இயேசு செய்த அற்புதங்கள்

10 குஷ்டரோகிகளை சுகமாக்கினார் லூக்கா 17 : 11 – 19

குஷ்டரோகிகளின் வேண்டுகோள்:

லூக்கா 17 :11 – 13 “பின்பு இயேசு எருசலேமுக்குப் பிரயாணம் பண்ணுகையில், அவர் சமாரியா கலிலேயா என்னும் நாடுகளின் வழியாக நடந்துபோனார். அவர் ஒரு கிராமத்தில் பிரவேசித்தபோது, குஷ்டரோகமுள்ள மனுஷர் 10 பேர் அவருக்கு எதிராக வந்து, தூரத்திலே நின்று: இயேசு ஐயரே, எங்களுக்கு இரங்கும் என்று சத்தமிட்டார்கள்.”

இயேசு சிலுவைக்குப் போகுமுன் கடைசி முறையாக எருசலேமுக்குப் போனார். எருசலேமுக்குப் போகும்போது, சமாரியா கலிலேயா நாடுகளில் வழியாக நடந்து போனார். அந்நாட்களில் சமாரியரை அந்நியராகக் கருதி அவ்வழியாக வரமாட்டார்கள். இயேசுவோ அங்கு ஒரு நோக்கத்தோடு சென்றிருக்கிறார். இயேசு பிரச்சனையுள்ள மக்களைத் தேடித் சென்று அவரது வல்லமையை விளங்கப் பண்ணி மனதுருக்கத்துடன் அவர்களுக்கு சுகம் கொடுப்பதில் கருத்தாய் இருந்தார். அப்பொழுது ஒரு கிராமத்தின் வழியாக அவர் செல்லும் பொழுது பத்து குஷ்டரோகிகள் இயேசு வருகிறாரென்று கேள்விப்பட்ட உடனே சற்றும் தாமதிக்காமல் இயேசுவுக்கு எதிராக வந்து தூரத்திலே நின்றார்கள். மத்தேயு 8 : 2 ல் இயேசு ஒரு குஷ்டரோகிக்கு சுகம் கொடுத்ததை இவர்கள் அறிந்திருந்தனர். 

இயேசுவைப் பார்த்து, “இயேசு ஐயரே எங்களுக்கு இரங்கும்” என்று சத்தமிட்டார்கள். ஐயரே என்ற வார்த்தை மூல பாஷையில் இராணுவத்திலிருக்கும் தலைமைத் தளபதியைக் குறிக்கும். அவர் கட்டளையிட்டால் இராணுவத்தில் எல்லாம் நடக்கும். அதேபோல் இயேசு கட்டளையிட்டால் தங்களுக்கு சுகம் கிடைக்கும் என்பதால் சத்தமிட்டுக் கூப்பிட்டு தங்கள் பரிதாப நிலையைத் தெரிவித்தனர். குஷ்டரோகிகளைத் தொட்டால் தீட்டு என்பதாலும் (லேவியராகமம் 13 : 45, 46), அந்த விஷக் கிருமிகள் மற்றவர்களுக்கு எளிதில் தொற்றக் கூடும் என்பதாலும் அவர்கள் அருகில் வர மாட்டார்கள். அவர்கள் ஊருக்கு வெளியே தனிமைப் படுத்தப்படுவார்கள். அந்நாட்களில் குஷ்டரோகம் என்பது குணப்படுத்த முடியாத வியாதி. 

இயேசுவின் கட்டளையும்,சமாரியனின் நன்றியறிவிப்பும்:

லூக்கா17 :14 – 16 “அவர்களை இயேசு பார்த்து: நீங்கள் போய், ஆசாரியர்களுக்கு உங்களைக் காண்பியுங்கள் என்றார். அந்தப்படி அவர்கள் போகையில் சுத்தமானவர்கள். அவர்களில் ஒருவன் தான் ஆரோக்கியமானதைக் கண்டு, திரும்பி வந்து, உரத்த சத்தத்தோடே தேவனை மகிமைப்படுத்தி, அவருடைய பாதத்தருகே முகங்குப்புற விழுந்து, அவருக்கு ஸ்தோத்திரஞ் செலுத்தினான்; அவன் சமாரியனாயிருந்தான்.”

இயேசு அந்த பத்து குஷ்டரோகிகளையும் பார்த்து சுத்தமாவதற்கு முன்னமே ஆசாரியர்களுக்கு உங்களைக் காண்பியுங்கள் என்றார். இது அவர்களின் விசுவாசத்திற்கும், கீழ்ப்படிதலுக்கும் வைத்த சோதனை. ஆசாரியர்களிடம் காண்பிக்கச் சொல்லி விட்டதால் குணமாகி விட்டதாக அர்த்தம். மத்தேயு 8 : 4 லும் ஒரு குஷ்டரோகியைத் தொட்டு இயேசு சுகமாக்கி அதை ஒருவருக்கும் சொல்ல வேண்டாமென்று கட்டளையிட்டு, அவன் போய் ஆசாரியனிடம் காண்பித்து மோசே அதற்கென்று கட்டளையிட்ட காணிக்கையைச் செலுத்து என்றதைப் பார்க்கிறோம். லேவியராகமம் 13 : 37 ன்படி ஆசாரியன் தான் பரிசோதித்துப் பார்த்து குணமடைந்ததைச் சொல்ல வேண்டும். 

லேவியராகமம் 13 : 45, 46 ல் அந்த வியாதி உண்டாயிருக்கிற குஷ்டரோகி வஸ்திரம் கிழிந்தவனாயும், தன் தலையை மூடாதவனாயும் இருந்து, அவன் தன் தாடியை மூடிக்கொண்டு, “தீட்டு, தீட்டு” என்று சத்தமிடவேண்டும். அந்த வியாதி அவனில் இருக்கும் நாள்வரைக்கும் தீட்டுள்ளவனாக எண்ணப்படக்கடவன்; அவன் தீட்டுள்ளவனே; ஆகையால், அவன் தனியே குடியிருக்கவேண்டும்; அவன் குடியிருப்பு பாளயத்துக்குப் புறம்பே இருக்கக்கடவது.” 

என்றுள்ளது.அந்த 10 பேரும் இயேசு நம்மைத் தொடா விட்டாலும், ஒரு வார்த்தையாவது சுத்தமானீர்கள் என்று சொல்லவில்லையே என்று எண்ணாமல், அவருடைய வார்த்தைக்குக் கீழ்படிந்து போனார்கள். போகும் போதே சுகமானார்கள். அந்த 10 பேரும் கொடிய வியாதியான குஷ்டரோகத்தில் இருந்து விடுதலை பெற்று சுத்தமானார்கள் எபேசியர் 2 : 13 ன் படி முன்னே துரமாயிருந்த அவர்கள் கிறிஸ்துவின் இரத்தத்தினால் சமீபமானார்கள். ஆனால் அதில் உள்ள ஒரு சமாரியன் மட்டும் திரும்ப வந்து சந்தோஷமான நன்றியுள்ள உள்ளத்தோடு, இயேசுவைப் பார்க்க வந்தான். சந்தோஷத்துடன் இயேசுவின் பாதத்தில் முகங்குப்புற விழுந்து, உரத்த சத்தமாக, இயேசுவை மகிமைப்படுத்தி ஸ்தோத்திரம் செலுத்தினான். அவன் ஒரு சமாரியன். 

இயேசு சமாரியனுக்கு இரட்சிப்பளித்தார்: 

லூக்கா17 :17 – 19 “அப்பொழுது இயேசு: சுத்தமானவர்கள் பத்துப்பேர் அல்லவா, மற்ற ஒன்பதுபேர் எங்கே? தேவனை மகிமைப்படுத்துகிறதற்கு இந்த அந்நியனே ஒழிய மற்றொருவனும் திரும்பிவரக்காணோமே என்று சொல்லி, அவனை நோக்கி: நீ எழுந்து போ, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார்.”

இயேசு அந்த சமாரியனிடம் சுத்தமானவர்கள் பத்துப்பேர் அல்லவா, நீ மட்டும் வந்திருக்கிறாயே, மற்ற ஒன்பது பேர் எங்கே? என்று கேட்டார். இந்த அந்நியன் மட்டுமே தேவனை மகிமைப்படுத்தினான். அவனுக்கு மட்டுமே நன்றியுள்ள இருதயம் இருந்ததை இயேசு பார்த்தார். திரும்பி வராத ஒன்பதுபேர் யூதர்கள். அவர்களும் இயேசுவின் வார்த்தையை நம்பிப் போனார்கள். ஆனால் நன்றி செலுத்த மறந்தார்கள். அவனை நோக்கி உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்று எழுந்து போகச் சொன்னார். இவனுக்கு மட்டுமே இயேசு இரட்சிப்பைக் கட்டளையிட்டார். மற்ற 9 பேரும் இரட்சிப்பைப் பெறவில்லை. இந்த மனிதனோ புறக்கணிக்கப்பட்ட சமாரியன். ஆனால் சமுதாயத்தில் மதிப்புப் பெற்ற அந்த யூதர்கள் பெற முடியாத இரட்சிப்பை அவன் பெற்றான். இயேசு தன்னுடைய சீஷர்களை ஊழியத்திற்கு அனுப்பும்போது என்ன கட்டளை கொடுத்தாரென்று மத்தேயு 10 5 ல் பார்க்கிறோம் 

அதில் அவர்களை புறஜாதியர் நாடுகளுக்குச் செல்ல வேண்டாமென்றும், சமாரியா பட்டணங்களில் பிரவேசிக்க வேண்டாமென்றும் கூறினார். ஆனால் ஒருமுறை இயேசு சமாரியாவின் வழியாக ஊழியத்துக்குச் சென்று அங்குள்ள சமாரிய ஸ்திரீயின் மூலம் அந்தப் பட்டணமே இயேசுவை ஏற்றுக் கொண்டதை யோவான் 4: 1 – 30 ல் பார்க்கிறோம். இயேசுவை அறிந்திருக்கிற ஒவ்வொருவரும் நன்றி உள்ளவர்களாக வாழ வேண்டும். தேவனைத் தொழுது கொள்வதில் ஒரு பகுதி இயேசுவுக்கு நன்றி செலுத்துவது தான்.இயேசு வேதத்தில் மாற்கு 1:40 – 44 ஒரு குஷ்டரோகியைத் தொட்டு சுகமாக்கிய பின்னும், ஆசாரியர்களிடம் காண்பித்து மோசே கூறியிருக்கிற கட்டளைக்கு கீழ்படிந்து, அதற்குரிய காணிக்கையைச் செலுத்து என்று கூறியதைப் பார்த்தோம். இந்த அற்புதத்தில் குஷ்டரோகிகளைத் தொடாமலேயே தம்முடைய வார்த்தையால் குணமாக்கினார். என்ன வார்த்தை என்றால் “நீங்கள் போய் ஆசிரியர்களுக்கு காண்பியுங்கள்” என்பது தான் 

இயேசு தனது வார்த்தையால் தான் ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் பெருகச் செய்தார். தனது வார்த்தையால் ஏழு அப்பங்களையும் மீன்களையும் பெருகச் செய்தார். நூற்றுக்கதிபதி வேலைக்காரனை தமது வார்த்தையால் சுகமாக்கினார். ஏனெனில் தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும் இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும், உருவக்குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது.இந்த அற்புதத்தில் தீராத குஷ்டரோக வியாதியை தனது வார்த்தையால் இயேசு சுகமாக்கினதைப் பார்க்கிறோம். நாமும் தேவனுடைய வார்த்தையை விசுவாசித்து, இரவும், பகலும் தியானித்து இயேசுவின் வல்லமையைப் பெற்றுக்கொள்ள பிரயாசப்படுவோம்.ஆமென்.

Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago