இயேசு செய்த அற்புதங்கள்

மிகுதியான மீன்களை பிடிக்கச் செய்தார்

இயேசு பேதுருவின் சந்திப்பு: 

லூக்கா 5 :1- 3  “பின்பு  இயேசு  கெனேசரேத்துக் கடலருகே  நின்ற போது, திரளான ஜனங்கள்  தேவவசனத்தைக்  கேட்கும்படி அவரிடத்தில்  நெருங்கினார்கள். அப்பொழுது  கடற்கரையிலே நின்ற இரண்டு படகுகளைக்  கண்டார்.  மீன் பிடிக்கிறவர்கள்  அவைகளை  விட்டிறங்கி, வலைகளை  அலசிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது  இயேசு  அந்தப்  படகுகளில்  ஒன்றில்  ஏறினார், அது  சீமோனுடையதாயிருந்தது; அதைக்  கரையிலிருந்து  சற்றே தள்ளும்படி  அவனை  கேட்டுக்  கொண்டு, அந்தப்  படகில் உட்கார்ந்து ஜனங்களுக்குப் போதகம்  பண்ணினார்.”

இயேசு  கெனேசரேத் கடலருகே  வந்த  போது,  திரளான  ஜனங்கள்  அவருடைய போதகத்தைக்  கேட்கும்படி  வந்தனர். இஸ்ரவேல்  தேசத்தில்  இரண்டு  கடல்கள் உண்டு. ஒன்று  உப்புக்  கடலாகிய  சவக்கடல், அடுத்தது  கலிலேயேக்  கடல். இந்தக்  கடலைத் திபெரியாக்  கடல்  என்றும்  கெனேசரேத்  கடல்  என்றும் சொல்லுவார்கள். அந்தக்  கடலிலுள்ள  தண்ணீர்  உப்பில்லாத  அருமையான தண்ணீர். இது  வேறு  எந்தக்  கடலோடும்  இணைக்கப்படவில்லை. யோர்தான் நதியானது  இந்தக்  கடலில்  தான்  விழுகிறது.  இந்தக் கடலானது கலிலேயாவிலிலுள்ள  ஜனங்களுக்குப் பெரிய  ஆசீர்வாதமாக  விளங்குகிறது. இந்தக்  கடற்கரையினருகில்  தான்  கர்த்தர்  பேதுரு,  யாக்கோபு,  யோவானை  தனக்குச்  சீஷராகும்படி  அழைத்தார். பெரும்பாலான  சீஷர்கள்  (7பேர்) கலிலேயாவில் மீன்பிடி தொழில் செய்தவர்கள் தான்.  

இயேசு  ஏன்  மீனவர்களை  அழைத்தாரென்றால்,  இந்த  மீனவர்களின்  குணாதிசயம்  அதிசயமானது. கடினமாக  உழைப்பார்கள்.  இரவெல்லாம்  மீன்  பிடிப்பார்கள்.  பகலில்  தங்கள்  வலைகளை  அலசி  பழுது  பார்ப்பார்கள்.  ஒருவருக்கொருவர்  ஒத்தாசையாக கூடி வேலை செய்வார்கள். பொறுமைசாலிகள். இயேசுவுக்கு இப்படிப்பட்டவர்கள்  தேவை. இயேசு கடற்கரையருகே வந்தபோது கடற்கரையில் நின்ற  இரண்டு படகுகளைக் கண்டார். அவைகள் வெறுமையாக இருந்தன.  அதில்  ஒரு  படகு  பேதுருவினுடையது. அந்தப்  படகில்  மீன்  பிடித்துக் கொண்டிருந்தவர்கள்.  இரவு  முழுவதும்  பிரயாசப்பட்டும்  மீன்கள் கிடைக்காததினால், படகுகளை  விட்டிறங்கி  வலைகளை  அலசிக் கொண்டிருந்தனர். இயேசு  பேதுருவின்  படகிலேறி  அவனிடம்  அந்தப்  படகை கரையிலிருந்து  சற்றுத் தள்ளச்  சொல்லி  அதில்  உட்கார்ந்து  ஜனங்களுக்குப்  பிரசங்கம்  பண்ணினார்.  

பேதுருவின்  கீழ்படிதல்: 

லுக்கா 5 : 4 , 5  “இயேசு போதகம் பண்ணி  முடித்த பின்பு சீமோனை நோக்கி: ஆழத்திலே  தள்ளிக்கொண்டு  போய், மீன்பிடிக்கும்படி  உங்கள்  வலைகளைப்  போடுங்கள்  என்றார். அதற்கு  சீமான்:  ஐயரே, இரவு  முழுவதும்  நாங்கள்  பிரயாசப்பட்டும்  ஒன்றும் அகப்படவில்லை,  ஆகிலும்  உம்முடைய  வார்த்தையின்படியே வலையைப்  போடுகிறேன்  என்றான்.”

இயேசு  திரளான  ஜனங்களுக்குப்  போதகம்  பண்ணிக்  கொண்டிருந்தாலும்  அவருடைய  இருதயமெல்லாம்  பேதுருவிடமிருந்தது.  ஏனென்றால் பேதுருவைக் குறித்து இயேசுவானவர்  ஒரு  பெரிய  திட்டம்  வைத்திருந்தார்.  அந்தத்  திட்டம்  நிறைவேறும்  காலம்  வந்தது.  அவனுடைய  கவனத்தைத்  திருப்ப,  தன்னுடைய  திட்டத்தை,  சித்தத்தைச்  செய்ய இயேசு அந்த  நேரத்தில் தீவிரப்படுகிறார்.  இயேசு  பேதுருவை  தன்னுடைய  சீஷனாக  மட்டுமல்லாமல்  பிரதான  சீஷனாக  அமர்த்த  வேண்டுமென்றும்,  அவன்  தேவனுடைய  சபையைக்  கட்டுகிறவனாக  இருக்க  வேண்டும்  என்றும் தீர்மானித்திருந்தார்  (மத்தேயு  16 : 18). இயேசு  போதகம்  பண்ணி  முடித்த  பின் படகைக்  கொடுத்தவனைப்  பார்த்து, வெறுமையாகப்  போகிறார்களே  என்று  எண்ணி, ஒரு  ஆலோசனை கூறினார். கர்த்தர்  தம்முடைய  பிள்ளைகளை வெறுமையாக  அனுப்புகிறவரல்ல  

ஏசாயா தீர்க்கதரிசி  இயேசுவை  ஏசாயா 9 : 6 ல்  ஆலோசனைக்கர்த்தர்  என்றார். இயேசு ஆலோசனையில்  ஆச்சரியமானவர்,  செயலில்  மகத்துவமானவர்  அவரால் செய்ய  முடியாத  காரியம்  எதுவும்  இல்லை. இயேசு  என்ன  ஆலோசனையை பேதுருவிடம்  கூறினாரென்றால்  ஆழத்தில்  படகைத்  தள்ளிக்  கொண்டு  போய் உங்கள்  வலைகளைப் போடுங்கள்  என்றார்.  அவனுக்குத்  தேவையான  மீன்கள்  எங்கிருக்கிறது என்பதை  இயேசுவின்  கண்கள்  கண்டு  அதற்கு  நேராக  அவனை  நடத்துகிறார்.  அவருடைய  பார்வைக்கு  மறைவான  சிருஷ்டி ஒன்றுமில்லை. சகலமும்  அவருடைய  கண்களுக்கு  முன்பாக  நிர்வாணமாயும்  வெளியரங்கமாயுமிருக்கிறது  என்று  எபிரேயர்  4 : 13ல்  கூறியிருப்பதைப் பார்க்கிறோம். மீனின்  வாயில்  வரிப்பணம்  இருப்பதை  இயேசுவின்  கண்கள்  பார்த்ததை  மத்தேயு  17 : 27ல்  பார்க்கிறோம்.எண்ணாகமம்  10 : 33 ல்  இஸ்ரவேல்  ஜனங்களுக்கு  இளைப்பாறும்  ஸ்தலம்  எங்கிருக்கிறது என்று உடன்படிக்கை  பெட்டி  மூலமாகக்  கர்த்தர்  காட்டினார். 

இயேசு  உயித்தெழுந்தபின் திபேரியாக் கடற்கரையில் நின்று கொண்டு தன்னுடைய சீஷர்கள் மீன்கள் ஒன்றும் அகப்படாமல் இருக்கிறதைக் கண்டு “படகுக்கு வலதுபுறமாய் வலையைப் போடச்  சொல்லி திரளான மீன்களைப்  பிடிக்கச் செய்ததை யோவான் 21 : 6ல் பார்க்கிறோம். அதற்குப்  பேதுரு  ஐயரே  என்று இயேசுவை  அழைத்ததைப் பார்க்கிறோம்.  ஐயரே  என்றால்  எஜமானாரே , போதகரே, ஆண்டவரே  என்று  அர்த்தம். இரவு  முழுவதும்  நாங்கள்  பிரயாசப் பட்டும்,  எங்களுக்கு  ஒரு  மீனும்  கிடைக்கவில்லை  என்று  பேதுரு  தன் தொழிலில்  தோல்வியை  ஒப்புக் கொண்டதைப்  பார்க்கிறோம். நீங்களும் உங்கள்  இயலாமையை ஒப்புக்கொள்ளும்  போதுதான்,  இயேசு  உங்களுக்கு  அற்புதம் செய்ய  முடியும்பேதுரு  பரம்பரை  பரம்பரையாக  மீன்பிடி  தொழில்  செய்பவர். அவருக்கு  எந்த  இடத்தில்  எப்படிப்பட்ட  மீன்கள்  எவ்வளவு  கிடைக்கும்  என்று நன்றாகத்  தெரியும். ஆனாலும்  அன்று அவர்களுக்கு  ஒன்றும் கிடைக்கவில்லை. 

பேதுரு  தாழ்மையுடன்  இயேசுவிடம்  ஆகிலும்  உம்முடைய  வார்த்தையின்படியே  வலையைப் போடுகிறேன்  என்றார்.  தன்னுடைய  ஞானம்,  திறமை, அனுபவம்  எல்லாவற்றையும்  ஒதுக்கி  வைத்துவிட்டு  வாக்குவாதம் பண்ணாமல்,  இயேசு  தன்னிடம்  கூறியபடி  செயலில்  இறங்கினார். எவ்வாறு இயேசு  படகை  ஆழத்திற்குக்  கொண்டு  போகச்  சொன்னாரோ, அதே  போல் ஒவ்வொருவரும்  ஆவிக்குரிய  ஆழத்திற்குச்  செல்ல  வேண்டுமென்று  இயேசு  விரும்புகிறார். பேதுரு  ஆழத்திற்குப்  படகைத்  தள்ளிக்கொண்டு  போய்  வலையைப்  போட்டார்.  

பேதுரு  பெற்ற  அற்புதம்:

லூக்கா 5 : 6 – 9 “அந்தப்படியே அவர்கள் செய்து,  தங்கள்  வலை கிழிந்துபோகத்  தக்கதாக  மிகுதியான  மீன்களைப்  பிடித்தார்கள். அப்பொழுது  மற்றப்  படகிலிருந்த  கூட்டாளிகள்  வந்து  தங்களுக்கு உதவி செய்யும்படிக்குச்  சைகை  காட்டினார்கள்;  அவர்கள் வந்து,  இரண்டு  படகுகளும் அமிழத்தக்கதாக  நிரப்பினார்கள். சீமோன்  பேதுரு  அதைக்  கண்டு, இயேசுவின் பாதத்தில விழுந்து: ஆண்டவரே  நான்  பாவியான  மனுஷன், நீர்  என்னை விட்டுப்  போகவேண்டும் என்றான்.  அவர்கள்  திரளான  மீன்களைப் பிடித்ததினிமித்தம், அவனுக்கும்  அவனோடு கூட  இருந்த  யாவருக்கும்  பிரமிப்புண்டான  படியினால்  அப்படிச்  சொன்னான்.”

இயேசு  கூறியபடியே  செய்ததால்  அவர்களுடைய  வலை  கிழிந்துபோகத்  தக்கதாக  மீன்களைப் பிடித்தனர். வலை  கிழிந்து  போகாமலும், படகு  அமிழ்ந்து போகாமலும்  இருக்கும்படி  கர்த்தர்  அற்புதம் செய்தார். மற்ற  கூட்டாளிகளையும் சைகை  காட்டி  அழைத்து,  அவர்களும்  வந்து  இரண்டு  படகுகளும் அமிழத் தக்கதாக  மீன்களை  நிரப்பினார்கள். தரையில்  நின்று  கொண்டிருந்த  இயேசு ஆழத்தில்  ஏராளமான  மீன்கள்  இருப்பதைக்  கண்டு,  அந்த  மீன்களையெல்லாம் ஒன்றாகக்  கூட்டி  வலைக்குள்  வரச்செய்தார். அவர்கள்  பிரயாசப்பட்டபோது கிடைக்காதது,  கிறிஸ்துவின்  வார்த்தையின்படி  விசுவாசத்தோடு முயற்சித்த போது கிடைத்தது. இயேசு  இல்லாமல்  பெற்ற  ஆசீர்வாதத்தையும்  இயேசுவோடு  இருக்கும்போது  பெற்ற  ஆசீர்வாதத்தையும்  இந்த  அற்புதத்தில்  காணலாம். 

பேதுருவும்  அவனோடு  கூட  இருந்தவர்களும்  திரளான  மீன்களைப்  பிடித்ததினால்  பிரமிப்படைந்தனர். அதனால்  பேதுரு  இயேசுவின்  பாதத்தில் விழுந்து  “நான்  பாவியான  மனுஷன், நீர்  என்னை  விட்டுப்  போக  வேண்டும்.” என்றான்.  எதற்காக  அவ்வாறு  கூறினானென்றால்  பேதுருவை  இயேசு  மத்தேயு  4 : 19 ல்  மனிதர்களைப் பிடிக்கிறவனாக  ஆக்குவேன்  என்று  கூறினார். ஆனால் பேதுரு  தான்  அந்த அழைப்பிற்குக்  கீழ்படியாமல் மீன்பிடிக்க வந்து விட்டதால், இது தான்  எடுத்த சரியான தீர்மானம் அல்ல, என்பதை உணர்ந்து இவ்வாறு கூறினான். ஆனாலும் இயேசு  பேதுருவை  விடவில்லை.  இயேசு  அவர்களிடம்  வலைகளைப்  போடச் சொன்னார். பேதுருவோ  வலையைப் போட்டான் .  இது  பேதுருவின் அரைகுறையான  கீழ்ப்படிதலைக்  காட்டுகிறது. ஆதியாகமம்  18 : 2 ல்  ஆபிரகாமின்  கூடாரவாசலில்  மூன்று  புருஷர்கள்  வந்தார்கள். அவர்களைக்  கண்டவுடனே  ஆபிரகாம்  அவர்களுக்கு  எதிர்கொண்டு  ஒடித்  தரைமட்டும்  குனிந்து  மரியாதை  செலுத்தியதை  வேதத்தில்  பார்த்தோம்.  

மூவரும் இயேசுவைப் பின்பற்றினர்:

லூக்கா 5 :10, 11 “சீமானுக்குக் கூட்டாளிகளான செபெதேயுவின்  குமாரராகிய யாக்கோபும் யோவானும்  அந்தப்படியே  பிரமித்தார்கள். அப்பொழுது  இயேசு சீமோனை  நோக்கி:  பயப்படாதே  இதுமுதல் நீ  மனுஷரைப்பிடிக்கிறவனாய் இருப்பாய்  என்றார். அவர்கள்  படகுகளைக்  கரையிலே கொண்டுபோய்  நிறுத்தி,  எல்லாவற்றையும் விட்டு, அவருக்குப்  பின்சென்றார்கள்.”

சீமோனின்  கூட்டாளிகளான யாக்கோபும்,யோவானும்  மற்றவர்களைப் போலவே  பிரமித்தனர். இயேசு  பேதுருவிடம்  இதற்குப்பின் மனுஷரைப்  பிடிக்கிறவனாய்  இருப்பாய்  என்றார்.  இதுவரை  மீன்பிடி  தொழில்  செய்து கொண்டிருந்த  பேதுருவுக்கு,  ஆவிக்குரிய  தொழிலான  மனுஷரைப்  பிடிக்கிற  தொழிலைச்  செய்யச்சொல்லி இயேசு வாக்களித்தார். அந்த  வாக்குத்தத்தம்  பேதுருவுக்கு  நம்பிக்கையைக்  கொடுத்தது. மீனைக்  கொடுத்தவர்  ஆத்மாக்ளையும்  தருவார்  என்று  விசுவாசித்து, அந்தத்  தொழிலில் இறங்கினார்.  அவர்கள்  படகுகளையும், மீன்களையும்  விட்டு விட்டு  கர்த்தருக்குப்  பின்னால்  சென்றனர். மத்தேயு  4 : 19 லும்  பேதுருவும்,  அந்திரேயாவும்  வலைகளை  அலசிக்கொண்டிருக்கும்  போது,  இயேசு  அவர்களைக்  கண்டு  என்  பின்னே  வாருங்கள்  என்றார்  உடனே  அவர்கள்  வலைகளை  விட்டு  இயேசுவுக்குப்  பின்  சென்றனர். அதேபோல்  ஆயத்துறையில் உட்கார்ந்திருந்த  லேவி  என்னும்  ஆயக்காரனைக்  கண்டு எனக்குப்  பின்  சென்று  வா  என்றார்  அவன்  உடனே  எல்லாவற்றையும்  விட்டு  எழுந்து  இயேசுவுக்குப்  பின்  சென்றான்  (லூக்கா 5:27).  

இயேசுவின்  பிரசங்கத்தைக்  கேட்டு முடித்த  பின்,  இயேசு  அவர்களை  நோக்கி வலைகளைப்  போடச்  சொன்னது, எதைக்  காட்டுகிறதென்றால்  இத்தனை நேரமும்  என்னோடு  அமர்ந்து  வசனத்தைக்  கேட்டுக்  கொண்டிருந்தீர்கள்,  இனி ஆத்மாக்களை  ஆதாயப்படுத்துங்கள்  என்பதுதான். இயேசுவின் ஆலோசனையின்படி மீன்களைப்  பிடித்ததைப்  போல  கர்த்தருடைய ஆலோசனையின்படி  ஆத்மாக்களை  ஆயத்தப்படுத்தச்  செல்லவேண்டும். இயேசுவைச்  சார்ந்திருக்கும் போது  அவர்  ஆத்மாக்களை  நமக்குத்  தருவார். மீன்பிடிக்கிற  இடத்துக்கு  நாம்  செல்வதைப்போல, ஆத்மாக்கள்  இருக்கிற  இடத்தைத்  தேடி  நாம்  செல்ல  வேண்டும்.  வெறுமையான  படகுகளை  மீன்கள்  நிறைந்த  படகுகளாக  கர்த்தர்  மாற்றியதைப்  போல,  நீங்களும்  வெறுமையாக  இருந்தால்  எல்லாவற்றையும்  எல்லாவற்றாலும்  நிரப்புகிற  கர்த்தர்  அந்த வல்லமையால்  உங்கள்  பாத்திரத்தையும்  நிரம்பி  வழியச்  செய்வார். தேவனுடைய  கண்கள்  வெறுமையையும்,  தாழ்மையையும்  நோக்கிப்  பார்க்கின்றன. ஆழத்தில் தள்ளிக்  கொண்டு  போகச்  சொன்னது, எதை உணர்த்துகிறது  என்றால், நாம்  ஒவ்வொருவரும்  ஆவிக்குரிய  ஆழத்திற்குச் செல்ல  வேண்டும்  என்பதுதான். 

கர்த்தர் வாழ்க்கையை மாற்றுகிறவர். அவர்  நோக்கங்களை மாற்றுகிறவர். இயேசுவைப்  பின்பற்றின  யாரும்  கீழாகவில்லை.  சகேயுவின்  வாழ்க்கையை,  சவுலின்  வாழ்க்கையை,  சமாரிய  ஸ்திரீயின்  வாழ்க்கையை  தலைகீழாக  மாற்றினார்.  இயேசு.  மறைந்திருக்கிறவர்களை,  உலகம்  அறியாதவர்களை  உலகத்தின்  வெளிச்சமாக்குபவர். இயேசுவானவர் நம்மைச் செய்யச் சொல்லும்  செயல்களை  மாத்திரம்  நாம் செய்தால்  பெரிய  ஆசீர்வாதத்தைப்  பெற  முடியும்.  உலகப்பிரகாரமான  காரியங்களிலிருந்து நம்மை  வேறு  பிரித்து  ஆவிக்குரிய உன்னதநிலைக்கு  அழைத்துச்  செல்வார். ஊழியத்தில்  மகத்தான  ஊழியம் ஆத்மாக்களை  இரட்சிப்புக்குள் கொண்டு வருவதுதான். நரகத்திற்குச்  செல்ல இருப்பவர்களை  பரலோகத்திற்கு அழைத்து  வருவதுதான்  மகத்தான ஊழியம். நாமும்  அந்த  மகத்தான  ஊழியத்தைச்  செய்ய, ஆத்துமாக்களை  ஆதாயப்  படுத்த  முயற்சிப்போம்.  இயேசு  கூறுகிற  எளிதான  காரியங்களை  நீங்கள்  செய்தால்  உங்களுக்கு கடினமான  காரியங்களை  இயேசு  செய்வார். ஆமென்.

Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago