஷர்களை அனுப்ப வேண்டுமென்று கட்டளையிட்டார். அதற்கு முன்பு யோசுவாவின் தலைமையில் ரெவிதீமில் பட்டயத்தினாலும் ஈட்டியினாலும் எதிரிகளை மேற்கொண்டு ஜெயித்தனர். ஆனால் இந்த முறை எரிகோவை 6 நாட்கள் ஒவ்வொரு முறை சுற்றிவரவும், ஏழாவது நாள் 7 முறை சுற்றி வரவும் கர்த்தர் கட்டளையிட்டு, அலங்கத்தை விழச் செய்தார். அவ்வளவு உயரமான அகலமான அலங்கம் இடிந்து விழுந்தால் கீழே நிற்கிற ஜனங்கள் ஒன்றுமில்லாமல் ஆகியிருப்பார்கள், ஆனால் அகழ்வாராய்ச்சியில் ஆராய்ச்சி செய்யப்பட்ட போது, அவர்கள் மிகுந்த ஆச்சரியமடைந்தனர். உள்புறமாக அந்தச் சுவர் விழுந்திருப்பதையும், ஒரு சில வீடுகள் மட்டும் இருப்பதையும் கண்டுபிடித்தனர். அந்தக் கற்களின் மேலேறி ஜனங்கள் எரிகோவுக்குள் பிரவேசித்து, பட்டணத்தைப் பிடித்து அங்குள்ள ஜனங்களையும், மிருகங்களையும் பட்டயக்கருக்கினால் சங்காரம் பண்ணினார்கள். இந்த ஒரு வீடு மட்டும் ஜன்னலில் கட்டிய சிவப்பு நூலோடு நின்று கொண்டிருந்தது. வேவுகாரர்கள் கூறிப் போனாலும் ராகபின் வீட்டைக் காத்தது கர்த்தர். 

யோசுவா தேசத்தை வேவு பார்க்க அனுப்பின இரண்டு புருஷர்களையும் நோக்கி, நீங்கள் ஆணையிட்டபடி அந்த ஸ்திரீயையும், அவளுக்குண்டான யாவற்றையும் வெளியே கொண்டு வாருங்கள் என்று கட்டளையிட்டார். அப்பொழுது அந்த வாலிபர்கள் உள்ளே போய், அவளையும் அவள் தகப்பனையும், தாயையும், சகோதரர்களையும் அவளுக்குள்ள யாவையும் வெளியே அழைத்துக் கொண்டு வந்தனர். அவர்களை பாளையத்திற்கு புறம்பே இருக்கும்படி பண்ணினார்கள் (6 : 23). ஏன் அவர்களை பாளயத்துக்குப் புறம்பே இருக்கும்படி கூறினார்களென்றால் புலம்பல் 1 : 10 ல் யாக்கோபின் சந்ததியாரைத் தவிர வேறு யாரும் சபைக்குள் வரலாகாது என்று தேவன் தடை செய்திருந்தார். ஆனால் 6 : 25 ம் வசனத்தில் அவளும், அவள் குடும்பத்தாரும் இஸ்ரவேலின் நடுவிலே இந்நாள்வரை குடியிருப்பதாகப் கூறியிருப்பதைப் பார்க்கிறோம் . இதைக் கீழேயுள்ள தலைப்பில் பார்க்கலாம். 

ராகாபை சல்மோன் திருமணம் செய்தது:

இஸ்ரவேலர் வரும்போது கோத்திரம் கோத்திரமாகத்தான் வருவார்கள். அதில் முதலாவது வருவது யூதா கோத்திரம். யோசுவா கில்காலிருந்து யூதா கோத்திரத்தாரைப் புறப்பட்டு வரச் செய்தபோது, யூதா கோத்திரத்தின் சேனாதிபதியாக சல்மோன் வருகிறார். இதற்கு முன் சேனாபதியாக இருந்த நகசோனின் மகன்தான் சல்மோன் (எண்ணாகமம் 10 12 — 14மத்தேயு 1 : 4). இந்த சல்மோன் யுத்த வீரர் என ஓசியா 10 : 10 ல் பார்க்கிறோம். இவர் வனாந்தரத்தில் பிறந்தவர். எகிப்தியருக்கு தேவன் கொடுத்த வாதைகளையும், செங்கடலைப் பிளந்ததையும் கேட்டு அறிந்தவர். அவர் ராகாப் பாளயத்துக்குப் புறம்பே இருக்கக்கூடாது என்று சிந்தித்து, அவளை உள்ளே கொண்டு வர யோசித்து திருமணம் செய்து கொண்டார். இதில் சாலமோனின் பரந்த மனதைக் காணலாம். அதனால் ராகாப் உள்ளே வர வாசல் திறக்கப்பட்டது. அவளுடைய விசுவாசத்தைக் கனப்படுத்திய தேவன் அவளுடைய எதிர்காலத்தையும் அமைத்துக் கொடுத்ததைப் பார்க்கிறோம். நகசோனின் சகோதரி தான் ஆசாரியனாகிய ஆரோனின் மனைவி. அத்தனை பிரசித்தி பெற்ற குடும்பம் ராகாபையும் அவள் குடும்பத்தையும் காப்பாற்றியது மட்டுமல்ல, இஸ்ரவேலின் பிரபுவை ஆரோன் கோத்திரத்தில் சம்பந்தம் பண்ணி, பிரதான குடும்பத்திலிலுள்ள சல்மோனோடு திருமணம் செய்து வைத்தார்.

முடிவுரை:

வேசித்தொழிலிலிருந்த இஸ்ரவேலரல்லாத கானானியப் பெண்ணான ராகாப், கர்த்தரைப் பற்றிக் கேள்விப்பட்டு, அவைகளைத் தன் இருதயத்தில் இருத்தி மனந்திரும்பினாள். அதனால் இயேசுகிறிஸ்துவின் பரம்பரைப் பட்டியலிலும், விசுவாச வீரர்களின் பட்டியலிலும் இடம் பெற்றதைப் பார்க்கிறோம். ராகாப் விசுவாசத்தினால் வரும் நீதிக்கு எடுத்துக்காட்டாக மாறினாள். உண்மையாகக் ஊக்கத்துடன் தேடுகிறவர்களைக் கர்த்தர் உயர்த்தாமல் இருப்பதில்லை என்பதற்கு ராகாப் ஒரு மாபெரும் எடுத்துக்காட்டு. நாமும் மெய்யான தேவனுடைய மகத்துவத்தை அறிந்து, அவரையே விசுவாசித்து அவருடைய பிள்ளைகளாக மாறுவோம்.

ராகபின் குணநலன்கள்:

  1. ராகாப் இஸ்ரவேலரல்லாத கானானியப் பெண். வேசித்தொழில் செய்தவள் (யோசுவா 2 : 1).
  2. மெய்யான தேவனைக் கண்டுபிடிக்க வேண்டுமென்ற ஆத்மதாகம் உள்ளவள்.
  3. ராகாப் கேள்விப்பட்ட அற்புதங்களை மனதில் தியானித்து மெய்யான தேவனைக் கண்டு கொண்டவள். அதுவரை வணங்கின தெய்வங்களை விட்டுவிட்டுத் தான் கேள்விப்பட்ட உண்மையான தேவனை, விசுவாசத்துடன் ஏற்றுக் கொண்டவள் (யோசுவா 2 : 10, 11).
  4. தனக்கு அழிவு நிச்சயம் என்று நம்பியதோடு வாய்ப்பு கிடைத்தவுடன் அழிவிற்குத் தப்ப திட்டம் தீட்டியவள் (யோசுவா 2 : 9, 11).
  5. தேவனுடைய மக்களுடன் சேர்ந்து கொள்ள, தனது வாழ்க்கையையே பணயம் வைத்தாள் (எரிகோவின் ராஜா அவளுடைய திட்டத்தைக் கண்டு பிடித்திருந்தால் ராகபின் குடும்பத்தைக் கொன்றிருப்பான்).
  6. தேவனுடைய வார்த்தையை முற்றிலும் நம்பினவள்.
  7. தேவன் பாதுகாப்பார் என்ற விசுவாசத்தோடு, வேவுகாரர்களை ராகாப் ஏற்றுக்கொண்டாள் (எபிரேயர் 11 : 31).
  8. தன்னுடைய குடும்பத்தாரின் உயிருக்காக மன்றாடி அடையாளம் கேட்டவள் (யோசுவா 2 : 12,13).
  9. எரிகோவை இஸ்ரவேலர் கைப்பற்றி ராகபை விடுவித்த போது ஓடிப்போக முயற்சிக்காமல், இஸ்ரவேலருடன் தங்கினவள்.
  10. பாவ வாழ்க்கையை வெறுத்து, மனந்திரும்பி புதிய வாழ்க்கையைத் தொடங்கி, யூதகுல பிரபுவைத் திருமணம் செய்து கொண்டவள் (மத்தேயு 1 : 5).
  11. இயேசுகிறிஸ்துவின் முன்னோர்களின் பட்டியலிலும், விசுவாசிகளின் பட்டியலிலும் இடம் பெற்றவள் (எபிரேயர் 11 : 31).

Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates

தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்

Sis. Rekha

View Comments

Share
Published by
Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago