இயேசு கிறிஸ்துவைப் பற்றியும் அவருடைய பிறப்பைப் பற்றியும் சிந்திப்போம். இயேசு பிறப்பதற்கு முன் பிதாவுக்குள்ளிருந்து வார்த்தையாக, ஒளியாக, ஜீவனாக இருந்து குமாரனாக வெளிப்பட்டார். நீதிமொழிகள் 8 : 23 ல் “பூமி உண்டாகுமுன்னும், ஆதிமுதற்கொண்டும் நான் அநாதியாய் அபிஷேகம் பண்ணப்பட்டேன்.” என்றும் எபிரேயர் 1 : 2ல் பிதா இயேசுவை சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக நியமித்து அவரைக் கொண்டே உலகங்களை உண்டாக்கினாரென்றும் கூறியிருப்பதைப் பார்க்கிறோம். 4000 ஆண்டுகளுக்கு முன்பாகவே மேசியாவாகிய இரட்சகர் வருவார், சாத்தானையும், பாவத்தையும் அழிக்கிறவர் வருவார், உலகத்தை மீட்கிறவர் வருவாரென்று பழையஏற்பாடு கூறுகிறது. ஆதியாகமம் 3 : 15 ல் சாத்தானின் தலையை நசுக்க வருவாரென்றும், 49 : 10 ல் சமாதானக் கர்த்தர் வருவாரென்றும், எண்ணாகாமம் 24 : 17 ல் யாக்கோபிலிருந்து ஒரு நட்சத்திரம் உதிக்குமென்றும், ஏசாயா 7 : 14ல் கன்னியின் வயிற்றில் பிறப்பாரென்றும், மீகா 5 : 2 ல் இஸ்ரவேலை ஆளப்போகிறவர் பெத்லகேமிலிருந்து வருவாரென்றும் கூறப்பட்டுள்ளது. அதன்படி இயேசு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகப் பெத்தலகேமில் பிறந்தார். பெத்லகேமுக்கு இன்னொரு பெயர் எப்பிராத்தா. எப்பிராத்தா என்றால் சாம்பல் என்று பொருள். சாம்பல் என்றால் எல்லாம் முடிந்து விட்டது என்பதாகும். எல்லாம் முடிந்த இடத்தில் புதிய ஆரம்பமாக இயேசுவை பிதா அங்கு பிறக்கச் செய்தார். இது முந்தின காலகட்டத்தில் சுட்டெரிக்கப்பட்ட பட்டணம். நம்முடைய வாழ்க்கையு முடிந்து போனதுபோல் தோன்றலாம். இயேசுவானவர் அதை மறுபடியும் தொடங்கச் செய்வார். முதல் ஆதாமைப் பெற்றோரின்றி உருவாக்கின சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இரண்டாம் ஆதாமைக் தகப்பனின்றி கன்னியில் வயிற்றில் உருவாக்கினார். 

கலிலேயாவில் வாழ்ந்து வந்த யோசேப்பையும், மரியாளையும் கர்த்தர் தன்னுடைய வார்த்தை நிறைவேற வேற்று மனிதனான அகுஸ்துராயனால் ஒரு கட்டளையைப் பிறப்பிக்கச் செய்தார். அது என்ன கட்டளையென்றால் ஒவ்வொரு குடும்பமும் தங்கள் தங்கள் ஊர்களில் குடிமதிப்பு எழுதப்பட வேண்டுமென்பதாகும். எனவே தாவீதின் வம்சத்தானான யோசேப்புக்கு பெத்லகேமுக்குச் செல்ல வேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்தினார் (லூக்கா 2 : 1 5). தன்னுடைய வார்த்தை நிறைவேற ரோம சரித்திரத்தில்கூட அதைச் செய்ய வைத்தார். 

யோசுவா 21 : 45 ல் “கர்த்தர் இஸ்ரவேல் குடும்பத்தாருக்குச் சொல்லியிருந்த நல்வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை; எல்லாம் நிறைவேறிற்று.” என்றும் 

1சாமுவேல் 3 : 19 ல் “….அவர் தம்முடைய எல்லா வார்த்தைகளிலும் ஒன்றையாகிலும் தரையிலே விழுந்து போகவிடவில்லை.”

என்றும் கூறியுள்ளபடி தன்னுடைய வார்த்தைகள் ஒவ்வொன்றையும் அப்படியே நிறைவேற்றினார். அப்பத்தின் வீடாகிய பெத்லகேமில் ஜீவ அப்பமான இயேசுவைத் தேவன் பிறக்கச் செய்தார். இயேசுவானவர் ராஜ குலத்திலிருந்தோ, ராஜாவின் அரண்மனையிலிருந்தோ பிறக்காமல் ஏழை தச்சனின் மகனாக, யூதனின் ராஜாவாக, மாட்டுக் கொட்டகையில் பிறந்தார். இயேசுவைப் போல் பரிசுத்த ஆவியால் பிறந்தது யாருமில்லை. அவர் ஒரு குறிப்பிட்ட கூட்டத்துக்காகப் பிறக்கவில்லை. இயேசு யூதருக்கு மட்டும் உரியவர் அல்ல. அகில உலகத்துக்கும் உரியவர். ஏனெனில் அவர் பிறந்தவுடன் மேய்ப்பர்களுக்குத் தூதனானவர் லூக்கா 2 : 10 ல் “தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.” என்று கூறி இருப்பதைப் பார்க்கிறோம். மேய்ப்பர்களுக்கு ஒரேயொரு தூதன் இயேசுவானவர் பிறக்கும் நற்செய்தியை அறிவித்தவுடன் பரம சேனையின் திரளே அந்தத் தூதனுடன் தோன்றி தேவனைத் துதித்ததைப் பார்க்கிறோம். அதைக்கேட்ட மேய்ப்பர்கள் தூதன் கூறியபடி பெத்லகேமுக்குப் போய் மரியாளையும் , பிள்ளையையும் கண்டு தூதன் தங்களிடம் சொன்னதை பிரசித்தம் பண்ணினார்கள். அதைக் குறித்து யாவரும் ஆச்சரியப்பட்டார்கள் என்று பார்க்கிறோம். மரியாள் அவர்கள் கூறினதையெல்லாம் தன்னுடைய இருதயத்தில் வைத்து சிந்தனை பண்ணினாள். மரியாளிடம் இயேசு பாலகனாய்ப் பிறந்தார். ஆனால் பிதா நமக்கு இயேசுவைக் குமாரனாகக் கொடுத்தாரென்று ஏசாயா 9 : 6 ல் பார்க்கிறோம். மேலும் மேய்ப்பர்களிடம் கூறும் போதே கிறிஸ்து என்னும் இரட்சகர் பிறந்திருக்கிறாரென்றுதான் தேவதூதர்களுக்குக் கூறியதை லூக்கா 2 : 11 ல் பார்க்கிறோம். கிறிஸ்து என்றால் அபிஷேகம் பண்ணப்பட்டவர் என்று பொருள். எதற்காக அந்த நாமம் கொடுக்கப்பட்டதென்றால் 

பிலிப்பியர் 2 : 10, 11 “இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.”

நாம் இரட்சிக்கும்படிக்கு வானத்தின் கீழெங்கும் மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவே இல்லை (அப்போஸ்தலர் 4 : 12). உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற ஆட்டுக்குட்டியாக வந்தார் (யோவான் 1 : 29). கெட்டுப்போனதை இரட்சிக்க வந்தார் (மத்தேயு 18 : 11). இழந்து போனதைத் தேடவும் இரட்சிக்கவும் வந்தார் (லூக்கா 19 : 10). மனுஷனுடைய ஜீவனை அழிக்கிறதற்கு அல்ல, இரட்சிக்கிறதற்கே வந்தார் (லூக்கா 9 : 56). அநேகரை மீட்கவும், தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் (மத்தேயு 20 : 28). உலகத்தில் உள்ள அனைவருக்கும் மேய்ப்பனாக வாழ்ந்தார் (யோவான் 10 :11). இயேசு பாவிகளை இரட்சிக்க மனு உருவில் வந்தார் (1தீமோத்தேயு 1 : 15). .பிதா அவரை உலகமே இரட்சிக்கப்படுவதற்காகவும், அவரை விசுவாசிக்கிறவர்கள் நித்தியஜீவனை அடையும்படிக்கு அவருடைய குமாரனாக இயசுவைத் தந்தருளினார் (யோவான் 3 : 16, 17). மேய்ப்பர்கள் தங்கள் மந்தையை ராத்திரி வேளையில் காத்துக் கொண்டிருந்தபோது “அவ்வேளையில்” கர்த்தருடைய தூதன் அங்கு வந்து நின்றான் என்று பார்க்கிறோம். இதேபோல்தான் கிதியோன் போரடித்துக் கொண்டிருந்த வேளையில் தூதன் அங்கு வந்து நின்றதை நியாயாதிபதிகள் 6 : 11 ல் பார்க்கிறோம். மனோவாவும், மனைவியும் வயல்வெளியிலிருக்கும்போது தேவதூதன் அவர்களிடம் வந்ததை நியாயாதிபதிகள் 13 : 9 ல் பார்க்கிறோம். மேய்ப்பர்களோ, கிதியோனோ, மனோவாவோ கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டதாகவோ ஜெபித்ததாகவோ இல்லை. இவர்கள் அனைவருக்கும் எதிர்பாராமல் நடந்தது. இதேபோல் நீங்களும் எதிர்பாராததை உங்கள் வாழ்க்கையில் நடக்கச் செய்வார். மேய்ப்பர்களிடம் தூதன் வந்து நின்றபோது கர்த்தருடைய மகிமை அவர்களை சுற்றிலும் பிரகாசித்ததாகப் பார்க்கிறோம். அதேபோல் வெளிப்படுத்தல் 18 : 1 ல் வானத்திலிருந்து தூதன் இறங்கி வந்தபோது அவனுடைய மகிமையினால் பூமி பிரகாசமாயிற்று என்றும், பேதுரு சிறைச்சாலையில் இருக்கும்போது கர்த்தருடைய தூதன் அங்கு வந்ததால் அறையிலே வெளிச்சம் பிரகாசித்ததாக அப்போஸ்தலர் 12 : 7 லும். வானத்திலிருந்து ஒரு ஒளி பவுலைச் சுற்றிப் பிரகாசித்ததை அப்போஸ்தலர் 9 : 3 லும். பார்க்கிறோம். இவைகளில் மேய்ப்பர்களுக்கு உண்மையை உணர்த்தவும், பேதுருவும் சத்துரு பறித்த கச்சையையும், பாதரட்சைகளையும் கொடுத்து அவனை வெளியே கொண்டுவரவும், பவுலுக்கு அவன் சென்று கொண்டிருந்த தவறான வழியிலிருந்து திருத்தவும் வந்ததுதான் அந்த மகிமையும், பிரகாசமும். மேய்ப்பர்களுக்கு தாவீதின் ஊர் என்று ஊரை மட்டும் தெரிவிக்கப்பட்டதேயொழிய விலாசமோ தாய், தகப்பன் பெயரோ கொடுக்கப்படவில்லை. ஒரேயொரு அடையாளம் பிள்ளையைத் துணிகளில் சுற்றி முன்னணியில் கிடத்தப்பட்டிருக்கும் என்பதுதான். தூதன் இதில் அடையாளத்தைக் கொடுத்து இயேசு இருக்கும் இடத்தை மட்டும் கூறினான். 

வித்தியாசமான ஒரு நட்சத்திரத்தைப் பார்த்து ஞானிகள் வழிநடத்தப் பட்டனர். அந்த நட்சத்திரம் தூதனைப்போல பேச்சினால் காட்டிக் கொடுக்காமல் தன்னுடைய தோற்றத்தினால் காட்டிக் கொடுத்தது. ஞானிகள் அரண்மணையைப் பார்த்தவுடன் அங்குதான் பிறந்திருப்பாரென்று சென்றாலும் நட்சத்திரம் அந்த இடத்தை விட்டுப் போகவில்லை. அவர்கள் வெளியே வரும்வரை நின்றது. காரணம் அது இயேசு பிறந்த இடத்தைக் காட்டவந்த நட்சத்திரம். அதற்குக் கொடுக்கப்பட்ட வேலை அது. இதை முன்னமே பிலேயாம் தீர்க்கதரிசி எண்ணாகாமம் 24 : 17 ல் கூறினான். உலகத்தில் வந்து எந்த மனுஷனையும் பிரகாசிக்கிற ஒளிதான் இயேசு என்ற ஒளி என்று யோவான் 1 : 9ல் உள்ளதை அறிவோம். இயேசு தன்னுடைய பிள்ளைகளை இருளில் இருக்க விடாதபடி உலகத்துக்கு ஒளியாக வந்தார் என்று யோவான் 12 : 46 லும் உலகத்திலிருக்கையில் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன் என்று யோவான் 9 : 5 லும் கூறினார். நமக்காக வாழ்ந்தார். நமக்காக மரித்தார். நமக்காக உயிர்த்தார். நமக்காக பரமேறினார். நமக்காகத் திரும்பவும் வரப்போகிறார். அவர் பிறந்ததால் பாவத்தின் வேர் பிடுங்கப்பட்டது. காணக்கூடாத தேவாதி தேவனே நாம் கண்டு கொள்ளும்படி கிருபையின் வழியைத் திறந்து கொடுத்திருப்பதால் அவர் நம்மேல் வைத்த அன்பைப் பார்க்கிறோம். மரியாளுக்கும் யோசேப்புக்கும் முதற்பேறான குமாரனாக இயேசு பிறந்தாலும், தேவனின் ஒரே பேறான குமாரனாகவே வெளிப்பட்டார். இயேசு தேவனிடமிருந்து வந்த படியால் தேவகுமாரன் என்று அழைக்கப்பட்டார். அவர் ராஜகுல வழியே வந்ததால் தாவீதின் குமாரன் என்றும், மனுஷ உருவெடுத்து வந்த படியால் மனுஷ குமாரன் என்றும் அழைக்கப்பட்டார். இயேசுவானவர் இரக்கம், தாழ்மை, அன்பு, வல்லமை, அபிஷேகம் நிறைந்தவராய் காட்சியளித்தார். அவர் வளர்ச்சியிலும் தேவ கிருபையிலும், மனுஷர் தயவிலும் வாழ்ந்தார். 

இயேசுவானவர் பரலோகத்தை விட்டு பூமிக்கு வந்தது அவர் செய்த முதல் தியாகம். பூமிக்கு வந்து நமக்காக ஜீவனைக் கொடுத்தது இரண்டாவது தியாகமாகும். இயேசுவின் பிறப்பு, சிலுவை மரணம், உயிர்த்தெழுதல், திரும்ப வருதல் என்ற நான்கும் அவருடைய வாழ்க்கையின் சிறப்பம்சங்களாகும். அவரது பிறப்பு அனைவருக்கும் மகிழ்ச்சியை அளிக்கிறது. அவரது மரணம் அனைவருக்கும் தேவ அன்பை புரிய வைக்கிறது. அவரது உயிர்த்தெழுதல் அனைவருக்கும் வெற்றியே அளிக்கிறது. இயேசு பரலோகத்தில் இருந்து வந்தவரானாலும், பூலோகத்துக்குரிய வாழ்க்கை வாழ நம்மை மாற்றிக் கொண்டார். பரலோகத்தின் மேன்மையை துறந்து வந்தாலும், பூலோக வாழ்க்கையை நினைத்து அவர் கவலைப்படவில்லை. 

ஒரு தகப்பன் தன் பிள்ளைகளுக்குப் போதிப்பது போலவும், ஒரு தலைவன் தன் சீடர்களுக்குப் போதிப்பது போலவும், ஒரு ஆசான் தன் மாணவர்களுக்குக் கற்பிப்பது போலவும், ஆண்டவர் தம் மக்களுக்கும் சீடர்களுக்கும் கற்பித்தார். இயேசு பரலோகத்திலிருந்து இறங்கி வந்த படியால் பூமியிலுள்ள மனிதர்களுக்குப் பரலோகத்தை குறித்தும், அதில் இருக்கும் பிதாவானவரைக் குறித்தும் பேசினார். அவர் பிதாவின் ஒரேபேறான குமாரன் ஆதலால் பிதாவின் மடியில் இருந்தவராதலால், பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருந்தவராதலால், பிதாவைக் குறித்து நன்கு அறிந்தவராதலால் அவரைக் குறித்து அதிகமாக ஜனங்களுக்கு எடுத்துரைத்தார். யாரும் தன்னை அல்லாமல் பிதாவை நெருங்க முடியாது என்பதை உணர்த்தினார். 

இயேசுவின் பிறந்த நாளை உலகமே கொண்டாடப்படுகிறது. அதற்குக் காரணம் பெற்றதாய் மறந்தாலும் நான் உங்களை மறவேன் என்றவர் நம்மை மறவாமல் இருப்பதாலும், உலகத்தின் முடிவுபரியந்தம் உங்களோடிருப்பேன் என்றவர் நமக்குள் இருப்பதாலும், நம்மை அவர் ஆசாரிய சந்ததியாய், பரிசுத்த ஜாதியாய், அவரின் சொந்த பிள்ளைகளாய் மாற்றி, அவருடைய இரத்தத்தால் நம்முடைய பாவங்களை கழுவி, இரட்சிப்பை அளித்து தன்னுடைய பிள்ளைகளுக்கு சகல அதிகாரம் கொடுத்த ஜீவனுள்ள தேவன் இயேசுவாக இருப்பதாலும்தான். இயேசுவானவர் குருடரின் கண்களைத் திறந்தார் அவன் உலகத்தைப் பார்த்து வாழ்வதற்கு, குஷ்டரோகியைக் குணமாக்கினார் அவன் கௌரவத்தோடு உலகத்தோடு ஒட்டி வாழ, பிசாசு பிடித்தவனுக்கு விடுதலை கொடுத்தார் அவன் மனிதனாக வாழ, 38 வருட வியாதியஸ்தனைக் குணமாக்கினார் அவன் நிம்மதியாய் வாழ, மரணத்திலிருந்து உயிர்ப்பித்தார் காரணம் அவர் ஒருவரே ஜீவனைக் கொடுக்கிறவர் என்று அறிவதற்குத்தான் (யோவான் 10 : 10). நாம் ஒவ்வொருவரும் முன்பு அக்கிரமங்களினாலும், பாவங்களினால் மாம்ச இச்சையின்படி நடந்து, நமது மாம்சம் மனதும் விரும்பினவைகளைச் செய்தோம். ஆனால் இயேசுவோ இவைகளால் மரித்துப் போயிருந்த நம்மை உயிர்ப்பித்தார். அவருடைய கிருபையினால் இரட்சித்து நம்மை அவரோடுகூட இருக்கச் செய்திருக்கிறார் (எபேசியர் 2 : 1 – 8). அதற்குக் காரணம் நாம் நம்முடைய வழிகளை விட்டுத் திரும்புவதுதான் கர்த்தருக்குப் பிரியம் என்று எசேக்கியேல் 18 : 23ல் பார்க்கிறோம். எனவே நாம் கிருபையோடும், வெற்றியோடும், அவருடைய ஆசீர்வாதத்தோடும், மகிமையோடும் வாழ, எந்த மனுஷனையும் பிரகாசிக்கிற அந்த மெய்யான ஒளியை . நோக்கி நடப்போம். 

1பேதுரு 2 : 9 “நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள். முன்னே நீங்கள் தேவனுடைய ஜனங்களாயிருக்கவில்லை, இப்பொழுதோ அவருடைய ஜனங்களாயிருக்கிறீர்கள்; முன்னே நீங்கள் இரக்கம் பெறாதவர்களாயிருந்தீர்கள். இப்பொழுதோ இரக்கம் பெற்றவர்களாயிருக்கிறீர்கள்.” என்று பேதுரு கூறினார். 

ஆனால் இயேசுவின் கடைசி கட்டளைப்படி இயேசுவை அறியாத மக்களுக்கு சுவிசேஷ செய்தியை சொல்வது மட்டும் அல்லாமல் அவர்களை இயேசுவண்டை வழி நடத்துவதும் நமது கடமை. உலகத்தில் உள்ள எல்லா பணிகளிலும் மேலான பணி சுவிசேஷப் பணி, அது நித்தியத்தோடு தொடர்புடைய பணி, பரலோக அரசின் பணி, அது ஆத்மாக்களை பிசாசின் கையிலிருந்து மீட்கும் பணி. தேவன் நம்மை அவரது புண்ணியங்களை அறிவிக்கும் சந்ததியாக, ஆசாரியக் கூட்டமாக, பரிசுத்த இனமாக, சொந்த ஜனமாக, இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்டவர்களாய்த் தெரிந்து கொண்டு, அவருக்கென்று நியமித்திருக்கிறார். அந்தப் பணியை நாம் அனைவரும் முழு மூச்சோடு செய்ய முற்படுவோம். இயேசுவை அறியாத புறவினத்தவர்களுக்கு இயேசு யார் என்று அறியச் செய்வோம். அப்போது பரலோகத்தில் பிதாவிற்கு முன்பாக இயேசு நம்மை அறிக்கை பண்ணுவார். கிறிஸ்துவானவர் நம் உள்ளத்தில் வந்து தங்க, அவரது மகிமையின் வெளிச்சம் நம்மில் பிரகாசிக்க நம்முடைய முழு உள்ளத்தோடு அவரைத் தேடுவோம். ஆமென்.

Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago