இயேசு செய்த அற்புதங்கள்

நூற்றுக்கு அதிபதியின் வேலைக்காரனை சுகமாக்கினார்

மத்தேயு 8 : 5 – 13; லூக்கா 7 : 1 – 10

நூற்றுக்கதிபதியின்  வேலைக்காரனின் வியாதி:

லூக்கா 7 : 1, 2 “ இயேசு  தம்முடைய  வார்த்தைகளையெல்லாம்  ஜனங்களுடைய  காதுகள்  கேட்கும்படி  சொல்லி  முடித்த  பின்பு,  கப்பர்நகூமுக்குப்  போனார். அங்கே  நூற்றுக்கு  அதிபதியாகிய  ஒருவனுக்குப்  பிரியமான வேலைக்காரன்  வியாதிப்பட்டு  மரண  அவஸ்தையாயிருந்தான்.”

இயேசு  மலையிலேறி  தன்னுடைய  வார்த்தைகளையெல்லாம்  ஜனங்களுக்குப்  பிரசங்கித்த  பின்  கப்பர்நகூம்  சென்றார். கப்பர்நகூம்  ரோமர்களின்  துறைமுகப்  பட்டணமாக  உபயோகப்படுத்திய  இடம். கப்பர்நகூமில்  ரோமர்கள், கிரேக்கர்கள், யூதர்கள்  என்ற  மூன்று  விதமான  மக்கள், மூன்று  விதமான  மொழி பேசுகிறவர்கள், மூன்று  விதமான  கலாச்சாரம்  உடையவர்கள், மூன்று  விதமான வழிபாடு  பண்ணுகிறவர்கள்  இருந்தனர். இந்த  இடத்தில்  ஏராளமான  போர்வீரர்களும்  வாழ்ந்து  வந்தனர். இவர்களின்  மொழி  இலத்தீன். இயேசு கப்பர்நகூமில்  பிரவேசித்தார். அங்குள்ள ஒரு நூற்றுக்கதிபதியின்  வேலைக்காரன்  திமிர்வாதத்தினால்  வியாதிபட்டு மரணத்தருவாயில்  இருந்தான். அந்தக்  காலத்தில்  அடிமைகளைத்தான்  வேலைக்காரர்களாக  வைப்பார்கள்.  இந்த  நூற்றுக்கதிபதி  என்பவன்  100 போர்  சேவகர்களுக்கு  அதிகாரி. நல்ல  பதவியில்  இருப்பவன்.  பட்டாளத்தில்  முதுகெலும்பு  போன்றவன். இவனுடைய ஊரோ,  பெயரோ  எதுவும்  சொல்லப்படவில்லை.  இவர்கள்  சட்டம்,  ஒழுங்குகளை  நிறைவேற்று கிறவர்கள்.  ரோம  அரசாங்கத்துக்கு உத்தரவாதம் உள்ளவர்கள். ஜனங்களின்  மத்தியில்  பேரும்  புகழும் பெற்றவர்கள்.

 யூதர்களின்  மூப்பரும், இயேசுவும்: 

லூக்கா 7 : 3 – 5 “ அவன்  இயேசுவைக்  குறித்துக்  கேள்விப்பட்டபோது, அவர் வந்து  தன்  வேலைக்காரனைக்  குணமாக்க  வேண்டுமென்று, அவரை வேண்டிக்கொள்ளும்படி  யூதருடைய மூப்பரை  அவரிடத்தில் அனுப்பினான். அவர்கள் இயேசுவினிடத்தில் வந்து, அவரைக் கருத்தாய் வேண்டிக்கொண்டு  நீர்  இந்தத்  தயவு  செய்கிறதற்கு  அவன்  பாத்திரனாயிருக்கிறான். அவன்  நம்முடைய  ஜனத்தை  நேசிக்கிறான்,  நமக்கு  ஒரு ஜெபஆலயத்தையும் கட்டினான்  என்றார்கள்.”

அந்நாட்களில்  அநேக  ரோம  அதிகாரிகள்  யூதர்களைக்  கேவலமாக  நடத்தினர்.  மேலும்  அவர்கள்  தங்கள்  அடிமைகளை  மிகவும்  கேவலமாக  மிருகங்களைப் போல  நடத்தினர்.  இந்த  நூற்றுக்கதிபதி  இயேசுவைப்  பற்றி  கேள்விப்பட்டான். அவரை விசுவாசித்தான். அந்த  நாட்களில்  யூதன்  யூதரல்லாத  வீட்டுக்குள்  பிரவேசித்தால் தீட்டுப்படுவான். எனவே  தன்னுடைய  வேலைக்காரனைக்  குணமாக்குவதற்கு இயேசு  வரவேண்டுமென்று  அவரை  வேண்டிக்கொள்ள  யூதருடைய  மூப்பரை  அவரிடத்திற்கு  அனுப்பினான். பேரும், புகழும்  பெற்று, பெரிய பதவியிலிருக்கிற  இந்த  நூற்றுக்கதிபதி  தன்னுடைய வேலைக்காரனை  ஏனோதானோவென்று  நடத்தாமல்  அவன்  மேல்  அன்பும், கருணையும், மனதுருக்கமும்  காட்டுகிறவனாக  இருந்ததைக் காண்கிறோம்..  அந்த  மூப்பர்கள்  இயேசுவினிடம்  வந்து  அவரை வேண்டிக்கொண்டு  நூற்றுக்கதிபதியைப்  பற்றிக்  கூறினர். அந்த  நூற்றுக்கதிபதி  யூதர்களிடம்  மிகவும்  அன்பு செலுத்துகிறவன்  என்றும், அவர்களுக்காக ஒரு தேவாலயத்தைக் கட்டிக் கொடுத்தானென்றும், அவனுடைய  வேலைக்காரனுக்குத் தயவு  காட்ட வேண்டுமென்றும்  வேண்டினார்கள். இந்த  நூற்றுக்கதிபதி  தனக்காகவோ,  தன்னுடைய  குடும்பத்துக்காகவோ, தான்  செய்கிற தொழிலுக்காகவோ, இயேசுவிடம்  வேண்டாமல்  தன்னுடைய  வேலைக்காரனுக்காக  வேண்டியதைப்  பார்க்கிறோம்.  

நூற்றுக்கதிபதி  சொல்லியனுப்பிய  வார்த்தைகள்: 

லூக்கா 7 : 6 – 8 “…. இயேசு  அவர்களுடனே  கூடப்போனார்  வீட்டுக்குச்  சமீபமான போது, நூற்றுக்குஅதிபதி ….ஆண்டவரே!  நீர் வருத்தப்பட வேண்டாம்; நீர்  என்  வீட்டு வாசலுக்குள் பிரவேசிக்க  நான்  பாத்திரனல்ல; நான்  உம்மிடத்தில்  வரவும்  என்னைப்  பாத்திரனாக எண்ணவில்லை; ஒரு வார்த்தைமாத்திரம் சொல்லும், அப்பொழுது  என்  வேலைக்காரன்  சொஸ்தமாவான்.… ஒருவனைப்  போ என்றால்  போகிறான், மற்றொருவனை  வாவென்றால்  வருகிறான்;  என் வேலைக்காரனை, இதைச்  செய்யென்றால்  செய்கிறான்  என்று  நான் சொன்னதாகச்  சொல்லுங்கள் என்று  அவர்களை  அனுப்பினான்.”

இயேசு  அவர்களுடனே  கூட  நூற்றுக்கதிபதியின்  வீட்டுக்குச்  சமீபமான  போது நூற்றுக்கதிபதி ஆண்டவரே  என்று  தொடங்கியதால்  அவன் இயேசுவைக்  குறித்து  சரியான  அறிவுடன்  இருந்தான்  என்றறிகிறோம்.  இயேசு  தன்  வீட்டுக்கு  வரவேண்டாமென்று  தன்  சினேகிதரிடம் சொல்லி  அனுப்பினான்.  ஏனென்றால்  அவர்  இயேசுவின் சிருஷ்டிப்பின் வல்லமையை அறிந்திருந்தான். எனவே  இயேசு  ஒரு  வார்த்தை  சொன்னாலே போதும், என் வேலைக்காரன் சுத்தமாவான்  என்றான். ரோமசாம்ராஜ்யத்திலுள்ள  ஒருவன்  வீட்டுக்கு  அழைத்தாலும்  இயேசு  போனதைப்  பார்க்கிறோம்.  ஏன்  இயேசு  தன்  வீட்டுக்கு வரவோ  தான்  அவரிடத்தில்  செல்லவோ  தான் பாத்திரனல்ல  என்கிறானென்றால்  அவனுடைய வீட்டுக்குள்  அனேக அநியாயங்கள் நிறைந்திருக்கும். சாட்டைகள், தடிகள், இருக்கும். இரத்தக்கரைகள்  காணப்படும். அதனால்  இயேசுவை  அங்கு  வர  வேண்டாமென்றான். மேலும்  தான்  பெரிய  உயர்வான  அதிகாரத்தில்  இருப்பதால்  தனக்குக்  கீழ் வேலை  செய்பவர்களைப்  பார்த்து  எதைச்  சொன்னாலும்  செய்வார்கள் என்றும், வா  என்றால்  வருவார்கள்  போ  என்றால்  போவார்கள்  என்றும்  சொல்லி  அனுப்பினான்.  இத்தனை  அதிகாரங்கள்  தனக்கு  இருந்தும்  சரீரத்தின்  மேல் அதிகாரமில்லையென்பதை  உணர்ந்திருந்தான்.  சுகமளிக்கும் வல்லமை  இயேசுவுக்கு  மட்டுமே  

உண்டு  என்பதைத்  தெளிவாக  அறிந்திருந்தான். 

இயேசு  செய்த அற்புதம்:

மத்தேயு 8 : 10 ,11,13 “இயேசு …ஆச்சரியப்பட்டு, …. இஸ்ரவேலருக்குள்ளும்  நான்  இப்படிப்பட்ட விசுவாசத்தைக்  காணவில்லை என்று, மெய்யாகவே  உங்களுக்குச் சொல்லுகிறேன். அனேகர்  கிழக்கிலும்  மேற்கிலுமிருந்து, வந்து,  பரலோகராஜ்யத்தில்  ஆபிரகாம்  ஈசாக்கு  யாக்கோபு  என்பவர்களோடே  பந்தியிருப்பார்கள். பின்பு  இயேசு  நூற்றுக்கதிபதியை  நோக்கி:  நீ  போகலாம், நீ  விசுவாசித்தபடியே  உனக்கு  ஆகக்கடவது  என்றார். அந்த  நாழிகையிலே அவன் வேலைக்காரன்  சொஸ்தமானான்.”

இயேசு  நூற்றுக்கதிபதியின்  தாழ்மை,  மரியாதை,  விசுவாசத்தைக்  குறித்தும், இஸ்ரவேல் ஜனங்களின்  அவிசுவாசத்தைக்  குறித்தும்  ஆச்சரியப்பட்டார்.  இயேசு  ஜனங்களை  மெச்சிக்கொள்வதில் தயக்கம்  காட்டாததைப் பார்க்கிறோம்.  இந்த நூற்றுக்கதிபதி  வேத  புத்தகத்தையோ,  மெய்யான  தேவனையோ  அறியாதிருந்த  போதிலும்  அவனிடம்  காணப்பட்ட  சில  நன்மையை  இயேசு  தாராளமாக  மெச்சிக்கொள்ளத் தயங்காததைப்  பார்க்கிறோம்.  ஜனங்களை  மெச்சிக்கொள்வதிலும்,  அவர்களை  உற்சாகப்படுத்துவதிலும்  இயேசு  நமக்கு  சிறந்த  மாதிரியாக  இருக்கிறார்.  ஒருதடவை  பொதுஜனத்தின்  மத்தியில்  பேதுருவைப்  பார்த்து  “யோனாவின்  குமாரனாகிய  சீமோனே,  பரலோகத்தில்  இருக்கிற  என்  பிதா,  இதை  உனக்கு  வெளிப்படுத்தினார்”  என்று  மெச்சினதைப் பார்க்கிறோம் (மத்தேயு  16 : 17).  மற்றோருமுறை  நாத்தான்வேலைப்  பார்த்து  “இதோ  கபடற்ற  உத்தம  இஸ்ரவேலன்”  என்று  கூறினதைப் பார்க்கிறோம்.  இவர்கள்  இரட்சிக்கப்  படாதவர்களாக  இருந்தபோதிலும்  தாராளமானதுடன்  மெச்சிக்கொண்டார்.  இவர்கள்  எல்லோரிடத்திலும்  மெச்சிக்கொள்ள  வேண்டிய  ஒன்று  இருப்பதை  இயேசு  கண்டார்.  

இயேசுவின்  பலத்த  செய்கைகள்  கிழக்கிலும்  மேற்கிலும்  மட்டுமல்ல,  பல பகுதிகளுக்கும்  செல்லப்  போகிறது. அதைக்  கேள்விப்படுகிறவர்கள், ஆபிரகாம்  ஈசாக்கு யாக்கோபோடே  பந்தியிருப்பார்கள்  என்றார்.  இதே  வசனத்தை  இயேசு  லூக்கா  13 : 29 லும் ஏசாயா 49 : 12 லும்  உள்ளதைப் பார்க்கிறோம். இயேசு  நூற்றுக்கதிபதியை  நோக்கி அவனுடைய  விசுவாசத்தைப்  பார்த்து  “நீ  போகலாம்” என்று  கூறினார். “ஒரு  வார்த்தை  மாத்திரம்  சொல்லும்  என்  வேலைக்காரன்  சொஸ்தமாவான் என்று  விசுவாசித்ததால்  அவனுடைய  விசுவாசத்தின்படியே  ஆகக்கடவது” என்றார். அந்த நாளிகையிலே  அந்த  வேலைக்காரன்  குணமடைந்தான். இயேசு தன்னுடைய  வார்த்தையால்  உலகத்தைப்  படைத்தார். எனவே  தேவனுடைய பிள்ளைகள்  தேவனுடைய  வார்த்தைகளுக்கு  உருவாக்குகிற  வல்லமை  உண்டு என்பதை  மறந்து  விடக்கூடாது.

விசுவாசத்தினாலே  ஆபேல் காயீனுடைய  பலியைவிட  மேன்மையான  பலியைத்  தேவனுக்குச்  செலுத்தி  நீதிமானென்று  சாட்சி  பெற்றான். விசுவாசத்தினாலே  ஏனோக்கு  மரணத்தைக்  காணாதபடி  எடுத்துக்  கொள்ளப்பட்டு  தேவனுக்குப்  பிரியமானவன்  என்று  சாட்சி  பெற்றான். விசுவாசத்தினாலே  ஆபிரகாம்  ஈசாக்கைப்  பெற்றான்.  விசுவாசத்தினாலே  மோசே  தான்  பார்வோனுடைய  குமாரத்தியின்  மகன்  எண்ணப்படுவதை  வெறுத்து  தேவனுடைய  ஜனங்களோடே  துன்பங்களை  அனுபவித்தான்.  அதேபோல் .நூற்றுக்கதிபதியின்  பெரிய விசுவாசத்தைப்  பார்த்த  இயேசு  அவனுடைய  வேலைக்காரனுக்கு  அற்புதம்  செய்து  சுகத்தைக் கொடுத்தார். பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசிகள் விசுவாசத்தினால் சிவந்த சமுத்திரத்தை உலர்ந்த தரையைக் கடந்ததைப் போல,எரிகோ கோட்டையை விசுவாசத்தினால் கீழே விழத்தள்ளியதைப் போல, நாமும் அந்த ஜீவனுள்ள வார்த்தையை விசுவாசித்து (ஏபிரேயர் :12), விசுவாசத்தை துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடு ஓடக்கடவோம்.  ஆமென்.

Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago