இயேசு செய்த அற்புதங்கள்

கானானியப் பெண்ணின் மகளை சுகமாக்கினார்

மத்தேயு 15 : 21 – 28; மாற்கு 7 : 24 – 30

கானானிய ஸ்திரீயின் விண்ணப்பம்:

மத்தேயு 15:21,22 “பின்பு இயேசு அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, தீரு  சீதோன் பட்டணங்களின் திசைகளுக்குப்  போனார். அப்பொழுது, அந்தத் திசைகளில் குடியிருக்கிற கானானிய ஸ்திரீ ஒருத்தி அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும், என் மகள் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறாள்  என்று சொல்லிக் கூப்பிட்டாள்.”

இயேசு முதன்முறையாக கலிலேயா, சமாரியா, யூதேயா என்ற இடங்களின்  எல்லைகளை விட்டு வெளியே சென்றார்.  யூதர்கள்  இல்லாத  தேசமாகிய  தீரு,  சீதோன்  பட்டணத்திற்கு  வந்தார்.  இது  கப்பர்நகூமிலிருந்து  40  மைல்  அல்லது  45  கிலோமீட்டர்  துரத்திலுள்ளது.  இயேசு இஸ்ரவேலருக்கு ராஜாவாக வந்தார். அவர்களுக்குள்ளேயே தம்முடைய  சீஷர்களை  அனுப்பினார். இஸ்ரவேலரிடத்திற்கே போங்கள் வேறு இடங்களுக்குப் போக வேண்டாமென்று தம்முடைய  சீடர்களுக்குக் கட்டளையிட்டார். சமயத் தலைவர்களுக்கும், இயேசுவுக்குமிடையே வாக்குவாதம் வந்து பிரிவினை உண்டாயிற்று. இயேசு  இஸ்ரவேல் தேசத்தின் எல்லைகளைத் தாண்டி புறஜாதி ஜனங்களிடம் சென்றார். இஸ்ரவேலரல்லாதவர்களையும் இயேசு ஏற்றுக்கொள்கிறார். அவர்களுக்கும் கொடுக்கப்பட்ட அழைப்பு “வருத்தப்பட்டுப்  பாரஞ்சுமக்கிறவர்களே எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள் நான் இளைப்பாறுதல் தருவேன்” என்பதுதான். அந்தத்  திசைகளில் குடியிருந்த கானானிய ஸ்திரீ ஒருத்தி இயேசுவினிடம் வந்து  “ஆண்டவரே தாவீதின் குமாரனே எனக்கு இரங்கும்” என்று கூப்பிட்டாள். இந்தத் தாய் இயேசுவை ஏற்றுக்கொண்டதால் ஆண்டவரே என்றும், தாவீதின் குமாரனே என்றும்  கூப்பிட்டாள்.  மேசியாவைக்  குறிக்கும்  ஒரு  வார்த்தையை சொல்லி  இயேசுவை  உயர்த்தி  அழைத்து “தன் மகள் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறாள்”  என்று கூறினாள்.  இவளுடைய  மகளின்  பாடுகளும்,  உபத்திரமும்,  கண்ணீரும்தான்  இவளை  இயேசுவிடம்  கூட்டி  வந்தது. மத்தேயு  9 : 27 ல் இரண்டு  குருடர்கள்  இயேசுவைப்  பார்த்து  தாவீதின்  குமாரனே  எனக்கு இரங்கும்”  என்று  கூப்பிட்டான். 

சீஷர்களின் எண்ணமும், இயேசுவின் உபதேசமும்:

மத்தேயு 15:23 – 25 அவளுக்குப் பிரதியுத்தரமாக இயேசு ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. அப்பொழுது அவருடைய சீஷர்கள் வந்து: இவள் நம்மைப் பின்தொடர்ந்து  கூப்பிடுகிறாளே, இவளை அனுப்பிவிடும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள். அதற்கு இயேசு: காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேயன்றி, மற்றபடியல்ல என்றார். அவள் வந்து: ஆண்டவரே, எனக்கு உதவி செய்யும் என்று இயேசுவைப் பணிந்து கொண்டாள்.”

இந்த  ஸ்திரீ  ஒரு  கானானியப்  பெண்.  இவர்கள்  விக்கிரகத்தை  வழிபடுகிறவள்.  இவர்களுடைய  விக்கிரகம்  அஸ்தரோத்து.  இந்த சமூகமே  ஒழுக்கக்  கேடான  சமூகம். ஆனால்  இவளோ  மதத்தை  விட்டு,  சமூகத்தை  விட்டு,  சொந்த  பந்தத்தை  விட்டுத்  தங்களுடைய தெய்வத்தை  விட்டு  இயேசுவினிடம்  வந்தால்  அற்புதம்  நடக்கும்  என்ற  நம்பிக்கையில்  வந்தாள்.  இயேசு அந்த தாய்க்குப்  பதில் கூறாததற்குக்  காரணம், அந்தப் பெண்ணின் விசுவாசத்தின் ஆழம் அவருக்குத்  தெரியும். அந்தப் பெண்ணின் விசுவாசத்தை உலகமெங்கும் எடுத்துரைப்பதற்காகவும், அதை நமக்குக்  கற்றுக் கொடுப்பதற்காகவும் மௌனமாக இருந்தார். அந்தப் பெண் விடாமல் இவர்களைப் பின்தொடர்ந்து கூப்பிட்டதால் சீஷர்கள் தொந்தரவாக நினைத்து, அவளை அனுப்பி விடச் சொல்லி இயேசுவிடம் வேண்டினர். 

இயேசுவுக்கு இருந்ததைப் போன்ற மனதுருக்கம் சீஷர்களுக்கு இல்லை. அந்தப் பெண்ணின் தொந்தரவு நீங்க வேண்டும் என்பதே அவர்களுடைய குறிக்கோளாக இருந்தது. பழைய ஏற்பாடு தீர்க்கதரிசனங்களை நிறைவேற்ற, தாவீதின் வம்சத்திலே, யூதரின் ராஜாவாக, இந்த உலகத்திற்கு இயேசு வந்தார். எல்லா இரட்சிப்பின் நன்மைகளும் யூதருக்கு கொடுத்த பின்னரே, மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்பது தேவனுடைய திட்டம். இயேசு  இதே போல்  மத்தேயு  10 : 6 ல் “  காணாமற்போன  ஆடுகளாகிய  இஸ்ரவேல்  வீட்டாரிடத்திற்குப் போங்கள்”  என்று  கூறினார். இந்த உண்மையை அந்தத் தாய் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறினார். திரும்பவும்  விடாப்பிடியாக  அவள் வேண்டினாள்.

கானானிய ஸ்திரீயின் தாழ்மை:

மத்தேயு15 : 26 – 28 “இயேசு அவளை நோக்கி: பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து, நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல என்றார். அதற்கு அவள்: மெய்தான் ஆண்டவரே, ஆகிலும் நாய்க்குட்டிகள் தங்கள் எஜமானர்களின் மேஜையிலிருந்து விழுந் துணிக்கைகளைத்  தின்னுமே  என்றாள்.  இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: ஸ்திரீயே உன் விசுவாசம் பெரிது; நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது என்றார். அந்நேரமே அவள் மகள் ஆரோக்கியமானாள்.”

இதில்  பிள்ளைகள்  என்பது  இஸ்ரவேல்  தேசத்தாரைக்  குறிக்கிறது.  நாய்க்குட்டிகள்  என்பது  புறஜாதிகளைக்  குறிக்கும்.  இயேசுவானவர் பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுவது நல்லதல்ல என்றார். இதற்கு முன்னும், இதற்குப் பின்னும்  இயேசு இவ்வாறு பேசியதில்லை. கானானியர் யாரென்றால் நோவாவின் மகனான காமின்  மகன்தான் கானான். காம்  செய்த தவறுக்காகப்  பேரனான கானான் சபிக்கப்பட்டான். இவர்கள்தான் கானானியர்.  இவர்கள் சபிக்கப்பட்ட சந்ததியாய் மாறிவிடுகின்றனர். இந்தக் கானானியரின் தேசத்தைத்தான் தேவன் இஸ்ரவேலருக்குக்  கொடுத்தார்.  பிள்ளைகளின் அப்பமானது சரீரத்திற்குரியது. இது தெய்வீக  சுகத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் அடையாளமாகும். ஒருவன் தேவனுடைய பிள்ளையானால் இவைகளை உரிமையோடு பெற்றுக்கொள்ள முடியும். தேவனுடைய பிள்ளைகளாக நாம் ஆகாமலிருந்தால் மேஜையிலிருந்து விழும்  அப்பத்துணிக்கைகளைப்  பொறுக்கிக்  கொள்கிற நாய்க்குட்டிகளைப்  போலத்  தான் இருப்போம். இந்த தாய்க்குத்  தேவனுடைய பிள்ளைகளாக வேண்டும் என்ற விருப்பம் இல்லை. அற்புதத்தை மட்டும் பெற்றுக் கொண்டு செல்ல விரும்பினாள்.  இதேபோல்தான் அனேகரும் இயேசுவை ஏற்றுக் கொள்ளும் விருப்பமில்லை. ஆனால் பிசாசுகள் துரத்தப்பட வேண்டும்,  நோய்கள் குணமாக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள். பிள்ளைகளுக்குரிய அப்பத்தில் வெறும் உணவு மட்டுமல்ல, நம்முடைய சரீரத்திற்கும்  தேவையான ஜீவன், சுகம், பெலன் எல்லாம் அடங்கியிருக்கிறது. இவ்வுலக வாழ்க்கைக்குரிய சகல நன்மைகளும் ஆசீர்வாதங்களும் அடங்கி இருக்கிறது.

யூதர்கள் புறஜாதி மக்களை நாய்கள் என்பர். இங்கு இயேசு வீட்டில் வளர்க்கப்படும் நாய்க்குட்டிகளையே குறிப்பிடுகிறார். இங்கு  பிள்ளைகள் என்பது  இஸ்ரவேலரைக்  குறிக்கிறது. முதலாவது இஸ்ரவேலருக்கு  இரட்சிப்பு அறிவிக்கப்பட்ட பின் அவர்கள் மூலம் தான் உலகம் முழுவதும் சந்திக்கப்பட வேண்டும் என்பது தேவனுடைய திட்டமாகும். அந்தப் பெண் இதைப்  புரிந்து கொண்டாள். இயேசுவிடம்  ஞானமாகவும், விடாமுயற்சியுடனும், விசுவாசத்துடனும் பதில் கூறுவதைப் பார்க்கிறோம். மெய்தான் ஆண்டவரே என்று கூறி தன்னை நாய்க்குட்டியாக உருவகப்படுத்தியதையும், மிகுந்த தாழ்மையுடன் அந்தப் பெண் ஏற்றுக் கொண்டதையும் பார்க்கிறோம். பிள்ளைகளைப் போன்று  மேஜைமீது  உணவு  பரிமாறும் படி கேட்பதற்கு  தனக்கு உரிமையில்லையென்றாலும் கீழே விழுகிற ஆகாரத்தை  நாய்க்குட்டிகள் தின்னுமே என்றாள்.  தேவன் இஸ்ரவேலரை ஆசீர்வதிக்கும் போது, புறஜாதியார் தேவனுடைய ஆசீர்வாதத்தை மறைமுகமாகப்  பெற்றுக் கொள்ளலாமே என்று வாதிடுகிறாள்.

இந்தப் பெண்ணின் பெரிய விசுவாசத்தை இயேசு பாராட்டினார். வேறு யாருக்கும் கூறாத “நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது” என்ற வார்த்தையைக்  கூறினார். அந்த நேரத்திலேயே அவளுடைய மகள் சுகமடைந்தாள். இத்தோடு புறஜாதியாருக்கு இயேசுவின் கிருபை திரும்பிற்று. விசுவாசம்  ஆத்தும  இரட்சிப்பையளித்து,  ஜெபத்திற்குப்  பதிலைக்  கொடுத்து,  வியாதியிலிருந்து  சுகத்தைப்  பெற்றுத்  தருகிறது.  விசுவாசிகள் தங்களுக்காகவும், மற்றவருக்காகவும்  இறைவனிடம் வேண்டுதல் செய்யும் போது சோர்ந்து போகாமல் விடாமுயற்சியுடன் ஜெபம் பண்ணவேண்டும். தெய்வீக சுகம் பிள்ளைகளின் அப்பத்தின்  ஒரு  பகுதி (யாத்திராகமம் 15:26, சங்கீதம் 103 :3,4 மத்தேயு 8: 17)  அதைத்  தருவதற்காகத்  தான் இயேசு தம்முடைய சரீரத்தில் பாடுபட்டார். அவருடைய தழும்புகளால் நாம் குணமாகிறோம். இந்தத் தாயைப் போலப்  பெரிய விசுவாசத்துடன் தேவனுடைய ஆசிகளைப் பெற மன்றாடுவோம்.  ஆமென்.

Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago