மத்தேயு 26 : 36 – 57; மாற்கு 14 : 32 – 51; லூக்கா 22 : 39 – 54; யோவான் 18 : 1 – 12 

கெத்செமனே தோட்டத்தில் இயேசுவும்,சீஷர்களும்:

மாற்கு 14 : 32 – 34 “கெத்செமனே என்னப் பட்ட இடத்திற்கு வந்தார்கள். அப்பொழுது இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: நான் ஜெபம் பண்ணுமளவும் இங்கே உட்கார்ந்திருங்கள் என்று சொல்லி; பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் தம்மோடே கூட்டிக்கொண்டுபோய், திகிலடையவும், மிகவும் வியாகுலப்படவும் தொடங்கினார். அப்பொழுது அவர்: என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது. நீங்கள் இங்கே தங்கி, விழித்திருங்கள் என்று சொல்லி.”

அந்த ராத்திரியிலே இயேசு எருசலேமில் தங்கவில்லை. அந்தப் பட்டணம் இயேசுவைப் புறக்கணித்ததால், இயேசுவும் அந்தப் பட்டணத்தை அப்பொழுது புறக்கணித்தார். அதன்பின் இயேசு பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் தம்முடனே கூடக் கூட்டிக்கொண்டு, கெத்செமனே என்ற இடத்திற்குச் சென்றார். இந்த கெத்சமனேத் தோட்டமானது, அடிக்கடி சீஷர்களும் இயேசுவும் வருகிற இடமாக இருந்ததால், யூதாசும் அந்தத் தோட்டத்தை அறிந்திருந்தான். இயேசுவோடு வந்த 11 சீஷர்களில், எட்டு சீஷர்களைத் தூரத்தில் இருக்கச் சொல்லிவிட்டு பேதுருவையும், யாக்கோபையும், யோவானையும், இந்த நெருக்கடியான நேரத்தில் தன்னோடு இருக்கும்படி கூட்டிக் கொண்டு போனார். அங்கு இயேசு திகிலடையவும், வியாகுலப்படவும் தொடங்கினார். அந்தத் தோட்டத்தில் இயேசு சிலுவையில் பட்ட வேதனையை விட அதிகமான வேதனையை அடைந்தார். இயேசு அவர்களிடம் தன்னுடைய ஆத்துமா மரணத்துக் கேதுவான துக்கம் கொண்டிருப்பதால், நீங்கள் இங்கே விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள் என்று கூறினார்.

இயேசுவின் ஜெபம்:

மாற்கு 14 :35 -39 “இயேசு சற்று அப்புறம் போய், தரையிலே விழுந்து, அந்த வேளை தம்மைவிட்டு நீங்கிப்போகக்கூடுமானால் அது நீங்கவேண்டுமென்று வேண்டிக்கொண்டு: அப்பா பிதாவே, எல்லாம் உம்மாலே கூடும்; இந்தப் பாத்திரத்தை என்னிடத்திலிருந்து எடுத்துப் போடும், ஆகிலும் என் சித்தத்தின்படி அல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்றார். பின்பு அவர் வந்து, அவர்கள் நித்திரைபண்ணுகிறதைக்கண்டு, பேதுருவை நோக்கி: சீமோனே, நித்திரை பண்ணுகிறாயா? ஒரு மணி நேரம் நீ விழித்திருக்கக் கூடாதா? நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள். ஆவி உற்சாகம் உள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார். அவர் மறுபடியும் போய் அந்த வார்த்தைகளையே சொல்லி ஜெபம்பண்ணினார்.”

இயேசு சீடர்களை விட்டு சற்று அப்புறம் போய் தரையிலே விழுந்து பிதாவை நோக்கி ஜெபித்தார். இயேசு தன்னை விட்டு நீங்க வேண்டும் என்று குறிப்பிட்டது சரீர மரணம் அல்ல. இயேசு தயங்கியதெல்லாம் நம்முடைய பாவங்களுக்கான தண்டனையை சிலுவையில் ஏற்றுக்கொள்ளும்போது “பிதாவின் ஐக்கியத்திற்கு ஏற்படும் முறிவையே” இயேசு ஏற்றுக்கொள்ளத் தயங்கினார். நித்திய நித்திய காலமாய் ”ஒரு முறிவில்லாத ஐக்கியத்தையே இயேசு பிதாவிடம் வைத்திருந்தார். ஆனால் இப்போது அந்த ஐக்கியத்தை 3 மணிநேரம் இழக்க வேண்டியிருந்தது. அதனால் “ஐக்கிய முறிவு ஏற்படாதபடி” வேறுவழியிருக்கிறதா என்றே விண்ணப்பம் செய்தார். பிதாவினால் கைவிடப்பட்டு நித்திய நரகாக்கினைக்குரிய வேதனையை சுமார் 3 மணி நேரங்கள் சகித்தார். இந்த ஒரே ஒரு இடத்தில்தான் இயேசு தன் பிதாவை “தேவனே” என்றழைத்தார் (மாற்கு 15 : 34). 

ஏனென்றால் இயேசு இப்போது சர்வலோக நியாயாதிபதிக்கு முன்பாகத் தொங்கிக் கொண்டிருந்தார். இயேசு தேவனுடைய குமாரனாயிருந்தும் மனிதனாக இருந்தபடியினால், நம்முடைய பாவங்களனைத்தையும் அவர் மேல் வைக்கப்பட்ட போது பாரமானார். அந்தப் பாரமானது அத்தனை அருவருப்பாகவும் பயங்கரமாகவும் இருந்தபடியினால் அதைக் குறித்துக் கலங்கினார். பிதாவின் சித்தத்திற்குத் தம்மை ஒப்புக்கொடுத்தார். பின்பு சீடர்களிடம் வந்து அவர்கள் நித்திரை பண்ணிக் கொண்டிருப்பதைப் பார்த்து, பேதுருவை நோக்கி, சீமோனே ஏன் நித்திரை பண்ணுகிறாய்? ஒரு மணி நேரமாவது விழித்திருக்கக் கூடாதா? என்று கேட்டார். ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சம் தான் பலவீனமுள்ளது. எனவே விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள் என்று கூறி, மறுபடியும் தேவனுடைய சித்தத்திற்குத் தன்னை ஒப்புக்கொடுத்து ஜெபம் பண்ணினார்.

யூதாஸ் கூட்டத்துடன் இயேசுவைப் பிடிக்க வந்தான். 

லூக்கா 22 : 43,44 “அப்பொழுது வானத்திலிருந்து ஒரு தூதன் தோன்றி, இயேசுவைப் பலப்படுத்தினான். இயேசு மிகவும் வியாகுலப்பட்டு, அதிக ஊக்கத்தோடே ஜெபம் பண்ணினார். அவருடைய வியர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையில் விழுந்தது. 

யோவான்18 : 3 – 5 “ யூதாஸ் போர்சேவகரின் கூட்டத்தையும் பிரதான ஆசாரியர் பரிசேயர் என்பவர்களால் அனுப்பப்பட்ட ஊழியக்காரரையும் கூட்டிக்கொண்டு, பந்தங்களோடும் தீவட்டிகளோடும் ஆயுதங்களோடும் அவ்விடத்திற்கு வந்தான். இயேசு தமக்கு நேரிடப் போகிற எல்லாவற்றையும் அறிந்து, எதிர்கொண்டு போய், அவர்களை நோக்கி: யாரைத் தேடுகிறீர்கள் என்றார்.அவருக்கு அவர்கள் பிரதியுத்தரமாக: நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறோம் என்றார்கள். அதற்கு இயேசு: நான் தான் என்றார். அவரைக் காட்டிக் கொடுத்த யூதாசும் அவர்களுடனே கூட நின்றான்.”

இயேசுவை ஊழியத்தின் தொடக்கத்தில், சாத்தான் வனாந்தரத்திற்குக் கொண்டு போய்ச் சோதித்தான். அதன்பின் தேவதூதர்கள் இயேசுவுக்குப் பணிவிடை செய்தனர். அதேபோல் இங்கு தேவதூதர்கள் இயேசுவைப் பலப்படுத்தியதைப் பார்க்கிறோம். அத்தனை பாதிப்பு ஏற்படும் அளவுக்கு இயேசு வேதனைப்பட்டதைப் பார்க்கிறோம். அந்த ஜெபத்தில் இயேசுவின் வியர்வையானது இரத்தத்தின் பெருந்துளிகளாய் தரையில் விழுந்தது என்று அறிகிறோம். இயேசு தன்னுடைய சீஷர்களிடம் “இதோ மனுஷகுமாரன் பாவிகளுடைய கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுகிற வேளை வந்தது, என்னைக் காட்டிக்கொடுக்கிறவன், இதோ வந்துவிட்டான், எழுந்திருங்கள், போவோம்” (மத்தேயு 26 : 45, 46) என்றார். தனக்கு நடக்கவிருக்கும் எல்லா காரியங்களையும் அவர் அவை நடப்பதற்கு முன்னரே அறிந்திருந்தார். 

இதற்கு முன் யூதாஸ் அந்த இடத்தை அறிந்திருந்ததாலும், இயேசுவின் வல்லமையை அறிந்திருந்ததாலும், போர் சேவகர்களின் கூட்டத்தையும், பரிசேயர்கள் பிரதான ஆசாரியர்களால் அனுப்பப்பட்ட ஊழியக்காரரையும் கூட்டிக்கொண்டு பந்தங்களோடும், தீவட்டிகளோடும், ஆயுதங்களோடும் இயேசுவைப் பிடிப்பதற்காகக் கூட்டமாக வந்தான். இவைகள் அனைத்தையும் தனக்கு நேரிடப் போகிற எல்லாவற்றையும் அறிந்ததால், இயேசு அவர்களை நோக்கி யாரைத் தேடுகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு அவர்கள் நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறோம் என்றனர். தங்களிடம் பேசிக்கொண்டிருப்பது இயேசுதான் என்பதை அவர்கள் அறிந்து கொண்டதாகத் தெரியவில்லை. யோவான் 4 : 26, 8 : 24, 28, 9 :9, 13 : 19, 18 : 5, 6, 8, ஆகிய வசனங்களில் “நான் தான்” என்ற வார்த்தையைக் காணலாம். உடனே இயேசு “நான் தான் அவர்” என்று தன்னையே அவர்களிடம் ஒப்புக்கொடுத்தார். அவர்களோடு கூட இயேசுவைக் காட்டிக் கொடுக்க வந்த யூதாசும் நின்று கொண்டிருந்தான்.

பிடிக்க வந்தவர்கள் பின்னிட்டு விழுந்தனர்:

யோவான் 18 : 6 “இயேசு நான் தான் என்று அவர்களிடத்தில் சொன்னவுடனே அவர்கள் பின்னிட்டுத் தரையிலே விழுந்தார்கள்.”

யூதாஸின் மனதை 2 கொரிந்தியர் 4 : 4 ன் படி இப்பிரபஞ்சத்தில் தேவனானவன் குருடாக்கினான். தன்னுடைய எதிரிகளுக்குத் தன்னைப் பிடிப்பதற்கு வாய்ப்பைக் கொடுக்கும் படியாக, அந்தத் தனிமையான இடத்தை இயேசு தெரிந்துகொண்டார். கெத்சமனே தோட்டத்தில் இருட்டில் இவைகள் நடந்தது . பல சமயங்களில் இயேசுவைப் பிடிக்க வந்த பொழுது, அந்த இடத்தை விட்டுக் கடந்து சென்றார். மறைந்து சென்றார். ஆனாலும் தேவாலயத்திலும் திரளான மக்கள் கூட்டத்தின் மத்தியிலும் அவரைப் பிடிக்க அவர்கள் பயந்தனர். இயேசு தன்னுடைய மகிமையை அங்கு வெளிப்படுத்தினதினால், அவர்கள் பின்னிட்டுத் தரையில் விழுந்தனர். அவரைத் தொழுது கொள்ளும்படியாக முன்னால் விழாமல், பயத்தினால் பின்னால் விழுந்தனர். கிறிஸ்துவின் மகிமையின் பிரசன்னத்தை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவருடைய அனுமதியில்லாமல் யாரும் அவரைக் கைது செய்த முடியாது. அவர்கள் விழுந்தவுடன் இயேசுவை மட்டும் காணவில்லை. இயேசுவின் முழு மகிமையையும் கண்டிருக்க வேண்டும். தன்னுடைய வேளை இன்னும் வராததினால் அமைதியாகப், பொறுமையாகச் செயல்பட்டார். பிதாவின் அனுமதியின்றி எந்த எதிரியும் தனக்கு விரோதமாக செயல்பட முடியாதென்பதை அவர்கள் அறிந்து கொள்ளச் செய்கிறார். 

இயேசு சீஷர்களை விடச் சொன்னார்:

யோவான்18 : 7 – 9 “ இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி: யாரைத் தேடுகிறீர்கள் என்று கேட்டார். அவர்கள்: நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறோம் என்றார்கள். இயேசு பிரதியுத்தரமாக: நான் தான் என்று உங்களுக்குச் சொன்னேனே; என்னைத் தேடுகிறதுண்டானால் இவர்களைப் போக விடுங்கள் என்றார். நீர் எனக்குத் தந்தவர்களில் ஒருவனையும் நான் இழந்து போகவில்லை என்று அவர் சொல்லிய வசனம் நிறைவேறத்தக்கதாக இப்படி நடந்தது.” 

எல்லாவற்றையும் இயேசு தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்ததைப் பார்க்கிறோம். இயேசு மறுபடியும் அவர்களிடம் யாரைத் தேடுகிறீர்கள் என்று கேட்டார். இயேசு அவர்களிடமிருந்து தப்ப முயற்சி செய்வாரென்பதால்தான் பந்தங்கள், தீவட்டிகள் ஆயுதங்களோடு வந்திருந்தனர். ஆனால் அவர்களுக்கு முன் இயேசு தைரியமாக நின்று கொண்டிருந்ததைப் பார்த்து ஆச்சரியப்பட்டனர். அவர்கள் நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறோம் என்று கூறினார்கள். அதற்கு இயேசு “நான் தான் என்று கூறி விட்டு, என்னைத் தானே பிடிக்க வந்தீர்கள், என்னுடைய சீஷர்களைப் போக விடுங்கள் என்றார்.” இதில் மீண்டும் அவருடைய தெய்வீகம் வெளிப்பட்டது. யாரைக் கைது செய்ய வேண்டும், யாரை விட வேண்டும் என்பதையும் அவரே தீர்மானித்துக் கூறியதைப் பார்க்கிறோம்.இயேசுவின் சீஷர்களைப் பிடிக்கவோ, அவர்களை சாட்சியாக நிறுத்தவோ அவர் விடவில்லை. பேதுருவுக்குத் தண்டனை கொடுக்காதபடி தப்புவித்தார். கடைசி வரை சீஷர்களிடம் அன்பு கூர்ந்ததைப் பார்க்கிறோம். 

யூதாஸின் முத்தம்:

மாற்கு 14 : 44, 45 “இயேசுவைக் காட்டிக் கொடுக்கிறவன்: நான் எவனை முத்தஞ் செய்வேனோ அவன் தான், அவனைப் பிடித்துப் பத்திரமாய்க் கொண்டுபோங்கள் என்று அவர்களுக்குக் குறிப்பு சொல்லியிருந்தான். அவன் வந்தவுடனே, அவரண்டையில் சேர்ந்து: ரபீ, ரபீ, என்று சொல்லி, இயேசுவை முத்தஞ்செய்தான்.”

லூக்கா 22 : 48 “இயேசு அவனை நோக்கி: யூதாசே, முத்தத்தினாலேயா மனுஷகுமாரனைக் காட்டிக்கொடுக்கிறாய் என்றார்.”

இயேசு இந்த இடத்தில் ஓய்வாக இருப்பாரென்பதை யூதாஸ் அறிந்திருந்ததால், அவர்களை அங்கே அழைத்து வந்திருந்தான். இந்தச் செயல் யூதாஸின் ஒரு மிருகத்தனமான செயல் என்றும், கோழைத்தனமான செயல் என்றும் கூறலாம். யூதாஸ் இயேசுவோடு கூட இருந்தும், அவரது வல்லமைகளையும்,அவர் யார் என்றும் அறிந்திருந்தும், இப்படிப்பட்ட கீழ்த்தரமான செயலைச் செய்தான். இயேசு ஒரு சாதாரணமான மனிதனாக இருந்ததால், இவர் தான் இயேசு என்று காட்டிக் கொடுக்கும்படியான நிலமையில் இருந்தார். இயேசுவை யூதாஸ் ஆண்டவரே என்று சொல்லாமல் ரபீ என்று தான் சொன்னான். அவர்களிடம் யூதாஸ் ஏற்கனவே நான் முத்தம் செய்கிறவர் தான் இயேசு என்று குறிப்பு சொல்லிக் கூட்டி வந்திருந்தான். எனவே இயேசுவை யூதாஸ் முத்தம் செய்தான். உடனே இயேசு யூதாசை நோக்கி “முத்தத்தினாலேயா என்னைக் காட்டிக் கொடுக்கிறாய்” என்று கேட்டார். முத்தம் என்பது அன்பின் அடையாளம். ஆனால் யூதாஸ் இங்கே இயேசுவைக் காட்டிக் கொடுக்க அந்த முத்தத்தைப் பயன்படுத்தினான்.

இயேசு செய்த அற்புதம்:

யோவான்18 : 10, 11 “ அப்பொழுது சீமோன் பேதுரு, தன்னிடத்திலிருந்த பட்டயத்தை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனை வலதுகாதற வெட்டினான்; அந்த வேலைக்காரனுக்கு மல்குஸ் என்று பெயர். அப்பொழுது இயேசு பேதுருவை நோக்கி: உன் பட்டயத்தை உறையிலே கொடு; பிதா எனக்கு கொடுத்த பாத்திரத்தில் நான் பானம்பண்ணாதிருப்பேனோ என்றார்.” 

லூக்கா 22 : 51 “அப்பொழுது இயேசு: இம்மட்டில் நிறுத்துங்கள் என்று சொல்லி, அவனுடைய காதைத்தொட்டு, அவனைச் சொஸ்தப்படுத்தினார்.”

பேதுரு யூதாஸின் கிரியையினால் அவர்கள் இயேசுவைப் பிடிக்க வந்திருப்பதாக நினைத்து அவனைப் பட்டயத்தால் தாக்குவதற்கு முடிவு செய்தான். ஆனால் இயேசுவோ பிதா தனக்காக அனுப்பிய பாத்திரமாகவே கண்டார். பிதாவிடம் இருந்து வந்த பாத்திரத்தை கொண்டு வருவதற்கு வந்த ஒரு தூதனாகவே யூதாஸ்க்கோரியாத் இருந்தான். நாம் தேவனிடம் அன்பு கூறுகிறவர்களாக இருந்தால் “நமக்கு யாரோ செய்யும் தீமை” பிதாவிடமிருந்து வந்த பாத்திரமாக மாத்திரம் இருக்கும். தன்னிடமுள்ள பட்டயத்தினால் இயேசுவைப் பாதுகாக்க நினைத்தான். பேதுரு போர்வீரன் அல்ல. மீன் பிடிக்கிறவன். அவன் அந்த மனிதனின் கழுத்துக்கு வைத்த குறி, காதில் பட்டது. அதுவும் பேதுரு காதை வெட்டியது பிரதான ஆசாரியனின் வேலைக்காரனை. அவனுடைய பெயர் மல்குஸ். யோவான் பிரதான ஆசாரியனுக்கு அறிமுகமானவராதலால் அந்த வேலைக்காரனின் பெயரை அறிந்து குறிப்பிட்டிருந்தார். 

பேதுருவை இயேசு நிறுத்தச் சொல்லி, பட்டயத்தை உரையிலே போடச் சொன்னார். “பிதா தனக்குக் கொடுத்தவைகளை நான் நிறைவேற்றியே தீருவேன்” என்றார். உடனே இயேசு நிறுத்தச் சொன்னது மட்டுமல்லாமல், அவன் கேட்காமலே அந்த மனுஷனின் காதைத் தொட்டு அவனைச் சொஸ்தமாக்கினார். இரத்தக்காயத்தை இயேசு முதல் தடவையாக குணமாக்கினார். மல்குசின் வலது காதை வெட்டினாரென்றும் அதை இயேசு ஓட்ட வைத்ததையும் லூக்கா மட்டுமே கூறியுள்ளார். ஆண்டவரிடம் கேட்காமலே அவரிடமுள்ள அன்பால் துணிந்து இந்தக் காரியத்தை பேதுரு செய்தார். திரளான ஜனங்கள் பட்டயத்துடனும், தடியுடனும் வந்திருந்தனர். அங்கு இயேசுவோடிருப்பவர்கள் 11 பேர் மட்டுமே. அப்படியிருந்தும் பேதுரு துணிச்சலோடு இந்தக் காரியத்தைச் செய்தான். இது தேவ சித்தமில்லை. மாம்ச வைராக்கியம்தான். 

இந்த மல்குஸ் என்பவன் அடிமையாயிருந்து விலைக்கு வாங்கப்பட்டு பிரதான ஆச்சாரியாரின் வீட்டில் வேலைக்காரனாக அப்பொழுது இருப்பவன். இவனுடைய அடையாளமே அந்தக் காதுதான் (உபாகமம் 15 : 17) அந்தக் காதைத்தான் இயேசு ஓட்ட வைத்தார். அவனுடைய அடையாளத்தையே திரும்பக் கொடுத்து அவனைக் கனம் பண்ணினார். மனுஷ குமாரனாகிய இயேசு மனுஷனுடைய ஜீவனை அழிக்க அல்ல. இரட்சிக்கவே வந்தார் என்று லூக்கா 9 : 56 ல் பார்க்கிறோம். .இயேசுவைக் கைது செய்ய வந்த சத்துருக்களுக்கு இயேசு அற்புதம் செய்ததைப் பார்க்கிறோம். இதிலிருந்து அவருடைய இரக்கம் எத்தனை பெரிது என்றறியலாம். இயேசு தன்னுடைய மலைப்பிரசங்கத்தில் உங்கள் சத்துருக்களை சிநேகியுங்கள் என்று மத்தேயு 5 : 44 ல் போதித்தார். அதையே தன்னுடைய செயலிலும் செய்து காட்டினார். . 

இயேசு தன்னை ஒப்புவித்தார்:

மத்தேயு 26 : 53 “நான் இப்பொழுது என் பிதாவை வேண்டிக் கொண்டால், அவர் 12 லேகியோனுக்கு அதிகமான தூதரை என்னிடத்தில் அனுப்ப மாட்டாரென்று நினைக்கிறாயா?”

மாற்கு 14 : 48 -50 “இயேசு அவர்களை நோக்கி: கள்ளனைப் பிடிக்கப் புறப்படுகிறதுபோல, நீங்கள் பட்டயங்களையும் தடிகளையும் எடுத்துக்கொண்டு என்னைப் பிடிக்க வந்தீர்கள்; நான் தினந்தோறும் உங்கள் நடுவிலே தேவாலயத்தில் உபதேசம் பண்ணிக் கொண்டிருந்தேன்; அப்பொழுது நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே; ஆனாலும் வேதவாக்கியங்கள் நிறைவேற வேண்டியதாயிருக்கிறது என்றார். அப்பொழுது எல்லாரும் அவரை விட்டு ஓடிப் போனார்கள்.” 

லூக்கா 22 : 54 “அவர்கள் இயேசுவைப் பிடித்த பின்பு, பிரதான ஆசாரியனுடைய வீட்டில் கொண்டுபோய் விட்டார்கள்.”

பேதுரு மல்குஸின் காதை வெட்டினதால், இயேசு அவனைப் பார்த்து “நான் இப்பொழுது பிதாவை வேண்டிக்கொண்டால் 12 லேகியோனுக்கும் அதிகமான தூதரை எனக்கு அனுப்புவார்” என்றார். மேலும் இயேசு தன்னைப் பிடிக்க வந்தவர்களை நோக்கி “நான் தினந்தோறும் தேவாலயத்தில் உபதேசம் பண்ணிக் கொண்டிருந்தேன் அப்பொழுது என்னை நீங்கள் பிடிக்கவில்லையே, இப்பொழுது பட்டங்களையும், தடிகளையும் எடுத்துக் கொண்டு என்னைப் பிடிக்க வந்திருக்கிறீர்கள். ஆனாலும் வேதவாக்கியங்களும், தீர்க்கதரிசனங்களும் நிறைவேற வேண்டியதாயிருக்கிறது” என்றார். அப்பொழுது இயேசுவோடிருந்த அனைவரும் அவரை விட்டு ஓடிப் போனார்கள். அவர்கள் இயேசுவைப் பிடித்த பின் அவரைப் பிரதான ஆசாரியனுடைய வீட்டில் கொண்டு போய் விட்டார்கள். பாவியான மனிதர்களின் கையில் இயேசு தன்னை ஒப்படைத்தார். பேதுரு மல்குஸின் காதை வெட்டினாலும், அவனும் இயேசுவை விட்டு ஓடிப் போனான். மல்குஸின் காதை வெட்டியது, இயேசுவைக் கைது செய்தவர்களுக்கும், கைது செய்ததில் தொடர்புடைய அனைவருக்கும் எச்சரிப்பாய் அமைந்தது. தன்னை பிடிக்க வந்தவர்களுக்கும், இயேசு அற்புதத்தை செய்ததிலிருந்து அவருடைய மனதுருக்கத்தையும், சத்துருக்களை நேசிக்கும் பண்பையும் பார்க்கிறோம். பேதுருவை கைது செய்யாததற்குக் காரணம், இயேசு அவர்களைப் போக விடுங்கள் என்று கூறியதால். அந்த சூழ்நிலையிலும் இயேசு அதிகாரத்தில் இருந்ததைக் காண்கிறோம்

இயேசு லூக்கா 22 : 36 ல் “பட்டயம் இல்லாதவன் தன் வஸ்திரத்தை விற்று ஒன்றைக் கொள்ளக்கடவன்” என்று கூறியிருந்தார் இந்த வார்த்தையை பேதுரு தவறாகப் புரிந்து கொண்டிருந்தார். நமது ஆயுதங்கள் மாம்சத்துக்குரியதல்ல. அது ஆவிக்குரியதாகவும், அர்பணிப்புடையதாகவும், மன்னிக்கும் மனமுடையதாகவும் இருக்க வேண்டும். ஆண்டவர் அழைத்தது பட்டயத்தை சுமக்க அல்ல. சிலுவையை சுமக்க. இந்த அற்புதத்தில் இயேசு தன்னைப் பிடிக்க வந்த நேரத்தில் கூட அற்புதம் செய்ததைப் பார்க்கிறோம். அதுவும் இயேசு அந்த அற்புதத்தை எதிரிக்குச் செய்ததைப் பார்க்கிறோம். நாமும் இயேசுவைப் போல சத்துருக்களை, எதிரிகளை நேசித்து, அவர்களுக்கு நன்மையையே செய்வோம். ஆமென்.

Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago