நாத்தான்வேல் இயேசுவின் முதல் சீஷர்களில் ஒருவன். பர்த்தலோமேயு என்ற பெயர் மத்தேயு, மாற்கு, லூக்கா என்ற மூன்று நற்செய்தி நூல்களிலும் அப்போஸ்தலர் நூலிலும், 12 சீடர்கள் பட்டியலிலும் மட்டும் காணப்படுகிறது ( மத்தேயு 10 : 3, மாற்கு 3 : 18, லூக்கா 6 : 14 அப்போஸ்தலர் 1 :13). அதற்கு மேல் அந்த நான்கு நூல்களிலும் அவரைப் பற்றி ஒன்றும் குறிப்பிடப்படவில்லை. அப்போஸ்தலர் பட்டியலில் பிலிப்புவின் பக்கத்தில் இவருடைய பெயர் போடப்பட்டுள்ளது யோவான் நற்செய்தி நூலில் மட்டும் நாத்தான்வேல் என்ற பெயர் (யோவான் 1 : 45, 51, 21 :2) காணப்படுகிறது. 12 சீடர்களில் நாத்தான்வேல் மட்டுமே உயர்ந்த குடியில் பிறந்தவர். இரண்டு பெயருக்குரிய நபர்களும் ஒரே நபர்தான். பர்த்தொலொமேயு என்றால் தல்மாயின் மகன் என்று பொருள். தல்மாய் கெசூரின் மன்னன் என்று 2 சாமுவேல் 3 : 3, 13 : 22 , 27-ல் குறிப்பிடப்பட்டுள்ளது. தல்மாய்க்கு மாக்கா என்ற மகள் இருந்தாள். இவள் தாவீதுக்கு அப்சலோம் என்ற மகனைப் பெற்றாள். பர்தொலோமேயு தல்மாயின் பரம்பரையில் பிறந்தவன். அரச குடும்பத்தில் பிறந்த இவர் தாழ்மையான மீன் பிடிக்கிறவர்களோடு ஒற்றுமையுடன் வாழ்ந்ததைப் பார்க்கிறோம் நாத்தான்வேல் என்பது எபிரேயப் பெயர் நாத்தான்வேல் என்றால் “இறைவனின் ஈவு” என்று பொருள். நாத்தான்வேல் அப்போஸ்தலர் என்ற அங்கீகாரத்தைப் பெற்றபின் பர்தொலோமேயு என்று அழைக்கப் பட்டான்.
இயேசு அழைத்த சீஷர்கள்:
இயேசு 30 வயது நிரம்பினவராய் யோவான்ஸ்நானன் மூலமாக யோர்தான் நதியில் ஞானஸ்தானம் பெற்று பரிசுத்த ஆவியானவரால் வழிநடத்தப்பட்டார். அதுவரை தச்சனின் மகனாக வாழ்ந்து வந்தார். ஒரு முறை இயேசு நடந்து போகிற போது யோவான்ஸ்நானன் இயேசுவைக் கண்டு இதோ தேவ ஆட்டுக்குட்டி என்றார். அதை பார்த்த யோவான்ஸ்நானனின் இரண்டு சீஷர்கள் இயேசுவைப் பின்பற்றிச் சென்றனர். இயேசு அவர்களிடம் உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். அதற்கு அவர்கள் போதகரே நீர் எங்கு தங்கியிருக்கிறார் என்று கேட்டனர். அதற்கு இயேசு வந்து பாருங்கள் என்றார். அவர்களும் இயேசுவோடு கூடச் சென்று, அவர் தங்கியிருந்த இடத்தில் அவரைக் கண்டு அவரோடு பேசிக் கொண்டிருந்தனர். அதில் ஒருவன் அந்திரேயா. அந்திரேயா ஓடிப்போய் தன் சகோதரனாகிய சீமோன் பேதுருவிடம் மேசியாவைக் கண்டோம் என்று கூறி அவரையும் இயேசுவிடம் அழைத்து வந்தான். அப்பொழுது இயேசு சீமோனைப் பார்த்து சீமோனின் பெயரை பேதுரு என்று மாற்றினார். இது இயேசு ஞானஸ்நானம் பெற்ற அன்று நடந்தது. அடுத்த நாள் பெத்தானியாவில் இருந்து கலிலேயாக் கரை வழியாக பேதுரு, அந்திரேயாவின் சொந்த ஊரான பெத்சாயிதாவுக்கு பயணம் செய்தார். அங்கு பிலிப்பு என்பவனைக் கண்டு “நீ எனக்குப் பின்சென்று வா” என்றார். இந்த பிலிப்பு நியாயப்பிரமாணங்களையும், மேசியாவைக் குறித்த காரியங்களையும் நன்கு அறிந்திருந்தார். பிலிப்புவின் நண்பன்தான் நாத்தான்வேல்.
Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates
தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்
பிலிப்பு நாத்தான்வேலை சந்தித்தல்:
யோவான் 1 : 45, 46 “பிலிப்பு நாத்தான்வேலைக் கண்டு: நியாயப்பிரமாணத்திலே மோசேயும் தீர்க்கதரிசிகளும் எழுதியிருக்கிறவரைக் கண்டோம்; அவர் யோசேப்பின் குமாரனும் நாசரேத்தூரானுமாகிய இயேசுவே என்றான். அதற்கு நாத்தான்வேல்: நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக்கூடுமா என்றான். அதற்குப் பிலிப்பு: வந்து பார் என்றான்.”
நாத்தான்வேலின் சொந்த ஊர் கலிலேயாவிலுள்ள கானா ஊர். நாத்தான்வேல் இயேசுவை சந்திப்பதற்கு முன் இரட்சிக்கப்படவில்லை. பிலிப்புவுக்கும் இயேசுவைப் பற்றி சிறிதளவு ஞானமே உண்டு. அந்த ஞானத்தை தன் நண்பனான நாத்தான்வேலிடம் தெரிவிக்க வந்தான். நாத்தான்வேலோ அத்திமரத்தின் கீழ் அமர்ந்து ஜெபம் பண்ணிக் கொண்டிருந்தான். பிலிப்பு அவனைப் பார்த்து மோசே நியாயப்பிரமாணத்தின் எழுதியிருக்கிறவரைப் பார்த்தேன். அவர்தான் நாசரேத்திலிலுள்ள யோசேப்பின் குமாரனாகிய இயேசு என்றார். யோசேப்பு இயேசுவின் உண்மையான தந்தை அல்ல. இயேசுவின் சட்ட பூர்வமான தந்தை. இயேசுவின் உண்மையான தகப்பன் பரிசுத்த ஆவியானவர் (மத்தேயு 1 : 18). அதேபோல் இயேசு நாசரேத் என்ற ஊரில் வாழ்ந்து வந்தாலும், அவரது பிறப்பிடம் பெத்லகேம். . அதற்கு நாத்தான்வேல் “நாசரேத்திலிருந்து நன்மையானது வருமோ” என்றான். உடனே பிலிப்பு “வந்து பார்” என்றான். ஏனென்றால் நாத்தான்வேல் இயேசுவைப் பார்த்தால் போதும் அவனுடைய எல்லா சந்தேகங்களும் நீங்கிவிடுமென்று பிலிப்பு நம்பினான். ஏனெனில் நீதியின் சூரியனாகிய இயேசுவுக்கு முன் எந்த இருளும் இருக்க முடியாது. இதிலிருந்து பிலிப்பு பழைய ஏற்பாட்டின் சத்தியங்களை அறிந்திருந்தாரென்றும், அதைவிட அதிகமாக நாத்தான்வேல் அறிந்திருந்தாரென்றும் அறிகிறோம். மீகா தீர்க்கதரிசி பெத்லகேமிலிருந்து வருவார் என்று தீர்க்கதரிசனம் உரைத்திருந்ததை அறிந்திருந்தனர் (மீகா 5 : 2). ஆதியாகமத்திலிருந்து மல்கியா வரை ஆபிரகாமின் குமாரன் என்றும், தாவீதின் குமாரன் என்றும், இமானுவேல் என்றும், உன்னதமான தேவ குமாரன் என்றும் அநேக பெயர்கள் இயேசுவுக்குக் கொடுக்கப்பட்டதை இருவரும் அறிந்திருந்தனர். ஆனால் நாசரேத் ஊரானாகிய இயேசு என்று கூறியதை நாத்தான்வேல் ஆட்சேபிக்கிறார். ஏனெனில் யோவான் 7 : 42 ல் தாவீது இருந்த பெத்லகேமிலிருந்துதான் இயேசு வருவார் என்றுள்ளது. இயேசு தன்னுடைய 30 வயதுவரை யோசேப்பின் குமாரன் என்றுதான் அறியப்பட்டிருக்கிறார். இயேசு பெத்லகேமில் பிறந்தாலும் ஏரோது இயேசுவைக் கொல்ல வகை தேடியதால், யோசேப்பு இயேசுவை எகிப்துக்குக் கூட்டிப் போனார். பின் எகிப்திலிருந்து பெத்லகேமுக்குப் போகாமல் நாசரேத் ஊரில் வந்து வாசம் பண்ணினார் என்று மத்தேயு 2 : 23 ல் பார்க்கிறோம். அங்கு இயேசு வளர்ந்ததால் நசரேயன் என்று அழைக்கப்பட்டார். நாசரேத்திலிருந்து நன்மை உண்டாகாது என்ற அளவிற்கு ஏளனமாகக் கருதப்பட்ட நாசரேத்தில் இயேசு வளர்ந்தார். ஏனென்றால் நாசரேத்து கலிலேயாவில் உள்ள ஒரு சிறிய ஊர். மனிதர்களால் புறக்கணிக்கப்பட்ட செல்வாக்கில்லாத ஊர். ஆனால் இயேசுவின் பெயர் நசரேயன் என்று இருப்பதால் நசரேய விரதம் இருக்க வேண்டும் என்பதில்லை. சிம்சோனுக்கும், சாமுவேலுக்கும் நசரேய விரதம் கொடுக்கப்பட்டது. நசரேய விரதத்தில் தலையை கத்தரிக்கக் கூடாது. திராட்சை சம்பந்தப்பட்ட எந்தப் பொருளையும் சாப்பிடக்கூடாது. இறந்துபோன பிணத்தையும் தொடக்கூடாது. இயேசு தன் வாழ்நாட்களில் திராட்சைரசம் அருந்தியிருக்கிறார். மரித்தவர்களைத் தொட்டு எழுப்பியிருக்கிறார். நாத்தான்வேலுக்கு நாசரேத்தைப் பற்றித் தவறான எண்ணம் ஆழமாகப் பதிந்திருந்தது. யூதேயாவின் மக்கள் கலிலேயரை இழிவாகக் கருதினர். ஏழ்மையான, இழிவான மக்களிடமிருந்து நாசரேத்திலிருந்து மேசியா வரமுடியாது என்ற உறுதியான நம்பிக்கை அவனிடம் காணப்பட்டது. மேசியா யூதேயாவின் தலைநகரான எருசலேமிலிருந்து, அரச பரம்பரையிலிருந்து தோன்றுவார் என்று நம்பினான். நாசரேத் ஊராரோ இயேசுவின் பிரசங்கத்தைக் கேட்டும் அவரை ஊருக்குப் புறம்பே தள்ளி மலையின் உச்சியிலிருந்து தள்ளிவிடும்படி கொண்டு போனார்கள் (லூக்கா 4 : 29).
இயேசு நாத்தான்வேலைப் பார்த்தவுடன் கூறியது:
யோவான் 1 : 47 “இயேசு நாத்தான்வேலைத் தம்மிடத்தில் வரக்கண்டு அவனைக்குறித்து: இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன் என்றார்.”
நாத்தான்வேல் இயேசுவை எதிர்கொண்டு வந்து கொண்டிருக்கும் போதே ,இயேசு நாத்தான்வேலைக் குறிப்பிட்டு “அவன் கபடற்ற உத்தம இஸ்ரவேலன்” என்றார். இதற்கு முன் இயேசு அவனைப் பார்த்ததில்லை. பிலிப்பும் இன்னும் அவரை அறிமுகப்படுத்தவும் இல்லை. ஆனாலும் இயேசு அவனைப் பற்றிக் கூறினார். இது அவனுடைய நற்செயல்களையும், பரிசுத்தத்தையும் குறித்துத் தேவன் அங்கீகரித்ததைப் பார்க்கிறோம். அப்படியானால் ரோமர் 2 : 28, 29 ன்படி நாத்தான்வேல் உண்மையாகத் தேவனை ஆராதிக்கும் யூதன் என்கிறார். பழையஏற்பாட்டில் உத்தமன் என்று புகழப்பட்டவர் யோபு. இவ்வாறு இயேசுவிடம் சாட்சி பெறுவது மகா மேன்மையானது. இயேசுவை சந்திப்பதற்கு முன்பாகவே நாத்தான்வேலின் இருதயம் எவ்வாறு இருந்ததென்பதை இயேசு கூறுகிறார். அப்படியென்றால் அவனிடம் எந்தக் கபடமோ, வஞ்சகமோ, சூழ்ச்சியோ காணப்படவில்லை என்பதை இயேசு அறிந்திருந்தார். ஆதியாகமத்தில் சர்ப்பம் தந்திரமாக செயல்பட்டதையும், யாக்கோபு தந்திரமாக ஈசாக்கிடம் ஏசாவின் ஆசியைப் பெற்றுக் கொண்டதையும் பார்க்கிறோம். நாத்தான்வேலிடம் இப்படிப்பட்ட தந்திரங்கள் எதுவுமில்லை. கபடற்றவர் என்றால் நடிக்கிறவன் அல்லவென்றும், மாயக்காரன் அல்லவென்றும் கூறுகிறார். இயேசுவை அறிந்து கொள்ளும்முன் நாத்தான்வேல் பழைய உடன்படிக்கையில் இருந்தாலும் நீதிமானாய் வாழக்கூடியவனாயிருந்தான். இயேசுவைப் போல பாவமில்லாதவர் என்று சொல்லமுடியாது. இயேசுவின் பார்வையில் நாத்தான்வேலின் இருதயம் செம்மையானதாக, வஞ்சனையில்லாததாக, கபடில்லாததாக, வெள்ளையுள்ளமாகக் காணப்பட்டது. அதனால் அவனைப் பார்த்து “உத்தம இஸ்ரவேலன்” என்றும் இயேசு குறிப்பிட்டதைப் பார்க்கிறோம். இஸ்ரவேல் தேசத்தில் வாழும் அனைவரும் இஸ்ரவேலர் தான். அவர்களில் ஒரு சில நபரே உத்தம இஸ்ரவேலராக இருப்பார்கள். பரிசேயர்களும், சதுசேயர்களும் சந்தைவெளிகளில் அமர்ந்து பக்திமான்கள் போல் மாய்மாலம் செய்வார்கள். அதனால் அவர்களைப் பார்த்து இயேசு வெள்ளையடிக்கப்பட்ட கல்லறையாயிருக்கிறீர்கள் என்கிறார். நாத்தான்வேலின் இருதயம் தேவனைக் குறித்த பக்தி நிறைந்த இருதயமாயிருந்தது . பிலிப்புவை இயேசு “என் பின்னே வா” என்று இயேசு கூறினாலும் நாத்தான்வேலுக்குக் கொடுத்த நற்சான்றை அவனுக்கு வழங்கவில்லை. நாத்தான்வேலின் இருதயத்தில் ஆவியானவர் அசைவாடி கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள ஆயத்தப்படுத்தி வைத்திருந்தார் (எபேசியர் 1 : 4).
நாத்தான்வேல் இயேசுவைப் பற்றி அறிக்கையிடுதல்:
யோவான் 1 : 48, 49 “அதற்கு நாத்தான்வேல்: நீர் என்னை எப்படி அறிவீர் என்றான். இயேசு அவனை நோக்கி: பிலிப்பு உன்னை அழைக்கிறதற்கு முன்னே, நீ அத்திமரத்தின் கீழிருக்கும்போது உன்னைக் கண்டேன் என்றார். அதற்கு நாத்தான்வேல்: ரபீ, நீர் தேவனுடைய குமாரன், நீர் இஸ்ரவேலின் ராஜா என்றான்.”
இயேசு தன்னைக் “கபடற்ற உத்ததம இஸ்ரவேலன்” என்று நாத்தான்வேலிடம் கூறிய பின்னாவது இயேசுவுக்கு நன்றி சொல்லாமல் இயேசுவைப் பார்த்து “நீர் என்னை எப்படி அறிவீர்” என்று கேள்வி கேட்டான். அத்திமரத்தின் கீழ் இருக்கும் போது உன்னைக் கண்டேன் என்று இயேசு கூறிய பின்னரே நாத்தான்வேல் விசுவாசித்தான். தன்னைப் பற்றி சான்று வழங்கியதைக் கேட்டதும் நாத்தான்வேல் அதிர்ச்சியடைந்தார். உலகிலுள்ள ஒவ்வொருவரின் பெயரும் அவர்களின் பண்புகளும் செயல்களும் ஆண்டவருக்குத் தெரியும். தேவனின் கண்கள் பூமியெங்கும் உலாவிக் கொண்டிருக்கிறது. அவருடைய பார்வைக்கு மறைவானது எதுவுமில்லை. எரேமியாவை தாயின் கருவிலிருக்கும்போதே அறிந்தவர் கர்த்தர் (எரேமியா 1 : 5). அத்திமரத்தின் கீழ் காண்பது அதிசயமல்ல. அங்கு என்ன செய்து கொண்டிருந்தாரென்பதைப் பார்த்தார். இயேசு கெத்சமனேயிலும், ஒலிவமலையிலும் போய் ஜெபம் பண்ணிக் கொண்டிருந்ததைப் போல நாத்தான்வேல் அத்திமரத்தின் கீழ் ஜெபம் பண்ணிக் கொண்டிருந்தார். அத்திமரத்தின் கீழிருக்கும் அனுபவம் தேவனோடுள்ள உறவைக் குறிக்கிறது (மீகா 4 : 4). நாத்தான்வேலுக்கு அத்திமரம் ஒரு ஜெப அறையாகக் காணப்பட்டது. அங்கு தேவனோடு நேரத்தை செலவழித்துத் தன் இருதயத்தை ஊற்றி ஜெபித்திருக்கிறார். இவைகளை எல்லாம் இயேசு அறிந்திருந்தார்.
இயேசு தன்னைப் பார்த்திராதவர் தன்னைப் பற்றிக் கூறின வார்த்தைகளைக் கேட்டவுடன் நாத்தான்வேலுடைய இருதயத்திலிருந்த இருள் நீங்கிற்று. ரபீ என்று முதலில் அழைக்கிறார். அதற்கு நல்ல போதகர் என்று அர்த்தம். இனி தனக்கு அவர்தான் போதகர் என்று அறிக்கையிடுகிறார். அடுத்ததாக நீர் தேவனுடைய குமாரன் என்கிறார். அதன் பொருள் நீர்தான் பரலோகத்திலிருக்கிற தேவனின் ஒரே குமாரன் என்கிறார். அடுத்ததாக நீர் இஸ்ரவேலின் ராஜா என்கிறார். இதன் பொருள் இஸ்ரவேலை ஆளப்போகிற ராஜா நீர்தான் என்பதாகும். இந்த 3 வெளிப்பாடுகளும் நாத்தான்வேலுக்குத் தோன்றியது. தாவீது கர்த்தரை எல்லாவற்றையும் அறிந்தவர் என்றும் (சங்கீதம் 139 : 1 – 6), எல்லா இடங்களிலும் இருப்பவர் என்றும் (சங்கீதம் 139 : 13 – 16) உணர்ந்ததைப் போல நாத்தான்வேலுக்கும் இந்த வெளிப்பாடுகள் தோன்றியது. இவ்வாறு இயேசுவைப் பற்றி அறிக்கையிட்டதால் நாசரேத்திலுள்ள முக்கியமான ஒன்று அவனிடம் வெளிப்பட்டதைப் பார்க்கிறோம்.
Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates
தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்
இயேசு நாத்தான்வேலிடம் கூறியது:
யோவான் 1 : 50, 51 “இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: அத்திமரத்தின் கீழே உன்னைக் கண்டேன் என்று நான் உனக்குச் சொன்னதினாலேயா விசுவாசிக்கிறாய்; இதிலும் பெரிதானவைகளைக் காண்பாய் என்றார். பின்னும், அவர் அவனை நோக்கி: வானம் திறந்திருக்கிறதையும், தேவதூதர்கள் மனுஷகுமாரனிடத்திலிருந்து ஏறுகிறதையும் இறங்குகிறதையும் நீங்கள் இதுமுதல் காண்பீர்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.”
மேலும் இயேசு நாத்தான்வேலிடம் தான் கூறியதைக்கேட்டு விசுவாசிக்கிறாயா எனக் கேட்டு, மேலும் இதைவிட பெரிதானவைகளைக் காண்பாய் என்றும் வாக்களித்தார். ஏனென்றால் நமது சரீரக் கண்களால் குறைவான காரியங்களையே பார்க்க முடியும். நம்முடைய ஆவிக்குரிய கண்கள் திறக்கப்படும்போது மட்டுமே பெரிதான காரியங்களைக் காண முடியும். அவர் கூறியபடி பின்னாட்களில் நாத்தான்வேல் பெரிதானவைகளைக் கண்டார். ஒரு விசேஷமான காட்சியைப் பற்றிக் கூறுகிறார். பின்னும் இயேசு வானம் திறந்திருப்பதைப் பார்ப்பீர்கள் என்றும், தேவதூதர்கள் தன்னிடத்திலிருந்து ஏறுகிறதையும், இறங்குவதையும் காண்பீர்கள் என்றும் கூறினார். ஆதியாகமம் 28 : 12 ல் யாக்கோபு தன் சகோதரனுக்குப் பயந்து ஓடும்போது, பெத்தேலில் கண்ட காட்சியில் பூமியையும் விண்ணையும் தொட்ட ஒரு ஏணியைப் பார்த்தார். அதில் தூதர்கள் ஏறிக்கொண்டும், இறங்கிக்கொண்டும் இருந்தார்கள். யாக்கோபு கர்த்தரை ஏணியின் மேல் பார்த்தார். ஆனால் நாத்தான்வேலுக்கோ அவரின் அருகாமையில் இயேசு காணப்பட்டார். இயேசு யாக்கோபு பார்த்த அந்த சம்பவத்தை நினைப்பூட்டி அந்த ஏணி நானே என்று விளக்குகிறார். வானம் திறக்கப்பட்ட வேறு இடங்கள் எதுவென்றால், இயேசு யோவான்ஸ்நானனிடம் ஞானஸ்நானம் பெற்றுக்கொண்ட போது வானம் அவருக்குத் திறக்கப்பட்டது (மத்தேயு 3 : 16). இஸ்ரவேலரின் வனாந்தரப் பயணத்தின் போது கர்த்தர் வானத்தின் கதவுகளைத் திறந்து மன்னாவை அவர்களுக்கு ஆகாரமாக அனுப்பினார். பாவமுள்ள மனிதன் பரிசுத்த தேவனோடு ஒப்புரவாவதற்கு இயேசுவே வழியாக முடியுமென்பதை நாத்தான்வேல் அறிந்தான். நாமும் விசுவாசத்தால் இன்றும் அவர் நமக்கு ஏணியாக வழிகாட்டுபவராகத் திகழுவார். இயேசு மனுஷகுமாரன் என்று முதல்முறையாக தன்னுடைய பெயரை இங்கு அறிமுகப்படுத்துகிறார்
நாத்தான்வேலின் ஊழியம்:
இயேசுவின் மகத்தான அற்புதங்களை நாத்தான்வேல் தன்னுடைய கண்களால் கண்டார். பிலிப்பும் நாத்தான்வேலும் சேர்ந்து இராப்பொலி (hierapolis) பட்டணத்தில் சுவிசேஷம் அறிவித்தனர். அங்கு பிலிப்போடுகூட நாத்தான்வேலும் தண்டிக்கப்பட்டார். பிலிப்பு அங்கு இரத்த சாட்சியாக மரித்தான். நாத்தான்வேல் அங்கிருந்து விடுதலை செய்யப்பட்டபின் தப்பி அர்மீனியாவுக்குச் சென்று கிபி 43ம் ஆண்டில் ததேயுவுடன் ஊழியம் செய்தார். இவர்கள் இருவரையும் அர்மேனியா சபையின் பிதாக்கள் என்றழைக்கப்படுகின்றனர். கிபி 66ல் ததேயுவும் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்களும் இரத்த சாட்சியாக மரித்தனர். இவர் அப்பகுதியின் அரசனின் மகளுடைய மூளைக்கோளாறை சரி செய்தார். அரசனின் விக்கிரகங்களை ஒன்றுமில்லாமல் போகப் பண்ணினார். அதனால் அரசனும் மக்களும் மனந்திரும்பி ஞானஸ்நானம் பெற்றனர். அதனால் ஆசாரியர்கள் வெகுண்டெழுந்து அரசனின் சகோதரனிடம் முறையிட்டனர். அவன் நாத்தான்வேலை சிறையிலடைக்கச் செய்து அவனுடைய தோலை உரித்து சிலுவையில் தலைகீழாக அறைந்தனர். கிபி 68ம் ஆண்டு மிகவும் கொடுமையான முறையில் மரித்தார். இவருடைய கல்லறை அர்மேனியாவில் உள்ளது. கிபி 508 ல் அரசர் அனாஸ்டேசியஸ் மேசபட்டோமியாவில் டுராஸ் என்ற பட்டணத்தைக் கட்டி அங்கு இவரது எலும்புகளைக் கொண்டு சென்றார். ஆறாம் நூற்றாண்டு சிசிலி கரையிலுள்ள லிபாரிதீவுக்கு இவரது எலும்புகள் கொண்டு செல்லப்பட்டன. பின் கிபி 809ல் பெனிலெண்டாவுக்கும், 983ல் ரோமுக்கும் கொண்டு செல்லப்பட்டன. தற்போது இவரது எலும்புகள் டைபர் நதிக்கரையிலுள்ள புனித பர்தொலொமேயு ஆலயத்தில் உள்ளது. பிரிட்டனில் கேன்டர்பரி தேவாலயத்திலும் இவரது எலும்புகளில் ஒன்று உள்ளது. இயேசுவின் ஊழியத்தின் முதலில் நாத்தான்வேல் சந்தேகப்பேர்வழியாக இருந்தான். இயேசுவின் ஊழியத்தின் இறுதியில் தோமா சந்தேகப் பேர்வழியாக இருந்தான். நாத்தான்வேல் இயேசுவை மிக நெருங்கி அறிந்தவன் என்றும், சாட்சியாக வாழ்ந்து நற்செய்தியை அறிவித்தானென்றும், விசுவாசத்திற்காக இரத்த சாட்சியாக மரித்தானென்றும் அறிகிறோம். ஆமென்.
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…