தமிழ் பைபிள் விளக்கவுரை

ஈஸ்டர் இயேசு உயிர்த்தெழுதல் – Easter Resurrection Sunday

கிறிஸ்தவ மார்க்கத்தில் முக்கியமான ஒரு நாள் கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாள். இயேசு மரணத்தை ஜெயித்து உயிரோடெழுந்தார். பாதாளத்தை ஜெயித்து, சத்துருவை ஜெயித்து, சாத்தானை ஜெயித்து உயிரோடெழுந்தார் கிறிஸ்தவத்தின் முதுகெலும்பும், அடிப்படை சத்தியமும், கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் தான் இருக்கிறது. எந்த மதத்திலும் மரித்து உயிரோடெழுந்த தேவனை நாம் பார்க்க முடியாது. ஆனால் கிறிஸ்தவ மார்க்கத்தில் இயேசு மரித்து உயிரோடு எழுந்தார். இன்றைக்கும் ஜீவிக்கிறார். ஆகவே கிறிஸ்தவ மார்க்கத்தில் ஜீவன் உண்டு. வல்லமை உண்டு. மற்ற மார்க்கங்களை விட உயிர்த்தெழுதலிலும் நம்பிக்கை உண்டு. இயேசுவை வைத்த கல்லறையானது அவரை கட்டிக் காக்க முடியவில்லை. யூத போர்சேவகர்களாலும், ரோம போர்சேவகர்களாலும் இயேசுவின் கல்லறையைக் காக்க முடியவில்லை. எந்த அரசாங்க சட்டங்களும், அரசாங்க முத்திரையும், அவரை கல்லறையில் அடக்கிவைக்க முடியாமல் போயிற்று.

கல்லறைக்குப் போனவர்களும் அங்கு பார்த்ததும்:

மாற்கு 16 : 1 ஓய்வுநாளான பின்பு மகதலேனா மரியாளும், யாக்கோபின் தாயாகிய மரியாளும், சலோமே என்பவளும், அவருக்குச் சுகந்தவர்க்கமிடும்படி அவைகளை வாங்கிக்கொண்டு,”

மத்தேயு 28 : 2 – 4 “அப்பொழுது, பூமி மிகவும் அதிரும்படி, கர்த்தருடைய தூதன் வானத்திலிருந்திறங்கி வந்து, வாசலிலிருந்த கல்லைப் புரட்டித் தள்ளி, அதின்மேல் உட்கார்ந்தான்.”

“அவனுடைய ரூபம் மின்னல் போலவும், அவனுடைய வஸ்திரம் உறைந்த மழையைப்போல வெண்மையாகவும் இருந்தது.”

“காவலாளர் அவனுக்குப் பயந்ததினால் திடுக்கிட்டுச் செத்தவர்கள் போலானார்கள்”

ஓய்வு நாள் முடிந்து வாரத்தின் முதல் நாள் அதிகாலையில் மகதலேனா மரியாளும், மற்ற மரியாளும், சலோமேயும், இவர்களுடனே கூட மற்ற ஸ்திரீகளும் கல்லறையைப் பார்க்க வந்தனர். அவர்கள் இயேசுவுக்கு சுகந்த வர்க்கம் இடுவதற்காக, அவைகளை வாங்கிக்கொண்டு கல்லறைக்கு வந்தனர். அப்பொழுது பூமி மிகவும் அதிர்ந்ததைப் பார்த்தனர். அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, கர்த்தருடைய தூதன் ஒருவன் வானத்திலிருந்து இறங்கி வருவதையும், வந்தவன் கல்லறையில் வாசலிலிருந்த கல்லைப் புரட்டித்தள்ளி, அதன் மேல் உட்கார்ந்ததையும் பார்த்தனர். இயேசு வெளியே வருவதற்காக தூதன் அந்தக் கல்லை புரட்டித் தள்ளவில்லை ஏனெனில் ஏற்கனவே இயேசு வெளியே வந்து விட்டது அந்த தூதனுக்குத் தெரியும். மற்றவர்கள் எளிதில் சென்று கல்லறைக்குள் போய் பார்ப்பதற்காகத் தான் தூதன் அந்தக் கல்லைப் புரட்டித் தள்ளினான். அந்தத் தூதனின் முகம் மின்னலைப் போலவும், அவனுடைய வஸ்திரம் வெண்மையாகவும் இருந்தது. கல்லறையைக் காவல் காத்துக் கொண்டிருந்த காவலாளர்கள் அவனைப் பார்த்து பயத்தினால் செத்தவர்களைப் போலானார்கள்.

தூதன் கூறியது:

மத்தேயு 28 : 5 – 7 “தூதன் அந்த ஸ்திரீகளை நோக்கி: நீங்கள் பயப்படாதிருங்கள்; சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என்று அறிவேன்.”

“அவர் இங்கே இல்லை; தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்; கர்த்தரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்;”

“சீக்கிரமாய்ப் போய், அவர் மரித்தோரிலிருந்து எழுந்தார் என்று அவருடைய சீஷர்களுக்குச் சொல்லுங்கள். அவர் உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்குப் போகிறார்; அங்கே அவரைக் காண்பீர்கள்; இதோ, உங்களுக்குச் சொன்னேன் என்றான்.”

தூதன் ஸ்திரீகளை நோக்கி நீங்கள் ஒருவரும் பயப்படவேண்டாம். நீங்கள் அனைவரும் சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என்பதை அறிவேன். அவர் முன்பு சொன்னபடியே உயிரோடு எழுந்தார். கர்த்தரை வைத்த கல்லறைக்குச் சென்று பாருங்கள். அதுவுமல்லாமல் சீக்கிரமாகப் போய் இயேசு மரித்தோரிலிருந்து எழுந்தார் என்ற செய்தியை இயேசுவோடிருந்த சீஷர்களுக்குச் சொல்லுங்கள் என்றான். இயேசுவானவர் நீங்கள் போவதற்கு முன்பே கலிலேயாவுக்குப் போகிறார். அங்கே நீங்கள் அனைவரும் அவரைக் காண்பீர்கள் என்றான். இயேசு உயிர்த்தெழுந்த செய்தியை முதன் முதலில் அறிவித்தது தேவதூதர்கள் தான். 

பெண்களும் சீஷர்களும்:

மத்தேயு 28 : 8 “அவர்கள் பயத்தோடும் மகா சந்தோஷத்தோடும் கல்லறையை விட்டுச் சீக்கிரமாய்ப் புறப்பட்டு, அவருடைய சீஷர்களுக்கு அறிவிக்க ஓடினார்கள்”

யோவான் 20 : 3 – 8 “அப்பொழுது பேதுருவும் மற்றச் சீஷனும் கல்லறையினிடத்திற்குப் போகும்படி புறப்பட்டு, இருவரும் ஒருமித்து ஓடினார்கள்.”

“பேதுருவைப்பார்க்கிலும் மற்றச் சீஷன் துரிதமாய் ஓடி, முந்திக் கல்லறையினிடத்தில் வந்து,”

“அதற்குள்ளே குனிந்துபார்த்து, சீலைகள் கிடக்கிறதைக் கண்டான்; ஆனாலும் அவன் உள்ளே போகவில்லை.”

“சீமோன் பேதுரு அவனுக்குப்பின்னே வந்து, கல்லறைக்குள்ளே பிரவேசித்து,”

“சீலைகள் கிடக்கிறதையும், அவருடைய தலையில் சுற்றியிருந்த சீலை மற்றச்சீலைகளுடனே வைத்திராமல் தனியே ஒரு இடத்திலே சுருட்டி வைத்திருக்கிறதையும் கண்டான்.”

“முந்திக் கல்லறையினிடத்திற்கு வந்த மற்றச் சீஷனும் அப்பொழுது உள்ளே பிரவேசித்து, கண்டு விசுவாசித்தான்.”

மகதலேனா மரியாள் வேகமாகச் சென்று கல்லறையை மூடியிருந்த கல் எடுத்துப் போட்டிருக்கிறதைக் கண்டு ஓடிப்போய் பேதுருவையும் யோவானையும் அழைத்து வந்தாள். பேதுருவும் யோவானும் அவள் கூறிய செய்தியைக் கேட்டு விரைந்து ஓடினார்கள். பேதுருவைப் பார்க்கிலும் யோவான் வாலிபனானதால் துரிதமாக ஓடினான். ஆனாலும் முந்தி போன யோவான் கல்லறைக்குள் போகவில்லை. பேதுரு பின்னால் வந்தாலும் ஆர்வத்துடன் கல்லறைக்குள் போனான். அப்போது இயேசுவை சுற்றியிருந்த சீலைகள் கீழே கிடப்பதையும், தலையில் சுற்றியிருந்த சீலை மற்ற சீலைகளுடன் வைக்காமல் தனியே ஓரிடத்தில் மடித்து வைத்திருப்பதையும் கண்டான். அதன் பின் யோவான் கல்லறைக்குள் போய் பார்த்தான். இருவரும் இயேசு உயிர்த்தெழுந்தார் என்று விசுவாசித்தனர். பின்பு இருவரும் தங்களுடைய இடத்திற்குத் திரும்பிச் சென்றனர்.

இயேசு முதன்முதலில் தரிசனமானது:

மாற்கு 16 : 9, 10 “வாரத்தின் முதலாம்நாள் அதிகாலையிலே இயேசு எழுந்திருந்தபின்பு, மகதலேனா மரியாளுக்கு முதல்முதல் தரிசனமானார்.”

“அவளிடத்திலிருந்து அவர் ஏழு பிசாசுகளைத் துரத்தியிருந்தார். அவள் புறப்பட்டு, அவரோடே கூட இருந்தவர்கள் துக்கப்பட்டு அழுதுகொண்டிருக்கையில், அவர்களிடத்தில் போய், அந்தச் செய்தியை அறிவித்தாள்.”

யோவான் 20 : 14 – 18 “இவைகளைச் சொல்லிப் பின்னாகத் திரும்பி, இயேசு நிற்கிறதைக் கண்டாள்; ஆனாலும் அவரை இயேசு என்று அறியாதிருந்தாள்.”

“இயேசு அவளைப் பார்த்து ஸ்திரீயே, ஏன் அழுகிறாய், யாரைத் தேடுகிறாய் என்றார். அவள், அவரைத் தோட்டக்காரனென்று எண்ணி: ஐயா, நீர் அவரை எடுத்துக்கொண்டுபோனதுண்டானால், அவரை வைத்த இடத்தை எனக்குச் சொல்லும், நான் போய் அவரை எடுத்துக்கொள்ளுவேன் என்றாள்.”

“இயேசு அவளை நோக்கி: மரியாளே என்றார். அவள் திரும்பிப் பார்த்து: ரபூனி என்றாள்; அதற்குப் போதகரே என்று அர்த்தமாம்.”

“இயேசு அவளை நோக்கி: என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை; நீ என் சகோதரரிடத்திற்குப் போய், நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார்.”

“மகதலேனா மரியாள் போய், தான் கர்த்தரைக் கண்டதையும், அவர் தன்னுடனே சொன்னவைகளையும் சீஷருக்கு அறிவித்தாள்.”

இயேசு உயிரோடு இருக்கும் பொழுது மகதலேனா மரியாளிடமிருந்த ஏழு பிசாசுகளைத் துரத்தினார். அவள் அன்புடன் இயேசுவை அடக்கம் பண்ணின கல்லறைக்கு சுகந்தவர்க்கமிட அதிகாலையில் விரைந்தாள். ஆனால் வைத்த இடத்தில் அவர் இல்லையே என்று அழுது கொண்டே நின்றாள். அப்போது இயேசு அவளைப் பார்த்து ஸ்திரீயே ஏன் அழுகிறாய் யாரைத் தேடுகிறாய் என்று கேட்டார். அவள் திரும்பிப் பார்த்தபொழுது இயேசு நிற்கிறதைக் கண்டாள். ஆனால் அவளுக்கு அது இயேசு என்று தெரியவில்லை. யாரோ ஒரு தோட்டக்காரர் என்றெண்ணி, இயேசுவைப் பார்த்து “நீர் இயேசுவை எடுத்துக் கொண்டு போனதுண்டானால் அவரை வைத்த இடத்தை எனக்குச் சொல்லும் நான் போய் அவரை எடுத்துக் கொள்வேன்” என்றாள். ஆண்டவர் மற்ற யாருக்கும் தரிசனம் ஆவதற்கு முன்பு மகதலேனா மரியாளுக்குத் தரிசனமானார். அப்பொழுது இயேசு “மரியாளே” என்று அழைத்தார். அந்தக் குரலைக் கேட்டவுடன் “ரபூனி” என்றாள். உயிர்த்தெழுந்த இயேசுவை முதல் முதலாகக் காணும் பாக்கியம் மரியாளுக்குக் கல்லறைத் தோட்டத்தில் கிடைத்தது. மரியாளைப் பெயர் சொல்லி அழைத்த கர்த்தர், நம்மையும் அன்போடு அழைக்கிறார். அவள் தான் இயேசுவைக் கண்டதையும் அவர் தன்னுடனே சொன்னவைகளையும் சீஷருக்குத் தெரிவித்தாள்.

இயேசுவின் இரண்டாவது தரிசனம்:

மத்தேயு 28 : 9, 10 “அவர்கள் அவருடைய சீஷர்களுக்கு அறிவிக்கப் போகிறபோது, இயேசு தாமே அவர்களுக்கு எதிர்பட்டு: வாழ்க என்றார். அவர்கள் கிட்டவந்து, அவர் பாதங்களைத் தழுவி, அவரைப் பணிந்துகொண்டார்கள்.”

“அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; நீங்கள் போய், என் சகோதரர் கலிலேயாவுக்குப் போகும்படி அவர்களுக்குச் சொல்லுங்கள்; அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள் என்றார்.”

கல்லறைக்கு வந்த பெண்கள் சீஷர்களுக்கு அறிவிக்கப் போகிறபோது, இயேசு அவர்களுக்கு எதிர்ப்பட்டு அவர்களைப் பார்த்து “வாழ்க” என்று அந்தப் பெண்களை வாழ்த்தினார். அவர்கள் உடனே ஆச்சரியத்திலும், சந்தோஷத்திலும் இயேசுவின் பாதங்களைத் தழுவி அவரைப் பணிந்து கொண்டார்கள். இயேசு அவர்களைப் பார்த்து “பயப்படாதிருங்கள். நீங்கள் போய் என்னுடைய சகோதரரிடம் கலிலேயாவுக்குப் போகும்படி சொல்லுங்கள். அங்கே நான் அவர்களை சந்திப்பேன்” என்று கூறினார். இயேசு சீஷர்கள் தம்மை விட்டு ஓடிப் போனதையும், அவர்களுடைய அவிசுவாசத்தையும் பொருட்படுத்தவில்லை என்பதை சீஷர்கள் அறிந்து கொள்ளும் வண்ணம் அவர்களைத் தமது சகோதரர் என்று அன்பாக அழைத்ததைப் பார்க்கிறோம்.

இயேசுவின் மூன்றாவது தரிசனம்:

லூக்கா 24 : 34 “கர்த்தர் மெய்யாகவே உயிர்த்தெழுந்து சீமோனுக்குத் தரிசனமானாரென்று அவர்கள் சொல்லக் கேட்டு,”

இயேசுவை மூன்றுதரம் பேதுரு மறுதலித்தார். பின்னர் மனம் திரும்பினார். பேதுருவை இயேசு மன்னித்து ஏற்றுக் கொண்டதைத் தெரிவிப்பதற்காகவும், பேதுருவைத் தேற்றுவதற்காகவும் இயேசு பேதுருவுக்கு தனிப்பட்ட விதத்தில் தரிசனமானார்.

இயேசுவின் நான்காவது தரிசனம்:

லூக்கா 24 : 14 – 16, 30, 31 “அன்றையதினமே அவர்களில் இரண்டுபேர் எருசலேமுக்கு ஏழு அல்லது எட்டு மைல் தூரமான எம்மாவு என்னும் கிராமத்துக்குப் போனார்கள்.”

“போகையில் இந்த வர்த்தமானங்கள் யாவையுங்குறித்து அவர்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள்.”

“அவர்களோடே அவர் பந்தியிருக்கையில், அவர் அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப்பிட்டு, அவர்களுக்குக் கொடுத்தார்.”

“அப்பொழுது அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டு, அவரை அறிந்தார்கள். உடனே அவர் அவர்களுக்கு மறைந்துபோனார்.”

இயேசு உயிர்த்தெழுந்த அன்றைய தினத்தில் இரண்டு பேர் எருசலேமிலிருந்து ஏழு அல்லது எட்டு மைல் தூரத்திலுள்ள எம்மாவு என்னும் கிராமத்திற்குப் போகும்போது இயேசுவைப் பற்றி பேசிக்கொண்டு போனார்கள். அவர்களோடு கூட இயேசுவும் சென்றார். ஆனால் அவர்கள் இயேசுவை அறியவில்லை. இயேசு அவர்களை நோக்கி ஏன் துக்கத்தோடு போகிறீர்கள் என்று கேட்டார். அவர்கள் “நாசரேயனாகிய இயேசு வாக்கும், வல்லமையுமுள்ள தீர்க்கதரிசியாக இருந்தார். அவரை மரண ஆக்கினைக்குட்படுத்தி சிலுவையில் அறைந்தார்கள். அவர்தான் இஸ்ரவேலை மீட்டு இரட்சிப்பார் என்று நாங்கள் நம்பியிருந்தோம்.” என்று கூறினர். இதிலிருந்து இப்பொழுது அவர்களுடைய நம்பிக்கை போய்விட்டதென்றும் பெண்கள் கல்லறைக்குப் போய் இயேசு உயிரோடெழுந்து விட்டார் என்று கூறியதையும் அவர்கள் நம்பவில்லை என்றும் அறிகிறோம். இயேசு அவர்கள் வேத வாக்கியங்களை அறியாததால் “மந்த இருதயம் உள்ளவர்களே” என்று கூறி, மோசே முதல் அனேக தீர்க்கதரிசிகள் கூறிய வேத வாக்கியங்களில் இயேசுவைக் குறித்து சொல்லியவைகளை அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார். அப்பொழுது அவர்களுடைய இருதயம் கொழுந்து விட்டு எரிந்தது. அவர்கள் இயேசுவை தங்களோடு தங்கும்படி கேட்டுக்கொண்டதால், இயேசு அவர்களோடு கூடச் சென்றார். அப்பொழுது அவர்கள் பந்தியிருக்கையில் அப்பத்தை எடுத்து ஆசீர்வதித்து அதைப் பிட்டு அவர்களுக்குக் கொடுத்தார் அப்பொழுது அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டு இயேசுவை அறிந்தார்கள். உடனே அவர் அவர்களுக்கு மறைந்து போனார். 

இயேசுவின் ஐந்தாவது தரிசனம்:

யோவான் 20 : 19 – 22 “வாரத்தின் முதல்நாளாகிய அன்றையத்தினம் சாயங்காலவேளையிலே சீஷர்கள் கூடியிருந்த இடத்தில், யூதர்களுக்குப் பயந்ததினால் கதவுகள் பூட்டியிருக்கையில், இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.”

“அவர் இப்படிச் சொல்லித் தம்முடைய கைகளையும் விலாவையும் அவர்களுக்குக் காண்பித்தார். சீஷர்கள் கர்த்தரைக்கண்டு சந்தோஷப்பட்டார்கள்.”

“இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி: உங்களுக்குச் சமாதானமுண்டாவதாக; பிதா என்னை அனுப்பினதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன் என்று சொல்லி,”

“அவர்கள்மேல் ஊதி: பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்;”

இயேசுவை சிலுவையில் அறையப்பட்ட உடன் சீஷர்கள் எல்லோரும் சிதறிப் போய் விட்டார்கள் இப்பொழுது அவர்கள் தோமாவைத் தவிர அனைவரும் ஒன்று சேர்ந்து பயத்தோடு கதவுகளைப் பூட்டிக்கொண்டு மறைந்திருந்தனர். எந்த பூட்டப்பட்ட கதவும் இயேசுவைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. இயேசு பூட்டியிருந்த அந்த வீட்டுக்குள் வந்து, அவர்கள் நடுவே நின்று “உங்களுக்கு சமாதானம்” என்று கூறினார். இது தேவன் அருளும் சமாதானம். இயேசு மகிமை அடைந்த சரீரத்தோடு அங்கு வந்திருந்தார். அவர்களிடம் தன்னுடைய ஆணி பாய்ந்த கைகளையும் ஈட்டியால் குத்தப்பட்ட விலாவையும் காண்பித்தார். அவர்கள் அதைப் பார்த்து மிகவும் சந்தோஷப்பட்டனர். இயேசுவின் மகிமை அடைந்த சரீரத்தில் கூட அந்தத் தழும்புகள் இருந்ததை அறிகிறோம். இயேசு அவர்கள்மேல் ஊதி பரிசுத்தஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்றார். பழைய ஏற்பாட்டில் ஒருமுறை தேவன் ஆதாமை படைக்கும் பொழுது ஊதி அவர்களை ஜீவாத்துமாவாக்கினார். ஆனால் இங்கே இயேசு அவர்கள் மேல் ஊதி அவர்களுக்கு பரிசுத்தஆவியைக் கொடுத்தார். இது பெந்தகோஸ்தே நாளுக்கு முன் அவர்களைத் தாங்கி வழிநடத்த கொடுக்கப்பட்டதாகும்.

இயேசுவின் ஆறாவது தரிசனம்:

யோவான் 20 : 26 – 29 “மறுபடியும் எட்டுநாளைக்குப்பின்பு அவருடைய சீஷர்கள் வீட்டுக்குள்ளே இருந்தார்கள்; தோமாவும் அவர்களுடனேகூட இருந்தான்; கதவுகள் பூட்டப்பட்டிருந்தது. அப்பொழுது இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.”

“பின்பு அவர் தோமாவை நோக்கி: நீ உன் விரலை இங்கே நீட்டி, என் கைகளைப் பார், உன் கையை நீட்டி, என் விலாவிலே போடு, அவிசுவாசியாயிராமல் விசுவாசியாயிரு என்றார்.”

“தோமா அவருக்குப் பிரதியுத்தரமாக: என் ஆண்டவரே! என் தேவனே! என்றான்.”

“அதற்கு இயேசு: தோமாவே, நீ என்னைக் கண்டதினாலே விசுவாசித்தாய், காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்றார்.”

இயேசு எட்டு நாளைக்குப் பின்பு, மறுபடியும் சீஷர்கள் இருந்த வீட்டுக்குள் வந்தார். அந்த வீட்டின் கதவுகள் இயேசுவை உள்ளே நுழைய விடாதபடி தடுக்க முடியவில்லை. அப்பொழுது தோமாவும் அங்கே இருந்தான். இயேசு அவர்கள் நடுவே நின்று “உங்களுக்குச் சமாதானம்” என்று கூறி, தோமாவைப் பார்த்து “உன் விரலை நீட்டி, என் கைகளைப் பார். உன் கையை நீட்டி என் விலாவில் போடு. அவிசுவாசியாக இராதே” என்று கூறினார். ஆனால் தோமா தொட்டுப் பார்த்ததாகக் கூறப்படவில்லை. தோமாவின் சந்தேகம் தீர்ந்த போது தோமா ஒரு உன்னதமான சாட்சியைக் கூறினான். யூதனான ஒருவன் “என் ஆண்டவனே என் தேவனே” என்று கூறுவதில்லை. அதுவும் சந்தேகம் நிறைந்த தோமாவின் வாயிலிருந்து இந்த சாட்சி வந்தது. இயேசு தோமாவைப் பார்த்து நீ என்னை கண்டதினால் விசுவாசித்தாய், காணாமல் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்று கூறினார். 

இயேசுவின் ஏழாவது தரிசனம்:

யோவான் 21 : 1 “இவைகளுக்குப்பின்பு இயேசு திபேரியா கடற்கரையிலே மறுபடியும் சீஷருக்குத் தம்மை வெளிப்படுத்தினார்;”

திபேரியா கடற்கரையில் மறுபடியும் சீஷர்களுக்குத் தம்மை வெளிப்படுத்த நினைத்து அங்கு இயேசு சென்றார். மனுஷர்களைப் பிடிக்க அழைத்த சீஷர்கள் மறுபடியும் மீன்பிடிக்கச் சென்று விட்டனர். அவர்களுடைய பின் மாற்றத்தினால் இரவு முழுவதும் பிரயாசப்பட்டும் அவர்களுக்கு ஒரு மீன்கூட கிடைக்கவில்லை. விடியற்காலமானபோது உயிர்த்தெழுந்த இயேசு கரையிலே நின்றார். சீஷர்களுக்கு அவரை இயேசு என்று தெரியவில்லை. இயேசு அவர்களைப் பார்த்து “பிள்ளைகளே புசிப்பதற்கு ஏதாகிலும் உங்களிடத்தில் உண்டா” என்று கேட்டார். ஆனால் அவர்கள் “ஒன்றுமில்லை” என்றனர். உடனே இயேசு அவர்களை நோக்கி வலது புறமாக வலையைப் போடுங்கள் என்றார். அப்பொழுது இயேசுவின் சொற்படி வலது புறமாக வலையை அவர்கள் போட்டு திரளான மீன்களைப் பிடித்தனர். அப்பொழுது இயேசுவுக்கு அன்பாயிருந்த சீஷனான யோவான் பேதுருவைப் பார்த்து “அவர் கர்த்தர்” என்றான். இதைக் கேட்ட உடனே பேதுரு கடலில் குதித்து இயேசுவிடம் வந்தான். ஆனால் இயேசுவோ அங்கு அவர்களுக்காக கரி நெருப்பு போட்டு அப்பமும் மீனும் வைத்துக் காத்துக் கொண்டிருந்தார். இயேசுவின் அன்பின் ஆழத்தை அப்பொழுது சீஷர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. இந்தப் அப்பமானது ஜீவ அப்பமாகிய இயேசுவைக் காண்பிக்கிறது. அவர் வைத்திருந்த மீனானது ஆத்மாக்களைக் குறிக்கிறது. ஒரு மீனும் பிடிக்க முடியாமலிருந்த சீஷர்கள் இயேசுவின் வார்த்தையின்படி போட்டபோது 153 மீன்களைப் பிடித்தனர். இயேசு அங்கே போட்டிருந்த கரிநெருப்பானது அக்கினி அபிஷேகத்திற்கு அடையாளமாக இருக்கிறது.

இயேசுவின் எட்டாவது தரிசனம்:

மத்தேயு 28 : 16 – 20 “பதினொரு சீஷர்களும், கலிலேயாவிலே இயேசு தங்களுக்குக் குறித்திருந்த மலைக்குப் போனார்கள்.”

“அங்கே அவர்கள் அவரைக் கண்டு பணிந்துகொண்டார்கள், சிலரோ சந்தேகப்பட்டார்கள்.”

“அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.”

“ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,”

“நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்”

பதினொரு சீடர்களும் கலிலேயாவில் இயேசு தங்களுக்குச் சொன்ன மலைக்குப் போனார்கள். அங்கு இயேசுவைப் பார்த்து அவரைப் பணிந்து கொண்டார்கள். கல்லறையில் உயிர்த்தெழுந்த நம்பிக்கையைக் கொடுத்த இயேசு மாலையிலே தேவ பலனைக் கொடுக்கும்படி அவர்களுக்குத் தரிசனமானார். அவர்களில் சிலர் சந்தேகப்பட்டனர். அப்பொழுது இயேசு ராஜாதி ராஜாவாக வானத்திலும் பூமியிலும் தனக்கு சகல அதிகாரம் கொடுக்கப்பட்டிருப்பதை அவர்களுக்குக் எடுத்துரைத்தார். மேலும் அவர்களுக்கு சில முக்கியமான கட்டளைகளைக் கொடுத்தார். அது என்னவென்றால் நீங்கள் உலகமெங்கும் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷர்களாக்கி பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுங்கள் என்றும், தான் அவர்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி உபதேசம் பண்ணுங்கள் என்றும், உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் உங்களுடனே இருப்பேன் என்றும் கூறினார்.

இயேசுவின் ஒன்பதாவது தரிசனம்:

1கொரிந்தியர் 15 : 6 “அதன்பின்பு அவர் ஐந்நூறுபேருக்கு அதிகமான சகோதரருக்கும் ஒரேவேளையில் தரிசனமானார்; அவர்களில் அநேகர் இந்நாள்வரைக்கும் இருக்கிறார்கள், சிலர் மாத்திரம் நித்திரையடைந்தார்கள்.”

இயேசு கலிலேயாவுக்கு வருவேன் என்று கூறியதால் உண்மையாக அவரை விசுவாசித்தவர்கள் அவரைப் பார்க்க வேண்டும் என்ற விருப்பத்தில் கலிலேயாவுக்குச் சென்றிருக்கலாம். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் 500 பேருக்கும் அதிகமான நபர்களுக்கு இயேசு தரிசனமானார்.

இயேசுவின் பத்தாவது தரிசனம்:

1 கொரிந்தியர் 15 : 7 “பின்பு யாக்கோபுக்கும், அதன்பின்பு அப்போஸ்தலரெல்லாருக்கும் தரிசனமானார்.”

இந்த யாக்கோபு இயேசுவின் சகோதரன். யாக்கோபு நிருபத்தை எழுதினவன். இவனுக்கு தனிப்பட்ட விதத்தில் இயேசு தரிசனமானார் அதன்பின்பு அப்போஸ்தலர் எல்லோருக்கும் தரிசனமானார்.

இயேசுவின் 11வது தரிசனம்:

அப்போஸ்தலர் 1 : 3 “அவர் பாடுபட்டபின்பு, நாற்பது நாளளவும் அப்போஸ்தலருக்குத் தரிசனமாகி, தேவனுடைய ராஜ்யத்துக்குரியவைகளை அவர்களுடனே பேசி, அநேகம் தெளிவான திருஷ்டாந்தங்களினாலே அவர்களுக்குத் தம்மை உயிரோடிருக்கிறவராகக் காண்பித்தார்.”

இயேசு உயிரோடு எழுந்த பின் அவர் காட்சியளித்த 10 காட்சிகளை இதற்கு முன்பு பார்த்தோம். இப்பொழுது அவர் சிலுவையில் பாடுபட்ட பின்பு 40 நாட்களும் அப்போஸ்தலர்களுக்குத் தரிசனமானார். அவர்களிடத்தில் தேவனுடைய ராஜ்யத்துக்குரியவைகளையும், அவர்கள் செய்ய வேண்டிய காரியங்களையும், போகவேண்டிய இடங்களையும் பற்றி பேசி அனேக தெளிவான திருஷ்டாந்தங்களினாலே அவர்களுக்குத் தம்மை உயிரோடு இருக்கிறவராகக் காண்பித்தார்.

கிறிஸ்து உயிரோடு எழுந்ததினால் நாம் பெறும் நன்மைகள்:

  1. இயேசு எப்பொழுதும் உயிரோடிருக்கிறவராகையால் முற்றுமுடிய நம்மை இரட்சிக்க வல்லவர் – எபிரேயர் 7 :25.
  2. இயேசு உயிரோடெழுந்த தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான நம்முடைய சரீரங்களை உயிர்ப்பிப்பார் – ரோமர் 8 : 11.
  3. இயேசு உயிர்த்தெழுந்ததினால் அக்கிரமங்களினாலும், பாவங்களினாலும் மரித்திருந்த நம்முடைய ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறார் – எபேசியர் 2 : 1.
  4. இயேசு உயிரோடெழுந்த பின் சீஷர்களுக்குச் சமாதானத்தை அருளினார் – யோவான் 20 : 19.
  5. இயேசு உயிரோடெழுந்து நமது பயத்தை நீக்குகிறார் – வெளிப்படுத்தல் 1 : 17
  6. இயேசு உயிரோடெழுந்து சுவிசேஷம் கூறும் ஊழியத்தைக் கொடுத்தார் – மத்தேயு 28 : 19, 20.
  7. இயேசு உயிரோடெழுந்து தன்னை விசுவாசிப்பவர்களுக்கு வரங்களை அளிக்கிறார் – மாற்கு 16 : 17, 18.
  8. இயேசு உயிரோடெழுந்து பரிசுத்த ஆவியை அனுப்புவதாக வாக்கு பண்ணினார் – லூக்கா 24 : 49.
  9. இயேசுவின் உயிர்த்தெழுதலானது நாமும் உயிர்த்தெழுவோம் என்ற நம்பிக்கை கிடைக்கிறது – எபிரேயர் 11 : 35.
  10. இயேசு உயிர்த்தெழுந்ததினால் நமக்கு பாவமன்னிப்பு கிடைக்கிறது – 1 கொரிந்தியர் 15 : 3 – 8.
  11. இயேசு உயிர்த்தெழுந்ததினால் நமக்கு புதிய வாழ்வு கிடைக்கிறது – ரோமர் 6 : 4.
  12. இயேசு உயிரோடெழுந்து நம்மோடு கூட இருக்கிறார் – மத்தேயு 28 :20.
  13. இயேசு உயிரோடெழுந்து நமக்காகப் பிதாவிடம் பரிந்து பேசிக் கொண்டிருக்கிறார் – ரோமர் 8 : 34.

இயேசு கிறிஸ்து மரணத்தின் அதிபதியை தன்னுடைய மரணத்தினால் வென்று அவனுடைய கைகளில் இருந்த மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோலைப் பிடுங்கினார். ஆகவே எந்த மரண பயமும் நம்மை நெருங்க முடியாது. இதைத்தான் இயேசு மார்த்தாள், மரியாளிடம், 

யோவான் 11 25, 26 “இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்;”

“உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா என்றார்.” 

பழைய ஏற்பாட்டில் முந்தின ஆதாம் மரணத்தைக் கொண்டு வந்தான். இரண்டாம் ஆதாமாகிய கிறிஸ்து புதிய ஏற்பாட்டில் மரணத்தை வென்று உயிர்த்தெழுதலில் நம்பிக்கையைக் கொண்டு வந்தார். இதைத்தான் பவுலும் 

1 கொரிந்தியர் 15 : 22, 23 “ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.”

“அவனவன் தன்தன் வரிசையிலே உயிர்ப்பிக்கப்படுவான், முதற்பலனானவர் கிறிஸ்து; பின்பு அவர் வருகையில் அவருடையவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.” என்கிறார்.

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே ஏசாயா தீர்க்கதரிசி இயேசுவானவர் மரணத்தை ஜெயமாக விழுங்குவார் என்று ஏசாயா 25 : 8ல் தீர்க்கதரிசனமாகக் கூறினார் இயேசு உயிர்த்தெழுந்து பிதாவிடம் சென்று பரிசுத்த ஆவியானவரை நமக்கு அனுப்பாமல் இருந்திருந்தால் ஆவியானவரின் அனுபவத்தையும் அந்த சந்தோஷத்தையும் நம்மால் பெற்றிருக்க முடியாது. இளைப்பாறுதல் அடைந்திருக்க முடியாது. கிருபையைப் பெற்றிருக்க முடியாது. மகிமையால் நிரப்பப்பட்டிருக்க முடியாது. நித்தியஜீவனை சுதந்தரிக்க முடியாது அவருடைய வருகையில் மறுரூபாமாக்கப்பட முடியாது. கிறிஸ்து உயிரோடெழுந்ததினால் வரும் ஆசீர்வாதங்களை நாம் பெற்று கிறிஸ்துவைப் போல் மறுரூபமாக்கப்பட ஆயத்தமாவோம்.

Sis. Rekha

Share
Published by
Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago