இயேசுவை சிலுவையில் அறையும் போது அவரோடு கூட இரண்டு கொலை குற்றவாளிகளையும் இரண்டு பக்கத்திலும் அறைந்தார்கள். மத்தேயுவும் மாற்கும் கள்ளன் என்று குறிப்பிடுகின்றனர் ஆனால் லூக்கா குற்றவாளிகள் என்று குறிப்பிடுகிறார். இயேசுவை கேவலப் படுத்துவதற்காக, அவருடைய நீதியையும், பரிசுத்தத்தையும் கேவலப்படுத்துவதற்காகத் தந்திரமாகச் சாத்தான் செய்த செயலாக இதை நாம் பார்க்கிறோம். அதில் ஒரு கள்ளன்,
லூக்கா 23 : 42, 43 “இயேசுவை நோக்கி: ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான். இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.”
இயேசு சிலுவையிலே கூறிய இந்த இரண்டாவது வார்த்தையானது இரட்சிப்பைக் கொடுக்கிற வார்த்தையாக உள்ளது. சிலுவையில் அறையப்பட்ட கள்ளர்களில் ஒருவன் இயேசுவை நோக்கி
“நீ கிறிஸ்தவானால் உன்னையும் எங்களையும் இரட்சித்துக் கொள்” என்று இழிவாகப் பேசினான் (மத்தேயு 27 : 44).
ஆனால் மற்றவனோ தன்னைத்தான் நிதானித்து அறிந்து கொண்டான். தாங்கள் தகாததைச் செய்ததினால் ஆக்கினைக்குட்பட்டு தண்டனை அடைகிறோம் ஆனால் இவரோ தகாதது எதுவும் நடப்பிக்கவில்லை என்று அவனைக் கடிந்து கொண்டான். இயேசு நியாயமற்ற தண்டனையை அனுபவிப்பதாகக் கூறுகிறான். இவன் தங்களோடு இயேசுவை ஒப்பிடுவதை விரும்பவில்லை. தங்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனை சரியானது என்றும், தாங்கள் நியாயப்படி தண்டனை பெறுகிறோம் என்றும் இவன் ஒத்துக் கொள்கிறான். கள்ளனாயிருந்தாலும் உணர்வுள்ளவனாயிருந்ததை அறிகிறோம். இயேசு பரலோக ராஜ்ஜியத்தின் அதிபதியென்பதை அறிந்திருந்தான். மரித்தாலும் இயேசு உயிர்த்தெழுவாரென்றும், தமது ராஜ்ஜியத்தை ஸ்தாபிக்க திரும்பவும் இந்த உலகத்திற்கு ராஜாவாக வருவாரென்றும் அறிந்து விசுவாசித்தான். இந்தக் கள்ளனின் மனதில் இயேசு பாவத்தை சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி என்றும், அவர் ஒரு இரட்சகர் என்றும், அவரால் மட்டுமே தன்னை இரட்சிக்க முடியும் என்றும், மரணத்திற்குப் பின்பு ஒரு வாழ்க்கை உண்டு என்றும் நம்புகிறான். இயேசுவைக் கூப்பிட்டால் அவர் பதில் தருவாரென்றும், வாக்கில் உண்மையுள்ளவர் என்றும் கள்ளன் விசுவாசித்தான். இயேசுவை அறிவதே நித்தியஜீவன்.
இயேசு தான் தேவகுமாரன் என்று சொன்னபோது யூதர்கள் அவரைக் கொலை செய்ய முயற்சித்தனர். முடிவில் அவரைப் பிடித்து சிலுவையில் கொன்று போட்டபோது போர்சேவகன் வந்து மெய்யாகவே அவர் தேவகுமாரன் என்று அறிக்கை செய்ததைப் பார்க்கிறோம். இயேசு உயிரோடிருந்த போதும் தேவகுமாரனா யிருந்தார். உயிரைக் கொடுத்த போதும் தான் தேவகுமாரன் என்பதை நிரூபித்தார். எல்லாவற்றிற்கும் மேலாகத் தனது உயிர்த்தெழுதல் மூலம் அதைத் திட்டமாய் நிரூபித்தார். தேவனுடைய தயவை இவன் எதிர் நோக்கியதைப் பார்க்கிறோம். இந்தக் கள்ளனுக்கும் இயேசு தேவ குமாரன் என்று விசுவாசித்தான். இயேசு அந்த இடத்தில் எந்த அற்புதமும் செய்ததையும் கள்ளன் பார்க்கவில்லை இயேசு இருந்த நிலைமையோ சிலுவையில். மத்தேயுவும், மாற்கும் இருவரும் பரிகாசம் பண்ணியதாகக் கூறுகின்றனர். ஆனால் லூக்கா மட்டும் ஒருவன் மனம் திரும்பியதாகக் கூறுகிறார். சரியான நேரத்தில் இவன் இயேசுவை நோக்கி இந்த வார்த்தைகளை அதாவது இயேசுவிடம் அவர் ராஜாவாகத் திரும்பி வரும்போது தன்னை நினைக்கும் படி வேண்டினான்.
இயேசுவோ இருவர் பேசுவதையும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார். அந்த இடத்தில் இயேசு நியாயாதிபதியாக இருவர் நடுவிலும் நின்று கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். தம்மிடத்தில் வருகிற எவரையும் புறம்பே தள்ளாதவர், தம்மை நம்பின கள்ளனைப் பார்த்து இன்றைக்கே அந்த இரட்சிப்பைக் கொடுக்கிறேன் என்ற வார்த்தையைக் கூறினார். அது மட்டுமல்லாமல் உறுதிப்படுத்தும் விதமாக மெய்யாகவே உனக்குச் சொல்கிறேன் என்றும் கூறியதைக் காணலாம். இது இயேசுவின் ஏற்றுக்கொள்ளும் தன்மையை வெளிப்படுத்துகிறது. யூதர்களால் வெறுத்து ஒதுக்கப்பட்ட சமாரியர்களை நேசித்து அந்தக் கிராமத்தையே ஆயத்தப்படுத்தினார். பரிசேயரின் வீட்டில் இயேசு பந்தியிருந்தபோது பாவியான ஒரு பெண் இயேசுவின் பாதத்தைக் கண்ணீரால் நனைத்து, தன் தலைமயிரினால் அவருடைய பாதத்தைத் துடைத்தபோது ஒரு தகப்பனைப் போல மகளே என்றழைத்த அவருடைய மன்னிக்கும் அன்பையும், தன்னைக்காட்டிக் கொடுத்த யூதாஸை சிநேகிதன் என்றழைத்த அன்பையும் பார்க்கிறோம். தன்னை மூன்று தரம் மறுதலித்தவனை மன்னித்து அவனிடம் தன்னுடைய ஊழியத்தை ஒப்படைத்ததையும் பார்க்கிறோம். பார்க்கிறோம்.
ஆயக்காரர்களையும், பாவிகளையும் தீட்டு என்று ஒதுக்கிவைத்து, தங்களை மேன்மக்கள் என்று நினைத்து வாழ்ந்து கொண்டிருந்த பரிசேயர்கள், வேதபாரகர்கள் மத்தியில் இயேசுவை ஆயக்காரர்களுக்கும், பாவிகளுக்கும் சிநேகிதன் என்றழைக்கப் பட்டார். ஆதியாகமம் 12 : 2 ல் ஆபிரகாமோடு உடன்படிக்கை பண்ணியது போல கள்ளனுக்கும் உறுதியளிக்கிறார். எந்த பாவியாயினும் தள்ளாத இயேசு கள்ளனின் விசுவாசத்திற்கு மதிப்பளித்து உடனடியாகப் பதிலளித்தார். இயேசு பாவத்தைத்தான் வெறுத்தாரே தவிர பாவிகளை உண்மையாக நேசித்தார். “இன்று என்னுடனே கூட பரதீசில் இருப்பாய்” என்றார். இயேசு மரணமடைந்து சென்ற இடத்திற்கு அந்தக் கள்ளனும் சென்றான். அவர் சென்ற பரதீசு பூமிக்குள் இருந்ததென்பதை மத்தேயு 12: : 40 எபேசியர் 4 : 8 – 10 ல் காணலாம். லூக்கா 16 : 22 ல் பரதீசுக்கு ஆபிரகாமின் மடி என்ற பெயரும் உண்டு. 2 கொரிந்தியர் 12 : 2, 3 ல் பரதீசு என்பது மூன்றாம் வானம் என்றுள்ளது. உலகின் ஒளியாகிய இயேசுவை ஏற்றுக்கொண்டவர்கள் பரதீசாகிய ஆபிரகாமின் மடியில் கொண்டு செல்லப்பட்டு இளைப்பாறுகின்றனர்.
லூக்கா 23 : 40 ல் கள்ளன் தேவனுக்குப் பயப்படுகிறவனாக இருந்தபடியால் பரதீசுக்கு கொண்டு செல்லப்பட்டான். இதேபோல் நாமும் தேவனுக்குப் பயந்த வாழ்க்கை வாழ்வோமானால் அங்கு போக முடியும். இயேசுவைப் பார்க்கவேண்டும் என்று காட்டாத்தி மரத்தில் ஏறின சகேயுக்கு இயேசு அவன் வீடுவரை சென்று “இன்றைக்கு இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது” என்றார் (லூக்கா 19 : 9). அவன் அதை எதிர்பார்க்கவில்லை. ஆபிரகாம் தன்னுடைய மகனுக்கு பெண் பார்க்க தன்னுடைய ஊழியக்காரனான எலியேசரை அனுப்பினான். எலியேசரும் நீண்டதூரம் பிரயாணம் பண்ணி மெசொப்பொத்தா மியாவிற்கு போய் ஒரு தண்ணீர் துரவண்டையில் நின்று,
ஆதியாகமம் 24 : 12 “கர்த்தாவே, இன்றைக்கு நீர் எனக்குக் காரியம் சித்திக்கப்பண்ணி, என் எஜமானாகிய ஆபிரகாமுக்குத் தயவு செய்தருளும்”
என்று ஜெபித்தான். அவன் ஜெபத்தை முடிக்குமுன் கர்த்தர் அவனுக்கு ஏற்ற பெண்ணைக் கூட்டி வந்தார்.
சகரியா 9 ; 12ல் “நம்பிக்கையுடைய சிறைகளே, அரணுக்குத் திரும்புங்கள்; இரட்டிப்பான நன்மையைத் தருவேன், இன்றைக்கே தருவேன்.”
என்றதைப்போல இவர்கள் பெற்றதை வேதத்தில் பார்க்கிறோம். கள்ளன் கொடூரமான குற்றவாளியாகத் தண்டனைக்குப் பாத்திரவானாக இருந்தாலும் மரணத்தருவாயில் தான் யாரென்றும், இயேசு யாரென்றும் அறிந்து அவரிடம் அறிக்கை பாவமன்னிப்பைப் பெற்றான். இயேசு சிலுவையில் அறையப்பட்ட அந்த நேரத்தில் இவ்வாறு விசுவாசித்து இரட்சிக்கப்பட்டது இந்த கள்ளனைத் தவிர வேறு யாரும் இல்லை. உண்மையான விசுவாசத்திற்கு அடையாளமாகக் கள்ளனது செயல் விளங்குகிறது. இந்தக் கள்ளனுக்கு கிடைத்தது போல யாருக்கும் மரணத்தருவாயில் வாய்ப்பு கிடைப்பதில்லை. இயேசுவை தூஷித்த மற்ற கள்ளனோ பாவத்துக்குள்ளாகிறான் அவனுக்கு எதிர்காலமோ, இரட்சிப்போ, விடுதலையோ இல்லை. 2 தெசலோனிக்கேயர் 1 : 7 ல் தேவனை அறியாதவர்களுக்கும், இயேசுவின் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களுக்கும் நீதியுள்ள ஆக்கினை உண்டென்று கூறியபடி, இந்தக் கள்ளன் இயேசுவை அறியாததாலும், அவருடைய சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாததாலும், ஆக்கினைக்குட்படுத்தப் பட்டான் (எபிரேயர் 10 : 29).
இந்தக் கள்ளனைப் போல் நாமும் கடைசி நேரத்தில் கர்த்தரிடம் சேர்ந்து விடுவோமென்று யாரும் ஏமாந்து போக வேண்டாம். இன்றைக்கே மனம் திரும்ப வேண்டும். மேலும் இந்தக் கள்ளன் தண்ணீரினால் ஞானஸ்நானம் பெறாமல் கர்த்தருடன் சேர்ந்ததால் ஞானஸ்நானம் அவசியமில்லை என்று கருத வேண்டாம். கள்ளனுக்கு ஞானஸ்நானம் பெறுவதற்கு வாய்ப்பு இல்லை என்பதால் ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கக்கூடும். வாய்ப்பு இருப்பவர்கள் மனம் திரும்பிய பின்னர் ஞானஸ்நானம் பெறாமல் இருப்பதற்கு இதை ஒரு காரணமாக கூறலாகாது (மத்தேயு 28 : 19, 20, மாற்கு 16 : 16, எபேசியர் 4 : 5). இதில் மரணம் அடைந்த ஒரு பாவி நித்திய ஜீவன் பெற எழுப்பப்பட்டான். ஒருவரும் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்பதற்காகவே பிதா தன்னுடைய சொந்த குமாரனை சிலுவையில் அறையவும், கொன்றுபோடவும் சம்மதித்தார். தன்னுடைய குமாரனின் ஜீவனை விட தன்னுடைய மக்கள் நித்தியஜீவனைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்ற நோக்கத்திற்காக மட்டுமே பிதா அப்படிச் செய்தார். அந்தகாரத்திலிருந்து ஆச்சரியமான ஒளியான இயேசுவிடம் வந்த கள்ளன் மறுபடியும் பிறக்கும் புதிய அனுபவத்தைப் பெற்றான். இரட்சிப்பைப் பெறத் தகுதியில்லாத அவனுக்கு இரட்சிப்பு கிடைத்தது. இதுதான் கிருபை. இதைத்தான் பவுல்
எபேசியர் 2 : 8ல் “கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு;” என்கிறார்.
இயேசு மரணத்தையும், பாதாளத்தையும், பிசாசையும் ஜெயித்து வெற்றி சிறந்தவராக உயிர்த்தெழுந்து இன்றைக்கும் ஜீவிக்கிறார். மரித்தோரிலிருந்து இயேசு எழுந்ததினால் அவர் தேவகுமாரன் என்பதை உலகத்துக்கு நிரூபித்திருக்கிறார். அதை யாராலும் மறுக்க முடியாது. நாம் பரலோகம் செல்ல ஒரே வழி இயேசு மட்டுமே. இயேசுவையல்லாமல் யாரும் பிதாவிடம் செல்ல முடியாது. பரலோகத்திற்கு இன, மொழி, ஜாதி வேறுபாடின்றி யாரும் செல்லலாம். உயித்தெழுந்த இயேசுவை விசுவாசிக்கிறவர்கள் மரித்தாலும் திரும்ப உயிர்ப்பிக்கப் படுவார்கள். அவருடைய வருகையில் இயேசுவுடன் மகிமைக்குள் பரவேசிப்பார்கள். இயேசுவும் தம்முடைய சொந்த இரத்தத்தினாலே ஜனத்தைப் பரிசுத்தம் செய்யும்படியாக நகர வாசலுக்கு புறம்பே பாடுபட்டார் (எபிரேயர் 13 : 12).
யார் யார் தன்னுடைய தவறுகளை மனம் வருந்தி அறிக்கை செய்கிறார்களோ இயேசு அவர்களுடைய பாவங்களை தம்முடைய இரத்தத்தால் கழுவி பரிசுத்தப்படுத்தி அவர்களை நீதிமானாக்கி பரலோகம் அழைத்துச் செல்வார். அவர்களுடைய துக்கம் சந்தோஷமாக மாறும். நித்திய வாழ்வு அதாவது மரணமில்லாத வாழ்வு கிடைக்கும். இருளில் வாழ்கிறவர்களுக்கு ஒளியாயிருப்பார். நரகாக்கினைக்கு உட்பட்டவர்களையும், பாவத்தின் கட்டுகளில் சிக்குண்டவர்களையும் இயேசு தமது வல்லமையால் மீட்டெடுப்பார். நாமும் பாவ மன்னிப்பைப் பெற்று பரலோகத்திலுள்ள ஜீவ விருட்சத்தின் கனியைப் புசிக்க வாஞ்சித்தவர்களாக இருப்போம். இயேசு கூறிய இந்த இரண்டாவது வார்த்தை கள்ளனுக்குக் கொடுத்த இரட்சிப்பைக் காட்டுகிறது. ஆமென்
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…