இயேசு செய்த அற்புதங்கள்

பிசாசு பிடித்த குருடும் ஊமையுமானவனை சுகமாக்கினார்

மத்தேயு 12 : 22 – 32; மாற்கு 3 : 22 – 27; லூக்கா 11 : 14 – 23 

இயேசு செய்த அற்புதம்:

பிசாசு  பிடித்த  ஒருவனை  இயேசுவண்டை  கொண்டு வந்தார்கள். அவனால் பார்க்கவும்,  பேசவும்  முடியாது. அசுத்த  ஆவி  தான் இந்த  நோய்க்குக்  காரணம் என்பதை  இயேசு  கண்டறிந்தார். பரிசுத்த  ஆவிக்கு  விரோதமான  ஆவி தான் அசுத்த  ஆவி. புதியஏற்பாட்டிலுள்ள  27  புத்தகங்களில்  21 முறை  அசுத்த  ஆவி என்று  வருகிறது. இந்த  ஆவியானது  கலகத்தை, சமாதானக்குறைவை,  தரித்திரத்தை,  மதிகேட்டைக்  கொண்டு  வரும். எனவே  அசுத்த ஆவியைப்  பற்றி  ஒவ்வொருவரும்  தெரிந்துக்  கொள்ள  வேண்டும். தேவன்  நமக்குள்  நல்ல ஆவியை  கொடுக்காவிட்டால்  நம்மால்  ஷேமமாக  வாழ  முடியாது. இயேசுவிடம்  கொண்டு  வந்த  மனிதனுக்கு  கண்  பார்வையில்லை. ஒருவனுக்கு கண்  பார்வையில்லாவிட்டால் 50% வாழ்க்கையில்லை. வெளிச்சம் என்னவென்று அவனுக்குத்  தெரியாது. வெளிச்சம்  தெரியாததால் மகிழ்ச்சி கிடையாது. இப்படிப்பட்ட  பரிதாபமான  நிலையில்  இந்த  மனிதன்  இருக்கிறான். இவர்களையும்  தேவன்தான்  உண்டாக்கினார்  என்று (யாத்திராகமம் 4 : 11) ல்  பார்க்கிறோம். தேவன்  தனது  இஷ்டப்படி  தான் ஒவ்வொருவருக்கும்  உயிரையும்,  உடலையும்  தருகிறார். அவர்கள்  அந்த நிலமையிலிருப்பதால் பாவமற்றவர்களாக,  இச்சையற்றவர்களாக இருப்பார்கள். இயேசு அவனிடம் இருந்த பிசாசை  விரட்டி  அவனைப் பேசவும்  பார்க்கவும்  வைத்தார்.

பரிசேயரின் சந்தேகம்:

மத்தேயு 12 : 23 -24 “ ஜனங்களெல்லாரும் ஆச்சரியப்பட்டு: தாவீதின் குமாரன் இவர்தானோ? என்றார்கள். பரிசேயர்  அதைக்கேட்டு: இவன்  பிசாசுகளின்  தலைவனாகிய பெயெல்செபூலினாலே  பிசாசுகளைத்  துரத்துகிறானேயல்லாமல் மற்றபடி அல்ல என்றார்கள்.”

ஜனங்கள்  எல்லோரும்  மிகவும்  ஆச்சரியமடைந்தனர். இவர் தான்  தாவீதின் குமாரன்  என்றனர். அநேகப் பிசாசுகளைத்  துரத்தினதினால் இவர் தான் தாவீதின் குமாரன்  என்றும்,  மேசியா என்றும்  எண்ணினார்கள். பரிசேயர்கள்  ஜனங்கள் சொல்வதைக்  கேட்டு பெயெல்செபூலினாலே இயேசு  பிசாசுகளைத் துரத்துவதாக  எண்ணினார்கள்.  பெயெல்செபூல்  என்பது  யூதரல்லாத  மற்ற  சில ஜனங்கள்  வணங்கிய  தெய்வம். இது  பிசாசுகளுக்கெல்லாம்  தலைவன்  என்று யூத  மக்கள்  எண்ணினர். அதனால்தான்  இயேசுவைப்  பார்த்து  இவ்வாறு கூறினர். 

இயேசு  அவர்களுக்குக்  கொடுத்த  விளக்கம்:

மத்தேயு 12 : 25- 28 “இயேசு  அவர்கள்  சிந்தனையை  அறிந்து,  அவர்களை நோக்கி:  தனக்குத்தானே  விரோதமாய்ப் பிரிந்திருக்கிற  எந்த  ராஜ்யமும் பாழாய்ப்போம்;  தனக்குத்தானே  விரோதமாய்ப்  பிரிந்திருக்கிற  எந்த  பட்டணமும்  எந்த  வீடும்  நிலைநிற்க மாட்டாது. சாத்தானைத்  சாத்தான்  துரத்தினால்  தனக்கு  விரோதமாகத்  தானே பிரிவினை  செய்கிறதாயிருக்குமே; அப்படிச்  செய்தால்  அவன் ராஜ்யம் எப்படி  நிலைநிற்கும்? நான் பெயெல்செபூலினாலே பிசாசுகளைத்  துரத்தினால், உங்கள் பிள்ளைகள்  அவைகளை  யாராலே  துரத்துகிறார்கள்? ஆகையால், அவர்களே உங்களை  நியாயந்  தீர்க்கிறவர்களாயிருப்பார்கள். நான்  தேவனுடைய  ஆவியினாலே  பிசாசுகளைத்  துரத்துகிறபடியால்  தேவனுடைய  ராஜ்யம்  உங்களிடத்தில்  வந்திருக்கிறதே.”

இயேசு  அவர்களுடைய  சிந்தனைகளை  அறிந்து,  ராஜ்யத்திற்குள்  பிரிவினை  வந்தால், அந்த  ராஜ்யம்  பாழாய்ப்  போய்விடும்  என்றார். அதேபோல் தங்களுக்குள்  பிரிந்து  நிற்கிற  பட்டணமானாலும்  சரி,  வீடானாலும்  சரி  நிலைநிற்காது  என்றார்.  சாத்தானையே  சாத்தான்  துரத்தினால் அவர்களுக்குள்ளேயே  பிரிவினை  ஏற்படும்  என்றும்  அவ்வாறு  பிரிவினை ஏற்படும்  போது  சாத்தானுடைய  ராஜ்யம்  நிலை  நிற்க  முடியாது  என்றார். மேலும்  இயேசு  தான்  சாத்தானைப் பயன்படுத்திப்  பிசாசுகளைத்  துரத்தினால்  பரிசேயரான  உங்களுடைய  சீஷர்கள்  பிசாசுகளைத்  துரத்துவதும்  பெயெல்செபூலினாலேயா  என்றார். அப்படியானால்  அவர்களே  உங்களை நியாயந்தீர்க்கிறவர்களாக  இருப்பார்கள்  என்றார். தேவனுடைய  ராஜ்யமான  இயேசு  தேவனுடைய  ஆவியினாலே  பிசாசுகளைத்  துரத்துவதாகக்  கூறினார். பிசாசுகளைத்  துரத்தும்  அதிகாரம்  தனக்குக்  கொடுத்த அதிகாரம்  என்றார். 

ஆவியானவர்  பற்றி  இயேசு:

மத்தேயு 12 : 29 – 32 “அன்றியும், பலவானை  முந்திக்  கட்டினாலொழிய பகவானுடைய  வீட்டுக்குள்  ஒருவன்  புகுந்து, அவன்  உடைமைகளை எப்படி  கொள்ளையிடக்கூடும்?  கட்டினானேயாகில்,  அவன்  வீட்டைக் கொள்ளையி டலாம். என்னோடேயிராதவன்  எனக்கு  விரோதியாயிருக்கிறான்; என்னோடே  சேர்க்காதவன் சிதறடிக்கிறான்.  ஆதலால்,  நான்  உங்களுக்குச்  சொல்லுகிறேன்: எந்தப்  பாவமும்  எந்தத் தூஷணமும்  மனுஷருக்கு  மன்னிக்கப்படும்;  ஆவியானவருக்கு விரோதமான  தூஷணமோ  மனுஷருக்கு  மன்னிக்கப்படுவதில்லை. எவனாகிலும்  மனுஷகுமாரனுக்கு  விரோதமான  வார்த்தை  சொன்னால் அது  அவனுக்கு  மன்னிக்கப்படும்; எவனாகிலும்  பரிசுத்தஆவிக்கு விரோதமாகப் பேசினால் அது  இம்மையிலும் மறுமையிலும்  அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை.”

பலவானுடைய  வீட்டிற்குள்  புகுந்து  அவனுடைய  வீட்டில்  உள்ளவைகளைக்  கொள்ளையிட  வேண்டுமானால், அதற்கு  முதலில்  அந்த  பலவானை  கட்டிப் போட்ட  பின்  தான்  அவன்  வீட்டில்  உள்ளவர்களைக்  கொள்ளையிட  முடியும். கிறிஸ்துவோடு  சேர்ந்து  தீமையையும், சாத்தானையும்  எதிர்த்து  போரிடாதவர்கள்  இயேசுவுக்கு  விரோதியாயிருக்கிறார்கள்  என்கிறார். கிறிஸ்துவின்  ராஜ்யத்துக்கும்,  சாத்தானின்  வல்லமைக்குமிடையே நடுநிலை  வகிப்பது இயலாத  காரியம். மனுஷகுமாரனாகிய  இயேசுவுக்கு  விரோதமாகப்  பேசி,  அதற்காக  அவரிடம்  வந்து  மன்னிப்பு  கேட்கும்  போது, இயேசு  அவனுடைய பாவத்தை  மன்னிப்பார்.  ஆனால்  பரிசுத்த  ஆவியானவருக்கு  விரோதமாகப்  பேசினால், அதற்கு  மன்னிப்பு  கிடையாது. பரிசுத்த  ஆவியானவரின்  செயலை, பிசாசின்  செயலுக்கு  ஒப்புமைப்படுத்திக்  கூறுவது  மன்னிக்க  முடியாத  குற்றம் என்கிறார். பரிசேயர்கள்  திருத்துவதிலுள்ள  இரண்டு  பேரையும்  எதிர்த்து  நிற்கிறார்கள். 1 இயேசு  2. பரிசுத்தாவியானவர். ஒருவன்  பரிசுத்த  ஆவியானவரை  உள்ளத்திலேயும், வாழ்க்கையிலும்  கிரியை  செய்வதற்கு  எதிர்த்து  நின்றால், அவனுக்கு  இம்மையிலும்,  மறுமையிலும்  மன்னிப்பு  கிடையாது. அதனால்  தான் இயேசு  எந்த  பாவமும், எந்த  தூஷணமும்  மன்னிக்கப்படும். ஆவியானவருக்கு விரோதமான  தூஷணம்  மன்னிக்கப்படுவதில்லை என்றார்.  

ஒருசமயம்  மிரியாம்  மோசேயைக்  குறைகூறி  “நீர் அந்த  ஸ்திரீயை  ஏன் விவாகம்  செய்தீர்” என்று  கூறினவுடனே,  தேவனிடமிருந்து  நியாயத்தீர்ப்பு  உண்டாகி  அவள்  குஷ்டரோகியானாள்.  ஆனால்  பரிசேயர்கள்  இயேசுவைக்  குறைகூறி  “இவன்  சாத்தானுக்கு  உடன்  வேலையாள்”  என்று  உரைத்த  போது,  அவர்கள்  மன்னிக்கப்பட்டார்கள்.  பழைய  உடன்படிக்கைக்கும்,  புதிய  உடன்படிக்கைக்கும்  உள்ள  வித்தியாசம்  இதுதான்.  ஆபேலின்  இரத்தம்  நியாயத்தீர்ப்புக்கு  கூக்குரலிட்டது.  ஆனால்  இயேசுவின்  இரத்தமோ  இரக்கத்திற்கு  கூக்குரலிட்டது (எபிரேயர்  12 : 14). 

இயேசு  இந்த  அற்புதத்தில் அசுத்த  ஆவியானது  ஒரு  மனிதனுக்குள்  புகுந்து அவனைப்  பேசவிடாமலும், பார்வை  தெரியாமலும்  வைத்திருந்ததைப்  பார்க்கிறோம். அதை  இயேசு  அவரது  வல்லமையினால்  அந்த  மனிதனை  விட்டு  அனுப்பி  விட்டதையும் பார்க்கிறோம். அசுத்த  ஆவியை  என்ன  செய்ய  வேண்டுமென்பதை  இயேசு  தெளிவாகக்  கூறியதை  இந்த  அற்புதத்திலிருந்து அறிந்து கொண்டோம். மேலும் இயேசு  பரிசுத்த  ஆவிக்கு  விரோதமாகப்  பேசுவது  பாவம்  என்பதை திட்டவட்டமாக  கூறியிருப்பதைக்  காண்கிறோம். எனவே  பரிசுத்த ஆவிக்கு  விரோதமான செயல்களை, பேச்சுக்களை  நாம் பேசாதபடி  நாம்  நம்மை  பரிசுத்த ஆவிக்குள்  காத்துக்  கொள்வோம்.  ஆமென்.

Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago