பெல்ஷாத்சார்:
நேபுகாத்நேச்சாருக்குப் பின் அவருடைய ஒரே மகன் கொஞ்சகாலம்தான் ஆட்சி செய்தான். அவன் அகால மரணமடைந்ததினால் அவனுக்குப்பின் நேபுகாத்நேச்சாருடைய மகளை மணந்த நம்போனிடஸின் (nambonidus) மகனான பெல்ஷாத்சாரை ஆட்சியில் அமரச் செய்தான். நேபுகாத்நேச்சாரின் பேரன் தான் பெல்ஷாத்சார். பெல்ஷாத்சார் சரித்திரத்தில் வித்தியாசமானவனாகக் காணப்பட்டான். பாபிலோனிய ராஜ்ஜியத்தின் பொன்னான ஆட்சி காலம் பெல்ஷாத்சாரோடு முடிவடையப் போகிறது. எரேமியா தீர்க்கதரிசியின் தீர்க்கதரிசனமானது இந்த ராஜாவோடு நிறைவேறப்போகிறது (எரேமியா 27 : 6, 7). பெல்ஷாத்சாருக்கு தேவனளித்த நியாயத்தீர்ப்பைப் பார்க்கலாம்.
பெல்ஷாத்சார் அளித்த விருந்து:
தானியேல் 5 : 1 “பெல்ஷாத்சார் என்னும் ராஜா தன் பிரபுக்களின் ஆயிரம் பேருக்கு ஒரு பெரிய விருந்துசெய்து அந்த ஆயிரம் பேருக்கு முன்பாகத் திராட்சைரசம் குடித்தான்.”
பெல்ஷாத்சார் ராஜா தன்னுடைய பிரபுக்கள் ஆயிரம் பேருக்கு ஒரு பெரிய விருந்து செய்தான். அந்த விருந்தில் ஆயிரம் பேருக்கு முன்பாக ராஜா திராட்சரசம் குடித்தான். இது தேசத்தின் முன்னேற்றத்திற்காகக் கூட்டின கூட்டமல்ல. பாபிலோனை எவ்வாறு மேன்மைப்படுத்த வேண்டும் என்பதற்குக் கூட்டின கூட்டமுமல்ல. ராஜா தன்னை மேன்மைப்படுத்தி, தன்னை மகிமைப்படுத்தும்படி இந்த விருந்தைச் செய்தான். ஒரு மனிதன் தன்னுடைய சுய விளம்பரத்துக்காக எதைச் செய்தாலும் அது நாசத்திலும், மோசத்திலும், வேதனையிலும் தான் முடியும். ஆடம்பரமும், வீண்செலவும் தான் பாபிலோனிய வீழ்ச்சிக்குக் காரணம்.
புதிய ஏற்பாட்டில் கூட ஏரோது ராஜாவும் இதே போல் தன்னுடைய மகளின் பிறந்தநாளைப் பெரிதாகக் கொண்டாடினான். கொண்டாட்டத்தில் மூழ்கிப் போயிருக்கும் பொழுது, தன்னுடைய மகளுக்கு ஒரு வாக்கு பண்ணினான். நீ எதைக் கேட்டாலும் தருவேன் என்றும், ராஜ்ஜியத்தின் பாதியைக் கேட்டாலும் தருவேன் என்றும் குடிவெறியில் கூறினான். மகள் தாய் சொன்னபடி யோவான்ஸ்நானகனின் தலையைக் கேட்டாள். யோவான்ஸ்நானகன் தேவ மனிதனென்று ஏரோதுக்குத் தெரியும். என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தான். அங்கிருந்த பிரபுக்கள் தாங்கள் சொன்ன வாக்கை மாற்ற முடியாதென்றதால் யோவான்ஸ்நாகனின் தலையை வெட்டினான்.
பெல்ஷாத்சார் இந்த விருந்தைச் செய்யும்போது மேதிய சேனாதிபதி பாபிலோனைச் சுற்றி முற்றுகையிட்டிருந்தான். யூப்ரடீஸ் நதியில் ஒரு பகுதியை அந்த நதியின் முக்கிய பகுதியின் பக்கம் திருப்பிவிட்டு நதி வந்த பாதையில் தன்னுடைய சேனைகளுடன் உள்ளே நுழைந்தான். மேதியப் படையானது பட்டணத்தில் நுழைந்திருக்கும் வேளையில் இந்த விருந்து நடக்கிறது. இந்தப் பட்டணம் யாராலும், எவராலும் கைப்பற்ற முடியாது என்ற எண்ணத்தில் ராஜா இருந்திருக்க வேண்டும். எப்படிப்பட்ட முற்றுகையையும் முறியடிக்கத்தக்கதாக நேபுகாத்நேச்சார் பட்டணத்தைக் கட்டியிருந்தான். பட்டணத்தின் மதில் சுமார் 15 மைல் நீளமும் 300 அடி உயரமும், 80 அடி அகலமுமுடையது. நாலு ரதங்கள் அந்த மதிலின்மேல் செல்லக்கூடியதாக இருந்தது. யூப்ரடீஸ் நதியின் ஒரு கிளை நதி பட்டணத்தின் வழியாகச் செல்லும்படியாக அமைத்திருந்தார்கள். பட்டணத்தைச் சுற்றிலும் எதிரிகள் சூழ்ந்திருக்கிறார்கள் என்றறிந்த பின்பும், இந்த விருந்தை ராஜா செய்தான்.
நோவாவின் நாட்களில் ஜனங்கள் புசித்தார்கள், குடித்தார்கள். ஜலப்பிரளயம் வந்து அவர்களை அழித்துப்போடுகிற வரை உணராதிருந்தார்கள் (மத்தேயு 24 : 37 – 39). நோவாவின் நாட்களிலும் அதேபோல் நடந்தது. பரலோகத்திலிருந்து அக்கினி வந்து அவர்களைப் பட்சிக்கும் வரைக்கும் அவர்கள் அறியாமலும், உணராமலும் இருந்தார்கள். சத்தியத்தின் போதனை என்னவென்றால், தேவனுக்குப் பிடிக்காத காரியத்தைக் குடிக்கவும், செய்யவும், பேசவும் கூடாது. உடல் நலத்தைத் கெடுக்கக்கூடிய பழக்கவழக்கங்கள் பாபிலோனில் காணப்பட்டது. அதைத்தான் பெல்ஷாத்சார் செய்தான்.
பெல்ஷாத்சார் போட்ட கட்டளையும், செய்ததும்:
தானியேல் 5 : 2 – 4 “பெல்ஷாத்சார் திராட்சரசத்தை ருசித்துக் கொண்டிருக்கையில், அவன் தன் தகப்பனாகிய நேபுகாத்நேச்சார் எருசலேம் தேவாலயத்திலிருந்து கொண்டுவந்த பொன் வெள்ளி பாத்திரங்களில், ராஜாவாகிய தானும் தன் பிரபுக்களும் தன் மனைவிகளும் தன் வைப்பாட்டிகளும் குடிக்கிறதற்காக அவைகளைக் கொண்டு வரும்படி கட்டளையிட்டான்.”
“அப்பொழுது எருசலேமிலுள்ள தேவனுடைய வீடாகிய ஆலயத்திலிருந்து எடுக்கப்பட்ட பொற்பாத்திரங்களைக் கொண்டு வந்தார்கள்; அவைகளில் ராஜாவும் அவனுடைய பிரபுக்களும் அவனுடைய மனைவிகளும் அவனுடைய வைப்பாட்டிகளும் குடித்தார்கள்.”
“அவர்கள் திராட்சரசம் குடித்து, பொன்னும் வெள்ளியும் வெண்கலமும் இரும்பும் மரமும் கல்லுமாகிய தேவர்களைப் புகழ்ந்தார்கள்.”
பெல்ஷாத்சார் ராஜா தன்னுடைய மனைவிமார்களையும், தன்னுடைய வைப்பாட்டிகளையும் அந்த விருந்தில் கலந்து கொள்ளச் செய்து, மதிமயங்கி, பாவசேற்றுக்குள் போவதற்குக் காரணமானான். நீதிமொழிகள் 23 : 31 ல் மதுபானத்தைப் பார்க்கக்கூடாது என்றுள்ளது. அதேபோல் ஆபகூக் 2 : 15 ல் மதுபானம் குடிக்கிறவர்களை “ஐயோ” என்று கூறுகிறது. தேவாலயத்துப் பாத்திரங்களைத் தவறாகவும், இழிவாகவும் பயன்படுத்துவது தேவனை அவமதிப்பதாகும். ஆலயக் கட்டிடங்கள், காணிக்கைகள், ஊழியத்திற்கென்று தரப்படும் பொருட்கள் எதையும் தவறாகப் பயன்படுத்தக்கூடாது. ராஜா நடத்திய அந்த விருந்தில் தாத்தாவான நேபுகாத்நேச்சார் கூடச் செய்யாத ஒரு காரியத்தை செய்யத் துணிகிறான். நேபுகாத்நேச்சார் எருசலேமைக் கைப்பற்றியபோது தேவனை அறியாத ஒரு மனிதனாக இருந்தான். அந்தப் பட்டணத்தை முற்றுகையிட்டு, சாலமோன் தேவாலயத்தில் வைத்திருந்த பொற் பாத்திரங்களையெல்லாம் தன்னுடைய ஆலயத்துக்குக் கொண்டு வந்தான். ஏறக்குறைய அறுபது ஆண்டுகள் அந்த அபிஷேகம் பண்ணப்பட்டு, வேறு பிரிக்கப்பட்ட பாத்திரங்கள் அங்கேயே இருந்தது. தேவனைக் குறித்த அறிவுக்குள் நேபுகாத்நேச்சார் வந்தபின் அதைத் தனியாகப் பத்திரமாக வைத்து விட்டான். கர்த்தருடைய உபயோகத்துக்கு மாத்திரமே பயன்படுத்தக் கூடிய பாத்திரங்கள். அந்தப் பாத்திரங்களை பெல்ஷாத்சார் கொண்டு வரும்படி கட்டளையிட்டான். அந்தப் பாத்திரங்களில் திராட்சை ரசத்தை ஊற்றி அனைவரும் குடித்தார்கள். பெல்ஷாத்சார் தேவனுடைய பரிசுத்த பாத்திரங்களைத் ஈடுபடுத்தியது ஜீவனுள்ள தேவனுக்கு எதிராக வேண்டுமென்றே செய்யப்பட்ட அகந்தையான செயலாகும். தனது செயலினால் அந்தப் பாத்திரங்களை அசுசிப்படுத்துகிறான்.
நம்முடைய ஒவ்வொரு அவயங்களும் ஆண்டவர் பயன்படுத்தக்கூடிய பாத்திரங்கள் தான். நாம் தேவனுடைய பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாக இருக்கிறோம் என்று வேதத்தில் கூறப்பட்டிருக்கிறது. ஒரு அவயத்தைக் கூடத் தவறாக பயன்படுத்தினால், தேவன் அதற்குக் கேள்விகள் கேட்பார். தேவனுடைய பாத்திரங்கள் என்பது ஊழியர்களையும் குறிக்கிறது. அவர்கள் மனம் நோகப் பேசக்கூடாது. அவர்கள் கண்ணீர் சிந்தினால், அது நமக்கு ஒரு பெரிய நியாயத்தீர்ப்பாகும். மேலும் பெல்ஷாத்சார் கொடுத்த விருந்தில் அவர்கள் குடிவெறியில் கல்லும் மண்ணுமான தேவர்களைப் புகழ்ந்தனர். நம்மை உண்டாக்கினவரை, சிருஷ்டித்தவரைப் புகழாமல், நாசியில் சுவாசத்தைக் கொடுத்தவரைப் புகழாமல், விக்கிரகத்துக்கு பின்னாலிருக்கிற சாத்தானைப் புகழ்ந்தனர். ஆண்டவர் வெறுக்கிற ஒரு பாவம் விக்கிரகாராதனை. தேவன் ஒருபோதும் தன்னுடைய மகிமையை விக்கிரகங்களுக்குப் போக விடுவதில்லை. ராஜா தன்னுடைய தாத்தாவாகிய நேபுகாத்நேச்சார் உன்னதத்தின் தேவனே உண்மையான தேவன் என்று அறிவித்த பின்பும், பேரன் உணர்வற்றவனாயிருந்தான். தாத்தா தேவனை அறிந்து கொண்டான். பேரன் தேவனை அசட்டை செய்தான். அசட்டை செய்தது மட்டுமல்லாமல், தேவனுக்கு விரோதமாகக் கலகம் செய்தான் என்று கூறலாம். அதனால்தான் தேவாலயப் பாத்திரங்களைத் தவறாகப் பயன்படுத்தினான்.
தேவனது நியாயத்தீர்ப்பு:
தானியேல் 5 : 5 “அந்நேரத்திலே மனுஷ கைவிரல்கள் தோன்றி, விளக்குக்கு எதிராக ராஜ அரமனையின் சாந்து பூசப்பட்ட சுவரிலே எழுதிற்று; எழுதின அந்த கையிருப்பை ராஜா கண்டான்.”
தேவன் பெல்ஷாத்சாரோடு சொப்பனத்தின் மூலமாகவோ தரிசனத்தின் மூலமாகவோ பேசவில்லை. தேவனைத் துக்கப்படுத்தும் செய்கைகளைத் தேவன் பொறுத்துக் கொள்ளாமல், ஆண்டவருடைய கைவிரல்கள் தோன்றி சுவரில் எழுத ஆரம்பித்தது. ஒரு நீதியுள்ள நியாயாதிபதி நியாயத்தீர்ப்பை எழுதுவது போல, தேவனுடைய கைவிரல் எழுதினது. ராஜா அதைப் பார்த்தார். தேவனுடைய விரல்கள் முதலில் நியாயப்பிரமாணத்தையும், இரண்டாவது ஆலயத்தின் மாதிரியை தாவீதுக்கும், மூன்றாவது பெல்ஷாத்சாருக்கும், நான்காவது இயேசு பாவியான ஸ்திரீயை கல்லெறிந்து கொல்லக் கூட்டி வந்தபோது தரையிலே குனிந்தும் எழுதினார். சுவரில் எழுதிய அந்த எழுத்து வாக்குத்தத்தமான ஒரு வார்த்தையுமல்ல, ஆசீர்வாதமான வார்த்தையுமல்ல. தேவனுடைய கோபாக்கினையில் வந்த நியாயத்தீர்ப்பு. அப்பொழுதும் ராஜா தேவாலயத்திலுள்ள பரிசுத்தமான பொற்பாத்திரங்களை தான் எடுத்ததும் ஒன்றான மெய்தேவனை அவமதித்ததும் தவறு என்பதை ராஜா உணரவில்லை. ராஜா தேவனின் இறுதியான நியாயத்தீர்ப்பைத் தானே வருவித்துக் கொண்டான். தேவன் அன்பு நிறைந்தவர் மட்டுமல்ல, பயங்கரமுமானவர் என்பதை ராஜா அறியவில்லை.
ராஜாவின் கலக்கம்:
தானியேல் 5 : 6, 7 “அப்பொழுது ராஜாவின் முகம் வேறுபட்டது; அவனுடைய நினைவுகள் அவனை கலங்கப்பண்ணினது; அவனுடைய இடுப்பின் கட்டுகள் தளர்ந்தது, அவனுடைய முழங்கால்கள் ஒன்றோடொன்று மோதிக் கொண்டது.”
“ராஜா உரத்த சத்தமிட்டு; ஜோசியரையும் கல்தேயரையும் குறிசொல்லுகிறவர்களையும் உள்ளே அழைத்துவரும்படி சொன்னான். ராஜா பாபிலோன் ஞானிகளை நோக்கி: இந்த எழுத்தை வாசித்து, இதின் அர்த்தத்தை எனக்கு வெளிப்படுத்துகிறவன் எவனோ, அவன் இரத்தாம்பரமும் கழுத்திலே பொற்சரப்பணியும் தரிக்கப்பட்டு, ராஜ்யத்திலே மூன்றாம் அதிபதியாய் இருப்பான் என்று சொன்னான்.”
“அப்பொழுது ராஜாவின் ஞானிகளெல்லாரும் வந்து சேர்ந்தார்கள்; ஆனாலும் அவர்கள் அந்த எழுத்தை வாசிக்கவும், அதின் அர்த்தத்தை ராஜாவுக்குத் தெரிவிக்கவும் கூடாதிருந்தது.”
சுவரில் எழுதப்பட்ட நான்கு சொற்களைப் பார்த்த ராஜாவின் முகம் வேறுபட்டது. கலங்கினான். அதற்குக் காரணம் போரின் உச்சகட்டத்தில் தேசம் இருந்ததால் தனக்கு என்ன நேரிடுமோ என்ற அச்சம் ஒரு காரணமாக இருந்திருக்கக் கூடும். தேவனே இந்த பயத்தை உண்டாக்கியிருக்கவும் கூடும். தேவன் பயங்கரமானவர். அவனுடைய இடுப்பின் கட்டுகள் தளர்ந்தது. அவனுடைய முழங்கால்கள் நடுங்கி ஒன்றையொன்று மோதின. சரித்திர ஆசிரியர்கள் அந்த எழுத்தை வாசித்தவுடன் ராஜாவின் இடுப்புக்குக் கீழ் செயல்படாமல் போயிற்று என்று கூறுகின்றனர். இடுப்பின் கட்டுகளைத் தேவன் அறுத்தார். இங்கு நான்கு காரியங்கள் சொல்லப்படுகிறது.
ராஜாவுக்கு மரண பயம் உண்டானது. ராஜா திகிலோடும் நடுக்கத்தோடும் உரத்த சத்தத்துடன் கல்தேயரையும், குறிசொல்லுகிறவர்களையும், ஜோசியரையும் அழைத்து வரச் சொன்னான்.
ராஜா அவர்களிடம் அந்த எழுத்தை வாசித்து அதன் அர்த்தத்தை வெளிப்படுத்துகிறவனுக்கு இரத்தாம்பரமும், பொற்சரப்பணியும் தரிக்கப்பட்டு ராஜ்யத்தில் மூன்றாம் அதிபதியாய் ஆக்குவேன் என்று கூறினான். ஆனால் அத்தனை வருடங்கள் தானியேல் அங்கிருந்தும் அவனுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஏறக்குறைய தானியேலுக்கு எண்பது வயது இருக்கும். அத்தனை பேர்களும் வந்து அந்த எழுத்தை வாசித்துப் பார்த்தும் அவர்களால் வாசிக்க முடியவில்லை. பாபிலோனிய ஞானிகள் மூன்று முறை தோல்வி கண்டவர்களாகிறார்கள். இது உலக மொழியல்ல பரலோகமொழி. அந்த எழுத்துக்களை வாசிக்க அவர்களால் முடியாததால் ராஜாவின் நடுக்கத்தை மாற்ற முடியவில்லை.
ராஜாத்தியின் உபதேசம்:
தானியேல் 5 : 10, 11 “ராஜாவும் அவனுடைய பிரபுக்களும் சொன்னவைகளை ராஜாத்தி கேள்விப்பட்டு விருந்துசாலைக்குள் பிரவேசித்தாள். … உமது நினைவுகள் உம்மைக் கலங்கப்பண்ணவும் உமதுமுகம் வேறுபடவும் வேண்டியதில்லை.”
“உம்முடைய ராஜ்யத்திலே ஒரு புருஷன் இருக்கிறான், அவனுக்குள் பரிசுத்த தேவர்களுடைய ஆவி இருக்கிறது; ஆகையால் உம்முடைய பிதாவாகிய நேபுகாத்நேச்சாரென்னும் ராஜாவானவர் அவனை …. அதிபதியாக வைத்தார்.
“…தானியேலுக்குள் சொப்பனங்களை வியார்த்திபண்ணுகிறதும், புதை பொருள்களை வெளிப்படுத்துகிறதும், கருகலானவைகளை தெளிவிக்கிறதுமான அறிவும் புத்தியும் விசேஷித்த ஆவியும் உண்டென்று காணப்பட்டது; இப்போதும் தானியேல் அழைக்கப்படட்டும், அவன் அர்த்தத்தை வெளிப்படுத்துவான் என்றான்.
அப்பொழுது ராஜாவின் பாட்டி (நேபுகாத்நேச்சாரின் மனைவியாக இருக்கலாம்) ராஜாவும், பிரபுக்களும் சொன்னவைகளைக் கேட்டு ராஜாவிடம் வந்து கலங்க வேண்டியதில்லை, இங்கு ஒரு புருஷன் இருக்கிறான் என்றாள். புருஷன் என்று சொல்லக்கூடிய ஆண்மகனாக தானியேலைக் குறிப்பதைக் காண்கிறோம். அத்தனை கோடி ஜனங்களுக்கு மத்தியில் தேவனால் விஷேசித்தவனாகத் தானியேல் காணப்பட்டான். அவனுக்குப் பரிசுத்த தேவர்களின் ஆவி உள்ளது என்றும், உம்முடைய பிதாவின் நாட்களில் அவனை சாஸ்திரிகளுக்கும், ஜோசியருக்கும், கல்தேயருக்கும், குறிசொல்லுகிறவர்களுக்கும் அதிபதியாக உயர்த்தினார் என்றும் பாட்டி தெளிவாகக் கூறினாள். அவனுக்குச் சொப்பனங்களின் விளக்கங்களை அறிவிக்கவும், புதைபொருளை வெளிப்படுத்தவும், கருகலானவைகளைத் தெரிவிக்கவும் கூடிய அறிவும், புத்தியும் உண்டென்று கூறுகிறாள். தானியேலை அழைத்தால் இந்த எழுத்தின் அர்த்தத்தை வெளிப்படுத்துவான் என்று உறுதியாகக் கூறினாள். அதுவரை ராஜா தானியேலைக் கூப்பிடவில்லை. அதன்பின் ராஜா தானியேலை அழைத்து வரக் கட்டளையிட்டான்.
ராஜா தானியேலை அழைத்து கூறியது:
தானியேல் 5 : 13,14,16 “அப்பொழுது தானியேல் ராஜாவின் முன் உள்ளே அழைத்து வந்து விடப்பட்டான் ராஜா தானியேலைப் பார்த்து நீ என் பிதாவாகிய ராஜா யூதாவிலிருந்து சிறைபிடித்துவந்த யூதரில் ஒருவனாகிய தானியேல் அல்லவா?”
“உனக்குள்ளே தேவர்களின் ஆவி உண்டென்றும், வெளிச்சமும் புத்தியும் விசேஷித்த ஞானமும் உன்னிடத்தில் காணப்பட்டதென்றும் உன்னைக் குறித்துக் கேள்விப்பட்டேன்.
“பொருளை வெளிப்படுத்தவும், கருகலானவைகளைத் தெரிவிக்கவும் உன்னாலே கூடுமென்று உன்னைக் குறித்துக் கேள்விப்பட்டேன்; இப்போதும் நீ இந்த எழுத்தை வாசிக்கவும், இதின் அர்த்தத்தை எனக்குத் தெரிவிக்கவும் உன்னாலே கூடுமானால், நீ இரத்தாம்பரமும் கழுத்திலே பொற்சரப்பணியும் தரிக்கப்பட்டு, ராஜ்யத்திலே மூன்றாம் அதிபதியாய் இருப்பாய் என்றான்.”
தானியேலை ராஜாவிற்கு முன்பாக அழைத்து வந்தனர். அப்பொழுது ராஜா அவனை நோக்கி பழையதை மறக்காமல் தன்னுடைய பிதாவான நேபுகாத்நேச்சார் யூதாவிலிருந்து சிறைப்பிடித்து வந்த தானியேல் அல்லவா என்று கூறியதைப் பார்க்கிறோம். தானியேல் பாபிலோனுக்கு வந்து அத்தனை வருடங்கள் ஆகியும், ராஜா அதை மறக்கவில்லை. தானியேலைப் பார்த்து உனக்குள்ளே தேவர்களின் ஆவியும், வெளிச்சமும், புத்தியும், விசேஷித்த ஞானமும் இருக்கிறதென்று கேள்விப்பட்டேன் என்று கூறுகிறான். தான் பிரபுக்களுக்கு விருந்து செய்யும்பொழுது சுவரில் எழுதிய எழுத்தைப் பார்த்ததாகவும், அதனுடைய அர்த்தத்தைத் தெரிவிப்பதற்கு சாஸ்திரிகளையும், ஜோசியரையும் அழைத்தும் அவர்களால் அதனுடைய அர்த்தத்தை வெளிப்படுத்த முடியவில்லை என்றும் கூறினான். திரும்பவும் தானியேலிடம் உனக்குப் பொருளை வெளிப்படுத்தவும், கருகலானவைகளைத் தெரிவிக்கவும் உன்னாலே கூடுமென்று உன்னைக் குறித்துக் கேள்விப்பட்டேன், எனவே இந்த சுவரில் எழுதிய எழுத்துக்களை தானியேல் வாசிக்கவும், அதன் அர்த்தத்தை தெரிவிக்கவும் செய்தால் அவனுக்கு இரத்தாம்பரமும், கழுத்திலே பொற்சரப்பணியும் தரிக்கப்பட்டு ராஜ்யத்திலே மூன்றாம் அதிபதியாய் அமர்த்துவேன் என்றான். இரத்தாம்பரம் என்பது பழுப்பு, சிவப்பு நிறம் கொண்ட விலை உயர்ந்த ஒரு ஆடை. ராஜாக்கள் மட்டுமே இந்த ஆடையை அணியலாம். பொற்சரப்பணி என்பது கழுத்தில் அணிவதற்காகப் பொன்னால் செய்யப்பட்ட சங்கிலி வேலைப்பாடு மிக்கது. அந்தச் சங்கிலியை ராஜா மட்டுமே அணிய அனுமதிக்கப்படுவார்கள். இப்படிப்பட்ட இரண்டையும் ராஜா தானியேலுக்குக் கொடுப்பதாக வாக்களிக்கிறார்.
தானியேல் ராஜாவுக்கு கொடுத்த விளக்கம்:
தானியேல் 5 : 17, 18, 20 “அப்பொழுது தானியேல் ராஜ சமூகத்தில் பிரதியுத்தரமாக: உம்முடைய வெகுமானங்கள் உம்மிடத்திலேயே இருக்கட்டும்; உம்முடைய பரிசுகளை வேறொருவனுக்குக் கொடும்; இந்த எழுத்தை நான் ராஜாவுக்கு வாசித்து, இதின் அர்த்தத்தைத் தெரிவிப்பேன்.”
“ராஜாவே, உன்னதமான தேவன் உம்முடைய பிதாவாகிய நேபுகாத்நேச்சாருக்கு ராஜ்யத்தையும் மகத்துவத்தையும் கனத்தையும் மகிமையையும் கொடுத்தார்.”
“அவருடைய இருதயம் மேட்டிமையாகி, அவருடைய ஆவி கர்வத்தினாலே கடினப்பட்டபோது, அவர் தமது சிங்காசனத்திலிருந்து தள்ளப்பட்டார்; அவருடைய மகிமை அவரை விட்டு அகன்று போயிற்று.”
தானியேல் வெகுமதிகளுக்காக வேலை செய்பவன் அல்ல. அவன் தன்னுடைய வயது முதிர்ந்த நிலையிலும் ராஜாவின் வெகுமதிகளைப் புறக்கணித்தான். ராஜா பயத்தோடும் நடுக்கத்தோடும் இருந்தபடியினால் உன்னுடைய வெகுமதிகள் உன்னிடத்திலேயே இருக்கட்டும் என்று கூறினான். உம்முடைய பரிசுகளை வேறொருவனுக்குக் கொடும் என்றான். ஆனால் இந்த எழுத்தின் அர்த்தத்தை ராஜாவாகிய உமக்கு நான் தெரிவிப்பேன் என்று அழுத்தம் திருத்தமாகக் கூறினான். சுவரில் எழுதிய எழுத்துக்களின் அர்த்தத்தைத் தானியேல் தெரிவிப்பதன் மூலம் ராஜாவுக்கு ஒரு சிறந்த செய்தியைக் கொடுக்கிறான். இப்பொழுது தானியேல் நேபுகாத்நேச்சார் காலத்தில் இருந்ததைப் போல இளைஞனாக இல்லை. தானியேல் பாபிலோனுக்கு வந்து 70 வருடங்கள் ஆகிவிட்டது. தானியேல் வயது முதிர்ந்தவனாக இருக்கிறான். ஆனால் பெல்ஷாத்சாரோ இளைஞனாகத் தானியேல் கூறுவதைக் கேட்கிறான். தாத்தாவாகிய நேபுகாத்நேச்சார் ராஜா சர்வாதிகாரியாக வாழ்வதற்கு, அந்த இடத்தைக் கொடுத்தவர் தேவனே என்றான். அத்தனை உயர்ந்த நிலைமையில் நேபுகாத்நேச்சார் எழுந்தபோது மனமேட்டிமையால் “நான் கட்டின மகா பாபிலோன் அல்லவா” என்று தன்னுடைய வாயால் கூறியபோது, தேவன் அவனை சிங்காசனத்திலிருந்து தள்ளினார். மிருகங்களைப் போல அலைந்தான். தேவனுடைய மகிமை அவனை விட்டு அகன்று போனது என்று ஞாபகப்படுத்தினான்.
தானியேல் 5 : 22, 23 “அவருடைய குமாரனாகிய பெல்ஷாத்சார் என்னும் நீரோவென்றால், இதையெல்லாம் அறிந்திருந்தும், உமது இருதயத்தைத் தாழ்த்தாமல்,”
“பரலோகத்தின் ஆண்டவருக்கு விரோதமாக உம்மை உயர்த்தினீர்; அவருடைய ஆலயத்தின் பாத்திரங்களை உமக்கு முன்பாகக் கொண்டுவந்தார்கள் நீரும், உம்முடைய பிரபுக்களும், உம்முடைய மனைவிகளும், உம்முடைய வைப்பாட்டிகளும் அவைகளில் திராட்சரசம் குடித்தீர்கள்; இதுவுமன்றி, தம்முடைய கையில் உமது சுவாசத்தை வைத்திருக்கிறவரும், உமது வழிகளுக்கு எல்லாம் அதிகாரியுமாகிய தேவனை நீர் மகிமைப்படுத்தாமல் காணாமலும் கேளாமலும் உணராமலும் இருக்கிற வெள்ளியும் பொன்னும் வெண்கலமும் இரும்பும் மரமும் கல்லுமாகிய தேவர்களைப் புகழ்ந்தீர்.”
ராஜா இத்தனையும் அறிந்திருந்தும், இருதயத்தைத் தாழ்த்தாமல், தேவனுக்கு நேராக இருதயத்தைத் திருப்பாமல், தேவனுடைய ஆலயத்திலுள்ள பாத்திரங்களை எடுத்து வந்து, அதில் திராட்சை ரசம் ஊற்றி, உம்முடைய பிரபுக்களும், உம்முடைய மனைவிகlளும், உம்முடைய வைப்பாட்டிகளும் சேர்ந்து அதில் ஊற்றி திராட்சை ரசத்தைக் குடிக்கச் செய்தீர். இத்தனை ராஜ பதவியில் இருப்பதற்குக் காரணம் ஜீவனுள்ள தேவனே என்று அவரை அறியாமலும் உணராமலும், மகிமைப்படுத்தாமலும் ஜீவன் இல்லாத வெள்ளியினாலும், பொன்னினாலும், வெண்கலத்தினாலும், இரும்பினாலும், மரத்தினாலும், கல்லினாலும் செய்த தேவர்களைப் புகழ்ந்தீர் என்று தானியேல் கூறினான். தேவரல்லாதவர்களைப் புகழ்ந்து, ஜீவனுள்ள தேவனைத் தூஷித்தபடியால், தேவன் ராஜாவைத் துக்கப்படுத்தினார் என்றான். சுவரில் எழுதிய கையெழுத்து தேவனால் எழுதப்பட்டது என்று தானியேல் கூறினான். சத்தியத்தை அறிந்து கொள்ள வாய்ப்பு ராஜாவுக்குக் கொடுக்கப்பட்டும் ராஜா அதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டதாகக் கூறினான்.
சுவரில் எழுதிய எழுத்தும், தானியேல் கொடுத்த விளக்கமும்:
தானியேல் 5 : 24 – 28 “ அப்பொழுது அந்த கையிறுப்பு அவரால் அனுப்பப்பட்டு, இந்த எழுத்து எழுதப்பட்டது.”
“எழுதப்பட்ட எழுத்து என்னவென்றால்: மெனே, மெனே, தெக்கேல், உப்பார்சின் என்பதே.”
“இந்த வசனத்தின் அர்த்தமாவது: மெனே என்பதற்கு, தேவன் உன் ராஜ்யத்தை மட்டிட்டு, அதற்கு முடிவுண்டாக்கினார் என்றும்,”
“தெக்கேல் என்பதற்கு, நீ தராசியிலேநிறுக்கப்பட்டு குறையக் காணப்பட்டாய் என்றும்,”
“பெரேஸ் என்பதற்கு, உன் ராஜ்ஜியம் பிரிக்கப்பட்டு, மேதியிருக்கும் பெர்சியருக்கும் கொடுக்கப்பட்டது என்றும் அர்த்தமாம் என்றான்.”
இதை ஒவ்வொரு வார்த்தையாக தானியேல் விளக்கினான். மெனே என்ற சொல் இருமுறை கூறப்பட்டிருப்பதால் தேவன் உம்மைக் கணக்கிட்டு, உம்முடைய ராஜ்யத்திற்கு முடிவுண்டாக்கினார் என்று தானியேல் கூறினான். தேவன் பாபிலோனுடைய நாட்களை எண்ணி முடித்துவிட்டார் என்றான். தெக்கேல் என்பதற்கு தேவனுடைய தராசில் வைத்து பாபிலோனை நிறுத்துப் பார்க்கிறார் என்றும், அது குறைவானதாகவே காணப்படுகிறது என்றும் விளக்கினான். தேவனே அதை உண்டாக்கினார். உயர்த்தினார். இப்பொழுது அதை தாழ்த்தப் போகிறார் என்றும் கூறினான். தேவன் எதிர்பார்த்ததற்கு ஏற்றாற் போல் ராஜாவின் செயல்கள் காணப்படாததால் அவ்வாறு செய்யப்போகிறார் என்றான். பெரேஸ் என்பதற்கு இப்போது பாபிலோன் ராஜ்ஜியம் பிரிக்கப்பட்டு, அது மேதியருக்கும், பெர்சியருக்கும் கொடுக்கப்படப் போகிறது என்றான். பொன்னான தலை அகற்றப்படப் போகிறது,. வெள்ளியிலான புயங்களும் மார்பு பகுதியும் ஆளப்போகிறது என்று விளக்கினான்.
இந்த உலகத்தில் வாழும் நாட்கள் எவ்வளவு என்பதை தேவன் ஒருவரே அறிவார். எப்பொழுது வாழ்க்கை முடிவடையும் என்பதையும் அவர் ஒருவரே அறிவார். ஏனென்றால் . தேவன் நம்மையும் தமது அளவுகோலால் அளந்து நம்முடைய நிலைமையை காண்கிறார். நாம் என்ன செய்ய வேண்டுமென்று கூறி எச்சரிக்கிறார். மனம் திரும்ப வேண்டும் இல்லாவிட்டால் சீக்கிரமாக நம்மையும் நியாயந்தீர்ப்பார். ஏனெனில் நம்முடைய நீதி அழுக்கான கந்தையைப் போல் இருக்கிறது. இந்த இராஜ்யங்களெல்லாம் கர்த்தாதி கர்த்தருடைய கரத்தில் இருக்கிறது. எசக்கியேல் 21 : 27ல் கூறியிருப்பது போல, இயேசு கிறிஸ்துவின் ராஜ்ஜியம் வரும்வரை, உலகத்தின் ராஜ்ஜியங்களைத் தேவன் கவிழ்த்துக் கொண்டேயிருப்பார். உலகத்தைப் பயமுறுத்திக் கொண்டிருந்த பலரை இல்லாதபடி செய்கிறவரும் அவரே. பெயர்க்கப்படாத கல் புறப்பட்டு வருவது இயேசுவை குறிக்கிறது. அவரே உலகத்தை ஆளப் போகிறவர்.
பெல்ஷாத்சார் தானியேலுக்கு கொடுத்த வெகுமதி:
தானியேல் 5 : 29 “அப்பொழுது பெல்ஷாத்சார் தானியேலுக்கு இரத்தாம்பரத்தையும், அவனுடைய கழுத்தில் பொற்சரப்பணியும் தரிப்பிக்கவும், ராஜ்யத்திலே அவள் மூன்றாம் அதிகாரியாயிருப்பவன் என்று அவனைக் குறித்து பறைமுறையிடவும் கட்டளையிட்டான்.”
பெல்ஷாத்சார் ராஜா மிகவும் சந்தோஷத்தில் தானியேலுக்கு இரத்தாம்பரத்தை உடுத்துவித்து, அவனுடைய கழுத்தில் பொற்சரப்பணியை தரிப்பிக்கச் செய்து ராஜ்யத்திலே மூன்றாம் அதிகாரியாக இருப்பான் என்று அனைத்து இடங்களுக்கும் பறைசாற்றக் கட்டளையிட்டான். இது ராஜா அவனுக்குக் கொடுத்த வெகுமதி அல்ல. அந்நிய நாட்டில் தேவனையறியாத புறஜாதி ராஜாக்களின் மத்தியில் தானியேலுக்கிருந்த தேவனுடைய பற்றையும் அவனுக்கிருந்த வைராக்கியத்தையும் பார்த்த தேவன். இத்தனை உயர்வை ஜீவனுள்ள தேவனாகிய கர்த்தர் அவனுக்குக் கொடுத்தார்.
பெல்ல்ஷாத்சாரின் முடிவு:
தானியேல் 5 : 30, 31 “அன்று இராத்திரியிலே கல்தேயரின் ராஜாவாகிய பெல்ஷாத்சார் கொலை செய்யப்பட்டான்.”
“மேதியனாகிய தரியு தன் அறுபத்திரண்டாம் வயதில் ராஜ்யத்தைக் கட்டிக்கொண்டான்.”
அரண்மனையில் விருந்து நடைபெற்றுக் கொண்டிருந்த அந்த வேளையில் மேதியர்கள் யூப்ரட்டீஸ் நதியைத் திசை திருப்பி, பாபிலோன் பட்டணத்திற்குள் நுழைந்தனர். அரண்மனையை நோக்கி வந்து கொண்டிருந்தனர். பாபிலோனியக் காவலாளிகளுக்கு என்ன நடக்கிறது என்று அறிந்து கொள்வதற்கு முன்பாகவே, அந்தப் படை அரண்மனைக்குள் நுழைந்து விட்டது. திடீரென்று பாபிலோன் ராஜ்ஜியம் பிடிக்கப்பட்டது. தராசில் நிறுக்கப்பட்டு குறைவாகக் காணப்பட்ட பெல்ஷாத்சார், தேவனைப் புறக்கணித்ததால் அன்றே கொலை செய்யப்பட்டான். தேவனே அதைச் செய்தார். அவருடைய அளவுகோலின் மூலம் அதைச் செய்தார்.
தேவன் பாபிலோன் ராஜ்ஜியத்தை மேதிய பெர்சியர்களுக்குக் கொடுத்தார். மேதிய சாம்ராஜ்யத்தில் அரசனாக தரியு பதவியேற்றார். இதைக் குறித்து ஏற்கனவே ஏசாயா 21ம் அதிகாரத்தில் கூறப்பட்டிருக்கிறது. மற்றும் ஒரு நாளிலே பாபிலோன் தேவனுடைய கரத்தில் விழப்போகிறது. அதைக்குறித்து வெளிப்படுத்தல் 18 : 2, 3ல் பார்க்கலாம். அப்பொழுது மனிதனுடைய சாம்ராஜ்யம் முற்றுப் பெறும்.
இதனால் நாம் கற்றுக் கொண்டது:
பெல்ஷாத்சார் அளித்த விருந்து செரிமானமாவதற்குள்ளாகவும், தான் அளித்த மதுவின் போதை அதைக் குடித்தவர்களினின்று நீங்குவதற்கு முன்பாகவும் கொல்லப்பட்ட அவனுடைய ஓர் இரவு நிகழ்ச்சியை இந்த அதிகாரத்தில் பார்க்கிறோம்.. இன்று தேவன் நம்மைப் பார்த்து கூறுவதும் இதுதான். நாம் எல்லோரும் பாவம் செய்து, தேவ மகிமையற்றவர்களாகவே காணப்படுகிறோம். தேவனுடைய அளவு கோலினால் நாம் அளக்கப்படும்போது, குறைவாகவே காணப்படுகிறோம். தேவனைவிட்டு தூரம் போனவர்களாகவும், தேவனுடைய நீதியற்றவர்களாகவும் காணப்படுகிறோம். தேவனே நமக்கு இரட்சிப்பை இலவசமாக அருளினார். தேவன் நமக்குக் கொடுத்திருக்கிற நாட்கள் எவ்வளவு என நமக்குத் தெரியாது. எனவே நாம் மனம் திரும்ப வேண்டும். இன்னும் நம்மை இந்த உலகத்தில் விட்டு வைத்திருக்கிறார் என்றால், ஏதோ நம்மிடம் தேவன் எதிர்பார்க்கிறார் என்ற பொருள். நம்முடைய காலம் முடிவடையும் முன் அவருடைய எதிர்பார்ப்பை நிறைவேற்ற நம்மை நாம் அர்ப்பணிக்க வேண்டும்.
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…